இந்த பயணம் தொடங்கிய நொடியில் இருந்து குமரன் மயிலாவிடம் காட்டிய அக்கறை அவளது மனதை சக்கரையாய் கரைத்து விட்டிருந்தது…
அவனது கனிவான பார்வை, அவளது பாதுகாப்பைப் பற்றிய கவலை, சின்ன சின்ன உதவிகள் எல்லாமே அவளது இதயத்தில் புதிய நம்பிக்கைக் கீற்றுகளை விதைத்திருந்தன. அவனிடம் இருந்த வெறுப்பும் கோபமும் தொலைந்து, ஒரு மெல்லிய காதல் பார்வை தெரிந்தது. அவனது கரங்களின் ஸ்பரிசம் ஒவ்வொரு முறை அவளது உடலில் படும் போதும் மின்சாரத்தை பாய்ச்சுவது போலிருந்தது.
‘என் மச்சான் என்னை மனசார வெறுக்கல! எல்லாமே அந்த நேரத்து கோபம்தான் போல…’ என்ற எண்ணம் அவளது மனதில் ஆழமாகப் பதிந்தது.
அவனது மாற்றம் அவளது நம்பிக்கையை அதிகப்படுத்தியது. அவனது அன்பிற்காக அவள் ஏங்கித் தவித்த ஒவ்வொரு நொடியும் இப்போது பலனளிப்பது போல உணர்ந்தாள்.
இப்படி சந்தோஷமான நிலையில் இருந்ததால், ஆற்றங்கரையில் இருந்த ஆபத்தை உணராமல் தன் கைகளை வீசியபடி வேகமாக நடந்து கொண்டிருந்தாள். அவளது மனது அண்ட வெளிகளுக்கு அப்பால் இருந்தது. சட்டென்று அவளைப் பின்னால் இருந்து வேகமாகப் பிடித்து இழுத்த குமரன், அவளை ஒரு பெரிய மரத்தின் பின்னால் மறைத்து நிறுத்தினான்.
அவனது பிடி அவளை ஒரு கணம் திடுக்கிடச் செய்ய, “என்ன மச்சான், என்ன பண்ற?” என்று புரியாமல் கேட்டாள்.
குமரனின் முகத்தில் தீவிரமும், எச்சரிக்கையும் நிறைந்திருந்தது. அவன் அவளை அமைதியாக இருக்கும்படி சைகை செய்தான். மயிலாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவள் அவன் முகத்தை பார்க்கும் போது அவன் பயந்து போய் இருப்பதை உணர்ந்தாள்.
“என்னாச்சு மச்சான் ஏதாவது பிரச்சனையா! ஏன் மறைஞ்சு நிக்கிறோம்?” என்று பதறி கேட்க,
“ஷ்… சத்தம் போடாத மயிலா… கொஞ்சம் அமைதியா பேசு” என்று அவன் சொல்ல, ஆற்றங்கரையில் யாரோ நடமாடுவது போன்ற சலசலப்பு அவளுக்கும் கேட்டது.
ஒருவேளை அந்த மர்ம ஆசாமி தான் மீண்டும் வந்து விட்டானோ என்று மயிலாவும் பயப்பட ஆரம்பித்து விட்டாள். அவள் கைகள் இரண்டும் அவன் இடுப்பை வளைத்து கட்டிக் கொண்டது. நடுங்கும் உடலோடு அவள் ஒண்டுவதால், அவனும் அப்போதைக்கு அவளை எதுவும் சொல்லவில்லை.
அவளும் பயந்த தொனியில், “என்னாச்ச்சு மச்சான்? அங்க யாரு இருக்கா?” என்று நடுங்கியபடி கேட்டுக் கொண்டே அவன் மார்போடு ஒன்றிக் கொண்டாள்.
“மயிலா!! நாம நல்லா மாட்டிக்கிட்டோம். நம்மளால அந்த ஆத்த கடந்து போக முடியாது.”
“ஏன்?”
“பாரு அங்க…” என்று சுட்டிக் காட்டினான்.
அப்போதுதான் மயிலாவின் பார்வை அவர்கள் மறைந்திருந்த மரத்தின் இடுக்கிலிருந்து விலகி, ஆற்றின் மறுகரைக்குச் சென்றது. அங்கே அவளுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது!
சில காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக ஆற்று நீரில் ஆனந்தமாக குளித்துக் கொண்டிருந்தன. வெயிலின் கொடுமை தாளாமல், அவை தங்கள் பெரிய உடலை தண்ணீரில் ஒருக்களித்துப் படுக்க வைத்து, நீரின் குளிர்ச்சியை அனுபவித்துக் கொண்டிருந்தன. சில யானைகள் தங்கள் துதிக்கையால் தண்ணீரை உறிஞ்சி, ஒன்றை ஒன்று விளையாட்டாக பீய்ச்சி அடித்துக் கொண்டன.
குட்டி யானைகள் தங்கள் தாய் யானைகளின் அருகில் நீந்தி விளையாடுவது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அந்தப் பெரிய மிருகங்களின் ஆனந்தமான குளியலைப் பாசத்தோடு பார்த்தாள் அவள். ஆனாலும் அடிமனதில் இருந்த பயம் தெளியவில்லை. அவைகளுக்குப் பின்னால் அந்த மர்ம மனிதன் இருப்பானோ என்று தன் விழியின் கருமணிகளை உருட்டி தேடினாள்.
அப்படி எந்த ஆபத்தும் தெரியாமல் போக, “என்ன மச்சான்? அங்க என்னத்த காட்டுற நீ?” என்று குழப்பமாக கேட்டாள்.
“இவ்வளவு பெரிய யானைங்க உன் கண்ணுக்குத் தெரியலையா? இதுங்களத் தாண்டி நாம எப்படி கிராமத்துக்குப் போறது?” என்று குமரன் பதற்றத்துடன் கேட்க, மயிலாவுக்குச் சட்டென்று சிரிப்பு வந்துவிட்டது. அவள் சிரிக்கும் சத்தம் கேட்டதும் குமரன் முகத்தில் கோபம் படர ஆரம்பித்தது.
“இப்போ எதுக்கு சிரிக்கிற?” என்று பல்லை கடித்துக் கொண்டு அவன் கேட்க,
“சிரிக்காம என்ன பண்ணச் சொல்ற மச்சான்? அங்க யானைங்கதானே நிக்குது. ஏதோ சிங்கம், புலி நிக்கிற மாதிரி இம்புட்டுப் பயப்புடுறியே!!” என்று சொல்லிவிட்டு அவள் மீண்டும் கலகலவெனச் சிரித்தாள்.
“அடியே…” என்று அதட்டினான்.
“ஐயோ என் மச்சான் யானையப் பார்த்து பயப்படுது. தயவு செஞ்சு இத ஊருக்குள்ள போயி சொல்லிராத. எல்லாரும் என்னையத்தான் கேவலமா நினைப்பாங்க” என்று மயிலா மேலும் கிண்டல் செய்தாள்.
“ரொம்ப சிரிக்காதடி…” என்று எரிச்சலுடன் சொன்னான்.
“ஐயோ கடவுளே. என்னால சிரிப்ப அடக்க முடியலையே. ஏன் மச்சான், நெசமா யானையப் பார்த்துத்தான் பயந்தியா? இத நான் எங்க போயி சொல்லுவேன். துர்கையம்மா, என் மச்சான காப்பாத்தும்மா…” என்று அவள் தொடர்ந்து அவனை சீண்டிக்கொண்டே இருக்க, குமரன் முகத்தைத் திருப்பிக்கொண்டான்.
அவனது கோபம் அவளுக்கு இன்னும் அதிகமாக சிரிப்பை வரவழைத்தது. வெகுநேரம் அவள் சிரித்து ஓய்ந்த பிறகுதான், அவன் இன்னும் முகத்தைத் தூக்கிக்கொண்டு கடுகடுப்பாக இருப்பதை கவனித்தாள். அவனைப் பார்க்க அவளுக்கே கொஞ்சம் பாவமாகத்தான் இருந்தது.
அதன்பின்னர் அவனை கிண்டல் செய்வதை நிறுத்திவிட்டு, அவன் கையைப் பிடித்துக் கொண்டு மென்மையாகப் பேசத் தொடங்கினாள்.
“நீ ஒண்ணும் பயப்படாத மச்சான். நான் தான் இருக்கேன்ல! இதெல்லாம் நம்ம புள்ளைங்க போல. நமக்கு எந்தக் கெட்டதும் பண்ணாது. நாம அதுங்களத் தொந்தரவு பண்ணாம இருந்தாலே போதும், அதுங்க பாட்டுக்கு ஒதுங்கி கெடக்கும்” என்றாள். அவள் குரலில் இருந்த கனிவும், தைரியமும் குமரனின் மனதை லேசாக்கியது. அதற்காக உயிரை பணயம் வைக்க முடியாதே!
“லூசாடி நீ! இது ஒண்ணும் ஊர்ல இருக்கிற சாதாரண யானை கிடையாது. காட்டு யானைங்க… எப்ப வேணாலும் இதுங்களுக்கு மதம் புடிக்கும். அந்த சமயத்துல எதிர்ல என்ன இருந்தாலும் தாக்க ஆரம்பிச்சிடும். அதுங்க பலத்துக்கு முன்னால நாமெல்லாம் எம்மாத்திரம்?” என்று சொல்ல,
“உன் நியாயம் எனக்கும் புரியுது மச்சான். ஆனா நமக்கு இப்போ வேற வழி கிடையாது. இதுங்கள பாத்தா, இப்போதைக்கி இந்த இடத்த காலி பண்ற மாதிரி தெரியல. அதுங்க போகலைனு நாம இங்கேயே இருந்தா வேற மிருகம் இறங்கிடும். எல்லாம் அமைதியா ஓய்வெடுத்துட்டு தான இருக்குதுங்க? நாம பொத்துனாப்ல போயிடுவோம் வா” என்று அவள் சொல்ல,
“ஷ்… எதுக்கு இப்போ கத்தி பேசுற? அதுங்களுக்கு கேட்டுட போகுது. கொஞ்ச நேரம் அமைதியா இரு மயிலா… சத்தம் போடாத. முதல்ல அதுங்கள கவனமா பார்க்கலாம்! அதுக்கப்புறம் எப்படி போறதுன்னு யோசிக்கலாம்” என்று சொல்லிக் கொண்டிருக்க மயிலா அவனிடமிருந்து விலகி யானையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
அவன் தலையில் கை வைத்து, “இருந்திருந்து இவகிட்டயா நான் சிக்கணும்?!” என்று புலம்பியவன், மயிலாவின் பின்னால் ஓடி வந்து அவள் கைகளை பிடித்து தடுத்து நிறுத்தினான்.
“ஏன்டி… இவ்ளோ சொல்லியும் நீ பாட்டுக்கு எங்க போயிட்டு இருக்க?” என்று கேட்க,
“நான் தான் சொன்னேன்ல. அதுங்க நம்மளை எதுவும் பண்ணாது. தேவையில்லாம நீயும் பயந்து என்னையும் பயமுறுத்தாத மச்சான். நமக்கு வன துர்க்கை துணையா இருப்பா. அவ நம்மள பாதுகாப்பா கூட்டிட்டு போவா. பேசாம என் பின்னால வா மச்சான்” என்று சொல்லி விட்டு மீண்டும் நடக்க ஆரம்பித்தாள். அவனால் அவளை தனியே விட முடியவில்லை. உயிரை கையில் பிடித்துக் கொண்டு உடன் நடந்தான்.
ஆனாலும் அவ்வப்போது, “இந்த ரிஸ்க் நமக்கு தேவையாடி?” என்று கேட்டுக்கொண்டே இருந்தான்.
“மச்சான், நீ பயத்துல இங்கிலீசுல பேசுற பாரு…” என்று அதற்கும் கிண்டல் செய்தாள்.
கற்பாறைகளை மிதித்து அவள் ஆற்றைக்கடக்க, யானைகள் அவளை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் தமது வேலையில் மூழ்கி இருந்தன.
‘எப்படியாவது அக்கரைக்கு உயிரோடு போய்விட வேண்டும்!’ என்று மனதிற்குள் அவனும் வனதுர்க்கையிடம் வேண்டுதல் வைத்தபடி பாறைகளில் ஏறி நடந்தான். வரும்போது ஒரு துளி கூட வழுக்காத அந்த பாறைகள், இப்போது கால் வைக்கும் இடத்தில் எல்லாம் வழுக்குவது போல தெரிந்தது.
“எனக்கென்னவோ நம்ம பண்றது முழு பைத்தியக்காரத்தனம்னு தோணுது…”
இதைக் கேட்ட மயிலா, “இருட்டுது, இனிமே இன்னும் நிறைய மிருகம் இறங்கும். நேரமானா அடுத்து நடந்து போக வழியும் தெரியாது. என்ன பண்ணலாம்னு நீயே சொல்லு மச்சான்?…” என்று கேட்க, அவனிடம் பதில் இல்லை.
“நீ வேணா இங்கயே இரு. நான் போறேன்ப்பா” என்று குழந்தையை மிரட்டுவது போல மிரட்டினாள். உண்மையில் அது நன்றாகவே வேலையும் செய்தது!
“நில்லுடி, நானும் வரேன். சத்தம் போடாதடி, சத்தம் இல்லாம பொறுமையா நடக்க முடியாதா உன்னால? நாம ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையா தான் இந்த இடத்த கடக்கணும்” என்று தீவிரமான முகப் பாவனையுடன் உளறிக் கொண்டே வந்தான்.
“உனக்கு பயமா இருக்கா? வேணும்னா என் கைய புடிச்சுக்க மச்சான். நான் உன்ன கூட்டிட்டு போறேன்” என்று அவன் கையை பிடித்துக் கொண்டாள். யானைகள் அசையும் போதெல்லாம் குமரனுக்கு ஈரக் கொலையே வற்றி விடுவது போல் இருந்தது. அதன்பொருட்டு அவள் கையை அடிக்கொரு முறை இறுக்கிப் பிடித்தான்.
மயிலா கிளுக்கிச் சிரித்தபடி, “பயப்படாத மச்சான்! மெதுவா நடந்து போனா யானைங்க நம்மள ஒன்னும் செய்யாது. இதோ கரைக்கு பக்கமா வந்துட்டோம் பாரு” என்று நேர்மறையாய் பேசியபடி அவனை கூட்டிச் சென்றாள்.
இருவரும் கரைக்கு சில அடி தூரம் இருக்கும் போது, ஆற்றின் அக்கரையில் ஒரு மரத்திலிருந்த கிளை உடைந்து தண்ணீரில் விழுந்தது. அந்த சத்தத்தை கேட்ட யானைகள் எல்லாம் படாரென ஒரே நேரத்தில் திரும்பிப் பார்த்தது. குட்டி யானை ஒன்று பயந்து ஓட, அதைப் பார்த்த தாய் யானை கோபமாக பிளிறியது. உடனே மற்ற யானைகளுக்கும் பதற்றம் தொற்றியது! அவை பதறி சிதறி ஓட ஆரம்பித்தன…
அவ்வளவு தான்! யானை இன்னும் சில வினாடிகளில் தன்னை மிதித்து கொன்று விடும் என்று முடிவே கட்டி விட்டான் குமரன். எல்லா யானைகளும் ஒன்றை ஒன்று இடித்துக் கொண்டு வேகமாக இவர்கள் பக்கம் ஓடி வர, இப்போது மயிலாவுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. கரையை அடைந்தாலும் யானைகள் அவர்களை மிதித்து நசுக்கி விடும் என்று நன்றாக புரிந்தது.
மயிலா சத்தமாக, “மச்சான், நிக்காம ஒடுவோம் வா…” என்று சொல்ல, குமரன் அவளை இழுத்துக் கொண்டு கரைக்கு தாவினான். அவள் தரையில் விழுந்தாலும் சிறு கீறலும் ஏற்படாத வண்ணம், அவன் உடல் அவளை தாங்கி பிடித்திருந்தது.
இதற்குள் யானைகள் கரையை நெருங்கிவிட, இருவரும் எழுந்து வேகமாய் ஓட ஆரம்பித்தார்கள்.
யானைகள் இருவரையும் துரத்த ஆரம்பித்து விட்டது.
“இப்போ என்னடி பண்றது?” என்று பதட்டமாக கேட்டான்.
“வேகமா ஓடுறது மட்டும் தான் ஒரே வழி மச்சான்” என்று சொல்ல, குமரன் திரும்பி பார்த்துக் கொண்டே ஓடினான்.
“திரும்பி பாக்காம ஒடு மச்சான். இல்லன்னா வேகமா ஓட முடியாது…” என்று சொல்ல, அவன் மூளை வேறு விதமாக யோசித்தது.
திடீரென ஒரு இடத்தில் நின்றவன், அவளை தன்னோடு இழுத்துக் கொண்டு ஓரமாய் இருந்த பள்ளத்தில் சறுக்கினான். ஐந்தடி உயரமே இருக்கும் அந்த சிறு பள்ளத்தினால் அவளுக்கு எதுவும் அடிபடவில்லை. இருந்தும் பாதுகாப்பாய் அவளை குமரன் அணைத்திருக்க, ஒருவர் மீது ஒருவர் புரண்டபடி உருண்டு சென்றார்கள்.
அவர்கள் உருண்டு சென்ற இடத்தில் இரண்டு நபர்கள் ஒளிந்து கொள்வதற்கு ஏற்றபடி ஒரு குகை இருந்தது. அதற்குள் அவளை உட்கார வைத்து, அவனும் ஒளிந்து கொண்டான். மற்ற யானைகள் வேறு பக்கம் ஓடினாலும், ஒன்றிரண்டு இவர்களை பின் தொடர்ந்து வந்திருந்தது.
அவற்றாலும் இவர்களை எதுவும் செய்ய முடியவில்லை. ஏனெனில், பெரிய கற்பாறையின் ஒரு பகுதியாய் அந்த குகை இருந்ததால், அதை யானையால் உடைக்க முடியவில்லை. யானையின் தும்பிக்கை மட்டுமே குகைக்குள் நுழைந்தது. கால் நுழையவில்லை! ஆனாலும் அங்கிருந்து போக மறுத்து அப்படியே உலவிக் கொண்டிருந்தது.
“இது ரெண்டும் போகாதா மச்சான்!”
“பொறு, நான் இருக்கேன்ல” என்று தைரியம் தந்தான்.
அப்போதுதான் அவன் கைகள் தன் இடையை வளைத்து பிடித்திருப்பதை கவனித்தாள். அதிகம் அழுத்தாமலும், அதே சமயம் இடைவெளி இல்லாமலும் பாதுகாப்பாய் அவள் வயிற்றை அணைத்திருந்தான் குமரன். அவள் மனதை மோகம் சூழ, வானிலும் மேகம் சூழ்ந்தது. இனி இடி மழைதான்!
