காதல்- 8

அத்தியாயம்- 8

நித்தியானந்தம் போகும் திசையை திகைப்புடன் பார்த்துக் கொண்டு நின்று இருந்த சங்கீதாவிற்கு கண்களில் கண்ணீர் வழிந்து விட்டது, “என்னங்க” என்று சொல்லிக் கொண்டே அவன் பின்னால் போக போனவளின் கரத்தை பிடித்து தடுத்தார் அவள் தந்தை பரமசிவம்.

அவளோ திரும்பி கேள்வியாக “ஏன்ப்பா” என்றாள் குரல் தழுதழுக்க.

“இப்போ எங்க கூட வரீயா? இல்லை அப்பா அம்மா தங்கச்சினு யாருமே வேணாம்னு தலை முழுகிட்டு எங்களை அசிங்கப்படுத்தின குடும்பத்திலே சந்தோஷமா இருந்து வாழுறீயா?” என்று கேட்டவரை இதயம் துடிக்க பார்த்தாள் சங்கீதா.

கணவனின் மீது அலாதி பிரியம் வைத்து இருப்பவளுக்கு அவனை பிரிந்துச் செல்ல வேண்டுமா என்ற எண்ணமே அவளை தன் சிந்தையை இழக்க வைத்து இருந்தது.

இதை கேட்ட ஜீவாவிற்கும் கோவிந்தராஜுக்கும் கோபம் வர, நித்தியானந்தனை தான் மனதிற்குள் திட்டிக் கொண்டனர்.

மனைவியை அம்போவென்று அப்படியே விட்டு விட்டுச் சென்று விட்டானே அந்த மனசாட்சி இல்லாத கணவன்.

பூங்கோதையோ “சம்பந்தி நீங்க செய்யுறது ரொம்ப தப்பு. அவ இப்போ எங்க வீட்டு பொண்ணு” என பேச வந்தவரை நோக்கி,

“அது எங்களை அசிங்கப்படுத்துறதுக்கு முன்னாடி தெரியலையா? எங்க வீட்டுப் பொண்ணை மருமகளாகிட்டு இப்போ இவ இந்த வீட்டுப் பொண்ணுனு தெரியுற உங்களுக்கு, பொண்ணை கொடுத்த நாங்க மட்டும் வேண்டாதவங்களா அகிட்டோமா?” என்று அபத்தமாக கேட்டவர் இருமகள்களின் கரத்தையும் பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்.

மோனிகாவோ தந்தையை தடுக்கவேயில்லை. தனக்கு கிடைக்காத ஆடம்பர வாழ்க்கை தன் அக்காவிற்கும் கிடைக்க கூடாது என்று நினைப்பவளுக்கு அக்காவின் வாழ்க்கை எப்படி போனால் என்ன என்ற எண்ணம் தான் போல. அதான் அமைதியாகவே தந்தை செய்வதை வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

தேவியோ தவிப்போடு “இதெல்லாம் ரொம்ப தப்புங்க. புருஷன் வீட்ல வாழுற பொண்ணை வலுக்கட்டாயமாக பிரிச்சி அழைச்சிட்டு போறது எல்லாம்” என்று கண்ணீரோடு பேசிக் கொண்டே கணவனை தடுக்க பின்னால் சென்றார்.

பரமசிவமோ “வாயை மூடிக்கிட்டு வரீயா? இல்ல மத்தவங்க முன்னாடி என் கையால அடிவாங்கி அசிங்கப் பட போறீயா?” என்று கர்ஜித்தவரை பார்த்து பயந்து தான் போனார் தேவி.

ஆனால் பயந்து பின் வாங்கினால் மகளின் வாழ்க்கை கேள்விக் குறியாகி விடுமே என்ற அச்சம் அதிகமாகவே இருக்க, பயத்தை ஓரம் தள்ளி வைத்து விட்டு தைரியத்துடனே “நீங்க என்னை என்ன வேணாலும் பண்ணுங்க. ஆனா வாழ வேண்டிய பொண்ணோட வாழ்க்கையை கெடுத்துடாதீங்க” என்று அவர் சொல்லி முடிக்கும் முன் மற்றவர்கள் இருப்பதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் அவர்கள் முன் மனைவியை அடித்தே விட்டார்.  

அந்த வீட்டின் வாசலை தாண்ட போனவர் கால் வெளியே எடுத்து வைக்காமல் நின்று திரும்பி இரைஞ்சலோடு நின்று இருந்த மனைவியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தவர் “இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசுனனு வை, நான் மனுஷனா இருக்க மாட்டேன் பார்த்துக்கோ” என்று எச்சரித்த கணவனை கண்டு மிரண்டு போய் விட்டார், அதை பார்த்த மற்றவர்கள் அதிர, தேவியோ பேச்சற்று போனார்.

நிச்சயம் கணவன் மற்றவர்கள் முன் தன்னை அடிக்க மாட்டார் என தைரியத்தில் தானே அவரும் பேசி கணவருக்கு புரிய வைக்க முயன்றது.

ஆனால் பரமசிவம் இப்படி அனைவரின் மத்தியிலும் அடிப்பார் என்று அவர் துளியும் எதிர்ப்பார்க்கவில்லையே.

தாயை அறைந்ததும் தன் சிந்தையிலிருந்து வெளியே வந்தவள் “அப்பா” என்று அழைத்துக் கொண்டு தாயின் முன் அரணாக நின்றது என்னவோ சங்கீதா தான்.

மோனிகாவோ அலட்சியமாக நின்று இருந்தவள் கவனம் பார்வை என்று எல்லாமே மெல்லிசையின் மீது தான் இருந்தது.

கோவிந்தராஜ் முன்னே செல்ல போக, தந்தையை தடுத்தான் புதல்வன்.

அவரோ கேள்வியோடு மகனை காண, “அவரு இதெல்லாத்தையும் வேணும்னே பண்ணிட்டு இருக்காருப்பா. இப்போ நீங்க போய் ஏதாவது கேட்டாலும் உங்களையும் அசிங்கப்படுத்த தான் நினைப்பாரு. உங்களை அசிங்கப்படுத்துறதை பார்த்துட்டு என்னால அமைதியா சும்மா கையை கட்டிக்கிட்டு நிக்க முடியாது. அப்புறம் பெரிய சண்டை தான் வரும். சோ இருக்கிற உறவையும் கெடுத்துக்க வேணாம்” என்று சரியாக சொன்ன மகனை நோக்கி அவர் சரி என்பது போல் பார்வை பார்த்தாலும் மருமகளை எண்ணி கவலை இருந்தது.

மகன் சொல்வது போல் அவர் ஏதாவது கேட்க போய் இருக்கும் பிரச்சனையை பெருசாக அவர் விரும்பவில்லை.

பூங்கோதையோ, “சங்கீதாப்பா” என்றார் தவிப்போடு.

ஜீவாவோ தாயை நோக்கி “இப்போ கூட அவங்களுக்காக அவங்களே பேசலனா ரொம்ப கஷ்டம் அம்மா. அவங்களுக்காக அவங்கள் நிக்கட்டுமே அம்மா. தனக்காக சண்டை போடட்டும். இப்பவும் வாயை மூடிக்கிட்டு அமைதியா இருந்தா பின் காலத்துல அவங்க வாழ்க்கை நித்தி கூட சரியா இருக்காதும்மா. அப்புறம் அவன் அவனோட இஷ்டத்துக்கு தான் எல்லாமே பண்ணுவான். தனக்காக எதிர்த்து ஒரு மனுஷனால கேள்விக் கேட்க முடியலனா எப்படிம்மா?” என்று தெளிவாக மகன் சொன்னாலும், வாயில்லா பூச்சி போல் அழுகையுடன் நின்று இருக்கும் மருமகளை கண்டு அவர் உள்ளம் பரிதவித்தது.

சங்கீதாவின் அந்த அமைதியான மென்மையான குணம் பிடித்து போய் தானே அவர் மூத்த மகனுக்கு அந்த குடும்பத்திலிருந்து பெண் எடுத்ததே. ஆனால் அந்த குணமே இப்போது அவளின் வாழ்க்கைக்கு தடையாக நிற்பதை வேதனையோடு பார்த்தார் பூங்கோதை.

மெல்லிசையோ இங்கே நடப்பதை எல்லாம் வாயை பிளந்து பார்த்துக் கொண்டு இருந்தவளுக்கு ஏனோ தன்னால் தான் அனைத்து பிரச்சனையும் நடப்பது போல் தோன்ற,

மெதுவாக ஜீவாவிடம் “நா…நான் வேணா போய் பேசி பார்க்கவா?” என்று கேட்டவளை நோக்கி அழுத்தமாக வேண்டாம் என்று இருப்பக்கமும் தலையை ஆட்டினான்.

மெல்லிசையோ “இல்ல என்னால தானே” என்று ஆரம்பித்தவளின் கரத்தை பிடித்த ஜீவா,

“நிச்சயம் இல்ல மெலோடி. இது ரொம்ப நாளாவே இந்த குடும்பத்துல நடந்துக்கிட்டு இருக்கிற பிரச்சனை. தெளிவா சொல்லணும்னா, குடும்ப அரசியல் பிரச்சனைனு கூட வச்சிக்கோயேன்” என்று சொன்னவனை புரியாமல் பார்த்து,

“புரியல” என்றாள்.

அதே நேரம் பரமசிவம் தன் இருமகள்களின் கரத்தை பிடித்துக் கொண்டு அதாவது இளைய மகளின் கரத்தை மெதுவாக பிடித்து அழைத்துக் கொண்டும் அழுகையுடன் தாயை காப்பது போல் நின்று இருந்த மூத்த மகளின் கரத்தை அழுத்தமாக பிடித்து இழுத்துக் கொண்டும் அவ்வீட்டை விட்டுச் சென்றார். தேவியும் கண்ணீரோடு அவர்கள் பின்னால் சென்றார்.

ஜீவாவோ “சொல்றேன்” என்றவன் தந்தையை நோக்கி வாசலை பார்த்து விட்டு “அப்பா அண்ணியை பத்தி கவலைப்பாடதீங்க. அவங்களே வந்திடுவாங்க” என்றவன் “சரிப்பா நான் கடைக்கு கிளம்புறேன்” என்று சொல்லி தாயை பார்த்து “அம்மா நான் திரும்ப வர வரைக்கும் மெலோடியை பார்த்துக்கோங்க” என்று சொன்னான்.

அவரோ “சரிப்பா…” என்றவர் சங்கடத்துடன் “ஜீவா அப்புறம் நைட் சடங்கு” என்று இழுத்தவரை நோக்கி,

“ஏன்ம்மா” என்று சிறு சினத்துடன் கேட்டவன் “இப்போ அதெல்லாம் வேணாம் அம்மா. இருக்கிற பிரச்சனை முடியட்டும். அப்புறம் தாத்தா இன்னும் இரண்டு நாள்ல வந்திடுவேனு சொன்னாரு. சோ அவர் வந்ததுமே நேர்லையே அவர் கிட்ட மெலோடியை அறிமுகப்படுத்திக்கிறேன்” என்று சொன்ன ஜீவா பிடித்திருந்த மனைவியின் கரத்தை விடாமல் அவளை அழைத்துக் கொண்டு அவன் அறையை நோக்கிச் சென்றான்.

மெல்லிசையோ அவன் அவளின் கரத்தை பிடித்ததிலிருந்தே ஒரு விதமான அசௌகரியத்தை உணர்ந்தவள் யாரும் அறியா வண்ணம் தன் கரத்தை அவன் கரத்திலிருந்து உருவ முயன்றுக் கொண்டு இருந்தாள்.

அது தெரிந்தும் ஜீவா அவள் கரத்தை விடாமல் இன்னும் அழுத்தமாக பிடித்துக் கொண்டு தான் பேசிக் கொண்டு இருந்தான்.

மாடியை நோக்கிச் சென்றுக் கொண்டு இருந்த மகனையும் மருமகளையும் கவலையுடன் பார்த்த பூங்கோதை, “என்னங்க இப்படி ஆகிடுச்சி. இந்த பொண்ணு வீட்டுக்கு வந்ததுமே நம்ம மூத்த மருமக இந்த வீட்டை விட்டு போகுற நிலைமைக்கு வந்துடுச்சி” என்று பேசிக் கொண்டு இருந்தவரை “கோதை…” என்று அதட்டினார் கோவிந்தராஜ்.

பூங்கோதைக்கோ கணவரின் அதட்டலில் உடல் சட்டென்று தூக்கி போட, வாயை கப்சிப் என்று மூடிக் கொண்டார்.

“திரும்ப உன்னோட வீணா போன ஜாதக நம்பிக்கையை குடும்பத்துல எடுத்துட்டு வராத கோதை. அப்புறம் நிம்மதி இல்லாம போயிடும்” என்று மனைவியை கடிந்தவர் அங்கே இருந்து சென்று விட்டார்.

பூங்கோதையோ கவலையோடு கணவன் போகும் திசையை பார்த்தபடி மனதிற்குள் ‘நான் என்னங்க பண்ணேன். எல்லாம் நம்ம குடும்ப ஜோசியர் சொன்னது தானே. இதுக்கு அப்புறம் என்ன நடக்குமோ தெரியலையே’ என்று கவலையுடன் பூஜையறையை நோக்கிச் சென்றார்.

என்ன தான் பூங்கோதை மிகவும் நல்லவராக இருந்தாலும் ஜோதிடத்தில் ஊறி போனவர். அதிலும் மகன்கள் இருவருக்கும் ஏதாவது சின்னதாக நடந்து விட்டால் கூட, ஜோதிடத்தில் சொன்னது போலவே நடக்கிறதே என்று எண்ணி கவலை கொண்டு அழுது அதனால் வீட்டில் சண்டையே வெடிக்கும் அளவிற்கு ஜோதிடத்தின் மீது அலாதி நம்பிக்கை வைத்து இருப்பவர் தான் இந்த பூங்கோதை.

அந்த நம்பிக்கையே மகனின் வாழ்க்கையை அழிக்கும் என்று பாவம் அவர் கணவில் கூட நினைத்து பார்த்து இருக்க மாட்டார்.

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page