காதல் கணம் 18
அறையில் உட்கார்ந்து நடந்த விஷயங்களையே அசைபோட்டுக் கொண்டிருந்த ஷ்ரதா கடவுளுக்கு நன்றி சொல்வோமா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் இருந்தாள்.
“ஷிவா அத்தான்கிட்ட உண்மையை சொன்னது தப்பாப்போச்சி. வித்யாவை இப்படி கடத்திட்டாரே. அதுவும் ஒரு வகையில நல்லது தான். வித்யாவுக்கும், அவருக்கும் நிச்சயம் நடந்திருந்தா என்னாகியிருக்கும்?” என்று தன் தலையைப்போட்டு உருட்டிக் கொண்டிருந்தாள்.
மாப்பாளையத்தில் சிவனேஸ்வரனோ வார்த்தைகளைக் காட்டிலும் செயல்களுக்கு அதிக மதிப்பு கொடுப்பவன் போல் நடந்து கொண்டான்.
இவ்வளவு நேரமும் வித்யா பேசிய கெட்டவார்த்தைகளுக்கு மதிப்புக் கொடுக்காமல் கிடந்தவன், அவள் கயிற்றை அவிழ்க்க முயன்றதற்கு மட்டும், “ஈஸியா இங்கயிருந்து தப்பிச்சிடலாம்னு நினைக்காத. இங்கயிருந்து போகணும்னா அஞ்சு கிலோ மீட்டர் நடக்கணும்.” என்று எச்சரித்தான்.
வித்யாவுக்கு அப்போது தான் தானிருக்கும் மாளிகையை சுற்றிப் பார்க்க வேண்டிய கட்டாயம் உண்டானது.
அந்த அறையில் ஒரேயொரு நூறு வாட்ஸ் குண்டுபல்பை தவிர மின்சாதனங்கள் என்று பெரிதாக எதுவும் கிடையாது. வீடு என்ற பாவனைக்கு கரையான் அரித்து இத்துப்போன ஒரு கதவு, தெற்கு வடக்கு இரண்டு சுவர்களிலும் கதவு தரத்தில் இரு சாளரங்கள் என்று அவ்வளவே அதன் அலங்காரங்கள்.
வந்தமழை வெக்கையை கிளப்பிவிட, சிவனேஸ்வரன் சட்டையின் முதலிரண்டு பட்டன்களை கழற்றிவிட்டு ஊதிக்கொண்டான்.
ஏதோ வயல்பகுதியின் நடுவே தான் வசமாக மாட்டிக்கொண்டிருப்பது தெரிந்ததும் பயத்தில் மீண்டும் சில கெட்டவார்த்தைகளுக்கிடையில், “என்னை விடுடா பாஸ்டர்ட். என்ன இடம் இது? பாரு வீசியும் எங்கப்பாவும் கண்டுபிடிச்சாங்க உனக்கு சமாதி தான்.” என்று எச்சரித்தாள்.
“வீசியா? உனக்கு வேணும்ன்னா அந்த வீசி பெரிய இவனா இருக்கலாம். ஆனா, எனக்கு அவன் வெறும் காளான் தான். நேத்து முளைச்ச காளான். பிடுங்கி எறிஞ்சிடுவேன்” என்று ஆவேசமானான் சிவனேஸ்வரன்.
“இங்கப்பாரு! மரியாதையா என்னை எங்க வீட்டுல கொண்டுபோய் விட்டிரு. இல்ல, பின்னாடி ரொம்ப வருத்தப்படுவ.”
“என்ன மிரட்டுறியா? உன் அப்பாவோட லேடி வெர்சனா நீ? என் கஸ்டடில இருந்து நீ தப்பிக்கவே முடியாது. அப்புறம் என்கிட்ட பேசும்போது மரியாதை ரொம்ப முக்கியம். இல்ல வில்லங்கமாகிடும்.” என்று விரலைநீட்டி எச்சரித்தான்.
வித்யா மீண்டும் தன் கைக்கட்டை அவிழ்க்க முயன்று பார்த்தாள். ஆனால், முடியவில்லை.
“ராஸ்கல்! எவ்ளோ இறுக்கமா கட்டி வச்சிருக்கான்” என்று புலம்ப மட்டுமே முடிந்தது.
“நீ எவ்ளோ முக்கினாலும் முடியாது. அன்னைக்கு என் ஷ்ரதாகிட்ட எப்படி பேசின? அந்த வீசிக்கு ஒரு கல்யாணம் நடந்ததே தப்பு. இதுல அவனுக்கு இன்னொரு கல்யாணமா? என் கல்யாணத்தை அவன் நிறுத்தினான் இல்ல? இன்னைக்கு அவன் கல்யாணம் என்னால நிக்கட்டும்.” என்று கெக்கலித்தான்.
“கல்யாணமா? முட்டாள்! எங்களுக்கு இன்னைக்கு நிச்சயதார்த்தம் மட்டும் தான்டா. கல்யாணம் என் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் தான்.” என்று வித்யா கத்தியபோது, சில வினாடித்துளிகள், மழையின் மாநாடே பேரிரைச்சலாய் கேட்டது அவர்களுக்கிடையில்.
குடிசையின் பொத்தல் கசிவில் அவள் புடவை முழுவதும் நனைந்து உடல் பிடிங்கிக்கொண்டு தெரிய, வித்யா தன் அங்க லாவண்யங்கள் மோகனவடிவம் காட்டுவது தெரியாமல் தேமேயென்று கிடந்தாள்.
சிவனேஸ்வரன் அவளை பார்க்கவேண்டும் என்று நினைக்கவில்லை. ஆனால், கண்போவதை தடுக்க முடியவில்லை.
மேலும், அவள் தாகத்தில் வாயைத் திறந்து மழைநீரைப் பருக, அந்நீர் முகத்திலிருந்து கழுத்தில் இறங்கி.. மேலும் உள்ளுக்குள் இறங்கி.. இன்னும் சிவனேஸ்வரனை அபாய கட்டத்திற்கு இழுத்துச் சென்றது.
அவளைப் பார்க்காமல் திரும்பி உட்கார்ந்துகொண்டவனை ஏதோ ஞாபகம் வந்தவள் போல, “நான் வீசிய லவ் பண்ற மாதிரியே நீ ஷ்ரதாவை லவ் பண்ற ரைட்?” என்றாள் வித்யா.
அவன் திரும்பி ஒரு பார்வை பார்த்ததோடு சரி. கட்டிலில் மல்லார்ந்து படுத்துவிட்டான்.
“சரியான கர்வி. அகம்பாவம் பிடிச்சவன்” என்று புழுங்கிய வித்யா, பின்னால் கம்பில் நன்றாக சாய்ந்துகொண்டு, மழை நின்றபின்னும் சொட்டிக்கொண்டிருந்த குடிசையின் ஓலைகளையே சாளரத்தின் வழியாக வெறித்துக் கொண்டிருந்தாள்.
அப்போது குடிசையின் ஓரத்துத் துளையிலிருந்து ரயில்பூச்சியொன்று அவளை நோக்கி புகை, ஊங்காரம் என்று எந்தவித ஆரவாரமுமின்றி அமைதியாக நெருங்க, கவனித்துவிட்டவள், “ஆ! பூச்சி.. பூச்சி.. காப்பாத்துங்க! காப்பாத்துங்க!” என்று உயிரேபோகும் வகையில் அலறினாள்.
அவன் படக்கென்று விழித்து, பதறி தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்த பிஸ்டலில் கை வைத்தபடியே, “என்ன? என்ன?” என்றான்.
அவள் எழுந்து நின்றபடியே, “பூச்சி.. பூச்சி..” என்றாள்.
அருகில் வந்தவன் ரயில் பூச்சியைப் பார்த்ததும், “இதுக்கா இப்படி அலறுன?” என்று அலட்சியமாக பூச்சியை தன் ஷூக்காலால் நசுக்கிப்போட,
அவன் மீதான தன் அபிமானம் உயர்ந்ததில், “காலைல சாப்பிட்டது. வெளிய வேற இருட்ட ஆரம்பிச்சிடுச்சி. எனக்கு இப்போ பசிக்குது” என்று சொல்லி இரக்கம் சம்பாரித்தாள் வித்யா.
அவன் தன்னிருப்பில் இருந்த உணவு பதார்த்தங்களை எல்லாம் அவள் வாயில் திணித்தான். கொடூரப்பசியில் இருந்தவளும் ஆவ் ஆவ் என்று விழுங்கினாள்.
அடுத்த பத்து நிமிடமும் பிஸ்டலை கட்டிலில் தட்டியபடியே இருந்த சிவனேஸ்வரன், “நான் அன்னைக்கு ஷ்ரதாவை கோவில்ல ஒரு ஆளோட பார்த்தேன் வீசின்னு சொன்னப்பவே, வீசி சிவனேஸ்வரனா? சிவனேஸ்வரனா?ன்னு கேட்டாரு. எனக்கு ஒண்ணும் புரியல. உங்க அங்க அடையாளங்களை சொன்னதும் அவர் நீங்க தான்னு கன்பார்ம் பண்ணிட்டு, நீங்க ரொம்ப மோசமானவருன்னு சொல்லி என்னை ஜாக்கிரதையா இருக்க சொன்னாரு. எனக்கு அப்போ புரியல. ஏன்னு கேட்டதுக்கு வீசியும் காரணம் சொல்லல. உங்களுக்கும் வீசிக்கும் அப்படி என்ன தான் பிரச்சனை? ஷ்ரதாவை வச்சா?” என்று வித்யா தூண்டிலை வீசவும்,
“சாப்பிட்டாச்சில்ல? கண்ண மூடித் தூங்கு” என்றான்.
“ம்ஹூம் முடியாது. எனக்கு இப்போ ரெஸ்ட் ரூம் போகணும்” என்றவள், அவஸ்தையாக நெளிந்து அவனை இக்கட்டில் தள்ளினாள்.
முகத்தில் அசூயைக் காட்டியவன் வேறுவழியின்றி அவள் கைக்கட்டை அவிழ்த்து, “வெளிய வா” என்று அழைத்துச் சென்றான்.
அங்கு நாணல் அடர்ந்த மறைவான ஒரு இடத்தைக் காட்டி, “இதுக்கு பின்னாடி போ” என்றான்.
“என்ன இருட்டா இருக்கு? எனக்கு பயமாயிருக்கு” என்றவள் சொன்னபோது,
“கஷ்டம்” என்று சலித்தபடியே தன் கையிலிருந்த பேனா டார்ச்சைக் கொடுத்து, “சீக்கிரம் போயிட்டு வா” என்று சொல்லி அனுப்பி வைத்தான்.
நேரம் ஆக ஆக அவன், “என்ன ஆச்சா?” என்று கேட்க, அவளிடம் அனக்கமில்லை.
ஒரு சமயத்தில் அவனுக்கு சந்தேகம் வந்து, “ஹேய் இருக்கியா? நான் அங்க வரேன்” என்று சொல்லிவிட்டு வந்து பார்த்தபோது, அருமையாக அவனை ஏமாற்றி தப்பித்துப் போயிருந்தாள் வித்யா.
இங்கிருந்து மனித நடமாட்டம் உள்ள இடத்துக்கு செல்ல வேண்டும் என்றால் எப்படியும் ஐந்து கிலோ மீட்டர் கடக்க வேண்டும். பைத்தியம் இப்படி ஓடிவிட்டாளே என்று அங்கிருந்த உயரமான புங்கமரத்தின் மீது ஏறி நின்று பார்த்தான் சிவனேஸ்வரன்.
அவள் பேனா டார்ச்சுடன் ஓடிக்கொண்டிருப்பதும், அவளுக்கு எதிர்த்திசையிலிருந்து நான்கு பேர் பெரிய டார்ச்லைட்டுடன் வந்துக்கொண்டிருப்பதும் தெரிந்தது.
உடனே இறங்கி அந்தத் திசையை நோக்கி தானும் ஓட ஆரம்பித்தான் சிவனேஸ்வரன்.
ஆங்காங்கே தண்ணீர் கெட்டிக்கிடக்க, இரவின் நிசப்தத்தில் சலக் சலக் என்று சத்தம் எழுப்பி தங்க மங்கை பி.டி.உஷாவின் தங்கை போல ஓடிக்கொண்டிருந்தாள் வித்யா.
தவளைகள் வேறு இஷ்டத்திற்கு கத்தி இரவின் நிசப்தத்தை குலைத்துக் கொண்டிருந்தன.
திடுதிடுவென்று ஓடிக்கொண்டிருந்தவள் திடீரென எதிரே ஆட்கள் நால்வரை காணவும், மகிழ்ச்சியாக, “அண்ணா! அண்ணா! என்னை காப்பாத்துங்கண்ணா. என்னை ஒருத்தன் கடத்திட்டு வந்திருக்கான். அவன்கிட்ட இருந்து என்னைக் காப்பாத்துங்கண்ணா” என்று சொல்லி பலமாக மூச்சிரைத்தாள்.
அவர்கள் நால்வரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள்.
அவர்கள் நால்வரில் ஒருவன் தனது கைப்பேசியின் பட்டன்களை இயக்கி, “அண்ணே! நீங்க சொன்ன மாதிரி இங்க தானே அந்தப்பொண்ணு இருக்கு. சிவாத்தம்பி இங்க தானே தூக்கிட்டு வந்திருக்கு. சரிங்கண்ணே, நம்ம கிரானைட் குடவுனுக்கே அவளை தூக்கிட்டு வந்திடுறோம்.” என்று தன் முதலாளி விஜயாதித்தனுக்கு தகவல் சொன்னான்.
வித்யா அவன் பேச்சைக் கேட்டதும் பயந்து திரும்பி தான் வந்த பக்கமே ஓட ஆரம்பித்தாள்.
மொட்டையன் ஒருவன் வேகமாக அவளை நெருங்கிப் பிடிக்க முயன்றதில் சேலை முந்தானை அவன் கையில் சிக்க, அப்படியே முழுப்புடவையும் அவனால் உருவப்பட்டு தரையில் சகதியில் உருண்டாள். நால்வரும் காமப்பார்வையில் அவளுடலை மாமிசமாக்கி புழுவாய் ஊற ஆரம்பித்தார்கள்.
வித்யா அச்சத்தில், “சிவனேஸா! சிவனேஸா!” என்று உச்சஸ்தாயில் கத்தினாள்.
அவள் வாழ்க்கையும் மகாபாரத சீரியலாக இருந்திருந்தால் கூப்பிட்ட குரலுக்கு இந்நேரம் கிருஷ்ணர் போல் சிவனேஸ்வரன் என்டராகி காப்பாற்றியிருப்பான். என்ன செய்வது? அடுத்த சீன் என்னவென்று தெரியாத லைவ் டெலிகாஸ்ட் தானே வாழ்க்கை!
அவன் வருவது போல் தெரியவில்லை எனவும், கைக்கு அருகில் கிடந்த ஒரு கட்டையை எடுத்து அவர்களை தாக்க முயன்றாள் வித்யா.
முதலடி வலுவாக விழுந்துவிட்டதில் புடவையை உருவிய மொட்டைத்தலையன் “பிடிங்கடா அவளை” என்று அங்கேயே தலையைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்து விட்டான்.
மற்றவர்கள் ஒன்றுகூடி அவள் கையிலிருந்த கட்டையை பறிக்க முயற்சி செய்யவும், அதை அவர்கள் மீதே தூக்கிப்போட்டுவிட்டு திரும்பிப் பார்க்காமல் மீண்டும் ஓடத் துவங்கினாள்.
மொட்டையனைத் தவிர்த்து மற்ற மூவரும் தொடர்ந்து அவளைத் துரத்திக் கொண்டிருந்தார்கள்.
டிஸ்கவரி சானலில் ஒரு புலியோ, சிங்கமோ துரத்தும்போது உயிர் பயத்தில் ஒரு புள்ளிமான் எப்படி மருண்டு ஓடுமோ அப்படித்தான் கரடுமுரடான அந்தப் பாதையில், நிலவின் ஒளியில், நெஞ்சம் தடதடக்க, நீர்த்தேக்கங்களையெல்லாம் குதித்து தாவிக்கடந்து, உயிரைக் கையில் பிடித்து ஓடிவந்தாள் வித்யா.
இவள் இப்படி ஓடிக்கொண்டிருக்கும்போதே தூரத்தில் சிவனேஸ்வரனைக் கண்டதும் எவரெஸ்ட் சிகரத்தை நெருங்கியவள் போல் கூடுதல் ஆற்றலைப் பெற்று வேகமாக ஓடிவந்து அவன் நெஞ்சில் மோதி நின்றாள். அவனைக் கட்டிப் பிடித்து தனது பயத்தையும், பதட்டத்தையும் குறைக்க முயன்றாள்.
சிவனேஸ்வரனோ தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்த பிஸ்டலை வெளியே எடுத்தான்.
துரத்தி வந்த தடியர்கள் மூவரும், “தம்பி, மாமா தான் இந்தப்பொண்ணை தூக்கிட்டு வர சொன்னாரு. நீங்க விலகிக்கோங்க.” என்றதும், பிஸ்டலை மேலே வானத்தை நோக்கி இருமுறை சுட்டான். வித்யா பீதியில் இன்னும் அவனை இறுகக் கட்டிக்கொண்டாள்.
அவர்கள் தங்கள் பயத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “டேய்! விஜியண்ணேக்கிட்ட நேர்ல பேசிட்டு வந்து பார்த்துக்குவோம்டா. நம்ம ஆளுங்களோட வந்து தூக்கிட்டு போகும்போது இவர் என்ன பண்றார்னு பார்க்கலாம்.” என்று பின்வாங்கினார்கள்.
அவர்கள் கிளம்பியதும் அவளைத் தன் குடிசைக்கு இழுத்து வந்தான் சிவனேஸ்வரன்.
உள்ளே நுழைந்ததும் வலப்புறங்கையால் சுளீரென அவள் கன்னத்தில் ஒரு அறை விட்டான். அவள் பதிலுக்கு ஒரு அறை விட்டாள்.
அவனுக்கு மிகவும் பரிச்சயமான பெண் ஷ்ரதா என்பதாலோ என்னவோ அனைவரும் அவளைப்போலவே இருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டான் சிவனேஸ்வரன். ஆனால், வித்யா நான் ராணி மங்கம்மாவின் பேத்தியாக்கும் என்று அறைந்து சொல்லாமல் சொன்னாள்.
அவன் மீண்டும் ஒரு அறைவிட்டு, “இடியட்” என்க, அவள் தானும் பதிலுக்கு ஒரு அறைவிட்டு “நீதான் இடியட்” என்றாள்.
அவன் மூன்றாவதாக ஒரு அறைவிட்டு முன்னெச்சரிக்கையுடன் அவள் இரு கைகளையும் பின்புறமாக சேர்த்து பிடித்துக்கொண்டான். அதில் இருவரின் தேகமும் ஒன்றோடொன்று உரசிக்கொண்டது. சண்டைபோடுவதில் மும்முரமாக இருந்த இருவருக்குள்ளுமே இந்த தேக உரசல் மின்சாரத்தை உற்பத்தி செய்யவில்லை.
“ஹேய்! உன்கிட்ட என்ன சொன்னேன்?” என்று அதட்டினான் சிவனேஸ்வரன்.
அவள் திமிறி அவன் கைகளைத் தட்டிவிட்டு, “உன்னால தான் எல்லாம். இப்போ அந்த விஜயாதித்தன் தன் ஆளுங்களோட வந்து என்னை கடத்திட்டுப் போகப்போறான். நீயும் நின்னு வேடிக்கைப் பார்த்துக்கிட்டு இருக்கப்போற. அவனுங்க என்னை அங்க கொண்டுபோய் என்னவெல்லாம் செய்வானுங்களோ தெரியாது.” என்று புலம்பியவளின் கண்களில் லேசாக நீர் படலமிட்டன.
பின், “வாங்க, என்னை எங்க வீட்டுல கொண்டுபோய் விடுங்க.” என்றவள், தன் கலங்கிய கண்களை துடைத்துக்கொண்டே சொல்ல, அவனோ அசையாமல் நின்றான்.
காதல் கணம் கூடும்…
