காதல் கணம்-5

காதல் கணம் 5

 

மறுநாள் காலை ஷ்ரதா எப்போதும் தான் எழும் நேரத்திற்கு விழித்தபோது, மெதுவாய் பயந்துகொண்டே போர்வையை விலக்கினாள்.

கடவுள் புண்ணியமாய் அந்த மீன்தொட்டி அங்கு இல்லை. அறை முழுக்க விழிகளால் அலசியவள் அது இல்லவேயில்லை என்று ஊர்ஜிதமாகவும், ஆசுவாசமடைந்து தனது அன்றாட வேலைகளை கவனிக்கச் சென்றாள்.

அன்று தனக்கு பிறந்தநாள் என்பதால் அமர்க்களமாக புத்தாடை அணிந்து கீழே வந்தவளை வியப்புடன் பார்த்த அபிராமி, “இன்னைக்கு என்ன விசேஷம்மா?” என்று ஆர்வமாகக் கேட்க, அவள் தனக்கு பிறந்தநாள் என்பதை நாணம் இழையோடிய குரலில் கூறினாள்.

“அட! அதான் காலையிலேயே உங்க அம்மா வீட்டுலயிருந்து உனக்கு ஸ்வீட் வந்ததா?” என்று தான் தெளிவு பெற்றது போல் கேட்ட அபிராமி, ஒரு பித்தளை வாளியை அவளிடம் காட்டினார்.

அவள் ஓடிப்போய் அதனை திறந்துப் பார்க்க, உள்ளே கருப்பட்டி பணியாரம், பருத்திப்பால், பருப்புப்போலி, பால் கொழுக்கட்டை என்று எல்லாம் அவளுக்குப் பிடித்த பதார்த்தங்களாக இருந்தன.

ஷ்ரதா அபிராமியிடம், “எல்லாம் எனக்குப் பிடிச்ச ஸ்வீட்ஸ் அத்தை” என்க.

“உனக்குப் பிடிச்ச சுவீட்ஸா? நேத்து நைட் வருணும் கருப்பட்டி பணியாரம், பருத்திப்பால், பருப்புப்போலி, பால் கொழுக்கட்டைன்னு இதைத்தான் மெனுவா பண்ண சொன்னான். எனக்கு இப்போ தான் உண்மையெல்லாம் விளங்குது” என்றவர் அலுத்துக்கொள்ள, அபிராமியின் பேச்சைக் கேட்டதும், ஷ்ரதாவின் நெற்றியில் சந்தேகக்கோடுகள் விழுந்தன.

அபிராமி உபரித் தகவலாய், “இதெல்லாம் உங்க அப்பா தான் கொடுத்து விட்டாராம் ஷ்ரதா” எனவும், கோடுகள் நீங்கி மானசீகமாய் தன் தந்தைக்கு நன்றி சொன்னாள்.

கருப்பட்டி பணியாரத்தை எடுத்து ஒரு கடி கடித்தவள், அதன் நெய் மணத்திலேயே உருகிப்போனாள். நாவோ இன்னும் கொண்டா கொண்டா என்றது.

அடுத்து வெதுவெதுப்பாய் இருந்த பருத்திப்பாலை அருந்தியவளுக்கு  மூச்சுப் பாதையில் சுக்கின் மணம் பயணித்தது.

அதிலிருந்து மீண்டு வருவதற்கு முன்னமே மென்மையாய் இருந்த பருப்புப் போலியில் கை வைத்தாள். அது வம்பு செய்யாமல் உடனே அவளுக்கு இழைந்துக் கொடுத்தது. ஆசையாய் ஒரு வாய் வைத்தவளுக்கு இன்றைய நாள் மோட்சமடைந்துவிட்டது போலவே ஒரு மெய்சிலிர்ப்பு.

கடைசியாய் பால் கொழுக்கட்டையையும் விட்டு வைப்பானேன் என அந்துருண்டை அளவில் ஆடையில்லாமல் ஸ்டீம் பாத் எடுத்துக் கொண்டிருந்த அரிசி பந்துகளில் இருந்தும் ஒரு பந்தை  தூக்கி வாயில் போட்டாள். அது  நேரடியாக சொர்க்கவாசலையே சென்றடைந்தது.

வருடா வருடம் தனது பிறந்தநாளை  நினைவு கூர்ந்து முதல் ஆளாக தன் படுக்கையறைக்கு வந்து, பிறந்தநாள் வாழ்த்துக் கூறும் தனது தந்தையை இவ்விடத்தில் ரொம்பவே மிஸ் செய்தாள் ஷ்ரதா.

இந்த திருமணத்திற்காகத் தான் ஒருப் பெண் எத்தனை சந்தோஷங்களை பலி கொடுக்க வேண்டியிருக்கிறது என்று எண்ணிப் பார்த்தவளின் இதயத்தில் சுருக்கென்று ஒரு வலி வந்து போனது.

சிறிது நேரத்தில் காஃபி எடுத்து வந்த அபிராமி அவள் எழுவதைப் பார்த்ததும், “நீ உட்காரு, நான் போய் அவனுக்கு காஃபி கொடுத்துட்டு வர்றேன்” என்று தானே மாடிப்படி ஏறினார்.

“மாமியார் குலம் வாழ்க!” என்று வாழ்த்திய ஷ்ரதா, அன்றைய நாளின் இரண்டாவது ஆபத்திலிருந்தும் தான் தப்பித்ததற்காக முருகனுக்கு நன்றி சொன்னாள்.

சிறிது நேரத்திலேயே அந்த குதூகலிப்பை காணாமற்போகச் செய்யும் விதமாய் படியிறங்கி வந்தான் வீசி.

எப்போதும் கோட் சூட்டுடனே திரிபவன் இன்று ஆங்காங்கே கிழிந்து தொங்கிய உயர்ரக ஜீன்ஸ், டிசைனர் லினன் சட்டை, கூலிங் கிளாஸ் என படுஸ்டைலாக கீழிறங்கி வந்தது அவளுக்குள் அபாயமணியை ஒலிக்கச் செய்தது.

அபிராமி ஷ்ரதாவிடம், “என்ன ஷ்ரதா அவனை இப்படி பார்க்கிற? இன்னைக்கு அவன் ஆஃபிஸ் போகப் போறதில்லையாம். உன்னை தான் வெளிய  கூட்டிட்டுப் போறானாம். நானும் ஓகேன்னுட்டேன். உனக்கு இப்போ சந்தோசம் தானே?” எனவும்,

‘சொதப்பிட்டீங்களே அத்தை’ என்று மனம் குமுறியவள், “ரொம்ப சந்தோசம் அத்தை” என்று உதட்டளவில் சிரித்தாள்.

சற்று நேரத்திற்கு முன்பு ‘மாமியார் குலம் வாழ்க!’ என்று தான் சொன்ன வாசகத்தையும் வாபஸ் பெற்றாள்.

இந்தத் திடீர் பிரச்சினையிலிருந்து தான் எப்படி தப்பிக்க என்று யோசித்துக் கொண்டிருந்தவள், பின் ஒரு வழி கண்டவளாய், “அத்தை, ப்ளீஸ் நீங்களும் எங்கக்கூட வாங்க” என்று சிறுமியாய் அடம்பிடித்தாள்.

அவளைப் பார்த்து, “உன்னை மாதிரி ஒரு மருமக கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும்மா” என்ற அபிராமி, “பாருடா என் மருமகளை” என்று வீசியிடமும் பெருமைப் பேசினார்.

வீசி அவரின் அறியாமையை அறிந்தவனாய், “ஆமா, ஆமா, உங்க மேல ரொம்பப் பாசம் தான் உங்க மருமகளுக்கு” என்று நக்கலடித்தான்.

அபிராமி ஷ்ரதாவிடம், “இல்லடா, நான் இன்னொரு நாள் வரேன்.” என்றவர் இருவரையும் சாப்பிட அழைத்தார்.

டைனிங் டேபிளில் முதலில் உட்கார்ந்த வீசியிடம் உணவுப் பதார்த்தங்களையெல்லாம் அடுக்கிவிட்டு, “எல்லாம் ஷ்ரதா வீட்லயிருந்து வந்தது” என்றார்.

அவர் சமையலறை செல்லும்வரை பொறுத்திருந்தவன் ஷ்ரதா பார்த்திருக்கும்போதே அனைத்தையும் குப்பைத் தொட்டிக்குள் கொட்டினான்.

ஷ்ரதாவிற்கு துக்கத்தில் தொண்டை அடைத்தது. ‘ஏன்? அப்படி என் வீட்டுல இருக்கிறவங்க மேல என்ன கோபம் உங்களுக்கு? ஏன் அவங்களை விரோதி மாதிரி நினைக்கிறீங்க?’ என்று மனதிற்குள்ளேயே ஆவேசப்பட்டாள்.

சமையலறையிலிருந்து தோசையுடன் வந்த அபிராமி, “எங்கேடா? அதுக்குள்ள எல்லாத்தையும் சாப்பிட்டுட்டியா?” என்று ஆச்சரியமாகக் கேட்க,

“ஆமா, ரொம்ப டேஸ்ட்டா இருந்தது. அதான் சீக்கிரம் சாப்பிட்டுட்டேன். நீங்களும் தான் ஸ்வீட் செய்றீங்களே.” என்று பொய்யாக அலுத்துக் கொண்டான்.

“போதும், போதும், ரொம்ப உன் மாமனார் வீட்டுக்கு ஜால்ரா போடாத. நாளைக்கு உன்னையும் ஷ்ரதாவையும் அவங்க விருந்துக்கு கூப்பிட்டிருக்காங்க. அங்கப்போய் போடவும் வேணும்.” என்றவர் அவன் தட்டில் தோசையை வைத்துவிட்டு  உள்ளே சென்றுவிட்டார்.

ஷ்ரதாவிற்கோ நெஞ்சு பொறுக்கவில்லை.

“எவ்ளோ பாசமா கொடுத்து விட்டிருப்பாங்க? ஏன் இப்படி அநியாயமா குப்பைத்தொட்டியில  கொட்டினீங்க?” என்று உள்ளம் கொதிக்கக் கேட்டுவிட்டாள்.

“விஷம்னு தெரிஞ்சே எவனாவது சாப்பிடுவானா?” -அவன் வார்த்தைகள் தான் அமிலமாய் தெறித்தன.

ஷ்ரதாவிற்கு தன் ஆத்திரத்தையும் ஆதங்கத்தையும் கட்டுப்படுத்தவே முடியவில்லை.

“விஷமா? எங்க வீட்டுல இருக்கறவங்களுக்கு அப்படி என்ன விரோதம் இருக்கப்போகுது உங்க மேல?” என்றாள் நேரடியாக.

“சாப்பிடும் போது பேசக்கூடாதுன்னு உனக்குத் தெரியாது?” என்று அதட்டியவன்,

“இன்னைக்கு எனக்குப் பிறந்தநாள். என்னை சந்தோசமா வச்சிக்கலைன்னாலும் பரவாயில்ல. அட்லீஸ்ட் நோகடிக்காமலாவது இருக்கலாமில்லையா?” என்றவளின் கேள்விக்கு பதிலளிக்காமலேயே கை கழுவ வாஷ் பேஷன் சென்றுவிட்டான்.

‘ச்சே! எப்பவும் அவர் பேசினது தான்’ என்று மனதிற்குள் சலித்தபடி வேண்டாவெறுப்பாய் சாப்பிட்டு முடித்த ஷ்ரதா, அபிராமி வழியனுப்பி வைக்க அவனுடன் காரிலேறிப் புறப்பட்டாள்.

ஆனால், அப்பயணத்தால் அன்றைய நாளின் முடிவில் தனது வாழ்நாளிலேயே மோசமான பிறந்தநாள் இது தான் என்று அவள் எண்ணும் அளவிற்கு வீசி செய்துவிட்டான்.

ஷ்ரதா காரிலேறியபோதுக்கூட தான் சென்றடையப்போகும் இடத்தைப் பற்றி கவலைப்படவில்லை. ஆனால், நேரம் ஆக ஆகத்தான் அவளுக்குள் புளியைக் கரைத்தது.

ஒரு கட்டத்தில், “என்னங்க, இந்த ஏரியாவுக்கு ஏன் நாம வந்திருக்கோம்? இது அப்பாவோட எதிரி அந்த ராஜமாணிக்கத்தோட இடமாச்சே? வாங்க நம்ம வேற எங்கேயாவது போகலாம்” என்று பதைபதைப்புடன் சொன்னாள்.

ஆனால், அவன் அவள் பேச்சை காதில் வாங்கிக் கொள்ளாமல் ராஜமாணிக்கத்தின் வீட்டிற்குள்ளேயே காரை செலுத்தினான். அவ்வீட்டின் காவலாளி பழக்கமானவன் போல் வீசிக்கு வணக்கம் வைத்ததெல்லாம் ஷ்ரதாவின் கருத்தில் பதியாமல் இல்லை.

காரிலிருந்து இறங்கியவர்களை ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி வந்து ஆரத்தி சுற்றி வரவேற்க, அவரருகில் நின்றிருந்த இளம்பெண்ணொருத்தி ஷ்ரதாவை முறைத்தபடி இருந்தாள்.

ஆரத்தி சுற்றி முடித்ததும் அவர்களை தன் ஆட்களின் அறிவிப்பால் வாசல்வரை வந்து வரவேற்றார் ராஜமாணிக்கம். ஆள் ஜிப்பாவும், கைலியுமாய் தான் இருந்தார். ஆனால், அதிலேயே ஒரு கம்பீரம் தெரிந்தது.

அவர் கழுத்தில் போட்டிருந்த சங்கிலிகளோ இரண்டு கொழுத்தப் பூனைகளுக்கு ஒப்பாக இருந்தன. விரல்களில் நாதஸ்வர தவில்காரர்கள் போல் மோதிரங்கள் வேறு. கண் ரப்பைச் சுருக்கத்தை வைத்துப்போட்ட வயது கணிப்பில் அவரின் சிகையும், மீசையும் டையில் குளித்திருப்பது அப்பட்டமாகத் தெரிந்தது. ஆனால், ஐம்பத்தைந்து வயதிலும் மல்யுத்த வீரன் போல் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தார்.

அங்கங்கு நின்றிருந்த முண்டா பனியன் முரட்டு உருவங்கள் எல்லாம் எமனின் வேலையாட்கள் போலவே கொடூரமாய் தெரிய, வீசியின் முழங்கையை இறுகப் பற்றிக்கொண்டாள் ஷ்ரதா.

அவள் பிறந்த வீட்டிலும் இது போல் அடியாட்கள் உண்டு தான். ஆனால், அவர்களெல்லாம் பழகிய மனிதர்கள் என்பதாலோ, ஷ்ரதா இந்தளவிற்கு பயந்ததில்லை.

‘அத்தான் ஏன் இவங்கக்கூட எல்லாம் ஃப்ரெண்ட்ஷிப் வச்சிருக்காங்க? இவருக்கு ஃப்ரெண்ட்ஸாக ஆட்களே கிடைக்கலையா? அப்பாவோட பரம விரோதி இந்த ராஜமாணிக்கம். இவர் கூடப்போய் பழக்கம் வச்சிருக்காரே. ச்சே!’ என்று அக உலகில் அரற்றிக் கொண்டிருந்தவளை, “ஹாஹா” போட்டு புற உலகிற்கு இழுத்து வந்தார் ராஜமாணிக்கம்.

“என்னம்மா மகாராணி, என்னைய ஞாபகம் இருக்குதா? பனிரண்டு வருஷத்துக்கு முன்னாடி உன்னை கடத்திட்டு வந்து உங்கப்பனை பயமுறுத்தினேனே? நான் தான்.” என்றார்.

விதிர்த்துப் போன ஷ்ரதா சிலையாக நின்றாள். பின்னே, நினைவு கூற வேண்டிய சம்பவமா அது?

வீசியின் தொண்டைச்செருமலால் வேண்டாவெறுப்பாக அவருக்கு புன்னகைத்தபடி அவனுடன் உள்ளே சென்றாள்.

வெள்ளை நிற பளிங்கு கற்களால் ஆன அவ்வரவேற்பறையானது வைரம்போல மின்னி காண்போர் கண்ணைப் பறித்தது.

விழிகள் கபடியாட சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த ஷ்ரதாவிற்கு சுவற்றில் ஆங்காங்கு தொங்கவிடப்பட்டிருந்த படங்களிலிருந்து ராஜமாணிக்கத்தின் கடவுள் பக்தி தெரிந்தது.

வந்த விருந்தாளிகளுக்கு முதலில் பழச்சாறு கொடுக்கப்பட, கையில் கனத்த பழச்சாறை குடிக்கலாமா? வேண்டாமா? என்று ஷ்ரதா யோசித்துக் கொண்டிருந்தாள்.

ஆனால், வீசியோ ஒரே மூச்சில் அதை குடித்து முடித்திருந்தான்.

அதைப் பார்த்து, ‘எங்க வீட்டுப் பலகாரம் விஷம். இவங்க வீட்டு பழச்சாறு மட்டும் அமிர்தமோ?’ என்று மனதிற்குள் நியாயம் கேட்டுக்கொண்டிருந்தாள். அவளால் அங்கு மட்டும் தானே தைரியமாக வாதாட முடியும்!

ராஜமாணிக்கம் திடீரென தன்னிடம், “என்ன மகளே, மாம்பழ ஜூஸ் எப்படி? எல்லாம் பின்னாடி இருக்க நம்ம தோட்டத்துப் பழத்துல போட்டது தான்.” எனவும்,

‘எங்க வீட்டுலயும் வேப்பமரம் நிக்குது. வாங்க, வேப்பம் பூ குழம்பு, வேப்பங்காய் பொறியல்னு அசத்திடுறேன்’ என்று மனதிற்குள்ளயே விடையளித்தாள்.

“என்னம்மா, மகளேன்னு கூப்பிட்டதும் இந்த முழி முழிக்கிற? வீசி எனக்கு மருமகன்னா நீ எனக்கு மக தானே? ம், என் பொண்ணுக்கு கிடைக்காத வரம். உனக்கு கிடைச்சிருக்கு.” என்ற ராஜமாணிக்கத்தின் ஏக்கக் குரலில் அருகில் நின்ற அவர் மகளைப் பார்த்தாள் ஷ்ரதா.

இப்போது தான் அவளுக்கு  உண்மையெல்லாம் விளங்கியது.

ஊகா முள்ளை விழுங்கியது போலவே சிறிது நேரம் உட்கார்ந்திருந்தவள், ‘இங்க ஏன் அத்தான் நம்மளை கூட்டிட்டு வந்தாங்க?’ என்று எண்ணும்போதே, ராஜமாணிக்கம் தான் வீசியுடன் தனியாகப் பேசவேண்டி அவனை தன்னுடன் அழைத்துச் சென்றார்.

ஷ்ரதாவும், “வாம்மா” என்ற பெண்மணியுடன் எழுந்து சென்றாள்.

ராஜமாணிக்கம் இந்த ஒரு வாரமாக தான் வீசியை சந்திக்காததால், தான் பேசாமல் விட்ட கதைகளையெல்லாம் சுவாரசியமாய் பேசிக்கொண்டிருக்க, அவனோ  குற்றவுணர்வில் பேசாமடந்தையாகிப்போனான்.

அதை புரிந்து கொண்டவராய் தானே நெருங்கி வந்தார் ராஜமாணிக்கம்.

“அட! என்னாச்சு வீசி? இதுவரை நீ நிமிர்ந்து பேசி தான் நான் பார்த்திருக்கேன். இப்படி தலை குனிஞ்சு பார்த்ததில்லையேப்பா.” என்றதும், தெம்பும், துணிவும் வரப்பெற்றவனாய் நிமிர்ந்து உட்கார்ந்தான்.

பின், “உங்களுக்கு கொடுத்த வாக்கை என்னால காப்பாத்த முடியல. என்னை மன்னிச்சிருங்க மாணிக்ஜி” என்று மீண்டும் கூனிக் குறுகினான்.

ராஜமாணிக்கம் அறை அதிர சிரித்து, “அதான் உன் சங்கடத்துக்குக் காரணமா வீசி? இப்ப என்ன? எனக்கு கொடுத்த வாக்கை நீ காப்பாத்தனும்; அவ்வளவு தானே? என் பொண்ணை வேணும்னா ரெண்டாந்தாரமா கல்யாணம் கட்டிக்கோ? எனக்கு கொடுத்த வாக்கை காப்பாத்தின மாதிரியும் ஆகும்; நாம அந்த விஜயாதித்தனை தோற்கடிச்ச மாதிரியும் ஆகும்” என்று சொல்லவும், சட்டென்று வீசியின் தோள்களிரண்டும் இரண்டு அங்குலங்கள் உயர்ந்தன.

பாவம்! இவர்களின் இந்தப் பேச்சு எதுவும் அறியாத ஷ்ரதா வேறொரு விவாதத்தில் தீவிரமாய் இருந்தாள். காரணம், அவளுக்கு முன்பிருந்த  சுவற்றில் விதவிதமாய் சிரித்துக் கொண்டிருந்தான் வீசி.

காதல் கணம் கூடும்…

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!