தேடல் – 2

“ஏதாவது உளறி வச்சிடுவாளா?” என்று சற்று அல்லல் குரலில் பவன், சம்மு காதில் கிசு கிசுக்க, அவனை பக்கவாட்டாக திரும்பி பார்த்தவள், அமிர்தா அறையை எட்டி பார்த்தபடி “சமாளிச்சுடுவானு நினைக்கிறேன்” என்றாள்.

பவனோ “சரியான பயந்தாங்கோழி காக்கிய பார்த்ததும் இந்த ஆளு எதுவும் கேட்க முன்னமே எல்லாம் உளறி வைப்பா. நாம பெட்டி படுக்கையோட வீட்டை காலி பண்ண தயாராக வேண்டியது தான்.” என்று அவன் அமிர்தாவை குறை சொல்ல, சம்முவோ “ஏற்கனவே தலை வலிக்குது. நீ வேற படுத்தாத. கொஞ்சம் வாய மூடிட்டு இரு.” என்று தலையை பிடித்து கொண்டு அங்கே கிடந்த இருக்கையில் சென்று அமர்ந்து விட்டாள். பவனும் “நான் வேணா ஹெட் மசாஜ் பண்ணி விடவா” என்று கேட்டபடி அவள் தலையை மென்மையாக அலுத்த, சம்முவோ ‘எனக்கு வாய்த்த அடிமை மிகவும் சிறந்தவன்’ என்று சுகமாக கண் மூடி சாய்ந்திருந்தாள்.

அமிர்தாவை விசாரிக்க சென்ற இன்ஸ்பெக்டரும் சிறிது நேரத்தில் வெளியே வர, என்ன நிலவரம் என்று சற்று பதுங்கியே அவர் அருகில் சென்றனர் பவனும், சமந்தாவும். அப்போதும் கடமைக்கு கூட அஸ்வந்த் அவர்கள் அருகே வரவில்லை. சற்று தள்ளி ஒரு இருக்கையில் நன்றாக கால் நீட்டி அமர்ந்து போனை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்னாச்சு? அமிர்தா ஏதாவது பேசினாளா?” என்று அம்புஜம் மாமி அக்கறையாக கேட்க, அங்கிருந்த அனைவரையும் ஒரு சுற்று கொடூர பார்வையை வீசிய இன்ஸோ “நடு ராத்திரி நல்ல கேஸா வந்து சேர்ந்திருக்கு பாரு” என்று கடுப்பாக சொன்னவர் “செல்ஃபீ எடுக்க போய் தவறி விழுந்துட்டாளாம். இது ஒரு கேஸுன்னு விடிய விடிய இதுக்கு நான் காவல் வேற, ச்சைக்” என்று எல்லாரையும் முறைத்தவர் தகவல் கொடுத்து அழைத்த மருத்துவரை வெளிப்படையாவே நாலு கெட்ட வார்த்தையில் திட்டிக் கொண்டே சென்று விட்டார்.

“எதேய் செல்ஃபீ எடுக்க போனாளா?” என்று அம்புஜம் மாமி வாயை பிளக்க, பவன் மற்றும் சாம் நிம்மதியாக மூச்சு விட்டுக் கொண்டனர்.

இன்ஸ்பெக்டரை சமாளிக்க தான் அப்படி கூறியிருப்பாள். உண்மை நிலை என்ன என்று ஒருவாறு யூகித்து இருந்தனர் மற்ற மூவரும். பவனும் சமந்தாவும் சற்று ஆசுவாசமாக இருக்கையில் சென்று அமர, அடுத்த பிரச்சனையாக வந்து நின்றான் அஸ்வந்த்.

“பவன் நான் கிளம்புறேன்” என்று விட்டு அங்கிருந்து செல்ல முனைய, சும்மாவே அவனை கரித்துக் கொட்டும் அம்புஜம் மாமிக்கு இப்போது சொல்லவா வேண்டும். ‘பொண்டாட்டி அடிபட்டு ஹாஸ்பிடல்ல கிடக்கா, இவன் என்ன கொஞ்சம் கூட பாசமே இல்லாம எனக்கு என்ன வந்துச்சுங்கிற மாதிரி போறேன் சொல்றான்?’ என்று நமக்கே தோன்றும் போது அம்புஜம் மாமி வாய் சும்மா இருக்குமா? ஈவு இரக்கம் இல்லாத இவனே… பொண்டாட்டி மேல பெயருக்கு கூட அக்கறை இல்லாத அவனே என்று பொரிய ஆரம்பித்து விட, அதையெல்லாம் அவன் எங்கே கேட்டான்.

‘ஐயோ இந்த அம்மா சும்மாவே கலாஷேத்ரம் நடத்தும். இவன் வேற வினைக்கு வீணை வாசிச்சுட்டு போறானே!’ என்று அரற்றிக் கொண்டிருந்த  பவன் போன் இசைக்க, இந்நேரத்துல எவ அவ என்று தான் சமந்தா அவனை சந்தேக பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள். போனில் தீக்ஷி என்ற பெயர் வட மாநில மாடர்ன் மங்கை உருவத்துடன் மிளிர, அவன் போனை எட்டி பார்த்த சமந்தாவுக்கு தான் கோபம் தாறுமாறாக வந்தது.

எதையும் முகத்தில் காட்டிக் கொள்ளாது அவனையே அழுத்தமாக பார்த்துக் கொண்டிருக்க, சமந்தாவை பார்த்து அசட்டு புன்னகை ஒன்றை சிந்தியவனோ “ஹி ஹி…. மார்னிங் வேக்கப் கால்” என்று விட்டு போனுடன் கழண்டுக் கொண்டான்.

இங்கே சமந்தாவுக்கு தான் வயிறு திபு திபுவென எரிந்தது. ஆகாத புருஷனாக இருந்தாலும் அடுத்தவளுடன் கொஞ்சி குழாவினால் கடுப்பாக தானே செய்யும். அதுவும் புருஷனாக நடிக்க வந்தவன் மீது கோபம் கொள்வது எல்லாம் கொஞ்சம் அதிக படி தானோ!

லவ் பண்றேன், கல்யாணம் பண்ணிக்கலாமானு கேட்கிறவன் அவளை மட்டும் நேசிக்க வேண்டும் என்று அவள் எண்ணுவதில் தவறொன்றும் இல்லையே. ஆனால் அவனோ அவளிடம் மட்டுமா காதல் வசனம் பேசிக் கொண்டிருக்கிறான், இன்னும் நாற்பது பொண்ணுங்க வந்தாலும் அசராது சமாளித்து ஓட்டி விடுவானே. இவன் எப்போது திருந்துவான் வெண்ணெய் எப்போது நெய்யாவது என்று காத்துக் கொண்டிருக்கும் சமந்தாவுக்கு தான் கோபம் எல்லை கடந்து சில நேரங்களில் ஆழி பேரலையாக மற்றவர்களையும் சுருட்டி கொண்டு சென்று விடும்.

இப்போதும் கூட, அந்த தீக்ஷிக்கு இன்னும் அதிகமா வேலை கொடுக்கணும் என்று பொறாமையில் கொந்தளித்துக் கொண்டிருந்தவள் ஸ்மார்ட் வாட்ச் ரிமைண்டர் சத்தம் எழுப்ப, “மாமி அமிர்தாவ பார்த்துக்கோங்க ஆஃபீஸ்ல முக்கியமான மீட்டிங் இருக்கு. ஹாஸ்பிடல் செலவுக்கு ஜி-பேல பணம் போட்டு விடுறேன்” என்று அவளும் பறந்து விட்டாள்.

மறுபடியும் தன் வாய்க்கு ஓய்வின்றி இந்த முறை அவர் சமந்தாவை திட்டிக் கொண்டிருக்க, சாம் கண் காணா தூரம் சென்று காலையிலேயே சட்டி நிறைய கடலையை வறுத்துக் கொண்டு வந்து சேர்ந்த பவன் அவளை தேட, “அவளுக்கு அவ நாத்தனார பார்த்துகிறத விட ஆபீஸ் வேலை தான் முக்கியம்னு ஓடிட்டா” என்று அங்களத்து கொண்டார் அம்புஜம் மாமி.

“போய்ட்டாளா? நான் லேட் ஆஹ் போனா என்னை வச்சி செய்வாளே” என்று பவனும் கம்பியை நீட்டி விட, “யாருக்கும் அவ மேல அக்கறை இல்லையா?” என்று அமிர்தாவிற்காக வருத்த பட்ட ஒரே ஜீவன் அம்புஜம் மாமி மட்டும் தான்.

அவ்வளவு நேரம் இருக்கையில் இருந்து தூங்கிக் கொண்டிருந்த மாமியின் கணவரும் கூட “அம்பு நானும் கிளம்புறேன் டி” என்று சொல்ல, சாமி உத்தரவு தந்தால் தானே போக முடியும்.

“உடம்பு முடியாதவள ஹாஸ்பிடல்ல போட்டுட்டு ஆளாளுக்கு அவா அவா வேலையை பார்த்துட்டு போனா…. அவளை யாரு பார்த்துப்பா? பாவம் அப்பாவி பொண்ணு. ஒரு அரக்கணுக்கு வாக்கப்பட்டு அலங்கோலமா கிடக்கா” அவளுக்காக ஒருநொடி கண்கலங்கிய மாமியோ தனக்கு தேவையான மாத்து உடைகளை எடுத்து வர மட்டுமே கணவருக்கு அனுமதி வழங்கி அனுப்பி வைத்தார்.

அவரும் “தாலி கட்டினவனே கண்டுக்காம போய்ட்டான். இவ என் உயிரை வாங்குறா” என்று வாய்க்குள் புலம்பிய படி மனைவி உத்தரவை நிறைவேற்ற சென்றார்.

இங்கே பிளாட்டிற்கு வந்த அஸ்வந்த் மனமோ அவளை தான் சுற்றி வந்தது. அருகில் இருந்து உருகி கலையவில்லை என்றாலும் அவள் மீது மனதின் ஓரத்தில் சிறு அக்கறை இருக்க தான் செய்தது. அந்த எண்ணத்தை கூட புறம் தள்ளி அலுவலகத்துக்கு கிளம்ப, அவனுடன் வந்து இணைந்துக் கொண்டான் பவன்.

இவர்கள் இருவரும் அலுவலகத்தை அடைந்த நேரம் அங்கே ஒரு போர்க்களமே நடந்துக் கொண்டிருந்தது. எல்லாரும் குறித்த நேரத்தில் வழமை போல் தங்கள் பணிகளை துவங்கி இருக்க, அவர்கள் துவங்கிய சிறிது நேரத்திலேயே அனைவரது கம்யூட்டரும் முடங்கி, எச்சரிக்கை குறியை காட்டிக் கொண்டே அலர்ட் ஒலியை எழுப்ப, ஒட்டு மொத்த ஆபீஸும் கதி கலங்கித் தான் போனது.

போதா குறைக்கு நிர்வாக இயக்குநர் பெர்சனல் கம்யூட்டர் கூட ஜாம் ஆகி அவர்கள் நிறுவனம் மொத்தமும் எதிரி நிறுவனத்தின் கைப்பிடிக்குள் என்பதை சொல்லாமல் உணர்த்தியது. அதில் கோபம் கொண்டவரோ தன் கோபம் மொத்தத்தையும் இறக்கியது என்னவோ மிராக்கில் சமந்தா மீது தான்.

முந்தைய நாள் இரவு அவள் கட்டி வைக்கப் பட்டிருந்த செய்தி வேறு காட்டு தீயாய் அனைவருக்கும் அனலை மூட்ட, அவள் அலட்சியத்தால் நடந்த தவறு என்று அவளை லெஃப்ட் ரைட் வாங்கிக் கொண்டிருந்தார். அவளை கட்டி வைத்தது யார்? எதற்கு? என்ற கேஸ் வேறு அடுத்த பக்கம் தனியாக போய்க் கொண்டிருந்தது.

சமந்தாவோ எதுவும் எதிர்த்து பேச இயலா நிலையில் அமைதியாக தான் நின்றிருந்தாள். சிறிது நேரத்தில் சிஸ்டம் மொத்தமும் தானாகவே பழைய நிலைக்கு திரும்பி இயல்பாக வேலை செய்ய ஆரம்பிக்க, அதுவும் அனைவருக்கும் அதிர்ச்சியே.

அவர்கள் உழைப்பு எதுவும் அழிக்க படவில்லை. ஆனால் எல்லோரையும் பயமுறுத்த இதை செய்திருக்கிறான். உண்மை என்னவென்றால் எதையோ தேடியவனுக்கு அது கிடைக்காமல் போனதில் ஏமாற்றம் தான்.

‘எல்லாம் அந்த பவனால வந்தது. அவன் கிட்ட யாரு நேத்து காபி கேட்டது’ என்று அவனுக்கு மனதில் திட்டிக் கொண்டவள், பவனிடம் எடக்கு மடக்காக ஆயிரம் கேள்விகள் கேட்டு ஒருவழி பண்ணிவிட்டாள். சிசிடிவி கேமராவையும் அவன் முடக்கி இருக்க, அதன் மூலமும் எதையும் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால் தங்களுடன் இருக்கும் யாரோ ஒருவன் தான் கருப்பு ஆடு என்று புரிந்தாலும் அவன் யார் என்பதையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதே துரதிஷ்டம். அபிசியலாக போலீஸ் கம்பிளைண்டும் கொடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

CIP – International IT company….

ஆசிய நாடுகள் முழுவதும் தங்கள் கிளைகளை பரப்பி விரிந்துக் கிடக்கும் மென்பொருள் மையம்.  சீனா (C), இந்தியா(I) மற்றும் பிலிப்பைன்ஸ்(P) ஆகிய மூன்று நாடுகளின் கொலாபிரேஷனில் உருவானது.

நவீன கால பல இளைஞர்களின் லட்சிய கனவு இங்கு வேலை பார்ப்பது. ஐ டி ஃபீல்டு என்றாலே மாடர்ன் லைஃப் ஸ்டைல் என்று  யுவன், யுவதிகள் மத்தியில் ஒரு தாக்கம் இருக்கும் தானே. அந்த ஆசைக்கு எல்லாம் ஒரு படி மேலாகவே தீனி போடும் நிறுவனம் தான் இந்த சிப்.

தற்போது இதனை இயக்கிக் கொண்டிருக்கும் மூன்று நாட்டின்

சேர்மன்களும் தங்கள் நிறுவனத்தை உலக அளவில் நம்பர் ஒன் இடத்திற்கு கொண்டு செல்ல ஊழியர்களின் உயிரை மட்டும் விட்டு மூளையை உறிஞ்சு எடுப்பதில் வல்லவர்கள் தான்.

சென்னையிலும் மூன்று இடங்களில் அவர்கள் நிறுவனத்தின் கிளை இருக்கிறது.

உலக தரத்தில் வளர்ந்து வருவதால் பல்வேறு இன, கலாச்சார மக்கள் கூட்டத்தையும் ஒரே வளாகத்தில் காணலாம். இந்தியா மட்டுமின்றி சீனா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், மொரிஷியஸ், தாய்லாந்து என பல நாட்டு யுவ யுவதிகளும் இங்கே ஒன்றாக இணைந்து பணி புரிந்து வந்தனர்.

அஸ்வந்த், அமிர்தா, பவன், சமந்தா நால்வரும் அந்த நிறுவனத்தில் தான் பணி புரிந்து வருகின்றனர்.

சமந்தா புராஜக்ட் மேனஜர். அவளுக்கு குறித்த நேரத்தில் வேலைகள் அனைத்தும் பெர்பெக்டாக முடித்தே தீர வேண்டும். கொஞ்சம் கூட இரக்கம் பார்க்காது வேலை வாங்குவதில் வில்லி தான் அவள்.

பவன், அஸ்வந்த் அவள் கீழ் பணி புரிகின்றனர். புதிய புராஜக்ட் ஒன்றிற்காக ஒரு மாதம் முன்பு தான் இந்த புதிய கூட்டணி இணைந்திருந்தது. இவர்களுடன் டீம் லீடர் பிரதீக் மற்றும் இன்னும் மூன்று பேர் அவர்கள் அணியில் இருக்கிறார்கள். அதில் ஒருத்தி தான் சமந்தாவின் அநேக நேர கோபத்திற்கு வழிவகுக்கும் தீக்ஷி.

அமிர்தா…. நிறுவனத்தின் மொழிபெயர்ப்பாளினி (Translater). மீட்டிங், கொடேஷன், மெயிலிங் இது தான் இவள் வேலை என்றாலும், அநேக நேரங்களில் கோடிங் கூட இவள் தலையில் கட்டி விடுவாள் சாம்.

சமந்தாவின் பூர்வீகம் எல்லாம் பிலிப்பைன்ஸ் தான்.

பவன் இந்திய சீன கலவை. கடல் வழியாக சீன பட்டாடைகளை விற்க வந்த க்வான் சங் நம் நாட்டு வேல்பவளத்தை கொத்தி சென்று விட, காதலுக்கு மொழி தடையில்லை என்று விழி மொழியிலேயே தலை முறைகள் கடந்து தங்கள் வம்சத்தை தலைக்க வைத்தவர் தன் பிள்ளைகளுக்கு தமிழை கற்றுக் கொடுக்கவும் தவறவில்லை.

அஸ்வந்த்… திராவிட முகம். சிரிப்பு எப்படி இருக்கும் என்று கேட்கும் இதழ்களுக்கு சொந்தக்காரன். உணர்வுகளை வெளிக்காட்ட தெரியாத அமுக்கினி. அவசரம் உணர்ந்து உதவுவானே தவிர பதறி துடிக்க மாட்டான். எல்லாவற்றிற்கும் ஒரே ஒரு பார்வை, ஒரு சிறு தலையசைப்பு. அதுவே அவன் எதிர்வினையாக இருக்கும்.

இப்படி பல்வேறு இடங்களில் இருந்து வந்தவர்கள் வாழ்க்கை ஆரம்பத்தில் நன்றாக தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால் நாட்கள் போக போக வேலை பளு அதிகமாகவே, பிரச்சனைகளும் கூடவே வந்து ஒட்டிக் கொண்டது.

விருப்பப் பட்ட ஆடைகள், நைட் கிளப்ஸ், பார்ட்டி என்று உல்லாசமாக சுற்றி திரிபவர்களுக்கு பெரும் கஷ்டமாக அமைவது வாடகைக்கு வீடு எடுத்து தங்குவது தான்.

பேச்சலர்ஸ், ஐடி ஃபீல்டு என்றாலே ஊதாரி தனமாக செலவு செய்து ஊரை சுற்றுபவர்கள் என்ற எண்ணம் இன்னமும் சிலர் மனதில் புகைந்துக் கொண்டு தான் இருக்கிறது. அதனாலேயே அவர்களுக்கு வீடு கிடைப்பது குதிரை கொம்பாக தான் இருக்கும்.

அப்படி அஸ்வந்த் மற்றும் பவன் வீடு தேடி அழைந்த போது தான் பிரதீக்கின் உருப்படாத ஐடியா நால்வரையும் இணைத்து வைத்தது.

எப்போதும் வேலை வேலை என்று அதிலே குறியாக இருக்கும் சமந்தாவுக்கோ நேரம் காலமெல்லாம் கிடையாது. லேடீஸ் ஹாஸ்டலில் தங்கி இருந்தவள் அங்கு விதித்த கட்டுப்பாடுகளுக்கும், விதிமுறைகளுக்கும் அடிபணியாமல் இருக்க, “உனக்கு இங்கு இடம் இல்லை” என்று அவளை துரத்தி விட்டிருந்தனர்.

அந்தோ பரிதாபமாக அவளுக்கு உதவி செய்து அன்று ஒரே ஒரு நாள் தாமதமாக ஹாஸ்டலுக்கு வந்து சேர்ந்த அமிர்தாவும் சமந்தாவின் திமிர் பேச்சிற்கு பலியாகி அங்கிருந்து வெளியேற்றப்பட்டாள்.

“வேலை முடிச்சு லேட் நைட் ஹாஸ்டலுக்கு போனா? எவனோடயோ ஸ்டே பண்ணிட்டு வர்ற மாதிரி அந்த பேச்சு பேசுது அந்த லேடி. இந்த ஹாஸ்டல்லாம் நமக்கு செட் ஆகாது. ஒரு வீடு பார்த்துக் கொடு” என்று பிரதீக்கிடம் ஆர்டராக உதவி கேட்க, அவனோ பவன், அஸ்வந்துடன் கோர்த்து விட்டிருந்தான்.

நால்வருக்கும் சேர்த்து கேன்டீனில் மீட்டிங் ஒன்றை ஏற்பாடு செய்த பிரதீக், “இதெல்லாம் பெரிய விஷயமே இல்ல. இந்த ஆபீஸ்ல வேலை பார்க்கிற பாதி பேர் இப்படி தான் வீடு எடுத்து தங்கியிருக்காங்க.

புருஷன் பொண்டாட்டி சொல்லி முதல்ல வீடு எடுங்க. ஒரு ரெண்டு நாள் சும்மா கண்துடைப்புக்கு ஒன்னா இருந்துட்டு, உங்க வீட்ல நீங்க இருங்க அவங்க வீட்ல அவங்க இருந்துட்டு போறாங்க. அவன் அவன் நிற்க நேரமில்லாம ஓட்டிட்டு இருக்கான். நீங்க ஒன்னா தான் இருக்கீங்களா? புருஷன் பொண்டாட்டியா இல்லையானு உங்க பெட்ரூமையா வந்து எட்டி பார்க்க போறான்” என்று நால்வரிடமும் சொன்னவன், அன்றைய லஞ்சை அவர்கள் தலையில் கட்டி வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தான்.

‘இது என்ன? சும்மா கிடந்த சங்க ஊதி கெடுக்கிற போல, நான் எதுக்கு ரெண்டு நாள் எவனோ ஒருவனோட தங்கனும்?’ என்று நால்வரும் யோசித்தாலும், ஒரு வாரம் வீடு தேடி அலைந்தவர்களுக்கு இதை விட்டாலும் வேறு வழி தெரயவில்லை.

“எங்க வீட்ல வயசுக்கு வந்த பொண்ணு இருக்கு. உங்களுக்கு வீடு தர முடியாது. எதுக்கு வேலில போற ஓணான வீட்டுக்குள்ள விடணும். பேச்ளர்ஸ்க்கு வீடு கொடுக்க முடியாது. ஒன்லி ஃபேமிலிஸ்க்கு தான்.” என்று பவன், அஸ்வந்த் விரட்டபட்டார்கள் என்றால்,

இந்த பக்கம் பெண்களோ “நைட் 8 மணிக்குள்ள வீட்டுக்கு வந்திருக்கணும். நான் வெளி கேட்டை பூட்டிருவேன். அதுக்கு அப்புறம் வந்தா கேட்டு திறக்க மாட்டேன். சாரி தான் கட்டணும். உங்களை பார்த்து என் வீட்டு புள்ளைங்களும் கெட்டுப் போகும்” என்று தேடி தேடி குறை கண்டு, ரூல்ஸ் போட்டு துரத்தி விட்டார்கள். அவர்கள் அனைவரும் ஒருமுறை கண்முன் வந்து போக, அரை மனதாக ஒத்துக் கொண்டனர் நால்வரும்.

அவர்கள் ஒத்துக் கொண்டதும் தனக்கு தெரிந்த வீடு புரோக்கருக்கு அழைத்து பேசிய பிரதீக், அலுவலகம் அருகேயே ஒரே அப்பார்ட்மெண்ட்டில் இரண்டு ஃபிளாட்களையும் பேசி முடித்தான்.

பிரதீக்கின் வழிகாட்டல் படி அடுத்த நாளே தற்போது தங்கி இருந்த ஹோட்டல் அறையிலிருந்து நால்வரும் அங்கு சென்றிருந்தனர்.

அப்பார்ட்மெண்ட் வாசலிலேயே அவர்களை மடக்கிய பிரதீக் அப்பார்ட்மெண்ட் செக்ரட்டரியை போய் பார்க்கும் முன்னதாக, “யார் யாருக்கு புருஷன் பொண்டாட்டி முடிவு பண்ணிட்டிங்களா?” என்று கேட்க, அப்போது வரை அதை பற்றி யாரும் யோசிக்கவில்லையே,

பவன், சமந்தா, அமிர்தா மூவரும் திரு திருவென முழித்துக் கொண்டிருக்க, அஸ்வந்தோ ‘பவனை பொண்டாட்டி சொன்ன கூட எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை’ என்பது போல் தான் எந்த அலட்டலும் இல்லாமல் அமைதியாக நின்றிருந்தான்.

இரு ஆண்களையும் ஒரு நொடி பார்வையால் அலசிய சமந்தாவோ, பெண்களிடம் வழிந்து பேசும் பவனை காட்டிலும், அவன் பக்கத்தில் நிற்கும் சிட்டி ரோபோவே பாதுகாப்பு என்று நினைத்து “ஐ செலக்ட் அஸ்வந்த்” என்று சொல்ல, “அப்போ டிரேன்ஸ்லேடர் மேடம் எனக்கு” என்று சட்டென்று பவன் அமிர்தா தோளில் கை போட,

“ஐயோ” என்று அதிர்ந்து விலகி நின்ற அமிர்தாவோ “மேடம் நீங்க பாய் கெட்டப் போட்டு வாங்க, நாம ரெண்டு பேரும் ஹஸ்பண்ட் வைஃப் சொல்லிக்கலாம்” என்று பதறியவள் “இவர் மட்டும் வேணாமே பிளீஸ்” என்றவள் விட்டால் அழுது விடுவேன் என்ற நிலையில் தான் இருந்தாள்.

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page