அந்த நேரம் பார்த்து தியாவின் மொபைல் சிணுங்க, தன்னை ஆசுவாசப்படுத்தியவள் மொபைலை எடுத்துப் பார்க்க, திரையில் மான்சி காலிங் என்ற பெயர் தெரிந்தது. கோபத்தில் மொபைலை தூக்கி எறிய போனவள், பின்பு தன் மனதை மாற்றிக்கொண்டு கடைசி ரிங்கில் அட்டென்ட் செய்து எதுவும் பேசாமல் அமைதியாய் இருக்க,
எதிர்முனையில் மான்சி, “ஹாய் தியா டார்லிங், எப்படி இருக்க? பார்த்து ரொம்ப நாளாச்சு, மும்பை வந்திருக்க, ஆனா என்னைப் பார்க்க வரவே இல்லை?”
“நாளைக்கு மீட் பண்ணலாம்னு இருந்தேன்.” என்று தியா தாழ்ந்த குரலில் கூற,
“இட்ஸ் ஓகே டியர், உனக்கு ஒரு குட் நியூஸ். எனக்கு மானவ் கூட மேரேஜ் ஃபிக்ஸ் ஆகிருக்கு. நான் நாளைக்கு உன் வீட்டுக்கு உன்னை இன்வைட் பண்ண வருவேன் நீ எப்போ ஃப்ரீனு சொல்லு.”
“ம்ம்…”
“என்ன ம்ம்னு சொல்ற, நான் குட் நியூஸ் சொல்லிருக்கேன் எனக்கு விஷ் பண்ணவே இல்லை?”
“ஆல் தி பெஸ்ட்!” வேண்டா வெறுப்பாக வெளி வந்தது வார்த்தைகள்.
“நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன், உனக்கில்லையா?” என்ற மான்சியிடம் தன் பொறுமையை இழந்த தியா,
“கல்யாணம் உனக்குத் தானே?”
“ஆமா”
“மாப்பிள்ளை யாரு?”
“மானவ்டி”
“ரொம்பப் புடிக்குமோ?”
“என்ன இப்படிக் கேட்டுட்ட, என் லவ்வ அவன்கிட்ட சொல்லி என்னையும் அவனையும் சேர்த்து வச்சதே நீ தானே?”
“அப்போ நீ சந்தோஷப்படுறதில அர்த்தம் இருக்கு, ஆனா நான் ஏன் சந்தோஷப்படணும்?”
“தியா என்னாச்சு உனக்கு, எதுவும் பிரச்சனையா?” என்றவள் சில நொடிகள் கழித்து மேலும் தொடர்ந்து, “ஆஷிக் விஷயம் என்னாச்சு? நீ உன் மனசுல உள்ளதை அவன்கிட்ட சொல்லிட்டியா?”
“சொன்னா மட்டும் என்ன ஆகப் போகுது?”
“என்னடி இப்படிச் சொல்ற? உனக்காகத் தானே நாம ஜியாவை ஆஷிக்கிட்ட இருந்து பிரிச்சோம்.”
“பிரிச்சு…”
“தியா இப்படி ஏட்டிக்குப் போட்டியா பேசாத, நீ ஆஷிக்கிட்ட பேசுனியா இல்லையா?”
“ஜியா மறுபடியும் வந்துட்டா.” என்று ஆரம்பித்தவள், ஜியா மறுபடியும் வந்ததில் ஆரம்பித்து இன்று நடந்த அனைத்தையும் பற்றிக் கூற, அதிர்ச்சியான மான்சி, தியாவை சமாதானம் செய்யும் நோக்குடன்,
“ஆனா ஆஷிக், ஜியாவ நம்பலைல? உன்னைத்தானே நம்பிருக்கான்.”
“நம்பி என்ன பண்ண? அவன் அந்த ஜியாவ தானே கொஞ்சிட்டு இருக்கான். என்னை நம்புறான் அவ்வளவுதான், அவன் தெளிவா சொல்லிட்டான். அவனோட மனசுல ஜியாவ தவிர வேற எந்தப் பொண்ணுக்கும் இடம் இல்லையாம். ஜியா தன்னை வேண்டாம்னு சொன்னாலும் ஜியாவை நினைச்சுகிட்டே வாழ்ந்திருவானாம் அந்த இடியட்!
அவ இல்லாத இந்த ஆறு வருஷத்துல அவளை அப்படித் திட்டினான்டி. ஆனா அவளைப் பார்த்த மறு நிமிஷம் ஹட்ச் டாக் மாதிரி பின்னாடியே போறான். ஆதர்ஷ், ஜியாவும் ஆஷிக்கும் பிரியவே மாட்டாங்கனு சொன்னது இன்னும் என் காதுல கேட்டுகிட்டே இருக்கு. எனக்கு இப்போ வர்ற கோபத்துக்கு அப்படியே அந்த ஜியாவை கொன்னு போடலாம் போல இருக்கு. கஷ்டப்பட்டு ஜியாவையும் ஆஷிக்கையும் பிரிச்சேன், அது எல்லாம் இன்னைக்கு வேஸ்ட்டா போச்சு.”
என்று தன் தோழியிடம் தியா தன் மனதில் உள்ள பாரத்தைக் கொட்டி தீர்த்தாள்
“நீ எதுக்கும் வருத்தப்படாத தியா, நாம எதாவது யோசிக்கலாம்.”
“எனக்கு ரொம்ப டென்ஷனா இருக்கு, நான் அப்புறம் பேசுறேன் மான்சி.” என்று கூறிவிட்டு தன் ஃபோனை துண்டித்தவள்,
மொபைலில் சார்ஜ் இல்லாததைப் பார்த்து, சார்ஜ் போடுவதற்காக ஸ்விட்ச் போர்ட் அருகில் சென்று மொபைலுக்கு சார்ஜ் போட்டுக் கொண்டிருக்கும் நேரம், தன் கதவின் அருகில் யாரோ நிற்பது போல் தெரிந்து யார் என்று பார்க்க, அங்கே ஆஷிக் தன் கண்கள் ஈரமாக, தன் அதரங்கள் துடிக்க, கைகளில் நரம்பு புடைக்க அதிர்ச்சியில் நின்று கொண்டிருந்தான்.
அவனைக் கண்டதும் செய்வதறியாது தன் கையில் இருந்த மொபைலை பதற்றத்தில் கீழே போட்டவாறு அவனையே பார்க்க, அவனது வதைந்து போன வதனமே அவன் தான் பேசியதை கேட்டுவிட்டான் என்பதை மிகத் தெளிவாகப் பிரதிபலித்தது.
தியாவின் முகத்தில் பயமும் பதற்றமும் குடிகொள்ள தன்னை ஆசுவாசப்படுத்தியவள், வழக்கம் போல ஆஷிக்கின் அருகில் வந்து ஒருவித குருட்டு நம்பிக்கையில்,
“வா ஆஷிக், என்ன அங்கையே…” என்று தட்டு தடுமாறி பாதி வார்த்தைகளை விழுங்கியவாறு தொடர்வதற்குள், அவளை விட்டு ரெண்டடி பின்னால் சென்றவன் தன் கையை உயர்த்தி வேண்டாம் என்பது போலக் காட்டி கலங்கிய கண்களுடன்,
“உன்கிட்ட இதை நான் எதிர்பார்க்கலை.” என்று கூறியவன் அங்கிருந்து வேகமாகச் செல்ல,
அவனது கரம் பிடித்துத் தடுத்த தியா, “ஆஷிக் நீ எதோ தப்பா நினைச்சுட்டு இருக்க…” என்று சொல்ல,
“நான் எல்லாத்தையும் கேட்டுட்டேன் தியா.” என்று ஆவேசமாக உறுமினான்.
முதன் முதலில் ஆஷிக்கின் அதீத கோபத்தைப் பார்த்தவளின் கண்களில் கண்ணீர் தானாகக் குடிகொள்ள, “ஆஷிக் நான் சொல்றத புரிஞ்சிக்கோ.” என்றாள் நடுங்கும் குரலில்.
“இன்னும் என்ன புரிணும், உயிருக்கு உயிரா நேசிக்கிறவள விட்டுட்டு உன்னைச் சமாதானம் பண்ண வந்தேன். நம்புனனே? ஏன் எனக்கு இப்படி ஒரு துரோகத்தைப் பண்ணின? அப்போ நீ என்னை உன் நண்பனாவே நினைக்கல? உன்னை என் குடும்பத்துல ஒருத்தியா தானே பார்த்தேன்.” தளர்ந்த குரலில் கேட்டான்.
“ஜியா உனக்குச் சரி இல்லை, அவ உன்னை லவ் பண்ணல.”
“ஷட் அப்!” என்று வெகுண்டெழுந்த எரிச்சலோடு கத்தியவன் அவளிடம் கண்கள் சிவக்க,
“இனிமே நீ ஜியாவ பத்தி ஒரு வார்த்தை பேசுனா கூட என்னால அதை ஏத்துக்க முடியாது. அந்தத் தகுதிய நீ என்னைக்கோ இழந்துட்ட. அப்போ அன்னைக்கு காலையில ஜியா என்னைத் தேடி வந்தது உண்மை. வேணும்னே ஜியா எனக்குக் குடுத்த ஷர்ட்ல ஜூசை கொட்டிருக்க. நான் எவ்வளவு பெரிய முட்டாள்ல? உன்னைப் போய் நம்பிருக்கேன்?”
“ஆஷிக் ஆனா இது எதையுமே நான் பிளான் பண்ணி எல்லாம் பண்ணல.”
“கிடைச்ச சந்தர்ப்பத்தை யூஸ் பண்ணிருக்க, சரியா சொன்னேனா?” என்றவனுக்குப் பதில் கூறமுடியாமல் அமைதியாக நின்றவளிடம்,
“ரெண்டுக்கும் ரொம்பப் பெரிய வித்யாசம் இல்லை தியா. எனக்கு ஒரு விஷயம் புரியல, நான் ஜியாவை உயிருக்கு உயிரா நேசிக்கிறது தெரிஞ்சும் எப்படி உன்னால அப்படிப் பண்ண முடிஞ்சிது?”
“ஆஷிக் நான் இதெல்லாம் உனக்காகப் பண்ணினேன், நமக்காகப் பண்ணினேன். நான் உன்னை அந்த அளவுக்குக் காதலிக்கிறேன்.”
“எனக்காக, மை புட்…” என்று முகம் சுளிக்கவும் அவளுக்குப் பளார் என்று அறைந்தது போல் இருந்தது.
“நீ நிஜமாவே என்னை உண்மையா நேசிச்சுருந்தனா கண்டிப்பா இப்படி ஒரு காரியத்தைப் பண்ணிருக்க மாட்ட. ஏன்னா காதல் என்னைக்கும் கெடுதல் நினைக்காது, காதல் துரோகம் பண்ண சொல்லாது, பொய் சொல்ல சொல்லாது. நாம நேசிக்கிறவங்க நம்மள நேசிக்காட்டாலும் அவங்களைக் கஷ்டப்படுத்த வைக்காது. நீ உண்மையாவே நேசிச்சுருந்தனா என் சந்தோஷத்தை உன் சந்தோஷமா நினைச்சுருப்ப.”
“ஆஷிக் நான்…”
“நீ என்னை எப்படி நினைச்சனு எனக்குத் தெரியாது. ஆனா நான் உன்னை என் உயிர் தோழியாதான் நினைச்சேன். உங்கிட்ட இருந்து இப்படி ஒரு விஷயத்தை நான் எதிர்பார்க்கலை. நீ என் நம்பிக்கைய மட்டும் உடைக்கலை, என்னையும் சேர்த்து உடைச்சுட்ட.”
“ஆஷிக் எனக்கு ஒரு வாய்ப்பு குடு…”
“ச்சீ… எந்த முகத்தை வச்சுட்டு என் பேரை சொல்ற? அப்படி மறுபடியும் கூப்பிடாத அறுவெறுப்பா இருக்கு. எப்படி உன்னால என்னை உன்கூட சேர்த்து வச்சு பார்க்க முடிஞ்சிது? ச்சீ… எரிச்சலா இருக்கு. இனிமே நாம ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் பார்க்காம இருக்கிறதுதான் உனக்கும் நல்லது, எனக்கும் நல்லது.” என்று வார்த்தைகளை அமிலம் போலக் கொட்டியவன், திரும்பி கூடப் பார்க்காமல் அங்கிருந்து வேகமாய் கிளம்பி புயல் வேகத்தில் தன் காரை செலுத்தினான்.
தியா மட்டும் ஆஷிக், ஜியாவின் உண்மையான காதலைப் புரிந்து கொண்டிருந்தால், இன்று ஒரு நல்ல நண்பனை அவள் இழந்திருக்க மாட்டாள்.
தியா இன்று தன் நண்பனையும் இழந்து, தன் காதலையும் இழந்து தனியாய் இருப்பதற்குக் காரணம் ‘நான்’ என்றே செருக்கே. அவள் உண்மையாக ஆஷிக்கைக் காதலித்திருந்தால் கண்டிப்பா அவள் ஆஷிக்கின் காதலை மதித்திருப்பாள். தியாவுக்கு ஆஷிக் மீதுள்ள அன்பை விட ஜியா மீதுள்ள வெறுப்புதான் அதிகமாக இருந்தது.
அவனது நட்புக்கும் அவள் உண்மையாக இல்லை, அவன் காதலுக்கும் அவள் தகுதியாக இல்லை. இதை இனிமேல் அவள் உணர்ந்தாலும் பழைய நட்பு அவளுக்கு மீண்டும் கிடைக்குமா? காலம்தான் அதற்கு பதில் சொல்ல வேண்டும்!
காரில் வரும் வழியெல்லாம் ஆஷிக்கிற்குத் தியாவின் ஞாபகம்தான் வந்தது. தான், ஆதர்ஷ், தியா மூவரும் சிறுவயதில் முதன் முதலில் சந்தித்தது என்று, தங்களின் சிறுவயது முதலான பள்ளி பருவத்தை நினைத்தவனின் கண்களில் இருந்து, விழிநீர் அமிலம் போலக் கசிந்து அவனது இதயத்தைப் பொசுக்கியது.
தான் பள்ளியில் சேர்ந்த முதல் நாளில் இருந்தே தியா தன் தோழி என்பதால், அவனால் தியாவின் செய்கையை எளிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. தனது எல்லாச் சுக துக்கத்திலும் ஆதர்ஷும் தியாவும் இருந்திருப்பதால், அவர்கள் என்றால் ஆஷிக்குக்கு மிகவும் பிடிக்கும்.
இன்று தியா செய்த காரியம் ஆஷிக்கின் உள்ளத்தை மிகவும் ரணப்படுத்திவிட்டது. தியா இல்லாததைத் தன் கண்களில் ஒன்றை இழந்தது போல உணர்ந்தான். இந்த உலகமே அவனுக்கு இருளாய் தெரிந்தது.
தந்தையைத் தொடங்கி இப்பொழுது தோழியும் தன்னை ஏமாற்றிவிட்டாளே, தன் மனதை காயப்படுத்திவிட்டாளே என்று மிகவும் வருந்தினான்.
சிறு வயது ஞாபகங்கள் அவன் முன் மின்னலைப் போல வந்து மறைய மிகவும் கவலையுற்றான். எது கிடைத்தாலும் மூவரும் சேர்ந்தே உண்பது, எங்குப் போனாலும் சேர்ந்தே செல்வது, எப்பொழுதும் ‘ஆஷி ஆஷி’ என்று தன் பின்னாலே வரும் தியாவின் மழலை குரல், திடீரென்று இப்பொழுது அவனது காதில் ஒலித்தது.
“ஆஷி ஆஷி…” என்று தியா யூனிஃபார்ம் அணிந்து கொண்டு தத்தையாக ஓடிவர,
“வா சீக்கிரம்” என்று ஆஷிக் தன் ஷூ லேஸை கூட ஒழுங்காக கட்டாமல் ஓட,
“ஆஷிக் சீக்கிரமா வா, சீக்கிரமா வா. ஐஸ்க்ரீம் மாமா போயிருவாங்க.”
“வந்துட்டேன் ஆதர்ஷ், சீக்கிரம் வா தியா.” என்றவாறு அவன் கண் முன்னால் மூவரும் கை கோர்த்து செல்வது போலப் பிம்பம் தெரிய, கண்ணீருடன் சேர்த்து புன்னகையையும் சிந்தினான். அந்தப் பிம்பம் மறைந்து போக, அவனது புன்னகையும் மறைந்து போயின. தியா செய்ததை ஆஷிக்கால் ஜீரணிக்கவே முடியவில்லை.
“ஏன் தியா இதெல்லாம் பண்றதுக்கு முன்னாடி என்னைப் பத்தி ஒரு நிமிஷம் கூடவா நீ யோசிக்கலை?” என்று தேம்பி தேம்பி அழுதான். அனைத்தையும் சிந்தித்து வருந்தியவனுக்கு அடுத்ததாய் நினைவிற்கு வந்தது ஜியா. ‘இனி எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவளைச் சந்திக்கப் போகிறோம்?’ என்று அவனது உள்ளம் அவனைக் கேள்வி கேட்க மிகவும் வேதனை அடைந்தான்.
ஜியா தன் அறையின் கதவை தாழிட்டுக் கொண்டு, கதவில் சாய்ந்து அமர்ந்தவாறே ஆஷிக்கை நினைத்து,
“நீ என் மேல வச்சுருக்கிற காதலை நினைச்சு நான் சந்தோஷப்படவா, இல்லை அழவானு எனக்குத் தெரியலை ஆஷிக். என்னை மன்னிச்சுருடா, என்னோட சந்தேகப் புத்திக்கு நம்மளோட காதலை நான் இரையாக்கிட்டேன். ரொம்பக் கஷ்டப்படுத்திட்டேன்ல? ஒவ்வொரு தடவையும் துரோகி துரோகினு சொல்லி உன் மனசையே ரணமாகிட்டனே?
நீ என்னை மன்னிச்சு மறுபடியும் ஏத்துக்கணும், ரெண்டு பேரும் போட்டிபோட்டு ஒருத்தர ஒருத்தர் காதலிக்கனும். உன்னைக் கல்யாணம் பண்ணிக்கணும். உன்கூட வாழணும் ஆஷிக். ஆனா அது எதுவமே நடக்காதுனு நினைக்கும் போதே வலிக்குதுடா.
நீ என்கிட்ட கோபமாதான் இருக்கணும், அதுதான் எனக்கும் வேணும். என்னைக்கும் நீ என்னை வெறுக்கணும், என்னை விட ஆயிர மடங்கு பெட்டரான ஒரு பொண்ணை நீ கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருக்கணும். அதுதான் எனக்கு வேணும் ஆஷிக்.
உனக்கும் உன் காதலுக்கும் கொஞ்சம் கூடத் தகுதியே இல்லாதவ நான். உன்னைப் புரிஞ்சிக்காம உன்னை விட்டு பிரிஞ்சப்ப அழுததை விட, இன்னைக்கு உன்னைப் புரிஞ்சதுக்கப்புறம் நான் அதிகமா அழுறேன்.
என் மொத்த வாழ்க்கையையும் உன்கூட வாழணும்னு ஆசைப்பட்டேன். ஆனா ஒரு நிமிஷம் கூட உன் கூட வாழுற தகுதிய இப்படி இழந்துட்டு நிற்பேன்னு நான் நினைச்சது இல்லை.” என்று மனம் உடைந்து வெடித்தெழுந்து கதறினாள். விழிகளில் கண்ணீர் திரண்டது.
ஒருவகையாகத் தன்னை ஆசுவாசபடுத்தியவள் சிணுங்கிய தன் அலைபேசியைப் பார்க்க, மொபைல் ஸ்க்ரீனில் ஆஷிக் காலிங் என்று வர, உடனே அட்டென்ட் செய்தவள் எதுவும் பேசுவதற்குள், “கீழ வா.” என்ற குரலில் இருந்த நடுக்கம், தளர்ச்சி அவளது மனதைப் பிசைய, தன் அறையின் ஜன்னல் வழியே வெட்டுண்ட கிளையைப் போலத் தளர்ந்து சோர்ந்து போய் இருந்தவனைக் கண்டவள், தன் சித்தி சித்தப்பா, தங்கை மூவரும் தூங்கியதை உறுதி செய்துவிட்டு யாரும் அறியாமல் கீழே சென்றாள்.
“என்ன ஆஷிக், இந்த நேரத்துல இங்க என்ன பண்ற?” என்று முடிப்பதற்குள் ஆஷிக், ஜியாவை மிக நெருக்கமாக மிக இறுக்கமாக மிகவும் உறுதியாக அணைத்திருந்தான்.
அவனது கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் துளிகள் அவளது ஆடையையும் மீறி முதுகை நனைக்க, அவனைத் தன்னிடம் இருந்து விலக எத்தனித்தவளை விடமால் இறுக்கி அணைத்தவாறே,
“ப்ளீஸ் ஐ நீட் யு!” என்று ஆஷிக் தளர்ந்த குரலில் கூற, அவளையும் அறியாமல் அவள் அவனது சிகையை வருடி கொடுத்தாள்.
தன்னவளின் வருடல் அவனது காயப்பட்ட உள்ளத்திற்கு இதம் அளிக்க, மனதில் அடைத்திருந்த பாரம் சிறிது சிறிதாய் விலகுவதை உணர்ந்தவன், அணைப்பை விலக்காது அணைப்பின் இறுக்கத்தை மட்டும் சற்று தளர்த்தி அவளை அணைத்தவாறே,
“தியா இப்படிப் பண்ணுவானு நான் நினைக்கலை, உன்னை நான் நம்பிருக்கணும்.” என்ற மறுகணமே தியாவைப் பற்றிய உண்மை ஆஷிக்கிற்கு விளங்கிவிட்டது என்பதை அறிந்தவளின் மனம் ஒரு நொடி களிப்புற்றாலும் மறுநொடி மிக வேதனை அடைந்தது. சில நொடிகளில் ஜியாவிடம் இருந்து விலகியவன் அவளது கரங்களைப் பற்றியவாறே,
“என்னை ஏத்துக்குவியா?” என்று கேட்க,
“என்ன ஆஷிக் இப்படிச் சொல்ற? உன்னை நம்பாம நான்தான் உன்னை ரொம்பக் காயப்படுத்திட்டேன். உன்கிட்ட மன்னிப்பு கேக்குற தகுதி கூட எனக்கில்லை…” என்று அவள் தன் பதிலை முடிப்பதற்குள், அவளது முகத்தைத் தன் கையில் ஏந்தினான்.
“உன்னை நான் இப்போ மன்னிச்சா, என்னை மறுபடியும் விட்டுட்டு போக மாட்டல்ல?” என்று தவிப்புடன் கேட்க, ஊமையாய் கதறியவள் பதில் எதுவும் பேசாமல் இருந்தாள்.
அவளிடம் இருந்து எந்தவித பதிலும் வராமல் போகச் சட்டென்று தனது கரத்தை அவளது வதனத்தில் இருந்து எடுத்தவன், தவிப்புடன் அவளைப் பார்க்க,
அவனது தவிப்பினைக் கண்ட அவளது உள்ளம் தீப்பிழம்பில் விழுந்தது போல உருகி தவித்தது. ஏற்கனவே உடைந்து போய் இருந்தவனை மேலும் சிதைக்க விரும்பாதவள், வெடுக்கென விலகின அவனது கரங்களை எடுத்து தன் முகத்தின் மீது மீண்டும் வைத்து, அவனது கண்களில் வழிந்த கண்ணீரை தன் மென் கரத்தால் துடைத்தவள், கீழே மண் தரையில் அமர்ந்து அவனையும் தன் அருகில் அமரச்செய்தாள்.
தன் விழிகளில் தன் கேள்விக்கான பதிலை துளையிட்டுத் தேடிக்கொண்டிருந்த அவனது விழிகளைப் பார்த்ததுமே, அவனது மனதில் சுழன்று கொண்டிருக்கும் கேள்வி என்ன என்பது புரிய,
‘ஆஷிக் உன் காதலுக்கு எனக்குத் தகுதியே இல்லடா, ஆனா ஏற்கனவே உடைஞ்சி போயிருக்கிற உன்னை இன்னைக்கு என்னால உடைக்க முடியாது. உனக்குத் தகுதி ஆனவ நான் இல்லை.’ என்று தன் மனதிற்குள் அதற்கான பதிலைக் கூறினாள்.
கேள்வியாய் தன்னையேப் பார்த்தவனை மெதுவாய் தன் மடியில் கிடத்தி, மெல்ல தன் விரல்களால் அவனது தலையைக் கோத, தன்னவளின் பூ கரங்கள் பட்டதும் மெல்ல மெல்ல தன் கவலையை மறந்தவன், தியாவைப் பற்றிய உண்மையை ஜியாவிடம் கூறி மிகவும் ஆதங்கப்பட்டான்.
சில நொடிகள் கழித்து ஆஷிக் மீண்டும், “ஜியா இன்னும் நீ எனக்குப் பதில் சொல்லல?” என்று நிதானமாகவும் உறுதியாகவும் கேட்டான்.
ஜியா, ‘உன் கூடவே வாழணும்டா, அதுதான் என் ஒரே ஆசையும் கூட. ஆனா என் நிலைமைய நான் எப்படிடா உனக்குப் புரிய வைக்கப் போறேன்?’ என்று தன் மனதிற்கு மட்டும் கேட்குமாறு கூற, அவள் உள்ளத்தின் குமுறல்கள் வேண்டுமானால் ஆஷிக்கிற்குக் கேட்காமல் இருந்திருக்கலாம், ஆனால் அவள் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் துளிகள் அவனது முகத்தை நனைத்தது.
விருட்டென்று அவள் மடியில் இருந்து எழுந்திருந்த ஆஷிக் அவளது கண்ணீரை கண்டு பதறி, அவளது கண்களில் நிற்காமல் பாய்ந்து கொண்டிருந்த கண்ணீரைத் துடைத்தவாறே,
“அழதாடா, நான்தான் தப்புப் பண்ணிட்டேன். உன்னை நம்பிருக்கணும், எல்லாத்துக்கும் மேல உனக்கு என் மேல சந்தேகம் வராத மாதிரி நான் நடந்திருக்கணும். எல்லாத் தப்பும் என் மேலதான். நீ அழாதடா, உன்கிட்ட நான் அப்படிக் கேட்ருக்கக் கூடாது. எல்லாம் தெரிஞ்சதுக்கு அப்புறம் எப்படி நீ இனிமே என்னை விட்டுட்டு போவ? நான்தான் லூசு மாதிரி பேசிட்டேன். தியா பண்ணின தப்புல நீ என்னைச் சந்தேகப்பட்டுட்ட. இதுல உன் தப்பும் எதுவும் இல்லை.
என்ன நீ அப்போவே என்கிட்ட பேசிருந்தனா ஆறு வருஷம் நாம பிரிஞ்சிருக்க வேண்டாம். சரி எல்லாம் முடிஞ்சிருச்சு, இனிமே அதைப் பத்தி நாம பேசவேண்டாம். புதுசா லைஃப் ஸ்டார்ட் பண்ணுவோம், இனிமே உன் கண்ல இருந்து கண்ணீரே வரக்கூடாது.” என்று கூறி வழிந்த கண்ணீரைத் துடைத்துவிட்டு அவளது செந்நிற வதனத்தைத் தன் நெஞ்சோடு அழுத்திக் கொண்டவனின் கண்களில், ஜியாவுடன் மீண்டும் ஒன்று சேர்ந்துவிட்டோம் என்கின்ற சந்தோஷ கண்ணீர் அமுதம் போலச் சுரந்தது.
ஆனால் ஜியாவோ அவனுக்கு எந்தப் பதிலும் கூற முடியாமல் தன் அழுகையை அடக்கியவாறு, அவனது அணைப்பில் தன் தொலைந்து போன சந்தோஷத்தை சில நொடிகளாவது மீட்டு எடுக்க முடியுமா என்று அற்பமாய் ஏங்கிக்கொண்டிருந்தாள்.
ஏக்கம் தீருமா…? காதல் கைகூடுமா…?
***
