காதல் கணம் 25
அன்று லாரியால் தூக்கி வீசப்பட்ட ஷ்ரதா முற்றிலுமாக சுயநினைவிழந்தாள்.
யாருடனோ அவள் ஊர் சுற்றுகிறாள் என்று கேள்விப்பட்டதிலிருந்தே அவள் மேல் பிடிப்பின்றி இருந்த விஜயாதித்தனுக்கு அவள் இவ்வாறு அடிபட்டு சுயநினைவின்றி கிடக்கிறாள் என்று தெரிந்ததுமே தசை ஆடத்துவங்கி விட்டது.
இருப்பினும் கல் நெஞ்சுக்காரராய், “டாக்டர்கிட்ட எழுந்து நடமாடுவாளா? இல்ல, அப்படியே தான் கிடப்பாளான்னு கேளு அருண்மொழி. மாட்டான்னா ஊசியப் போட்டு சோலியை முடிக்கச் சொல்லிரு.” என்றார் இரக்கமேயின்றி.
அருண்மொழி திடுக்கிட்டவன், “இல்லப்பா, எப்போ வேணா நினைவு திரும்பும்னு டாக்டர்ஸ் சொல்லியிருக்காங்க. கொஞ்சம் வெயிட் பண்ணி தான் பார்ப்போமே. அப்புறம் உங்களுக்கு இன்னும் ரெண்டு நாள்ல பெயில் கிடைச்சிரும்னு வக்கீலுங்க சொல்றாங்கப்பா.” என்றான்.
“ரெண்டு நாளா? ரெண்டு மாசம் அருண்மொழி, ரெண்டு மாசம்! அறுபது நாளா நான் உள்ள இருக்கேன்டா. அந்த வீசி இதுக்கான விலையை கொடுத்தே ஆகணும்.”
“அது வந்துப்பா…”
“என்ன அருண்மொழி? ம்! சொல்லு?”
விஜயாதித்தனின் உறுமல், மேலும் அருண்மொழியின் வார்த்தைகளை உள்ளிழுத்தன.
“அப்பா, அதுவந்து அவன் ஊரை விட்டு தப்பிச்சிப்போக இருக்கறதா கேள்விப்பட்டு, நம்ம ஆளுங்களைவிட்டு அவனை நம்ம செல்லூர் குடவுன்ல போட்டு அடைக்கச் சொன்னேன்.”
அவன் முடிக்கவில்லை. அதற்குள்ளாக விஜயாதித்தனே மீதத்தை யூகித்துக்கொண்டு, “நல்ல வேலை செஞ்ச அருண்மொழி. என் அஸ்திக்கும், ஆஸ்திக்கும் அடுத்த வாரிசு நீ தான்னு நிரூபிச்சிட்ட.” என்று மெச்சுதலாய் அவனைப் பார்த்தார்.
அவனால் அவரை ஏறெடுத்துப் பார்க்க முடியவில்லை.
“அப்பா, அதுவந்து… ஒரு தப்பு நடந்துப்போச்சிப்பா. அவனை குடவுன்ல கட்டி வச்சிருந்தப்போ, நம்ம ஆளுங்க கண்ணசந்த நேரத்துல ராஜமாணிக்கத்தோட ஆளுங்க வந்து அவனை தூக்கிட்டுப் போயிட்டாங்கப்பா.” என்றவனின் தலைகுனிவில் விஜயாதித்தனின் ரத்தம் கொதித்தது.
ஜெயிலென்றும் பாராமல் மூர்த்தன்யமாய் கத்தினார்.
“தெரியும், தெரியும், உன்னால ஒரு வேலையைக்கூட உருப்படியா செய்ய முடியாதுன்னு எனக்குத் தெரியும் அருண்மொழி. உனக்கு சொல் புத்தியும் கிடையாது. சுய புத்தியும் கிடையாது. இருந்திருந்தா அந்தப் பிச்சைக்காரன் வீட்டுல போய் என்னை பொண்ணு எடுக்க சொல்லிருப்பியா? இல்ல, இப்போ இவனைத் தான் ராஜமாணிக்கத்துக்கு தாரை வார்த்திருப்பியா? உன்னால எனக்கு எப்பவுமே தலைகுனிவு தான் அருண்மொழி. கண்டிப்பா ராஜமாணிக்கம் உள்நோக்கம் இல்லாம இதை செஞ்சிருக்க மாட்டான். எப்படியும் அந்தப் பயலை நமக்கு எதிரா திருப்பிவிடத்தான் பார்ப்பான். என்ன மரமாட்டம் நிக்கிற? போ! உன் புது எதிரிக்கு வாள் வீசத் தயாராகு” என்று திரும்பி நின்றார் அவர்.
அருண்மொழிக்கு விஜயாதித்தனின் இந்த கலக்கமும், ஆவேசமும் வீணென்றுத் தோன்றியது. அடியாட்கள் சொன்னதை வைத்துப் பார்த்தால் வீசி பிழைப்பதே அபூர்வம் எனும்போது, இவர் எதற்கு இப்படி கற்பனை செய்துகொண்டு குதிக்கிறார்? என்றே நினைத்தான் அவன்.
ஆனால், இதை விஜயாதித்தனிடம் சொன்னால் மேலும் தனக்கு சில மண்டகப்படிகள் கிடைக்கும் என்பதால், மைந்தன் தன் தவறுக்கு வருந்துபவன் போல் முகத்தை வைத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.
விஜயாதித்தன் தனக்கு முன்பிருந்த இரும்புத்தடுப்பை இரண்டு முறை குத்தினார். கோபம் யார் மேல் என்று குறிப்பிட முடியாத அளவிற்கு இருந்தது. ‘நான் முதல்ல வெளிய வரணும்!’ என்று வைராக்கியமாய் எண்ணிக்கொண்டார்.
எதிர்பார்த்தது போலவே இரண்டு நாளில் அவருக்கு பெயில் கிடைத்து வெளியே வந்தபோது முதலில், “அந்த வீசியை ராஜமாணிக்கம் எங்க ஒளிச்சு வச்சிருக்கான் பாரு அருண்மொழி?” என்றே ஆத்திரப்பட்டார் மனிதர்.
தான் தேடும் ராஜாளி ஒரு கிழட்டு கள்ளப்பருந்தின் இறக்கைக்கடியில் தான் இருக்கிறது என்று தெரிந்ததும், ‘உனக்காக வேடனா வலைவீசி காத்திருக்கேன் வருண் சக்கரவர்த்தி. நீயே வந்து மாட்டுவ’ என்று வஞ்சினத்தோடு காத்திருக்கவும் செய்தார்.
விஜயாதித்தன் சிறையிலிருந்து வெளியே வந்து சரியாக இரண்டு வாரங்கள் ஓடியிருக்கும். தெய்வாதீனமாக ஷ்ரதாவிற்கு அப்போது தான் நினைவு திரும்பியிருந்தது.
இவ்வளவு நாள் மகள் இருக்கிறாளா செத்தாளா என்று கூட எட்டிப்பாராமல் கிடந்தவர், விஷயத்தை கேள்விப்பட்டதுமே முதல் ஆளாக அவளைத் தேடி மருத்துவமனை வந்தார். அங்கு மகளின் முன்னால் ஒப்புக்கு மருத்துவரின் கையைப் பிடித்து நன்றி கூறி நெகிழ்ந்தார்.
ஷ்ரதாவுக்கு அவரின் நடத்தைகள் எதுவும் மனதில் ஒட்டவில்லை. இவ்வளவு நாளும் அவளுக்கு அவர் போட்டிருந்த கண்கட்டு அவிழ்ந்தது போல் இருந்தது. என்ன தான் அவருக்காக வீசியிடம் அவள் மனஸ்தாபம் கொண்டிருந்தாலும், அவர் செய்வதெல்லாம் நன்மைக்கே என்று நம்ப அவள் குழந்தையல்லவே.
விஜயாதித்தன், “ஷ்ரதாம்மா, அப்பாவை இப்படி பயமுறுத்திட்டியேடா” என்று அருகில் வந்து அவளை அணைக்க முயன்றபோது,
“உங்களைப் பார்த்தா எனக்கு பயமாயிருக்கு. அம்மா இவரை இங்கயிருந்து வெளிய போகச் சொல்லுங்க. எனக்கு இப்படி ஒரு கொலைகார அப்பா வேண்டாம்மா.” என்று காதைப்பொத்தி கூச்சல் போட்டாள்.
ஓங்கிக் கத்தியதில் தலைவலி வேறு ஒருபுறம் சேர்ந்துகொண்டது.
நடக்கும் களேபரங்களைக் கண்டு ஷ்ரதாவிடம் ஓடி வந்த செவிலியர், “உடம்பு காயம் மட்டும் தான் சார் ஆறியிருக்கு. இன்னும் தலையில பட்ட காயமெல்லாம் ஆறல. இந்த ஸ்டேஜ்ல அவங்களுக்கு ஸ்ட்ரெஸ் கொடுக்கிற மாதிரி நடந்துக்கிறதோ பேசுறதோ ரொம்ப டேஞ்சர் சார். இதனால அவங்க கோமா ஸ்டேஜ்க்கு போகக்கூட சான்ஸ் இருக்கு” என்று எச்சரித்துவிட்டுப் போனார்.
விஜயாதித்தனின் உயர்ந்த புருவங்களோ இன்னும் இறங்கியிருக்கவில்லை. ஷ்ரதாவை மனிதர் அடாது பார்த்தார். இன்னும் வியப்பிலிருந்து மீண்டிராதவராகவே அவளிருந்த அறைக்கு வெளியேயிருந்த இரும்பு நாற்காலியில் வந்து உட்கார்ந்தார்.
“அப்பான்னு வாய் நெறைய கூப்பிடுற கழுதை இன்னைக்கு இப்படி பேசிடுச்சே” என்றவர் வெதும்பிக் கொண்டிருக்கும்போதே, கோகிலா தன் குடும்பத்தோடு வந்து சேர்ந்தார்.
முந்தையநாள் தான் ஷ்ரதாவுக்கு நினைவு திரும்பியதாக விஜயாதித்தன் போனில் அவருக்கு சொல்லியிருந்தார்.
உடனே அம்மையார், “ஷ்ரதா இனி எப்படியும் வீடு திரும்பிருவா. அவளுக்கும், ஆதிக்கும் கல்யாணம் பண்ணி வச்சிடலாம்.” என்று அமோக திட்டத்துடன், குடும்பத்தோடு கிளம்பி வந்தார்.
வந்ததும் வராந்தாவில் ஷ்ரதாவின் பேச்சுக்களையே தீவிரமாக அசைபோட்டுக் கொண்டிருந்த விஜயாதித்தனைப் பார்த்து, தன் கையிலிருந்த ஆப்பிள், ஹார்லிக்ஸ் பைகளை எல்லாம் தன் கணவரிடம் கொடுத்து ஓரங்கட்டிவிட்டு, “என்னண்ணே, வெளிய உட்கார்ந்திருக்க? முகம் வேற கசங்கிப் போயிருக்கு. இரு, நான் போய் முதல்ல ஷ்ரதாவைப் பார்த்துட்டு வரேன்.” என்று சொல்லிவிட்டு,
பின்னால் திரும்பி, “டேய்! வாங்கடா.” என்று தன் இரு மகன்களையும் அழைத்துக்கொண்டு உள்ளேப் போனார்.
ஷ்ரதாவுக்கு ஆதிஸ்வரனைப் பார்த்ததுமே முகம் ரத்தப் பசையற்றுப்போனது. யாரோ இரண்டு பேர் சேர்ந்து அவள் தலைக்குள் வாணவேடிக்கை நிகழ்த்துவது போலவே ரணகளமாக இருந்தது.
பத்தாததிற்கு அவனின் அர்த்தபுஷ்டியான புன்னகை வேறு அவளை கூனிக்குறுகச் செய்தது. ஏதோ முள் மேல் உட்கார்ந்திருப்பது போலவே தவித்தாள்.
கோகிலா ஷ்ரதாவை நெருங்கி அவள் கன்னத்தைத் தாங்கியபடியே ஆதூரமாக நலம் விசாரிக்க, தயக்கமாக நெளிந்துகொண்டே அவருக்கு பதிலளித்துக் கொண்டிருந்தாள்.
அவளிடம் பேசிக்கொண்டே இருந்தவர், திடீரென மீனாட்சியிடம் திரும்பி, “இவ எப்போ அண்ணி வீட்டுக்கு வருவா?” என்று விபரம் கேட்க,
அவரோ, “இன்னும் டாக்டர்ஸ் அது பத்தி எதுவும் சொல்லல” என்றார்.
கோகிலா இப்போது தன் மகன்களிடம் திரும்பி, “ஷ்ரதா ஷ்ரதான்னு உயிரையே விடுவீங்களேடா. இப்போ என்ன தள்ளி நிக்கிறீங்க? வாங்க, வந்து பேசுங்க!” என்றுவிட்டு, விஜயாதித்தனிடம் பேசச் செல்வதாய் பேர் பண்ணிக்கொண்டு வெளியே சென்றுவிட, சூழ்நிலை கட்டாயத்தில் ஷ்ரதா மீண்டும் மெதுவாக நிமிர்ந்து ஆதீஸ்வரனைப் பார்த்தாள்.
அவன் இன்னும் தன் புன்னகையை மாற்றியிருக்கவில்லை. ஷ்ரதா அவனை பார்க்க நேர்வதை தவிர்க்கும் பொருட்டு தன் இரண்டு குண்டு திராட்சைகளையும் சிவனேஸ்வரனின் புறம் உருட்ட,
அவனோ தன்னால் தான் ஷ்ரதாவுக்கு இப்படி ஆனதென்று குற்றவுணர்வில் தலைகுனிந்திருந்தான்.
அவள் அவன் தன்னையும், வீசியையும் பிரிக்கத் தீட்டிய சதியை நினைத்து கசப்பாக புன்னகைக்க, சிவனேஸ்வரனை அவள் விடாதுப் பார்ப்பதை பொறாமையுடன் பார்த்துக் கொண்டிருந்த ஆதீஸ்வரன் என்ன நினைத்தானோ அவளை நெருங்கி, தனது சட்டைப் பைக்குள்ளிருந்த தாலியை எடுத்து அவள் கழுத்தில் கட்டிவிட்டான்.
கட்டிலுக்கு மறுபுறம் நின்றிருந்த மீனாட்சியோ, “தம்பி, என்ன காரியம் பண்ணிட்டீங்க?” என்று பதற, இரண்டெட்டில் அவனை சமீபித்த சிவனேஸ்வரன், அவன் தோளை வலுக்கட்டாயமாகத் திருப்பி, அவன் கன்னத்தில் அறைந்தான்.
வெளியிலிருந்தவர்களோ கும்பலாக உள்ளே ஓடிவந்துப் பார்த்தார்கள்.
ஷ்ரதா ஆதிஸ்வரன் கட்டிய அந்தத் தாலியை கையிலேந்தி, அனைவரையும் மிரள மிரளப் பார்த்தாள்.
விஜயாதித்தன் அந்தத் தாலியைப் பார்த்ததுமே, “சபாஷ் மாப்பிள்ளை!” என்று பாராட்டினார்.
அறை வாங்கி நின்றவன் அவரின் பாராட்டில் கொஞ்சம் துணிவு பெற்றான்.
ஷ்ரதா கோபமும் அழுகையும் போட்டிப்போட பேச முடியாமல் திணறினாள்.
பின், நிலைமையை சமாளிக்க கோகிலா தான் தனது மூத்த மகனை கடிய வேண்டியதாகிற்று.
“மேளதாளம் கொட்டி, பெரியவங்க ஆசியோட கட்ட வேண்டிய தாலியை இப்படி எட்டடி ஹாஸ்பிடல் ரூம்லயாடா கட்டுவாங்க? அவசரக்குடுக்க” என்று அவன் தலையில் குட்டினார்.
விஜயாதித்தன் தொண்டையை செருமிக்கொண்டவராக தனக்கான பேசும் வாய்ப்பை பெற்றார்.
“அட! விடு கோகிலா. நம்ம நடத்த வேண்டியதை உன் மகன் பைசா செலவில்லாம முடிச்சிட்டான். ஷ்ரதா டிஸ்சார்ஜ் ஆனதும் ஊரைக்கூட்டி விருந்து போட்டுட வேண்டியது தான்.” என்றார்.
மீனாட்சி இப்பேச்சை ரசிக்கவில்லையானாலும், ‘ஆனது ஆகிவிட்டது, இனி என்ன செய்ய முடியும்?’ என்பது போலவே பார்த்துக் கொண்டிருந்தார்.
ஷ்ரதாவுக்கோ வீசியின் ஞாபகம் வந்து நெஞ்சை அடைப்பது போல் இருந்தது. ‘அவருக்கு நான் என்ன பதில் சொல்வேன்? ஒருவேளை அவர் திரும்பி வந்தா, நான் எப்படி அவர் மூஞ்சில முழிப்பேன்? அய்யோ முருகா! இதுக்கு நீ என்னை சாகடிச்சிருக்கலாமே?” என்று எண்ணியவளின் கண்கள் முதலில் தெப்பமாகி, பின்பு அருவியாய் உருமாறின.
அவள் ஒரு விஷயத்தை புரிந்துகொள்ளவில்லை. ஆதீஸ்வரனின் சுயநல குணம் பற்றி ஷ்ரதா தெரிந்துகொள்ளவே அவளுக்கு இப்படியொரு வாய்ப்பை அவள் முருகன் வழங்கினார் என்று.
இந்த அனாதரவான சூழ்நிலையில் வீசியைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு திடீரென கண்கள் இருட்டி, தலைவலி உயிர்போனது.
யாரோ தலையில் சுத்தியலைக் கொண்டு அடிப்பது போல் தலையை இடம் வலம் ஆட்டிக்கொண்டே இருந்தாள். போடப்பட்ட கட்டுக்களையும் மீறி அவள் தலையில் ரத்தம் கசிய, சட்டென்று படுக்கையிலேயே மயக்கம் போட்டு விழுந்தாள்.
தன் அன்னை, மாமா என்று அர்த்தமின்றி மாறிமாறிப் பேசுபவர்களின் பேச்சையே கேட்டுக்கொண்டு, ஷ்ரதாவின் முகத்தில் வந்து போகும் உணர்வலைகளை அவதானித்துக் கொண்டிருந்த சிவனேஸ்வரன், அவள் மயக்கம் போட்டு விழுந்த கணமே முதல் ஆளாக, “ம்மா, ஷ்ரதா மயங்கி விழுந்துட்டா” என்றான்.
மயக்கச் சுழலுக்குள் விழுந்த ஷ்ரதா, வீசியை தான் முதல் முதலாக சந்தித்த அந்தப் பொற்காலத்திற்கே யாராலோ வலுவாக இழுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தாள். அந்தப் பயணம் அவளை ஒரு கணத்தில் கூட களைப்படையச் செய்யவில்லை.
இறுதியாக அவள் சென்றடைந்தவிடத்தில் வீசி கத்திக் கொண்டிருந்தான்.
“அக்கா, வா நம்ம நம்ம வீட்டுக்குப் போவோம். நம்ம எப்படி நம்ம குடும்பம் எப்படின்னு இவங்களுக்கு முன்னாடியேத் தெரியும் தானே? அப்பறம் ஏன் உன்னைக் குத்திக்காட்டி பேசுறாங்களாம்?” என்று வெடித்துக் கொண்டிருந்தான்.
மதுபாலாவின் கழுத்தில் பதினைந்து பவுன் தங்கத்தாலி மின்னிக் கொண்டிருந்தது.
காதல் கணம் கூடும்…
இன்னும் 4 அத்தியாயங்களில் நாவல் நிறைவடைந்துவிடும் ப்ரெண்ட்ஸ்.
