காதல் கணம் 7
காரில் அவ்வீட்டின் வாயிலை கடந்தபோது ஷ்ரதா அடைந்த நிம்மதியானது சொல்லில் வடிக்க இயலாதது. அவளின் ஆசுவாசத்தைப் புரிந்து கொண்டவன் போலவே இதழில் புன்னகையைப் படரவிட்டான் வீசி. அதைப் பார்த்ததும் தைரியம் வந்தவள் போல் தன் வாதத்தை துவங்கினாள் ஷ்ரதா.
“எங்கப்பா உங்களை மிரட்டி என் கழுத்துல தாலி கட்ட வச்சது தப்பு தான். ஆனா, அவங்க செஞ்ச அதே தப்பை தான் நீங்களும் பண்ணிக்கிட்டு இருக்கீங்க. உங்கவீட்டு மருமகளை டார்ச்சர் பண்ணிக்கிட்டு இருக்கீங்க. சரி நடந்ததெல்லாம் விடுங்க. எங்க அப்பாவும், அண்ணாவும் நான் சொன்னா கேப்பாங்க. இனி அவங்க அண்ணியை தொந்தரவு பண்ண மாட்டாங்க. நீங்க அவங்க மேல உள்ள கோபத்துல நம்ம வாழ்க்கையை நரகமாக்கிறாதீங்க, ப்ளீஸ்” என்று இரு கை கூப்பி கெஞ்சினாள்.
வீசி அதனை கண்டு கொள்ளாமல் காரிலிருந்த ஸ்பீக்கரை இயக்கி அதிரவிட, ‘இவர் அகராதியில மன்னிப்புன்ற வார்த்தையே கிடையாதா?’ என்று வெறுப்பாக இருந்தது ஷ்ரதாவிற்கு. அவனிடமிருந்து தன் தலையை திருப்பிக் கொண்டாள்.
கார் சென்று கொண்டிருக்கும்போதே ஓரிடத்தில் சடன் பிரேக்கடித்து நிற்க, முன்னால் வந்து விழுந்தவள் ‘ஏன்?’ என்று அவன்புறம் திரும்பிப் பார்த்தாள்.
மாறாக, அவன் பார்வையோ சாலையின் ஓரமாய் இருந்த இளநீர்க்கடையிலேயே இருந்தது.
நன்றாக உற்றுப் பார்த்தபோது தான் கடைக்குள் ஸ்ட்ராவ் போட்டு இளநீர் உறிஞ்சிக் கொண்டிருந்த சிவனேஸ்வரன் அவள் கண்களுக்கு தெரிந்தான்.
“அய்யோ! சிவா அத்தான்” என்று முணுமுணுத்தவள் வீசி தன்னை திரும்பிப் பார்க்கவும், அமைதியானாள்.
காரிலிருந்து இறங்கிய வீசி, “பொண்ணு வீட்டுல ஏதோ பிரச்சனைன்னு உன் சிவா அத்தான் கல்யாணம் நின்னுடுச்சாம். கல்யாணமே நடக்கல; அப்புறம் எதுக்கு கல்யாணப் பரிசு? போய் நீ கொடுத்த மோதிரத்தை வாங்கிட்டு வா.” என்றதும், வானில் தோன்றி மறைந்த மின்னல் கீற்று தன்னை தீண்டியது போலவே உணர்ச்சியற்றுப்போனாள் ஷ்ரதா.
இளநீரை குடித்து முடித்துவிட்டாலும் சிவனேஸ்வரனுக்கு கிளம்ப மனமில்லை. வேடிக்கைப் பார்த்துக்கொண்டே நின்றிருந்தான்.
“ம்ம், போ ஷ்ரதா!” என்று வற்புறுத்தினான் வீசி.
“அது அவ்வளவு நாகரீகமா இருக்காதுங்க.” என்றவள் தன் துப்பட்டாவின் நுனியை சுற்ற,
“அந்த மோதிரத்துக்காக இப்போதைக்கு கல்யாணம் மட்டும் தான் நின்னிருக்கு ஷ்ரதா. இன்னும் மோதிரம் அவன் விரல்லயே கிடந்ததுன்னா மூச்சே நின்னுரும், பரவாயில்லையா?” என்றதும்,
வண்டி, கார், சாலை, சாரல் என எதையும் பார்க்காமல் விறுவிறுவென சென்று சிவனேஸ்வரன் விரலிலிருந்த மோதிரத்தை, “சாரி அத்தான்” என்றபடியே பலவந்தமாக கழற்றிக்கொண்டு வந்து காரில் ஏறி அமர்ந்தாள்.
அவள் நீட்டிய மோதிரத்தை வீசி பத்திரமாய் தனது பேண்ட் பாக்கெட்டிற்குள் போட்டுக்கொண்டான்.
வீட்டிற்கு வந்ததும் தலை துவட்டிக் கொண்டிருந்தவனிடம், “என்னடா? எங்கவெல்லாம் போனீங்க?” என்று அபிராமி கேட்க,
“ம்மா, வெளிய செம்ம மழை. இந்த சிட்யுவேஷனுக்கு ஒரு இஞ்சி டீ குடிச்சா ஜென்ம சாபல்யமா இருக்கும். போட்டு எடுத்துட்டு வாங்க” என்று அவரை திசை திருப்பினான் மைந்தன்.
அவனால் வேறு வழியில்லாமல் தன் மாமியாரிடம் சிரித்துப் பேசி மழுப்பிய ஷ்ரதா தன்னறைக்குச் செல்ல, “மியாவ்” என்றது பூனைக்குட்டி.
அச்சத்தத்தில் திரும்பிப் பார்த்த ஷ்ரதா, “ஹேய்! உன்னை நான் மறந்திட்டேன் இல்ல?” என்று விழிகளை பெரிதாக்கினாள்.
பூனைக்கு அவள் தன்னை விட சாது என்பது தெரியவில்லை. பாவம்! அவளைப் பார்த்து மிரண்டது. பின், மீண்டும் கூடைக்குள்ளேயே தலை சாய்த்தது.
“அய்யூ பட்டு” என்று அதை கைகளில் அள்ளிக் கொஞ்சியவள், பால்கனி கதவை திறந்து, அங்கு தொங்கிக் கொண்டிருந்த மூங்கில் கூடையில் போய் உட்கார்ந்தபடியே, “ஓய் பட்டு! நான் இல்லாதப்போ என்ன பண்ணின? தூங்குனியா? அத்தை பால் தந்தாங்களா?” என்று தன் தலையை ஆட்டி ஆட்டிக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
டீ கப்பில் வாய் வைத்தபடியே தன்னறைக்குள் நுழைந்த வீசி, திறந்திருந்த சாளரத்தின் வழியே இக்காட்சியைப் பார்த்தான். அப்போது அவன் முகம் கனிந்திருந்தது போல் தோன்றியது நமது பிரம்மையாகவும் இருக்கலாம்.
பூனையை கொஞ்சிக் கொண்டிருந்தவளையே கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவன் என்ன நினைத்தானோ கீழே சென்றுவிட்டான்.
அவன் இதுபோல் வந்து சென்றது எல்லாம் ஷ்ரதாவுக்கு தெரியாது. அவன் மேலே வராமலே இருந்தது அவளை அவன் புறக்கணிப்பதாகவே அவளை நம்ப வைத்தது. அதனால் அவன் இரவு உணவை முடித்துவிட்டு வந்ததும் கிடுக்குப் பிடி போட்டாள். அதாவது அவள் அவ்வாறு எண்ணிக்கொண்டாள்.
“அந்த வித்யா சொன்னது உண்மையா?” என்றாள் முதல் கேள்வியாக.
“என்ன சொன்னா?” -அவனுக்குப் புரியவில்லை.
“நீங்க அவளை ரெண்டாந்தாரமா கல்யாணம் பண்ணிக்கப் போறதா சொன்னா”
“ஓ”
“என்ன ஓ? அது உண்மையா இல்லையான்னு சொல்லுங்க?”
“நீ உண்மைன்னு நினைச்சா உண்மை. பொய்யின்னு நினைச்சா பொய்.”
“இப்படி சொல்லி நழுவலாம்னு பார்க்கறீங்களா? நீங்க ரெண்டாவது கல்யாணமெல்லாம் பண்ணிக்கிட்டா எங்கப்பா உங்களை சும்மா விட மாட்டாங்க.”
“என்ன செய்வாரு? அவரு ரெண்டு கொம்பை வச்சி என்னை முட்டிருவாரா?”
அடுத்து, “நீங்க…” என்று துவங்கியவளின் பேச்சு, விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டதும் நின்றுவிட்டது.
சிறிது நேரத்திலேயே உறக்கம் எனும் ஊசி அவளது இமைகள் இரண்டையும் தைக்க, அடித்துப் போட்டது போல் அசந்துத் தூங்கினாள். அவ்வேளையில் நீலாம்பரி இசைக்க வேண்டிய அவள் மூளைக்குள் படையப்பா நீலாம்பரி போல் வித்யா பிரசன்னமாகினாள்.
‘எனக்கு வீசி வேணும் ஷ்ரதா. பிடிச்சவனோட வாழாத வாழ்க்கை என்ன வாழ்க்கை?’ என்று சினிமா வசனம் பேசினாள்.
‘என் வாழ்க்கையையும் கொஞ்சம் யோசிச்சிப் பாரேன் வித்யா. ஒரு பொண்ணோட வாழ்க்கையை அழிச்சிட்டு நீ சந்தோசமா வாழ்ந்திட முடியும்னு நினைக்கிறியா?’ என்று தானும் கண்ணீர் மொழி பேசினாள் ஷ்ரதா.
‘என் மனசு சொல்றதை கேட்காம நடந்தா தான் என்னால சந்தோசமா வாழ முடியாது’ என்றவள் இருளில் மறைந்து போனாள்.
ஆனால், ஷ்ரதாவால் ஆசுவாசமடைய முடியவில்லை. ஏனெனில், மீண்டும் இன்கா நாகரீகம் போன்றதொரு மலைப்பிரதேசத்தில் ஷ்ரதாவின் மடியில் வீசி மயங்கிக் கிடக்க, எதிரில் சூனியக்காரி போல் உடையணிந்து நின்றிருந்தாள் வித்யா.
‘இவரை நான் உயிருக்கு உயிரா காதலிக்கிறேன் வித்யா. இவர் இல்லாம எனக்கு வாழ்க்கையே இல்லை’ என்று விசும்பியபடியே வீசியின் முகத்தை தன் மார்போடு அழுத்திப் பிடித்துக்கொண்டாள் ஷ்ரதா.
‘எனக்கு மட்டும்.’ என்ற வித்யா, ‘அடிமைகளே! இவர்களைப் பிரியுங்கள்!’ என்று உத்தரவிட்டாள்.
எங்கிருந்தோ பறந்து வந்த கோரப்பல் அரக்கிகள் இருவர், ஷ்ரதாவை வீசியிடமிருந்து பலாத்காரமாய் பிரித்திழுத்துப் போட்டனர்.
வித்யா வீசியை ஆசையோடு நெருங்கி, அவன் நெற்றியில் முத்தமிட்டுக் கொண்டிருந்த முடிகளை பொறாமையுடன் விலக்கி, மென்மையாய் ஆதூரமாய் முத்தமிட, பற்றிக்கொண்டு வந்தது ஷ்ரதாவிற்கு. பாய்ந்து அவர்களை பிரிக்கப்போனவளை ஈட்டிகளை எக்ஸ் வடிவில் போட்டு தடுத்து நிறுத்தினர் இரண்டு குட்டைப்பாவாடை அரக்கிகள்.
ஷ்ரதா அவர்களிடம் வலுவாய் போராடினாள். அவர்களை ஆக்ரோஷமாய் பிடித்துத் தள்ளினாள். ஆச்சர்யமாய் அரக்கிகள் இருவரும் எதிரெதிர் திசைகளில் போய் சுருண்டு விழுந்தனர். ஆனால், அதற்குள் தனது இறக்கைகளை சடசடவென விரித்து வீசியை காததூரமாய் தூக்கிச் சென்றுவிட்டாள் வித்யா.
‘வருண் அத்தான்’ என்று அந்தவிடத்திலேயே மடங்கி அழுத ஷ்ரதா உண்மையிலும் அழுதுகொண்டிருந்தாள்.
ரோமக் கால்களில் எல்லாம் வியர்வை கசகசக்க, சட்டென்று கண் விழித்துப் பார்த்தவளுக்கு அனைத்தும் கனவு என்று தெளிய வெகுநேரம் பிடித்தது. தெளிந்த நேரம் அவள் மனதில் திடீர் பாரம் வந்தும் உட்கார்ந்தது.
கண்முன் தெரிந்த இருள் உலகை அவளின் கெட்ட சொப்பணங்கள் எல்லாம் வண்ணமயமாக்கின. வீசியும், வித்யாவும் ஆலிங்கன நிலையில் இருப்பது போல் விதவிதமாய் காட்சி தோன்றி அவளை இம்சித்தது. கண்ணை மூடிக்கொண்டாலும் அதே கொடுமை. ஒரு நிலைக்கு மேல் அவளின் விழி விளிம்புகளிலிருந்து வெளிநடப்பு செய்ய ஆரம்பித்தன கண்ணீர் துளிகள்.
ஷ்ரதா மெத்தையில் அருகில் தடவிப் பார்த்தாள். நினைத்தவன் அகப்பட்டான். அவள் ஒரு கணம் கூட யோசிக்கவில்லை. புரண்டு அவனை கட்டிக்கொண்டாள். திம்மென்ற அவன் நெஞ்சில் முத்தமிட்டாள். பின், எக்கி அவன் நாடியில் முத்தமிட்டாள். தொடர்ந்து அவன் கழுத்தில் என ஊர்ந்த உதடு மீண்டும் அவன் நெஞ்சில் வந்தே அடைக்கலமாகியது.
அவள் அமைதியடைந்த கணம், தான் எதிர்வினையாற்ற துவங்கினான் வீசி. முதல் கட்டமாய் அவள் இடையில் கரங்களை கோர்த்து இறுக்கிக்கொண்டான். ஷ்ரதாவிற்கு சுகமான வலி அது. நீரில் நீந்தும் சாரை போல் மெதுவாக அவன் நெஞ்சிலிருந்து தன் தலையை மட்டும் தூக்கிப் பார்த்தாள். அவ்வளவு தான். திடீர் விபத்து. அவன் மேலே. அவள் கீழே. அழுத்தமாய் ஒரு முத்தச் சத்தம்.
அவன் முத்தமிட்டு நிமிர்ந்த இடைவெளியில் ஒரு தடய நிபுணரை ஆராய விட்டிருந்தால் நிச்சயம் அவன் உதட்டு ரேகையை அவளிதழில் கண்டுபிடித்திருப்பார். அந்தளவிற்கு ஒரு முத்த யுத்தத்தை நிகழ்த்தி முடித்திருந்தான் அவன்.
‘இந்த இருட்டுலயும் எப்படி கண்டுபிடிச்சாரு லிப்ஸ்ஸ?’ -தன்னைப் பற்றிய அவனது அனுமானங்கள் எல்லாம் சரியாகவே இருப்பதை எண்ணி மீண்டும் ஆச்சரியமடைந்தாள்.
சரியாக அவள் அதரத்திலிருந்து முத்த யாத்திரை புறப்பட்ட அவன் இதழ்கள் கீழே
இ
ற
ங்
கி
அவளுக்குள் பூகம்பத்தை உண்டாக்கின.
திடீரென உண்டான படபடப்பும், நாணமும் அவன் அத்துமீறல்களையெல்லாம் அவளைத் தடுக்கச் செய்தன.
அந்த பலவீனமான எதிர்ப்பை வீசி அனாயசமாக சமாளித்தான்.
பாம்பு, புற்றை சொந்தம் கொண்டாடும் போது பாவம் கரையான்கள் என்ன செய்யக்கூடும்!
பூவில் தேனீக்கள் நுகரும் திறனாலே மகரந்தங்களைத் தேடித் தேடித் திரிவது போல் அவனாலும் தனக்கு வேண்டியவற்றையெல்லாம் இருளில் நுகர்ந்து திரிந்தே கண்டுபிடிக்க முடிந்தது.
அவ்வப்போது கிளம்பிய காமப் பெருமூச்சுகள் அந்த இருளின் அமைதியை பதம் பார்த்துக்கொண்டே இருந்தன.
பதவிசாக சிணுங்கல்களின் முத்துக்களை உருட்டி விட்டபடி, அவனை உச்சத்திற்கு இழுத்துக்கொண்டே இருந்தாள் ஷ்ரதா. அவனும் அவள் உடல்மொழிக்கேற்ப இயங்கிக் கொண்டிருந்தான்.
அவள் கைகள் அவன் முதுகில் பரவிய சமயம் ஏகப்பட்ட தழும்புகளை நலம் விசாரித்தன. அதில் சில திடுக்கிடல்களும் அவளுள் தோன்றி மறைந்தன.
பதியும்படி முத்தமிட்டு, பற்களால் கோலமிட்டு, பற்றிப் பரவி என அவனின் சேட்டையால் அந்த இரவு புனிதமாகிக்கொண்டேப் போனது.
காலையில் கண் விழித்த இருவருக்குமே எல்லையற்ற வேறோர் உலகம் பயணித்த களைப்பு காணாமற்போயிருந்தது.
ஷ்ரதா கண்ணாடி பார்த்தே வெட்கப்பட்டுக் கொண்டிருந்தாள். தற்போது அவள் இருக்கும் உற்சாகத்தில் நாம் வித்யாவை நினைவு கூர்ந்தால் கூட, ‘வித்யாவா? யாரது?’ என்று கேட்கக்கூடும்.
எப்போதும் அவனுக்கு காஃபி கொண்டுபோகும்போது முகத்தை பேயறைந்தாற் போலவே வைத்திருப்பவள், இன்று இயல்புக்கு மாறாய் ரோஜாப்பூவாய் கன்னம் சிவந்திருந்தாள்.
ஐந்து நிமிடங்கள் வாயிலிலேயே நின்றிருந்தவள், “முருகா, தைரியம் கொடு!” என்று வேண்டிக்கொண்டே, மன்னிக்கவும்; மிரட்டிக்கொண்டே உள்ளேப்போனாள்.
அன்று போலவே இன்றும் ட்ரெட்மில்லில் ஓடிக்கொண்டிருந்தான் வீசி. அவன் பனியன் முழுவதும் வியர்த்திருந்தது. ஷ்ரதாவிற்கு அவன் முதுகைப் பார்த்ததுமே அந்தத் தழும்புகள் ஞாபகம் வந்தன. அதைப் பற்றி கேட்கலாமா? வேண்டாமா? என்று யோசித்தபடியே நின்றிருந்தாள்.
திடீரென ட்ரெட்மில்லை நிறுத்தி திரும்பியவன் அவளைப் பார்த்ததும், “எப்போ வந்த? வந்தா கூப்பிட மாட்டியா?” என்று கேட்டுக்கொண்டே காஃபி கோப்பையை வாங்கினான்.
அவள் அவனிடம் மெதுவாக, “உங்க முதுகுல எப்படிங்க இவ்வளவு தழும்பு வந்தது?” என்றாள்.
காஃபியை ஒரு மிடறு அருந்தியிருந்தவன், பட்டென்று குடித்துக் கொண்டிருந்த காஃபியை அவள் முகத்தை நோக்கி வீசினான்.
அது அவள் முகத்தை சமீபிப்பதற்கு முன்னமே ஷ்ரதா தன் தலையை சாய்த்து விட, விக்ரம் லேண்டர் போல் மைக்ரோ செகண்டில் குறிக்கோள் தவறியது காஃபி. உண்மையில் இந்த திடீர் தாக்குதலில் விதிர்த்துப்போனாள் ஷ்ரதா.
காஃபி அபிஷேகத்திலிருந்து தப்பித்து மீண்டவள் வீசியை பார்த்தபோது அவன் கண்கள் வெம்மை பூத்து மின்காந்தக்கதிர்களை பாய்ச்சிக் கொண்டிருந்தன.
அதில் அவள் கால்களிரண்டும் செயலிழந்து நடுங்க, “காஃபி ஏன் ஆறிப் போயிருக்கு? சூடா கொண்டுவரத் தெரியாது. போ! சூடா இன்னொரு காஃபி போட்டு எடுத்துட்டு வா!” என்று திரும்பி நின்றான் ஆத்திரக்காரன்.
அவள் உள்ளம் சொல்லவொண்ணா வேதனையில் பரிதவித்தது. அவன் காஃபியை ஊற்றியது கூட அவளுக்குப் பெரிதாகத் தெரியவில்லை. அவனின் இந்த திடீர் திடீர் ஆவேசத்திற்கு தான் காரணம் தெரியாமல் தலையே வெடித்துவிடும் போல் இருந்தது.
காதல் கணம் கூடும்….
