தன்னைக் கண்டதும் ஆஷிக் நிச்சயமாக, ‘ஏன் இன்னும் தூங்கலைன்னு’ ஏதாவது கேப்பான் என்று எண்ணி அவளாய் காத்திருந்தாள்.
அவளை நெருங்கி வந்த ஆஷிக், “ஜியா!” என்று அழைக்க, “என்ன?” என்றவளிடம்,
“தூக்கம் வருது, கொஞ்சம் லைட் ஆஃப் பண்ணிருடா.” என்று கூறி போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு உறங்க ஜியா, ஆஷிக்கைப் பார்த்து முறைத்தவாறே உறங்கினாள், இல்லை உறங்க முயற்சி செய்தாள்.
‘நாம் ஆஷிக்குக்கு சரி தானா? அவன் தன் மீது வைத்திருப்பது காதலா? பரிதாபமா? என்கின்ற கேள்விகள், ஜியாவை ஆஷிக்கிடம் இருந்து தள்ளியே வைத்தது.
அவளது மனதும் மூளையும் தாழ்வு மனப்பான்மை, குற்ற உணர்ச்சி என்று தேவை இல்லாத உணர்ச்சிகள் விரித்த வலையில் சிக்குண்டு கிடந்தது.
அதனாலே ஆஷிக் தன் மீது பொழிந்த காதலை எல்லாம் அவன் தன்னைக் கண்டு பரிதாபப்படுகிறான் என்று எண்ணி, அவனை விட்டு தள்ளி இருப்பதே சிறந்தது என்று தவறான முடிவுக்கு வந்தவள், அவனை விட்டு பிரிந்து தன் சித்தப்பா வீட்டுக்கு செல்வது என்று முடிவு செய்து தன்னைத் தானே தண்டித்துக் கொண்டாள்.
அவள் சித்தப்பா வீட்டுக்குச் செல்வதாகக் கூறியதும் யாரும் அவளைத் தடுக்கவில்லை. அவளது உள் நோக்கம் அறியாது அனைவரும் அவளுக்கும் ஒரு வித்தியாசம் வேண்டும் என்று எண்ணி சரி என்று சொல்ல,
ஆஷிக் மட்டும் கோபமாக இருந்தான். ஆனால் அதை வெளி காட்டிக்கவில்லை. இந்த முறை என்ன நடந்தாலும் பரவாயில்லை, என் காதலின் ஆழம் உணர்ந்து அவளாகத் தன்னைத் தேடி வரவேண்டும். அதுவரை காத்திருப்பது என்று மிகவும் உறுதியாய் இருந்தான்.
இருவருக்கும் ஒருவரை ஒருவர் பார்க்காமல் இருப்பது என்பது மிகவும் கொடுமையாக இருந்தது. ஒவ்வொரு நொடியும் கசந்தது. அவனது நினைவுகள் அவளை விடாமல் துரத்தியது.
அவளது துறுதுறு விழிகள் அழகு கொஞ்சும் வதனம் அவனது உறக்கத்தை மொத்தமாகத் திருடி சென்றது. அவன் எடுத்த உறுதி எல்லாம் இரண்டு, மூன்று நாட்களுக்குத் தான் தாக்குப் பிடித்தது. ஆஷிக் தன் நண்பர்களிடம் புலம்பத் தொடங்கினான். ஜியாவும் கிட்டத்தட்ட அதே நிலைமையில் தான் இருந்தாள். ஆனால் என்ன காதலைத் தாண்டி ஒருவித குற்ற உணர்வு, அவளை அவனிடம் நெருங்கவிடாமல் சிறை செய்தது.
இப்படி இருக்க ஒருநாள் ஆதர்ஷ், ஜியாவுக்குத் தொடர்பு கொண்டு, “என்னமா ஜியா உன் இஷ்டத்துக்கு நீ அங்கே போய் இருந்துகிட்ட, ஆஷிக் என்ன ஆனான் எப்படி இருக்கான்னு உனக்குக் கவலையே இல்லையா?”
“ஏன் அண்ணா, என்னாச்சு?”
“அவன் நீ இல்லாம என்னவோ மாதிரி இருக்கான், ரொம்ப நாள் ட்ரிங்க்ஸ் பக்கமே போகாதவன், இப்போ தினமும் குடிக்கிறான். ஒரே புலம்பல், நீ முதல்ல கிளம்பி வா.” என்று அவன் கூறியதைக் கேட்டபிறகு ஜியாவால், அங்கே ஒரு நொடி கூட நிம்மதியாகவே இருக்க முடியவில்லை. உடனே கிளம்பியவள் மறுநாள் சாயங்காலமே ஆஷிக்கின் வீட்டை அடைந்தாள்.
அவன் வீட்டில் இல்லாமல் போக, உடனே ஆதர்ஷுக்கு தொடர்பு கொண்டவள், “அண்ணா நான் வீட்டுக்கு வந்துட்டேன், ஆஷிக் அங்க இல்லை.”
“பார்த்தியா, மணி ஆறு ஆகுது வீட்ல அவன் இல்லை. வீட்ல இருக்க வேண்டியது தானே, இல்லைன்னா என்னைப் பார்க்க வரலாம்ல? இந்த நேரத்துல இவனுக்கு வெளியில என்ன வேலை?” என்றவன், அருகில் இருந்த ஆஷிக் தடுக்கத் தடுக்க ஜியாவை இன்னும் கலவரப்படுத்தினான்.
“ஆஷிக் இப்போ எங்க இருப்பான்?” என்று கண்கள் கலங்க அவள் கேட்க,
“வேற எங்க இருப்பான், மணி ஆறு. ஏதாவது ஒரு பார்ல தண்ணி அடிச்சுட்டு, மட்டையாகி உன்னை நினைச்சு கவலை பட்டுட்டு கிடப்பான்.” என்றவன்,
“சரி, நீ கிளம்பி நான் சொல்ற இடத்துக்கு வா. அப்போ உனக்குப் புரியும், ஆஷிக் படுற வேதனை.” என்று அவன் கூறிய மறுநொடி, ஜியா ஆட்டோவில் ஆதர்ஷ் சொன்ன இடத்திற்குக் கிளம்பினாள்.
ஆதர்ஷ் ஃபோனை வைத்த மறுநொடி ஆஷிக், “ஏன்டா அவகிட்ட பொய் சொன்ன?”
“ஓ… அப்போ உனக்கு வருத்தமே இல்லை…?”
“அது இருக்கு…”
“ரெண்டு நாளா நீங்க புலம்பவே இல்லை?”
“புலம்புனேன் தான், ஆனா…”
“என்ன ஆனா…”
“டேய் அதுக்கு ஏன்டா பார்ல இருக்கேன், தண்ணி அடிக்கிறேன்னு பொய் சொல்ற. அவளுக்கு அதெல்லாம் சுத்தமா புடிக்காது. இன்னும் என்னை விட்டு விலகி போயிற போறாடா…”
“பொண்ணுங்க சைக்காலஜியே உனக்குத் தெரியலைடா. விலகி போணும்னா ஏன்டா உடனே கிளம்பி வந்து நிக்கிறா. அவ இல்லைன்னா நீ எவ்வளவு ஏங்கி போய் இருக்கன்னு காட்டு, அப்போ தான் உன்னை விட்டு என்னைக்கும் விலகாம இருப்பா.”
“அவ என்னை விட்டு விலகி போறது வேற காரணத்துக்கு. அதுக்கு இதெல்லாம் பண்ணணும்னு அவசியம் இல்லை, உக்கார்ந்து மனசை விட்டு பேசுனாலே போதும்.”
“டேய் தமிழ், ஹிந்தி, இங்கிலிஷ், கொரியன், போஜ்பூரி, உருது இப்படி எல்லா லாங்குவேஜ் சீரியலையும் நான் பார்த்துட்டேன். ஹீரோ, ஹீரோயின் பிரிஞ்சிட்டா, ஹீரோவோட உயிர் நண்பன் இப்படி ஏதாவது பொய் சொல்லி அவங்களை வர வைப்பான். ரெண்டு பேரும் சந்திப்பாங்க, அப்புறம் ஹீரோயின் காதல பொழிவாங்க, செட் ஆகும்…”
“சொதப்புனா…?”
“நான் பார்த்துக்கறேன் போதுமா? டேய், ஜியா தான் கால் பண்றா, வந்துட்டான்னு நினைக்கிறேன். நீ உள்ள போ. ஒரு ஓரமா தண்ணி அடிச்சுட்டு இருக்கிற மாதிரி, சோகமா முகத்தை வச்சுட்டு உக்கார்ந்திரு. மத்ததெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.” என்ற ஆதர்ஷ் ஜியாவைக் காண செல்ல,
ஒருவித பதற்றத்துடன் வந்த ஜியா ஆதர்ஷிடம், “ஆஷிக் எங்க?”
“உள்ள தான் இருக்கான்.”
“சொல்ல சொல்ல கேக்க மாட்டிக்கிறான். நீயாவது வந்து சொல்லுமா…” என்று அவளை உள்ளே அழைத்துக்கொண்டு செல்ல,
அந்த நேரம் பார்த்து நன்கு குடித்துவிட்டு ஒரு பெண் ஆஷிக்கிடம் நடனம் ஆட வருமாறு கேட்டு, அவனது கரத்தைப் பிடித்து வற்புறுத்தி கொண்டிருக்க, ஆஷிக் அந்தப் பெண்ணை விலக்கிவிட, அந்த பெண்ணோ எதையோ புலம்பியபடி மயக்கத்தில் அவன் மீது சாய்ந்து கொள்ள,
இந்தக் காட்சியைக் கண்ட ஜியாவின் கண்கள் தகத்தகவென்று கொழுந்து விட்டு எரிந்தது.
ஜியாவின் கண்களைக் கண்ட மறுநொடியே ஆதர்ஷ், ‘டேய் என்னடா இப்படிச் சொதப்பி வச்சிருக்க?’ என்று தன் தலையில் அடித்துக்கொள்ள, கண்களில் தொனித்த அதே கோபத்தோடு ஜியா ஆஷிக்கின் அருகில் செல்ல, அவளைக் கண்ட மறுநொடி ஆஷிக்கின் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது.
ஆனால் ஜியாவின் விழிகள் சென்ற திசையைக் கண்டவனுக்கு அனைத்தும் விளங்க, உடனே அந்தப் பெண்ணை விலக்கி விட முயற்சிக்க, அதற்குள் அந்தப் பெண்ணை ஒரே இழுப்பிலே ஆஷிக்கிடம் இருந்து பிரித்த ஜியா,
ஆஷிக்கைப் பார்த்து உக்கிரமமாக முறைக்க, தன் மனைவியின் ஆக்ரோஷமான பார்வையைப் பார்த்து ஆஷிக் அவளிடம்,
“அதுவந்த ஜியா நான்…” என்று தன்பக்கம் உள்ள விளக்கத்தைக் கொடுக்க ஆரம்பிக்க, அவனைத் தொடர விடாமல் அவனது கன்னத்தில் பளாரென்று அறைந்தவள், அழுதுகொண்டே அங்கிருந்து சென்றாள்.
அஷிக்குக்கு ஆதர்ஷ் மீது வெறி ஏறியது. அவனது பார்வை தன் பக்கம் விழுவதை அறிந்த ஆதர்ஷ், இயலாமையோடு அவனைப் பார்க்க,
“வந்து வச்சுக்கிறேன்டா…” என்று முறைத்த ஆஷிக், “ஜியா நில்லு! நான் சொல்ல வர்றத முதல்லக் கேளு…” என்றவாறு ஜியாவின் பின்னாலே சென்றான்.
வீட்டில் இருந்த தனது எல்லாப் பொருட்களையும் ஒன்று விடாமல் எடுத்து பேக் செய்து கொண்டிருந்தவளைத் தடுத்தவன்,
“ஜியா! ஜியா! ஐ செட் லீசன் டு மீ…”
“எனக்கு எதுவும் கேக்க வேண்டாம்.”
“இப்போ எங்க கிளம்புற?”
“என் வீட்டுக்கு போறேன்.”
“இதான்டி உன் வீடு நான் சொல்றத கொஞ்சம் கேளு. ஆனா அங்க நடந்தது, நீ பார்த்தது எதுவும் உண்மை இல்லை.”
“என்ன பார்க்கணுமோ எல்லாம் பார்த்துட்டேன். ஆதர்ஷ் அண்ணா சொன்னதைக் கேட்டு உன்னைப் பார்க்க வந்தேன் பாரு, என்னைச் சொல்லணும். நான் இல்லைன்னா நீ கஷ்டப்படுவனு நான் நினைச்சேன். ஆனா நீதான் சந்தோஷமா இருக்கியே…?”
“ஜியா நீ என்னை ரொம்பக் கடுப்படிக்கிற. அந்த பொண்ணை எனக்கு யாருனே தெரியாது.”
“ஆமா யாருனு தெரியாம தான் ஒட்டி உரசிக்கிட்டு இருந்திங்களா?”
“என்னடி வேணும்?”
“எதுவும் வேண்டாம்.”
“நீ இல்லாம நான் எப்படிடி வாழ்வேன்?”
“அப்படியா! ஆனா அப்படித் தெரியலையே? அதான் அந்தப் பொண்ணு கூட நீ சந்தோஷமா இருந்ததை நான் பார்த்தனே! அந்தப் பொண்ணு கூடவே போ, நான் போறேன்.”
“ஐயோ! அவ யாருன்னே தெரியாது.”
“போதும்! எதுவும் எனக்குச் சொல்லவேண்டாம், நான் எல்லாம் பார்த்துட்டேன்.” என்றவள் சொன்னதையே சொல்ல,
“ஆமா, எனக்கு அவளைப் புடிச்சுருக்கு. இப்போ அதனால உனக்கு என்ன வந்துச்சு? அதான் நீ என்கூட இருக்க மாட்டனு சொல்லிட்டியே, நான் யாருகூட இருந்தா உனக்கென்ன?” என்றவன் கோபம் கலந்த எரிச்சலுடன் சொல்ல,
மேலும் கதறி அழுதவள் தன் சூட்கேஸை எடுத்துக்கொண்டு வேகமாகக் கிளம்பினாள்.
“ஜியா, ஜியா!” என்றவாறு அவளது பின்னால் சென்று தடுக்க,
அவனைப் பார்த்து, “ஆஷிக் ப்ளீஸ், என்னை விடு.” என்றதும், பிடித்திருந்த அவளது கரத்தை விட்டவன்,
“போறது தான் போற, வீட்டு சாவிய குடுத்துட்டு போ.” என்று கூற,
அவனைப் பார்த்து முறைத்தவள், “டேபிள் மேல இருக்கு, போய் எடுத்துக்கோ.”
“ஹலோ இந்த வீட்ல எவ்வளவோ டேபிள் இருக்கு, வந்து எடுத்து தந்துட்டு போ.” என்று கூறிவிட்டு தன் மனைவி தன்னைப் பார்த்து முறைக்கிறாள் என்று உணர்ந்துகொண்டு ஆகாயத்தைப் பார்க்க, அவனைப் பார்த்து முறைத்தவாறே அவள் தன் அறைக்கு வேகமாக நடையைப் போட,
“ஷப்பா!” என்று இழுத்து மூச்சு விட்டவன், அவள் பின்னாலே சென்று கதவிற்குத் தாழிட்டுக் கொண்டான்.
சாவியைத் தேடி எடுத்து அவனது கரத்தில் கொடுத்து, “இந்தா வச்சுக்கோ, நிம்மதியா வாழு.” என்றவள் அங்கிருந்து கிளம்பப் போக,
“அப்படியே என்னோட வாட்ச் எங்க இருக்குன்னு சொல்லிரு.” என்று கூற எரிச்சல் அடைந்தவள்,
பீரோவை திறந்து, “இதோ மிடில் ரேக்ல இருக்கு.”
“ஓகே, ஹலோ ஜியா மேடம் எங்க போறீங்க? என்னோட டை, ஷாக்ஸ், ஷூஸ் அப்புறம்…” என்று அவன் தொடர்வதற்குள்,
அவனைக் கைப்பிடித்து அழைத்து, “இதோ இந்த ஷெல்ஃப்ல டை, இங்க ஷாக்ஸ் அந்த கார்னர்ல ஷூஸ்… அப்புறம் உன்னோட டீயோட்ரண்ட் அப்புறம் உன்னோட பெர்ஃப்யூம் அப்புறம் உன்னோட யூனிஃபார்ம்…” என்று அனைத்தையும் கூறியவள் அவனைப் பார்த்து,
“எல்லாம் ஓகேவா? ஹவ் யு டன்!” என்று அங்கிருந்து கிளம்பப் போக,
“என்னோட ஹார்ட்…?” என்று அவன் கூறியதில், அடுத்த நொடி எடுத்து வைக்காமல் அவள் அமைதியாய் நிற்க, மேலும் அவள் அருகில் வந்தவன்,
“என்னோட காதல்?” என்று கூற, தன் கண்களை இறுக்க மூடிக்கொண்டவளின் விழிகளில் இருந்து, கண்ணீர் தாரைத் தாரையாக வர,
“என்னோட உயிரு?” இதை எல்லாத்தையும் குடுத்துட்டு நீ எங்க வேணும்னாலும் போகலாம், என்று அவன் சொன்ன அடுத்த நொடி ஜியா, ஆஷிக்கை இறுக்க அணைத்துக் கொண்டாள்.
ஆஷிக் மார்போடு சாய்ந்திருந்தவள் பின்பு எதையோ பற்றி யோசித்து அவனை விட்டு விலகி,
“உனக்கு நான் ரொம்ப போர் அடிச்சுட்டேன்ல?” என்று கேட்க,
“இல்லை ஜியா, ரொம்ப பேர் முன்னாடி அடிச்சுட்ட…” என்று தன் கன்னத்தைத் தடவ, அவனைப் பார்த்து முறைத்தவள் ஏங்கி ஏங்கி அழுதவாறே,
“ஆதர்ஷ் அண்ணா உன்னைப் பத்தி சொன்னப்போ, நான் எவ்வளவு பதறிட்டேன் தெரியுமா? ஆனா நீ பப்ல அந்தப் பொண்ணுங்க கூட டான்ஸ் ஆடிட்டு இருக்க…”
“ம்ம்… அந்தப் பொண்ணு ரொம்ப ஹாட்டா இருந்தா…” என்று அவன் வம்பிழுக்க, அவனது கன்னத்தில் பளாரென்று அறைய,
ஆஷிக் ஏற்கனவே இதை எதிர்பார்த்து இருந்ததால் பெரிதும் அதிர்ச்சி அடையாதவன், அவள் மனதிற்குள் அடக்கி வைத்திருந்த வேதனை இப்படி ஆத்திரமாகவாவது வெளியே வரட்டுமே என்று எண்ணினான்.
“ஹாட்டா இருந்தா டான்ஸ் ஆடுவியா?” என்று அவள் கேட்க,
“ஆமா…” என்று நிமிர்ந்தவனின் மறு கன்னத்திலும் சுளீரென்று அடி விழ, ஆனாலும் அசராமல் மறுபடியும் முதலில் அடித்த கன்னத்தைத் தன்னவள் மீண்டும் அடிப்பதற்கு ஏதுவாகக் காட்ட, இதற்கு மேல் ஆஷிக்கை அடிக்க முடியாதவள்,
அவனை அடிக்க நேர்ந்த தன் நிலையினை எண்ணி நொந்து கொண்டு அவனது மார்பில் சாய்ந்து அழ ஆரம்பித்தாள்.
தன்னவளின் கோபத்தைக் கூடத் தாங்க தயாராக இருந்த ஆஷிக் அவளது கண்ணீரைத் தாங்க முடியாமல்,
“ஏய் ஜியா ப்ளீஸ்டா! என் செல்லம்ல! அழாத… வேணும்னா என்னை இன்னும் நாலு அடி கூட அடிச்சுக்கோ. ஏன், நாப்பது கூட ஏன் உதைக்க, மிதிக்கக் கூடச் செய். என்ன வேணும்னாலும் செய், நான் இங்க தான இருக்கேன், என்னை வச்சு செய். ஆனா இப்படி அழ மட்டும் செய்யாதடா, கஷ்டமா இருக்கு…!” இவ்வாறு பதறிக்கொண்டே, ஏங்கி ஏங்கி அழுது கொண்டிருந்த மனைவியை ஆறுதல் படுத்தினான்.
என்ன முயன்றும் அவளது அழுகையை நிறுத்த முடியாமல் போக, ஆஷிக் வேறு வழியின்றி அவளாகச் சமாதானமாகும் வரை காத்திருக்க எண்ணி, தன் நெஞ்சோடு புதைந்திருந்த தன்னவளை ஆறுதல் படுத்தும் நோக்கில், அவளது தலையை மட்டும் ஆறுதலாக வருடி கொண்டிருந்தான்.
ஒருவழியாக அவளாகவே அவனது மார்பை விட்டு விலகி, “நான் உனக்கு ரொம்பக் கஷ்டம் குடுத்துட்டேன்ல? நான் உன் வாழ்க்கையில வந்திருக்கவே கூடாது. நான் போயிடுறேன் ஆஷிக், நீ சந்தோஷமா இரு.” என்று கூற,
கோபமுற்றவன், “என்னடி சொல்ற, போறியா? நீ போனா நான் மட்டும் என்ன செய்ய? ஜியா நான் உன்னை லவ் பண்றேன், நீ எனக்கு வேணும், இதை எப்படி நான் உனக்குப் புரிய வைக்கனு எனக்குச் சத்தியமா தெரியல. உன்னுடைய கடந்த காலத்தை விட்டுட்டு வானு நான் சொல்லல. நீ எப்படி இருக்கியோ அப்படியே வா. ஆனா என்கிட்ட வானு தான் சொல்றேன்.
உன்னை உருகி உருகி நான் காதலிக்கணும் ஜியா, நான் உன்கூட ரொம்ப வருஷம் சந்தோஷமா வாழணும், நம்ம வாழ்க்கையோட ஒவ்வொரு நொடியையும் நான் உன்கூட ரசிக்க விரும்புறேன். வாழ்ந்தா ஆஷிக், ஜியா மாதிரி வாழணும்னு எல்லாரும் சொல்லணும்.”
“ஆஷிக், எனக்கும் உன்னை விட்டு விலகணும்னு எந்த ஆசையும் இல்ல. ஆனா அந்தக் கொடூரமான சம்பவத்துக்கு அப்புறம் என்னால இயல்பா இருக்க முடியல. என்னையே நான் வெறுக்கிறேன். நான் ஒரு களங்கம், நம்ம குடும்பத்துக்கே ஒரு களங்கம். உன் காதலுக்கு எனக்குத் தகுதியே இல்லை. உன்னைச் சந்தோஷமா என்னால வச்சுக்க முடியாது. கஷ்டத்தை மட்டும்தான் நான் உனக்குக் குடுப்பேன்.” என்று மீண்டும் அவள் அழ,
கோபம் தலைக்கேறிய ஆஷிக், ஜியாவின் கன்னத்தில் அறைய தன் கையை ஒங்க, தன்னைத் தானே கட்டுப்படுத்தியவன் தன் கரங்களால் அவளது முகத்தை ஏந்தி,
“வெறும் ஃபிஸிக்கல் ரிலேஷன்ஷிப் மட்டும் தான் சந்தோஷத்தை தரும்னா, நான் ஏன் இத்தனை வருஷம் காத்திருக்கணும்? வெறும் அடிவயித்து உணர்ச்சிக்காக நான் உன்னைக் காதலிக்கல. என் மனசுல இருந்து உன்னை நேசிக்கிறேன். இதெல்லாம் இல்லாம கூட உன்கூடக் காலம் முழுக்க என்னால சந்தோஷமா இருக்க முடியும். நீ என் கூடவே என்னை விட்டு போகாம இருந்தா, அதுவே போதும்.
உனக்கா எப்போ என்கூட வாழணும்னு தோனுதோ அப்போ பார்த்துக்கலாம். நீ என் நெஞ்சில சாஞ்சி தூங்குற சந்தோஷமே போதும், சாகுற வரைக்கும் நான் நிம்மதியா வாழ்வேன். இங்க பாரு ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சிக்கோ, எனக்கு உன்மேல எந்தவித பரிதாபமும் கிடையாது. பரிதாபம் முன்பின்ன தெரியாதவங்க மேல தான் வரும்.
நமக்கு நாமே யாரும் பரிதாபம் பட்டுக்கிறது இல்லை. நீ என்னோட ஜியா, நீ வேறு நான் வேறு இல்லை. நீ எனக்கு உள்ள இருக்க. நீ என் உயிர், நீ இந்த ஆஷிக்கோட ஜியா. ஜியா இல்லாம ஆஷிக் இல்லை, ஆஷிக் இல்லாம ஜியா இல்லை.”
“எல்லாம் உண்மை தான் ஆஷிக், ஆனா கடைசியில உன் கையில ரத்த கறைய படிய வச்சுட்டனே! என்னால நீ பாவத்தைச் சுமந்துட்டு இருக்கிறியே! என்னால எப்படித் தாங்கிக்க முடியும்?”
“பாவமா! அவங்க எல்லாருமே பாவிங்க. அவங்கள கொலை பண்றது ஒன்னும் பாவம் இல்ல. அப்படியே அது பாவமா இருந்தாலும் உனக்காக எந்தப் பாவத்தை வேணும்னாலும் நான் செய்வேன். உனக்காக நான் உயிரையும் எடுப்பேன். அதே நேரம் நீ என்னை விட்டு போனா என் உயிரையும் குடுப்பேன். இதுக்கு மேல எப்படி என் மனசை உனக்குப் புரிய வைக்கிறதுனு எனக்குத் தெரியல.” என்று அவன் கவலையோடு கூற,
தன் கண்களைத் துடைத்துக் கொண்டவள் அவனை இறுக்கமாகக் கட்டி அணைத்துக்கொண்டு,
“ப்ளீஸ் ஆஷிக்… அப்படிச் சொல்லாத, நான் புரிஞ்சிக்கிட்டேன். இனிமே உன்னை விட்டு என்னைக்கும் போறேன்னு சொல்ல மாட்டேன், நீ எனக்கு வேணும்.” என்று தன்னவனை இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டாள். அதீத நெருக்கம் இருவருக்கும் ஒருவித உணர்வை ஏற்படுத்த,
தயக்கம் கொஞ்சம், தவிப்புக் கொஞ்சம், பயம் கொஞ்சம் என அவளது உணர்ச்சிகளை அனைத்தும் அவளது கண்கள் வெளிப்படுத்த, ஆனாலும் இதையெல்லாம் தாண்டி அவளது கண்களில் தனக்காக் தெரிந்த காதலைக் கண்டு உள்ளுக்குள் மகிழ்ச்சியுற்றவன், தன்னவளின் உணர்ச்சிகளைப் புரிந்து கொண்டவனாய் அவளது நெற்றியில் இதழ் பதித்து,
சற்று அவளை விட்டு விலகி சோபாவில் அமர்ந்துகொண்டு, அவளது கைகளைத் தன் கைகளுக்குள் கோர்த்து கொண்டவாறே அவளது கண்களைப் பார்த்து,
“ஜியாமா மணி பத்தாகிடுச்சு, ட்ராவல்ல டயர்ட் ஆகிருப்ப, போய் ரெஸ்ட் எடு. மத்ததெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்.” என்று கூற,
தன்னையே கண் கலங்க பார்த்த தன் காதல் மனைவியை மெல்ல அள்ளி கட்டிலின் மீது கிடத்தி நெற்றியில் முத்தமிட்டவன், சிறு புன்னகையோடு அவளது அருகில் சரிந்து, தனது மார்போடு அவளை அணைத்துக்கொள்ள, தன்னவனது அணைப்பில் நிம்மதியாய் கண்மூடினாள். அவனும் அவளை வருடியவாறே துயில் கொண்டான்.
***
