நலம் தானா ஊதாப்பூவே!! 🪻 – 30

“அவள் தான் வேண்டும் என்று இந்த மனம் அடம் பிடிக்கிறது. நீ விலகிச் சென்றாலும் “

…. ஊதாப்பூவின் இதழ்களில் ஒன்று…

பாகம் -30

கோவிலுக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தார்கள். இன்று அலுவலகத்திற்கு விடுப்பு சொல்லி விட்டாள். அலுவலகத்தில் இவளுக்கென்று தொடங்கிய தனிப் பிரிவு ஆறு மாத காலம் ஆகி விட்டது. அவளின் வேலை நேர்த்தி, திறமை வர்மா அறிந்ததே, ஆனால் அவளின் ஆளுமை கண்டு வியந்தான். தனக்கேற்றவள் இவள் என்பதை ஒவ்வொரு நாளும் அவள் அவனுக்கு உணர்த்திக் கொண்டிருந்தாள்.

இருவரும் அலுவலகத்திற்கு வந்தாலும் வேலை விஷயமாக மட்டுமே பேசிக் கொள்வார்கள். வீட்டிலும் அவனுக்கு வேண்டியதை செய்வாள். அவனும் சின்ன சிரிப்புடன் கடந்து செல்வான்.

அவளால் அவனிடம் பேச முடியவில்லை. சில சமயம் பேச செல்வாள் அவன் வேலை, போன் அழைப்பு என்று அவனாலும் அந்த நேரத்திற்கு பேச முடியாமல் இருக்கும். இருவருமே முகமூடியை போட்டுக் கொண்டு வேலையை காரணம் காட்டி பெரியவர்களை ஏமாற்றி வருகிறார்கள்.

காலை எழுந்ததும் மதிவதினி ஆரண்யாவிடம், கோவிலுக்கு செல்ல வேண்டும் முக்கிய பூஜை இருக்கிறது என்று சொல்ல, வேலைக்கு விடுப்பு சொல்லி விட்டு தனது மாமியாருடன் கோவிலுக்கு சென்றவள் அவரின் ஆசைக்கு சம்மதம் சொன்னதோடு தனது விருப்பதையும் சொல்ல, மகிழ்ந்தவர், வீட்டுக்கு விரைந்து வந்து தன் கணவருடன் நல்ல நாள் குறிக்க சென்று விட்டார்.

போகும் முன் ஸ்டோர் ரூமில் பெட்டி ஒன்று இருக்கிறது அதில் இருக்கும் பொருட்களை சுத்தப்படுத்தி வைக்க சொன்னார்.

ஆரண்யாவும் ஸ்டோர் ரூமில் இருந்த பெட்டியை திறந்து பார்த்தாள். மாமியாரின் குறும்பை எண்ணி சிரித்தவள் அதில் இருந்த பொருட்களை தொடுகையில் வெட்கம் வந்தது.

வெள்ளி சொம்பு, டம்பளர், தட்டு, அழகிய வேலைப்பாடுடன் இருந்தது. பாரம்பரியமாக இதை பயன்படுத்தி வந்திருப்பது புரிந்தது. பெட்டியை எடுக்கும் போது வேறு ஒரு சிறிய பெட்டி இருந்தது. அதையும் திறந்து பார்க்க, அதில் வர்மா டைரி இருந்தது. வண்ணக்காகிதங்கள் சுற்றப்பட்ட பரிசுப் பொருட்கள், ஒன்றை எடுத்துப் பார்க்க அதை அவசரமாக பிரித்தாள்,

ஒரு பெண்ணிடம் ஒரு ஆண் கையில் பூங்கொத்துடன் காதலை சொல்வது போல் இருந்தது. அதில் இருந்த தேதியைப் பார்த்தாள்.ஜோத்பூரில் கூடாரத்தில் இருந்த நாள்,

அடுத்த பரிசினைப் பிரிக்க, இருவரும் முத்தமிடும் சிலை, அதில் இருந்த தேதியைப் பார்த்தாள், வர்மாவின் வீட்டில் ஆரண்யா கையெழுத்து வாங்க வந்த நாள்,

அடுத்த பரிசினைப் பிரித்துப் பார்க்க, பூந்தோட்டத்தில் ஆண் ஒருவன் பெண்ணின் முன் மண்டியிட்டு மோதிரத்துடன் காதலை சொல்வது போல் இருந்தது அந்த சிலைகளின் மீது ஒரே வடிவிலான மோதிரங்களும் இருந்தது அதில் இருந்த நாள், பார்க்கில் இருவரும் சென்ற நாள்,

டைரியை பிரித்துப் படித்தாள்,
“உன் கண்ணில் 
எனக்கான காதல், 
உன் இதழில் 
என்னை உயிர்ப்பிக்கும்
அமுதம், விலகினாலும்
விலகாத உன் வாசம், 
தினந்தோறும் 
உன் வருகை
என் கனவினை 
நிறைத்துச் செல்கிறது
நீயின்றி நானில்லை 
என்ற உணர்வினை,
நலம் தானா 
என் ஊதாப்பூவே!!!!”

அவனின் காதல் அவளுக்கு முன், இவள் தான் புரிந்து கொள்ளாமல் விலகி விட்டாளோ, என் மீது இவ்வளவு காதல் வைத்திருந்தவர் எதற்காக என்னிடம் சொல்லவில்லை. இன்னொரு பெண்ணுடன் ஏன் திருமணத்திற்கு சம்மதிக்க வேண்டும், அதற்க்கு காரணம் இருக்கிறதென்றால் ஏன் என்னிடம் மறைக்க வேண்டும்.

எனக்கு எப்படி தெரியும், நான் இதை எல்லாம் பார்க்கும் முன்னே அவரை ஏற்க தொடங்கி விட்டேனே, அவர் மீது இருந்த கோவம் கூட எப்பவோ மறைந்து விட்டது, அவராக என்னை நெருங்கி வருவார் என்று தான் இத்தனை நாட்களாக காத்திருந்தேன். அவர் சொன்னதற்காக தானே இந்த ஆறு மாதமும் வேலையே கதி என மூழ்கி இருந்தேன்.

பார்த்ததை எல்லாம் மூடி வைத்தவள், அவர் நெருங்கி வரும் வரை இனி காத்திருக்க மாட்டேன். நானே நெருங்கி செல்வேன். கண்களில் வழியும் கண்ணீரை துடைத்தவள் வெள்ளி பொருட்களை எடுத்துக்கொண்டு வந்து சுத்தம் செய்தாள்.

மாமியாரும், மாமனாரும் வர, சிரித்த முகத்துடன் வரவேற்றாலும் அதில் நாணமும் கலந்தே இருந்தது. அவளின் முகத்திற்கு திருஷ்டி எடுத்தவர்,

“இன்னைக்கே நல்ல நாள் தான்னு சொன்னாங்க, நாங்க பார்த்துக்குறோம். நீ சாப்பிட்டு கொஞ்ச neram ரெஸ்ட் எடு, வர்மாக்கு கால் போகலை, கொஞ்ச நேரம் கழிச்சு பேசுறேன் “

தலை அசைத்தவள் தனது அறைக்கு சென்று விட்டாள். வர்மாவிடம் பேச தோன்றியது. போனை எடுப்பதும் அழைப்பு விடுப்பதும், அதை துண்டிப்பதும் என இனிய அவஸ்தைகளில் திணறியவள். மாமியாரின் வற்புறுத்தலில் கொஞ்சம் சாப்பிட்டாள்.

அவளை அலங்கரிக்க ஆட்களை ஏற்பாடு செய்ய போனவரை தடுத்து, தானே பார்த்துக் கொள்வதாய் கூறினாள். அவரும் சிரிப்புடன் அவளுக்கு வாங்கி வைத்திருந்த புடவை, பூ, நகைகள் என கொடுத்து விட்டு சென்றார்.

சிறிது நேரம் அதையே பார்த்துக் கொண்டு இருந்தாள். வர்மாவிடம் தான் பேச முடியாது, விஜய் அண்ணாவிடம் அவரைப் பற்றி கேட்கலாம் என்று தோன்ற, விஜய்க்கு அழைப்பு விடுத்தாள். அழைப்பை ஏற்றது நிலா “அண்ணி, அண்ணா வந்துட்டாரா, விஜய் அண்ணாவ கூட்டிட்டு வர தான் போய் இருக்காரு, நீங்க பயப்படாதீங்க “

நிலா பேசிகொண்டிருக்கும் பொழுதே ஆரண்யாவுக்கு தலை சுற்றுவது போல் இருந்தது. கண்ணை மூடி திறந்தவள், “நிலா நீ இப்போ என்ன சொன்ன “

நிலாவினை முறைத்துக் கொண்டே போனை வாங்கிய விஜய் “வர்மா கொஞ்ச நேரத்துல வந்துடுவான், எங்களையும் வீட்டுக்கு வர சொல்லி இருக்கான், அங்க வர தான் கிளம்பிட்டு இருக்கோம்” அழைப்பை துண்டித்தவன்,

“ஏன் டி, ஆரண்யா கிட்ட போய் வர்மா தேடிப் போனதை சொல்லிட்டு இருக்க, அவ பயப்பட மாட்டாளா, இப்டி எதாவது பண்ணிடுவேன்னு நினச்சு தான் வந்தேன் அதுக்குள்ள உளறி வச்சிட்ட”

“சாரிங்க நான் அண்ணிக்கு தெரியும்னு நினச்சு தான் சொல்லிட்டேன். இப்போ என்ன பண்றது. அண்ணா இருக்குற இடம் தெரிஞ்சுதா “

“சரி விடு பார்த்துக்கலாம். இன்னும் கொஞ்ச நேரத்துல வர்மா வரலைனா, வீட்ல இருந்து கேள்வியா கேட்பாங்க, அதுவும் மாமா கிட்ட சொல்லாம இருக்க முடியாது. இவன் எங்க போனானு தான் தெரியல, பிரச்சனைனு மட்டும் தான் சொன்னான் அதுக்குள்ள போன் ஆஃப் ஆகிடுச்சு,

நானும் எல்லா இடத்துலயும் போய் பார்த்துட்டேன். ஆபீஸ்லயும் விசாரிச்சிட்டேன். யாருக்கும் தெரியல” விஜய் நெற்றியை தேய்த்தபடி யோசிக்க, அவன் அருகில் அமர்ந்து அவன் தோளில் சாய்ந்து கொண்டாவள் “அண்ணா வந்துடுவாருங்க, நாம வீட்டுக்கு போய்ட்டு பொறுமையா சொல்லிடுவோம்”

“ம்ம் சரி வா போவோம் ” இருவரும் கிளம்பி வர்மா வீட்டுக்கு வந்தார்கள். அவர்களின் பேச்சு சத்தம் கேட்டு ஆரண்யா வந்தாள். கண்களால் எதையும் சொல்ல வேண்டாம் என்று சைகை செய்தவள், இருவருக்கும் காபி கொடுத்து விட்டு, மாடிக்கு அழைத்தாள்.

“அண்ணா என்ன ஆச்சு “

“அது வந்து…” விஜய் தயங்கவும்,

“அவர் வந்துடுவாருனா, முக்கியமான விஷயமா தான் போய் இருப்பாரு, வந்துடுவாரு, எனக்கு நம்பிக்கை இருக்கு, நீங்க எதுவும் இப்போ சொல்ல வேண்டாம் “

கேட்டத்திலும் நல்லது போல், வர்மா இல்லாத போதும், அவன் மீது நம்பிக்கையுடன் இருக்கும் ஆரண்யாவை நினைத்து இருவருக்கும் வியப்பாக இருந்தது. இதே புரிதலோடு இருவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டார்கள்.

நேரம் செல்ல விஜய்க்கு தான் பயம் கூடியது. இனியும் வீட்டில் சொல்லாமல் இருக்க முடியாது, சொல்லி விடலாம் என்று அவர்களிடம் வர, அவனுக்கு புது எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.

“யாரு “

…..

“நீயா, ஹான் சொல்லு “

“எப்போ நடந்தது, யாரு இப்போ கூட இருக்கா, எந்த ஹாஸ்பிடல் “

“நாங்க இப்போ உடனே வரோம் “
விஜய் பயந்தது போலவே நடந்து விட்டது.

வர்மாவின் அப்பா ராஜவர்மனிடம் வந்தவன் “மாமா, வர்மாக்கு சின்ன அடி, இப்போ ஹாஸ்பிடல்ல இருக்கான். இப்போ தான் தகவல் வந்தது “

அதைக் கேட்டுக் கொண்டே  வந்த மதிவதனி “மாப்பிள்ளை என்ன ஆச்சு “

எல்லாரும் ஹாஸ்பிடல் கிளம்பலாம், ஆரண்யாவிடம் மட்டும் சொல்லவில்லை, ஆனால் புரிந்து கொண்டாள், இவர்களின் முக மாற்றதைக் கொண்டே, அமைதியாக வந்தாலும் உள் மனம் வர்மாவிற்கு எந்த பிரச்சனையும் வந்திருக்க கூடாது. அவர் நல்லா இருக்கணும்” ஹாஸ்பிடல் வரும் வரையிலும் அவள் பிரார்த்தனை தொடர்ந்தது.

வி. கே ஹாஸ்பிடல் சென்னை புரசைவாக்கத்தில் இருக்கிறது.அங்கு தான் வர்மா அட்மிட் செய்யப் பட்டிருந்தான். இது வர்மாவின் பிரண்ட் ஹாஸ்பிடல் தான். கையில் கத்திக்குத்து, மயக்கத்துடன் கையில் கட்டுடன் வர்மா படுத்திருந்தான்.

கத்திக்குது ஆழமாக இருந்ததால் வீட்டில் இருப்பவர்கள் வரும் வரை காத்திருக்க வேண்டாம் பிரண்ட் என்பதை டாக்டர் ஹரியே கையெழுத்து போட்டு கையில் சிறிய ஆபரேஷனை செய்து விட்டான்.

“வர்மாவுக்கு இப்போ எந்த பிரச்சனையும் இல்லை, ரத்தம் தான் கொஞ்சம் அதிகமா போய்டுச்சு, கை சீக்கிரமே சரி ஆகிடும். பயப்பட வேண்டாம். இன்னும் கொஞ்ச நேரத்துல மயக்கம் தெளிஞ்சிடும், நீங்க போய் பாருங்க “

டாக்டர் ஹரிக்கு நன்றி சொன்னவர்கள், வர்மாவை ஒவ்வொருத்தராக பார்த்து விட்டு வந்தனர்.இறுதியாக தான் ஆரண்யா சென்றாள்.

கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தான். அறைக்கு வரும் வரை கட்டுக்குள் இருந்த உணர்வுகள் அவனைக் கண்டதும் வெளிவரத் தொடங்கியது.

அவனுக்குமே ஏன் இப்படி என்ற உணர்வில் தான் இருந்தான்  அவள் அழுவாள் என்று தெரியும். அருகே அழைத்தான். வேகமாக வந்து நின்றாள். அவள் வந்து நின்ற விதத்தில் சிரிப்பு தான் வந்தது.

ஒரு கையில் ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருந்தது. மறு கையில் கட்டு, தலை முடி கலைந்து, முகம் சோர்வாக இருந்தாலும் அவன் முகத்தில் வசீகரம் மட்டும் குறையாதிருந்தது. பக்கத்தில் அமர சொன்னான். அமர்ந்து கொண்டாள். கையைப் பார்த்தாள்,

“ரொம்ப வலிக்குதாங்க “

தலையை அசைத்தான். அவன் கண்ணில் வலி உணர்ந்து கொண்டாள்.

“பயப்படாத சரி ஆகிடும் “அவளுக்கு அவன் ஆறுதல் சொன்னான்.

“கொஞ்ச நேரம் தூங்குங்க “

“இருக்கட்டும்” அவன் பார்வை அவள் மேலே தான் இருந்தது.

“எப்படி அடிபட்டுச்சு கேட்க மாட்டியா “

மாட்டேன் என்பது போல் தலை அசைத்தாள்.

இருவருமே பார்வையால் தீண்டிகொண்டனர். அவன் பார்வை அவளுக்குள் புகுந்து தனக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டு அவனிடமே வந்தது. அவன் பார்வையின் தன்மையிலே புரிந்து கொண்டவள் நெளிந்தாள், தவித்தாள், கண்கள் மூடிக் கொண்டாள். அவளின் புரிதலான அன்பில் அவன் வலியும் மறந்து போனது.

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page