கோயம்புத்தூர் மாநகரின் மையப்பகுதியில் அமையப்பெற்ற அந்தத் திருமண மண்டபம், எழில் கொஞ்சும் இளமங்கையைப் போல மின்னொளிகளால் ஒப்பனை செய்யப்பட்டுப் பொலிவுடன் காட்சியளித்தது. உறவினர்களின் வருகையும், நண்பர்களின் கலகலப்பும் அந்த இடத்தை ஒரு பெருவிழாக் கோலமாக மாற்றியிருந்தது. எங்கு திரும்பினாலும் பட்டுப் புடவைகளின் சரசரப்பும், சுற்றத்தாரின் மகிழ்ச்சிப் பேச்சுகளும் நிறைந்து வழிந்தன.
மண்டபத்தின் முகப்பில், மலர்களால் தொடுக்கப்பட்டிருந்த அந்தப் பெயர்கள் அனைவரது விழிகளையும் கவர்ந்தன:
நித்திஷ் ❤️ தேவிகா
வேதாந்த் ❤️ நேத்ரா
வாயிலைக் கடந்து சென்றவர்கள் அத்தனை பேர் முகமும் ஒரு நொடி புன்னகைக்காமல் இருக்கவில்லை. பின்னே! ஒரே நாளில், ஒரே மேடையில் ஒரு சகோதரர்கள் இருவரும், ஒரு சகோதரிகள் இருவரைத் தங்கள் வாழ்க்கைத் துணையாக ஏற்று, மணமேடை ஏறுகிறார்களே…
இன்று மாலை நிச்சயம், விடிந்தால் இரு ஜோடிகளுக்கும் திருமணம் என்று முடிவு செய்து இருந்தார்கள். இதோ நிச்சயத்திற்காக இரண்டு ஜோடிகளும் மேடை ஏறிவிட்டனர்.
அதில் நித்திஷ் தேவிகாவின் முகம் கொள்ளா மகிழ்ச்சியில் நிறைந்திருந்தது. மறுபுறம், வேதாந்த் – நேத்ரா ஜோடியோ, தங்களுக்குச் சம்பந்தமே இல்லாத ஒரு இடத்திற்கு வந்தது போல, ஒருவரையொருவர் ஏறிட்டும் பார்க்காமல் நின்றிருந்தனர்.
அதிலும் வேதாந்தின் முகம் எள்ளும் கொள்ளும் வெடிக்கும் வகையில் அதீத கடுப்புடன் இருந்தது. சும்மாவே கோபத்தில் கண்ணு மண்ணு தெரியாமல் நடந்து கொள்ளக் கூடியவன் அவன். இப்போது சலங்கை வேறு கட்டி விடப்பட்டிருக்கிறது! கேட்கவா வேண்டும்? யாராவது கைக்கு கிடைத்தால் கடித்து குதறி விடுவது போன்ற முகபாவனையோடு இருந்தான்.
வேதாந்தின் பெற்றோரும், அவன் உடன் பிறந்த அண்ணன் நித்திஷும் கூட அவனை நெருங்க பயந்து ஒதுங்கி நின்றனர். அவ்வளவு தூரம் எரிமலையாய் கொதித்தது அவன் உள்ளம்… நித்திஷூம் தேவிகாவும் முதலில் மோதிம் மாற்றிக் கொள்ள, அடுத்ததாக நேத்ராவிடம் மோதிரத்தை கொடுத்தனர் பெரியவர்கள்.
அவளும் பொய்யான புன்னகையோடு அதை வாங்கி வேதாந்திற்கு மென்மையாக அணிவித்து விட்டாள். அவள் உதடுகள் அவனுக்கு மட்டும் கேட்கும் வகையில், “சாரி!” என்று கூறியது.
அதை கேட்டதும் வேதாந்திற்கு எரிமலையின் மீது பெட்ரோல் ஊற்றியது போல கோபம் பன்மடங்கு எகிறிற்று. அவளுக்கு மோதிரம் அணிவிக்கிறேன் என்ற பெயரில் அவள் விரலை பிடித்து வளைத்து, முறிக்க முயற்சித்தான்.
“ஸ்ஆ…” மெல்ல கத்தினாள். ஆனாலும் அவன் விடவில்லையே! அசுரன் அவன் அந்த பிஞ்சு விரலினை நசுக்கி ரசித்தான்.
மோதிரம் விரலில் நுழைவதற்குள், நேத்ராவுக்கு உயிர் போய் உயிர் வந்தது. வலி தாழாமல் கண் கலங்கி அழுதே விட்டாள். ஆனாலும் சூழ்நிலை கருதி, அதைப் பிறருக்கு காட்டக்கூடாது என்று நினைத்து, தலையை குனிந்து பல்லைக் கடித்து வலியைப் பொறுத்துக் கொண்டு நின்றாள்.
கேமரா மேன் வாங்கிய காசிற்கு வஞ்சகம் வைக்காமல் முதல் ஜோடியை வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்து விட்டு, இரண்டாவது ஜோடியை நெருங்கினான். வேதாந்த்தோ துளி சிரிப்பும் இன்றி பாறை முழுங்கியது போல நின்றான். இரண்டு மூன்று போட்டாக்களை பொறுமையோடு எடுத்தவன் அதற்கு பிறகு, தன் தொழிலுக்கு துரோகம் செய்ய விரும்பவில்லை.
“சார், இஞ்சி தின்ன ஏதோ போல இருக்காதீங்க. கொஞ்சம் சிரிங்களேன்!” என்றார் வேதாந்திடம்.
“நான் இப்படி தான் இருப்பேன். முடிஞ்சா ஃபோட்டோ எடு, இல்லன்னா மூடிட்டு கிளம்பு…” என்று கடுப்பாக பேச, அதற்கு பிறகு அந்த கேமரா மேன் பேசவே இல்லை. பேருக்கு ஃபோட்டோ எடுத்து தள்ளினான்.
“சாப்பிட போலாம், பொண்ண கூட்டிட்டு வா வேதாந்த்…” என்று அவன் தந்தை அழைக்க, “பசிக்கல” என கடுகடுத்தான்.
எவனா இருந்தாலும் வெட்டுவேன்! எனும் மனப்பான்மையோடு எல்லோரிடமும் சண்டைக்கு நிற்கிறான். எனவே, அமைதியாக இருப்பதை தவிர நேத்ராவிற்கும் இப்போது வேறு வழியே இல்லாமல் இருந்தது.
அன்றிரவு மணமகள் அறையில் இருந்தவளுக்கு, துளியும் விழி மூடவில்லை. உறங்காமல் தவித்தவள், ஜன்னல் வழியே தெரிந்த இருண்ட வானத்தை வெறித்துக் கொண்டு இருந்தாள். அதைக் கவனித்த அவளின் அக்கா தேவிகா அவளுக்கு அருகே வந்தாள்.
“என்னடி, இன்னும் தூங்காம இருக்க? நாளைக்கு சீக்கிரம் வேக் அப் ஆகணும். நல்லா தூங்கினாதானே போட்டோவில முகம் பளிச்சுன்னு இருக்கும்? போய் தூங்கு…”
“எனக்கு தூக்கம் வரலக்கா. நீங்க போயி தூங்குங்க.”
“ஏன்?”
“நான் ஏற்கனவே பகல்ல நல்லா தூங்கிட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்துல தூங்குறேன்” என்று சோர்ந்த குரலில் கூறியவளை சந்தேகமாக பார்த்தாள் தேவிகா.
“நேத்ரா, நான் கேட்குறேன்னு தப்பா நெனச்சுக்காத! உனக்கு இந்த கல்யாணத்துல முழு விருப்பம் தானடி? இல்ல எனக்காக தான் ஓகே சொன்னியா?” என்றாள் கண்கள் இரண்டிலும் சந்தேகம் ததும்ப.
“அப்படிலாம் இல்லையே. வேதாந்த் ரொம்ப ஸ்மார்ட்டா இருக்காரு. நல்ல வேலையில இருக்காரு. அவங்க குடும்பமும் நம்மளோட ரொம்ப அன்பா நடந்துக்கிறாங்க. எல்லாத்தையும் விட கல்யாணத்துக்கு பிறகும், நீயும் நானும் ஒரே வீட்டுல இருக்கப் போறோம். இதுக்கு மேல என்னக்கா எனக்கு வேணும்?” என்று பொய் சிரிப்புடன் கூற, தேவிகாவும் நேத்ராவின் வார்த்தைகளை நம்பிவிட்டாள்.
“அவரு உன்கிட்ட ஒழுங்கா பேச கூட மாட்றாருல. அதெல்லாம் பார்த்தா தான்டி எனக்கு பயமா இருக்கு. ரொம்ப கோபக்காரரா இருப்பாரு போலயே. சின்ன விஷயத்துல கூட சிடுசிடுனு இருந்தா வாழ்க்கை ஃபுல்லா எப்படி சமாளிக்கிறது?”
“அவர் என்கிட்ட மட்டும் இல்ல. யார்கிட்டயுமே ஒழுங்கா பேச மாட்றாருகா. ஏன்னா ஹீ ஈஸ் எ போலீஸ் இன்ஸ்பெக்டர். எந்நேரமும் குற்றவாளிகள அதிகாரம் பண்ணி பழகிட்டாரு. அவரு எப்படி நம்மள மாதிரி நார்மல் பர்சனா இருப்பார்னு நெனச்சீங்க?”
“ஆனாலும், அவர் பண்றது ரொம்ப டூ மச்சா இருக்குடி. நீ எப்படி சமாளிப்ப?”
“எனக்கு அப்படி அப்நார்மலா எதுவும் தெரியல. என்கிட்ட பேசும்போது நல்லபடியா தான் பேசுறாரு. அதுவும் இல்லாம அவங்க அம்மா தான் சொன்னாங்களே. வேதாந்த் ஒரு இன்ட்ரோவெர்ட்னு, பார்த்துக்கலாம்கா… மேரேஜ்க்கு அப்புறம் நான் அவர என்ன மாதிரியே வாய் பேச வச்சிடுறேன், ஓகேவா?” என்று கேட்டு சிரித்தாள்.
தேவிகாவும் சிரித்துக் கொண்டே தங்கையின் கன்னம் கிள்ளி விட்டு, தெளிந்த முகத்துடன் உறங்க சென்று விட்டாள். இங்கே உண்மையை நினைத்து, தனியே கண்ணீர் விட்டுக் கொண்டு இருந்தாள் நேத்ரா.
மறுநாள் விடியல் காலையில் இரு ஜோடிகளுக்கும் தடபுடலாக திருமணம் நடந்து முடிந்து இருந்தது. தாலி கட்டும் போது வேதாந்த், தன் கண்களில் வன்மம் மின்ன நேத்ராவை பார்க்க, அவளோ கண்கள் கலங்க அவனைப் பார்த்தாள். பார்க்கும் யாவரும் ஹோம குண்டத்தில் இருந்து வரும் புகையினாலே அவளுக்கு கண்கள் கலங்குகிறது என்று நினைத்தனர்.
“வெல்கம் டூ யுவர் ஹெல். இன்னையில இருந்து உன்னோட வாழ்க்கையில வரப்போற ஒவ்வொரு நிமிஷமும் வலி நிறைஞ்சதா இருக்கும். அதுக்கு நான் ஃபுல் கேரண்டி தரேன்…” என்றான் சிரித்த முகத்தோடு.
பேதை அவள், பாவமாய் விழிக்க அக்கினியை சுற்றி வர சொன்னார் ஐயர்.
“வந்த வேலை முடிஞ்சது” என்றவன், திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்கள் கண் முன்னே உடை மாற்றிக் கொண்டு கிளம்பிவிட்டான்.
“என்ன? ஏது?” என ஆங்காங்கே பல குரல்கள் எழுந்த வண்ணம் இருக்க, “அர்ஜென்ட் வொர்க்” எனக்கூறி சமாளித்தனர் அவனின் பெற்றோர்.
புயல் வேகத்தில் புறப்பட்ட வேதாந்த், நேராக ஏர்போர்ட்டிற்கு விரைந்தான். ஏனெனில் திருமணம் முடிந்த அடுத்த ஒரு மணி நேரத்திலேயே சென்னைக்கு ஃப்ளைட் டிக்கெட் புக் செய்து விட்டுதான், புறப்பட்டே வந்திருந்தான் அந்த எமகாதகன். இது எல்லாமே, நேத்ரா தன்னை திருமணம் செய்த நொடி முதல், துளி சந்தோஷமும் கிடைக்கக்கூடாது எனும் எண்ணத்தால் செய்தது.
மணமக்களுக்கு பரிசு கொடுக்க வந்திருந்த விருந்தினர்கள், “என்ன? இந்த பொண்ணு மட்டும் தனியா நிக்குது. மாப்பிள்ளை எங்க போனாரு?” என்று மாற்றி மாற்றி கேள்வி கேட்டு நச்சரித்தனர்.
வாழ்வில் இனிமையாக நிகழ்ந்தேற வேண்டிய சம்பவம், இப்படி பலருக்கு பேசு பொருளாகி விட்டதே என்று எண்ணி முகம் வாட நின்றிருந்தாள் நேத்ரா.
“நீ ஒண்ணும் தப்பா நினைக்காதம்மா. அவன் முன்னாடியே சொல்லி இருந்தான். கல்யாணம் முடிஞ்சதும் உடனே கிளம்பிடுவேன்னு. ப்ளைட்டுக்கு லேட் ஆகிடுச்சு போல, அதான் கிளம்பிட்டான்” என்று தன் மகனுக்கு ஆதரவாக பேசினார் அகிலா.
“இட்ஸ் ஓகே ஆன்டி. அவர் பார்க்குற வேல அப்படி. எனக்கு அவர் சிட்சூவேஷன் புரியுது. நான் தப்பா எதுவும் நினைக்கல. வர்றவங்க எல்லாரும் திரும்பத் திரும்ப அதையே கேட்கிறதால ஒரு மாதிரி இருக்கு…” என்று பெருந்தன்மையாக கூறினாலும், உண்மையில் ஒவ்வொரு கேள்வியும் கோடாரியால் மனதை வெட்டுவது போல வலித்தது அவளுக்கு.
மணமக்களை அடுத்தகட்ட சம்பிரதாயத்திற்காக வீட்டிற்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு நடந்தது. தனியே நிற்பவளுக்கு எந்த சடங்கு சம்பிரதாயங்களை செய்வது? என அவளை தனியாக அறைக்குள் அனுப்பி வைத்தனர். கதவைப் பூட்டிக் கொண்ட பாவையோ, பாத்ரூமில் அமர்ந்து கொண்டு கண்கள் வீங்குமளவு கதறி அழுதாள்.
அவள் அழுகைக்கு காரணம் அவன் விட்டுப் போய்விட்டான் என்பது இல்லை. அவள் கூற வருவது எதையும் செவி மடுக்க மாட்டேன் என்கிறானே! அதுதான்…
நித்திஷுக்கும் தேவிகாவிற்கும் அடுத்தடுத்த சாங்கியங்களை செய்ய பெரியவர்கள் முன் வந்தனர். அகிலா மூத்த மருமகளான தேவிகாவை வைத்து குத்துவிளக்கு ஏற்ற, அவளோ தன் தங்கை நேத்ரா அறையை விட்டு கூட வெளியே வராமல் ஒதுங்கி நிற்பதை நினைத்து வருத்தம் கொண்டாள்.
அறைக்குள் தனியே அமர்ந்து இருந்த நேத்ராவுக்கு தன் வாழ்வே சூன்யமானது போல இருந்தது. ஒரே வாரத்தில் அவள் வாழ்க்கை இப்படி மாறும் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை.
நேத்ரா அதீத அழகும் தைரியமும் நிறைந்தவள். சிறு வயதிலேயே அவளின் பெற்றோரை விபத்தில் பறிகொடுத்தவளுக்கு ஆதரவு கொடுக்க அவளின் உறவினர்கள் யாருக்கும் அன்று மனம் வரவில்லை. ஆண் பிள்ளை என்றாலும், அவனால் வரும் வரதட்சணைக்கு ஆசைப்பட்டு தூக்கிக்கொண்டு போய் வளர்ப்பார்கள். செலவை இழுத்து வைக்கும் பெண் பிள்ளையை யார் விரும்புவார்? அநாதரவாக நின்றாள் அவள்…
