வெற்றியின் சிரித்த முகத்தை பார்த்த ரவிக்கு, மனம் நிறைந்து போனது. எப்பொழுதும் அவனின் கடு கடுவென்று இருக்கும் முகத்தை விட, இந்த முகம் அவனை மிக மிக வசீகரமாக காட்டியது.
“அண்ணே, யாருகிட்டண்ணே சிக்கினிங்க?” என்று கேட்டான் ரவி.
வெற்றியின் முகம், தாமரை மலர் போல விரிந்தது. இதழ் கடித்து வெட்கப்பட்டான்.
“அண்ணே, புதுசா நீங்க வெட்கப்படுறீங்க? பார்க்க நல்லா இருக்குது,” என்றான் ரவி.
வெற்றி, வாய் திறக்கவில்லை. மூடிய விழிகளுக்குள் தெரிந்த அனுவின் முகத்தை ரசித்துக் கொண்டிருந்தான்.
மாலை நேரம் வரை, அவன் அப்படியே இருக்க, ரவியும் அவனை தொந்தரவு செய்யவில்லை.
****
நிஷா, விஷாகாவை பார்த்துவிட்டு வருவதாக வீட்டில் பொய் கூறிவிட்டு, கைபேசியை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தாள்.
ஸ்கூட்டியில் சென்றவள், கைபேசியில் விஷாகாவுக்கு அழைத்து விட்டு, காதில் இயர் போனை மாட்டினாள்.
“நிஷா, கிளம்பிட்டியா டி?” விஷாகா கேட்டாள்.
“கிளம்பிட்டேன், ஆனால், பயமா இருக்குது, அவர்கிட்ட போய் நான் என்ன பேசுறது,” என்று பயத்தோடு கேட்டாள் நிஷா.
“நீ போனதும் அவரை அண்ணேனு கூப்பிட்டு ஐஸ் வச்சிரு, அதுக்கு அப்பறமா விஷயத்தை சொல்லு, ரமேஷ்ஷும் சுரேஷ்ஷும் எங்கள தொல்லை பண்றாங்க வெற்றி அண்ணேனு அழுதுகிட்டே சொல்லு, அவர் கண்டிப்பா உருகுறதுக்கு வாய்ப்பு இருக்குது,” என்று விஷாகா அவளுடைய மூளையை கசக்கி ஒரு ஆலோசனை கூற, பற்களை கடித்த நிஷா ஸ்கூட்டியை ஓரமாக நிறுத்திவிட்டு விஷாகாவிடம் கத்தினாள்.
“உருகுற ஆள் எப்படி டி இந்த தொழில் செய்வாரு, லூசாடி நீ? அவருக்கு இரக்கம், கருணைனு எதாவது இருந்துச்சுனா அப்பவே இந்த தொழிலை விட்டுருப்பாரு, ஐடியா சொல்லுற மூஞ்ச பாரு,” என்று திட்டினாள்.
“சரி சரி விடு டி, நீ பார்த்து போ, போய்ட்டு பேசிட்டு எனக்கு தகவல் சொல்லு, நான் நைட் நம்ம த்ரீ ரோசஸ் க்ரூப்ல எனக்கு பார்த்த மாப்பிள்ளை போட்டோ அனுப்பி வைக்கிறேன்,” என்று அழைப்பை துண்டித்து விட்டாள் விஷாகா.
“ஐடியா கொடுக்குற மூஞ்ச பாரு,” என்று திட்டிக் கொண்டே ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து கிளம்பினாள் நிஷா.
வெற்றியின் ஆபிஸ் வந்ததும், அவளின் கை, கால்கள் பயத்தில் நடுங்கியது. இருந்தாலும் யாரும் அறியாமல் மறைத்துக் கொண்டாள்.
ஆனாலும் அவளின் கால்கள் நடனமாட, விஷாகாவுக்கு அழைத்து, லைனில் இருக்க சொல்லி இயர் போனை காதில் மாட்டிக் கொண்டு சென்றவளின் விழிகள் அதிர்ச்சியில் உறைந்து நின்றது.
ரவி ஒருவனை இழுத்து போட்டு, மாட்டை அடிப்பது போல் அடித்துக் கொண்டிருந்தான். அவன் அடித்தது வேறு யாரையும் அல்ல, நிஷாவின் காதலன் ரமேஷ். ரமேஷ்ஷின் அருகில் சுரேஷ் பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தான்.
“அண்ணே, இவனை என்ன பண்றது? இவனை பார்த்தாலே எனக்கு கொல்லணும்னு வெறி வருது,” என்ற ரவியின் கூற்றை காதில் வாங்காமல் நாற்காலியில் சாய்ந்து கிடந்தான் வெற்றி.
“ஹேய்… விஷாகா இங்கே ரமேஷ்ஷும் சுரேஷ்ஷும் அடி வாங்கிட்டு இருக்கானுங்க டி,” நிஷா விஷாகாவிடம் கூற, “என்ன நிஷா நீ பேசுறதே கேட்கல காத்துதான் வருது,” என்றாள் விஷாகா.
“கேட்கலையா? சத்தமாதான சொன்னேன்,” என்றவளின் குரல் வெளியே வரவில்லை. காற்று மட்டும்தான் வெளியே வந்தது.
பயத்தில் அவள் எச்சில் விழுங்க, அந்த நேரம் ரவி கோபமாக மீண்டும் ரமேஷ்ஷை அடிக்க, கை ஓங்கும் பொழுது ஆபிஸில் நின்றிருந்த நிஷாவை பார்த்து திகைத்து விட்டான் ரவி.
நிஷாவின் விழிகள், ரவியை பயத்தோடு பார்த்தது.
“ஹய்யோ என்னை தப்பா நினைச்சிருப்பாலே! எப்பவும் அண்ணே அடிப்பாரு, இல்லைனா குண்டனுங்க அடிப்பானுங்க, இன்னைக்கே இவனை நானே அடிக்கணும்னு நினைச்சி இப்படி மாட்டிகிட்டேனே,” என்று புலம்பியவன், “நான்தான் இந்த கதையோட உண்மையான ஹீரோ, தப்பா நினைக்காதம்மா என்னை,” என்று நினைத்துக் கொண்டான்.
ரவி தன்னை அடிக்காமல் வாசல் புறம் பார்த்ததும் ரமேஷ் தலையை தூக்கி, அவனும் வாசல் புறம் எட்டி பார்க்க, அங்கே நிஷாவை பார்த்ததும் துள்ளலாக எழுந்தான் ரமேஷ்.
அவனுக்கு ரத்தம் சொட்டவில்லை, ஆனால், கண்டிப்பாக உள் காயங்கள் இருக்கும். பின் அடித்தது நம் ரவி அல்லவா!
“நிஷாக் குட்டி மாமாவை அடிக்காங்க டா,” என்று முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு கூறினான் ரமேஷ்.
“நிஷாக் குட்டி,” என்று அவன் கூறியதும் ரவி, ரமேஷ்ஷின் வாயில் நாலு அடி வைத்தான்.
நிஷா பேச வந்த விஷயம் மறந்து, அப்படியே நின்றிருக்க, ஹீரோ போல் அவளின் அருகில் நடந்து வந்தான் ரவி.
நிஷாவின் தொடைகள் இரண்டும் கிடு கிடுவென்று நடுங்கியது, அவளுக்கு மட்டுமே தெரியும்.
“ஹாய் இங்கே என்ன பண்றிங்க?” என்று ரவியின் குரல் மாறியதும் நிஷா…. கண்களை விரித்து அவனை பார்த்தாள்.
வெற்றி, புருவ முடிச்சுடன், கண்களை திறந்து ரவியை பார்த்தான்.
“டேய் ரவி,” என்றான் அழுத்தமாக.
“ஹய்யோ அண்ணே, அனு பாப்பாவோட தோழி வந்துருக்காங்க, அவங்ககிட்டதான் பேசிட்டு இருந்தேன்,” என்று நொடியில் வெற்றியின் அருகில் சென்று நின்றுவிட்டான் ரவி.
நிஷாவை பார்த்ததும், அவளை “வா,” என்று சைகையால் அழைத்தான் வெற்றி.
அவள், பயத்தை மறைத்துக் கொண்டு இருவருக்கும் அருகில் சென்றாள்.
“ஹேய் நிஷா என்னாச்சி டி?” விஷாகா இயர் போனில் பதறிக் கொண்டிருந்தாள்.
“சார் உங்ககிட்ட……” என்று நிஷா வாய் திறக்க, “இவனுங்க ரெண்டு பேரோட சேர்ந்து நீங்களும் அனுவை ரோட்ல வச்சி மிரட்டிருக்கிறிங்க, பொண்ணுங்கதான நீங்க?” என்று அவன் சத்தமாக கேட்டதும் நிஷாவின் விழிகளில் இருந்து நீர் சுரந்தது. “இவருக்கு எப்படி தெரியும்,” என்று நினைத்தவள் உள் கன்னத்தை கடித்துக் கொண்டு விசும்பினாள்.
“அழுதா உன்னை விட்டுருவேனா?” என்று கேட்ட வெற்றியை பார்த்த ரவிக்கு, நிஷாவின் நிலைமை நினைத்து பரிதாபமாக இருந்தது.
“அண்ணே… அவங்க எதோ தெரியாமல்…” என்று ரவி கூற வர, “வாயை மூடு ரவி நீ! ஆபிஸே அதிர கத்தினான் வெற்றி.
“அண்ணே இன்னைக்கு ஆபிஸ் வரும்போது நல்லாதான இருந்தாரு, அதுக்குள்ள பழையபடி மாறிட்டாரா?” ரவி மனம் வாடிவிட்டான்.
“அனு எங்க ஃப்ரென்ட், நாங்க அவளை மிரட்டல சார், நீங்க எங்கள கடத்திட்டு வந்திங்க, அந்த கோபம் அன்னைக்கு, அதான் அனு மேல காட்டிட்டோம்,” என்று மெல்லிய குரலில் தங்கள் நிலையை அவள் எடுத்துரைக்க நெற்றியை நீவினான் வெற்றி.
“ரவி, இந்த பொண்ணு இப்போ என்ன சொல்லுது? வாங்கிட்டு போன பணத்தை வட்டியோட சேர்த்து கொண்டு வந்திருக்குதா?” என்று கேட்ட வெற்றியை ரவியும் நிஷாவும் திகைத்து பார்த்தனர்.
“அண்ணே என்னாச்சி உங்களுக்கு? இவங்க வேற எதுக்கோ இப்போ வந்திருக்காங்க,” என்று சரியாக கணித்து கூறினான் ரவி.
“இந்த பொண்ணு அனுவோட ஃப்ரென்ட், அதுனால என்னால இப்போ திட்டவோ அடிக்கவோ முடியல, நீயே என்னனு இவகிட்ட விசாரி,” என்று பெரிய பொறுப்பை ரவியின் தலையில் சுமத்தினான் வெற்றி.
ரவி உள்ளுக்குள் குத்தாட்டம் போட்டான்.
நிஷா எதற்காக இங்கு வந்தாளோ, அந்த நோக்கத்தை ரவியிடம் சொல்ல, ரவியோ கற்பனையில் ஊட்டி மலை உச்சியில் நிற்பது போல் அவனின் இதயத்தில் குளிர் பரவியது.
“இனிமே இவனுங்க எங்களுக்கு வேண்டாம் சார், இவனுங்களால அனுவுக்கு எதாவது பிரச்சனை வந்தா நீங்களே பார்த்துக்கோங்க, நீங்க அனுவுக்கு எப்பவும் பாதுகாப்பா இருக்கணும், அதை சொல்லதான் நான் இங்கே வந்தேன்,” என்றதை மட்டும் வெற்றியின் முகத்தை பார்த்து எப்படியோ கூறிவிட்டாள் நிஷா.
ரமேஷ்ஷும் சுரேஷ்ஷும், நிஷாவை அதிர்ச்சியில் பார்த்தனர்.
“சரி நீ கிளம்பு,” என்று கூறியவனின் பதிலை அவள் எதிர்பார்க்க, அவனோ கண்களை மூடிக் கொண்டு மறுபடியும் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.
வெற்றி எதுவும் கூறாததால் நிஷா ரவியை பார்த்தாள்.
“நீங்க போய்ட்டு வாங்க, எல்லாத்தையும் எங்க அண்ணே பார்த்துப்பாரு,” என்று கண் சிமிட்டி கூறிய ரவியை புருவ முடிச்சுடன் பார்த்த நிஷா, “நீங்கதான் எனக்கு காலையில கால் பண்ணீங்களா?” என்று கேட்டு விட்டாள்.
“ஹய்யோ பக்கத்துல அண்ணே இருக்கும் போதே கேட்டுட்டாளே,” என்று பதறிய ரவி, “இ.. இல்லை நான் கால் பண்ணலையே,” என்றான் தடு மாற்றத்தோடு. “நல்ல வேலை அண்ணே கண்ணை மூடி தூங்கிட்டாரு போல, அப்போ எதும் கேட்டிருக்காது,” என்று வெற்றியை ஒரு முறை பார்த்துக் கொண்டான் ரவி.
“காலையிலே எனக்கு ஒரு கால் வந்துச்சு, அதுல பேசுனவங்க நான் ரவி பேசுறேன்னு சொன்னாங்க, குரல் கூட உங்கள மாதிரியேதான் இருந்த மாதிரி இருந்துச்சு, அதான் கேட்டேன், சாரி,” என்று கூறிவிட்டு அவள் செல்ல,
“ஹய்யோ நிஷாகுட்டி போகாதம்மா,” என்று ரமேஷ் வாயை திறந்து கூற முடியாமல் கதறினான். ரவிதான் அவனின் வாயில் நாலு அடி போட்டானே, அதில் வாய் சுளுக்கி கொண்டது போலும்.
“ஹேய் நில்லு,” என்ற வெற்றியின் அதிகாரமான குரலில் நிஷா திடுக்கிட்டு நின்றாள்.
“போச்சு, போச்சு அண்ணனுக்கு எல்லாம் கேட்டிருச்சு, கால் பண்ணது நான்தான்னு கணிச்சிருப்பாரு இப்போ என்னை கொல்ல போறாரு,” என்று ரவி பயத்தோடு நின்றிருந்தான்.
நிஷா அதே இடத்தில் ஸ்தம்பித்து நிற்க, வெற்றி எழுந்து அவளின் அருகில் சென்றான்.
“நான் இதை யார்கிட்ட கேட்குறதுனு எனக்கு தெரியல,” என்றவன் நிஷாவை பார்க்க, நிஷா வெற்றியை புரியாமல் பார்த்தாள்.
“ரவிக்கும் எதும் இதை பற்றி பெருசா தெரிஞ்சிருக்காது, அவன் என்னை விட சின்ன பையன்,” என்றான்.
“நமக்குதான் எல்லாம் தெரியுமே? எனக்கு தெரியாததை, அப்படி எந்த விஷயத்தை அண்ணே அவகிட்ட கேட்க போறாரு,” என்று இருவரையும் பார்த்தான் ரவி.
“பொதுவா பொண்ணுங்களுக்கு மாசம் அஞ்சி நாள் வயிறு வலி வருமாமே, அந்த வலி எப்படி இருக்கும்,” என்று கேட்ட கெட்டவனை நெஞ்சில் கை வைத்து அதிர்ச்சியோடு பார்த்தாள் நிஷா.
“இவர் என்ன இதை பற்றி என்கிட்ட கேட்கிறாரு?” என்று கைகள் நடுங்க கையில் இருந்த கைபேசியை இறுக்கி பிடித்துக் கொண்டாள்.
“அது என்ன வயிற்று வலியா இருக்கும்?” என்று நாடியில் விரல் தட்டி யோசிக்க ஆரம்பித்து விட்டான் ரவி.
ரவியிடம் அடி வாங்கி கீழே தரையில் கிடந்த தற்குறிகள் இரண்டும் ஒன்றும் புரியாமல், எதோ கதை கேட்பது போல் நிஷாவையும் வெற்றியையும் மாறி மாறி பார்த்தனர்.
“நீங்க அனுகிட்ட கேளுங்க, அவ உங்க வீட்டுலதான இப்போ இருக்கா,” என்று திக்கி திணறி கூறிய நிஷாவை வெறியோடு முறைத்து பார்த்தான் வெற்றி.
“நீ சொல்ல மாட்டியா?” பற்களை கடித்தான் வெற்றி.
“அது… அது அடி வயிறு ரொம்ப வலிக்கும், இடுப்பு, முதுகுனு எல்லாமே வலிக்கும், அதுனால உடம்பும் ரொம்ப சோர்வா இருக்கும், என்னை விட அனுவுக்குதான் இது பற்றி தெரியும், ஏனா அவதான் இதுக்காக லீவ் போட்டு ரெஸ்ட் எடுப்பா, நீங்க அவகிட்டயே கேட்டுக்கோங்க சார்,” என்று ஓடி விட்டாள் நிஷா.
வேறு எதுவும் கேட்டு விடுவானோ என்ற பயம் அவளுக்கு.
அவள் கூறி சென்றதில், வெற்றிதான் அதிர்ச்சியில் நின்றிருந்தான்.
அடுத்த பதிவில் பார்ப்போம்.
இந்த எபி பிடிச்சிருந்தா மறக்காமல் ஒரு குட்டி ஹார்ட் ப்ளீஸ்.
