காதல் கணம் 24
ஷ்ரதாவிற்கு நிகழ்ந்த விபத்து எதுவும் அறிந்திராத வீசியின் நிலைமையோ இன்னும் பரிதாபமாக இருந்தது.
வீசி நிச்சயம் தன் வாழ்நாளில் இப்படியொரு அவஸ்தையை அனுபவித்திருக்க மாட்டான். தன் ரௌத்திரம், சுயமரியாதை என அனைத்தையும் தொலைத்துவிட்டு இப்படி நடுரோட்டில் நிற்பான் எனவும் கனவு கண்டிருக்கமாட்டான்.
ஆனால், நிற்கிறான். அவளால் தான். எல்லாம் அவளால் தான்! ‘முருகா! முருகா!’ என்று புலம்புகிறவள் இறுதியில் அவனையே புலம்பவிட்டுவிட்டாள்.
வீசி இப்பொழுதுகூட ஏன் ஷ்ரதா மீது இவ்வளவு நம்பிக்கை வைக்கிறான் எனத் தெரியவில்லை. ஆனால், வைக்கிறான். அந்த அழுகுனி இம்முறை என்னை ஏமாற்றமாட்டாள் என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்கிறான்.
கைப்பேசியில் ஏதேனும் காரணம் சொல்லமாட்டாளா? என எடுத்து எடுத்துப் பார்க்கிறான். நாம் நைசாக அவனருகில் சென்று இது தான் வீசி காதலென்றால், கொஞ்சம் யோசித்துவிட்டு அவன் முகம் சுளிக்கவும் கூடும்.
காதல் அவனை விட்டுவைக்கவில்லை. ஆனால், அதனை அவன் முழுதாக உணரவுமில்லை!
அருண்மொழியிடம் போட்டுக் கொடுத்த பின்பும், இன்னும் வீசியையே கண்காணித்துக் கொண்டிருந்த சிவனேஸ்வரனுக்கு வீசியின் தவிப்பைப் பார்ப்பதில் அப்படியொரு இன்பம்!
அவன் இவ்வாறு பார்த்திருந்தபோதே வீசியை ஒரு கும்பல் அடித்துத் தூக்கி சுமோவில் கொண்டு சென்றது. நிம்மதியோடு தான் ஷ்ரதாவின் வீட்டிற்கு வந்தான் சிவனேஸ்வரன்.
அருண்மொழி போன் பேசிவிட்டு வந்தவன், “சரியான நேரத்துக்கு தகவல் சொன்ன சிவா. நீ இல்லைன்னா, அப்பாக்கிட்ட நான் தான் மாட்டியிருப்பேன்” என்று அவனை பாராட்டினான்.
சிவனேஸ்வரன் கண்ணிலோ எதையோ சாதித்துவிட்ட மின்னல் வெட்டியது.
மறுபுறம் சுமோவில் கடத்தப்பட்ட வீசியோ உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தான். அவனை தங்கள் கிரானைட் தொழிற்சாலைக்குள் யாருக்கும் தெரியாமல் அடைத்து வைக்கும்படி உத்தரவிட்டிருந்தான் அருண்மொழி.
கடத்தப்பட்ட அன்று, “ஆ! ஆ!” என்று கதறிய வீசிக்கு, அங்கு பச்சாதாபம் காட்ட யாருமில்லை.
அவன் உடை முழுவதையும் உருவி, கைகள் இரண்டையும் பின்புறம் கட்டிப்போட்டு, உருட்டுக்கட்டையால் லாடம் கட்டினார்கள் அந்த முரட்டு தடியர்கள்.
அதிகாரத்தின் யானை கால்களில் மிதிபடும் சித்தெறும்பின் நிலையிலிருந்தான் வீசி. வெளிக்காயம் உள்காயம் என்று அந்த இரவின் நீளம் விளங்கியது அவனுக்கு.
மறுநாள் வீசி கொஞ்சநஞ்ச உயிருடன் மீன் போல் முன்னும் பின்னுமாக துள்ளினான். அவனின் முயற்சிகள் அவர்களுக்கு வேடிக்கையாக இருந்ததோ என்னவோ ரசித்துச் சிரிப்பதற்காகவே சிறிதுநேரம் அவனை அவ்வாறு விட்டுவைத்தார்கள்.
பின், அவனது முயற்சிகள் அனைத்தும் அடங்கி ஓய்ந்தபோது அரக்கர்கள் இரக்கமேயில்லாமல் இரும்புத்தடியால் இரத்தம் சொட்டச்சொட்ட அடித்தார்கள்.
ஏற்கனவே புத்தகக்கடையில் அவனிடம் அடி வாங்கியவர்களில் இருவர் வேறு இந்த ஜோதியில் ஐக்கியம் என்பதால் பழிவாங்கும் படலமும் சேர்ந்து அரங்கேறிக் கொண்டிருந்தது.
கும்பலில் குட்டையானவன் பூனைக்குரலில் கத்தினான்.
“ஜீவாண்ணே, இவனை சும்மாவிடக்கூடாதுண்ணே. இதைவிட பெருசா எதாவது செய்யணும்ணே.” என்றான்.
“டேய்! சின்னவரோட மச்சான்டா இவன்”
“ஏண்ணே! அவரு தானே இங்க கட்டிப்போட்டு வைக்க சொன்னாரு. எப்படியும் இவன் பண்ணின வேலைக்கு விஜியண்ணே இவனை சும்மாவிடுவார்னு நினைக்கிறீங்க?”
“சரிடா, இப்போ என்ன பண்ணலாம்னு சொல்ற?”
“இவனை நம்மளை ஏன்டா தொட்டோம்னு நினைக்கிற அளவுக்கு பண்ணனும்ணே. டேய் வாசு! அந்த கிரானைட் கட்டிங் மிஷினை எடுத்துட்டு வா”
வாசுவும் உடனே அதற்கு செவி சாய்த்தான்.
அரை மயக்கநிலையில் கிடந்த வீசி எதிர்க்க வலுவில்லாமல் அவர்களின் குரோதத்திற்கு செத்து செத்துப் பிழைத்தான்.
அவர்கள் தன் முதுகில் செய்த ஒவ்வொரு விளையாட்டிற்கும் துடித்து துடித்து அலறினான். மொத்தம் பதினேழு கீறல்கள். ஒவ்வொன்றிற்கும் புற்றிலிருந்து கிளம்பும் ஈசல் போல ரத்தம் வெளியேறிக் கொண்டேயிருந்தது.
“ம், போதும். இவனை அவுத்துவிட்டுட்டு இந்த இடத்தை கழுவி விட்ரலாம்” என்று அவர்கள் தங்களுக்குள்ளேயே திருப்தியாக ஒரு முடிவிற்கு வந்தபோது தான் அந்தத் திருப்பம் நிகழ்ந்தது. வீசியைப் பொறுத்தவரை அது ஒரு தெய்வ சங்கல்பம்!
யாரும் எதிர்பார்த்திராத சமயம் திடுமென குடவுனிற்குள் நுழைந்த ஏழு பேர், விஜயாதித்தனின் ஆட்களை சரமாரியாக தாக்கிவிட்டு வீசியை தங்களுடனே தூக்கிச் சென்றார்கள்.
வீசி தன்னை காப்பாற்றியவர்களைக்கூட கண் திறந்து பார்க்க முடியாமல் கிடந்தான். ஊசலாடிக் கொண்டிருந்த அவன் உயிர் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் சொகுசு அறையில் வைத்து வைத்தியம் பார்க்கப்பட்ட பின்பே காப்பாற்றப்பட்டது.
தான் விழித்துப் பேச ஆரம்பித்த ஒவ்வொரு நாளும் தன்னுடன் வந்து அரட்டையடித்துவிட்டுச் சென்ற அந்த பெரிய மனிதரை வீசிக்கு ரொம்பவேப் பிடித்துப்போனது.
அனைவரும் அவரை ‘மாணிக்கண்ணே’ என்றார்கள்.
ஆனால், வீசி அவ்வாறு அவரை கூப்பிட்டபோது ‘ராஜமாணிக்கம்’ என்று முழுநாமம் கொண்ட அந்த மனிதர் வேடிக்கையாகச் சிரித்தார்.
அவனுக்கு அது கூச்சமாக இருந்தது. எப்படி கூப்பிடுவது என்றே பலவாறு யோசித்து ஒருநாள் அவரை ‘மாணிக்ஜி’ என்றான். அவரும் அவன் முதுகை தட்டிக்கொடுத்து ஊக்குவித்தார்.
நாட்கள் செல்ல செல்ல அங்கிருந்தவர்கள் அனைவருடனும் சகஜமாகப் பேசப் பழகிக்கொண்டான் வீசி. அவர்களும் அவனை தங்களவர்களாக ஏற்கப் பழகிவிட்டார்கள்.
அதிலும் வித்யாவுக்கு அவனை ஒருபடி கூடுதலாய் பிடித்துவிட்டது. காரணமேயில்லாமல் அடிக்கடி அவனை வந்து சந்தித்தாள்.
வீசி முடிந்தளவு அவளிடமிருந்து விலகியிருக்கவே தீர்மானித்தான். இன்னொரு காயத்தை ஏற்க அவன் மனம் தயாராகயில்லை.
நாட்கள் ஒவ்வொன்றும் வாக்கிங்கிலிருந்து ரன்னிங்கிற்கு முன்னேறியது போல் வேகமாக ஓடிக்கொண்டிருந்த ஒருநாள் ராஜமாணிக்கம் விஜயாதித்தனின் எதிரி என்றும், இருவரும் கேஆர்பிக்கு கீழே தான் வேலைப் பார்க்கிறார்கள் என்றும் தெரிய வந்தபோது வீசி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.
ராஜமாணிக்கத்தின் மேல் பயம், அருவருப்பு எதுவுமின்றி தன்னைக் காப்பாற்றியவர் என்ற நன்றியுணர்வு மட்டுமே எஞ்சியிருந்தது அவனிடம். அதில் முழுமையாய் குணமடைந்த பின், ராஜமாணிக்கத்தின் கீழேயே வேலைக்குச் சேர்ந்துவிட்டான்.
ராஜமாணிக்கமும் அவன் திறமையில் அசந்து தான் போனார். ஒருமுறை அவர் அவனிடம் தன் ஆள் என்றாலே துப்பாக்கி இருக்க வேண்டும் என்று ஒரு துப்பாக்கியை நீட்டியபோது வீசி மறுக்காமல் வாங்கிக் கொண்டான்.
ஆனால், வாங்கும்போது மறுவாரமே அதை தான் உபயோகிக்க வேண்டிய நிலை வரும் என்று கனவிலும் அவன் நினைத்துப் பார்த்திருக்க மாட்டான்.
ஒரு பருவக்காற்று சுழற்சியில் அவன் வாழ்க்கையே போர்க்களமாக மாறிவிட்டது. எதிரியின் உயிரை பறித்தல் என்பது கூட தர்மமாகிவிட்டது.
ராஜமாணிக்கத்திடம் வேலைக்குச் சேர்ந்த வீசியின் வீர தீர செயல்களை எல்லாம் கேள்விப்பட்டபோது விஜயாதித்தனுக்கு உடலில் மிளகாயை அரைத்துப் பூசியது போல் காந்தியது.
ஏற்கனவே வீசியை தங்களின் கட்டுப்பாட்டில் இருந்து அந்த ராஜமாணிக்கம் கடத்திச் சென்றிருக்கிறான் என்ற கடுப்பிலிருந்த விஜயாதித்தனுக்கும், அருண்மொழிக்கும், வீசி தங்களின் ஆட்களை எதிர்க்க வேறு செய்கிறான் என்று தெரிந்ததும், கோபம் கொப்பளித்தது. ஆத்திரமாக கேஆர்பியிடம் சென்று முறையிட்டார்கள்.
ஆனால், கேஆர்பி விசாரித்த போது ராஜமாணிக்கம், “என் உயிரை வேணும்னாலும் கேளுங்கண்ணே. ஆனா அந்தப் பையனை மட்டும் கேட்காதீங்க” என்று திண்ணமாக மறுத்துவிட்டார்.
இதை அடியாட்கள் மூலம் வீசி அறிந்தபோது கண் கலங்கிவிட்டான். அக்கணத்தில் அவன் மனதில் ஒரு தீர்மானம் பிறந்தது. “இனி உயிரேப் போனாலும் மாணிக்ஜியை விட்டு நான் விலகமாட்டேன்” என்று சூளுரைத்துக்கொண்டான்.
வீசியின் பராக்கிரமத்தில் ராஜமாணிக்கமும் ‘இனி உன் எதிரி நான் இல்ல விஜயாதித்தா. வீசி தான்.’ என்று போர்முரசு கொட்டுமளவிற்கு வந்துவிட்டார்.
வீசியின் தலையீட்டையும் அட்டூழியத்தையும் விஜயாதித்தனால் ஜீரணிக்கவே முடியவில்லை. கைக்கும் வாய்க்கும் வாகான தன் மகனையே எந்நேரமும் கரித்துக்கொட்டிக் கொண்டிருந்தார்.
அருண்மொழியோ தன் இயலாமையின் கோபத்தை எல்லாம் வீட்டில் மதுபாலாவிடம் காட்டினான்.
அவளின் முறையீட்டால் அபிராமியும் பிரகாஷ் சக்கரவர்த்தியும் வீசியைத் தேடி ராஜமாணிக்கத்தின் வீட்டிற்கே வந்துவிட்டார்கள்.
அப்போது வீசி அவர்களுடன் செல்ல மறுத்துவிட்டான்.
“நான் இங்க மாணிக்ஜிக்கு கீழ வேலை பார்க்கற வரை தான் என் உயிருக்கு உத்திரவாதம். விலகினா உங்கப்பிள்ளை உங்களுக்கு இல்ல” என்று அவர்கள் தன்னை வற்புறுத்த இயலாத அளவுக்கு அவர்களின் வாயைக் கட்டிப்போட்டுவிட்டான்.
பெற்றோர்களோ அவனை வேதனையோடு பார்த்துக்கொண்டே சென்றுவிட்டார்கள்.
அவர்கள் சென்றபின் அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை. அவர்கள் கடைசியாக பார்த்துச் சென்ற அந்த பார்வையே அவனை இம்சித்தது.
எப்போதும் ஒருவித மனக்கலக்கத்துடனே திரிந்தவனை ராஜமாணிக்கம் அழைத்து, “வீசி, நீ என் கூடவே இரு. ஆனா, உங்க அம்மா அப்பாவுக்கும் மகனா இரு” என்றதும், அன்று அவன் அடைந்த உவகையானது உவமையே இல்லாதது.
அவரின் இரு கைகளையும் பிடித்து புறங்கையில் முத்தமிட்டான்.
ராஜமாணிக்கம் தன் தலைமையிலேயே பெரிய நிறுவனங்களுக்கு ஒப்பந்த முறையில் கிரானைட் விற்பனை செய்யும் அலுவலகம் ஒன்றை அவனுக்கு நிறுவிக் கொடுத்தார்.
வீசி அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக அந்த நிறுவனத்திற்கு ‘ரூபி கிரானைட்ஸ்’ என்று பெயர் சூட்டினான்.
ராஜமாணிக்கம் அதில் மனம் குளிர்ந்துப்போனார். ‘இந்த துரியோதனனுக்கு ஏத்த கர்ணன் தான் நீ’ என்று வீசியை மெச்சுதலாய் பார்த்தார்.
அந்நாளிலிருந்து அவன் மீதான அவர் அன்பும், கவனிப்பும் பிரத்யேகமானது.
அது தவறில்லை என்று மெய்ப்பிக்க, இந்த எட்டு வருடத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக அவரை வியக்கவைத்துக் கொண்டிருக்கிறான் வீசி.
ராஜமாணிக்கத்திற்கு அவன் தொழில் நேர்த்தியில் கேஆர்பியையே தூக்கி சாப்பிட்டுவிடுவான் போல் இருந்தது.
ஒருவேளை இவனை என் மருமகனாக்கிக்கொண்டால் என்ன? விஜயாதித்தனுக்கு இதைவிட ஒரு பெரிய அடி இருக்கவே முடியாது என்று யோசித்தவர், சமயம் பார்த்து அதை வீசியிடம் தெரிவிக்கவும் செய்தார்.
இதனால் விஜயாதித்தன் பாதிக்கப்படுவார் என்பதே வீசியை அவரின் விருப்பத்திற்கு இசைய வைத்தது.
“உங்க விருப்பம் மாணிக்ஜி” என்றுவிட்டான்.
ஆனால், விதியோ வேறு மாதிரி திட்டமிட்டது. வீசிக்கும், ஷ்ரதாவிற்கும் முடிச்சுப் போட்டது.
இருப்பினும் தங்கள் முடிவை அவர்கள் செயல்படுத்த முனைந்த போது தான் குறுக்கேப் புகுந்தான் சிவனேஸ்வரன். தற்போது அவனிருந்த பகுதியில் வானமகனை குளிர்விக்க, காற்றில் நறுமணத்தை கலந்துக் கொண்டிருந்தாள் இளையகன்னி.
தன்னை தன் வீட்டில் கொண்டுபோய் விடுமாறு அடம்பிடித்த வித்யாவிடம், முடியாது என்று நிர்தாட்சண்யமாய் மறுத்த சிவனேஸ்வரன் தன் கடந்தகாலத்தைக் கூற ஆரம்பித்தான்.
பொறுமையாகக் கேட்டிருந்தவள் இடையில் குறுக்கிட்டு, “வீசியும் ஷ்ரதாவும் முன்னாடி லவ் பண்ணியிருப்பாங்கன்னு நான் நினைச்சிக்கூட பார்க்கல. ஆமா நீங்க தான் இவ்வளவு வில்லன் வேலைப் பார்த்திருக்கீங்களே…” என்று தொடங்கவும், அவளை முறைத்துப் பார்த்தான் சிவனேஸ்வரன்.
உடனே தன் உதட்டைக் கடித்துக்கொண்டு, “இல்ல, ஐ மீன்.. எப்படி நீங்க வீசி ஷ்ரதாவை கல்யாணம் செஞ்சிக்க விட்டீங்கன்னு கேட்டேன்?” என்று தடுமாறினான்.
“நான் எங்க விட்டேன். எனக்கு அவங்களுக்கு கல்யாணம் ஆனதே தெரியாது” என்று முறுக்கிக்கொண்டான் சிவனேஸ்வரன்.
“என்ன சொல்றீங்க? உண்மையாவே தெரியாதா?”- வித்யாவின் சந்தேகப்பார்வை அவனுக்கு எரிச்சலைத் தந்தது.
“என் அம்மா அப்பா என்கிட்ட சொல்லாம மறைச்சிட்டாங்க. இங்க வெகேஷன் வந்தவங்க, பெங்களூர்ல வேலைப் பார்த்துக்கிட்டு இருந்த என்கிட்ட திடீர்னு ‘உனக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணிருக்கோம். பத்திரிக்கையும் அடிச்சிட்டோம்’னு சொன்னப்போ தான், நான் பதறியடிச்சி ஓடிவந்தேன். அவங்க கூலா, ‘பாரு, ஷ்ரதாவுக்கே கல்யாணம் ஆகிடுச்சி. ஒழுங்கு மரியாதையா நாங்க சொல்ற பொண்ணு கழுத்துல தாலி கட்டு’ன்னு சொன்னாங்க. எனக்கு அப்போ வேற வழி தெரியல” என்றான்.
“இல்ல, எனக்குப் புரியல. உங்க அம்மா தானே முன்னாடி ஷ்ரதாவை உங்க வீட்டுக்கு மருமகளாக்கணும்னு நினைச்சாங்க? ஆமா உங்க அண்ணன் ஆதீஸ்வரன் என்ன ஆனாரு? நீங்க ஏன் ஃபேமிலியோட பெங்களூர் போய் செட்டில் ஆனீங்க?” என்று தொடர்ந்து கேள்விகளை அடுக்கினாள் வித்யா.
“அதுவந்து எங்கம்மா என் அண்ணன் இறந்ததுக்கு காரணமே ஷ்ரதா தான்னு நினைச்சிட்டு இருக்காங்க”
“என்ன சொல்றீங்க? உங்க அண்ணன் இறந்துட்டாரா?”
“ம், எங்கம்மா என் அண்ணன் ஃபிளைட் வெடிச்சி செத்ததுக்கு காரணமே, அவன் ஷ்ரதா கழுத்துல கட்டின தாலி தான்னு நினைக்கிறாங்க.”
வித்யாவால் தன் ஆர்வத்தையும், அதிர்ச்சியையும் மறைக்க முடியவில்லை. அவனை இன்னும் சற்று நெருங்கி உட்கார்ந்துக்கொண்டு கேட்டாள். “என்ன? உங்கண்ணன் ஷ்ரதா கழுத்துல தாலி கட்டினாரா?” என்று.
“ஆமா, உண்மையை சொல்லனும்னா அது ஒரு கல்யாணமே கிடையாது” என்று தன் அண்ணனின் அன்றைய செயலுக்கான கோபத்தை இன்றும் தன் வார்த்தைகளில் வடித்தான் சிவனேஸ்வரன்.
காதல் கணம் கூடும்…
