மதுரம்- 2

சிறு பிள்ளையான நேத்ராவை அவளது தந்தையின் உயிர் நண்பர் கதிர்வேல் தான் தூக்கி வந்து தன் மகளாகவே வளர்க்க ஆரம்பித்தார்‌. அதில் கதிர்வேலின் மனைவி ராணிக்கு தன் கணவர் மீது கட்டுக்கடங்காத கோவம். ஏனெனில் அவர்களின் ஒரே மகள் தேவிகாவை விட எல்லா விதத்திலும் சிறந்து இருந்தாள் நேத்ரா. படிப்பில், அழகில், குணத்தில் என எல்லா விதத்திலும் தேவிகாவை விட ஒரு படி மேலே இருந்தாள்.

 

ஈன்றெடுத்த மகள் உறவினர்கள் முன்பும், அக்கம் பக்கத்தினர் முன்பும் தரம் தாழ்ந்து அவமானப்படுவதை அந்த தாயுள்ளத்தால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தேங்கிய தண்ணீர் போல அங்கேயே நின்றுவிட்ட அவர் மனமும், காலப் போக்கில் அழுக்குற ஆரம்பித்தது.

 

தன் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் நேத்ராவிடம் ஒரு குணத்தில் பேசுவார். அவர் இருக்கும் போது வேறு ஒரு குணத்தில் நடந்து கொண்டார். ஆனால் தேவிகா தன் தாயைப் போல அல்லாமல் நேத்ராவை தன் சொந்த தங்கையாகவே பாவித்தாள். சிறு வயது பெண்ணான நேத்ராவுக்கு, ஆரம்பத்தில் அம்மாவின் நடவடிக்கை எதுவுமே புரியவில்லை. விவரம் தெரியும் வயது வந்ததும், அவரின் மறைமுக கோபத்திற்கான காரணம் விளங்கி விட்டது.

 

நேத்ரா தன் வாழ்வின் லட்சியமாக முடிவு செய்த முதல் விஷயமே, ‘இரக்கப்பட்டு தன்னை வளர்த்தவர்களுக்கு தான் எப்போதும் ஒரு பாரமாக இருக்கக் கூடாது. ஒரு வேலைக்கு சென்று சொந்த காலில் நிற்க வேண்டும்!’ என்று இளம் பிராயத்திலயே முடிவு செய்துவிட்டாள். 

 

அதன்படியே அவளுக்கு பிடித்த ஜர்னலிசம் படிப்பை ஸ்காலர்ஷிப்பில் படித்தவள், தன் சொந்த ஊரான பொள்ளாச்சியை விட்டு கோயம்புத்தூரில் உள்ள ஹாஸ்டலில் சேர்ந்தாள். 

 

கதிர்வேல், “ஏம்மா தனியா அங்க போய் இருக்க? இங்கேயே ஏதாவது ஒரு வேலை பார்த்துட்டு அப்பா கூடவே இரும்மா” என்று அன்போடு பலமுறை அழைத்தார். 

 

“இல்லப்பா, அங்கேயே இருந்தா வாய்ப்பு கிடைக்காது. நீங்க சந்தோஷப்படுற மாதிரி, கண்டிப்பா நான் ஒரு பெரிய உயரத்துக்கு போவேன். என்ன பத்தி கவலைப்படாதீங்கப்பா” என்று சாதுரியமாக அவர் வாயை அடைத்துவிட்டாள்.

 

ஆனால் அவள் நினைத்தது போல, அவ்வளவு சுலபத்தில் படித்த படிப்பிற்கான வேலை கிடைக்கவில்லை. வயிற்றைக் கழுவ வீதி வீதியாய் வேலை தேடி அலைந்தவள், சில நாட்கள் கிடைத்த சில்லறை வேலையையும் செய்தாள். கடைசியாக அந்த ஊரில் உள்ள ஒரு பிரைவேட் நியூஸ் சேனலில் வேலைக்கு சேர்ந்துவிட்டாள். 

 

இதற்குள் ஆறு மாதங்கள் ஓடி இருக்க, தேவிகாவை பெண் கேட்டு நித்திஷ் வீட்டினர் வந்து சேர்ந்தனர். இருவருக்கும் பார்த்ததுமே ஒருவரை ஒருவர் பிடித்துப் போனது. அதைப் பற்றி தன் தங்கையிடம் தான் முதலில் பகிர்ந்து கொண்டாள் தேவிகா. 

 

“போட்டோல பார்த்ததைவிட நேர்ல ரொம்ப அழகா இருக்காருடி. பெரிய லாயராம், ரொம்ப புத்திசாலியாம். எனக்கு அவர்கிட்ட பேசும்போது படபடன்னு வருது. நீயும் இங்க இருந்திருந்தா எனக்கு தைரியமா இருந்திருக்கும். ஏன்டி வரல நீ?” செல்லக் கோபத்தோடு தங்கையிடம் சண்டையிட்டாள்.

 

தன் வாழ்வின் முக்கியமான நிகழ்வில், தங்கை ஸ்தானத்தில் நிற்க வேண்டிய நேத்ரா வரவில்லையே எனும் ஆதங்கத்தில் அவளிடமே குறைப்பட்டுக் கொண்டாள். 

 

“நான் தான் வேலை நிறைய இருக்குனு சொன்னேனேக்கா‌. லீவு கேட்டா, அப்படியே கிளம்பி போய் வீட்ல இருந்துக்கோமான்னு சொல்றாங்க. எவ்ளோ கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்திருக்கேனு உங்களுக்கு தெரியும்ல? பொண்ணு பாக்குற ஃபங்ஷன் தானே நடந்திருக்கு? நிச்சயம் கல்யாணம் எல்லாம் இனிமே தான? அப்போ மாப்பிள்ளை வீட்டுக்காரங்கள ஒரு கலக்கு கலக்கிடுறேன்” என்று பொய் சொல்லி தேவிகாவை சமாளித்து விட்டாள். 

 

அப்பாவி தேவிகாவும், அவள் கூற்றில் உண்மை எது பொய் எது என பிரித்தறிய தெரியாமல், அதை முழுதாய் நம்பிவிட்டாள்.

 

ஆனால் உண்மை என்னவெனில், அன்று வீட்டில் நேத்ரா இருந்தால் வந்திருப்பவர்கள் தேவிகாவை விடுத்து அவளை பெண் கேட்டு விடுவார்களோ?! என்ற பயத்தில் அவளை அன்று வீட்டுக்கு வரக் கூடாது என்று முன்னரே அவளுக்கு அழைப்பு விடுத்து கூறி இருந்தார் ராணி. 

 

இந்த விஷயம் பற்றி கதிர்வேலிடமோ தேவிகாவிடமோ எப்போதும் போல நேத்ரா மூச்சு விடவில்லை. பெண் பார்த்துவிட்டு போன பின், ஒரு மாத பேச்சுவார்த்தைக்கு பிறகு நித்திஷ் மற்றும் தேவிகாவிற்கு கல்யாணம் முடிவானது. அதே நேரத்தில் நேத்ராவுக்கு கோயம்புத்தூரில் இருந்து சென்னைக்கு வேலை மாறுதலும் வந்து சேர்ந்தது. குடும்பத்தினரிடம் சொல்லிவிட்டு, சென்னைக்கு இடம்பெயர்ந்து விட்டாள் நேத்ரா.

 

“அக்கா, நீங்க ஆசப்பட்ட படியே கல்யாணம் ஃபிக்ஸ் ஆகிடுச்சு. இப்போ ஹேப்பியா?”

 

“எங்க? என்‌ தங்கச்சி இந்த பக்கம் எட்டி கூட பாக்க மாட்டேங்குறா. கல்யாணத்துக்காவது வருவியா இல்லையா?”

 

“என்னக்கா இப்படி கேட்டுட்டீங்க? நான் ஒரு நாள் முன்னாடியே அங்க வந்திடுவேன். மச்சினிச்சி குறும்புனு நீங்க கேள்விப்பட்டு இருப்பீங்க, என் மூலமா அதை நேரா பார்க்கப் போறீங்க.‌ மாமாவும் நீங்களும் இப்ப இருந்தே மனச திடப்படுத்திக்கோங்க…” என்று கூற, அவள் கலகலப்பான பேச்சில் சிரித்து விட்டாள் தேவிகா.

 

ஆனால் நேத்ரா நினைத்தது போல, அந்த திருமணம் அவ்வளவு சுலபமாக நடந்திருக்கவில்லை. திருமணத்திற்கு முதல் நாள் வருவதாக கூறி இருந்த நேத்ராவை, திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு உடனே வீட்டுக்கு வர கூறி கதிர்வேல் அவசரப்படுத்தினார். ஏனென்று இவள் கேட்டாலும் பதில் இல்லை. குழப்பத்தோடே பொள்ளாச்சிக்கு வந்து சேர்ந்தாள். 

 

என்றும் இல்லாத திருநாளாய் அவளை வரவேற்க ராணியும் பேருந்து நிலையம் வரை வந்திருந்தார். எப்போதும் இவளைக் கண்டால் எள்ளும் கொள்ளும் வெடிக்கும் முகத்தில் இன்று புன்னகை நிறைந்திருந்தது. அதை வைத்தே, ஏதோ ஒரு பெரும் பிரச்சனை உருவாகி இருக்கிறது என்று புரிந்து கொண்டாள் இந்த புத்திசாலி பெண்.

 

வீட்டிற்கு வரும் வரையில் வாயே திறக்கவில்லை நேத்ரா‌. ஏதோ ஒரு இனம் புரியாத பயத்தில் மனதில் அழுத்தமாக இருந்தது. சுடுதண்ணீர் குளியல், கறி குழம்போடு இட்டலி என சகல உபச்சாரங்களும் முடிந்த பிறகு, பேச்சை ஆரம்பித்தார் ராணி…

 

“நேத்ரா… அப்பா உங்கூட ஏதோ பேசணுங்கிறாரு. வாம்மா…”

 

தயக்கத்தோடு அவரிடம் வந்தவள், “என்னப்பா? அக்கா கல்யாணத்துல எதும் பிரச்சனையா?” என்றாள்.

 

கதிர்வேல் அதை எப்படி அவளிடம் சொல்ல என்று தயங்கி நிற்க, “ஆமா…” என்றுரைத்தார் ராணி.

 

“உங்க அக்காவுக்கு கல்யாணம் நடக்குறது உன் கையில தான் இருக்கு நேத்ரா. மாப்பிள்ளையோட தம்பி உன்ன தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு ஒத்தக் கால்ல நிக்கிறாராம்” என்று விசயத்தை கூற அதிர்ந்து போனாள் நேத்ரா. 

 

முகத்தை தொங்க போட்டு இருக்கும் கதிர்வேலையும், கதவின் பின் மறைந்து நிற்கும் தேவிகாவையும் குழப்பமாக பார்க்க, அவர்களோ மேற்கொண்டு என்ன சொல்வது என தெரியாமல் மௌனமாக நின்றனர். 

 

“இந்தாம்மா மாப்ள ஃபோட்டோ” என்று ராணி ஒரு ஃபோட்டோவை அவள் கையில் வைக்க, அதைப் பார்த்த நேத்ராவின் மனம் இன்னும் அதிர்வுக்குள்ளானது… 

 

காரணம், அதில் வசீகரப் புன்னகையும் கூர்மையான கண்களுமாய் இருந்தது சாட்சாத் நம் நாயகன் வேதாந்த். 

 

‘இவன் எதற்காக என்னை திருமணம் செய்ய வேண்டும் என்று ஒற்றை காலில் நிற்கிறான்?’ என்று விழி பிதுங்க நின்றிருந்தாள் நேத்ரா.

 

“சென்னைல இன்ஸ்பெக்டரா இருக்காராம். கோயம்புத்தூர்ல தான் ஃபர்ஸ்ட் வேலை பார்த்து இருக்காரு. ஆனா ஏதோ பிரச்சனையால, கொஞ்ச நாள் முன்னால அவர சென்னைக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணிட்டாங்களாம். மாப்பிள்ள கை சுத்தமானவரு, அப்பா அவர பத்தி நல்லா விசாரிச்சிட்டேன்மா. நம்ம சொந்த பந்தத்துல, இதுபோல மாப்பிள்ளைங்க கிடைக்க நீங்க கொடுத்து வைக்கனும்னு சொல்றாங்க. எனக்கு இந்த சம்பந்தம் ரொம்ப பிடிச்சிருக்கு. அப்பா உன்னை கட்டாயப்படுத்தல, நீ யோசிச்சு ஒரு நல்ல முடிவா சொல்லும்மா” என்று கதிர்வேல் கூற நேத்ராவுக்கு அனைத்தும் புரிந்துவிட்டது. 

 

ஏனெனில் வேதாந்தின் அந்த டிரான்ஸ்ஃபருக்கு காரணமே நேத்ரா தான்! அது இன்றளவும் அவளையும் அவனையும் தவிர யாருக்கும் தெரியாது…

 

அவன் இந்த திருமணத்தின் மூலம் தன்னை பழி வாங்க நினைக்கிறான் என்ற உண்மையை, அந்த நொடியே நேத்ரா உணர்ந்து விட்டாள். தான் அறியாமல் செய்த தவறுக்கு பிராயச்சித்தமாகவும், தன்னை வளர்த்த குடும்பத்திற்கு செய்யும் நன்றிக் கடனாகவும் அந்த திருமணத்திற்கு சம்மதம் கூறி இருந்தாள். 

 

“எனக்கு சம்மதம்ப்பா…”

 

உளமாற சந்தோஷித்த கதிர்வேல், “ரொம்ப சந்தோஷம்டா… நீ நேரங்கெட்ட நேரத்துல வேலைக்கு போய் வர்றியேனு இத்தனை நாள் வயித்துல நெருப்பை கட்டிட்டு இருந்தேன். போலீஸ் மாப்பிள்ளைனா உனக்கும் ஏதோ ஒரு வகையில பாதுகாப்பா இருக்கும்னு தோணுச்சு. எங்க ஒத்துக்குவியோ மாட்டியோனு மூணு நாளா யோசிச்சிட்டே இருந்தேன். ரொம்ப சந்தோஷம்டா தங்கம்‌…” என்று அவளின் உச்சி முகர்ந்து முத்தமிட்டார். 

 

ராணி, “நேத்ரா, சம்பந்தி வீட்டுக்காரங்க ஒரு தடவை உன்னை நேர்ல பார்த்து பேசணும்னு சொன்னாங்க. உனக்கு ஓகேனா, நாளைக்கு அவங்கள வீட்டுக்கு வர சொல்லட்டுமாம்மா?” என்று நாக்கில் தேன் தடவி பேசினார். 

 

அதைக் கொண்டே அவர்களுக்கு எதுவோ தெரிந்திருக்கிறது என்று யூகித்த நேத்ரா, “சரிம்மா, வர சொல்லுங்க…” என்றாள்.

 

“நீ பேசுற ஒவ்வொரு வார்த்தையையும் கவனிப்பாங்க. ஜாக்கிரதையா பேசணும். ஏன் சொல்றேன்னு புரியுதுல? இனிமே அதுதான் நீயும் அக்காவும் வாழப்போற இடம். அதனால பார்த்து பதமா பேசணும்.”

 

அவர் மறைமுகமாக, ‘தான் ஈன்றெடுத்த மகள் தேவிகாவின் வாழ்க்கையை கெடுத்து விடாதே’ என்று கூற வருவது புரிய, அதை புரிந்து கொண்டதாக தலையாட்டினாள் நேத்ரா. 

 

வேதாந்தின் தாய் அகிலாவுக்கும், தந்தை கணேசனுக்கும் வேதாந்த்தின் இந்த முடிவு புதிராய் இருந்தது. தங்கள் இளைய மகனின் குணம் அறிந்து, நேத்ராவை நேரில் சந்தித்து பேச வந்தனர். 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page