காதல் கணம் 17
தன் மகள் வித்யாவைப் பற்றி பரிதவித்துக் கொண்டிருந்த ராஜமாணிக்கத்தின் எண்ணவோட்டமோ முப்பது ஆண்டுகள் பின்னோக்கி பயணித்தது.
ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூறுகளில் பொதுப்பணித்துறையில் ஒரு சிறிய காண்ட்ராக்டராக இருந்து, வைகை ஆற்றை தூறுவாறும் வேலையில் மோசடி செய்து ‘காண்ட்ராக்டர்’ என்ற உரிமமே ரத்து செய்யப்பட்டவன் தான் கேஆர்பி.
தன் மாமா ஒருவரின் கிரானைட் தொழிற்சாலையை கைக்குள் போட்டுக்கொண்டவன் ஆட்கள் பத்துபேரையும் சேர்த்துக்கொண்டு, தனது அழிச்சாட்டியங்களை எல்லாம் மாவட்டம் முழுவதும் கிளைபரப்பி கொண்டிருந்தான்.
அவனது அடியாட்களில் இருவர் எப்போதுமே அவனது அண்டைக்குள்ளேயே இருந்தார்கள். வலதுகை இடதுகை ஒத்தாசையைக்கூட தலையில் ஏற்று செய்ய தயாராக இருந்தார்கள். அவர்களே பின்னாளில் எதிரெதிர் துருவங்களாக மாறிப்போன விஜயாதித்தனும், ராஜமாணிக்கமும்.
கேஆர்பி பால் என்றால் நெய்யாக நின்றார்கள் சேவகர்கள் இருவரும்.
குவாரி வெட்டி கிரானைட் எடுப்பதற்காக பாமரனின் நிலத்தை ஏமாற்றி வாங்குவது; தரமான கிரானைட் உள்ள நிலத்தை யாரேனும் தர மறுத்தால் மிரட்டியோ, தாக்கியோ பறிப்பது; பொது நிலங்கள், கண்மாய்கள், குளங்கள், மலைகள் என்று ஒன்றையும் விடாமல் கைப்பற்றுவது என்று ஒரு மினி அரசாங்கத்தையே நிர்வகித்துக் கொண்டிருந்தான் கேஆர்பி.
அவனுக்கு உதவியாக மதுரை மாவட்டத்தைச் சுற்றிலும் ஏகப்பட்ட கூலிப்படைத் தலைவர்கள் இருந்தாலும் விஜயாதித்தனும், ராஜமாணிக்கமும் தான் மிக நெருக்கமானவர்களாக அறியப்பட்டார்கள்.
பின்னால் ஒரு விதைக்குள் இரண்டு செடிகள் முளைக்காது என்பது போல், முன்னாள் நண்பர்களிடையே விரிசல் உண்டாக, நம் இருவரில் யார் கேஆர்பி அண்ணனுக்கு நெருக்கம் என்ற சர்ச்சை வெடித்தது. கொஞ்சம் கொஞ்சமாக சண்டை பெரிதாக, இருவருமே பிரிந்தார்கள்.
இன்றுவரை இருவருமே வேலை பார்ப்பதென்னவோ கேஆர்பிக்கு தான். ஆனால், ஒவ்வொரு விஷயத்திலும் பகைமை பாராட்டிக்கொண்டு கிடக்கிறார்கள்.
இவ்விஷயத்தில் கேஆர்பி வெளியே காட்டிக் கொள்ளவில்லையானாலும் உள்ளுக்குள் ராஜமாணிக்கமும், விஜயாதித்தனும் அடித்துக்கொள்வதைப் பார்த்து ரசிக்கவே செய்தார். சண்டைக்கென்றே வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் தினவு கொண்டால் உரிமையாளனுக்கு கொண்டாட்டம் தானே!
ஒருமுறை தேர்தல் சமயத்தின் போது கேஆர்பி பணப்பட்டுவாடா வேலையை விஜயாதித்தனிடம் கொடுத்துவிட, ராஜமாணிக்கம் கொந்தளித்துவிட்டார்.
அப்போது நிகழ்ந்த பெரும் கலவரத்தின்போது கேஆர்பி பல் குத்திக்கொண்டே, ‘எத்தனை தலைகள் உருண்டன?’ என்று கேட்டாரே பார்க்கலாம். இப்படி புண் ஆறப்போகும் சமயமெல்லாம் ஃபோர்க் வைத்து கிண்டிக்கொண்டே கிடந்தார் அந்த காட்பாதர்.
ஒரு ஒற்றுமை தற்போது மகாவும் ராஜமாணிக்கத்தை மனதில் காட்பாதராக வரித்துக்கொண்டு, வீசியுடன் குரோதம் பாராட்டுவது தான்.
வித்யாவை தேடிச்செல்லும் இப்பயணத்தில் வீசி தன்னருகில் உட்கார்ந்திருக்கிறான் என்பதற்காகவே தன் ஆங்காரத்தை எல்லாம் ஸ்டியரிங்கில் காண்பித்துக் கொண்டிருந்தான் மகா.
வீசி பின்னாலிருந்தவர்களிடம், “சிவா வித்யாவை எங்க வச்சி தூக்கினான்?” என்று விசாரித்துக் கொண்டிருக்க,
“கீரைத்துரை சுடுகாட்டுப் பாதையில ஆள் நடமாட்டம் இல்லாத இடமாப் பார்த்து தான் தூக்கியிருக்கான்.” என்று நிர்மலமானப் பார்வையுடன் பதிலளித்தான் மகா.
“நம்மாளுங்க ஸ்கார்ப்பியோல எத்தனை பேர் இருந்தாங்க?”
மீண்டும் மகாவே, “ரெண்டு பேர்” என்றான் வீசிக்கு.
அடுத்தக் கேள்வியை நேரடியாகவே மகாவைப் பார்த்துக்கேட்டான் வீசி. “சிவா ரெண்டு பேரையுமே அடிச்சிட்டானா?”
“ரெண்டுபேருமே இப்போ சாகக் கிடக்கிறாங்க.”
வீசி புருவம் உயர்த்தி யோசனையாக, “ஓ” என்றான்.
“அவன்கிட்ட பிஸ்டல், மயக்க மருந்துன்னு எல்லாம் இருந்திருக்கு. அவன் பிஎம்டபிள்யூல வில்லாபுரம் பக்கம் போனதா பசங்க சொன்னாங்க. அவனை அவனியாபுரம் செக்போஸ்ட்லயே வச்சி மடக்க ஆட்களை ஏற்பாடு பண்ணியிருக்கேன். இப்போ அவனியாபுரம் செக்போஸ்ட்க்கு தான் நாமப்போய்கிட்டு இருக்கோம்.” என்றான் முன்னால் சென்ற ஸ்கார்பியோவை முந்தியபடியே.
“ம்” என்றபடியே வெளியே பார்த்துக்கொண்டே வந்தான் வீசி.
அவனியாபுரம் செக்போஸ்ட்டை அடைந்தபோது சந்தேகப்படும் வகையில் எந்த பிஎம்டபிள்யூவும் கிராஸ் பண்ணவில்லை என்றார்கள் அந்த கைக்கூலிகள்.
“எப்படியும் அவன் இந்தப் பாதை தானே வந்திருக்கணும்? இங்கயும் வரலைன்னா? அந்தப் பக்கமும் போக முடியாது, மெயின்பசாருக்கு போகற ரோடு. இந்த இடைப்பட்ட ஏரியாவுல அவன் எப்படிடா தப்பிச்சிருக்க முடியும்?” என்று வண்டியின் பேனட்டை தட்டினான் மகா.
வீசி எந்தப் பதட்டமுமின்றி நிதானமாகச் சொன்னான், “இந்த வட்டாரத்தைத் தாண்டி அவன் எங்கேயும் போகல. ஸோ, நம்ம வேலை ரொம்ப ஈஸி.” என்று
‘எப்படி இப்படி எல்லா விஷயத்துலயும் நேர்மறையாவே சிந்திக்க முடியுது இவனால? அதான் மாணிக்கம் அண்ணனுக்கு இவனை ரொம்பப் பிடிச்சிருக்கு’ என்று மகாவால் வீசியின் அந்த புத்திசாலித்தனத்தை மெச்சாமல் இருக்க முடியவில்லை.
தொடர்ந்து, “வில்லாபுரத்தையே நம்ம ஆளுங்களை விட்டு அலசச் சொன்னா, இருபத்தினாலு மணிநேரத்துல வேலை சுலபம்.” என்றான் வீசி.
ஆளாளுக்கு போன் பேசத் தொடங்கினார்கள். ஒரு கூட்டம் இப்படி தன்னை வலை வீசி தேடிக் கொண்டிருக்க, மாப்பாளையத்துக்குள் உள்ள ஒரு தோப்புக்குள் தோளில் கோணிமூட்டையோடு நடந்துக் கொண்டிருந்தான் சிவனேஸ்வரன்.
ஆம், வித்யாவை கடத்திக்கொண்டு வந்த சிவனேஸ்வரன் வில்லாபுரம் செல்லும் சாலையில் திடீரென பாதை மாற்றி காரைத் திருப்பினான். சாலையிலிருந்து விவசாய நிலத்திற்குள் காரை இறக்கி குலுங்க குலுங்க ஓட்டிக்கொண்டுப் போனான்.
அப்படியே ஐந்து கிலோமீட்டர் வரை சென்றவன், நாணல்கள் மறைக்கும்படியான இடத்தில் காரை நிறுத்தி, அங்கிருந்து காருக்குள்ளேயே வித்யாவை ஒரு கோணிப்பைக்குள் போட்டு மூட்டையாகக் கட்டி தன் தோளில் தூக்கிச் சென்றான்.
வெகுநாட்களாகவே யாரும் பயன்படுத்திராத பகுதி என்பதால் காரை கண்டுபிடிப்பது என்பது அவ்வளவு சுலபமில்லை. எல்லாம் திட்டம்போட்டு தான் செய்திருந்தான் சிவனேஸ்வரன்.
ஐந்து வருடங்களுக்கு முன்பு வரை அது அவர்களுக்குச் சொந்தமான நிலமாகத் தான் இருந்தது. பின்பு, பெங்களூர் கிளம்பும்போது துபாய்காரர் ஒருவருக்கு மொத்தமாக விற்றுவிட்டார் அவன் தந்தை. இப்பகுதியை கடக்கும் போதெல்லாம் கவனிப்பாரின்றி கிடக்கும் தங்கள் நிலத்தைப் பார்த்துவிட்டே செல்வான் சிவனேஸ்வரன். அந்தத் தைரியத்தில் தான் தற்போது காரை இந்தப் பக்கமும் செலுத்தியிருந்தான்.
இன்று காலையில் நண்பன் ஒருவனை சந்திக்க காரில் அனுப்பானடி வரை வந்திருந்தவன், எதேர்ச்சையாக வித்யாவை பிரபல அழகுநிலையத்திற்கு வெளியே பார்த்தான். அதுவும் மணப்பெண் கோலத்தில்.
உடனே அவனுக்கு தலைமைச் செயலகத்தில் பல்ப் எரிய, நடக்கப்போகும் விபரீதத்தை நொடியில் கணக்கிட்டு அதற்கான ஆயத்தங்களில் இறங்கினான்.
ஏற்கனவே வீசிக்கு எதிராக அவன் தீட்டிய திட்டத்தால் கைவசம் பிஸ்டல், மயக்கமருந்து, கோணிப்பை, தாம்புக்கயிறு, விரைவில் கெட்டுப்போகாத உணவு பதார்த்தங்கள் என்று எல்லாம் தயாராக இருக்க, தற்போது உடனே தன் திட்டத்தை செயல்படுத்த தொடங்கினான்.
தனது அப்பாவின் பிஎம்டபிள்யூவில் வித்யாவை பின் தொடர்ந்துகொண்டே வந்தவன், கீரைத்துரை மின்தகன மையத்தை நெருங்கியதுமே அவர்கள் வண்டியை ஓவர்டேக் செய்து இடைமறித்து நிற்பாட்டினான்.
பின், கெட்டவார்த்தையில் திட்டிக்கொண்டே இறங்கிய அடியாட்களை எங்கு அடிக்கிறோம் என்று புத்தியில் பதியாத அளவிற்கு கன்னா பின்னாவென்று தாக்கினான். அவனுக்குள்ளான பதட்டமும், அவசரமும் எதையும் யோசிக்கவிடவில்லை அவனை.
இருவரையும் கணநேரத்தில் சாய்த்துவிட்டு பிஸ்டலைக் காட்டியே வித்யாவை தனது காரில் ஏறச்சொன்னவன், என்ன நினைத்தானோ கீழே விழுந்து கிடந்தவர்களைப் பார்த்து, “வீசிக்கிட்ட சொல்லுங்க. என் பேரு சிவனேஸ்வரன்னு.” என்றுவிட்டு, மயக்க மருந்து தெளிக்கப்பட்ட கர்ஷீப்பை வித்யாவின் மூக்கில் வைத்து அழுத்தினான்.
உதவி கேட்டு கத்திக் கொண்டிருந்தவள், அவனை எதிர்க்க முடியாமல் மூர்ச்சையானாள். அவளை அப்படியே பின்சீட்டுக்குள் தள்ளியவன் காரை இயக்குவதில் முஸ்தீபானான்.
இப்படி திட்டமிட்டு கடத்திக்கொண்டு வந்திருந்தவன் நேரே அவளை கிணற்று வீட்டிற்கு தூக்கிச் சென்றான். அங்கு கோணியிலிருந்து அவளை வெளியேற்றி குடிசையின் நிலைக்கம்பில் சாய்த்து வைத்து, கைகளை பின்புறமாக கட்டிவைத்தான். பிறகு, ஒரு மலையையே நகட்டி வைத்தாற்போல் சோர்வாக ஓரத்து கயிற்றுக்கட்டிலில் போய் விழுந்துவிட்டான்.
மாலை ஆறு மணியளவில் டபடபவென ஒலித்த சத்தம் கேட்டு கண்விழித்துப் பார்த்தவனுக்கு அது மழையின் கும்மாளம் என புரியவும் ஆசுவாசம் உண்டானது. பிஸ்டலின் மேல் வைத்தக் கையை மெதுவாக எடுத்தான்.
மயக்கத்தில் கிடந்தவள், “ஹ்ம்ம்..ஹ்ம்ம்” என்று முனகிக் கொண்டிருந்தாள்.
கூரையின் இடைவெளியிலிருந்து மழைத்துளி அவள் மேல் விழுந்து கொண்டிருந்ததால் சிவனேஸ்வரன் கணக்கிட்ட நேரத்திற்கு முன்பாகவே முழிப்பு தட்டியிருந்தது.
அப்போது தான் அவளை நிதானமாக கவனித்தான் சிவனேஸ்வரன்.
கவர்ச்சியான முகம், நீளமான கண்கள், அடர்த்தியான கண்ணிமைகள், கோபக்காரி என்பதற்கேற்ப கூர்நாசி, மாசுமருவில்லா கன்னங்கள், அதிக சதைப்பற்றில்லா உடல்வாகு, என்று இயற்கையின் கொடை போக, அழகுநிலையப் பெண்களின் கை வண்ணத்தால் பேரழகியாகத் தான் பரிமளித்தாள் வித்யா. அதிலும் மழைத்துளி அவள் மேல் தெரித்திருந்தது சற்றுமுன் தீட்டிய ஓவியம் போல் கவர்ச்சியாகக் காட்டியது அவளை.
வித்யா கண்களை திறக்க பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்க, சிவனேஸ்வரன் அவளை பார்ப்பதை தவிர்த்தான். சிறிது நேரம் சாளரத்தின் வழியே மழையையே வெறித்துக் கொண்டிருந்தான்.
முயன்று கண்களைத் திறந்த வித்யா, கயிற்றுக் கட்டிலில் கால் மேல் கால்போட்டுப் படுத்திருந்த சிவனேஸ்வரனைப் பார்த்ததும், “டேய் பொறுக்கி!” என்று உச்சஸ்தாயில் கத்தினாள். ஆத்திரத்தில் கெட்ட கெட்ட வார்த்தைகளைப் பிரயோகித்தாள்.
ஆனால், அவனிடம் எவ்வித சலனமும் இல்லை. சர்வ அலட்சியமாகப் படுத்திருந்தான். அவள் தனது கைக்கட்டை அவிழ்க்க முயன்ற போது, அது சுத்தமாக முடியவில்லை.
அதேநேரம் கோவிலில் ஷ்ரதாவோ உச்சபட்ச அதிர்ச்சியிலிருந்தாள். “என்ன உங்களுக்கு அறுபதாம் கல்யாணமா?” என்று உரக்கக் கேட்டாள்.
இந்த திருப்பத்தை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. நிச்சயம் இது கனவு தான் என்றே முடிவு கட்டிவிட்டாள். தூரத்தில் கேட்ட கோவில் மணியோசைக்கூட அவள் நம்பிக்கையைப் பெறவில்லை.
கமலா அவளுக்கு விளக்கும் பொருட்டு நடந்ததை நினைவு கூர்ந்தார்.
“ஹ்ம், ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் ஹாஸ்பிடல்லயிருந்து டிஸ்சார்ஜ் ஆனாரு இவரு. இப்போ இதெல்லாம் தேவையான்னு கேட்டேன். கண்டிப்பா நடந்தே ஆகணும்னு சொல்லிட்டாரும்மா.”
“ஹாஸ்பிடல்ல இருந்தாரா? என்னம்மா சொல்றீங்க?”
“அப்போ அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்தது உனக்குத் தெரியாதா ஷ்ரதா? வீசி தம்பி உன்கிட்ட எதுவும் சொல்லலையா?”
“அய்யோ! சொல்லலையேம்மா.”
“அப்போ அவருக்கு ரொம்ப பயமாகிடுச்சு ஷ்ரதா. வீசிக்கிட்ட என் பொண்ணை நீ தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு மரணப்படுக்கையில கிடந்தவர் மாதிரி கேட்டாரு. வீசிதம்பியும் ஒத்துக்கிடுச்சி. திடீருன்னு நேத்து சாயங்காலம் இன்னைக்கு எங்க கல்யாணத்தோடயே அவங்க நிச்சயத்தையும் வச்சிக்கலாம்னு சொன்னப்போ, தம்பி மறுத்துப் பேசல.” எனும்போதே, ராஜமாணிக்கம் பதட்டமாக வந்து,
“கமலா, வித்யாவை விஜயாதித்தனோட தங்கச்சிப் பையன் கடத்திட்டானாம். மகாவும் வீசியும் தேடிப்போயிருக்காங்க.” என்றார்.
கமலா பதறிப்போனவராக, “என்னங்க சொல்றீங்க?” என்றார்.
உடன் ஷ்ரதாவும், “என்ன அன்க்கிள் சொல்றீங்க?” என்றாள்.
“இப்போ தான் பசங்க போன் பண்ணாங்க கமலா. சொந்தக்காரங்களை எல்லாம் கிளம்பச் சொல்லு. விசேஷத்தை இன்னொரு நாள் வச்சிக்கலாம்னு நான் சொல்லிட்டதா சொல்லு.” எனவும், அவரும் கண்களை துடைத்தபடியே தங்கள் உறவினர்களை நோக்கிச் சென்றார்.
அவர் சென்றதும் ஷ்ரதா ராஜமாணிக்கத்தைப் பார்த்து நம்பிக்கையின்றி சொன்னாள். “இல்ல நீங்க பொய் சொல்றீங்க. ஷிவா அத்தான் அப்படியெல்லாம் பண்ணக்கூடியவர் கிடையாது” என்று அடித்துக் கூறினாள்.
அவருக்கு அது கடுப்பை வரவழைத்ததோ என்னவோ ஆவேசமாகக் கத்தினார்.
“அவன் தான் கடத்தியிருக்கான். கடத்திட்டு என் பேரு சிவனேஸ்வரன். வீசிக்கிட்டப்போய் சொல்லுன்னு சொல்லியிருக்கான்” என்றதும்,
“இப்பவும் என்னால நம்ப முடியல. ஆனா, ஷிவா அத்தான் பண்ணினது தப்புன்னா, நீங்க பண்ணயிருந்தது மகா தப்பு. ஞாபகம் இருக்கா உங்களுக்கு? நீங்க என்னை அன்னைக்கு உங்கப் பொண்ணு மாதிரின்னு சொன்னீங்க. உங்கப்பொண்ணுக்கு கிடைக்காத வரம் எனக்கு கிடைச்சிருக்குன்னு சொன்னீங்க. ஆனா, நீங்களே இப்போ அந்த வரத்தைப் பறிக்கப் பார்க்குறீங்களே நியாயமா?” என்று சரமாரியாக கேட்டாள்.
ராஜமாணிக்கம் சபையில் குழந்தையை அழ வைத்தவர் போல அசௌகரியமாக உணர்ந்தார்.
“அவருக்கு உங்க மேல நன்றிக்கடன் அதிகம். நீங்க அதை வச்சி அவரை மிரட்டுறது சரியில்ல.” என்றவள், தொடர்ந்து,
“கோவிலுக்குள்ள சாமியை தவிர்த்து வேற யாரைப் பார்த்தும் கையெடுத்துக் கும்பிடக்கூடாதுன்னு சொல்வாங்க. உங்களை நான் கும்பிடுற சாமியா நினைச்சி கையெடுத்துக் கும்பிடுறேன். தயவுசெஞ்சு அவரை எனக்கு மட்டுமே சொந்தமா என்கிட்ட கொடுத்திருங்க.” என்று கைக்கூப்பினாள்.
அதற்கு மேல் ராஜமாணிக்கம் தொண்டையில் முள் சிக்கியவரைப் போல எதுவும் பேச முடியாமல் அவ்விடம் விட்டே நகர்ந்து சென்றுவிட்டார்.
ஷ்ரதா தனது இந்த முயற்சியும் தோல்வியடைந்த விரக்தியில் பொடிநடையாக தனது வீடு நோக்கிப் புறப்பட்டாள்.
அறைக்குச் சென்றதும் முதல்வேலையாக போனை கண்டுபிடித்து, சிவனேஸ்வரன் வித்யாவை கடத்தியதை தனது தந்தையிடம் தெரிவித்தாள். விரைவில் வித்யாவை கண்டுபிடித்து அவள் அப்பாவிடம் ஒப்படைக்கும்படியும் கேட்டுக்கொண்டாள்.
ஆனால், இவ்விஷயத்தை முன்பே அறிந்திருந்த விஜயாதித்தன் சாமர்த்தியமாக வேறொரு திட்டத்துடன் ராஜமாணிக்கத்திற்கு முன்பே வித்யாவை கண்டுபிடிக்கும்படி தன் ஆட்களை ஏவியிருந்தார். பாவம்! ஷ்ரதா தான் இடையில் கோமாளியாகினாள்.
காதல் கணம் கூடும்…
