தேடல் – 1

அந்த அறையே ஊசி விழுந்தால் கூட கேட்கும் அளவுக்கு நிசப்தமாக இருந்தது. அங்கே இருந்த இருக்கையில் கைகள் கட்டப்பட்டிருந்த பெண்ணோ சட்டென மயக்கத்தில் இருந்து கண்களை விழித்துக் கொண்டாள்.

அறை முழுவதும் இருள் பரவி கிடக்க, இத்தனை நேரம் மயக்கத்தில் இருந்தவள் கண்களை சுருக்கி மெதுவாக திறந்து பார்த்தாள். அந்த அறை அவளுக்கு பரிட்சயமனது போல் தான் இருந்தது. ஆம் அது அவள் அலுவலக அறை தான்.

‘இங்கேயே தூங்கிட்டேனா?’ என்று எண்ணிக் கொண்டே எழ முற்பட்டவளுக்கு அப்போது தான் அவள் கட்டி வைக்கப்பட்டிருப்பது தெரிந்தது.

“யார் என்னை கட்டி வச்சது?” என்று குழப்பமும், அதிர்ச்சியுமாக தனக்கு தானே கேட்டுக் கொண்டவள், தன் பலம் கொண்டு கயிற்றை இழுக்க முயல, அது முடியாமல் தான் போனது.

‘இது வேலைக்கு ஆகாது’ என்று எண்ணியவளோ “யாராவது இருக்கீங்களா?” என்று கத்த ஆரம்பித்திருந்தாள்.

அவள் சத்தம் கேட்டு அந்த அறை கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தது ஒரு உருவம்.

அறை விளக்குகளை அவன் ஒளிர விட, திடீர் வெளிச்சத்தில் கண்கள் கூச, கண்களை மூடித் திறந்தவள், எதிரே நின்றிருந்த உருவத்தை அடையாளம் கண்ட நொடி அனல் தெறிக்க தான் அவனை பார்த்தாள்.

“எரும மாடே இது உன் வேலை தானா?” என்று வந்தவனை பார்த்து சீற,

அவள் சீற்றத்தை எல்லாம் கருத்தில் கொள்ளாதவனோ, குழப்பமான முகத்துடன் அவள் எதிரில் வந்து நின்று,

“ஏன் டி சேர்ல கயித்த கட்டிட்டு உட்கார்ந்து இருக்க?” என்று தான் அடக்கப்பட்ட சிரிப்புடன் கேட்டான்.

அதில் இன்னும் கோபம் வந்தது அவளுக்கு.

“எனக்கு பைத்தியம் பாரு, என்னை நானே கயிறு வச்சி கட்டிட்டு கத்திட்டு இருக்க” என்று கடுப்பாக சொன்னவள்,

“புராஜக்ட் கொடுத்து டார்ச்சர் பண்றேனு… என்னை கட்டி வச்சு நீ டார்ச்சர் பண்றியா?” என்று தான் பழியை அவன் மீது போட்டிருந்தாள்.

“அய்யோ ஆத்தா இந்த தைரியம்லாம் எனக்கு இல்ல மா. யாரோ உன்னால மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான எக்ஸ்பெரி கை ஏதாவது பண்ணிட்டு போயிருக்கும்” என்று நக்கலாக சொன்னவன் அவள் கட்டுகளை அவிழ்க்க உதவினான்.

அவளோ “எனக்கு நல்லா நியாபகம் இருக்கு. நீ தான் ஈவ்னிங் காபி கொண்டு வந்து குடுத்து குடி குடினு சொல்லி டார்ச்சர் பண்ண? உண்மையை சொல்லு? அதுல தானே மயக்க மருந்து கலந்து கொடுத்த?” என்று அவள் சி ஐ டி மூளையை கசக்கி அவனை குற்றம் சாட்ட,

கட்டுகளை அவிழ்த்துக் கொண்டிருந்தவன் தன் செயலை நிறுத்தி விட்டு சட்டென்று அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தான்.

“இந்த மூஞ்ச பார்த்து சொல்லு, உன்ன கட்டி போட உனக்கு காபி கொண்டு வந்து கொடுத்த மாதிரியா இருக்கு?” என்று கேட்டவன் விழி மொழியே சொன்னது அவள் மீதான அவன் கூடுதல் அக்கறையை.

எப்போதும் அவளிடம் வம்பு செய்ய துடிக்கும் அவன் விழிகளிலோ இப்போது காதலை தவிர வேறெதுவும் இல்லை.

ஆனால் மீண்டும் காதல் என்னும் வலையில் சிக்கி அவனிடம் ஏமாற விரும்பாதவள் வலுக்கட்டாயமாக தன் முகத்தில் கடுமையைக் கொண்டு வந்து,

“தேவையில்லாத பேச்சு எதுக்கு? சீக்கிரம் அவிழ்த்து விடு. எவனாவது ஆபீஸ்குள்ள புகுந்து புராஜக்ட்ல கை வச்சிட்டானானு பார்க்கணும்” என்று தான் அவன் காதல் பார்வைக்கு என்டு கார்டு போட்டு எரிந்து விழுந்தாள்.

‘கட்டினவன் உன் வாயையும் சேர்த்து கட்டிருக்கணும். அடங்குறாளா பாரு?’ என்று மனதில் அவளை திட்டிக் கொண்டே,

அவள் அருகில் குனிந்து பின்னால் கட்டப் பட்டிருந்த அவள் கை கட்டை அவிழ்த்துக் கொண்டிருந்தான்.

தன்னவன் அருகாமையும், பிரத்யேக வாசனையும், நீண்ட நாட்கள் கழித்து அவள் இதயத்தில் பட்டாம் பூச்சியை பறக்க விட்டது. என்ன தான் அவனிடம் கடுமையாக தன்னை காட்டிக் கொண்டாலும் காதல் கொண்ட மனதால் அவன் அருகாமையில் நிலை கொள்ளவே முடியவில்லை.

கண்களை மூடி, ரகசியமாக அவன் மூச்சு காற்றை சுவாசித்து கொண்டிருந்த கள்ளியை அவள் கள்வனும் கண்டு கொண்டான்.

அவள்  மோன நிலை அவனையும் ஈர்த்துக் கொள்ள, “சம்மு” என்று மென்மையாக அழைத்தவன் குரலில், உடல் மொத்தமும் சிலிர்த்து அடங்கியது பாவை அவளுக்கு.

மெதுவாக கண்களை திறந்து பக்கவாட்டாக அவனை பார்த்தவள் விழிகளை எதிர் கொண்டவன், “கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்று கேட்டான் அத்தனை காதலாக.

அவ்வளவு தான் எங்கிருந்து அவளுக்கு அத்தனை கோபம் வந்தது என்றே தெரியவில்லை.

சற்று முன் இருந்த மோன நிலை முற்றிலும் அறுந்து போனது. அவன் தளர்த்தி விட்டிருந்த கை கட்டுகளை வேகமாக கழட்டிக் கொண்டே எழுந்தவள் அவனை முறைத்த படியே தன் கணினியில் அப்போது தயாராகி கொண்டிருந்த புராஜக்ட் தகவல்களை சரிபார்க்க ஆரம்பித்து விட்டாள்.

போட்டிகள் நிறைந்த உலகம் அல்லவா! தங்கள் உழைப்பை திருட நடந்த சதியோ என்ற சந்தேகம் அவளுக்கு.

அவள் திடீர் விலகல் அவனுக்கும் வருத்தம் தான். ஆனால் அவள் இப்படி நடந்து கொள்வதற்கு தான் தானே காரணம் என்று புரிந்து கொண்டவனும், தலையை உலுக்கி தன்னை நிலை படுத்தி கொண்டான்.

அவள் அருகே வந்து “எல்லாம் சேஃப் தானே?” என்று கேட்க,

ஆம் என்று தலையை மட்டும் அசைத்தவள், “ரூம்குள்ள எல்லாம் அப்படியே தான் இருக்கு கம்யூட்டர்லயும் கை வச்ச மாதிரி தெரில. அப்புறம் யார் என்ன கட்டி போட்டிருப்பாங்க? எதுக்கு?” என்று குழப்பமாக கேட்டாள்.

பவனோ “டார்கெட் டார்கெட்னு சொல்லி டே, நைட் பார்க்காம வேலை வாங்குறல்ல, அதுல காண்டான எவனாவது பண்ணியிருப்பான். ஃப்ரீ யா விடு” என்று அவள் தோளில் கை போட,

அவன் கையை தட்டி விட்டு “சிஸ்டம் ஆஃப் பண்ணிட்டு வந்து சேரு” என்று உத்தரவிட்டபடியே வேகமாக வெளியேறினாள்.

முழங்கால் வரை இருந்த கருப்பு நிற டைட் ஸ்கர்ட், ஒயிட் ஷர்ட் அணிந்து இருந்தவள், அரை அடி உயர ஹை ஹீல்ஸிலும் வேகமாக நடக்க, அவள் சொன்ன பணியை முடித்த பவனோ அவள் பின்னால் ஓடி தான் வந்தான்.

இரவு பனிரெண்டு மணியை கடந்திருக்க, a’ அமைப்பில் ஒழுங்கு படுத்தப் பட்டிருந்த கணினி அறையை தாண்டி அந்த தளத்தில் இருந்த லிஃப்ட்டிற்குள் வேகமாக நுழைந்து கொண்டவள், பவன் வரும் முன்னமே லிஃப்டை கீழ் தளத்திற்கு இயக்கியும் இருந்தாள்.

ஓடி வந்து மூடியிருந்த லிஃப்ட்டின் கதவில் மோதி நின்ற பவனோ, “ராட்சசி” என்று அவளுக்கு திட்டியப்படி காலை நிலத்தில் உதைத்து விட்டு, இன்று அவளோடு சமாதானம் ஆகி விட வேண்டும் என்ற முனைப்பில், தன்னையே திடபடுத்திக் கொண்டு படிகளில் வேகமாக இறங்கி ஓடினான்.

பாவி மக பத்து ஃபுளோர் அவனை ஓட விட்டு, அவள் மட்டும் அலங்காமல் குலுங்காமல் லிஃப்ட்டில் இருந்து வெளியேறி, கடைசி ஷிஃப்ட் ஆட்களையும் இறக்கி  விட்டு, கேப்பை நிறுத்தத்தில் விட்டு செல்ல வந்த டிரைவர் முன் வந்து நின்றவள்,

“வீட்ல விட்டுருங்க” என்று கட்டளையாக சொன்ன படி காரில் ஏறி கொண்டதோடு மட்டுமில்லாமல் “கொஞ்சம் சீக்கிரம் வண்டிய எடுக்க” என்று அவசரமும் படுத்தினாள்.

எல்லாம் அந்த பாலாய் போன பவன் வந்து விட கூடாது என்ற நல்ல எண்ணம் தான்.

அவரும் அவள் கட்டளையை ஏற்று வண்டியை செலுத்த, கார், பார்க்கிங் ஏரியாவை விட்டு வெளியேற இருந்த சமயம்,

“ட்ரைவர் அண்ணா” என்று கத்திய படி ஓடி வந்த பவனை கண்டுக் கொண்ட ட்ரைவரும் மெதுவாக காரை நகர்த்த,

அவனும் வேகமாக ஓடி வந்து கார் கதவை திறந்து உள்ளே ஏறிக் கொண்டான்.

அவன் ஏறிக் கொண்டதும் சம்முவோ சலிப்பாக தலையில் கை வைத்து அமர்ந்துக் கொள்ள, மூச்சிரைக்க ஓடி வந்தவனோ “தாங்க்ஸ் அண்ணா” என்றவன் பெரிய பெரிய மூச்சுக்களை வெளிவிட்ட படி தான் அமர்ந்திருந்தான்.

டிரைவர் அண்ணாவும் இந்த லேட் நைட் வேலை எல்லாம் வழமையாக நடக்கும் ஒன்று தானே என்று அவர்களிடம் எதுவும் கேட்காமல் அவர்கள் அப்பார்ட்மெண்ட் வாசலில் இறக்கி விட்டு சென்றார்.

அங்கேயும் காரிலிருந்து வேகமாக இறங்கி சென்ற ராங்கிக்காரி பின்னால் கெஞ்சிக் கொண்டே தான் சென்றான் அவள் ரசவாதத்திற்கு சொந்தக்காரன்.

“சம்மு….. கொஞ்சம் நில்லு” என்று கெஞ்சிக் கொண்டே தன் பின்னால் வந்துக் கொண்டிருந்த பவனை கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல் இன்னும் தன் நடையில் வேகத்தை கூட்டினாள் சம்மு என்று அவனால் செல்லமாக அழைக்கப்படும் மிராக்கில் சமந்தா.

“ஏய் கொஞ்சம் மெதுவா தான் போயேன்” என்று அவள் நடைக்கு ஈடுக் கொடுக்க முடியாமல் கிட்டதட்ட ஓடி வந்தவனிடம்,

“என் பின்னாடி வராத” என்று அவள் எச்சரிக்க,

அவனோ “அதான் சொல்றேன் அப்டிக்கா உட்கார்ந்து பேசலாம். பத்து ஃபுளோர் ஓடி வந்தது முடில.. மூச்சு வாங்குது” என்று அவன் மூச்சிரைக்க சொல்லிக் கொண்டே வர,

ராட்சசி அவளோ கொஞ்சம் கூட மனம் இறங்காமல் அவனை பார்த்து முறைத்தபடி “இவ்வளவு நேரம் கார்ல உட்கார்ந்து தானே வந்த. இன்னும் பொய் சொல்றது, நாடகம் போடுறது எல்லாம் நிறுத்தவே இல்லல….. நீ திருந்தவே மாட்டியா?” என்று தான் கேட்டாள்.

அவள் முறைப்பை கூட மூலிகை காதலாக ஏற்றுக் கொண்டவன், “திருந்த ஒரு சான்ஸ் கொடேன்” என்று வேண்டுதலாக கேட்க,

அவளோ “சான்ஸ் தானே. அதான் மொத்தமா கொடுத்துட்டேனே. என்னை விட்டுரு” என்று ஒரு நிமிடம் நின்று அவனுக்கு பதில் சொன்னவள் மீண்டும் தன் வேக நடையை தொடர்ந்திருந்தாள்.

‘இம்ச பண்றாளே’ என்று எண்ணிக் கொண்டவன் “சம்மு…” என்று அழைத்தபடி ஓடி சென்று அவள் கையை பிடித்து தன் பக்கம் திருப்பினான்.

சட்டென்று அவன் கையை பிடிக்கவும் அதிர்ந்து தான் அவனை பார்த்தாள். அவளின் அந்த அரை நொடி அமைதியை தனதாக்கி கொண்டான் பவன்.

அவள் முகத்தை தன் இரு கைகளில் தாங்கி கொண்டே  அவள் கண்களை நேருக்கு நேராக பார்த்தவன் “ஐ லவ் யூ சம்மு. ரியலி லவ் யூ. சத்தியமா இப்போ பொய் சொல்லல” என்றவன், தன் காதலை அவளுக்கு உணர்த்தி விடும் நோக்கில், அவள் சுதாரிக்கும் முன்னமே, இமைக்காது அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் மென் இதழ்களை தன் வன் இதழ் கொண்டு மென்மையாக தீண்டியிருந்தான்.

மெல்லிய தீண்டல் தான் அதற்கு மேல் அவனுக்கு பாக்கியம் இல்லை போலும்.

இவ்வளவு நேரம்  சமத்தாக இருந்த சமந்தாவோ இப்போது பத்ரகாளியாகவே மாறி அவனை பிடித்து தள்ளி அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தாள்.

அவள் அறைந்ததில் கன்னத்தை பொத்தியபடி அவன் அதிர்ந்து அவளை பார்க்க,

“இன்னும் என்ன பைத்தியகாரியா நினைச்சிட்டு இருக்கல்ல நீ?” என்று வெறுப்பாக சொல்லி விட்டு திரும்பி ஒரு அடி எடுத்து வைத்திருப்பாள்.

மேலே இருந்து ஏதோ பொத்தென்று அவள் மேலே விழுவது போல் வர, நொடியில் சுதாரித்து அவளை பவன் பின்னால் இழுத்திருந்தான்

நொடியில் நிகழ்ந்த நிகழ்வில் இருவரும் சற்று மிரண்டு தான் தங்கள் முன் நிலத்தில் கிடந்த உருவத்தை அதிர்ந்து பார்த்தபடி நின்றிருந்தனர்.

மேலே இருந்து விழுந்ததில் மண்டை பிளந்து இரத்தம் நிலம் முழுவதும் பரவிக் கொண்டிருக்க, அவளின் வெண்ணிற தேகமோ அவள் அணிந்திருந்த சிவப்பு நிற பட்டு சேலைக்கு ஈடாக ரத்தத்தில் குளிக்க தொடங்கியது.

தன் காலடியில் கிடந்த உருவத்தை பார்த்த சமந்தாவுக்கோ அவள் யாரென்று கண்டுக் கொண்ட நொடி இதயம் நின்று தான் துடித்தது.

அவள் உதடுகளோ “அமிர்தா” என்று முனங்க, அருகில் நின்றிருந்த பவனுக்கும் கூட இதயம் பாரமாகி போனது.

இருவர் தலைகளும் அவள் விழுந்த திசையை நோக்கி மேலே நிமிர, அந்த கட்டிடத்தின் உச்சியில் நின்று கொண்டிருந்த உருவத்தை சரியாக கண்டுக் கொண்ட பவன் உதடுகள் குழப்பமாக உச்சரித்தது என்னவோ அவன் பெயரை தான், அஸ்வந்த் என்று.

ஆறு அடுக்குகள் கொண்ட மினி அப்பார்ட்மெண்ட் அது.

அவனிலிருந்து நான்கு அடுக்குகளுக்கு கீழ் தளத்தில் பதட்டத்தில் விரல்களை கடித்துக் கொண்டிருந்த உருவத்தை பார்த்த சமந்தாவோ “ஓ ஷிட்…” என்று நொந்தபடி, கீழே விழுந்து கிடந்த அமிர்தாவை நிமிர்த்த அவளோ மெல்லிய முனங்கலுடன் மயக்கமாகி இருந்தாள்.

அதற்குள் அஸ்வந்தும் விரைந்து கீழே ஓடி வந்தவன், “என்னாச்சு?” என்று அவர்களிடம் கேட்க, அவர்களும் என்னவென்று சொல்வார்கள் அவர்களுக்கே சரியாக தெரியாதே.

“அந்த பைத்தியம் தள்ளி விட்டான் போல” என்று இன்னமும் இரண்டாம் தளத்தில் அழுவது போல் முகத்தை வைத்து கொண்டிருந்தவனை சுட்டிக்காட்டி தன் சந்தேகத்தை சொன்னான் பவன்.

“இரத்தம் அதிகமா வருது சீக்கிரம் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகலாம்” என்று சமந்தா சொல்ல, “நான் போய் கேப் கூட்டிட்டு வரேன்” என்று ஓடினான் பவன்.

அவர்கள் நல்ல நேரமோ, இல்லை கெட்ட நேரமோ அவர்கள் பக்கத்து வீட்டு அம்புஜம் மாமி இரவு கலாசேத்திரம் முடித்து விட்டு அப்போது தான் தன் காரில் வந்து கொண்டிருந்தார்.

அவரிடம் “அமிர்தாக்கு  அடிபட்டுருச்சு ஹாஸ்பிடல் போகணும்” என்று மட்டும் பவன் மொட்டையாக சொல்லி அழைத்து வர, காரை பார்த்ததும் சமந்தா மடியில் இருந்து அமிர்தாவை கைகளில் ஏந்திக் கொண்டு காரை நோக்கி சென்றான் அஸ்வந்த்.

காரை விட்டு இறங்கிய அம்புஜம் மாமியோ, அமிர்தா நிலையை பார்த்து பதறியவர், “அட கிராதகா… கடைசில இந்த பொண்ண கொன்னே போட்டுட்டியே டா.” என்று அஸ்வந்திற்கு திட்டிய படி “எவ்வளவு பிளட் போய்டின்டு இருக்கு… சீக்கிரம் கார்ல ஏத்து டா தடிமாடே” என்று மீண்டும் அவனை அர்சித்தபடியே காரின் பின் கதவை திறந்து விட்டவர், முன்னால் இன்று ஓட்டுநர் பணியை கொடுத்திருந்த தன் கணவர் அருகில் ஏறிக் கொண்டார்.

அஸ்வந்த் அமிர்தாவை கையில் ஏந்தியபடி பின்னால் அமர்ந்துக் கொள்ள, அவனுக்கு இரு புறமும் ஏறிக் கொண்டார்கள் பவனும், சமந்தாவும்.

மாமியின் கணவரோ அவசரம் புரிந்து வண்டியை வேகமாக ஓட்டிட, அவரை விட தன் பேச்சில் வேகத்தை கூட்டி கொண்டிருந்தார் அம்புஜம் மாமி.

“என்ன இருந்தாலும் ஒரு ஆம்படையானுக்கு இம்புட்டு கோபம் ஆகாது டா. இப்படியா கட்டுனவாள கொடுமை படுத்துவ” என்று வழமை போல் அவர் அஸ்வந்தை திட்ட துவங்க, அவனோ ‘உனக்கு வேற வண்டியே கிடைக்கலையா?’ என்று தான் கண்களால் பவனை எரித்து கொண்டிருந்தான்.

‘சாரி மச்சான் அவசரத்துக்கு கூட்டிட்டு வந்துட்டேன். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்க’ என்று பவனும் கண்களால் அவனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான்.

மருத்துவமனையும் வந்துவிட, “மாடில இருந்து தவறி விழுந்துட்டாங்க” என்று சொல்லி பவன் அவளுக்கு வைத்தியம் பார்க்க சொல்ல,

அம்புஜம் மாமியோ “ஏன் டா பொய் சொல்ற? இவன் தான் தள்ளி விட்டுருப்பான்…  கல்லுளி மங்கனாட்டம் நிற்கிறத பாரு” என்று தான் அப்போதும் தன் வாய் ஓயாமல் அவனை அர்ச்சித்து கொண்டிருந்தார்.

அவர் பேச்சில் அஸ்வந்த் மீது சந்தேகம் கொண்ட மருத்துவரோ இந்த பக்கம் அமிர்தாவிற்கு சிகிச்சை அளித்தபடியே அந்த பக்கம் காவல் நிலையத்துக்கும் தகவல் கொடுத்திருந்தார்.

போலீசாரும் அரைமணி நேரத்தில் வந்திருக்க, அந்த நேரத்தில் அங்கு போலீஸை எதிர் பாராமல் அதிர்ந்து நின்றது என்னவோ பவனும், சமந்தாவும் தான்.

அஸ்வந்தோ அவளை இங்கு கொண்டு வந்து சேர்த்ததோடு என் வேலை முடிந்தது என்பது போல் மூன்றாம் மனிதனாக ஜன்னல் கம்பி அருகில் நின்று புகைக்க ஆரம்பித்து விட்டான்.

அவர்கள் அருகில் வந்த இன்ஸ்பெக்டர், “என்னாச்சு? எப்படி அடிப்பது?” என்று கேட்க,

பவன், சம்மு வாய் திறக்கும் முன்னமே தன் திருவாயை திறந்திருந்தார் அம்புஜம் மாமி.

“புருஷன் பொண்டாட்டி சண்டை. கோபத்துல மாடில இருந்து தள்ளி விட்டுருக்கான் இந்த விளங்காதவன்” என்று அவர் அஸ்வந்தை போட்டு கொடுக்க,

அவனோ சலிப்பாக இருபுறமும் தலையசைத்து விட்டு தன் பணியை தொடர்ந்தான்.

“அய்யோ மாமி அவன் ஒன்னும் தள்ளி விடல” என்று சொல்ல வந்த சமந்தாவை இடைமறித்த இன்ஸ்பெக்டர் “அடிப்பட்ட பொண்ணுக்கு நீ யாரு மா?” என்று கேட்டார்.

இதற்கும் முந்திரிக் கொட்டை போல் முந்திக் கொண்டு பதில் அளித்தது என்னவோ அம்புஜம் மாமி தான்.

“அவளோட நாத்தனார். இந்த விளங்காதவனோட பொறந்தவா. தங்கச்சி” என்று சொல்ல, அதிர்ந்தே விட்டார் இன்ஸ்பெக்டர்.

அஸ்வந்தோ திராவிட முகமாக இருக்க, சமந்தாவோ சைனா மேட் போல் அல்லவா இருந்தாள்.

இன்ஸ்பெக்டரின் அதிர்ந்த முகத்தை பார்த்த மாமியோ “என்ன? ஜாடை ஒத்து போகலனு பார்க்கிறேலா? அவாளுக்கு ஒரு அப்பா ரெண்டு அம்மா. அவா அப்பா வடநாட்டு பக்கம் ஒதுக்கினப்ப பொறந்த பொண்ணாம்” என்று அவர் ரகசியமாக கூற,

எங்கே தங்கள் குட்டு வெளிப்பட்டு விடுமோ என்று இவ்வளவு நேரமும் பயமும், பதட்டமும் கலந்து திருட்டு முழி முழித்துக் கொண்டிருந்த சமந்தாவோ இப்போது வஞ்சகமின்றி பவனை தான் முறைத்துக் கொண்டிருந்தாள்.

அவையெல்லாம் அவனின் ஸ்கிரீன் பிளே அல்லவா!

அப்போதும் தெளிவடையாத இன்ஸ்பெக்டர் ஸ்பெஷல் சைனா மேடாக அங்கு நின்றிருந்த பவனை சந்தேகமாக பார்த்து “இந்த பையன் யாரு?” என்று கேட்க,

“இவா ஆம்படையான்” என்று சமந்தாவை கைக் காட்டி சொன்னார்.

மேலும் “இந்த மூனு பேரும் உருப்படாத கேசுகள். அமிர்தா மட்டும் தான் தங்கமான பொண்ணு. அவளுக்கு இப்படி ஒரு நிலைமையை உண்டு பண்ணிட்டானே இந்த கடன்காரன்…  கிளியாட்டம் கட்டினவா இருக்கும் போதே கண்ட கண்ட களிசடைகளோட சுத்துவான். இப்போ அவளையும் அடிச்சு ஹாஸ்பிடல் கொண்டு படுக்க வச்சுட்டான். இனி அவனுக்கு கொண்டாட்டம் தான்” என்று அவனை திட்டியவர் மூக்கை உறிஞ்சி அழுதபடி சேலை முந்தானையில் மூக்கை சிந்தி கொண்டார்.

அப்போது மருத்துவர் சிகிச்சை முடித்து வெளியே வர, “அமிர்தா எப்படி  இருக்கா?” என்று பதறி துடித்தது எல்லாம் சமந்தாவும், அம்புஜம் மாமியும் தான்.

பவன் பதறவில்லை என்றாலும் அவள் நிலையறிய அவர்கள் அருகில் நின்றிருக்க, அஸ்வந்தோ அரை மணி நேரத்தில் அரை பாக்கெட் சிகரெட்டை ஊதி தள்ளியவன் பாக்கெட் காலியாகவே பேண்ட் பாக்கெட்டிலும், ஷர்ட் பாக்கெட்டிலும் ஏதேனும் எஞ்சி இருக்கிறதா? என்று தான் தேடிக் கொண்டிருந்தான்.

அதை கவனித்துக் கொண்ட இன்ஸ்பெக்டருக்கோ சந்தேகம் வழு பெற்றது.

அமிர்தா உயிருக்கு ஏதும் ஆபத்து இல்லை என்றாலும், கை, கால்களில் பிசைவு ஏற்பட்டிருப்பதாக மருத்துவர் சொல்லி செல்ல, அவள் உயிருக்கு பங்கமில்லை என்று அறிந்த பிறகே நிம்மதி அடைந்தனர் சமந்தாவும், மாமியும்.

“நாங்க அவளை பார்க்கலாமா?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே நுழைய போன மாமியை தடுத்த இன்ஸ்பெக்டர்,

 “அடிபட்ட பொண்ணை முதல்ல நான் விசாரிச்ச பிறகு தான் மத்தவங்க பார்க்கணும்” என்று ஸ்ட்ரிக்ட்டாக சொல்லி விட்டே அமிர்தாவை விசாரிக்க அறைக்குள் சென்றார்.

அவர் உள்ளே நுழையவும், இங்கே வயிற்றில் புளியை கரைத்தது என்னவோ பவனுக்கும், சம்முவுக்கும் தான்.

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page