மலர் -சுபம்

சுபம் 

நல்லதோ நம்ம வீட்டுல இருக்கறவங்க பேசற வார்த்தைகள் வேண்ணா  சுருக்குன்னு இருக்கலாம். ஆனா என்னிக்குமே நம்மளோட சொந்த வீடுதான் நமக்கு பாதுகாப்பு. நீ எப்ப வேண்ணா இங்க வரலாம். நானே இல்லைனாலும் அமிர்தா , தாத்தா பாட்டி , அப்புறம் என்னோட குழந்தைங்க எல்லாரும் இருப்பாங்க. இதுவும் உன்னோட குடும்பம்தான். உனக்கு தேவையான நிம்மதி அன்பு, பாதுகாப்பு,தோழமை எல்லாமே இங்க கிடைக்கும்.  நீ எப்ப வேண்ணாலும் இங்க வரலாம்.”  

அருகில் சென்று அவள் உள்ளங்கையை அழுத்தினான்.

“ரொம்ப தேங்க்ஸ் ஆனந்த் . எனக்கு எப்ப இங்க வரணுன்னு தோணுதோ அப்ப கண்டிப்பா வரேன். இங்க வந்தா மனசு லேசாகுன்னு  எனக்கு தெரியும்.  மதன் மட்டும் இல்ல. உன்னோட பிரண்டு பவித்ராவும் அண்ணனுக்கு ஏத்த ஜோடிதான்.

ஆனா என்னாலதான் அவன் எந்த முடிவும் எடுக்காம இருக்கான். “

“நீயும் நடந்தது எல்லாத்தையும் ஓரமா ஒதுக்கி வச்சுட்டு அடுத்த கட்டதுக்கு முன்னேறி போகணும் ரெஜிதா.”

“கண்டிப்பா பண்ணுவேன் ஆனந்த்”

அமிர்தாவின் அருகில் வந்தாள் . வைர மூக்குத்தியும், வைரத் தோடும், நெற்றியில் இட்டிருந்த திலகம், தலையில் வைத்திருந்த பூ, உதட்டில் இருக்கும் இயல்பான புன்னகை, கட்டி இருக்கும் புடவையயின் பிங்க் நிறம் பிரதிபலிக்கும் கன்னங்கள் ஆனந்த்  தன்னையும் இப்படி பார்க்கத்தானே ஆசைபட்டான். குடும்பத்து குத்து விளக்கு என்று கிண்டலடித்தது இன்று அவளை பார்த்து கிண்டலடித்தது.  

அவளையே உற்று நோக்கியவள், 

“நீங்க  ரொம்ப அழகாக இருக்கீங்க. எத்தனை மாசம்?”

“அஞ்சு”

“அன்னிக்கு நான் உங்ககிட்ட ரொம்ப ரொம்ப தப்பா  நடந்துக்கிட்டேன்.” அவளால் வாயால் மன்னிப்பு கோர முடியவில்லை. பதிலாக கையை மட்டும் எடுத்து கும்பிட்டாள் .

அவள் கையை கீழே இறக்கிய அமிர்தா , “நானும் உங்களுக்கு நல்ல தோழிதான்”

“தேங்க்ஸ்”  என்று சொன்னவள் விம்மி வந்த அழுகையை அடக்கி கொண்டு காருக்கு ஓடினாள்.

இப்போது அவளுக்குத்  தேவை ஆனந்தின் சிறு அரவணைப்பு. மனைவியைப்  பார்த்தான்.

சம்மதிப்பாக தலையசைத்தாள். 

வீட்டில் நின்றிருந்த அமிர்தாவுக்கோ மனம் விட்டுப் போயிற்று…

 காரில் அமர்ந்து விம்மியவளை அரவணைப்பாக ஒரு கை அழுத்தியது. “அண்ணா” என்று அவன் கைகளை பிடித்துக் கொண்டாள் . ஆம்! அது மதன்  தான்.அருகில் அமர்ந்து அவள் கண் துடைத்தான். நெஞ்சில் சாய்ந்து விம்மியவளை முதுகில் நீவி சமாதானப்படுத்தினான். அவன் சொன்ன வார்த்தைகள், 

“அதான் அண்ணன்  இருக்கேன் இல்ல?  எதுக்கும் கவலை படாத. நான் இருக்கேன் உனக்கு. தைரியமா இரு.”

  இவள் வருகையை மாடியில் இருந்து பார்த்தவுடனேயே ஆனந்த் மதனை அங்கே வரச்  சொல்லி விட்டான். 

 மதன் வந்தவுடன், பெரும் கோபத்துடன் பழைய ஆனந்தாக உள்ளே வந்தான். இதை அமிர்தா எதிர்பார்க்கவில்லை. 

கண்கள் சிவக்க  மனைவியை பார்த்தவன், 

“எதுக்குடி  அவ வந்த ஒடனே உனக்கு முகம்  ஏன் அப்டி வெளிறி போச்சு? உனக்கு என் மேல நம்பிக்கை இல்ல இல்ல?” அவனின் பழைய கோப முகம் வெளி வந்தது. இத்தனை  நாட்கள் தன்னுடன் இருந்தும், அவளுக்கு தன் மீது நம்பிக்கை இல்லையே என்ற கோபம். எத்தனை அன்யோன்யம் நமக்குள் என்று மிதப்பாக இருந்தவனுக்கு மனதில் சாட்டையடி.  

எத்தனையோ முறை மன்னிப்பு கேட்டும் அவன் மனம் இறங்கவில்லை. சில நாட்கள் முகத்தை தூக்கி வைத்திருந்தான். இவள் சமாதானப்படுத்தும் வழி தெரியாமல் தவித்தாள். அவனுக்கு எப்போதும் என்ன வேண்டும்? அவன் எதிர்பார்ப்பது அவளின் கொஞ்சலைத்தான். ஆனால் இம்முறை அவளை அவன் அருகில் வரக் கூட அனுமதிக்கவில்லையே. அவள்  கொஞ்சினாள். அவன் மிஞ்சினான் . அவள் கெஞ்சினாள். அவன் கண்டுக் கொள்ளவே இல்லை. 

ஐந்தாம் மாதம் இவளுக்கு பெரிய ஸ்கேன் எடுத்தார்கள். அன்று வீட்டிற்கு வந்தவள் மிகவும் சோர்ந்து போய் இருந்தாள் .  கணவன் வந்து அணைக்க மாட்டானா என்று மனம் ஏங்கியது. அவளை பார்த்தவனுக்கு  தாங்க முடியவில்லை. அவனின் கோபத்தை இழுத்து பிடிக்கவும் முடியவில்லை.

 படுத்திருந்தவளை எழுப்பி பழச்சாற்றை ஊட்டினான். அப்படியே அவன் தோள்  சாய்ந்திருந்தவள் அடுத்த சில நிமிடங்களில் உறங்கி இருந்தாள் .

மிகவும் க்ராண்டாக சீமந்தம் செய்தான். மதனுக்கும் ரெஜிதாவுக்கும் கூட பத்திரிக்கை வைத்தான். மதன் வந்தான். ரெஜிதா சில காலத்திற்கு அமெரிக்கா சென்றிருந்தாள் . பவித்ராவோ மதன் முகத்தையே ஏக்கமாக பார்த்திருந்தாள் . மதன் தான் அவளை கவனிக்கவில்லை. அவர்களின் எதிர்காலம் யார் அறிவார்? அதுவும் கூட ஒரு வித்யாசமான காதல் கதையாக கூட அமையலாம்.

 

  செல்ல பட்டாணி, குட்டி பட்டாணி, உருண்டை பட்டாணி வெள்ளை பட்டாணி (இது எல்லாம் என்னோட மகனுக்குத் தான் காபி ரைட் . அவனை நான் கொஞ்சிய வார்த்தைகள்) ஒரு குட்டிக்கு பாலை துடைத்து கொஞ்சிக் கொண்டிருந்தாள். உடனே அடுத்தது அழுதது.

“இருடி செல்லம்! அம்மா வருவா இரு ஓஒ ஓஒ கையில் தூக்கி ஆட்டிக் கொண்டிருந்தாள் பாட்டி . முதலாமவனை முகம் துடைத்து மெதுவாக கட்டிலில் விடுவதற்குள் இவன் அழுகை ஆரம்பித்து விட்டான். 

 குழந்தையின் சத்தம் கேட்டு விட கூடாது. உடனே வைரனுக்கு கோபம் வந்து விடும். என்ன பண்ணற? குழந்தை ஆரம்பிச்சுட்டான். எதுக்கு குழந்தையை அழ விடறீங்க என்று அவன் பாஷையில் கத்த ஆரம்பித்துவிடுவான். ஒரே சமயத்தில் இருவரையும் சமாளிக்க வேண்டும். 

இவனுக்கும் பாட்டு பாடி கொஞ்சினாள்.

 பட்டாணி பட்டாணி குட்டி பாட்டனி, பச்சை பாட்டனி, தக்காளி, ஆப்பிள், மாம்பழம் ஸ்டராபெர்ரி வாயில் வருவதுதான் கொஞ்சல், வார்த்தைகளாக வருவதே தாலாட்டு. 

இருவருக்கும் முகம் துடைத்து முதுகில் தட்டினார்கள் . இருவரும் லேசாக கண் அயர்ந்தனர்.

“நீங்க போங்க பாட்டி.  அதான் தூங்கிட்டாங்களே. நான் பார்த்துக்கறேன்.”

“சரி அம்மு! ரொம்ப வயசாகிடுச்சு. முடியல . போய்  கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கறேன்.”

முதுகு கூன் போட்டிருந்தாலும் கொள்ளு பேரன்களுக்கு செய்வதில் அத்தனை ஆசை. அதனால் அவரை யாரும் கட்டுப் படுத்துவதில்லை.

அவர் சென்ற பிறகு அமிர்தா  ரெஸ்ட் ரூம் போய்  விட்டு அப்படியே குளிக்க ஆரம்பித்தாள்.

அடுத்த சிறிது நேரத்திலேயே ஒருவன் அழ  ஆரம்பித்து விட்டான். வழக்கம்போல வைரனும்  பாத்ரூம் அருகில் வந்து கத்த  ஆரம்பித்துவிட்டான்.

பதட்டத்தில் இவள் அவசரமாக துண்டை கட்டி கொண்டு வந்தபோது கண்டகாட்சி! 

கோதை குழந்தையை கையில் வைத்து கொஞ்சிக் கொண்டிருந்தாள். இது தான் கொஞ்சலா ? இது தான் தாலாட்டா? எத்தனை இனிமையான குரல்? விழி விரித்துப் பார்த்திருந்தாள் அமிர்தா.

வெளியில் வந்தவளை பார்த்து,

“நீதான் குழந்தைங்களுக்கு அம்மாவா? நீ போய் குளி . ஏதோ எறும்பு கடிச்சுருக்கு. நான் சமாதான படுத்தறேன்.” 

பேயடித்தது போல தலையாட்டிக்  கொண்டிருந்தாள்.

குழந்தையின் அழுகுக்குரல் கேட்டு போனை  அவசரமாக அணைத்து விட்டு ஓடி வந்த ஆனந்துக்கும் அதிர்ச்சி.

  எந்தத் தாயை  அவன் வெறுத்தானோ, அவளின் தாய்மைதான் அவளை இன்று நல்ல விதமாக மாற்றி இருக்கிறது. தானாகவே மாடிக்கு ஏறி வந்தாள்  கோதை. அது இயல்புதான். யார் அங்கு இருக்கிறார்களோ அவர்கள் பார்த்து கோதையை மீண்டும் கொண்டு வந்து விடுவார்கள். அப்படிதான் இப்போதும் வந்திருந்தாள். 

 முதலில் குழந்தையின் குரல் காதை பிளந்தது. அவளுக்கு தலையில் யாரோ அடிப்பது போல இருந்தது . மீண்டும் மீண்டும் கேட்கவே  மூளையில் ஏதோ ஒன்று ஒலித்தது. எதற்காக எப்போது மூளை விழித்துக் கொள்ளும்? யாருக்கு எப்போது என்ன மாற்றங்கள் நிகழும்? இது யாருக்கும் தெரியாது. அது சித்தம் கலங்கி இருந்தாலும் அப்படிதான். கோமாவில் இருந்தாலும் அப்படித்தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதம். ஏன் எதற்கு என்பதெல்லாம் தெரியாது.  குழந்தையின் அழுகையில் இவள் மூளை சரியானது. 

   அமிர்தாவும் உடை மாற்றிக் கொண்டு வந்து விட்டாள் . அவள் இப்போது பார்க்க வேண்டியது கணவனைத்தான். 

 தன் தவறுகளை எல்லாம், தன் மகன் சரி செய்து விட்டான் என்பதில் அவனுக்கு அத்தனை மகிழ்ச்சி. 

குழந்தை மேனியின் பால் வாசம். தொட்டாலே கை குறுகுறுக்கும் மெல்லிய தேகம். பிஞ்சுக் குரல் மதுரம் தான். அப்பாப்பா அந்த இன்பம் சொல்லி விட முடியாது. அனுபவித்தால் தான் தெரியும்.

 யாரோ ஒரு ஆண்  மகன் தன்  கால்களை பிடித்துக் கொண்டு கதறவும் கோதைக்கு ஒன்றும் புரியவில்லை. 

பேரனோ நெஞ்சில் உதைத்து  அழுதான். மகனோ பல முறை நெஞ்சை காயப்படுத்தியதற்காக அழுதான்.  

முள்ளாக வாழ்க்கையில் தப்பு இல்லாதவர்கள் என்று  எப்போதும் யாருமே  இருந்ததில்லை. தவறுகள் மன்னிக்கப்படலாம். தப்புகள் திருத்தப் படலாம். நமக்கான சரியான வாழ்க்கை துணை கிடைக்கும்போது நிச்சயம் நம் வாழ்க்கை 

முள்ளாக இருந்தாலும் மலராக மாற்றிக் கொள்ள முடியும்.

   ஹாய் மக்களே, இந்த கதை உங்களுக்கு எல்லாருக்கும் பிடிச்சுருக்குன்னு நம்பறேன். மலர்னு நாம நினைக்கற பல காரக்டர்ஸ்  முள்ளாவும் விஷமாகவும் இருக்கலாம். அதே போல முள்ளுன்னு நினைக்கற பல பேர் மலராக இருக்கலாம். இந்த கதைல யாரு எப்படின்னு முடிவு பண்ண வேண்டியது வாசகர்களின் சாய்ஸ் தான். கோதை நிறைய அழ வச்சிருந்தா சாரி! .யாரும் என்னை திட்டாதீங்க. அவங்க என்னையும் சேர்த்தே தான் அழ வச்சுட்டாங்க.

மீண்டும் வேறு ஒரு புது கதையுடன் நாம சந்திக்கலாம். 

 

சுபம் 

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!