இரண்டு நாட்கள் கழித்து.…
காலை நேரம், வாடகை வீட்டுக்கு ஆள் குடியேற வந்து விட்டது. லாரியின் ஹாரன் சத்தம் காதை கிழித்தது.
“ச்ச” என்பது போல் முகத்தை சுளித்து, கண்களை சுருக்கினான் வெற்றி. அவனின் தூக்கம் களைந்தது.
“அனு” என்று அழைக்கும் ஆண் குரலில் திடுக்கிட்டு எழுந்தான். அவனின் கால்கள் வேகமாக வாயிலை நோக்கி நடை போட்டது.
லாரியில் இருந்து டொம்மென்று துள்ளி கீழே குதித்தாள் அனு. அவளின் கைகளில் பூந்தொட்டி. அதை தன் நெஞ்சோடு அழுத்தி பிடித்திருந்தாள்.
வெற்றியின் விழிகள் விரிந்தது. ‘இது அவளேதான். தனக்கு பயந்து தன்னுடைய ஆபிஸ் வெளியே நின்றிருந்தவள். அந்த மருண்ட மான் விழியின் சொந்தக்காரி’ என்று நினைத்தான்.
ஆம், அவளேதான். குட்டி தேவதை அனு. இருபது வயது பாவை. பயந்த சுபாவம் உடையவள். வெள்ளை மனம் கொண்டவள். குழந்தை தனம் நிறைந்தவள்.
அவளின் தாய் சுபத்ரா. தந்தை சுவாமி நாதன். நடுத்தர வர்க்கம் அவர்களுடையது. அவர்களின் ஒரே ஒரு செல்ல மகள் தான் அனு.
வீட்டுக்கு தேவையான பொருட்கள் லாரியில் இருந்து கீழே இறங்கியது.
சுவாமி நாதன் அனைத்து பொருட்களையும் சரி பார்த்து இறக்கி வைத்தார்.
அவரின் முன்னால் வந்து நின்ற வெற்றியின் உதவியாளன் ரவி, சுவாமி நாதனிடம் வெற்றியை காட்டி எதுவோ கூற,
உடனே சுவாமி நாதன் வெற்றியிடம் வந்தார். “தம்பி, மாசம் தொடங்குனதும் உடனே வாடகை தர முடியாது. பத்தாம் தேதிக்குள்ள தந்துருவேன் தம்பி” என்றார்.
வெற்றியின் பார்வை அனுவிடம் சென்றது.
அவள் பூந்தொட்டியை இறுக்கி பிடித்த வண்ணம் தலை குனிந்து நின்றிருந்தாள்.
“அவ உங்க பொண்ணா?” என்று சுவாமி நாதனிடம் கேட்டான் வெற்றி.
“ஆமா ப்பா. என் பொண்ணுதான். ஹேய் அனு, இங்கே வா” என்று தன் மகளை அழைத்தார் சுவாமி நாதன்.
அவள் குனிந்த தலையோடு வந்தாள். அவளின் இதயத்துடிப்பு அதிகமானது. அவனிடம்தானே அவளின் தோழிகள் பணம் வாங்கி இருக்கிறார்கள். அதனால் பயந்தாள்.
“இவர்தான் நம்ம ஹவுஸ் ஓனர் தம்பி” என்று வெற்றியை அனுவிடம் கூற, அவள் நிமிர்ந்து அவன் முகத்தை பார்க்கவில்லை.
“உங்க பொண்ணுக்கு கண்ணு தெரியாதா?” நக்கலாக கேட்டான் வெற்றி.
“தெரியும் தம்பி. புது ஆள், அதுனால பயப்படுறா. சின்ன பொண்ணு தம்பி. கொஞ்சம் பயந்த சுபாவம்” என்றார் சுவாமி நாதன்.
“நீங்க சொன்ன டைம் வீட்டு வாடகை என் கைக்கு வந்துருக்கணும். லேட் ஆக்கி என்னைய டென்ஷன் பண்ணக்கூடாது” என்று மிரட்டுவது போல் கூறினான்.
“அது எல்லாம் கரெக்ட்டா வந்துரும் தம்பி” என்று உறுதியாக கூறி விட்டு சென்றார் சுவாமி நாதன்.
சுபத்ராவுக்கும் சுவாமி நாதனுக்கும் வெற்றியை பற்றி தெரியாது. அதனால் அவர்கள் இருவரும் இவனை நல்லவன் என்று நினைத்தனர்.
வீட்டு பொருட்கள் கட கடவென்று இறக்கி வைக்கப்பட்டது. வீட்டை உடனே சுத்தம் செய்து அன்றே பால் காய்ச்சி விட்டார் சுபத்ரா.
“அனு செல்லம், இங்கே வா” என்று மகளை அழைத்தார்.
அவள் அப்பொழுதுதான் குளித்து முடித்து வந்து தலையை துவட்டினாள்.
“என்ன ம்மா?” மெல்லிய குரலில் கேட்டாள்.
“அந்த ஹவுஸ் ஓனர் தம்பிக்கு பால் கொடுத்துட்டு வா. அப்படியே காலைல சாப்பிட வீட்டுக்கு வர சொல்லு” என்றார்.
“நானா ம்மா?” அதிர்ச்சியாக கேட்டாள் அனு.
“நீதான் டி” என்றார் சுபத்ரா. அவரின் மனதில் அவள் இன்னும் சிறு பிள்ளை.
ஒரு சிறிய குவளையில் இருந்த பாலை எடுத்துக் கொண்டு எதிர் வீட்டை நோக்கி சென்றாள் அனு.
கரங்கள் நடுங்கியது. கால்கள் ஒவ்வொரு அடியாக பார்த்து பார்த்து வைத்தது. அவன் வீட்டு வாயிலில் கால் எடுத்து வைத்ததும் பயம் என்ற உணர்வு பேயாக அவளின் மனதை நிறைத்தது.
மெல்ல அடி எடுத்து வைத்து வீட்டுக்குள் சென்றாள். ஹால் வரை சென்று பார்த்தாள். வீட்டில் ஆள் அரவம் இல்லை.
அறையில் இருந்து கருப்பு நிற சட்டை அணிந்து கொண்டு வெளியே வந்தான் வெற்றி.
திடீர் காலடி சத்தத்தில் சிலிர்த்து விட்டாள் பெண்ணவள்.
அவளை தன்னுடைய வீட்டுக்குள் எதிர்பாராதவன், புருவம் உயர்த்தினான்.
“அம்மா பால் கொடுத்து விட்டாங்க” நடுங்கும் கரங்களோடு பாலை அவன் முன் நீட்டினாள்.
“வீட்டுல நான் ஒரு ஆள்தான் இருக்கேன். ஏன் சொம்புல பால் கொண்டு வந்துருக்க?” அவனின் குரலில் கிண்டல் நிறைந்திருந்தது. அவனுக்கே அது சந்தேகமாக இருந்தது. ‘நாமா இப்படி கிண்டலாக பேசுகிறோம்’ என்று நினைத்தான்.
“அது… தெரியாது எனக்கு.. அம்மாதான் கொடுத்து விட்டாங்க” என்று திக்கி திணறி ஒரு வார்த்தையை அவள் பேசி முடிக்கவே பெரும் பாடு பட்டாள் அனு.
அவளின் கைகளில் இருந்த குவளையை வாங்கி வாயில் சரித்தான். ஒரே மூச்சாக பாலை குடித்து விட்டான்.
இவள் அதிர்ச்சியோடு பார்த்தாள் அவனை.
“இந்தா, கொண்டு போ” என்று காலி குவளையை அவள் முன் நீட்டினான்.
அவள் தலை குனிந்து வாங்கிக் கொண்டாள்.
“கிச்சன்ல போய் கழுவி கொண்டு போ” என்றான் கட்டளையாக.
“இ.. இல்லை, வீட்டுல போய் கழுவிக்கிறேன்” என்றவளை முறைத்து பார்த்தான்.
“கழுவிட்டு போ” என்றான். இந்த முறை கடுமையாக இருந்தது அவனின் வார்த்தை.
அவளின் கால்கள் உடனே ஓடியது கிச்சனை நோக்கி.
குவளையை கழுவியவள் திரும்ப, அவளின் பின்னால் நெருக்கத்தில் நின்றிருந்தான் வெற்றி.
இவளுக்கு மூச்சு முட்டியது அவனின் அருகாமை.
“நீ தான வந்து பத்தாயிரம் கடன் வாங்கிட்டு போன?” என்று கேட்டான்.
“அது நான் இல்லை. என் ஃப்ரெண்ட்ஸ்” என்றவளின் விழிகள் உடனே ஈரமாகியது. “வீட்டுல சொல்லாதீங்க. அப்பா அம்மாக்கு தெரியாது” என்றாள்.
இவன் புருவம் ஏற்றி இறக்கினான்.
“இன்னும் அஞ்சி நாள்தான் இருக்கு. பணம் என் கைக்கு வருமா?” என்று கேட்டான்.
“வரும் சார். கண்டிப்பா வரும். என் ஃப்ரெண்ட்ஸ் தந்துருவாங்க” என்றாள் நம்பிக்கையாய்.
“சரி, போ” என்றான்.
“அம்மா உங்கள காலையில சாப்பிட கூப்பிட்டாங்க” என்றவள் அவன் பதிலை எதிர்பாராமல் ஓடி விட்டாள்.
வெள்ளி கொலுசு சிணுங்க ஓடி சென்றவளை இமை சிமிட்டாமல் பார்த்தான் வெற்றி.
அவளின் மருண்ட விழிகள் இவனை என்னவோ செய்தது. அவளின் பிஞ்சு உதடுகள் இவனை வஞ்சித்தது.
இவன் தலையை சிலுப்பி கொண்டு அவளை ரசிப்பதை நிறுத்தினான்.
‘நான் அங்கே போய் சாப்பிடணுமா?’ என்று அவனுக்குள் கேள்வி கேட்டவனுக்கு அங்கு செல்ல விருப்பம் இல்லை.
காலையில் அவனின் ஆபிஸ்க்கு சென்று விட்டான்.
***
“நீ காலையில அவரை சாப்பிடக் கூப்பிட்டியா? இல்லையா?” என்று அவளை கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்து எடுத்தார் சுபத்ரா.
“கூப்பிட்டேன் ம்மா. அவர் பதில் சொல்லல” என்றாள் சிறு குரலில்.
“அவருக்கு வேலை இருக்கோ என்னவோ. அவர் வந்ததும் பார்த்துக்கலாம் சுபி” என்றார் சுவாமி நாதன்.
“இல்லைங்க. எதிர் வீட்டுலயே அந்த தம்பி இருக்குது. அதான் வர சொன்னேன்” என்றார் சுபத்ரா.
“அதான் வரலைல, விடுங்க ம்மா” என்றாள் அனு.
காலை வெற்றியின் ஆபிஸ்ஸில் அவன் முன்னால் நின்றிருந்தார் சேகர்.
“ஆட்டோ சாவியை பிடுங்கி வச்சதும் தானா பணம் வந்துட்டு பார்த்தியா ரவி” என்றான் வெற்றி.
சேகர் வெற்றியின் மேஜையில் ஐம்பதாயிரம் பணத்தை எடுத்து வைத்தார். “ரெண்டு நாளா தொழில் இல்லை வெற்றி. என் பொண்ணு நகை கொடுத்தா, அதை வச்சி தான் பணம் ரெடி பண்ணேன் வெற்றி” என்றார்.
“எனக்கு அது தேவை இல்லை சேகர்” என்ற வெற்றி ரவியை பார்த்தான்.
ரவி அவரின் ஆட்டோ சாவியை கொடுத்து அனுப்பினான்.
****
இரவு வழக்கம் போல் ரேவதியின் வீட்டுக்கு சென்றான்.
சட்டையை கழட்டி அவள் மேல் படர்ந்தான். ஆனால், ஏதோ ஒரு உணர்வு. அனுவின் மருண்ட விழிகள் அவனின் நினைவில் வந்து சென்றது.
உடனே ரேவதியிடமிருந்து விலகினான். சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு கிளம்பி விட்டான்.
ரேவதி முதல் முறையாக அவனுக்கு மனதுக்குள் நன்றி கூறினாள்.
****
“தம்பி, காலையில சாப்பிட கூப்பிட்டேன் வரலையே” என்ற சுபத்ரா வீட்டுக்குள் நுழைந்தவனை தடுத்தார்.
அவனின் விழிகள் செந்நிறத்தில் ஜொலித்தது. அவன் போதையில் பிடியில் இருந்தான். ஆனால், தடுமாற்றம் இல்லாமல் நடந்தான்.
“இப்போ சாப்பிட வாங்க தம்பி” என்று அழைத்தார். அவருக்கு அவன் போதையில் இருப்பது தெரியவில்லை.
“நீங்க சாப்பாடு எடுத்துட்டு இங்கே வாங்க” என்றவன் அவனின் இருப்பிடத்தை கை காட்டி விட்டு சென்றான்.
சுபத்ரா அனுவோடு சேர்ந்து சாப்பாடு எடுத்துக் கொண்டு அவனின் வீட்டுக்குள் சென்றார்.
ஹாலில் பாயை விரித்து அப்படியே அமர்ந்து விட்டான் வெற்றி.
அவனுக்கு உணவை பரிமாறினார் சுபத்ரா. அனு அவருக்கு உதவினாள்.
இவனின் விழிகள் அனுவை தலை முதல் பாதம் வரை ஆராய்ந்தது.
“வீட்டுல யாருமே இல்லையா தம்பி?” என்று சுற்றி முற்றி பார்த்து கேட்டார் சுபத்ரா.
“இல்லை” ஒற்றை வரியில் முடித்துக் கொண்டான் அவன்.
“கிச்சன்ல போய் தண்ணி கொண்டு வாங்க” சுபத்ராவை அனுப்பி வைத்தான்.
அவர் உள்ளே சென்றதும் அனுவின் விழிகளை பார்த்தான்.
“ஃப்ரென்ட்க்கு பிறந்தநாள்னு பொய் சொல்லி காதலர் தினம் கொண்டாட பணம் கேட்டிங்களா?” என்று கேட்டான்.
இவளின் இதயம் அவனின் வார்த்தையில் நின்று விட்டது.
“அவங்க ரெண்டு பேர்தான்….” என்றவளுக்கு வார்த்தை வரவில்லை. அவனின் விழிகளை பார்க்க பயமாக இருந்தது.
“படிக்கிற வயசுல காதலர் தினம் முக்கியமா?” என்று கேட்டான்.
“அவங்கதான் சார்” என்றாள் கலங்கிய கண்களோடு.
“நீங்க என்ன இழவு வேணும்னாலும் பண்ணுங்க. ஆனால், என் பணம் வரணும்” என்றான்.
“தந்துருவாங்க சார்” என்றாள் நடுங்கும் அதரங்களோடு.
“தரணும். இல்லைனா அவங்களுக்கு ஒண்ணும் இல்லை. நீதான் என் பக்கத்துல இருக்குற” என்றான்.
இவளுக்கு இதயம் உறைந்து விட்டது.
அவன் சாப்பாட்டில் கவனம் வைத்தான்.
சுபத்ரா தண்ணீரை அவன் அருகில் கொண்டு வந்து வைத்தார்.
அவன் சாப்பிட்டு முடியும் வரை அங்கேயே இருந்தார் சுபத்ரா. வீட்டுக்கு செல்கிறேன் என்று கூறிய அனுவையும் பிடித்து வைத்திருந்தார்.
அனுவின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்தான் வெற்றி. அவனின் விழிகள் எங்கு சென்றாலும் கடைசியாக அவளின் செம்பருத்தி இதழ்களில் வந்து நின்றது.
அவனின் துளைத்து எடுக்கும் பார்வை வீச்சை பார்த்து இவளுக்கு நெஞ்சு குழி ஏறி இறங்கியது.
“வாங்க ம்மா” என்று சுபத்ராவை அழைத்துக் கொண்டு ஓடி விட்டாள் அனு.
—
அடுத்த பதிவில் பார்ப்போம்.
இந்த எபி பிடிச்சிருந்தா ஒரு குட்டி ஹார்ட் கொடுத்துட்டு போங்க ஃப்ரெண்ட்ஸ்.
