நலம் தானா ஊதாப்பூவே 🪻 -19

“வெண்பனி மழை போல என் மேலே விழுந்து குளிர வைக்கும் உன் நினைவுகள் எப்போதும் என் கனவு தானா “

…. ஊதாப் பூவின் இதழ்களில் ஒன்று…

பாகம் -19

மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்து சென்று விட்டு வந்தவன் அதன் பிறகு அவளை பார்க்கவில்லை. வசந்தி அக்கா தான் ஆரண்யாவை பார்த்துக் கொண்டார். விஜய் தினமும் சென்று பார்த்து வருவான். விஜய் வரும் போதெல்லாம் அவளின் கண்கள் விஜய் பின்னால் தேடும், விஜய்க்கு அவளின் தேடுதல் யார் என்று தெரிந்தும் எதுவும் கேட்பதில்லை.

வர்மாவும், விஜயும் பேக்டரி, அலுவலகம் என பார்த்துக் கொண்டார்கள். ஏற்கனவே போட்டு வைத்த பிளான் படி சிமெண்ட் அனுப்பப்பட்டது.

குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னவே முடித்ததும், சரியாக திட்டமிட்டதும் என கவெர்மென்ட் காண்ட்ராக்ட் நினைத்ததை விட லாபம் அதிகமாகவே இருந்தது. வெற்றிகாரமாக வேலை முடிந்ததற்க்காக பார்ட்டி வைத்திட ஆரண்யா கலந்து கொள்ளவில்லை.

நிதிஷா தான் தான் உதவி செய்தேன் என்றது போல் பேசி, சிரித்து வர்மாவிற்கு நெருக்கமாக காட்டிக் கொண்டாள்.

விஜய்க்கு எதுவுமே பிடிக்கவில்லை, ஆரண்யாவுக்கு சேர வேண்டிய வாழ்த்துக்களும், பாராட்டுகளும் நிதிஷாவுக்கு போய் சேறுவதில் கொஞ்சம் கூட விருப்பமில்லை, என்னவோ செய்து விட்டு போகட்டும்.

இனி இங்கு வேலை செய்வதைப் பற்றி தான் யோசித்துக் கொண்டிருந்தான். வேலை செய்தவளை ஓரம் கட்டி விட்டார்கள். திருமணத்திற்கு முன்பே இவ்வளவு ஆட்டம் என்றால் திருமணத்திற்கு பிறகு எப்படி இருக்குமோ

தனக்கு கண்டிப்பாக மரியாதை இருக்காது, வர்மாவும் எதையும் கண்டுகொள்ளப் போவதில்லை, நிதிஷா வந்து விட்டால் ஆரண்யாவை வேலை செய்ய விடமாட்டால், வேறு வேலைக்கு முயற்சி செய்யலாம் என்று எண்ணிக் கொண்டே

பார்ட்டி ஹாலினை விட்டு வெளியே வந்தான். மின்னல் வேகத்தில் வந்த கருப்பு வண்ண கார் விஜயின் அருகில் வந்து தரையை தேய்த்த படி நிறுத்த, வேறு யோசனையில் உழன்றவன் திடுக்கிட்டு பின்னோக்கி செல்ல

காரின் கதவினைத் திறந்த நிலா, விஜய்யை இழுத்து காரில் தள்ள, இன்ப அதிர்ச்சியில் திளைத்தான். கூடவே அண்ணனும், தங்கச்சியும் அதிர்ச்சி கொடுக்குறதுல ஒரே மாதிரி தான் புலம்பினான்.

கதவினை மூடியதும் சாலையில் வழுக்கிக் கொண்டு சென்றது கார். காரினை இயக்கும் காரிகையைப் பார்த்தான் அன்று பயந்த விழிகளுடன் தெரிந்தவள் இன்று தன்னை இழுத்துக் கொண்டு வரும் அளவுக்கு தைரியசாலியாக மாறி விட்டாளா யோசனையுடன் இருந்தவனிடம்

“என்ன ஆச்சு விஜய் ” அவனின் யோசனை கொண்ட முகம் பார்த்து அவள் கேட்க,

“எதுவும் இல்லையே “அவன் மனம் வெறுமையில் தான் இருக்கிறது. யாரையும் நம்ப முடியவில்லை.

“நான் உங்களை கூட்டிட்டு வந்தது கோவமா  சாரி ” அவளுக்கு அவனின் வாட்டமான முகம் பார்க்கயில் அப்படி தான் தோன்றியது.

“ஹேய் நிலா அப்டிலாம் இல்லை ” அவன் அவசரமாய் மறுத்தான்.

“நீங்க எப்பவும் சிரிச்சி பேசுவீங்க, கல கலகலப்பா இருப்பீங்க, இப்போ அப்டி இல்லையே ” உண்மை தான் விஜய் என்றும் இல்லாத அளவுக்கு சோகத்தை அப்பிக் கொண்டிருந்தால் பார்ப்பவர்களுக்கு அப்படித் தான் தோன்றும்.

ஏற்கனவே குழப்பம் இதில் இவள் வேறு தன் முக வாட்டத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பதும் எரிச்சலைத் தர, அதைக் கடினப்பட்டு அடக்கியவன் “இல்லை மா நீ என்ன சொல்ல கூப்பிட அதை சொல்லு “

இது வரை இருவருக்குள்ளும் நெருக்கமான பேச்சுக்களோ, பார்வையோ இல்லை, இவனுக்கு அவளைப் பிடிக்கும் தான், ஆனால் அவளுக்கு பிடிக்குமா என்று தெரியாதே, அவள் வெளிப்படுத்தியதே இல்லை,

அன்று கூட ஆபத்தில் இருக்கிறாள் என்ற எண்ணத்தில் தான் உதவினான். அங்கு யார் இருந்தாலும் உதவி செய்திருப்பான். வேறு பெண்ணாய் இருந்திருந்தால் கண்டிப்பாக உதவிக்கு பெண் ஒருவரை அழைத்து வந்திருப்பான். தன் மனதிற்கு பிடித்தவள் என்பதால் தான் அவளுக்கு அந்த உதவியை செய்தான்.

அவனை பிடிக்குமா என்று யாரவது கேட்டால் இல்லை என்று தான் சொல்லுவாள், இன்று அப்படி இல்லை. அவன் இக்கட்டில் அந்த சூழலில் காப்பாற்றியதில் இருந்து அவளின் மனதில் அவன் மீதான விருப்பம் நுழைந்திருந்தது அவள் அறியாமல்,

பேக்டரி தீ விபத்து, வர்மாவைப் பார்த்துக் கொள்வது என மருத்துவமனை, அலுவலகம் என்று விஜய் இருக்க, வர்மா வீட்டிற்கு போக முடியவில்லை.

ஒவ்வொரு முறை காரின் சத்தம் கேட்கும் போதெல்லாம் விஜய் வந்திருப்பாரோ என்றே வாசலைப் பார்த்து ஏமாந்து போவாள். வர்மாவை மருத்துவமனையில் இருந்து அழைத்து வந்து வீட்டில் விடும் போது அவனைப் பார்க்க இவள் வருவதற்குள் கிளம்பி இருந்தான்.

1 வாரமாய் விஜயை பார்க்காமல் தவித்து போனாள். அண்ணனிடம் கேட்கவும் பயமாய் இருக்க, அன்று நடந்ததை யாரிடமும் சொல்லக்கூடாது என்று விஜய் சொல்லி தான் அழைத்து வருவான். அவன் சொல்லை மீறி நடக்க கூடாது என்று முடிவெடுத்து விட்டாள், யாரிடமும் எதுவும் சொல்லவில்லை.

எப்படி அவரைப் பற்றிக் கேட்பது என்று தவித்துக் கொண்டிருக்கும் நேரம், பார்ட்டி என்று அம்மா நினைவூட்ட, அவரை எப்படியாவது சந்தித்து பேச வேண்டும் என்று முடிவு செய்தவள் அழகான நீண்ட சிவப்பு வண்ண கவுண் அணிந்தாள், வெள்ளை கற்கள் பதிக்கப்பட்ட அணிகலன்கள் அவளை அப்சரசாய் காட்டிட அவள் கண்கள் தேடியது இவனைத்தானே

அவனோ வேலை, விருந்தினரை சந்தித்து பேசுவதிலும் அவர்களுக்கு என்ன வேண்டும் என்று கவனிப்பதிலே இருக்க, நிலாவைப் பார்க்கவும் இல்லை, பேசவும் இல்லை.

அவன் செய்த உதவி சாதாரணமானதில்லை, அவன் இயல்பாய் கடந்து விட்டான். பெண்ணவளால் அப்படி இருக்க முடியாதே, அவனைப் பார்த்து, பேசி நன்றி தெரிவிக்க வேண்டும். அப்படி தான் மனதுக்கு காரணம் சொல்லிக் கொண்டாள்.

அவனிடம் பேசியே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அப்பாவிடம் காரினை வாங்கி வந்தவள் விளையாட்டாய் விஜயிடம் நடந்து கொள்ள, அவனின் இந்த மாற்றம் பெண்ணவளுக்கு ஏமாற்றத்தை தர,மன்னிப்பும் கேட்டு விட்டாள்.

அவள் விளையாடுவது, அவள் கண்ணில் தெரியும் இவன் மீதான நேசம் என்று புரிந்தாலும் இப்போது இருக்கும் சூழல் அவனுக்கு எதையும் புரிந்து கொள்ள பிடிக்கவில்லை. நண்பனே இங்கு என்ன செய்கிறான், அவன் மனதில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள முடியவில்லை, இதில் இந்த சிறிய பெண்ணுடன் எதற்கு நெருங்கி பழக வேண்டும். விலகி இருக்க முடிவு செய்தான்.

காரினை இயக்கிக் கொண்டே விஜய் மீதும் பார்வை பதிப்பவளைப்  பார்த்து “நிலா, நீ ஒரு பிரச்சனைல இருந்த உதவி பண்ணேன் அவ்ளோ தான், அதான் அன்னைக்கே சொல்லிட்டியே, திரும்பவும் இந்த நைட்ல இந்த மாதிரி சொல்லனுமா, படிக்குற வேலையைப் பாரு, வீட்டிக்கு வண்டியை விடு “

நிலா என்று கூப்பிட்டதும் ஆசையாக பேசுவான் என்று நினைத்தவளுக்கு அவனின் அறிவுரை புத்தியில் உரைக்கவில்லை, தான் என்ன தப்பாக நினைத்து விட்டோம், என்னுடன் படிக்கும் பெண்கள், ஆண் நண்பருடன் ஊர் சுற்றுவதும் இங்கு தொட்டான், அங்கு தொட்டான், முத்தம் கொடுத்தான் என்று சொல்லி சிலாகிப்பது கண்டு அவளுக்கும் ஆண் மகனிடம் எதிர்பார்ப்பு வைத்து விட்டாள்.

கண்கள் கலங்கி அழுகை வர, அவனுக்கு தெரியாமல் துடைத்துக் கொண்டாள். வீட்டின் முன்பு நிறுத்த, இறங்கிக் கொண்ட விஜய் “நீ உள்ள போ, இதுக்கு அப்புறம் இப்டிலாம் விளையாட்டு காட்டாத” சொல்லி விட்டு போனில் யாருக்கோ அழைத்து பேசிக் கொண்டிருந்தான்.

அடுத்த நாள் விஜய் பேக்டரிக்கு சென்றான். ஆரண்யா இன்னும் வேலைக்கு வரவில்லை. பேக்டரி, அலுவலகம் என இன்றைக்கும் எரிச்சல் தான்,

கவர்மென்ட் டெண்டர் வெற்றிகாரமாக முடிந்தது, இந்த வெற்றி அடுத்து ஒரு பெரிய ஆர்டருக்கு வழி செய்தது. வர்மாவிடம் பேச வேண்டும். இனிமேல் இங்கு வேலை செய்ய முடியாது என்று முடிவெடுத் திருந்ததால்  அதை சொல்ல என்று நினைத்து தான் அவனை பார்க்க சென்றான்.

வர்மா வேகமாக விஜயிடம் வந்து “வீட்டு வரைக்கும் போய்ட்டு வா டா, கொஞ்சம் பிரச்சனை, என்னை கூப்பிட்டாங்க இப்போ என்னால போக முடியல, புது ஆர்டர் விஷயமா பேச டெல்லில இருந்து தாஜ் குரூப் வராங்க, நீ கொஞ்சம் வீட்டுக்கு போய்ட்டு பார்த்துட்டு வந்துடு “

பேச வந்தவன் பிரச்சனை என்றதும் நிலா நியாபகம் வர, இவனிடம் பிறகு பேசிக்கொள்ளலாம். அங்க என்ன ஆச்சோ என்று வேகமாக சென்றான்.

வர்மாவின் அப்பா பணம், கெளரவம், தகுதி பார்த்து தான் பேசுவார் ஆனால் வர்மாவின் அம்மா அப்படி இல்லை, அன்பாக பேசி, பழகக் கூடியவர், வர்மாவும் முதலில் அப்படித்தான் இருந்தான் விஜயிடம்  மட்டும் எப்போதும் பணத்தை வைத்து நடந்து கொண்டது இல்லை இப்போது கொஞ்சம் கொஞ்சமாய்  அன்பாய் பேச மாறிக் கொண்டு வருகிறான்.நிலாவும் அண்ணன் வழி தான்.

விஜயைப் பார்த்ததும் கவலையோடு அமர்ந்திருந்தவர்  “வா விஜய் ” சோகமான குரலில் அழைக்க,

எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவருக்கு என்ன ஆனது கண்டிப்பாக அவள் தான் எந்த பிரச்சனை யிலாவது இழுத்துக் கொண்டு வந்திருப்பாள் என்று மனதில் நிலாவை திட்டியவன்

“என்ன ஆச்சு ஆன்ட்டி “

அவன் கைகளைப் பிடித்துக் கொண்டவர் “நிலாக்கு என்ன ஆச்சு தெரியல, நேத்து நைட் உள்ள போனா, இப்போ வரைக்கும் வெளிய வரல, கதவு தட்டிப் பார்த்தேன், போன் போட்டாலும் சுவிட்ச் ஆஃப்னு வருது, எனக்கு பயமா இருக்கு பா, வர்மா கிட்ட சொன்னேன் இப்போ வர முடியாது விஜய்யை அனுப்புறேன்னு சொல்லிட்டான். இவர் வெளிய போய் இருக்காரு, தெரிஞ்சதுனா அவ்ளோ தான் அதான் என்ன பண்றது புரியல ” கையை பிசைந்த படி நிற்கும் தாயின் நிலை புரிந்து கொண்டவன் அவருக்கு தைரியம் சொல்லி

அறைக்கு முன் சென்றவன் கதவினை பலமாகத் தட்ட அவள் குரல் கொடுக்கவும் இல்லை, கதவினைத் திறக்கவும் இல்லை, போனும் அணைத்து வைக்கப்பட்டு இருக்க,வேறு என்ன பண்ணலாம் என்று யோசித்தவன் கீழே இறங்கி பின் பக்கம் சென்று பார்க்க, அங்கே தண்ணீர் செல்லும் பைப் இருந்தது அதைப் பிடித்துக் கொண்டு மேலே ஏறினான்.

வீட்டில் வேலை செய்யும் ஆட்கள் உதவிக்கு வரட்டுமா என்று கேட்க, வேண்டாம் தான் பார்த்துக் கொள்கிறேன். நான் குரல் கொடுத்தால் வாருங்கள் என்று சொல்லி விட்டு தான் மேலே ஏறினான்.

பால்கனி வழி குதித்தவன் கதவினைத் தட்டிப் பார்க்க அதுவும் உள்ளே தாழிடப் பட்டிருந்தது ஆனால் கதவு கொஞ்சம் உடைந்திருந்தது பலமாக அவன் தள்ளியதில் திறந்து கொண்டது.

அறையின் உள்ளே வந்தவன் அவளின் கோலம் கண்டு அதிர்ந்து நின்றான்.

அப்டி என்ன கோலமோ அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.
 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page