காதல் கணம்-6

காதல் கணம் 6

“முருகா, ஏன் என்னோட ராசிபலன் இன்னைக்கு இவ்வளவு மோசமா இருக்கு?” என்று ஷ்ரதா முணுமுணுத்ததை நிச்சயம் ராஜமாணிக்கத்தின் மகள் வித்யா கேட்டிருக்க வாய்ப்பில்லை.

ஷ்ரதாவிற்கு வித்யா இதை தன்னிடம் காண்பிக்கவே மனம் உவந்து வீட்டை சுற்றிக் காண்பிக்கும் பொறுப்பை தன் அன்னை கமலாவிடமிருந்து தானே ஏற்றுக்கொண்டதாய் தோன்றியது.

“நீங்க.. அவரை லவ் பண்ணுனீங்களா?” என்று தெளிவாய் வாக்கியத்தை இறந்தகாலத்தில் அமைத்தாள் அவள்.

ஆனால், வித்யாவோ அவளுக்கும் மேல் உள்ளவளாய், “ஆமா, நான் அவரை லவ் பண்ணிக்கிட்டு தான் இருக்கேன்” என்று நிகழ்கால சொற்றொடரைப் பிரயோகித்தாள்.

விசுக்கென்று நிமிர்ந்து பார்த்த ஷ்ரதா, “அவருக்கு இப்போ கல்யாணம் ஆகிடுச்சி.” என்றாள்.

அதற்கு வித்யாவும் தாட்பூட் என்றாள். “ஸோ வாட்? முன்னாடி அவரு என்னை கல்யாணம் பண்ணிக்கிறதா எங்கப்பாவுக்கு வாக்கு கொடுத்தாரு. நிச்சயம் ஒருநாள் என்னை கல்யாணமும் பண்ணிக்கிவாரு.” என்று நம்பிக்கை தெரிவித்தாள்.

ஷ்ரதா பதிலளிக்க சற்றும் தயங்கவில்லை. “உங்கப்பாவுக்கு வாக்கு கொடுத்தவரு என்னை ஏன் கட்டிக்கணும்? ஒண்ணு உங்களைப் பிடிக்காம இருக்கணும்; இல்ல என்னை பிடிச்சிருக்கணும்.” என்று தன் உதட்டைச் சுளித்தாள்.

நகைச்சுவை கேட்டவள் போல் விழுந்து விழுந்து சிரித்த வித்யா, “உனக்கென்ன மனசுல பெரிய உலக அழகின்னு நினைப்பா? உண்மையை சொல்லு அவரு உன்னை இதுவரை எத்தனை தடவை பொண்டாட்டியா நெருங்கியிருப்பாரு?” என்றதும், விதிர்த்துப்போனாள் ஷ்ரதா.

அந்த அதிர்ச்சி முகமே வித்யாவை மேலும் பேசத்தூண்டியது.

“வீசி எங்கப்பாவோட ஆளு. அவரு எப்படி எங்கப்பாவுக்கு எதிரி பொண்ணான உன்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதிப்பாரு? உங்கப்பாவுக்கு வீசியைப் பார்த்து பயம். எங்க வீசியும் எங்கப்பாவும் சம்பந்தம் வச்சிக்கிட்டா, தன் செல்வாக்கு போயிருமோன்னு பயம். அதான் வீசியை கட்டாயப்படுத்தி உன்னை கல்யாணம் பண்ணிக்க வச்சாரு.” என்று உண்மை உண்டியலை போட்டு உடைத்தாள்.

அதிர்ச்சியின் எவரெஸ்ட்டிற்கே சென்ற ஷ்ரதா, “கட்டாயப்படுத்தியா?” என்றாள்.

வித்யாவிற்கோ உடுக்கடித்தது போல் இருந்தது.

“என்ன தெரியாத மாதிரி கேட்கற? வீசியோட அக்காவை நீங்க அடிச்சு துன்புறுத்தல? வீசி உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா தான் அவங்க உங்க வீட்டுல வந்து வாழ முடியும்னு நீங்க பிளாக் மெயில் பண்ணல?” என்றாள் ஆவேசமாக.

ஷ்ரதா, “இல்ல, சத்தியமா இந்த விஷயம் எதுவும் எனக்கு தெரியாது.” என்றாள் பரிதாபமாக.

“ஓஹ்! தெரியாதா? சரி, இப்போ தான் தெரிஞ்சிருச்சே. அவரை விட்டு விலகிரு.” என்றவள், மேலும், “அவருக்கு உன்னைப் பிடிக்கலை; புரியுதா? இதோ இப்போக் கூட காலைல வீசி இங்க வர்றதா சொன்னப்போ எங்கப்பா என்கிட்ட என்ன சொன்னாரு தெரியுமா? வீசியை எப்படியாவது ரெண்டாவது கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கிறேன்னு தான் சொன்னாரு.” எனவும்,

‘இவ ஏன் இப்படி படையப்பா நீலாம்பரி மாதிரி நடந்துக்கிறா? எப்படியிருந்தாலும் படத்துல ரஜினிக்கு ஜோடி சௌந்தர்யா தானே? ஆனா, என் கதையில அப்படி நடக்குமா? ம்ஹூம், அவருக்குத் தான் என்னைப் பார்த்தாலே காஞ்சரங்காயா கசக்குமே.’ என்று மனதிற்குள் புலம்பிய ஷ்ரதா,

“இல்ல, இன்னொரு கல்யாணத்துக்கெல்லாம் அவரு சம்மதிக்க மாட்டாரு” என்று முறுக்கிக் கொண்டாள்.

அவள் இதை வித்யாவுக்கு சொன்னாளா? இல்லை, தனக்குத்தானே சொல்லிக்கொண்டாளா? என்று தெரியவில்லை.

“உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டும் பிரம்மச்சாரியா இருக்கிறவரைப் பார்த்தா உனக்கு பாவமாத் தெரியலையா ஷ்ரதா?” -வித்யாவின் இக்கேள்விக்கு, ‘ம்க்கும்’ என்று மனதிற்குள் நொடித்துக்கொண்ட ஷ்ரதா, தொடர்ந்து தன் பதில்களையெல்லாம் ஒற்றை மேற்கோள்களுக்குள்ளேயே அடக்கினாள்.

“ஷ்ரதா, நீயும் ஒரு பொண்ணா?”

‘என்ன நான் கேட்க வேண்டிய கேள்வியை இவ கேட்கறா?’

“தயவு செஞ்சு உன்னையும் உன் குடும்பத்தையும் அவர் அடிமனசுலயிருந்து வெறுக்கிறாருங்கிறதை புரிஞ்சிக்கோ ஷ்ரதா.”

‘வேணாம்! வலிக்குது’

“நீ பேசுறதைப் பார்த்தா உனக்கு உண்மை எதுவும் தெரியாதுன்னு தெரியுது. அவரை எனக்கு விட்டுக் கொடுத்திரும்மா.”

‘அடியேய்! விட்டுக் கொடுக்க அவர் என்ன ஷிபான் புடவையா?’

“உன்னை நான் மொத்தமா பிரிஞ்சுப் போக சொல்லல. எனக்கும் கொஞ்சம் அவரை விட்டுக்கொடுன்னு தான் கேட்கிறேன்.”

‘ஒரு தாலி வரம் வேண்டி வந்தேன் தாயம்மா ரேஞ்சுக்கு கெஞ்சுறாளே சண்டாளி.’

“என்ன இவ்வளவு கெஞ்சுறேன், கல்லு மாதிரி நிற்கிற?”

இவ்வளவு நேரமும் மனதிற்குள்ளேயே பதிலளித்துக் கொண்டிருந்த ஷ்ரதா முதல்முறையாக வாயைத் திறந்து பதிலளித்தாள்:

“இல்ல. என்னால முடியாது. அவர் எனக்கு மட்டும் தான் சொந்தம். என்னால அவரை வேற யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது. கஷ்டம் தான். ஆனா, நீங்க அவரை மறந்துருங்க வித்யா. அது தான் எல்லாருக்கும் நல்லது.” என்றாள்.

ஷ்ரதாவிடமிருந்து இப்படி பட்டவர்த்தனமான மறுப்பை எதிர்பார்த்திராத வித்யா எரிமலையாய் கொதித்தெழுந்தாள்.

“ஏய்! என்ன உன்கிட்ட கெஞ்சுறதால என்னை இளக்காரமா நினைக்கிறியா? நான் ஒன்ன ஆசைப்பட்டா அதை அடையாம விடமாட்டேன். நான் ஆசைப்பட்டதை நானே மறந்தாலும் எங்கப்பா மறக்க மாட்டாரு” என்று மிரட்டும் தொனியில் சொன்னாள்.

“உங்களால முடிஞ்சதைப் பார்த்துக்கோங்க.” என்ற ஷ்ரதா வேகமாக படியிறங்கி வர,

ராஜமாணிக்கத்திடம், “நீங்க சொல்றதை யோசிக்க எனக்கு கொஞ்சம் டைம் வேணும் மாணிக்ஜி.” என்று பணிவுடன் கேட்டுக்கொண்டிருந்தான் வீசி.

“ம்ம், எவ்ளோ டைம் வேணுமோ எடுத்துக்கோ வீசி. ஆனா நல்ல முடிவா தான் சொல்லணும்.” என்றார் ராஜமாணிக்கம்.

அவர்களின் இப்பேச்சை கடைசிப் படியில் நின்றிருந்த ஷ்ரதா கேட்டுவிட்டு பின்னால் திரும்பிப் பார்க்க, பத்து படிகளுக்கு மேலே நின்றிருந்த வித்யா, ‘எங்கப்பாவை பத்தி முன்னாடியே நான் சொல்லலை?’ என்று அவளிடம் பார்வையாலேயே கேட்டாள்.

ராஜமாணிக்கத்தின் பேச்சு தனக்குள் அபாயமணி எழுப்ப, விறுவிறுவென்று வந்து வீசியின் அருகில் நின்று கொண்டாள் ஷ்ரதா.

அவளிடம், “என்னம்மா வீட்டை சுத்திப் பார்த்திட்டியா?” என்றார் ராஜமாணிக்கம்.

“ம்ம்” என்று  தலையசைத்தவள்,

‘பேச்செல்லாம் நல்லா சர்க்கரையா தான் இருக்கு. ஆனா, செயல்தான்…’ என்று மனதிற்குள்ளேயே பொருமிக்கொண்டாள்.

பின், அவர்களைவிட்டு அசையவே மாட்டேன் என்பது போல் சோபாவில் தன் கணவனின் அருகிலேயே அமர்ந்து கொண்டாள்.

ஆனால், அதன் பின் வீசியும் ராஜமாணிக்கமும் பேசிய வியாபாரப்பேச்சில் ‘ஏன்டா இவர்கள் அருகில் வந்து உட்கார்ந்தோம்?’ என எண்ணும் அளவிற்கு ஆகிவிட்டது.

மதியத்திற்கு மேலான கணக்கு வாத்தியாரின் வகுப்பில் ‘இந்த அராஜகம் எப்போது முடியும்?’ என்று காத்திருப்பது போலவே அவளும் காத்திருந்தாள்.

ஆபத்தாண்டவனாய் அப்போது வந்த கமலா, “சாப்பாடு ரெடி! சாப்பிட வாப்பா வீசி” என்க, நிம்மதியடைந்தாள் ஷ்ரதா.

ராஜமாணிக்கத்தின் வீட்டில் குடும்பத்தினர் மட்டும் தனித்து சாப்பிடும் வழக்கம் கிடையாது. தன்னிடம் வேலைப் பார்க்கும் ஆட்களையும் ஒன்றாக அமரச்சொல்லி, சாப்பிட வைத்து அழகு பார்ப்பார் அந்த சமத்துவவாதி.

சாப்பிட அழைத்த ஐந்து நிமிடத்திலேயே அனைத்து நாற்காலிகளும் நிரம்பிவிட, வேலையாட்கள் இருவரை சேர்த்துக்கொண்டு அனைவருக்கும் தானே பரிமாறினார் ராஜமாணிக்கத்தின் மனைவி கமலா.

அனைவருக்கும் வாழையிலையிலேயே சாப்பாடு பரிமாறப்பட்டது. காடை, கோழி, கௌதாரி என்று ஒரு அசைவ உணவகத்தையே வீட்டிற்குள் இறக்கிவிட்டார் ராஜமாணிக்கம்.

எப்போதும் சிரித்த முகமாகவே இருக்கும் கமலாவைப் பார்த்து அவருக்கு வாயே வலிக்காதா என்று யோசித்துக் கொண்டிருந்தாள் ஷ்ரதா. அவள் இந்த யோசனையுடனே கொஞ்சம் கொஞ்சமாய் கொரித்துக் கொண்டிருக்க, அடியாட்கள் அனைவரும் தங்கள் உடல்வலுவிற்கு ஏற்ப வெளுத்துக்கட்டிக் கொண்டிருந்தனர்.

வீசி சாப்பிடும் போது குடித்துவிட்டு வைத்த தண்ணீர் தம்ளரிலேயே வித்யாவும் தண்ணீர் குடிக்க, “அது அவர் குடிச்சது” என்று பரிதவித்துக் கூறினாள் ஷ்ரதா.

“ஓ! சாரி கவனிக்கலை. காரமா இருந்ததா அதான் எடுத்து குடிச்சிட்டேன்” என்று கூறி அவளைப் பார்த்து கண்ணடித்தாள் வித்யா.

‘பொய், பொய், பச்சை, மஞ்சள், விப்ஜியார் பொய். புழுகுனி மூட்டை! நிச்சயம் பிரம்மன் இவளை சரஸ்வதிக்கிட்ட கோபமா இருந்தபோது தான் படைச்சிருக்கணும். இல்லைன்னா இப்படி ஒருத்தியா? அம்மா அப்பா பக்கத்துல இருக்கும்போதே இப்படி பண்றாளே? எனக்கு மட்டும் இப்படி ஒரு பொண்ணு பிறக்கட்டும். அடிச்சி துவம்சம் பண்ணிற மாட்டேன். எனக்கொரு பொண்ணா? ஆமா இன்னும் ஒரு முத்தம் கூட வாங்கலை; இதுல எங்கயிருந்து பொண்ணு வாங்குறது?’ என்று அவள் மனசாட்சியே அவளை இடித்துரைக்க, இடக்கை தானாக அவள் வயிற்றை தடவிப் பார்த்துக்கொண்டது.

அதைப் பார்த்துவிட்ட வீசி, “வயிறு நிறைஞ்சிடுச்சினா எழுந்திரு” என்று மந்திரம் போல் அவள் காதில் முணுமுணுத்துவிட்டுப் போனான்.

ஷ்ரதா சாப்பிட்டு முடித்ததும் தன் மகளிடம் வந்த கமலா, “வித்யா, வீசிக்கும் ஷ்ரதாவுக்கும் கெஸ்ட் ரூம் காட்டும்மா.” என்றார்.

அவளும் “ம்ம்” என்று இருவரையும் தன்னறைக்கே அழைத்துச் சென்றாள்.

ஷ்ரதாவோ, ‘கடங்காரி! ஒட்டி வச்சிருக்க போட்டோஸை காமிக்கணும்னே  அவ ரூமுக்கு கூட்டிக்கிட்டுப் போறாப்பாரு. அப்படியே அவர்கிட்ட நான் உங்க மேல எவ்வளவு பாசம் வச்சிருக்கேன் பாருங்கன்னு அனுமார் மாதிரி நெஞ்சைத் திறந்து காமிக்க நினைக்கிறாப் போல. கிராதகி’ என்று முடிந்தவரை திட்டித் தீர்த்தாள்.

அவள் அந்த புகைப்படங்களை பார்த்து வீசி என்ன சொல்வானோ என்று பதைபதைக்க, அவனோ சரேலென கட்டிலில் போய் விழுந்தான்.

ஷ்ரதா தன் எதிர்பார்ப்பு புஸ்ஸென்றானதில், “இவரு ஒருத்தரு. ஒண்ணத்துக்கும் ஒரு ரியாக்சனும் காட்ட மாட்டாரு.” என்று சலித்துக்கொண்டே, கதவை சாற்றுவது போல் நின்றுகொண்டிருந்த வித்யாவை பார்வையாலேயே வெளியேறச் சொன்னாள்.

வித்யா முகத்தை ஒரு முழத்திற்கு தூக்கி வைத்துக்கொண்டே வெளியேறினாள்.

அவள் பின்னால் நின்று ‘வெவ்வெவ்வே’ என்று அழவம் காட்டிவிட்டு திருப்தியாக வந்த ஷ்ரதாவிற்கு தூக்கம் தான் வருவேனா என்றது. தன் வாழ்க்கை தன் கண்முன்னேயே கை நழுவிப்போக இருக்கும் சமயத்தில் எப்படி தூக்கம் வரும்?

“ம்ம்! கொடுத்து வச்ச மகராசன். ஒரு பிரச்சினையும் இல்லாம நிம்மதியா இருக்காரு. நான் பாரு எப்படி புலம்பிக்கிட்டு இருக்கேனு?” – சிணுங்கிய ஷ்ரதா சிறிதுநேரத்தில் அவன் எழுந்து கிளம்பி கீழே செல்லவும், தானும் முகத்தைக் கழுவி அவனைப்  பின் தொடர்ந்தாள்.

அவர்கள் வந்த சமயம், வரவேற்பறையில் பரதமாடிக் கொண்டிருந்தாள் வித்யா. வீசியும் அவளது நாட்டியத்தை ரசித்துப் பார்க்க ஆரம்பித்தான்.

“ஆமா இவர் பெரிய சலீம். அந்தம்மா பெரிய அனார்கலி. அவங்க ஆடுறதை இவரு ரசிச்சிப் பார்க்கறாரு.” என்று கடுகடுத்தாள்  ஷ்ரதா.

துரதிருஷ்டவசமாக ஷ்ரதாவின் ஸ்பாட் லைட் விழிகள் இரண்டும் வீசியின் மீதும், வித்யாவின் மீதும் மட்டும் தான் மாறிமாறி விழுந்து கொண்டிருந்தன. அவளின் உள்ளக்குமுறலை கேட்டது போலவே ஹோம் தியேட்டர் ஸ்பீக்கரும் அலறியது.

“ஆறு பெருகிவரின் அணை கட்டலாகும்..
அன்பின் பாதையில் அணையிடலாமோ..
பேதமையாலே மாதே இப்போதே
காதலை வென்றிட கனவு காணாதே..”

இவ்வரிகளுக்கு ஷ்ரதா அவசரப்பட்டு எதிர்வினையாற்றும் முன்னமே, “சாதுர்யம் பேசாதேடி.. என் சலங்கைக்கு பதில் சொல்லடி” என்று  படபடத்துப் பாடிவிட்டார் ஜிக்கி.

வித்யாவை ஷ்ரதாவிற்கு பிடிக்கவில்லையானாலும் அவளே மறுக்க முடியாத அளவிற்கு மிகச்சிறந்த ஆடலரசியாகத் திகழ்ந்தாள் வித்யா.

ஏனோ வீசி அவளின் ஆட்டத்தை கண்கொட்டாமல் பார்ப்பது போலவே ஷ்ரதாவுக்குத் தோன்றியது.

‘பெரிய துரோகம் முருகா. எனக்கு நீ செய்ற பெரிய துரோகம் இது. வார விரதம், நட்சத்திர விரதம்னு இருந்த உன் பக்தைக்கு நீ செய்ற கைம்மாறு இது தானா? இவரு இப்படி பார்க்கிறதைப் பார்த்தா அவளை இந்த நாட்டியத்துக்காகவே கட்டிக்கிருவாரு போலயே? சிலப்பதிகாரத்துல மாதவியும் இப்படி ஆடி ஆடித் தானே கோவலனை மயக்கினா. அப்போ எனக்கும் கண்ணகி கதி தானா?’ என்றவள் மனம் அரற்றிக் கொண்டிருக்க, ஆட்டம் முடிந்த ஜோரில் எல்லோரும் வித்யாவை பாராட்டத் துவங்கியிருந்தனர்.

‘ஆமா என்ன பெருசா ஆடிட்டா.  தய்ய தக்கான்னு குதிச்சா. இது பெரிய விஷயமா?’ என்பது போலவே அவளைப் பார்த்திருந்தாள் ஷ்ரதா. அவளுக்கு அவளை பாராட்ட மனமில்லை என்பது அவளது அலட்சியப் பார்வையிலிருந்தே தெரிந்தது.

வீசி ராஜமாணிக்கத்திடம், “சரிங்க மாணிக்ஜி, நேரமாகிடுச்சி. இன்னொரு நாள் நாங்க வர்றோம்.” என்று கிளம்ப, வெள்ளி குங்குமச்சிமிழ் சகிதமாய் அவர்களை வழியனுப்பி வைத்தார் கமலா.

 

காதல் கணம் கூடும்….

❤️ Loading reactions...
1 Comment

You cannot copy content of this page

error: Content copy warning!!