மயக்கம் தயக்கம் 23

பெண் வராமலேயே அரவிந்தனின் நிச்சயம் முடிந்தது. அவளிடம் பேசவும் வழியில்லை. பெண்ணின் அலைபேசி எண்ணை தனது அப்பாவிடம் கேட்டதற்கு,”அவகிட்டே பொண்ணு பாக்க போற அன்னிக்கு நம்பர் வாங்கலையோ..என்னடா கொஞ்சம் கூட அக்கறை இல்லாம இருக்க “என்று கடிந்துகொண்டவர் மறந்தும் எண்ணை கொடுக்கவில்லை.அவரது மனைவியின் ஆலோசனை அப்படி.

“அரவிந் அந்த பொண்ணோட போன்ல பேசுறதில்லை. காரணம் அவளோட நம்பர் அவன்கிட்டே இல்ல. இந்த கல்யாணத்துல அவனுக்கு இஷ்டமே கொஞ்சமும் இல்லை. அதுமட்டும் இல்ல,பொண்ணு வீட்டுக்காரங்க யாரோட நம்பரும் அவன்கிட்டே கிடையாது. அவனா கண்டுபிடிச்சிகிட்டா சரி.ஆண்டவன் விட்ட வழி.நாமளா அவனுக்கு  சான்ஸே குடுத்துற கூடாது “என்றுவிட்டிருந்தார்.

மனைவி சொல்லுவதில் இருக்கும் அர்த்தம் புரிந்தவர் மகனிடம் எதுவும் வாயை திறக்கவில்லை. அர்விந்த் தனது தங்கைக்கு அழைத்து சாதாரணமாக பேசிக்கொண்டிருந்துவிட்டு, “எனக்கு அவளோட நம்பர் வேணும் “என்றான். ஏதோ பொறி தட்டியவளாக “யாருடைய நம்பர் கேக்குற அண்ணா ?” என்று கேட்க,”அவதான்,உன்னோட வருங்கால அண்ணி..” என்றான்.

கேட்டுக்கொண்டிருந்தவளுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது,”என்னண்ணா ..உன்கிட்ட அவங்க நம்பர் இல்லையா?நீங்க ரெண்டுபேரும் டெய்லி பேசிக்குறது இல்லையா ?” என்று பதில் கேள்வி கேட்டாள். என்னவென்று விளக்க முடியாமல் அரவிந் அமைதியாக இருந்தான்.

“என்கிட்டயும் அவங்க நம்பர் இல்லண்ணா. என்னோட வீட்டுக்காரர் கிட்டயோ, இல்ல மாமியார் கிட்டயோ கேட்டு வாங்கித்தரவா?'” என்று கேட்ட தங்கையிடம், “அதெல்லாம் வேணா விடு. அவங்க ஏதாவது யோசிக்கப் போறாங்க.எப்படியும் இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம் தானே.பிறகு நிதானமா தெரிஞ்சுக்கறேன் .நீ யாருகிட்டயும் கேட்டுட்டு இருக்காதே!”என்றுவிட்டு அழைப்பை துண்டித்தான்.

அவனது தங்கைக்கு மனதில் எங்கோ பிசைந்தது.”எனக்கு கல்யாணம் நிச்சயம் முடிஞ்சு தினமும் மணிக்கணக்கில் அவரோட பேசுவேனே. இங்கே பார்த்தா பேசிக் கெமிஸ்ட்ரியே மிஸ் ஆகுது. அண்ணிக்கிட்டயாவது  அண்ணாவோட நம்பர் இருக்கா..இல்ல அவங்களும்…” என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டாள்.

உண்மை தான்.அரவிந்தனின் எண் நிச்சயம் அவனது வருங்கால மனைவியிடம் இருக்கிறது.அழைத்து பேசத்தான் பயமாக இருந்தது.ஒருவேளை தனக்கு இந்த திருமணத்தில் உடன்பாடு இல்லை என்று சொல்லி நிறுத்த சொன்னால் என்ன செய்வது என்ற யோசனை. அரவிந்தனை அவளுக்கு அவ்வளவு பிடித்திருந்தது. இன்று – நேற்று இல்லை இந்த அவன் மீதான பிடித்தம். அவனது தங்கை திருமணத்தில் அவனை பார்த்த நொடி அவள் மனதில் பதிந்து போனது.

அவனை திருமணம் செய்ய ஆசை என்று அவளாகவேதான் தனது பெற்றவர்களிடம் சொல்லி ஏற்பாடுகள் செய்ய சொன்னது.அவன் முடிவு செய்ய அவகாசம் வேண்டும் என்றவுடன் ஏமாற்றம்  தான். அதை உள்விழுங்கிக்கொண்டு ‘சரி ‘என்றாள். பிறகு ,ஜோசியரிடம் அரவிந்தனின் பெற்றவர்கள் திருமண நாள் குறிக்க  சென்ற பொழுது, ஜோசியர் ,”பையனோட ஜாதகத்துப்படி இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம் ஆகணும்.இல்லன்னா இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சுத்தான் செய்யமுடியும்” என்றுவிட்டாராம்.

அடித்துபிடித்து மணப்பெண் வராமலே நிச்சயதாம்பூலத்தை முடித்தும் விட்டார்கள். தேர்வுகள் நெருங்கி இருக்க அவளால் வரவே முடியவில்லை.எப்படியும் திருமணத்திற்கு முதல்நாள் மீண்டும்  திருமணத்தை உறுதி செய்யவென்று நிச்சய தாம்பூலம் வைப்போம் தானே!அப்போது பெண் வந்தால் போதும் என்றுவிட்டார்கள். மணப்பெண்ணுக்கு இதில் அவ்வளவு சந்தோசம்.

‘எப்படியாவது நல்லபடியாக இந்த திருமணம் நடந்துவிட வேண்டும். தனக்கும் அரவிந்தனுக்கும் இடையில் நல்ல புரிதல் ஏற்பட்டு திருமண வாழ்க்கை சீராக செல்ல வேண்டும் ‘என்று தினமும் கடவுளிடம் பிரார்த்தனைகள் வைத்தாள்.

அவளுக்கு புரியாத விஷயம்,”தானும் ஒரு மருத்துவர்.வீட்டில் வசதிகள் அதிகம். திருமணம் முடிந்தால் இருவருமாக சேர்ந்து நிறைய சாதிக்க முடியும். பார்க்க குடும்பத்தனமாக இருக்கிறேன்.  இன்னமும் யோசிக்க என்ன இருக்கிறது? சந்தோஷமாகவே திருமணத்திற்கு தயாராகலாமே!’

அவள் யோசிப்பதும் சரிதானே! இவன் விரும்பும் பெண் முடியாது என்று மறுத்துவிட்டாள். வீட்டில் சொல்லி திருமணம் செய்துகொள்ள இவனுக்கு தைரியம் இல்லை. வீட்டில் பார்த்து வைத்திருக்கும் பெண்ணை எளிதாக திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு கொண்டுசெல்வதில் தவறு என்ன  இருக்கிறது?

 

‘காதல்’ என்ற  வெறும் வார்த்தை யாருடைய வாழ்க்கையிலும் எந்த மாற்றத்தையும் கொண்டுவருவதில்லை. அது உணர்வு . ஒருவருக்கு ஒருவர் உணர்ந்துகொண்டு வரும் இயல்பான ஈடுபாடு.

சந்தனா மறுநாளில் இருந்து மேலே விஐபிகளுக்கான தளத்தில் பணி செய்ய ஆரம்பித்த்தாள். கீழே விஜயராகவன் எப்படி இருக்கிறான் என்று அங்கே இருக்கும் நர்ஸிடம் கேட்டு தெரிந்து கொள்வான். ஐசியுவிலிருந்து இப்போது சாதாரண  வார்டுக்கு மாற்றப்பட்டிருந்தான். இன்னும் காயங்கள் முழுவதுமாக ஆறவில்லை. இரண்டு நாட்களுக்கு கீழே வைத்திருந்து பார்த்துவிட்டு,பிறகு இங்கே ஸ்பெஷல் வார்டுக்கு அனுப்புவதாக சொல்லியிருக்கிறார்கள்.

எலும்பு முறிவுகள் முற்றிலும் சரியாக நான்கு மாதங்களாவது ஆகும் என்றுர்விட்டார்கள். அதிகமாக பத்து நாட்கள் இன்னமும் மருத்துவமனையில் இருக்க வேண்டி இருக்கலாம்.பிறகு வீட்டுக்கு சென்று பார்த்துக்கொள்ளலாம்.  விஜயராகவனை பற்றிய யோசனைகள் அதிகமாகவே சந்தனாவை பாதித்தது.

இதுவரை எந்த நோயாளியை பற்றியும் இவ்வளவுக்கு அவள் யோசித்தது இல்லை.ஒருவேளை தயாவை இங்கே அனுமதித்திருந்த பொழுது குழந்தைக்காக அவன் எடுத்துக்கொண்ட மெனக்கடல் இவளை அவனை பற்றி அதிகம் யோசிக்க வைத்திருக்கலாம். அப்படித்தான் இருக்க வேண்டும்.

விஜயராகவானால் அலுவலக வேலைகளை கவனிக்க முடியாது என்பதால் இரண்டு மாதங்களுக்கு ஜெனரல் மேனேஜரின்  கட்டுப்பாட்டில் அலுவலக வேலைகள் நடந்தது. விஜயராகவனை தவிர்த்து வேறு ஒருவரை அந்த பதவியில் நியமிக்க போர்ட் ஆப் டைரக்டர்கள் ஒப்புக்கொள்ளவே இல்லை.

சுந்தரம்  இப்போது ஜனரல் மேனேஜருக்கு ரிப்போர்ட் செய்தார். விஜயனின்அநேக வேலை சார்ந்த விஷயங்கள் சுந்தரத்திற்கு தெரியும் என்பதால் அவரது வேலை சுமை கூடிப்போனது.எப்படியும் தினமும் ஒருமுறையாவது மருத்துவமனைக்கு வருவதை மட்டும் விடவில்லை.

விஜயராகவன் எழுந்து அமர எப்படியும் இன்னும் சுமாராக ஒருமாதம் ஆகும்.அதற்க்கு மேலும் நேரம் எடுக்க வாய்ப்புகள் இருக்கிறது என்றார் மருத்துவர். சத்திர சிகிச்சைக்கு பிறகு அவன் உடம்பு கொஞ்சம் முன்னேற்றம் காண்பிக்கிறது.

அந்த வாரத்தின் புதன் கிழமை அன்று விஜயராகவன் மேல் தளத்துக்கு மாற்றப்பட்டான். அடுத்த இரண்டு வாரங்களுக்கு இங்கே தான் என்றுவிட்டார்கள்.  விஜயனுக்கு வலி இன்னும் குறையவில்லை. அநேக நேரம் வலிநிவாரணி எடுத்துக்கொண்டு தூங்கினான். கால்களில் மாவுக்கட்டு போடப்பட்டிருக்கிறது.

இயற்க்கை உபாதைகளுக்கு பெட்பான் வைத்திருந்தார்கள்.அவனை கவனிப்பதற்கு என்று ஒரு ஆண் நர்ஸும் நியமிக்க பட்டிருக்கிறார். உடலில் எந்த அசைவும் இல்லாமல் ஒரே நிலையில் படுத்திருக்கும் மகனை பார்த்து வாணி அழுது கரைகிறார்.

”இவனுக்கு மட்டும் ஏன் இவ்வளவு பிரச்சனை வருது? முதல்ல மனசால ஆதி விழுந்தது.இப்போ, உடம்பால் ” என்று தொடர்ந்து தனது கணவரிடம் புலம்பிக்கொண்டிருந்தார் வாணி.

இன்னும் இரண்டு நாட்களில் ரோஷினி சென்னை வந்து விடுவதாக சொல்லியிருக்கிறாள். இப்போதுதான்  அமேரிக்கா சென்றிருக்கிறாள்.அதற்குள் மீண்டும் வருவது ,அதிலும் ஒரு வயது கூட பூர்த்தியாகாத குழந்தையை வைத்துக்கொண்டு என்பது சாதாரண விஷயம் இல்லை. இங்கிருந்து சென்றவுடன் குழந்தைக்கு காலநிலை மாறுப்பாட்டில் உடல்நலம் சரியில்லை. இப்போது பரவாயில்லை என்பதால் கிளம்பி வருகிறாள்.

நடுவில் தயா அப்பாவை இப்போதே பார்க்கவேண்டும் என்று அழுகை. மேல்தளத்துக்கு மாற்றி அங்கேயே  அட்டெண்டர் தங்குவதற்கு என்று அறை ஒதுக்கப்பட்டிருக்க , தயாவை காலை அவள் பள்ளி முடிந்ததும் இங்கே அழைத்து வர சொல்லியிருந்தார்கள்.

குழந்தையை பார்த்துக்கொள்பவர்,தொடர்ந்து ஒருவாரமாக வீட்டிலேயே தங்கிவிட்டதால் அவருக்கு விடுப்பு கொடுத்து அடுத்த வாரம் வந்தால் போதும் என்றுவிட்டார் வாணி. குழந்தையை பள்ளியிலிருந்து அழைத்து வரும் பொறுப்பு , வாணியோ ஆனந்தோ யாராவது ஒருவர் பள்ளிக்கு செல்வார்கள்.

முதன்முறை அப்பாவை கட்டுகளுடன் பார்த்த தயா அழுது கரைந்தாள். குழந்தை இரண்டு  நாட்களுக்கு பள்ளிக்கு சென்றாள். பிறகு பெரியவர்களால் அலைய முடியவில்லை.அதனால் பள்ளிக்கு விடுப்பு சொல்லிவிட்டார்கள்.  கார் ஓட்டுநர் நம்பிக்கையானவர்தான்.ஆனாலும், குழந்தையை யாரையும் நம்பி அனுப்பும் தைரியம் வீட்டினருக்கு இல்லை.

ஆரம்பத்தில் அழுத தயா பிறகு அப்பா அறையை விட்டு வர மாட்டேன் என்று ஒரே அடம் .சமாளிப்பதே பெரிய விஷயமாக , அவள் கண்கள் சந்தனாவை வேறு தேடி அலைந்தது. ஒரு வழியாக அந்த வாரத்திற்க்கான விடுப்பு முடிந்து மீண்டும் சந்தனா மருத்துவமனை வரவும், தயா தாவி சென்று சந்தனாவை கட்டிக்கொண்டாள்.

தயாவை பார்த்த சந்தனா ஆச்சர்யம் கொண்டாள். அதிலிருந்து தயா சந்தனாவையே ஒட்டிக்கொண்டு திரிந்தாள். நோயாளிகளை பார்க்கும் நேரத்தை விட சந்தனாவின் நேரத்தை அதிகம் எடுத்துக்கொண்டவள் தயாதான்.

எப்படியோ சொல்லி புரியவைத்து, குழந்தையை தாத்தா பாட்டியிடம் விட்டுவிட்டு சந்தனா வேலையை கவனித்தாள். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் தயாவை பார்த்துவிட்டு வந்தாள்.

அடுத்த இரண்டாவது நாளில் ரோஷினி வந்துவிட , தயாவை அவளிடம் அனுப்பிவிட்டார் ஆனந்த். அப்பாவை தினமும் பார்க்க கூட்டிவருவோம் என்று நம்பிக்கை கிடைத்தபிறகே கிளம்பினாள் தயா.

நாட்கள் வேகமாக கடக்க, இப்போது விஜயராகவன் நிலைமை பரவாயில்லை என்ற கட்டத்துக்கு வந்துவிட்டது. இன்னும் ஓரிரு நாட்களில் வீட்டுக்கு சென்று விடலாம் என்றார் மருத்துவர். அவன் மருத்துவமனைக்கு வந்து இது நான்காவது வாரம்.

விஜயராகவனுக்கு இப்போது வலி குறைந்திருந்தது. ஆனாலும் தானாக எழுந்து உட்கார்வது முடியாத விஷயம்.அதற்க்கு இன்னமும் நாட்கள் எடுக்கும். இப்போதைக்கு படுத்துக்கொண்டே இருக்கவேண்டும் என்ற விஷயம் அவனுக்கு மானாவாரியாக கோவத்தைக் கொடுத்தது.

சாப்பிடவும்  யாராவது ஒருவர் உதவி செய்யவேண்டும். இயற்க்கை உபாதைகள் கழிக்க கூட பெட்ப்பான் வைத்துக்கொண்டு,இந்த நிலைமை அவனுக்கு சகிக்க முடியாத ஒன்றாக இருந்தது. இதில் மருந்துகள் சாப்பிடுவதாலும்,நடமாட்டம் இல்லாததாலும் உணவு ஜீரணம் வேறு படுத்தியது.வயிற்றில் எரிச்சல்.அதற்கும் ஏதோ மருந்து எழுதிக் கொடுத்திருந்தார் மருத்துவர்.

சொல்லமுடியாத உடம்பு வேதனை. வலி. நரகம் என்றால் இப்படித்தான் இருக்குமோ என்று தோன்றியது. நர்ஸுகள் ட்யூட்டிக்கு தகுந்தபடிக்கு வந்து செல்வதும்,இவனது மருத்துவக் குறிப்புகளை படித்துவிட்டு மருந்துகளை கொடுத்து விழுங்க சொல்வதும், உடம்புக்கு டவல் பாத் கொடுப்பதும் என்று நாட்கள் செல்ல ,ஒரு வேலையும் செய்யாமல் படுத்துக்கொண்டே இருப்பதை அவன் கனவில் கூட யோசித்தது இல்லை.  ஆனால், இவையெலாம் நடந்து கொண்டிருக்கிறது.

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page