அந்த நர்ஸ் சொல்லிவிட்டு சென்ற மாதிரி அடுத்து வந்த வாரத்திலும் சந்தனாவுக்கு விஜயன் வீட்டுக்கு வருவதற்கு மருத்துவ மனையிலிருந்து என்ற ஸ்கெட்யூலும் கொடுக்கப்படவில்லை. அங்கே விஐபி தளத்திலேயே அவளுக்கு வேலை அதிகமாக இருந்தது. அவளுக்கு விஜயன் வீடும் மற்ற நோயாளிகளின் வீடும் ஒன்றுதான். மருத்துவமனையில் போகச் சொல்லி பணிந்தால் செல்வாள்.
விஜயராகவனுக்குத்தான் இருப்புக்கொள்ளவில்லை. எதையோ இழந்தது போன்று ஒரு உணர்வு போராட்டம். சந்தனா அருகில் இருக்கும் பொழுது ஏதோ தென்றல் தன்னை வருடிச் செல்வது போல் உணர்ந்திருக்கிறான். தயா மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருந்த சமயங்களில் குழந்தையை சந்தனா கவனித்துக்கொண்ட விதத்திலும்,தனக்கு காபி,மதியம் உணவு என்று பார்த்து பார்த்து ஏற்பாடுகள் செய்தது ஆகட்டும் அவளது அக்கறை.
சந்தனா தனிப்பட்ட முறையில் தன்னிடம் அக்கறை பாராட்டியதாகவும்,தயாவை நன்றாக பார்த்துக்கொண்டதாகவும் விஜயராகவன் எப்போதும் சொல்ல மாட்டான். கவனித்துப் பார்த்ததில் அவள் எல்லா நோயாளிகளிடமும் ஒரே மாதிரி அக்கறைதான் வெளிப்படுத்துவாள் . ஒருவேளை பயிற்சி காலத்திலேயே நோயாளிகளிடம் எப்படி பழகவேண்டும் என்று பயிற்றுவிக்க பட்டிருப்பாள்.
அதை சந்தனா தொடர்வதால் அவளிடம் அந்த சிறப்பு இருக்கிறதோ என்னவோ?என்று தனது எண்ணங்களில் சுழன்று கொண்டிருந்தான். வரும் நர்ஸுகள் எல்லோருமே உயர்தரத்தில் பயிற்றுவிக்கப் பட்டிருப்பவர்கள் தாம்.அதில் சந்தேகம் இல்லை. ஆனாலும் அவனது மனம் சந்தனா என்ற ஒரு பெண்ணை மட்டுமே தேடுகிறது.
ஏன் இப்படி என்று அவனுக்கு தெரிந்து கொள்ள வேண்டியதாக இருந்தது. அவள் மீதான இந்த தேடல் தாற்காலிகமானதா அல்லது நிரந்தரமானதா என்று அவனுக்கு சர்வ நிச்சயமாக தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
ஏன் இந்த மாதிரி எல்லாம் என்றால் அவனிடம் விடை கிடையாது. சிலபேரை தொலைவிலிருந்து ஒருமுறை பார்த்தால் கூட நமக்கு பிடித்துவிடும். அவர்கள் நமக்கு தெரிந்தவர்களாகவோ, நமக்கு அவர்களால் ஆகக்கூடிய வேலை எதுவும் உண்டு என்றெல்லாம் சொல்ல முடியாது.சிலபேர் நம் வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருப்பார்கள். அவர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் கூட நமக்கு அவர்களை பிடிக்காது.இதெல்லாம் ஏன் என்று எப்படி சொல்ல முடியும்?
அந்த விதத்தில் தான் சந்தனாவையும் பிடிக்கிறதா என்றும் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அந்த பெண்ணுக்கான மகனது தேடலை வாணியும் ஆனந்தும் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
மேலும் ஒருமாதம் ஆகிவிட்டதில் விஜயனுக்கு இப்போது கை கால்களில் பட்டிருந்த காயங்கள் ஆறிவிட்டது. பிராக்ச்சர் ஆகியிருந்த காலும் இப்போது குணமாக ஆரம்பித்துவிட்டது. முதுகு தண்டில் ஏற்பட்டிருந்த அடியும் குணமாக ஆரம்பித்துவிட்டது. அதிக நேரம் உட்கார கூடாது என்று மருத்துவர் நிச்சயமாக சொல்லிவிட்டார். அதனால் இன்னமும் அலுவலக வேலை செய்ய அவனால் முடியவில்லை.
கண்டிப்பாக இப்போதும் உதவிக்கு அவனுக்கு யாராவது வேண்டும் தான். முற்றிலும் குணமாக ஒரு மாதம் அதற்கு மேலும் எடுக்கும். அதிகப்படியான மருந்துகளாலும், உடலுக்கு உடற்பயிற்சியும், வேலையும் கொடுக்காததாலும் உடல் எடை கூடிவிட்டிருந்தது. அவனை அவனுக்கே அடையாளம் தெரியவில்லை.
பழைய உடல்நிலையை அவன் திரும்ப பெற கடுமையாக உழைக்க வேண்டும் . சந்தனாவை அழைக்க வேண்டும் என்று அவனுக்கு தோன்றிக்கொண்டே இருந்தது. சரியா தவறா என்று தெரியவில்லை. வாணி அன்று மாலையில் மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசி , இனி வரும் இந்த நாட்களுக்கு சந்தனாவை அனுப்ப முடியுமா என்று கேட்டார்.
இதுபோன்று நிகழ்வதுதான். சில செவிலியர்கள் எளிதாக நோயாளிகளுடன் பழகிவிடுவார்கள்.நோயாளிக்கு அவரிடம் ஏதாவது கேட்பதற்கு எளிதாக இருக்கலாம்.அணுகுமுறையில் வித்தியாசங்கள் இருக்கலாம். ஆனால், அவனுடைய உடல்நலம் தேறும் வரை என்பதுதான் அவர்களை யோசிக்க வைத்தது.
இன்னொரு விதத்தில் பார்த்தால் மருத்துவமனைக்கு இதில் இலாபம் தான்.நீண்ட வருஷங்களாக விஜய ராகவனின் குடும்பத்தில் இங்கே தான் மருத்துவம் பார்த்துக்கொள்கிறார்கள். இதோ இப்போதும் கூட விஜயனுக்கு விபத்து ஏற்பட்டதில் இங்கே தான் காண்பித்து மருத்துவம் செய்துகொள்கிறார்கள். அந்த விதத்தில் தொழில்ரீதியாக அவர்களுக்கு இலாபம் தான். எந்த செவிலியர் சென்றாலும் அவர்கள் வீட்டிலிருந்து அதற்க்கான தொகை செலுத்தத்தான் போகிறார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் அவர்கள் கேட்கும் நபரை அனுப்புவதில் பிரச்சனை எதுவும் மருத்துவமனை தரப்பிலிருந்து இல்லை .
வாணி கேட்டுக்கொண்டபடிக்கே அடுத்த நாளில் இருந்தே சந்தனா அவர்கள் வீட்டுக்கு வரத்தொடங்கினாள். அவளிடம் எந்த மாறுதலும் இல்லை. விஜயனின் பார்வையில் பட்டம் இருந்தது.நிச்சயம் இருந்தது. அவள்மீதான ரசனை கூடிப்போனது.
அரவிந்தனின் திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக ,ஆடம்பரமாக நடந்தது. பணத்தின் செழுமை அங்கே நன்றாகவே தெரிந்தது. அரவிந்தனின் பெற்றவர்கள் திருமண பத்திரிக்கையை சந்தனாவின் வீட்டுக்கே கொண்டுவந்து நேரில் கொடுத்தார்கள். பெரிய தட்டில் பழங்கள்,பூ, இனிப்பு பெட்டி எண்டு வைத்து அத்துடன் பத்திர்கையையும் வைத்து கொண்டுவந்திருந்தார்கள். அதுவும் சந்தனா வீட்டில் இருக்கும் நேரத்தில் பார்த்து வந்திருந்தார்கள்.
அரவிந்தனின் அம்மா வாயிலிருந்து இப்போது பார்த்திருக்கும் பெண்ணை பற்றியும்,அவர்களது பொருளாதார நிலை பற்றியும் பெருமையாக பேசி கேட்கமுடிந்தது. அதில் இருக்கும் செய்தியை சந்தனா கண்டுகொண்டாள். அத்தனை விஷயங்களும் வீடு தேடி வந்து அவளுக்காக சொல்ல பட்டவைதாம்.
அதை பற்றியெல்லாம் சந்தனாவுக்கு கவலை இல்லை.அரவிந்தனை வேண்டாம் என்று தீர்த்து சொன்னவள் சந்தனா தான். அவளுக்கு அவன் மீது ஆரம்பத்திலிருந்தே எந்த ஈடுபாடும் இல்லை. அவன் மீது மட்டும் இல்லை.எந்த ஆணின் மீதும் அவள் கவனம் செலுத்த்துவது இல்லை.
திருமணம் பற்றிய எண்ணங்களே அவளிடம் இல்லை எனும் பொழுது அரவிந்தன் எப்படி இவளது மனதை தாக்க இயலும்?
இதையெல்லாம் புரியவைக்க சந்தனாவுக்கு விருப்பம் இல்லை. அதோடு எந்த ஒரு அம்மாவுக்கும் தனது பிள்ளை என்றால் உசத்திதான். ” நீங்கள் என்ன என்னை வேண்டாம் என்று சொல்வது?நான் தான் உங்கள் பிள்ளையை நிராகரித்தேன்”என்று சொன்னால் அது நன்றாக இராது என்று வாயை மூடிக்கொண்டு அந்தம்மா கொடுத்த பில்டப்களை கேட்டுக்கொண்டு இருந்தாள் சந்தனா.
கொஞ்சநேரம் பொறுத்துப்பார்த்த கீதா,”வீட்டுக்கு வந்திருக்கீங்க.அதுவும் நல்ல விஷயம் சொல்லவென்று.இருங்க வரேன் “என்று உள்ளே சென்று வீட்டில் அன்று காலை செய்த இனிப்பை இரண்டு தட்டுக்களில் வைத்து எடுத்து வந்து கொடுத்தார். அவர்கள் வீட்டில் ஒருவர் முகத்திலும் எதிர்மறையான உணர்ச்சிகள் எதுவும் தென்படவில்லை. உண்மையான சந்தோஷத்தை பிரதிபலித்தது சந்தனாவின் முகம்.
அந்த நிர்மலமான முகத்தில் மருந்துக்கும் பொறாமையோ, கைப்பொருள் காணாமல் போன உணர்வோ இல்லை. அரவிந்தனின் அம்மாதான் குழம்பினார். ‘அப்படியென்றால் இந்த பெண்ணுக்கு என் மகன்மீது அபிப்ராயம் எதுவம் இல்லையா’ என்று.
அரவிந்தனின் திருமணத்திற்கு மருத்துவமனையிலிருந்து அநேகம்பேர் கிளம்பி சென்று வந்திருந்தார்கள். செல்லாத,செல்லமுடியாத வெகுசிலரில் சந்தனாவும் ஒருத்தி. அவளுக்கு ஒருநாள் கூட விஜயராகவனை விட்டு வரமுடியாத சூழ்நிலை. அவள் இப்போது அவர்கள் வீட்டுக்கு ஒண்ணரை மாதங்களுக்கு என்று அனுப்பிவைக்கப் பட்டிருக்கிறாள்.
இன்னமும் விஜயனால் எழுந்து நடக்க முடியவில்லை. முழுநேர உதவிக்கு நர்ஸ் இருந்தாக வேண்டிய கட்டாயம். சந்தனாவின் வீட்டிலிருந்து முதல்நாள் வரவேற்புக்கு என்று யாரும் செல்லவில்லை.மறுநாள் முகூர்த்தத்திற்கு ,ராகினியை பள்ளிக்கு அனுப்பிவிட்டு ரங்கனுக்கு,கீதாவும் சென்று வந்தார்கள்.
திருமண நிகழ்வுகளை அலைபேசியில் படம்பிடித்து அதை சந்தனாவுக்கும் அனுப்பி வைத்தார்கள். சந்தனாவுக்கு அந்த படங்களை பார்க்கும்பொழுது நிம்மதியாக இருந்தது. காதல் என்று சொல்லி வந்தவனை மணப்பதற்கு அவளுக்கு இஷ்டம் இல்லை. அரவிந்தன் மிகவும் நல்லவன்.அவனது மனம் நோகாமல் தீர்மானமாக மறுப்பது பற்றி அவள் யோசித்துக்கொண்டிருக்க விதி தானே வழிவிட்டது.
எதிலிருந்தோ விடுபட்டதை போலவே ஒரு உணர்வு. அரவிந்தனை மறுப்பது சாதாரணமாக ஒருபெண்ணுக்கு கடினமான விஷயம் தான். மென்மையானவன்.அதிர்ந்து பேசாதவன். பொருளாதார ரீதியில் மனிதரை பார்க்காதவன். அவனை பற்றி யாரும் ஒரு குறை சொல்லிவிடமுடியாது. பார்க்க நன்றாக இருப்பான். சந்தனாவிடம் அரவிந்தனை புகழ்ந்து ஜொள்ளிய தோழிகள் உண்டு. ஆனாலும் மறுக்க வேண்டிய நிலையில் சந்தனா.
அதேசமயம் விஜயனின் மனத்திலும் சந்தனாவை பற்றிய எண்ணங்கள் வலுப்பெற ஆரம்பித்திருந்தது. அவளை பாராமல் விடுத்த நாட்களை அவன் பெரும் பாரத்துடன் கடந்திருந்தான்.
மறுமுறை காதல் வருமா..அதிலும் அதிகம் பழகியிராத ,அவளைப்பற்றி ஒன்றுமே தெரியாத பொழுது இது எப்படி சாத்தியம் என்று தனக்குத் தானே பலமுறை அவன் செய்துகொண்ட சுய பரிசோதனையின் விடை ‘இது நிச்சயம் காதல் தான் ‘என்றது.
ஆரம்பத்தில் பெரும் மனப்போராட்டம்,திடுக்கிடல் என்று கலவையாக இருந்தது. அதோடு கூட சேர்ந்து கொண்ட விஷயங்கள் ,’தான் ஏற்கனவே திருமணம் ஆனவன்.ஒரு குழந்தைக்கு அப்பா .அதோடு சமீப காலங்களில் வேலை கொடுக்காமல் இருந்ததால் உடம்பு அதிகமாக எடை போட்டிருக்கிறது. பார்ப்பதற்கு அவ்வளவு நன்றாக இருப்பதாக சொல்லிவிட முடியாது.முன்பக்கம் தொப்பை போட ஆரம்பித்து விட்டது.
என்னென்னவோ தொடர்பில்லாத எண்ணங்களின் அலைவரிசை. அவளிடம் மணம் செய்துக்கொள்ள கேட்க தயக்கம். மொத்தத்தில் அவன் அவனாக இல்லாமல் குழம்பிப் போயிருந்தான்.பொருந்தாக் காதல் என்று தீர்மானமாக நம்பினான். அவள் தன்னை தவறாக நினைக்கக் கூடுமோ என்று ஒருவித பயம் அவனை ஆட்கொண்டது.
சந்தனாவின் முகம் பார்த்து பேசவும் தயக்கம் ஆட்கொண்டது.தயாவுடன் சந்தனா தனது அறையில் இருக்கும் பொழுது ஒரு பரிபூரணமான குடும்பத்தை ,அதன் சுகத்தை அவன் மனது முழுமையாக அனுபவிப்பது நிஜம். அவன் எதிர்பார்ப்பதும் அதைத்தானே!
அவன் திவ்யாவுடன் அப்படிப்பட்ட குடும்ப வாழ்வைத்தானே விரும்பினான். அதைத்தானே விடுத்து, தனக்கு இடப்பட்ட தளை என்று நினைத்து சுதந்திர காற்றை சுவாசிக்கிறேன் என்று எங்கள் இருவரையும் விடுத்து தனியே சென்றாள் இப்போது இந்தப்பெண்ணிடம் எனது மனம் மயக்கம் கொள்கிறதே!ஒருவேளை இவள் எங்கள் இருவரையும் ஏற்க மறுத்துவிட்டால்?
அப்படியே என்னை திருமணம் செய்துகொண்டால், “ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் ” என்று குழந்தையை ஏற்க முடியாது என்று சொல்லிவிட்டால் ?என்றெல்லாம் அவனது மனம் கேட்ட கேள்விகளுக்கு அவனால் பதில் சொல்லமுடியவில்லை.
பதில் சொல்லவேண்டியவள் இவன் தேடலுக்கான விடை ஆவாளா?
