காதல் கணம் 26
“ம்மா, ஷ்ரதா மயங்கி விழுந்துட்டா” என்ற சிவனேஸ்வரனின் அபாயவிளியைக் கேட்டதுமே, அப்போது தான் சாப்பாட்டுக்கூடையுடன் உள்ளே நுழைந்திருந்த மதுபாலா, ஓடிப்போய் தலைமை மருத்துவரை அழைத்து வந்தாள்.
வந்தவர் ஷ்ரதாவை சோதித்துவிட்டு, அருகிலிருந்த டியூட்டி டாக்டரிடம், “எதுக்கு இந்த ரூம்ல இவ்வளவு பேர் நிக்கிறாங்க?” என்று கேட்க, அனைவரையும் உடனே வெளியேற்றினார் செவிலியர்.
தன் மகள் தனக்கு கிடைக்க மாட்டாளோ என்று பயந்துபோன மீனாட்சியோ, சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதற்கிணங்க ஆதீஸ்வரனின் சட்டைக்காலரைப் பிடித்து உலுக்கினார்.
“என் பொண்ணு கண்ணு முழிச்சு முழுசா ரெண்டுநாள் கூட ஆகல. அதுக்குள்ளயும் அவளை கண்ணை மூட வச்சிட்டியேடா பாவி. உனக்கு இப்போ சந்தோசமா?” என்று கத்தினார்.
கோகிலாவால் பிள்ளைப்பூச்சி அண்ணியின் காரசார வார்த்தைகளை சகிக்க முடியவில்லை.
“அண்ணே, வீட்டு மருமகன்கிட்ட அண்ணி மரியாதையில்லாம ஏதேதோ பேசிக்கிட்டு இருக்காங்க. நீங்களும் வேடிக்கைப் பார்த்துக்கிட்டு இருக்கீங்க?” என்று அவரின் மனைவியை கண்டிக்கச் சொன்னார்.
விஜயாதித்தன் மீனாட்சியை அந்நியசக்தி ஏதோ ஆட்கொண்டிருப்பது போலவே பார்த்துக் கொண்டிருந்தவர், தன் தங்கையிடம் திரும்பி, “கோகிலா, அவ கஷ்டம் அவளுக்கு. நீதான் கொஞ்சம் இங்க வந்து உட்காரேன்.” என்றார் பம்மியவராக.
கோகிலாவும் மீனாட்சியை முறைத்துக்கொண்டே தன் முந்தானையை இடுப்பில் இழுத்து சொருகியவராய் அவரின் அருகில் வந்து உட்கார்ந்தார்.
அவர்கள் காத்திருந்த முக்கால்மணி நேரத்திற்குப் பிறகு வெளியே வந்த தலைமை மருத்துவர், “பேஷன்ட் இப்போ கோமா ஸ்டேஜ்க்கு போயிட்டாங்க. மூளையில ப்ளட் கிளாட் ஏதும் ஆகியிருக்குமோன்னு சந்தேகப்படுறோம். எதையும் ஸ்கேன் எடுத்துப் பார்த்த பின்னாடி தான் உறுதியா சொல்ல முடியும்” என்று கைவிரித்துவிட்டார்.
அனைவரும் இப்போது ஆதீஸ்வரனை தான் பார்வையால் குற்றம்சாட்டிக் கொண்டிருந்தார்கள்.
கீழே ஓரமாக உட்கார்ந்து அழுது கொண்டிருந்த மீனாட்சியை மதுபாலா இயன்றளவு தேற்றிக் கொண்டிருந்தாள்.
ஆதீஸ்வரன் யாருடைய பார்வையையும் எதிர்கொள்ள முடியாமல் மருத்துவமனையை விட்டே வெளியேறிவிட்டான். அவன் சிந்தை முழுவதும் ஷ்ரதாவின் நினைவே மீட்டப்பட்டுக் கொண்டிருந்தது.
‘எப்படினாலும் உன்னை அந்த வீசிக்கிட்ட இருந்து பிரிச்சிடலாம். என் தம்பி மனசை மாத்திடலாம்னு நினைச்சிட்டு இருந்தேனே ஷ்ரதா. இப்படி என்னை ஏமாத்திட்டியே? ஆனாலும் நீ எப்ப கண் முழிச்சாலும் நான் தான்டி உனக்கு புருஷன். இதை யாராலயும் மாத்த முடியாது’ என்று குரூரமாக நினைத்தவன், தன் மருத்துவ மேற்படிப்பை தொடர மீண்டும் வெளிநாடு செல்ல திட்டமிட்டான்.
ஆனால், எந்த நேரத்தில் இதை யாராலும் மாற்ற முடியாது என்று நினைத்தானோ, வெளிநாடு கிளம்பியபோது நடுவானிலேயே விமானம் வெடித்து சாம்பலாகிவிட்டான்.
அச்சமயம் கோகிலா தன் உந்தியிலும், மார்பிலும் அடித்துக்கொண்டு கதறினார். சுற்றியிருந்தவர்களின் தூண்டுதலில் விஜயாதித்தனின் குடும்பம் தான் தன் மகன் விரக்தியோடு வெளிநாடு செல்வதற்கு காரணம் என்று தூற்றினார். மேலும், ஷ்ரதா கழுத்தில் ஆதீஸ்வரன் தாலிகட்டியதே அவன் இறப்பிற்கு காரணம் என்று அரற்றினார்.
ஷ்ரதா கோமா சென்ற கடுப்பிலிருந்த விஜயாதித்தனோ, “இந்தாப்பாரு! இந்த மாதிரி உளறல் பேச்செல்லாம் இங்க வேணாம். உன் பையனால தான் எம்பொண்ணு இப்போ கிட்டத்தட்ட பொணம் மாதிரி கிடக்கா. நான் முந்துறதுக்கு முன்னாடி பேச்சில நீ முந்துறியோ? இனி உன் குடும்பத்துக்கும், என் குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. உறவு அத்துப்போச்சி. வெளியப்போ” என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிட்டார்.
“பின்னே போகாம இங்கயே உன் வீட்லயேவா தங்கப்போறேன்னு நினைச்ச? உன் உள்ளங்கால் சிரங்கு சம்பந்தம் ஒண்ணும் எனக்கு வேணாம்.” என்று அதிரடியாக தன் அண்ணனுடனான உறவை முறித்துக்கொண்டு வெளியேறிவிட்டார்.
விஷயத்தை கேள்விப்பட்டபோது சிவனேஸ்வரன் வானுக்கும், பூமிக்கும் குதித்து, “இப்பவே போய் மாமாக்கிட்ட மன்னிப்புக் கேளுங்கம்மா” என்றான்.
ஆனால் அவர், “நான் செத்தாலும் இனி அவன் வீட்டு வாசலை மட்டும் மிதிக்க மாட்டேன்டா” என்றுவிட்டார்.
அவரின் மூத்த மகனைப் பற்றிய புலம்பலானது அவர் செல்லும் இடங்களிலெல்லாம் தொடர்ந்தது.
பெங்களூரிற்கு இடம் பெயர்ந்துவிட்டாலும் உறவினர்கள் மத்தியில் ஷ்ரதாவை, “பைத்தியம், அதிர்ஷ்டக்கட்டை, என் மகனை முழுங்கிட்டா” என்றே வசை பாடினார்.
இதை காதில் ஏற்றிக்கொண்டவர்களில் பலர், இனி ஷ்ரதாவின் கழுத்தில் பிணமாலை விழுமே தவிர, கல்யாண மாலை விழுவது கடினம் என்றே முணுமுணுத்துக் கொண்டனர்.
ஆனால், விஜயாதித்தனா? கொக்கா? எதிரி பலமடைவதையும் தடுக்க வேண்டும். வீட்டு பாரத்தையும் இறக்கி வைக்க வேண்டும் என்று யோசித்தார். ஒரே கல்லில் இரண்டு மாங்காவாக அருண்மொழியை தூண்டிவிட்டு, மதுபாலாவின் மூலம் காரியத்தை சாதித்துவிட்டார். பாதி ஞாபகம் மட்டுமே திரும்பியிருந்த ஷ்ரதாவை வீசியின் தலையில் கட்டிவைத்து விட்டார்.
வீசி முதலில் மதுபாலாவின் கோரிக்கையை நிராகரிக்கவே செய்தான். ஆனால், மதுபாலா தான் உணர்ச்சிகரமாகப் பேசி அவனை மடக்கிவிட்டாள்.
“ப்ளீஸ் வருண், எனக்காகடா. நான் அம்மா அப்பாவை கூட சம்மதிக்க வச்சிட்டேன்டா” என்றாள்.
அவனோ, “அக்கா, உனக்கு என் நிலைமை புரியாது. நான் மாணிக்ஜிக்கு அவர் பொண்ணை கட்டிக்கிறதா வாக்கு கொடுத்திருக்கேன்” என்றான்.
“தெரியும்டா. அதனால தான் என் மாமனார் உன்னை மருமகனாக்கிக்கிற துடிக்கிறாரு” என்றவள்,
“அம்மாவுக்கு உன் புருஷன் உன்னை பெல்ட்டால அடிச்சது, சூடுபோட்டது, என்கிட்ட கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கிட்டு தான் வீட்டுக்கு வரணும்னு சொன்னதெல்லாம் தெரியுமாக்கா?” என்றவனிடம்,
“ம்ஹூம் தெரியாது. ப்ளீஸ் நீயும் சொல்லிறாத” என்று பதறினாள் மதுபாலா.
“ஒரு பெட்டர் ஐடியா சொல்லவாக்கா? பேசாம நீ உன் புருஷனை டைவர்ஸ் பண்ணிடு”- இதைச் சொல்ல வீசி அதிகம் யோசிக்கவில்லை.
“உன் அட்வைஸுக்கு ரொம்ப தான்க்ஸ் வருண். நீ ராஜமாணிக்கம் வீட்டுல இருந்துக்கிட்டு அம்மா அப்பா கூப்பிட்டப்போ வராம, அவரு உத்தரவு கொடுத்தப் பின்னாடி வந்தியே, அப்போவே நான் புரிஞ்சிக்கிட்டேன், நீ பழைய வருண் இல்லன்னு.” -அவள் வார்த்தைகள் விம்மல்களுக்கிடையே ஜனித்திருந்தன.
வீசி திடுக்கிட்டு, “அக்கா” என்றான்.
“உன் ஒவ்வொரு அசைவுக்குமான எதிர்வினையை வீட்டுல நான் தான்டா அனுபவிச்சிக்கிட்டிருக்கேன். நீ ஷ்ரதாவை கல்யாணம் செஞ்சிக்கிட்டா எனக்கு இந்த சித்திரவதைலயிருந்து விடுதலை கிடைச்சிடும்டா, ப்ளீஸ்!” என்று அவன் கைகளிரண்டையும் பிடித்து, கண்ணீரால் குளிப்பாட்டினாள்.
திக்பிரம்மை பிடித்தாற்போல் நின்றிருந்த வீசிக்கு தன் மீதே வெறுப்பாக இருந்தது. அவனுக்கு அருண்மொழியை அடித்து துவம்சம் செய்யும் அளவிற்கு வேகமாக வந்தது. ஆனால், அங்கும் இடையில் வந்து நிற்பது மதுபாலா.
மதுபாலா குறிப்பிட்ட நாளை வைத்துப் பார்த்தால், ஷ்ரதா தன்னைப் பார்க்க வந்தபோது தான் அவளுக்கு விபத்து ஏற்பட்டு, நினைவு தவறியிருக்கிறது என்பது அவனுக்கு புரியாமல் இல்லை. மதுபாலா கூறுவது போல் ஆதிஸ்வரன் தாலி கட்டியதற்குக்கூட பாவம் அவள் என்ன செய்வாள் தான்!
ஆனால்? ஆனால்? ஷ்ரதா அன்று ஏன் மோதிரத்தை திருப்பி அனுப்பினாள்? அவள் அண்ணனுக்கு எப்படி நான் நிற்கும் இடம் தெரிந்தது? இப்போது அவளிடம் கேட்டாலும் இதற்கெல்லாம் விடை கிடைக்காது. எல்லாவற்றையும் மறந்து அவள் நிம்மதியாக இருக்கிறாள். நான் பார் இங்கு கிறுக்கன் போல் புலம்பிக் கொண்டிருக்கிறேன் என்றே குமைந்தான் வீசி.
திடீரென அவனுக்குள் ஒரு ஆவேசம். “இல்ல, அவ நிம்மதியா இருக்கக்கூடாது. எனக்கு ஞாபகமே பிரச்சினைன்னா, அவளுக்கு ஞாபகமில்லாததே பிரச்சினையா இருக்கணும். என்னை அவங்க கடத்திட்டுப்போய் வச்சிருந்த அந்த ரெண்டு நாள் எனக்கு நரகம்னா, அவளுக்கு வாழ்நாளே இனி நரகமா இருக்கனும்.” என்று வன்மமாக நினைத்தான்.
அவன் வன்மத்திற்கும் அர்த்தமில்லாமல் இல்லை. ரணங்களின் உச்சமான அந்த நினைவுகளின் எச்சத்தில் எத்தனை நாள் இரவு நித்திரையின்றி தவித்திருப்பான்? எத்தனை நாள் இரவு மேனி நடுங்க நடுசாமத்தில் வியர்த்து எழுந்திருப்பான்? பகலில் பலரின் ரத்தத்தை ருசி பார்க்கும் அவன், கனவில் பலர் தன்னை வேட்டையாடுவதை தடுக்க முடியாமலிருக்கும் இழிநிலையை என்ன சொல்ல? நிச்சயம் ஷ்ரதா அறிய மாட்டாள். அவனது இரவுகள் கழியும் விதத்தை உணர்த்தினால் தவிர, அவளால் விளங்கிக்கொள்ளவே முடியாது.
ஆனால், வீசி, “உணர்த்துவேன். நிச்சயம் நான் அதை அவளுக்கு உணர்த்துவேன்” என்று அடிபட்ட வேங்கையாய் சபதமெடுத்தான் .
அவர்களது திருமணமும் நடந்தது.
‘டும் டும் டும்’ என்று ஒலித்த மேள தாளச் சத்தங்களுக்கிடையே..
‘மாங்கல்யம் தந்துனானே
மமஜீவன ஹேதுநா
கண்டே பத்நாமி ஸுபகே
த்வம ஜீவ சரதஸ்சதம்’
என்று கேட்ட மந்திரத்தின் பொருள் புரியாமலே ஷ்ரதாவின் கழுத்தில் தாலியைக் கட்டி மூன்று முடிச்சிட்டான் வீசி.
யார் இந்த ஷ்ரதா என்றால்,
இயற்பெயர்: ஷ்ரதாஞ்சலி
வயது: இருபத்தைந்து
படிப்பு: பி.இ
நிறம்: பாலும் ரோஜாவும் கலப்புத் திருமணம் செய்து கொண்ட நிறம்
உயரம்: ஐந்தடி நான்கு அங்குலம்.
யார் இந்த வீசி என்றால்,
இயற்பெயர்: வருண் சக்கரவர்த்தி
வயது: முப்பது
படிப்பு: டிஎம்இ
நிறம்: கோதுமை நிறம்
உயரம்: ஐந்தடி பத்து அங்குலம்.
மணப்பெண்ணாய் அமர்ந்திருந்த ஷ்ரதா தன் மார்பில் புரண்ட தாலிச்சரடையே ஆனந்தக் கண்ணீருடன் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆசைப்பட்ட எல்லோருக்குமே நினைத்தபடி இல்வாழ்க்கை அமைந்து விடுவதில்லை. எத்தனை வருட போராட்டங்களுக்குப் பிறகு தனக்கு இந்த பாக்கியம் கிடைத்திருக்கிறது என்று நினைத்துப் பார்த்தவளின் கண்களிலிருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்தது.
காதல் கணம் கூடும்…
