ஒருமாத காலம் மருத்துவமனையில் வாசம். நுரையீரல் முழுவதும் மருந்துகளின் விதவிதமான மணம் . வீட்டுக்கு வந்த பிறகும் கூட மருத்துவமனையில் இருப்பதை போன்றே விஜயராகவன் உணர்ந்தான். இன்னமும் ஒருவருடைய உதவி இல்லாமல் அவனால் இயங்க முடியவில்லை. இப்போதும் அநேக நேரம் படுக்கையில்தான்.வீட்டுக்கு பிசியோதெரப்பி மருத்துவர் வந்து சில பயிற்சிகளை காலையிலும் மாலையிலும் செய்யவைக்கிறார்.
மருத்துவமனையிலிருந்து ஒரு ஆண் உதவியாளரையும்,பெண் செவிலியரையும் பிரத்யேகமாக விஜயின் வீட்டுக்கு அனுப்பி வைத்திருந்தார்கள். அவனால் தனித்து இயங்க முடியும்வரை அவனுக்கு உதவி செய்வதற்கு என்று ரொட்டேஷனில் அனுப்பி வைப்பார்கள்.
ஆண் உதவியாளர்கள் இருவர். காலையிலிருந்து மாலைவரை ஒருவரும், மாலியில் இருந்து அடுத்தநாள் காலை வரை இன்னொருவரும். அவர்கள் விஜயராகவனுக்கு இரண்டு வேளைகள் உடல் முழுமைக்கும் டவல் பாத் கொடுப்பது, இயற்க்கை கடன்களுக்கு பெட்பான் வைத்தல், அவனுடைய கட்டிலில் தொங்கவிடப்பட்டிருக்கும் மூத்திரப்பை நிரம்பியவுடன் அதை எடுத்து கொட்டுதல், பிசியோ தெரபிஸ்ட் வந்தால் பயிற்சிகள் செய்ய விஜய்க்கு உதவி செய்தல் போன்ற வேலைகளை செய்வார்கள்.
நியமிக்கப்பட்டிருக்கும் செவிலியர் இவனுக்கு மருந்துகள் கொடுப்பது,தினமும் பிபி சரியாக இருக்கிறதா என்று பார்த்து அதை மருத்துவமனைக்கு தகவல் சொல்லுதல், மருத்துவர் சொல்லும் விஷயங்களை குறித்துக்கொண்டு அதற்க்கு ஏற்ப விஜயனுக்கு தேவையானவற்றை செய்வது, அவனுக்கு உணவு கொடுப்பது போன்ற விஷயங்களை கவனிப்பார்கள். மாலை ஏழு மணிக்கு விஜயனுக்கு உணவு கொடுத்து, அரைமணிநேரம் கழித்து மருந்துகளையும் கொடுத்துவிட்டு அவர்கள் கிளம்பிவிடுவார்கள். அவர்கள் வீட்டுக்கு செல்ல ஆனந்தன் வீட்டில் இருக்கும் காரை அனுப்பினார். அதனால் வந்த செவிலி நேரம் தாமதம் பற்றி யோசிக்கவில்லை.அவர்களுக்கு உணவும் சாப்பிட வைத்துதான் அனுப்புவார் வாணி.
படுத்தே இருந்தவனுக்கு அதுவுமே உடல் வலிப்பதை போல உணர்ந்தான். எதையாவது செய்ய வேண்டும் போல இருந்தது. ஆனாலும் செய்வதற்கு ஒன்றுமே இல்லை.அல்லது என்ன செய்வது என்று புரியவில்லை.
வந்திருக்கும் ஆண் உதவியாளர்களும் ஆகட்டும் ,செவிலியரும் ஆகட்டும் வேலையை தவிர வேறே பேசவும் செய்வது இல்லை. நேரம் கிடைத்தால் கையில் இருக்கும் மொபைல் போனுடன் ஐக்கியம் ஆவார்கள் . வீட்டு மனிதர்கள் அவ்வப்பொழுது வந்து பார்த்துவிட்டு செல்வார்கள்.அம்மாவுக்கு தயாவை கவனித்தாக வேண்டிய பொறுப்பு. அப்பா அலுவலகம் சென்றாக வேண்டும். தங்கை ரோஷினி கிளம்பி ஒருவாரம் ஆகிறது.எவ்வளவு நாட்கள் அவள் கணவனை விட்டு இங்கே இருக்க முடியும் என்று வாணி அவளை அனுப்பி வைத்து விட்டார்.
விஜயனுக்கு மிகுந்த மனசோர்வு. காலாற நடந்தால் பரவாயில்லை. கொஞ்சநேரம் அமர்ந்திருந்தால் நன்றாக இருக்கும் என்றெல்லாம் நினைத்து உருகினான். இவனுக்காக என்று அனுப்பப்பட்ட நர்ஸுக்கு உடல்நலம் சரியில்லாமல் போக அவர்களுக்கு பதிலாக சந்தனா வந்து சேர்ந்தாள்.
இயல்பாகவே கலகலப்பாக பேசும் வழக்கம்,எப்போதும் சுறுசுறுப்பாக ,வேகமாக வேலை செய்யும் தன்மை , சாந்தமான முகம் என்று அவள் வந்த முதல்நாளே விஜயனின் பார்வை அவளை கவனிக்க ஆரம்பித்தது. எவ்வளவு வேகமாக செய்தாலும் வேலையில் ஒரு நேர்த்தி அவளிடமிருந்தது. இன்னொன்று விஜயன் அவளிடம் கவனித்தது மறந்தும் வேலை நேரத்தில் அவள் அலைபேசியை உபயோகப்படுத்தவில்லை. யாரிடமும் பேசவும் இல்லை.
விஜயன் நிஜமாகவே ஆச்சர்யம் கொண்டான். அலுவலகத்தில் இருக்கும் நேரத்தில் பல சமயங்களில் அவனே வாட்சாப் திறந்து பார்ப்பதும், வேலையின் பளு குறைவதற்க்காக ஏதாவது விளையாடுவதும் வழக்கம்தான். இப்போது அனேகமாக ஒருவராலும் கைப்பேசி இல்லாமல் ஒரு நிமிஷமும் இருக்க முடிவதில்லை என்பது நிதர்சனம்.இந்த பெண்ணால் எப்படி இந்த மாதிரி இருக்க முடிகிறது என்று நினைத்துக் கொண்டான்.
முதல்நாள் அவனது மருத்துவ கோப்பை படித்து ஏதேதோ குறிப்புகள் எடுத்த்துக்கொண்டாள். அவனை உற்று கவனித்ததில் அவனுக்கு மனசோர்வு வந்துவிட்டது என்பது புரிந்தது. அவனிடம் மெதுவாக பேச்சுக்கொடுத்தாள்.
அவனது விருப்பங்கள்,பிடிக்காத விஷயங்கள், பிடித்த உணவு வகைகள், சென்று வந்த இடங்கள்,பார்த்த வித்தியாசமான விஷயங்கள்,சுவாரஸ்யமான நிகழ்வுகள் என்று அவனை பேசுவதற்கு ஊக்கினாள்.
ஆரம்பத்தில் இவள் யாரோ மூன்றாவது நபர்.இவளிடம் என்னை பற்றி எதற்கு என்று தயங்கியவன் பிறகு தானே பேசவாரம்பித்திருந்தான். சந்தனா அதிகம் பேசவில்லை.அவன் பேசுவதை கவனித்தாள். அவனது ஆழ்ந்த அறிவும், புத்திசாலித்தனமும் அவன் பேச்சில் வெளிப்பட்டது.
‘சுவாரஸ்யமாக பேசுவதற்கு நன்றாக தெரிந்து வைத்திருப்பதால்தான் இவ்வளவு சிறிய வயதில் பெரிய பதவியில் இருக்க முடிகிறது என்று நினைத்தாள். அவனுக்கு அமரர் கல்கியின் புதினங்கள் என்றால் மிகவும் பிடிக்கும் என்று அவன் சொல்லி கேட்டவள், அன்று மதியமே வாணியிடம் கேட்டு ‘ அலைஓசை ‘ நாவலை வாங்கி வந்து படித்தும் காட்டினாள்.
இருவருக்கும் நேரம் போனதே தெரியவில்லை.மாலை பிசியோ தெரபிஸ்ட் வரும் நேரம் வரை தொடர்ந்தது. இதுவரை சந்தனாவும் நாவல்கள் எதுவும் படித்தது இல்லை.அதற்கான வாய்ப்பும் அமையவில்லை.இப்போது விஜய்னுக்காக படித்தாலும் அவளுக்கு அது ஒரு புது அனுபவமாக இருந்தது.
பொன்னியின் செல்வன் படமாவது பார்த்துவிடவேண்டும் என்று நினைத்திருந்தாள். இன்னமும் அவளுக்கு நேரம் கிடைக்கவில்லை. படம்பார்க்க மூன்று மணிநேரம் ஓய்வு வேண்டுமே! அது எங்கே இருக்கிறது?
விஜயனிடம் அதை சொல்லவும் செய்தாள். ” தோழிகள் சொன்னதுல மணி சாரோட பொன்னியின் செல்வன் பாக்கணும்னு நினச்சேன். பட், யுட்யூப்ல ட்ரைலர் கூட பாக்க நேரம் இல்ல. ஏதோ விடாத ஓட்டம். ஓய்வு நேரம் ரொம்பவே குறைவுதான்.அப்படி கிடைக்கும் நேரத்துல தூங்கிடுவேன்” என்று அவள் சொன்னதில் இருந்த ஏக்கம் ஏனோ அவனையும் தாக்கியது.
பிசியோ தெரபிஸ்ட் இருவரையும் வித்தியாசமாக பார்த்தார்.நேற்றுவரை உண்மையான நோயாளியாக காட்சி கொடுத்தவன் முகம் இன்று உற்சாகம் காண்பிப்பதை பார்த்தால் யாருக்குத்தான் ஆச்சர்யமாக இருக்காது?
அடுத்துவந்த நாட்களிலும் விஜயராகவனின் முகம் சந்தோஷமாக இருந்தது. வீல் சாரில் அமரவைத்து தோட்டத்துக்கு கூட்டிபோகலாம் என்று விஜயனுக்கு பார்க்கும் நரம்பியல் மருத்துவர் சொல்லிவிட அன்று மாலையே வீல்சேர் வீட்டுக்கு வந்துவிட்டது.
நடுவில் மருத்துவர்கள் விஜயனை நேரில் வந்து பரிசோதித்துவிட்டு சென்றார்கள். மருந்துகளின் டோஸேஜ் சிலவற்றிற்கு மாற்றப்பட்டது.சில மருந்துகள் வேண்டாம் ,நிறுத்திவிடலாம் என்றும்,சில மருந்துகளுக்கு மாற்றாக வேறு சிலவையும் பரிந்துரை செய்தார்கள்.
காலிலும்,கையிலும் போடப்பட்டிருக்கும் மாவுக்கட்டு மட்டும் எந்த மாற்றமும் பெறவில்லை. கால்கள் மரத்து போனது போல உணர்ந்தான் விஜயன். ஆண் உதவியாளரின் உதவியோடு விஜயனை தோட்டத்துக்கு அழைத்து வந்து உலாவுவது சந்தனாவுக்கு மாலையில் வழக்கம் ஆனது. தயாவும் வந்து இணைந்து கொண்டு விளையாடுவாள்.அவளுடன் தாத்தா ,பாட்டி யாராவது ஒருவர் கூட வந்து அங்கே இருக்கும் கல் பெஞ்சில் அமர்ந்து கொள்வார்கள்.
விஜயன் தோட்டத்துக்கு வந்து பூக்களை ரசித்தே பலகாலம் ஆகிவிட்டிருந்தது. ரசிக்கும் மனநிலையை இழந்து விட்டிருந்தான். இப்போது சந்தனா அருகில் இருக்கும் பொழுதுகளில் நிறைய சிரிக்கிறான்.அவனது உடல் உபாதைகளை அவள் அருகில் இருக்கும் பொழுதுகளில் அவனை வலி பற்றி உணர அவள் அனுமதிப்பதில்லை.
சந்தனாவுடன் விஜயராகவனின் பொழுதுகள் சந்தோஷமாகவே கழிந்தது.வீட்டில் இருக்கும் நேரத்தில் தயா பெரும்பாலும் அப்பாவின் அறையில் அப்பாவுடனும்,சந்தனா ஆன்டியுடனுமே கழித்தாள். சந்தனா சின்னவளுக்கு சொப்பு சாமான்கள் வைத்து விளையாடவும்,லுடோ, ஸ்நேக் அண்ட் லேடர், பில்டிங் ப்ளாக்ஸ் கட்ட என்று நிறைய சொல்லி கொடுத்தாள்.
விஜயனின் கட்டிலின் கீழே அமர்ந்து இருவரும் விளையாடுவார்கள். கிரையான்ஸ் வைத்து சிறிய பழங்கள் பூக்கள் கார்ட்டூன்கள் என்று வரைவதற்கு ,வண்ணம் தீட்ட என்று அப்பா மகள் இருவரது பொழுதுகளையும் வண்ணமயமாக்கினாள் சந்தனா. குழந்தையுடன் விளையாடும் நேரங்களில் சந்தனாவுக்கு ராகினியின் நினைவு வந்துவிடும். அவளையும் இப்படித்தான் வளர்த்தாள் சந்தனா.
ராகினி வளரும் சமயத்தில் சந்தனா பள்ளி இறுதியாண்டு , கல்லூரி என்று படிக்க வந்துவிட்டாள். ராகினியுடன் விளையாடுவதும்,விளையாட்டு காட்டுவதும் சந்தனாவுக்கு ரசிக்கும் விஷயங்கள்.இப்போது அந்த நாட்கள் நினைவில் வர சந்தனாவின் முகம் புன்னைகையால் விகசித்தது. கட்டிலில் சாய்ந்த வாக்கில் அமர்ந்திருந்த விஜயராகவன் அதை ரசனையாய் பார்த்திருந்தான்.
இந்த ஒருவாரத்தில் தனக்குள் சந்தனா ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்களை அவனும் உணர்கிறான்.அது அவனுக்கு மனதுக்கு பிடித்தமானதாக ,இதமானதாக இருந்தது. வீட்டில் வாணிக்கும் , ஆனந்துக்கும் கூட பிபி ,சர்க்கரை பரிசோதனை செய்தாள். மகனது முகத்தில் இருக்கும் ஆறுதலை பெற்றவர்கள் அப்பட்டமாய் உணர்ந்தார்கள்.
நடுவில் அலுவலகத்திலிருந்து தங்களது பாஸை பார்க்க வந்தவர்களுக்கும் கூட அவனது புன்னகை சிந்தும் கண்கள் புதியதாக இருந்தது.பன்னிரண்டு நாட்களுக்கு வந்த சந்தனா பதின்மூன்றாம் நாள் வரவில்லை. ரொட்டேஷனில் வேறு நர்ஸ் வந்தார்கள். அவர்களுக்கு நடுத்தர வயதின் இறுதி. எப்போதும் ஒரு இறுக்கத்துடனேயே இருந்த அவரை தயாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அவளுக்கு மட்டுமல்ல.அவளது அப்பாவுக்கும் பிடிக்கவில்லை.அதை வாயை திறந்து சொல்ல அவனுக்கு பிடிக்கவில்லை. வாயை இறுக மூடிக்கொண்டு பொறுத்துக்கொண்டான்.
நான்காவது நாள் நேரேயே கேட்டுவிட்டான்,” உங்களுக்கு பிறகு அடுத்த வாரம் சந்தனா சி, ப்ச்…சந்தனா வருவார்களா?”
ஒப்புக்கு கூட சிஸ்டர் என்று சொல்ல அவனுக்கு இஷ்டமாக இல்லை. எப்போதுமே சந்தனா இதுபோன்று நோயாளிகளை பார்த்துக்கொள்ள செல்லுமிடத்தில் அவர்கள் சந்தனாவை புகழ்வதும் ,அவளை தேடுவதும்,மருத்துவமனைக்கு வந்தாலும் அவளை தேடி சென்று பேசிவிட்டு செல்வதும் வழமை தான் என்பதால் அவர் தவறாக நினைக்கவில்லை.
“இல்ல சார்,தெரியல.வேறே யாராச்சும் கூட வரலாம்.”என்றார் சாதாரணமாக. கேட்டவனுக்குத்தான் திடுக்கிடலாக இருந்தது.
அப்போது விஜயை பார்க்கவந்த அவனது அம்மா வாணி இருவரின் உரையாடலையும் கவனித்துக்கொண்டிருந்தார்.மகனது முகத்தில் தெரியும் பாவத்தை மொழி பெயர்க்க முயற்சி செய்தார். அவருக்கு ஏதோ புரிவதாக இருந்தது.
மயில் இறகு போல் மெல்லிய மனம் கொண்ட நாயகன். சிறுவயதில் இருந்தே குடும்ப பாரத்தை தோள் மீது சுமந்து மனம் பாறை போல் இறுகி நிற்கும் நாயகி. நாயகனின் காதல் – திருமண உறவு, நாயகியின் எதிர்பார்ப்புகள் அவை தவறும் தருணங்கள்.…