காதல் கணம் 8
அன்று மதியம் அபிராமி வீட்டிற்குள்ளிருந்த ஈச்சங்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டே, குஷன்களுக்கு கவர் மாற்றிக் கொண்டிருந்த ஷ்ரதாவிடம் கேள்வி எழுப்பினார்.
“ஷ்ரதா, அவன்கிட்ட இன்னைக்கு சாயங்காலம் உங்க வீட்டுக்குப் போகணும்னு சொன்னியாம்மா?” என்றார்.
அவள் திடீரென ஏ ப்ளஸ் பி த ஹோல் ஸ்கொயர் ஃபார்முலா கேட்கப்பட்ட கடைசி ரேங்க் மாணவி போல் திருதிருத்தாள்.
“நாலு வேலை பார்க்கிறவன் பார்த்தியா? அதான் மறந்திருவான். மதியம் இன்னொரு தடவை போன் போட்டு சொல்லிரும்மா.” என்றதும்,
உயிர்ப்பே இல்லாத குரலில், “சரிங்கத்த” என்றவள் காலையில் நடந்த காஃபி நிகழ்விலிருந்து இன்னும் வெளிவந்திருக்கவில்லை.
ஹிப்னாடிசத்திற்கு கட்டுப்பட்டவள் போலவே தனதறைக்குச் சென்றவளை சந்தேகமாய் பார்த்து தலையாட்டிக்கொண்டார் அபிராமி.
தன்னறையில் பூனையை மடியில் தூக்கி வைத்துக்கொண்டு அவனுக்கு பேசுவோமா? வேண்டாமா? என்று போனையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தவள், பின், ஒரு முடிவுக்கு வந்தவளாய் அவன் எண்ணிற்கு முயலத் தொடங்கினாள்.
போனை எடுத்ததும் அவனிடம் அசாத்திய அமைதி நிலவியது. அவள் முன்னேற்பாட்டுடன் தான் கொண்டு வந்திருந்த பூனையின் காதைத் திருகிவிட, அது அவனிடம் “மியாவ்” என்றது.
அவன் என்னவென்று கேட்டபோது, இன்னும் அவன் குரலில் கோபம் தெரிந்தது.
“இன்னைக்கு நாலு மணிக்கு எங்க வீட்டுக்கு விருந்துக்கு போகணும்” என்றுவிட்டு அவன் பதிலை எதிர்பாராமலேயே போனை அணைத்துவிட்டாள்.
அவள் கொஞ்சம் நிதானித்திருந்தால் அவன் இன்று விருந்திற்கு செல்ல கொஞ்சம் தாமதமாகும் என்று சொல்ல வந்ததையும் கேட்டிருக்கலாம். எங்கே?
மாலை நான்கு மணியளவில் தன்னை சீவி சிங்காரித்தவள் தன் கையிலிருந்த டைட்டன் ராகாவையே நிமிடத்திற்கொருமுறையாய் பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்தவளாக மெத்தையில் விழுந்து விக்கி விக்கி அழுதாள்.
தன் திருமண வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்ற சுய பச்சாதாபத்திலும், திருமணமாகி ஐந்து நாட்கள் தன் தந்தையையும், தாயையும் தான் காணாமல் இருக்கும் ஏக்கத்திலும் கேவி கேவி அழுதவள், தன் தந்தைக்கு அழைப்பு விடுத்து கடுகாய் பொறிந்தாள்.
விஜயாதித்தனால் அவளை சமாளிக்கவே முடியவில்லை. ஏகப்பட்ட நியாயங்களை அவள் முன் அடுக்கினார். எதுவும் அவளின் அழுகையை நிறுத்துவதற்கு ஏதுவாக இல்லை எனவும் சோர்ந்துபோனவர், ஒரு கட்டத்தில் ஷ்ரதா தன் போனை மெத்தையில் விட்டெறிந்தது கூடத் தெரியாமல் அவளிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தார்.
அச்சமயம் படக்கென்று கதவை திறந்துகொண்டு உள்ளே வந்த வீசி, அவளை தான் பார்க்காதவன் போலவே அலட்சியமாகத் தன் கையிலிருந்த நான்கடி கரடிபொம்மையை கட்டிலில் தூக்கிப்போட்டான்.
ஷ்ரதா தன் அருகில் வந்து விழுந்த பொம்மையை தன் தளிர் விரல்களால் தடவிக் கொடுத்தாள். அவள் வீட்டில் எப்போதுமே இதுபோல் ஒரு கரடிபொம்மையை அவள் அணைத்துத் தூங்குவது வழக்கம். இங்கு வந்த முதல் நாள் இரவில் அது இல்லாமல் ரொம்பவே சிரமப்பட்டாள்.
இவ்வயதில் தான் கரடி பொம்மை கேட்டால் பார்க்கிறவர்கள் என்ன நினைப்பார்கள் என்றே தன் ஆசையையும் மனதிற்குள்ளேயே போட்டு புதைத்துக் கொண்டாள். ஆனால், தான் கேட்காமலேயே அவன் இப்படி கரடிபொம்மை வாங்கி வந்து தந்திருப்பது அவளின் கோபத்தை கொஞ்சம் தணித்தது.
அவன் அவளுக்கு முதுகுகாட்டி டையை தளர்த்திக்கொண்டே பீரோவில் உடை தேடிக்கொண்டிருந்தான்.
அவள் கோபத்தை உள்ளடக்கிய குரலில், “ஏன் இன்னைக்கு லேட்டாச்சு?” என்க,
“மதியம் மேடமுக்கு கேட்க நேரமில்ல. இப்ப எனக்கு சொல்ல விருப்பமில்ல” என்றுவிட்டு அவன் கிளம்புவதிலேயே முனைப்பானான்.
ஷ்ரதாவிற்கு இப்போது அவனிடம் சண்டை போடுவதைக் காட்டிலும் தன் பிறந்த வீட்டிற்கு செல்வதே முதன்மையாகப்பட்டது. அவன் கிளம்பி வரட்டும் என்று கீழேச் செல்லக் கிளம்பியவளின் கையைப் பிடித்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு மெதுவாக அந்த மோதிரத்தை அணிவித்து விட்டான் வீசி.
மோதிர விரலுக்கும், இதயத்துக்கும் நேரடித்தொடர்பு உண்டு என்கிற இதயவியலாளர்களின் கூற்றை மெய்யாக்குவது போல் ஷ்ரதாவின் இதயமும் வினாடிக்கு மூன்று முறை எகிறித் துடித்தது.
அவன் மோதிரத்தை போட்டுவிட்டு, “இனி இது உன்கிட்ட தான் இருக்கணும்” என்று பத்திரம் சொல்ல, இருதலைக்கொள்ளி எறும்பாய் விருப்பும், வெறுப்பும் கலந்து மனதுள் தத்தளித்தாள் ஷ்ரதா.
“அப்புறம் இனி நைட் தூங்கும் போது அந்தக் கரடிபொம்மையை நமக்கு நடுவுல படுக்க வச்சிக்கணும்.” -அவ்வளவு தான் சொன்னான் வீசி. அவள் விழிகள் இரண்டிலும் நீர் திரண்டுவிட்டன.
‘நேத்து என்னை தொட்டதுக்காக வருத்தப்படுறாரா இவரு? அப்படியொரு சம்பவமே நடந்திருக்கக்கூடாதுன்னு நினைக்கிறாரா? ஏன் இப்படி மேல மேல இழுத்துட்டுப்போய் என்னை கீழப் பிடிச்சித் தள்ளுறாரு?’ என்று கலங்கியவள் அவன் சொன்னதற்கு பதிலேதும் கூறாமல், ஏன் தன் பூம்பூம் மாட்டு தலையசைப்பைக்கூடத் தராமல் விறுவிறுவென வெளியேறிவிட்டாள்.
‘ரொம்ப தைரியமாகிடுச்சி இவளுக்கு’ என்று நினைத்துக்கொண்ட வீசி, இருபது நிமிட பயணத்தில் அவள் வீட்டை வந்தடைந்தான்.
இருவரும் விஜயாதித்தனின் வீட்டை அடைந்தபோது தன் மனைவியுடன் இணைந்து, “வாங்க மாப்பிள்ளை. வாம்மா ஷ்ரதா.” என்று வாசல்வரை வந்து வரவேற்றார் விஜயாதித்தன்.
இவ்விடத்தில் விஜயாதித்தன் குறிப்பு வரைக என்று யாரேனும் கேட்டால் நாம் பின்வருமாறு வரையறுக்கலாம். 8×7 எவ்வளவு? ஆம், ஐம்பத்தியாறு. மிகச்சரி. விஜயாதித்தனும் தற்போது அப்பிராயத்தில் தான் கல் போல் இருக்கிறார். அவரின் அகலமான முகத்தில் காணப்படும் நெற்றியோர தழும்பு, அவர் சில விஷயங்களுக்கு தயங்கவேமாட்டார் என்று கட்டியம் கூறும். புருவங்களில் பத்து சதவீத நரைமுடி, காதோரங்களில் சமரசமில்லா வெள்ளை, தங்க பிரேமில் கண்ணாடி, சற்றே தொங்கும் கன்னச்சதைகள், இருபத்தினாலு மணிநேரமும் மடிப்பு கலையாத வெள்ளை வேஷ்டி சட்டை என எப்போதும் ஒரு அரசியல்வாதியின் க்ளோன் போலவே காட்சியளிப்பார் விஜயாதித்தன்.
ஏழு கிரானைட் தொழிற்சாலை, ஊரைச் சுற்றி சட்டத்திற்கு புறம்பாக ஆக்ரமிக்கப்பட்ட புறம்போக்கு நிலங்கள், பத்து மதுபானக்கடைகள், ஐந்து சொகுசு திருமண மண்டபங்கள், பனிரெண்டு ரைஸ்மில்கள், முப்பது கார், அறுபது கன்டெயினர் லாரிகள், இரண்டு சினிமா தியேட்டர்கள், இன்னும் கணக்கில் வராத சொத்துக்கள் என பல நூறு கோடிகளுக்கு அதிபதி விஜயாதித்தன்.
அவரின் முக்கிய தொழில் என்னவென்று கேட்டால், கிரானைட் தொழிற்சாலைகளை நிர்வகித்தலும், ஊரின் பிரபல ஊழல் மன்னர்களுக்கு ஏந்து கட்டப்பஞ்சாயத்து செய்தலும் தான்.
ஷ்ரதா அவருடன் மதுபாலா விஷயத்தில் பிணக்கு கொண்டாலும் நேரில் பார்த்ததும் பரிவும், பாசமும் பொங்கிப்பெருகி விட்டது.
“அப்பா” என்று சலுகையாய் அவரின் நெஞ்சில் விழுந்து அழுதுகொண்டே இருந்தாள்.
ஏதோ ஓரங்க நாடகத்தை வேடிக்கைப் பார்ப்பவன் போலவே இக்காட்சியை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த வீசி, ஷ்ரதா தன் அண்ணன் அருண்மொழியிடமும் மிழற்றுவதைக் கண்டு பல்லைக் கடித்தான்.
மீனாட்சி ஷோவிற்கு ‘எண்ட்கார்ட்’ போடுபவராய், “ஏற்கனவே லேட். எல்லாம் ஆறிப் போயிடுறதுக்குள்ள சாப்பிட வாங்க மாப்பிள்ளை” என்று உபசரித்தார்.
ஷ்ரதா மீனாட்சியின் ஜாடை. வீசி அவரிடம், “இல்லங்க அத்தை. ஏற்கனவே பிசினஸ் பார்ட்டின்னு வெளிய சாப்பிட்டுட்டு வந்துட்டேன். அம்மா சொன்னாங்களே ஏதோ சம்பிரதாயமேன்னு தான் வீடு வரைக்கும் வந்தேன்” என்று ரொம்பவே தன்மையாகப் பேசினான்.
விஜயாதித்தனுக்கு கோபம் வந்து விட்டது. “இதென்னது விருந்துக்கு வந்துட்டு சாப்பிடாமப் போறது?” என்று வீராவேசமானார்.
வீசி பார்த்தபோது வேறுபுறம் இருந்தது அவரது முகம்.
“நான் சாப்பிடாம போறதால இப்போ யாருக்கு என்ன நஷ்டமாகிடப்போகுது?” என்று கேலியாகக் கேட்டவனிடம்,
தானும், “இது எங்களை அவமானப்படுத்துறதுக்கு சமம்.” என்று காரமாய் மொழிந்தான் அருண்மொழி.
வீசி தன் கால் மேல் கால் போட்டுக் கொண்டவனாக, “கட்டாயப்படுத்தி கல்யாணம் வேணா பண்ணி வைக்கலாம்; ஆனா உங்கப் பொண்ணுக்கூட என்னை வாழ வைக்க மட்டும் முடியாதுன்னு, நான் உங்கப் பொண்ணைத் தொடாம இருந்தா தானே உங்களுக்கு அவமானம்? இது எப்படி அவமானமாகும்?” என்று புருவம் உயர்த்தினான்.
அவனது கடைசி வார்த்தையை கெட்டியாகப் பிடித்துக்கொண்ட விஜயாதித்தன், “என் பொண்ணு கால் விரலை நசுக்கினது அவமானமில்லையா? டீவி, காஃபி கப் உடைச்சு மிரட்டுறது அவமானமில்லையா? எல்லாத்தையும் என் பொண்ணு போன்ல என்கிட்ட சொல்லிட்டா” என்றவர் வரிசையாகப் பட்டியலிடவும், வீசி தன்னை எவ்வளவோ தடுக்க முயன்ற மீனாட்சியை நமஸ்கரித்துவிட்டு, விறுவிறுவென்று வெளியேறிவிட்டான்.
அருண்மொழியும் மதுபாலாவை முறைத்துப் பார்த்துவிட்டு, தூக்கச் சொல்லி கை நீட்டிய தன் மகளை தூக்கிக்கொண்டு அறைக்குள் சென்றுவிட்டான்.
இரவில் தங்களுக்கு நடுவில் கரடிபொம்மையை கும்பகர்ணன் போல் படுக்க வைத்த வீசியை எப்போதும் போல் ஷ்ரதாவால் புரிந்துகொள்ள முடியவில்லை.
……………….
அன்று விருந்திற்கு சென்று வந்ததிலிருந்தே ஷ்ரதாவிற்குள்ளும், வீசிக்குள்ளும் பெரிதாய் பேச்சு வார்த்தை எதுவும் கிடையாது. ஆனால், இந்த மூன்று வாரங்களில் அவ்வப்போது அவளை சீண்டுவதை மட்டும் அவன் நிறுத்தியபாடில்லை.
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கொட்டிக்கொண்டு தான் இருந்தான். கூடவே உனக்கு இது பிடிக்கும், இது பிடிக்காது என்று தனது ஜோசியம் கூறும் வேலையையும் தவறாமல் செய்து கொண்டிருந்தான். காலக்கிரமத்தில் ஷ்ரதாவிற்கு இவையெல்லாம் பழகிவிட்டன என்று தான் சொல்லவேண்டும்.
அவள் அவன் மீதான தனது எதிர்பார்ப்புகளை எல்லாம் குறைத்துக் கொண்டாள். புத்தரின் ‘ஆசையே அனைத்து துன்பங்களுக்கும் காரணம்’ எனும் போதனையை முழுமையாக புரிந்து கொண்டாள் பெண்.
ஆயினும் மனதின் கடையோரத்தில் தலைகாட்டும் சிறுசிறு எதிர்பார்ப்புகளையெல்லாம் அவளால் அறுத்தெறிய முடியவில்லை.
அலுவலகத்திற்கு செல்லும்போது ‘போய் வருகிறேன் ஷ்ரதா’ எனலாம். காபி கொடுக்கும் போது ‘நீ குடித்தாயா?’ என கறார் குரலிலேயே கேட்கலாம். அது ஏன்… ‘நேற்று போட்டிருந்த ஸ்க்ரீனைக் காட்டிலும் இந்த ஸ்கை ப்ளூ கலர் ஸ்க்ரீன் அறைக்கு புதுவித அழகைக் கொடுக்கிறது; வெட்டியாக கழிக்கும் பொழுதில் உருப்படியாக இப்படியும் ஏதோ செய்கிறாய்’ என்று திட்டிக்கொண்டே பாராட்டலாம். ம்ஹூம், அப்படி ஒன்றும் சொல்லாமல், புத்தியை பேதலிக்கச் செய்யும் விதமாய் புதுவகையில் சித்திரவதை செய்து கொண்டிருந்தான் வீசி.
ஒரு கட்டத்தில் ‘முருகனே சரணம்’ என்று இறைவனை சரணாகதி அடைந்துவிட்டாள் ஷ்ரதா. வாரந்தோறும் செவ்வாய், வெள்ளியன்று தவறாமல் காளியம்மன் கோவிலுக்குச் செல்வதையும், அங்கு முருகன் சன்னதியே கதியென்று கிடப்பதையும் வழக்கமாக்கிக் கொண்டாள். அபிராமி ஓரிரு நாட்கள் அவளோடு வந்தவர் அவள் இரண்டு மணிநேரமானாலும் முருகனின் வதனத்தைப் பார்த்துக்கொண்டே கிடப்பதைப் பார்த்து, அவளுடன் செல்வதை நிறுத்திவிட்டார்.
இப்படி அவள் ஒருநாள் வெள்ளிக்கிழமை கோவிலுக்குச் சென்றபோது தான் அவளை அசந்தர்ப்பவசமாக எதிர்கொண்டான் சிவனேஸ்வரன். அவன் சில நாட்களாகவே அவளை கவனித்துக்கொண்டு தான் இருக்கிறான். எதன்மீதும் பற்றில்லாமல் இலக்கின்றி செல்லும் அவளின் வெற்றுப்பார்வை அவனை ரொம்பவே இம்சித்தது. ஒரு காலத்தில் அவள் முகம் எப்படி உற்சாகம் ததும்ப இருக்கும்? குறும்பு மின்ன புன்னகைப்பாளே! அவனுக்கு அலைஅலையாக ஞாபகங்கள் கரை புரண்ட வண்ணமிருந்தன.
‘உன்னை ஒரு அரக்கன் கையில் விட்டுக்கொடுத்துட்டேனே ஷ்ரதா.’ என்று இப்படியெல்லாம் அவனால் வருந்தாமல் இருக்க முடியவில்லை.
குழந்தை வரம் கிட்டாத பெண்ணொருத்தி, கவனிப்பாரின்றி புழுதியில் புரளும் குழந்தையைப் பார்த்து அதன் தாயை எப்படி சபிப்பாளோ அப்படித் தான் சிவனேஸ்வரனும் வீசியை நினைத்து சபித்துக் கொண்டிருந்தான்.
எப்போதும் தூர நின்றே அவளை தரிசிப்பவன், இன்று எது எப்படியாகினும் பேசிவிடுவதென முன்னேறியிருந்தான்.
வீட்டிற்கு செல்ல எழுந்தவள் திடீரென சிவனேஸ்வரனை பார்த்ததும் சுதாரிப்பாய் அக்கம் பக்கம் பார்த்தாள். அவளின் அதிர்ச்சி அவனுக்குப் புரிந்தது. அன்று அவனிடம் அநாகரீகமாக நடந்துகொண்டதற்கு வருந்துவதுபோல் கைகளைப் பிசைந்தபடி நின்றிருந்தாள்.
அவன் அவளிடம், “நீ சந்தோசமா இருக்கியா ஷ்ரதா?” என்க, அவள் விசுக்கென்று நிமிர்ந்துப் பார்த்தாள்.
காதல் கணம் கூடும்…
