பெற்றவர்களுக்கு மகள் இப்படி தனித்து நின்றுகொண்டிருக்கிறாளே!என்று மனது அடித்துக்கொள்கிறது. அவர்களையும் அறியாமல் இருவரது கண்களும் ராகினியை பார்ப்பதை தவிர்க்க முடியவில்லை.ஒருவேளை இந்த குழந்தை பிறக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் சந்தனா திருமணம் செய்துகொண்டு சென்று இருக்க கூடும் என்று தோன்றுவதை மாற்றிக்கொள்ள முடியவில்லை. இரண்டு குழந்தைகளுக்கும் பதினாறு வயது வித்தியாசம். அவர்களால் சந்தனாவின் திருமணம் குறித்து கனவு மட்டுமே காண முடிகிறது.
எதுவுமே நடக்காதது போன்ற சந்தனாவின் பாவனை. முதல்நாள் பேசியவற்றிற்கான எந்த அறிகுறியும் இல்லை. வெகு அமைதியாக காலையில் எழுந்து வேலைகளை செய்ய ஆரம்பித்தாள்.இன்று அவளுக்கு மதிய நேர ஷிஃப்ட் என்பதால் ராகினிக்கு பிடித்த உருண்டை குழம்பு செய்தாள். ராகினிக்கு இப்போது தேர்வுகள் நடந்து கொண்டிருக்கிறது.நடுநடுவே படிக்கவென்று விடுமுறை அளித்திருக்கிறார்கள்.
இன்று அவளுக்கு விடுமுறை தினம்தான்.அதனால் குழம்பை ரசித்து ஒரு பிடி பிடிப்பாள் என்று மனதில் ராகினி பற்றிய நினைவுக்களுடனே சமைத்துக்கொண்டிருந்தாள் சந்தனா. அவர்களது அம்மா கீதாவுக்கு பள்ளிக்கு சீக்கிரம் சென்றாக வேண்டும். பள்ளியில் தேர்வுகள் என்பதால் அவர்கள் சீக்கிரம் காலையில் செல்வதும், பேப்பர்களை கணக்கு பார்த்து,திருத்தவென்று அந்தந்த துறை ஆசிரியர்களிடம் கொடுத்து என்று பெண்டு நிமிர்கிறது.
கலந்த சாதத்தை டப்பாவில் அடைத்துக் கொடுக்கும் மகளை ஒரு பார்வை பார்த்துவிட்டு கிளம்பி சென்றார் மூத்தவர். அப்பாவுக்கு இன்று இரவு ஷிஃப்ட் என்பதால் இன்னமும் எழுந்திருக்கவில்லை.வீடே அப்படி ஒரு அமைதியை தத்து எடுத்துக்கொண்டிருந்தது.
மதியம் இவள் கிளம்பும் சமயத்தில் எதிர்பாராத ஒரு விருந்தாளி.அவர் வேறு யாருமல்ல. மருத்துவன் அரவிந்தனின் அப்பாதான். மதியம் பதினோரு மணி அளவில் வந்தார்.இது இப்போது வழக்கமாகி விட்ட ஒன்று. ரங்கனுக்கு இரவு நேர வேலை சமயங்களில் அவரை பார்க்க அரவிந்தனின் அப்பா இங்கே இவர்கள் வீட்டுக்கு வருவார்.ரங்கனை கண்டால் அரவிந்தனின் அம்மாவுக்கு சுத்தமாக பிடிக்காது என்பதால் அவர்கள் வீட்டுக்கு ரங்கன் செல்வதில்லை.
இருவரும் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். இவள் சமைத்து வைத்ததை இருவருக்கும் சந்தனா பரிமாற பேசிக்கொண்டே சாப்பிட்டும் முடித்தார்கள். அரவிந்தனின் அப்பா அவர்களது இப்போதைய நிலைமை, கடன் இவற்றை பற்றி பேசிக்கொண்டே வந்தவர்,அரவிந்தனின் திருமணம் பற்றியும் மகளுக்கு திருமணம் முடிந்த பிறகு அவர்கள் வழியில் கேட்பது புரியும் சொல்லிக்கொண்டே வந்தார்.
” நம்ம அரவிந் சம்மதிக்க மாட்டேங்குறான். இவனுக்காக வாங்கின கடன், பொண்ணோட கல்யாண கடனெல்லாம் இருக்கு. பொண்ணு வீட்டுல இவனுக்குனு நிறைய செய்ய தயாரா இருக்காங்க.அதிர்ஷ்ட லட்சுமி கதவை தட்டிகிட்டே இருக்கு.பய பிடிக்குடுத்து பேச மாட்டேங்குறான். இப்போவெல்லாம் ரொம்பவே ஹாஸ்பிடல்ல தங்கிடறான்” என்று நொடித்துக்கொண்டார்.
இவளையும் விடாமல்,” ஏம்மா சந்தனா, ராத்திரி கூட அங்கேயே தங்கிடறானே.அவ்வ்ளோ பேஷண்ட்ஸ் அவனுக்கு வருவார்களா? குழந்தைங்களுக்கு தானே இவன் டாக்டர் ? ” என்று அதிமுக்கிய கேள்வி ஒன்றை இவளிடம் கேட்டு வைக்க இவள்தான் என்ன என்று தடுமாறினாள்.
பிறகு நிதானமாக,”இல்ல அங்கிள்.நா சார் கிட்ட வேலை செய்யல.என்னோடது வேற பிளோர். எப்பயாச்சும் ஒருக்கா சார் அங்கே பேஷண்ட் பாக்க வந்தா மட்டும் தான் அவரை பாக்க முடியும்.”என்று சொல்லி முடிக்கும் முன்பே அவளுக்குள் மூச்சு இரைத்தது.
தப்பித்தால் போதுமென்று வேகமாக மருத்துவ மனைக்கு கிளம்பியும் விட்டாள். பஸ்ஸில் அமர்வதற்கு இடம் கிடைத்தது.அவ்வளவு கூட்டமில்லை. ஏ.சி பேருந்து என்பதால் இருக்கலாம். சொகுசாக உட்கார்ந்துகொண்டு காதுகளில் இயர் போனை வைத்துக் கொண்டாள்.
சென்னை ஒன் ஆப்பில் ஏற்கனவே பஸ் டிக்கெட் புக் செய்துவிட்டதால்,அவளை யாரும் தொந்திரவு செய்யவில்லை. ஹாரிஸ் ஜயராஜின் இசையில் கொஞ்சநேரம் திளைத்தவளுக்கு ,அரவிந்தனின் முகம் மீண்டும் மீண்டும் மனக்கண்ணில் வந்து சென்றது.,
அவனது அப்பா பேசியதிலிருந்து சில விஷயங்களை அவளால் புரிந்துகொள்ள முடிந்தது. அதில் முதல் விஷயம் அரவிந்த் வீட்டில் திருமணத்திற்க்கு இவ்வளவு வறுபுறுத்தியும் சம்மதிக்காமல் விடுப்பவன், பிரச்சனையிலிருந்து மாட்டிக்கொள்ளாமல் தப்புவது பற்றி யோசிக்கிறானே தவிர நேருக்கு நேர் அதை எதிர்கொள்ளும் திடம் இல்லை.
‘நான் உங்களின் நண்பர் ரங்கனின் மகளை காதலிக்கிறேன். அவளை திருமணம் செய்து கொள்ள உங்கள் சம்மதம் வேண்டும் என்று பெற்றவர்களிடம் சொல்வதற்கு தைரியம் இல்லை.மருத்துவமனையில் தங்குவதும்,ஒரு மாதம் கேம்ப் செல்வதும் இதற்க்கு தீர்வு ஆகுமா?
அதோடு எப்போது தனது காதலை பற்றி வீட்டில் சொல்ல தைரியம் இல்லையோ ,அப்போது அவர்கள் சொல்லும் பெண்ணை திருமணம் செய்து கொள்வது நல்லது.இப்படி தடுமாற்றத்துடன் எவ்வளவு காலம் வாழ முடியும்? என்றெல்லாம் யோசித்தவள்,கடைசியாக “நல்லவேளை ,அவரது காதலை புறக்கணித்தேன் ” என்று நிம்மதி பெருமூச்சை வெளியேற்றினாள்.
மருத்துவமனைக்கு வந்தவுடன் வேலை ஆழியென அவளை சுருட்டிக்கொண்டது. தயா தங்கியிருந்த அறையை கடக்கும் பொழுது அவளது முகம் சந்தனாவுக்குள் வந்து போனது. இப்போது குழந்தை எப்படி இருக்கிறாளோ… அவர்கள் வீட்டில் எல்லோருமே நல்லவர்களாகவும், கர்வம் இல்லாதவர்களாகவும் இருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டாள்.
அதற்குமேல் அவளது எண்ணத்தில் அவர்கள் இல்லை. கீழே கேண்டினுக்கு செல்லும் பொழுது தோழியுடன் பேசிக்கொண்டே சென்று விட்டு வந்ததில் வேறு எதுவும் அவளது கவனத்தில் பதியவில்லை. அங்கே இவர்கள் அமர்ந்திருந்த டேபிளுக்கு நேரெதிரே அரவிந்தன் இன்னோரு மருத்துவருடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தான். சந்தனாவை பார்த்தவனுக்கு கவனம் இவளிடம் மட்டும் தான். அவரும் காபி குடித்துவிட்டு கிளம்பிய பிறகும் அரவிந் சந்தனாவை பார்த்துக்கொண்டு அங்கேயே அமர்ந்திருந்தான்.
அவளோ இங்கே ஒருவன் தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பதை கவனிப்பதாகவே இல்லை .அரவிந்துக்கு மனதிற்கு இந்த அவளது கண்டுகொள்ளாத தன்மை அவ்வளவு உவப்பானதாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும் .
சந்தனா அங்கிருந்து சென்ற பிறகு தானும் தனது வேலையை கவனிக்க வேண்டும் என்று அவ்விடம் விட்டு தானும் நகர்ந்தான் அரவிந்த்.உண்மையில் சந்தனா அவனை கவனிக்காமல் இல்லை.காலையில் அவனது அப்பா ரங்கனிடம் பேசியதை கேட்டிருந்தவளுக்கு தான் அரவிந்தனை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் விட்டால் தானே தெளிந்து விடுவான் என்று தோன்ற ஆரம்பித்திருந்தது.
அதற்க்கு முன்னெடுப்புதான் இன்று நடந்தது.அதோடு,மருத்துவருடன் தேவையில்லாமல் பேசினால், இவளை பற்றி மற்றவர்கள் பேசும்படியாகி விடக்கூடும் என்று பயமும் உண்டு.
தனது தளத்துக்கு வேலையை தொடர சென்றவளை சீனியர் நர்ஸ் கூப்பிட்டு அனுப்பினார். அவளுக்கு புரிந்து போயிற்று, அடுத்த மாதம் நடக்க இருக்கும் கேம்ப் குறித்து பேசுவதற்குத்தான் கூப்பிடுகிறார்கள் என்று. மனம் மீண்டும் சோர்வடைவதை அவளால் தவிர்க்க முடியவில்லை. சீனியர் சந்தனாவிடம்,”வாங்க சந்தனா.அடுத்த வாரம் முழுவதும் உங்களுக்கு மதிய ஷிஃப்ட் போட்டிருக்கு.ஆனா,நீங்க மோர்னிங் டென்’ ஓ க்ளோக் இங்கே இருக்கணும். ஷிஃப்ட் ஆரம்பிக்கும் முன்னே டு ஹர்ஸ் ட்ரைனிங் செஷனும் ,மீட்டிங்கும் இருக்கும். பார்த்துக்கோங்க ” என்றார்.
உடன் வேலை பார்க்கும் ஜான்சி,”ஒண்ணும் கவலை படாதீங்க சிஸ்டர். ஒரு வாரம் வேலை பார்த்துட்டா பிறகு அடுத்த பேட்ச் நர்ஸ் போவாங்க. உங்களுக்கு அந்த ஒரு வாரம் இங்கே வேலை இருக்கும். ரெஸ்ட் கிடைக்கும்.’ என்று ஆறுதல் சொன்னாள். தலைசைப்புடன் வந்தவளுக்குள்,”கடவுளே,எனக்கு கேம்புக்கு போகவே இஷ்டம் இல்லை. இங்கே ராகினியை பார்த்துக்கணும். என்னால அவளை பாக்காம இருக்கவே முடியாது.அண்ட், டாக்டர் அரவிந்த் வேறே அங்கே இருப்பாரு.இதெல்லாம் தேவையில்லாத பிரச்சனைகள் என்று மனம் கவுன்டர் கொடுத்தது.
விஜய ராகவன் வீட்டில் வாணி தன்னுடன் தயாவையும் கூட்டிக்கொண்டு செல்ல ஆரம்பித்திருந்தார்.மாலையில் வாணிக்கு கச்சேரிகள் இருக்கும் சமயத்தில் வீட்டில் குழந்தையுடன் யாரும் இருப்பதில்லை. ஆனந்தும் அலுவலகம் சென்று விடுகிறார். விஜயன் நாட்டிலேயே இல்லை. வேலை விஷயமாக லண்டன் சென்றுள்ளான். வருவதற்கு இரண்டு வாரங்கள் ஆகும்.
விஜயனிடம் திருமணம் பற்றி பேசும்பொழுது இதையும் தவறாமல் பேசியாக வேண்டும் என்று வாணி மனதில் குறிப்பு எடுத்து வைத்திருக்கிறார். நாம் ஒன்று முடிவு எடுத்து வைத்தால் தெய்வம் நமக்காக வேறு விஷயங்களை தெரிவு செய்து வைத்திருக்குமாம். அதுபோல் ஏதோ நடக்கப் போகிறது. வாணி, தனது மகனிடம் பேச வேண்டிய விஷயங்களை தனது அந்தரங்க குறிப்பேட்டில் எழுதி வைப்பதை பார்க்கும்பொழுது எனக்கு அப்படிதான் தோன்றுகிறது.
தினமும் விஜய ராகவன் வீட்டில் பெற்றவர்களுடன் பேசுவதுடன் மகளுடன் நேரம் ஒதுக்கி ஒரு அரை மணி நேரமாவது பேசிவிடுவான். ரோஷினி மாமியார் வீட்டிலிருந்துவிட்டு மீண்டும் பெற்றவர்களிடம் வந்துவிட்ட்டாள். மூவருமாக சேர்ந்து விஜயனுக்கு பெண் பார்க்கும் படலத்தில் தீவிரமாக இருந்தார்கள்.ஜோசியர் வேறு இப்போது இந்த வருஷ கடைசிக்குள் திருமணம் செய்து வைக்காவிட்டால் மறுமணம் எப்போது நடக்கும்,நடக்குமா ,நடக்காதா என்பதே சந்தேகம் தான் என்றுவிட, பெற்றவர்களுக்கு பயமே வந்துவிட்டது. மகன் வாழ்நாள் முழுவதும் இப்படியே தனியே இருப்பதை பற்றி அவர்களால் நினைத்துப் பார்க்கவும் தெம்பில்லை.
“இதுக்கு தான், ஜாதக பொருத்தம் பார்த்து, நாள் நட்சத்திரம் எல்லாம் பார்த்து முறைப்படி கல்யாணம் செய்யணும். இப்படி,குடித்தனம் செய்யறோம்.கல்யாணம் செஞ்சு வையுங்கன்னு வந்து நின்னா..எதை பார்க்க? முறைப்படி நடந்த கல்யாணமா அது ?” என்று திட்டி தீர்த்தார் வாணி.அவருக்கு மனமே ஆறவில்லை.
ஒருவேளை விஜயராகவனும் திவ்யாவும் திருமண வாழ்க்கையில் நீடித்து குழந்தையையும் நன்றாக வளர்ந்திருந்தால் பெரியவளுக்கு இப்படி தோன்றியிருக்க வாய்ப்புகள் இல்லை.
மேட்ரிமோனியல் சைட்டுகளில் பணம் கட்டியிருந்தார் ஆனந்த். இதை தவிர தெரிந்தவர்களிடமும் சொல்லி வைத்தார்கள். ஜரூராக பெண்பார்க்கும் படலம் நடந்து கொண்டிருக்கிறது.
விரைவில் விஜயராகவனுக்கு ஏற்ற பெண் அமைய நம் வாழ்த்துக்கள்.
