அத்தியாயம்- 10
அதிகாலை ஐந்து மணி பத்து நிமிடங்கள், அந்த பூங்காவின் நுழைவாயிலில் தன் இருச் சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு தன்னுடன் வந்த தோழியுடன் கீழே இறங்கி தன் ஆடையையும் தலை முடியையும் சரி செய்தாள் மெல்லிசை.
அவள் அருகில் இறங்கிய மெல்லிசையின் தோழி பவித்ரா “இன்னிக்கும் நம்ம சீக்கிரமா வந்துட்டோம்ல” என்று உற்சாகத்துடன் கேட்டுக் கொண்டே அங்கே மின் விளக்கு உதவியுடன் வெளிச்சமாக இருந்த பூங்காவை பார்த்தாள்.
மெல்லிசையோ தன் தோள் பட்டை சைடில் மாட்டி இருந்த கைப்பையில் வண்டி சாவியை வைத்தவள் “ம்… சீக்கிரம் வந்து என்ன பிரயோஜனம் அங்க பாரு அந்த அங்கிளும் சீக்கிரம் வந்து அங்க இருக்கிற எக்யூப்மெண்ட்ஸ்ல உடற்பயிற்சி பண்ணிட்டு இருக்காரு” என்று சொன்னதை கேட்டு அதிர்ச்சியாகி வெளியே இருந்தபடியே எட்டி பார்த்தாள் பவித்ரா.
“ஆத்தாடி” என்று நெஞ்சில் கையை வைத்து “ஏன்டி இசை இந்த ஆளு நைட்டெல்லாம் தூங்குவானா மாட்டானா?” என்று பேசிய தன்னை மெல்லிசை முறைத்து பார்ப்பதை பார்த்தவள் “சரி சரி முறைக்காத” என்று தலையை ஆட்டி அவளுடன் உள்ளே நடந்தபடி “அவரு தூங்குவாரா மாட்டாரா?” என்று தன் வார்த்தையை திருத்திக் கொண்டாள் பவித்ரா.
மெல்லிசையோ மெல்லிதாக சிரித்து விட்டு பவித்ராவின் கரத்திலிருந்த தன் கைப்பேசியை வாங்கியவள் அதில் தொடுதிரையை உயிர்ப்பித்து அதிலிருந்த நிகழ்படத்தை திறந்து நடந்துக் கொண்டிருந்த தன் மென்பாதங்களை காணொளியை எடுத்துக் கொண்டு அப்படியே தன்னை தானே சுற்றிக் கொண்டு விடிந்தும் விடியாமல் இருந்த வானத்தை படம் பிடித்துக் கொண்டாள்.
அதை பார்த்த பவித்ரா “டெயிலி இப்படி வீடியோ எடுத்து வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்ல டே ஒன் டே டூ னு வைக்கிற எவன் கண்ணாவது பட்டுச்சினா என்னடி பண்ணுவ?” என்று கேட்டபடி உடற்பயிற்சி செய்யும் இடத்திற்கு வந்து நின்றார்கள் தோழிகள் இருவரும்.
கேள்வி கேட்ட தன் தோழியை பார்த்துக் கொண்டே கைப்பேசியை மீண்டும் கைப்பையில் திணித்தவள் அங்கே முதலாக இருந்த தோள்பட்டை சுழலை (SHOULDER TWIRL) பிடித்து இருவரும் சுழற்ற ஆரம்பித்தபடி,
மெல்லிசை “யாரு கண்ணு பட போகுது? ஏன்டி நம்ம டெயிலி வாக்கிங் வரதுனால யாருக்கு என்ன பொறாமை வந்திட போகுதாம். எப்போ பாரு பழைய பஞ்சாங்கத்தையே பேசிட்டு இருக்காத. யாரு கண்ணாவது பட்டுட போகுது அதனால ஏதாவது ஆகிட போகுதுனு நினைக்கிறதையும் சொல்றதையும் நிறுத்து. டெயிலி எழுந்து வாக்கிங் வரது நம்ம கையில தான் இருக்கு. ஒரு நாள் சோம்பேறி தனமா இருந்துட்டா அது அப்படியே சோம்பேறி தனமாவே அடுத்து அடுத்து வரும் நாளிலும் இருந்திடும்” என்று சொல்லிக் கொண்டு இருந்த மெல்லிசையை தடுத்து,
“அந்த சோம்பேறி தனத்தை கொடுக்கிறது கூட மத்தவங்க கண் வைக்கிறதுல தான்டி” என்று பேசிய தோழியை முறைத்து பார்த்தவள் அடுத்த உடற்பயிற்சி செய்ய போனாள்.
அவளை பின் தொடர்ந்த பவித்ரா “என்னடி பதில் சொல்லாம போற?” என்று கேட்ட பவித்ரா
வான்வழி இழுபெட்டியில் (AERIAL STROLLER) ஏறி நின்று அதை இயக்கியபடி முறைத்து பார்த்த மெல்லிசை “என்ன பதில் சொல்லணும்? உன்னோட மூட நம்பிக்கையை என்னோட தலையில திணிக்க பார்க்காத பவி” என்றவள் சிறிது நிமிடம் தன் கால்கள் இரண்டையும் இயக்கி விட்டு வான்வழி இழுபெட்டியிலிருந்து கீழே இறங்கி இடுப்பு முறுக்கு (HIP TWISTER) ஏறி சுழன்றாள்.
மெல்லிசை இறங்கியதும் பவித்ரா அமைதியாக வான் இழுபெட்டியில் ஏறி உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்க, இடுப்பு முறுக்கில் ஏறி சுழன்றுக் கொண்டு இருந்த மெல்லிசை தோழியின் முகத்தை பார்த்தாள்.
அவளின் முகம் சட்டென்று சோகத்தை தத்தெடுத்துக் கொண்டு இருப்பதை பார்த்து சலிப்பாக தலையை ஆட்டிக் கொண்டவள் அதிலிருந்து இறங்கி அடுத்து சைக்கிள் fitness (cycle) அதை தொடர்ந்து கால் அழுத்தும் இயந்திரம் (Leg Press machine) என இப்படி அங்கே இருக்கும் பல உபகரணங்கள் அனைத்தும் பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.
அங்கே வெளிப்புற உடற்பயிற்சி பூங்காக்களில் பயன்படுத்தப்படும் சாதனங்களை தங்கள் உடலமைப்பை மேன்படுத்திக் கொள்ள இவர்கள் இருவர் போல் பல பேர் அங்கே இருக்கும் உபகரணங்களை பயன்படுத்திக் கொண்டவர்கள் அந்த பெரிய வட்டமான பூங்காவை சுற்றி வேகமாக நடைபயிற்சி செய்ய ஆரம்பித்தனர் அதில் இந்த தோழிகள் இருவரும் இருந்தனர்.
மெல்லிசையோ தன் கைப்பேசியில் இனிமையான காலை பொழுது இசைகளை ஓட விட, அதை இரு தோழிகளும் காதில் வாங்கியபடி ஒன்றாக நடக்க ஆரம்பித்தனர்.
அப்பொழுது வேகமாக நடந்து வந்த ஒரு எழுபது வயது வாலிபன், என்னது எழுபது வயது வாலிபனா? என்று யோசிப்பது சரி தான். ஆம் எழுபது வயது தான். ஆனால் பார்க்க எழுபது வயது போலவே இருக்க மாட்டார். சிறு வயதில் அவருக்கு இருந்த கம்பீரம் இன்னும் குறையால் உடலை அத்தனை கச்சிதமாக வைத்துக் கொண்டு அதிகாலையில் படு உற்சாகமாக அத்தனை வேகமாக நடப்பார். அவருடன் போட்டி போட்டு இப்பொழுது இருக்கும் இளசுகளால் கூட நடக்க முடியாது. அதில் நம்ம தோழிமார்கள் இருவருமே அடங்குவார்கள்.
ஒரு வசனம் இருக்கே, ‘வயசானாலும் உன் அழகும் கம்பீரமும் உன்னை விட்டு போகல…’ அப்படிப்பட்ட வசனத்துக்கு சொந்தக்காரர் தான் இவர்.
மெல்லிசையே அவரை பார்த்து வியந்தது உண்டு.
“என்னம்மா பேத்திங்களா இன்னிக்கு சீக்கிரம் வந்துட்டீங்க போல” என்று கேட்டுக் கொண்டே அவர்களை தாண்டி அவர் நடை வேகம் பிடிக்க, மெல்லிசையோ,
“ஆமா தாத்தா” என்று அவள் சொல்லி முடிக்கும் முன் அவர்களை விட்டு பத்து அடி தள்ளிச் சென்று இருந்தார்.
அதை பார்த்த பவித்ராவோ “இதுக்கு அவர் நம்ம கிட்ட கேள்வி கேட்காமலே இருந்து இருக்கலாம்டி. இந்த வயசுலையும் என்ன வேகம் ஆத்தாடி. என்னைக்காவது ஒரு நாள் இல்ல ஒரு நாள் இவருக்கு போட்டியா நம்ம நடந்து காட்டணும்டி” என்று பேசிய தோழியை திரும்பி பார்த்த மெல்லிசை,
“இதுல ஏன் என்னை சேர்க்கிற? என்னால எல்லாம் இவர் கூட போட்டி போட முடியாது பவி” என்று பேசிக் கொண்டு இருந்தவர்களை தாண்டிச் சென்ற இன்னொரு தாத்தா,
“குட் மார்னிங் யங் லேடிஸ்” என்று சிரித்த முகத்தோடு சொன்னார்.
அவரை பார்த்ததும் தோழிகள் இருவரும் தங்கள் பேச்சுகளை விட்டு “குட் மார்னிங் தாத்தா” என்று அவருக்கு பதில் காலை வணக்கம் அளித்தனர்.
அவரோ அவர்களை விட்டு இரண்டு அடி தள்ளிச் சென்று, “என்னம்மா இன்னைக்கும் அந்த கிழவன் முன்னாடி ஓடிட்டானா?” என்று கேட்டார்.
தோழிகள் ஒன்றாக ஆம் என்று பாவமாக தலையை ஆட்ட, “என்னைக்காவது அந்த கிழவனை தாண்டி போகணும்னு நினைக்கிறேன் முடிய மாட்டிக்கிது” என்று சொல்லிக் கொண்டே அவரும் வேகமாக நடக்க, தோழிகள் இருவருமே சிரித்து விட்டனர்.
அந்த சிரிப்பை கேட்டபடி வந்த ஒரு போலீஸ் அதிகாரி “என்னம்மா காலையில ஒரே சிரிப்பா இருக்கு?” என்று கேட்டார்.
அவரை பார்த்ததும் தோழிகளுக்கு சிரிப்பு மறைந்து மரியாதை தானாக வந்து ஒட்டிக் கொண்டு “அதெல்லாம் ஒன்னும் இல்ல சார். சும்மா தான் பேசிட்டே அப்படி” என்று நடப்பதாக சைகை காட்டினர்.
அதை கேட்டு அவரும் “சரி சரி” என்று அவர்களை தாண்டிச் செல்ல, பவித்ர பெருமூச்சு விட்டாள்.
“இப்படி நமக்கு பின்னாடி வரவங்கலாம் நம்மள தாண்டி போனா எப்படிடி. நம்மளும் தான் நடக்கறோம். ஆனா இன்னும் இரண்டு ரவுண்ட் கூட முடியல” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே,
“அதெப்படி முடியும் என்னை போல வேகமாக நடந்தா தானே முடியும்” என்று சொல்லிக் கொண்டே அந்த எழுபது வயது வாலிபன் அவர்களை தாண்டி அடுத்த ரவுண்ட் நடக்க ஆரம்பித்தார்.
தோழிகளோ ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு வேகமாக நடக்க ஆரம்பிக்க, இவர்களை தாண்டிச் சென்ற சிலர் காலை வணக்கம் கூறி விட்டுச் செல்ல, தோழிகளும் அவர்களுக்கு பதில் சொல்லிக் கொண்டே வேகமாக போட்டி போட்டபடி நடக்க ஆரம்பித்து இருந்தனர்.
அரை மணி நேரம் நடைபயிற்சிக்கு பிறகு ஓய்ந்து போய் அமர்ந்து விட்டனர் இரண்டு பேரும்.
காலை நீட்டி கீழே அமர்ந்து இருந்த பவித்ரா “அய்யோ என்னால இதுக்கு மேல முடியலடி மெல்லிசை… என்னை எப்படியாவது உருட்டிக்கிட்டே அழைச்சி போயிடுடி” என்று மூச்சு வாங்க சொன்னாள்.
மெல்லிசையும் மூச்சை நன்றாக விட்டபடி “என்னையே யாராவது தூக்கிட்டு தான் போகணும். இதுல உன்னை வேற உருட்டி விடுறேன் இரு” என்று தோழிகள் இருவரும் நல்லா காலை நீட்டி அமர்ந்து காலை ஆட்டிக் கொண்டு இருந்தனர். இத்தனைக்கும் அம்மணிகள் இருவரும் நடந்தது என்னவோ மூன்று ரவுண்டு தான் என்பது குறிப்பிடத் தக்கது.
அப்பொழுது அவர்கள் இடத்தில் அருகில் இருந்த கல் பெஞ்சில் தன் அஞ்சாவது ரவுண்டை நடந்து விட்டு வந்து அமர்ந்த அந்த வயதான வாலிபனை பார்த்து தோழிகள் இருவருமே மரியாதை நிமித்தம் தன் காலை மடக்கிக் கொண்டனர்.
“என்னம்மா பேத்தி இப்படி நடந்தா அப்புறம் எப்படி என் கூட போட்டி போடுறதாம்?” என்று கேட்டார் தாத்தா.
அவரை நிமிர்ந்து பார்த்த மெல்லிசை, “தாத்தா நான் எப்போ போட்டி போடுறேன்னு சொன்னேன். என்னால எல்லாம் இந்த ஜென்மத்துல உன் கூட போட்டி போட்டு ஜெயிக்க முடியாது” என்று உரிமையாகவே பேசினாள்.
அதை கேட்ட பவித்ராவும் ஆமோதிப்பது போல் மேலும் கீழும் தலையை ஆட்ட, தன் பின்னங்கழுத்தில் வழிந்த வியர்வையை சிறிய துண்டால் துடைத்துக் கொண்டு “என்னங்கம்மா இப்படி சொல்லிட்டீங்க. நீங்க இரண்டு பேரும் என் கூட போட்டி போடுவீங்கனு நினைச்சேன். இப்போ என்னடானா முடியாதுனு சொல்றீங்க. இதெல்லாம் அநியாயம் பார்த்துக்கோ மெல்லிசை” என்று சிறு பிள்ளை போல் கோபித்துக் கொண்டார்.
அதை பார்த்த மெல்லிசையோ அவர் அருகில் சென்று “ஏன் தாத்தா இதெல்லாம் உனக்கே ஓவரா தெரியல. நீ நடக்குற ஸ்பீடு என்ன? நாங்க உருண்டு வர ஸ்பீடு எங்கே? இரண்டுத்துக்கும் லிஃப்ட் வச்சா கூட எங்களால ஜெயிக்க முடியாதுப்பா” என்று பயந்தவள் போல் பேசிக் கொண்டு இருந்த தருணம், இவர்களை தாண்டிச் சென்ற இன்னொரு தாத்தாவும் அந்த போலீஸ் அதிகாரியும் தங்கள் உடற்பயிற்சியை முடித்து விட்டு அங்கே வர, மரியாதை நிமித்தம் எழுந்து அவர்களுக்கு அமர இடம் கொடுத்தாள் மெல்லிசை.
அதை பார்த்த மற்றொரு தாத்தாவோ “ஏன்ம்மா எழுந்துக்கிற நீ உக்காரு. அப்புறம் இந்த படவா ராஸ்கல் என்னைய திட்டுவான். என் பேத்தியை ஏன்டா நிக்க வச்சேனு” என்று சிரித்தபடி சொன்னவர் மெல்லிசை இடம் கொடுத்த இடத்தில் அமர்ந்தார்.
அவரை தொடர்ந்து மறுபக்கம் அமர்ந்த போலீஸ் அதிகாரியோ “சரியா சொன்னீங்க சார். ஒரு நாள் ஒரே ஒரு நாள் ஒரு சின்ன துண்டு கேக்கை கொடுத்ததுக்கு இந்த பொண்ணை தன்னோட தத்து எடுக்காத பேத்தி போலவே பிஹேவ் பண்ணிட்டு இருக்காரு இவரு” என்று குறைப்பட்டுக் கொண்டு சொல்ல,
இதை கேட்ட எழுபது வயது வாலிபனோ “உங்களுக்கு எல்லாம் பொறாமை டா. கேக் உங்களுக்கு தரலனு” என்று சொன்னவர் மெல்லிசையை பார்த்து சிரித்தபடி “நீ சொல்லும்மா… நீ என் பேத்தி தானே?” என்று பாசமாக கேட்டார்.
அவளும் அன்புடன் ஆம் என்று தலையை ஆட்டியவள் போனில் நேரத்தை பார்த்தாள்.
அதுவோ ஏழு என்று காட்ட, மெலிதாக ஓடிக் கொண்டு இருந்த பாட்டை நிறுத்தி விட்டு வண்டி சாவியை கையில் எடுத்தவள் “சரி தாத்தா” என ஆரம்பிக்க,
“சரி தாத்தா நேரமாச்சு வேலைக்கு போகணும் அது தானே?” என்று கேட்டார்.
அவளும் புன்னகையுடன் ஆம் என்று தலையை ஆட்ட, மூவருமே சிரித்துக் கொண்டு வழி அனுப்பினர்.
பவித்ராவும் எழுந்து அவர்களுக்கு கை ஆட்டி விடைக் கொடுத்தாள்.
சாலையில் கவனத்தை வைத்தபடி வண்டியை செலுத்திக் கொண்டு இருந்த மெல்லிசையிடம்,
“ஏன்டி உனக்கு தான் இன்னும் வேலையே கிடைக்காம வேலை தேடி சுத்திக்கிட்டு இருக்கியே இதை அந்த பெரிய மனுஷன் கிட்ட சொல்லி இருக்கலாம்ல. எதுக்கு பொய் சொல்லிட்டு இருக்க?” என்று சந்தேகமாக கேட்டாள்.
மெல்லிசையோ கவனமாக வண்டியை ஓட்டிக் கொண்டே “பொய்யெல்லாம் சொல்லல பவி. உண்மையை சொல்ல விருப்பம் இல்ல அதான். அதுக்கு நான் பொய் சொல்றேன்னு அர்த்தமா? யாருனே தெரியாத நம்ம கிட்ட ஒரு உரிமையோடு நல்ல விதமா பழகுறாங்க. அதை ஏன் கெடுத்துக்கிட்டு” என்றவள் கவனம் சாலையில் இருந்தாலும் நினைவுகள் பழைய நினைவிற்குச் சென்றது.
