ஆற்றைக் கடந்து வந்ததும், அவர்கள் கால்கள் கரடுமுரடான ஒரு மலைப் பாதையில் பதிந்தன. பாதையின் இருபுறமும் வானை முட்டும் அளவிற்கு ஓங்கி உயர்ந்து வளர்ந்திருந்த மரங்கள், அப்பகுதியை பட்டப் பகலிலேயே இரவு போல் காட்சியளிக்கச் செய்திற்று. அவற்றின் கிளைகளில் இருந்து நீண்டு தொங்கிய கொடிகள் ஒரு இயற்கையான திரைச்சீலையை அந்தப் பாதைக்கு உருவாக்கியிருந்தது.
அடர்த்தியான புதர்கள் பாதையின் ஓரங்களை ஆக்கிரமித்திருந்தன. எங்கு பார்த்தாலும் பசுமை போர்த்தியது போலிருந்தது. மயிலா குமரன் கையை பற்றி கொண்டு அந்தப் பாதையில் நடந்து செல்கையில், திடீரென உயரே எழுந்தது மின்மினிப் பூச்சிகள் கூட்டம். அவை இவர்களை நோக்கி பறந்து வர, தங்கத் துகள்களைத் தூவியது போல ஜொலித்தது அந்த பாதை.
ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதி என்பதால், அந்த இடத்தின் இயற்கை அழகு அப்படியே பாதுகாக்கப்பட்டிருந்தது. மரக்கிளைகளில் அணில்கள் துள்ளி விளையாடுவதையும், விதவிதமான வண்ணத்துப் பூச்சிகள் மலர்களில் அமர்ந்து தேன் குடிப்பதையும் கண்குளிர பார்த்து ரசித்தாள் மயிலா.
பூக்களின் மெல்லிய நறுமணமும், மரங்களின் பசுமையான வாசனையும் அந்த இடத்தையே ஒரு புதிய உலகமாக மாற்றியிருந்தது. அமைதியான அந்த சூழலில், தன் மனதில் இறுக்கங்களை எல்லாம் தொலைத்திருந்தான் குமரன். அந்த இயற்கையின் பேரழகும், மயிலாவின் அப்பாவி குணமும் அவன் மனதை அமைதியிலும் ஆனந்தத்திலும் ஆழ்த்தி இருந்தது.
அவன் அறிந்த நகரத்தின் இரைச்சலையும், அவன் மனதை அரிக்கும் கவலைகளையும் அந்தக் கணத்தில் மறந்துவிட்டு, அந்த வனத்தின் வசீகரத்திற்குள் தொலைந்து போக விரும்பினான் குமரன்.
“உனக்கு பயமா இருந்தா சொல்லு மச்சான். நான் கொள்ளிக்கட்டை தயார் பண்றேன்.”
“அதெல்லாம் வேணாம். ஏன் மயிலா, இந்த பக்கத்துல யாருமே வர மாட்டாங்க போல இருக்கு. அதனாலயே இந்த இடம் ரொம்ப அமைதியா இருக்குதோ” என்று கேட்டான் குமரன்.
“ஆமா மச்சான். இந்த கோயிலுக்கு கல்யாணம் பண்ண ஜோடிகளும், தீராத வேண்டுதல் வச்சவங்களும் மட்டும் தான் வருவாங்க. அவங்க வாழ்க்கையில ஏதாவது குறை இருந்தா வன துர்க்கை நிவர்த்தி பண்ணி தருவா. சும்மால்லாம் யாரும் வந்துட முடியாது. அப்பா சொல்லுவாரு, அவ சக்தி தெரியாம பக்கத்து கிராமத்திலிருந்து சில பேர், ஆத்துக்கு குளிக்க வரணும்னு நினைச்சாங்களாம். ஆனா, அவங்க வரும் போது எல்லாம் ஏதாவது ஒரு தடங்கல் ஏற்பட்டு, இந்த கோயிலை அடைய முடியலையாம். அம்புட்டு சக்தி வாய்ந்தது வன துர்க்கைனு சொல்லுவாங்க” என்று தன் கோலி குண்டு கண்களை உருட்டியபடி கதை சொன்னாள் மயிலா.
அதை ரகசியமாய் ரசித்த குமரன், “அப்படியா? அப்போ, வெளி ஆளுங்க யாரும் கோயிலை பார்க்க முடியாதா?” என்று நக்கலாக கேட்டான்.
“ஆமா மச்சான். கோவில் கொண்டாடிகள தவிர, புதுசா யாராவது வனதுர்க்கை கோயிலுக்கு போகணும்னு நினைச்சாங்கன்னா, வழியிலேயே ஆத்துல தவறி விழுந்துருவாங்க. இல்லனா காட்டு மிருகங்கள் வழி மறிக்கும். மழை விழுந்து, தண்ணி பாதைய அழிக்கும். அவங்களால கோயிலை அடைய முடியாது” என்று நூற்றுக்கு ஐநூறு சதவீதம் உறுதியோடு பேசிக்கொண்டு இருந்தாள் அவள்.
“மத்தவங்க போறது இருக்கட்டும். நம்ம இப்ப சரியான பாதையில தான் போயிட்டு இருக்கோமா இல்லையான்னு நான் எப்படி தெரிஞ்சுகிறது? எல்லா பக்கமும் ஒரே காடு தான இருக்குது!” என்றான் குமரன்.
“எனக்கும் தெரியாது மச்சான். சடங்காக முன்னால, ஒரு தடவை கோவிலுக்கு பொங்கல் வைக்க வந்தோம். அதுக்கப்புறம் இப்பதான் வரேன். பாதையெல்லாம் மறந்து போச்சு… ஆனா அப்பா வழி சொல்லுச்சு. கிழக்கு பக்கமா போகணும், ஆத்தங்கரை வரும். அதுல கல்லு கெடக்கும், அத மிதிச்சு அக்கரைக்கு போகணும். அதுக்கு மேல தானா வழி கிடைக்கும் . பாத்துக்கிட்டே தான் ஆறு வரை வந்தேன். இப்ப ஆத்தங்கரைய தாண்டி வந்துட்டோம்ல? அனேகமா, நாம போற பாதை சரியா இருக்கும்னு தான் நினைக்கிறேன். இன்னும் கொஞ்ச நேரத்துல கோவில் வந்துடும்” என்று பேசிக் கொண்டிருக்க, திடீரென அவர்களுக்கு பக்கத்தில் சலசலப்பு சத்தம் கேட்டது.
உடனே அப்படியே நின்றுவிட்ட குமரன், மயிலாவை ஜாக்கிரதையாக தனக்கு பின்னால் நிற்க வைத்தான். இருவரும் காதுகளை கூர்மையாக்கி அவர்களை சுற்றி என்ன நடக்கிறது என்பதை கவனிக்க ஆரம்பித்தார்கள்.
“மச்சான், எனக்கு ரொம்ப பயமா இருக்கு. அந்த மரத்துக்கு பின்னால யாரோ இருக்கிற மாதிரி தோணுது!” என்று சொல்ல, குமரன் அவளுடைய பார்வையை பின் தொடர்ந்து பார்க்க, அங்கே ஒரு உருவம் நகர்வது போல் குமரனுக்கும் தோன்றியது.
ஆனால், குமரன் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
“வெளி ஆளுங்கள் யாரும் வர முடியாதுன்னு சொன்ன. இப்ப யார் யாரோ நடமாடுற மாதிரி தெரியுது. வன துர்க்கை அவங்களுக்கு மட்டும் விதிவிலக்கு பண்ணிடுச்சா?”
“சாமிய பழிக்க கூடாது மச்சான். கன்னத்துல போட்டுக்க” என்றாள் அவனின் அப்பாவி பொண்டாட்டி.
“நீ என் பின்னாலயே வா, அங்க இருக்கிறது யாருன்னு பார்த்திடலாம்!” என்று கூறியவன், அவள் கையை பிடித்துக் கொண்டு, சத்தம் வந்த திசையை நோக்கி நடந்தான்.
அவள் பயந்து கொண்டே அவன் பின்னால் சென்றாள். அவர்கள் அஞ்சிய மரத்தின் அருகே சென்றதும், இருவரும் அதிர்ந்துவிட்டனர். அடர்ந்த மரங்களுக்கு இடையே மறைந்திருந்த ஒரு பழமையான கற் கோயில் குமரனின் கண்களுக்குத் தென்பட்டது.
“அப்பாடி, கோயிலுக்கு வந்தாச்சு. இனிமே எந்த பிரச்சனையும் இருக்காது!” என்று மயிலா பெருமூச்சு விட்டாள்.
அந்த காட்டுக்கு நடுவில் அப்படி ஒரு கோவிலை குமரன் எதிர் பார்த்திருக்கவில்லை. பாறைகளால் கட்டப்பட்ட அந்த ஆலயத்தின் கற்கள் காலத்தால் தேய்ந்து, பல வருட பாரம்பரியத்தின் அடையாளங்களை தன்னகத்தே சுமந்திருந்தன.
கோவிலின் கருவறைக்குள், வன துர்க்கை அம்மன் சுமார் நான்கடி உயரத்தில் கம்பீரமாக வீற்றிருந்தாள். அவளது பத்து கரங்களிலும் பல்வேறு விதமான ஆயுதங்கள் மின்னின. கருணை பொங்கும் விழிகளுடன் பக்தர்களை நோக்கியிருந்த அம்மனின் பின்புறம், பாம்பு படம் எடுத்தது போன்ற ஒரு வேலைப்பாடு செதுக்கப்பட்டிருந்தது.
கோவிலின் கூரையில் படர்ந்திருந்த செடிகளும், சுவர்களில் வளர்ந்திருந்த பாசிகளும் அந்த ஆலயத்தின் பழமையைப் பறைசாற்றின. கோவிலின் உள்ளிருந்து ஒரு மெல்லிய தெய்வீக அதிர்வு உருவாகி, மனதை அமைதியடையச் செய்தது.
வன துர்க்கையின் சந்நிதியில் இருவரும் பணிவோடு வந்து நின்றுகொண்டனர். மயிலா, தான் மஞ்சள் பையில் பத்திரமாக எடுத்து வந்திருந்த மண் விளக்கை மெதுவாக வன துர்க்கையின் முன் வைத்து, தன் கையாலேயே தீபம் ஏற்றினாள். அந்தச் சிறிய விளக்கில் இருந்து எழுந்த மஞ்சள் நிற ஒளி அம்மனின் திருமுகத்தை மேலும் சாந்தமாக காட்டியது.
பேச்சி இலையில் கட்டிக் கொடுத்திருந்த பிரசாதத்தை அவள் மிகுந்த பக்தியுடன் தெய்வத்தின் முன் வைத்தாள். பின்னர், தான் கொண்டு வந்திருந்த தேங்காயை உடைத்து, இரண்டு பழுத்த வாழைப் பழங்களையும் அம்மன் பாதத்தில் சமர்ப்பித்தாள். கண்களை மூடி, கைகளை கூப்பி, அவள் தன் மனதின் ஆழத்தில் இருந்து வன துர்க்கையை வேண்டிக் கொண்டிருந்தாள்.
அவளது வேண்டுதல் எல்லாமே, ‘என் மச்சான் என் மனச புரிஞ்சுக்கணும். நாங்க ரெண்டு பேரும் ரொம்ப வருஷம் சந்தோசமா வாழனும்!’ என்று அவனைச் சுற்றியே இருந்தது.
குமரனும் அவளுக்குப் பக்கத்திலேயே அமைதியாக நின்றிருந்தான். அவன் கண்களிலும் ஒருவித பணிவும் பக்தியும் நிறைந்திருந்தது. இதற்கு முன் எப்போதும் கோவிலையும் தெய்வத்தையும் ஒரு பொருட்டாக நினைத்து பழகி இராதவன் அவன்!
இன்று, ‘நான் தொட்ட காரியத்துல வெற்றிய தேடிக்கொடு தாயே…’ என்று முழு மனதுடன் அந்த வன தேவியை பிரார்த்தனை செய்தான்.
அப்போதுதான், அந்த அமைதியான சூழலை கிழிக்கும் விதமாக, சற்று தூரத்திலிருந்து ஒரு வித்தியாசமான சத்தம் கேட்டது. அந்த ஒலியின் திசை நோக்கி அவன் கவனம் திரும்பியது.
“அது என்ன சத்தம்?” என்று குமரன் மயிலாவிடம் கேட்க,
“அதுவா? இந்த மலைக்கு அந்தப் பக்கம் மூலிகை விவசாயம் பண்ணிட்டு இருக்காங்க. அந்த சத்தம் தான் கேக்குதுன்னு நினைக்கிறேன்” என்றாள் மயிலா.
“இவ்வளவு அத்துவான காட்டுக்குள்ள மூலிகை விவசாயமா? அப்படி என்ன மூலிகை அது? நான் பார்க்கணுமே!”
“வேணாம் மச்சான்! எக்காரணம் கொண்டும் அந்த பக்கம் போக கூடாதுன்னு அப்பா கண்டிப்பா சொல்லி இருக்காவ. நீங்க போக வேண்டாம்!” என்று எச்சரித்தாள் மயிலா.
“ஏன்? போனா என்ன ஆகும்? மூலிகைச் செடிய எப்படி அறுவடை பண்றாங்கன்னு பார்க்கணும்னு எனக்கு ஆசையா இருக்கு. நீ இரு, நான் போயி பார்த்துட்டு வரேன்!” என்று மயிலாவின் பேச்சை கேட்காமல், சத்தம் வந்த திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
செங்குத்தான அந்த மலையின் சரிவை லாவகமாகப் பிடித்தபடி ஏறத் தொடங்கினான் அவன். பாறைகளின் இடுக்குகளையும், மற்ற மரங்களின் வலுவான கிளைகளையும் அவன் கைகள் மாறி மாறிப் பற்றிக்கொண்டன. அவனது உடற்பயிற்சியும், மலைப்பகுதியின் மீதான அனுபவமும் அவனுக்கு அந்த கடினமான ஏற்றத்தில் உதவியது.
பதினைந்து நிமிடத்திலேயே விரல்கள் வலித்தது. வியர்வை அவன் சட்டையை நனைக்கத் தொடங்கியது. இருந்தாலும், அவன் தனது முயற்சியை கைவிடவில்லை. கிட்டத்தட்ட இருபது நிமிடங்களுக்குப் பிறகு, அவன் மலையின் உச்சியை அடைந்தான். அங்கே அவனுக்காக ஒரு மிகப் பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. அந்த மலையின் மறுபக்கத்தில் ஒரு பரந்த, ஆழமான பள்ளத்தாக்கு இருந்தது.
அடர்ந்த மரங்களுக்கும், செடிகளுக்கும் நடுவே அமையப்பெற்ற அந்தப் பள்ளத்தாக்கு, ஒரு தனி உலகம் போல காட்சியளித்தது. அங்கே அப்படி ஒரு இடம் இருக்கிறது என்பது வெளி உலகத்தில் யாருக்குமே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. காரணம் கவசம் போல அந்தப் பள்ளத்தாக்கைச் சுற்றி உயர்ந்திருந்த மலை! அது ஒரு அரண் போல அழகாக சூழ்ந்து, அப்பகுதியை பாதுகாப்பாக தனக்குள் மறைத்திருந்தது.
அதை பயன்படுத்திக் கொண்ட சமூக விரோதிகள் சிலர் அந்தப் பள்ளத்தாக்கு முழுவதும், கஞ்சா செடிகளை பசுமையாக செழித்து வளர வைத்திருந்தனர். சட்டவிரோதமாக, அதை கஞ்சா பயிரிடுவதற்கான ரகசிய இடமாகவே மாற்றி வைத்திருப்பதை குமரன் அறிந்தான். மலைவாசி மக்கள் சிலர், இலை பறிக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.
ஐந்தாறு பெண்கள், இருபதுக்கும் மேற்பட்ட ஆண்கள் என அங்கே ஒரு கூட்டமே இலை பறித்துக் கொண்டிருந்தது. எல்லோரும் செடிகளுக்கு இடையே குனிந்தும் நிமிர்ந்தும் இலைகளைப் பறிப்பதில் முனைந்திருந்தனர். சிலர் அவர்கள் பறித்த இலைகளை சேகரித்துக் கொண்டிருந்தனர். அவர்களின் முகத்தில் சட்டவிரோத தொழிலில் ஈடுபடுவதற்கான எந்தவித பயமும் பதற்றமும் இல்லை. மாறாக, ஒருவித அப்பாவித்தனம் மட்டுமே இருந்தது.
அங்கே ஒரு ஓரத்தில், பசுமையான மரங்களின் நிழலில் ஒரு சிறிய கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. அங்கே ஒருவன் சிறிய நாற்காலியில் சாய்ந்தபடி அமர்ந்திருந்தான். அவன் கண்களால் அந்தப் பள்ளத்தாக்கு முழுவதும் பரவியிருந்த கஞ்சா செடிகளையும், இலை பறிக்கும் வேலையில் ஈடுபட்டு இருந்தவர்களையும் கண்காணித்துக் கொண்டிருந்தான். அவனது தோற்றமும், அங்கிருந்த மற்றவர்களின் பணிவான பார்வையும் அவன் அந்த கும்பலின் தலைவனாக இருக்கும் என்று குமரனுக்குத் தோன்றச் செய்தது.
குமரன் ஒரு பெரிய மரத்தின் பின்னால் தன்னை மறைத்துக் கொண்டு, அங்கே நடக்கும் அத்தனை விஷயங்களையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தான். அவர்களின் உரையாடல்கள் அவன் காதுக்கு எட்டவில்லை. ஆனால் அவர்களின் உடல் மொழியும், அவர்கள் வேலை செய்யும் விதமும் வெகு சாதாரணமாக தெரிய, மீண்டும் ஒருமுறை அவர்கள் எல்லோரும் அப்பாவிகள் என்று அவன் மனது எடுத்துரைத்தது.
சிறிது நேரம் அங்கேயே இருந்து எல்லாவற்றையும் கவனித்துக் கொண்ட பிறகு, குமரன் மலையிலிருந்து கீழே இறங்கி வந்தான். கோயிலின் அருகே, மயிலா மிகுந்த பதற்றத்துடன் அவனுக்காக ஒன்றரை மணி நேரமாய் காத்திருந்தாள். அவன் சென்று இவ்வளவு நேரம் ஆகிவிட்டதே என்று அவளது மனம் பயத்தில் தவித்தது. அவனைக் கண்டதும் அவளுக்குள் ஒரு நிம்மதி பெருமூச்சு எழுந்தது.
“அப்பாடா, வந்துட்டீங்களா! நீங்க என் பேச்சைக் கேட்கவே மாட்டீங்கன்னு எனக்கு தெரியும். அதுக்குனு ஆபத்துல கொண்டு போய் தலையை கொடுப்பீங்களா? இங்க கிளம்பறதுக்கு முன்னாடியே அதை எல்லாம் பார்க்க கூடாதுன்னு அப்பா சொல்லி இருந்தாரு. நமக்கு எதுக்கு மச்சான் வீண் பொல்லாப்பு? வீட்டுக்கு போவோம் வாங்க” என்று சொல்லி, அவன் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.
சிறிது தூரம் நடந்த பிறகு, அவர்கள் மீண்டும் ஆற்றங்கரைக்கு வந்து சேர்ந்தார்கள். ஆனால் அங்கே அவர்களுக்கு வேறொரு அதிர்ச்சி காத்திருந்தது…
