காதல் கணம்-23

காதல் கணம் 23

 

அன்றிரவு முழுவதும் அவர்கள் வீட்டில் ஒருவர் கண்ணிலும் பொட்டுத் தூக்கமில்லை.

தனதறையில் இரும்புக் கட்டிலில் படுத்திருந்த வீசிக்கு சிந்தை முழுவதும், காலையில் எங்கு செல்வது? எனும் கேள்வியே தொடர் மாரத்தான் ஓட்டம் ஓடிக்கொண்டிருந்தது.

தனது அப்பா சொன்னது போல் கொடைக்கானலில் உள்ள தங்கள் சித்தப்பா வீட்டிற்கு செல்லலாம் தான். ஆனால், அதில் அவனுக்கு துளியும் விருப்பமில்லை. காரணம், மதுபாலாவின் படிப்பு செலவிற்கு கையேந்தியதிலிருந்தே அவர்கள் தங்களை மதிப்பதில்லை என்ற மனக்குறை இருந்தது அவனுக்கு.

அந்த யோசனையுடனே அசுவாரசியமாக தனது போனை இயக்கிப் பார்த்தவனுக்கு முதல் அறிவிப்பாக மதியம் ஷ்ரதா அவனுக்கு அனுப்பிய வாய்ஸ் மெஸேஜ் ஒன்று காத்திருக்க, ஹெட்போனை இணைத்து இரு காதிற்கு கொடுத்தான்.

ஷ்ரதா பிசிறு தட்டிய குரலில் விம்மிக்கொண்டேப் பேசினாள்.

“அவ்வளவு சாரி கேட்டும் உங்கக் கோபம் குறையலை இல்ல? என்னை பழி வாங்க எங்க அப்பாவை ஜெயிலுக்கு அனுப்பிட்டீங்க இல்ல? இப்ப உங்களுக்கு சந்தோசம் தானே?” என்று கேட்டிருந்தாள்.

வீசி, “அட பைத்தியமே!” என்று முணுமுணுத்தவன், வாட்ஸாப்பில் அவளுக்கு  செய்தி அனுப்ப ஆரம்பித்தான்.

முதலில் தன்னைப் பற்றி அவளுக்கு விளக்குவான் என்று பார்த்தால், வேறொரு செய்தியை தட்டச்சு செய்துக் கொண்டிருந்தான்.

“நாளைக்கு காலைல நான் கேரளாவுக்கு ரயிலேறிடுவேன். திரும்ப மதுரை வருவேனா தெரியாது. ஒருவேளை நீ என்னை இப்பவும் லவ் பண்றேன்னா, என் மேல உனக்கு நம்பிக்கை இருக்குதுன்னா, எல்லாத்தையும் உதறிட்டு எனக்காக மட்டுமே நீ வரணும். நாளைக்கு காலைல 7 டூ 7.30 ஜெயவிலாஸ் ப்ரிட்ஜுக்கு கீழ நான் காத்திருப்பேன். உனக்கு யோசிக்க இந்த பத்தரை மணி நேரம் போதும்னு நினைக்கிறேன்.’ என்று அனுப்பி விட்டான் வீசி.

ஆனாலும் அவள் எப்போது அந்த செய்தியைப் பார்ப்பாள் என்றே அவன் மனம் ஏங்கித் தவித்தது. திடீரென ஒரு கொடுமையான சந்தேகம். ஒருவேளை அவள் தாமதமாகப் பார்த்தால்? இல்லை, பார்க்காமலே போய்விட்டால்? வருவதும் வராமலிருப்பதும் உன் இஷ்டம் என்று அனுப்பியவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. ஆதலால், வாட்ஸாப்பில் அனுப்பிய செய்தியை சாதாரண செய்தியாகவும் தட்டிவிட்டான். அப்போது தான் அவனது ஆன்மா நிம்மதியடைந்தது.

கைப்பேசியை அணைத்துத் தூர வைத்தவன் போர்வையை தலை வரை மூடினான். தூக்கம் வரவில்லையானாலும் தானும் ஷ்ரதாவும் கேரளாவில் படகு இல்லங்களில் பயணிப்பது போலவே  காட்சி நீண்டது.

விஜயாதித்தனை கைது செய்த விஷயம் கொரோனா தொற்று போல் ஊர் முழுவதும் பரவியதன் பலனாக, அவரின் உறவினர்கள் அனைவரும் அவரின் வீட்டில் வந்து குவிந்தனர்.

அவர்களின் நல்வரவால் ஷ்ரதாவின் வீடே கச்சடா முச்சடாவென்று கிடந்தது. விஜயாதித்தன் மட்டும் இந்நேரம் இருந்திருந்தால் ‘போங்க’ என்று அனைவரையும் அடித்து விரட்டியிருப்பார். ஆனால், மீனாட்சி கொஞ்சம் சாது என்பதால், சாந்தமாகவே அவர்களுக்கு சேவகம் புரிந்துக் கொண்டிருந்தார்.

ஷ்ரதா இந்த அமர்க்களங்கள் எதிலும் கலந்துகொள்ளவில்லை. விஜயாதித்தனை கைது செய்வதற்கு முன், காலையில் சாப்பிடவென்று அவள் கீழிறங்கி வந்தது. மதிய உணவைக்கூட வேண்டாமென மறுத்துவிட்டாள். இவ்விதமே விஜயாதித்தன் மீதுள்ள கோபத்தில் அவள் இரவு உணவையும் வேண்டவே வேண்டாமென மறுத்துவிட, பெரியவர்களுடன் பேசிக்கொண்டே அவளை கவனித்துக் கொண்டிருந்த சிவனேஸ்வரன், இரவு பத்துமணியளவில் ஷ்ரதாவின் அறைக்கு பால் டம்ளருடன் நுழைந்தான்.

முதலில் அவளறை இருளடைந்து கிடப்பதைப் பார்த்து திகைத்துப்போனவன், “ஷ்ரதா! ஷ்ரதா!” என அழைத்துக்கொண்டே தட்டுத் தடுமாறி மின்விளக்கின் சுவிட்சை இயக்கினான். ஷ்ரதா அங்கு படுக்கையில் சீராக மூச்சுவிட்டுக் கொண்டிருந்தாள்.

பதற்றம் நீங்கி முகம் தெளிவானவன் மேசைவிளக்கின் அருகே மாத்திரை அட்டை ஒன்று கிடக்கவும், வேகமாக ஓடிவந்து எடுத்துப் பார்த்தான். அது தலைவலி மாத்திரை என்று ஊர்ஜிதமாகவும் ஆசுவாசமடைந்தவன் போல பாலை அதன் அருகிலேயே வைத்துவிட்டு, ஓரத்தில் கிடந்த பீம்பேக்கை அவள் கட்டிலையொட்டி இழுத்துப்போட்டான். பின், அதில் உட்கார்ந்துகொண்டு அவள் முகத்தையே ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தான்.

சிவனேஸ்வரன் அப்படி எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருந்தானோ தெரியாது. ஆனால், அவன் பார்வையில் ஒரு கணம் கூட விரசம் இல்லை. மாறாக, ரசிப்பும் வியப்பும் மட்டுமே வியாபித்துக் கிடந்தது.

‘என்ன இல்ல இவளுக்கு? அந்தப் பரதேசியைப் போய் காதலிக்கிறாளே!’ என்று பொறாமையுடன் வீசியை நினைத்தான்.

அந்நேரம் அவன் யோசனையை கலைப்பது போல் ஷ்ரதாவின் கைப்பேசி ஒலி எழுப்ப, “ப்ச்! யாரது நைட் பதினொன்றரைக்கு மெஸேஜ் அனுப்புறது?” என்று எரிச்சலாக உச்சுக்கொட்டியபடியே அவள் போனை எடுத்துப் பார்த்தான்.

அதில் வீசியின் திட்டம் விலாவரியாக இருக்கவும், “பிச்சைக்கார நாயே!” என்று ஆவேசமாக சொல்லிவிட்டு, திரும்பி ஷ்ரதாவைப் பார்த்தான்.

அவள் முகம் நிச்சலனமாக இருந்தது.

‘நல்லவேளை எந்திரிக்கல’ என்று நிம்மதிப் பெருமூச்சுவிட்டவனாக அந்தத் தகவலை அழித்துவிட்டு, அநாகரிகத்தின் உச்சமாக அவள் வாட்ஸாப்பிற்குள் சென்றுப் பார்த்தான்.

முதலில் அவனுக்கு ஷ்ரதா ஏன் வீசிக்கு இவ்வளவு ‘SORRY’ சொல்லியிருக்கிறாள் என்றே புரியவில்லை. எதுவாகினும் அவர்களிருவருக்குள்ளும் உறவு சுமூகமாயில்லை என்ற புரிதலே அவனுக்கு ஆத்ம திருப்தியைத் தந்தது.

அத்துடன் ஷ்ரதா இறுதியாக அவனுக்கு அனுப்பிய வாய்ஸ் மெஸேஜை கேட்பதற்காக அவளின் ஹெட்போனைத் தேடியவனுக்கு டேபிளின் மீது கிடந்த மோதிரப்பெட்டியொன்று கண்ணைப் பறிக்க, திறந்துப் பார்த்தான்.

மூடியின் உட்பக்கத்தில் ‘ஐ லவ் யூ ஷ்ரதா’ என்று எழுதியிருப்பதைக் கண்டதுமே, “ஓ! ஐயா கொடுத்த கிப்ட்டா?” என்று சர்வஅலட்சியமாக அதைத் தன் பேண்ட் பாக்கெட்டிற்குள் திணித்துக்கொண்டான்.

‘இதை அவன் மூஞ்சில விட்டெறியனும்’ என்ற கோபாவேசம் அவனிடம்.

காரியத்தில் கண்ணாக போனில் ஹெட்போனை இணைத்து ஆடியோவை இயக்கியவனுக்கு ஷ்ரதாவின் பேச்சு நித்தியானந்தமாக இருந்தது.

‘ஆகா! ஷ்ரதா இப்போ வீசி மேல செம கோபத்துல இருக்காப் போலயே? ம், இதுவும் நல்லது தான். இந்த வீசியை நாளைக்கு நாம ஏப்ரல் ஃபூல் பண்ணிடலாம்’ என்று வன்மமாக நினைத்துக்கொண்டு, போனிலிருந்த அவள் சிம்மை கழற்றி எடுத்துக்கொண்டு அறையைவிட்டே வெளியேறிவிட்டான்.

சிவனேஸ்வரன் சற்று நிதானித்திருந்தால் ஷ்ரதா ஆதிஸ்வரனுடன் பேசிய காதல் வசனங்களையும் சேர்த்து வாசித்திருக்கலாம். ஆனால், அவன் பார்வை முழுவதும் வீசி மீதே விழுந்திருந்தது.

அவன் தனது பழியை நிறைவேற்ற விடிந்தும் விடியாததுமாக ஷ்ரதாவின் தோழி தாரிணியின் வீட்டுவாசல் முன் சென்று நின்றான்.

அவள் ஏழுமணி கல்லூரிப் பேருந்தை எதிர்பார்த்து வெளியே வந்தபோது, இவன் அவளிடம் ஓடிப்போய், “ஹாய் தாரிணி” என்றான்.

அவள் இவனைப் பார்த்ததுமே மிரண்டு இரண்டடி பின் வாங்க, “ஹேய்! நான் தான். சிவனேஸ்வரன்.” என்று தன்னை அவளுக்கு நினைவுபடுத்தினான் .

“ம், ஞாபகம் இருக்கு. சொல்லுங்க” என்று மிரட்சியுடனே சொன்னாள் அவள்.

“இங்கப்பாரு தாரிணி! உனக்கு வீசி தெரியும்ல? நீயும் ஷ்ரதாவும் நான் சொல்லி அவன் புக் ஸ்டாலுக்குக்கூட டியூசன் போனீங்களே?” என்று தன் தவறை தானே தன் வாயாலேயே வாக்குமூலம் கொடுக்கும் அவலநிலை அவனுக்கு.

“ம், ஞாபகம் இருக்கு. சொல்லுங்க” என்று அக்கம் பக்கம் பார்த்துக்கொண்டே சொன்னாள் தாரிணி.

“வீசி இப்போ பெரிய ஆபத்துல இருக்கான் தாரிணி. நீ தான் இப்போ அவனுக்கு உதவணும்”

“நானா? நீங்க இப்போ என்ன சொல்றீங்கன்னே எனக்குப் புரியலையே?”

“ஒண்ணுமில்ல தாரிணி, நீ இந்த மோதிரத்தை வீசிக்கிட்ட கொடுத்து, நீங்க எதிர்பார்க்கிற மாதிரி ஷ்ரதா இங்க வரமாட்டா. அவளுக்கு உங்க மேல விருப்பமில்லைன்னு சொல்லனும்”

தாரிணியின் முகத்தில் ஈயாடவில்லை. வீசியை காதலித்த மனம் உள்ளே ஊமையாய் கதறிக் கொண்டிருந்தது.

“என்ன யோசிக்கிற தாரிணி?”

“இல்ல நான் ஷ்ரதாகிட்ட ஒரு வார்த்தை பேசிட்டு..” என்று சொல்லிக் கொண்டிருந்தபடியே தனது பர்ஸிலிருந்த போனை வெளியில் எடுத்து ஷ்ரதாவுக்கு அழைப்பு விடுத்தாள் அவள்.

சிவனேஸ்வரன் அர்த்தபுஷ்டியுடன் அவளைப் பார்த்து புன்னகைத்தவன், அவள் தன்னைப் பார்க்கும்போது முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு, “தாரிணி இதுக்கெல்லாம் நேரமில்ல. வீசி இப்போ உயிர்போற ஆபத்துல இருக்கான். நாம கொஞ்சம் தாமதிச்சாலும் என் மாமா அவனை கொன்னுடுவாரு. சீக்கிரம் ஜெயவிலாஸ் பாலத்துக்குக் கீழ நாம போகணும்.” என்று அவளை தன் பைக்கில் ஏறச்சொன்னான்.

அவள் தயங்கியபடியே அவன் பைக்கில் ஏறி உட்கார்ந்தாள்.

பைக்கை தொண்ணூறில் விட்டு பாலத்திற்கடியிலிருந்த வீசி தங்களை பார்க்க முடியாத தொலைவிற்கு வந்து அவளை இறக்கி விட்டவன், “நான் சொன்ன மாதிரியே சொல்லிடு என்ன?” என்று மீண்டுமொருமுறை நினைவு படுத்தினான்.

அவள் அவனை திரும்பிப் பார்த்தபடியே சென்றாள்.

பாலத்திற்கடியிலிருந்த கல்லொன்றில் அமர்ந்திருந்த வீசி, தாரிணியைக் கண்டதுமே எழுந்து நின்றான்.

தாரிணிக்கு வீசியிடம் பொய் சொல்லப்போகிறோம் என்ற உணர்வே அச்சத்தைத் தந்தது. ஒவ்வொரு அடியையும் பயந்து பயந்து எடுத்து‌வைத்தாள்.

வீசி முதலில் தாரிணியை ஷ்ரதாவென்றே நினைத்துவிட்டான். தூரத்தில் அவள் முகம் சரியாகத் தெரியவில்லை அவனுக்கு.

ஆனால், கண் கொட்டாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்த வீசிக்கு அவள் முகம் அருகில் வர வர கற்பனை கேபிள்கள் அனைத்தும் அறுபட்டு, முகம் தடங்கலுக்கு வருந்தியது.

நெருங்கி வந்தவளிடம் தனக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் மறைத்து, இயல்பான முகத்தோற்றத்துடன், “என்ன தாரிணி, ஷ்ரதா அனுப்பினாளா?” என்றான், உண்மையை அறியும் நோக்கில்.

அவள் “ம்” என்று தலையாட்டியவண்ணமே தன் கையிலிருந்த மோதிரத்தை நீட்டினாள்.

தனது காதலுக்கு ஷ்ரதா அனுப்பிய இரங்கல் செய்தியே இந்த மோதிரம் என்று உணர ரொம்ப நேரம் எடுக்காத வீசி, அந்த மோதிரத்தை கையில் வாங்கிப் பார்த்துக்கொண்டே, “ஷ்ரதா என்ன சொன்னா?” என்றான்.

“அவளுக்கு இங்க வர விருப்பமில்லைன்னு சொல்லச் சொன்னா.” என்று திக்கித் திணறினாள் தாரிணி.

“உண்மையாவா?” என்று கேட்டுவிட்டே அது எவ்வளவு அபத்தமான கேள்வி என்று உணர்ந்தான் வீசி.

“ஷ்ரதாவை கடைசியா ஒரு தடவை எனக்குப் பார்க்கணும் தாரிணி. ப்ளீஸ் அவளை இங்க வரச்சொல்றியா?” என்று குழந்தைபோல் கெஞ்சினான்.

“சார்?”

“ப்ளீஸ் தாரிணி இன்னும் ஒண்ணேகால் மணி நேரத்துல எனக்கு ட்ரெயின். ப்ளீஸ்மா” என்றான்.

அவளிடம் இப்படி கெஞ்ச அசிங்கமாக இருந்தது வீசிக்கு. அதனால் அவள் கண்களைப் பார்ப்பதையே தவிர்த்தான்.

தாரிணிக்கோ அவனைப் பார்க்க பாவமாக இருந்தது. சிங்கம் தன் முடிகளை இழந்து நிற்பது போலவே காட்சியளித்தான் அவன்.

“சொல்றேன் சார்” என்று கிளம்ப ஆயத்தமான தாரிணியை தானே ஆட்டோப் பிடித்து  அனுப்பி வைத்தான் வீசி.

இந்த மௌன நாடகத்தை ஒளிந்திருந்தபடியே உற்றுநோக்கிக் கொண்டிருந்த சிவனேஸ்வரன், தாரிணியை ஏற்றிச் சென்ற ஆட்டோவை பின்தொடர்ந்து வந்து வழிமறித்தான்.

தாரிணி சிவனேஸ்வரனிடம் வீசி கூறியதை கூறிவிட்டு, தான் இதை ஷ்ரதாவிடம் சென்று கூறப்போவதாக பிடிவாதம் பிடிக்க, அவளை தடுத்துப் பார்த்த சிவனேஸ்வரன் பின் அது முடியாமல் போகவும், ‘போ’ என்று அவளுக்கு வழிவிட்டான்.

ஆனால், குரூரமாக உடனே அருண்மொழிக்குப் போன்போட்டு வீசி கேரளா செல்லவிருப்பதைப் பற்றி கோள் மூட்டினான்.

தாரிணி ஷ்ரதாவின் வீட்டுவாசலில் வந்து இறங்கியபோது சாம்பல்நிற சுமோ ஒன்று வேகமாக அவளை உரசுவது போல் கடந்து சென்றது.

அவள் தனது புத்தகமூட்டையை தூக்கிக்கொண்டே ஜல்ஜல்லென்று உள்ளே சென்றாள். விதவிதமான மனிதர்கள் அவளை விதவிதமான முக பாவனைகளுடன் வரவேற்க, அவர்களைக் கடந்து ஷ்ரதாவின் அறைக்கு செல்வதென்பது பிரம்ம பிரயத்தனமாகத்தான் பட்டது அவளுக்கு.

அறையில் ஷ்ரதாவை சந்தித்த தாரிணிக்கு முதலில், ‘என்னாச்சு ஷ்ரதா? ஏன் இப்படியிருக்க?’ என்றே கேட்க தோன்றினாலும், தானிருந்த அவசரத்தில், “ஷ்ரதா என்கூட கிளம்பு” என்றே பரபரத்தாள்.

ஷ்ரதா வியப்பாக, “எங்க?” என்று வினவ,

“ரொம்ப அவசரம். வா உன் ஸ்கூட்டில போகும்போது சொல்றேன்” என்றாள் அவள்.

ஷ்ரதா குழப்பமாகப் பார்க்கவும், “வா சொல்றேன்” என்று அவள் கையைப் பிடித்து வெளியே இழுத்து வந்தாள்.

ஷ்ரதாவின் உறவினர்கள் சிலர், “எங்கப்போற ஷ்ரதா?” என்று வினவ,

தாரிணியை மாட்டிவிடாமல், “பக்கத்துல பெருமாள் கோவிலுக்குப் போயிட்டு வந்திடுறேன்” என்றவள் வேகமாக அவளுடன் வெளியேறினாள்.

ஷ்ரதா ஸ்கூட்டியை ஓட்டும்போதே, “ஹே தாரிணி! இப்போவாவது சொல்லு. எங்கடி போறோம்?” என்று அனத்த,

“வீசி சாரை பார்க்கப் போறோம்டி” என்று கத்தினாள் தாரிணி.

ஷ்ரதா திடுக்கிட்டவளாக, “அவரையா?” என்று தடுமாறவும், சற்று முன்பு நடந்ததனைத்தையும் ஒன்றுவிடாமல் அவளிடம் ஒப்பித்தாள் தாரிணி.

அதிர்ந்து போன ஷ்ரதா, தன் முகத்தில் விழுந்த முடிகளையும், பறந்த துப்பட்டாவையும் சரிசெய்தபடியே வேகமாக வண்டியை முடுக்க, அவள் பதைபதைப்பாக இருப்பதைப் பார்த்த தாரிணி ஆற்றமாட்டாமல், “என்ன தான்டி உங்களுக்குள்ள பிரச்சனை?” என்று கேட்டாள்.

ஷ்ரதாவோ அவளிடம் வெடித்துச் சிதறினாள். “என்ன பிரச்சனையா? நான் பணக்காரியா இருக்கறது; எங்கப்பாவுக்கு பொண்ணா இருக்கறதுன்னு எல்லாம் தான்டி அவருக்கு பிரச்சனை. இப்போக்கூட பாரு என்னை கடைசியாப் பார்க்கறதுக்கு வரச்சொல்லியிருக்காரு. ட்ரெயின் ஏறி எங்கப் போறாராம்டி?” என்றாள்.

“தெரியலையே ஷ்ரதா”

“இப்படித்தான். இப்படித்தான்டி என்னை எப்போப் பார்த்தாலும் அழ வச்சிட்டே இருப்பாரு.”

தாரிணி ஷ்ரதாவின் தோளைப் பிடித்து, “சார், ரொம்ப நல்லவர் ஷ்ரதா. அவரு உன்னை ரொம்ப லவ் பண்றாரு. நீ ரொம்ப லக்கி” என்றாள்.

அதைச் சொல்லும்போது தாரிணியின் கண்கள் கலங்கியதை கண்ணாடியில் பார்த்துவிட்ட ஷ்ரதா சாலையை கவனிக்க மறந்தாள். பலன், தடாலென நடந்து முடிந்தது விபத்து.

வாகன நெரிசல் எதுவுமில்லையென்று பறந்து கொண்டிருந்த ஷ்ரதா, தாரிணியின் பேச்சில் எதிரிலொரு லாரி வந்ததை கவனிக்கவில்லை.

விளைவு, இருவரின் “ஆ” என்ற அலறலோடு ஸ்கூட்டி வாய்க்காலில் தூக்கி வீசப்பட்டது.

சுற்றியிருந்தவர்கள் அனைவரும் விபத்துக்குள்ளானவர்களை பரிதவிப்பாக மருத்துவமனைக்குச் தூக்கிச் செல்ல, ஷ்ரதா கொஞ்சம் கொஞ்சமாக தன் சுயநினைவை இழந்துக் கொண்டிருந்தாள்.

காதல் கணம் கூடும்…
 

❤️ Loading reactions...
1 Comment

You cannot copy content of this page

error: Content copy warning!!