மலர் -16
வீட்டிற்கு வந்தவன் மிகவும் சோர்ந்து போய் இருந்தான். அவனை பார்த்த பெரியவர்களுக்கு கவலையாக இருந்தது. வந்ததும் நேராக சென்று பாட்டியின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டான். அவன் கால்களை மடியில் வைத்து பிடிக்க தொடங்கினார் தாத்தா. பாட்டி மெதுவாக தலை கோத அப்படியே கண்ணயர்ந்தான். பெரியவர்களின் இந்த அன்பினால் தான் அவன் எந்த பெண்ணையும் ஏறெடுத்தும் பார்த்ததில்லை. ஹனி ட்ராப் மூலம் அவனை கவிழ்க்க பலர் முயற்சி செய்தும் எந்த பலனும் இருந்ததில்லை. ரெஜிதாவும் அவனை நெருங்கி வர எத்தனையோ முயற்சித்திருக்கிறாள். ஆனால் திருமணத்திற்குப் பின்தான் என்பதில் அவன் உறுதியாக இருந்தான். ஆனால் அவனின் இந்த ஒழுக்கமும் கட்டுப்பாடுமே அவர்களை பிரிக்க முக்கிய காரணமாக இருக்கப் போகிறது.
ஒழுக்கமாக வாழ வேண்டும் நினைப்பவனுக்கும் எப்படியும் வாழலாம். வாழ்க்கை வாழ்வதற்கே என்று நினைக்கும் ரெஜிதாவுக்கும் எப்படி சரிப்பட்டு வரும் ?
தூங்கி எழுந்தவனுக்கு மனம் அமைதியானது. அன்று இரவு அவன் தாத்தாவிடம் இதை பற்றிப் பேசினான். தாத்தாவுக்கும் என்ன சொல்வது என்பது தெரியவில்லை.
“கவலை படாதடா கண்ணா. நமக்கு என்ன பண்ணணுன்னு கடவுளுக்குத் தெரியும்”
“அப்ப ஏன் தாத்தா எங்கம்மா என்கிட்ட எதுவுமே சொல்லாம போய்ட்டாங்க. எனக்கு என்ன வேணுன்னு கடவுளுக்கு ஏன் தெரியல ? நான் என்ன தப்பு பண்ணினேன்? அப்பா ? அவரு என்ன தப்பு பண்ணின்னார்?
அன்று தன் சட்டையை உலுக்கி உலுக்கி கதறிய அழுத பேரன் இன்று தள்ளி நின்று கேள்வி கேட்கிறான். அதுதான் வேறுபாடு . எத்தனை கோடி முறை கேட்டாலும் விடை தெரியாத பல கேள்விகள் இருக்கத்தான் செய்தது. அத்தனைக்கும் பதில் ? விடை தெரியாத கேள்விகளாகவே இருந்து விடுமோ ?
நாட்கள் வாரங்களாகி மாதங்களாக மாறத் தொடங்கியது. பாட்டி உடளவில் பெரிய மாற்றமும் இல்லை. முன்னேற்றமும் இல்லை. ஏனோ காலை எழுந்தவுடன் அமிர்தாவும் அவள் கொடுக்கும் காபியும் தான் நினைவுக்கு வருகிறது பாட்டிக்கு மட்டுமில்லை. பேரனுக்கும்தான். பாட்டி வெளிப்படையாக சொல்லுவார். பேரன் சொல்ல மாட்டான். அதுதான் வேறுபாடு. அமிர்தா அங்கு இல்லை என்றாலும் அவள்தான் மூவருக்குமே மனதில் சுற்றிக் கொண்டிருந்தாள். அவள்தான் அந்த வீட்டின் உயிர்ப்பு. நாதம். மெல்லிய இசை. மனதை மயிலறகால் வருடக் கூடியவள்.
அவனுக்குமே சில நேரங்களில் திடீரென்று அவளின் அந்த சிரிப்பொலி காதில் கேட்கும். பிறகுதான் அது பிரமை என்பது புரியும். இதுதான் காதல் என்று ஒத்துக் கொண்டிருக்கலாம். ஆமாம் ! ஒத்துக் கொண்டுவிட்டால் அவன் ஆனந்த் இல்லையே. ரெஜிதாவின் அழகில் மயங்கினான் என்று சொல்லலாம். அல்லது அவளின் பணம். பெரிய கோடீஸ்வரி. அவள் பணம் தனக்கு வேண்டாம். தன்னிடம் அதிகமாகவே இருக்கிறது. இன்னும் இன்னும் சம்பாதிக்கவும் முடியும். அந்த ஸ்டேட்டஸ்? தனக்கு ஏற்ற பணம் படைத்தவள். வேறு என்ன? அதுதான் அவனின் பெரிய பிரச்சனை.
ஒருவேளை பணம் பார்த்தவர்கள் என்றால் சொசைட்டிக்காகவாவது வெளிப் படையாக எந்தத் தவறும் செய்ய மாட்டார்கள் என்ற தவறான புரிதலா? அவனின் எண்ணங்கள், மற்றவர்களை தவறாக எடைப்போடும் பழக்கம் எல்லாம் சுக்கு நூறாக உடையும். அப்போது மடியில் படுத்து அழுவதற்கு, தாத்தா பாட்டி கூட இடம் கொடுக்க மாட்டார்கள். அமிர்தா வருவாளா? என்ன நடக்கிறது பார்க்கலாம்.
‘பட்ட காலிலே படும், கெட்டக் குடியே கெடும்’ என்பதற்கு ஏற்றாற்போல ரெஜிதாவுக்கும் ஆனந்திற்கும் நடந்த நிச்சயம் ரத்து செய்யப் பட்டது. இதோ ஆனந்தின் வீடு முழுக்க காவலர்கள் . இவன் என்ன தப்பு செய்தான்? யாருக்கும் எதுவும் புரியவில்லை. அங்கே வர்மாவின் வீட்டில் வர்மாவுக்குத் துணையாக கிருஷ்ணமூர்த்தி இருந்தார். பவித்ரா, வர்மாவின் அண்ணன் மகனுக்கு அழைத்து விஷயத்தை சொன்னாள் . அவன் அங்கிருந்து அன்றைய இரவு புறப்பட்டு மறுநாள் வந்து விடுவான். அவன் வந்து விட்டால் வர்மாவுக்கு துணைக்காவது அவன் மதன் இருப்பான். இந்த சமயத்தில் ஆனந்தின் துணை இருந்திருந்தால் இந்தளவு கஷ்டம் இருந்திருக்காது. ஆனால் அவனும்தான் இப்படி வகையாக சிக்கிக் கொண்டானே . அதனால் ஆனந்தால் வர்மாவுக்கு எந்த உதவியும் செய்ய முடியவில்லை.
என்ன விஷயம்? எதனால் இந்த கலவரம்? போதை மருந்து சப்பளை செய்வதில் ரெஜிதாவும் ஒருத்தி. அவள் சில காலமாகத்தான் இதில் ஈடுபட்டு இருக்கிறாள் என்பது மட்டுமே ஆறுதல். அவளின் பல கெட்ட பழக்கங்களை கண்டித்த தந்தைக்கு இத்தனை பெரிய விஷயம் ஊகிக்க கூட முடியாதது. எத்தனை கட்டுக் கோப்பான குடும்பம்? மனைவியை இழந்ததற்காக இதோ அழுகிறார். ஆனால் உயிரானவள் எத்தனை முறை அழுதாலும், அவள் தான் திரும்பி வர போவதில்லையே ?
போதை மருந்து பிரச்சனை என்பதால் யாரும் அருகில் வர தயங்கினர். எங்கே தான் மாட்டிக் கொண்டு விடுவோமோ என்று காரணம் கூறி கழண்டுக் கொண்டனர்.
வர்மாவின் வீட்டில் இருந்து நிறைய போதை மருந்து பொட்டலங்கள் கண்டெடுக்கப் பட்டன. எப்போதுமே வீட்டில் வைத்துக் கொள்ளாத ரெஜிதா இம்முறை சிறிது கவனக்குறைவாக இருந்து விட்டாள் . அவளுக்கும் ஆனந்திற்கும் முதல் நாள் தான் நிச்சயம் நடந்தது என்பதால் தான் காவலர்கள் இப்போது ஆனந்தின் வீட்டில் சோதனை செய்கின்றனர்.
என்னதான் நடந்தது? பார்க்கலாம்.
அமிர்தா இவர்கள் வீட்டிற்கு வேலைக்கு வரவில்லை என்றாலும் அடிக்கடி தொலை பேசியில் பேசிக் கொண்டிருந்தாள். முதலில் எல்லாம் வேலை நிமித்தமாகவே மட்டும் வருவாள் . அதனால் அதிகமாக சொந்த விஷயங்களை பேசியதில்லை. இப்போது தோழமையாக பேசுவதால் தன் விஷயங்களை பற்றியும் பாட்டியிடம் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்திருந்தாள்.
“ஏண்டி ! இனியாவ பொண்ணு பாக்க வந்தாங்களே என்னாச்சு?”
“அது பெருசா சொல்லிக்கற மாதிரி ஒன்னும் இல்ல பாட்டி.”
“என்னடி ஆச்சு ?” தன்னுடைய வழக்கமான குரலில் கேட்டாள் பாட்டி .
“அது., அவங்க அம்மாவுக்கும் விக்ரமுக்கும் ஓகே தான். ஆனா அவங்க சித்தப்பா கொஞ்சம் ஜாஸ்தியா எதிர் பாக்கறார்”
“எவ்ளோ ?”
“அம்பது சவரன் நகையும் ஒரு காரும் வாங்கிக் குடுக்க சொல்லறார். எங்களை போல சாதாரணமா இருக்கறவங்களால அவ்ளோ முடியுமா?” அமிர்தாவின் குரல் இறங்கித்தான் போயிற்று.
“அது சரி! பையன் என்ன சொல்லறான் ?”
” வீட்டுல பேசறேன்னு சொல்லி இருக்கார். பாக்கலாம்”
“ஏழைங்க பாடு திண்டாட்டம் தான்” இப்படி பேச்சு தொடர்ந்தது.
ஒரு நாள் முரளியும் அமிர்தாவும் பெற்றோரின் திருமண நாளுக்கு துணி எடுக்க குமரனுக்கு வந்திருந்தனர். இது இருபத்து ஐந்து வருடங்கள் முடிவதால் சற்று க்ராண்டாக செய்ய முடிவு செய்தனர்.
“ஏற்கனவே நிறைய தேவைகள் இருக்கு. எங்களுக்காக ஒன்னும் பண்ண வேணாம்” என்று இருவரும் சேர்ந்தே சொன்னாலும் இளையவர்களுக்கு மனம் கேட்கவில்லை. முரளி, கயல் சேர்த்து வைத்த பணம் மற்றும் அமிர்தாவும் சேர்ந்து பெரியவர்களுக்கு துணி எடுத்துக் கொண்டு கிளம்பினர். அப்போது தாத்தாவும் பாட்டியும் அங்கே வந்தனர்.
“ஹல்லோ பாட்டி! ஹை தாத்தா?” சொல்லிக் கொண்டே பெரியவர்களின் காலை தொட்டுக் கொண்டாள் .
“நல்லா இரும்மா ? “
“என்ன இந்த பக்கம் ?” பாட்டியிடம் கேட்டாள் .
“ரெஜிதாவுக்குத்தான் நிச்சயத்துக்கு பரிசா ஒரு புடவை எடுக்கலான்னு?”
“ஓ சூப்பர் பாட்டி”
“நீங்க?”
விவரம் சொன்னாள் .
“ஓ ! என்னிக்கு? அவங்களுக்கு எங்களோட ஆசீர்வாதங்கள். வாழ்த்துக்களை சொல்லுமா. அவங்க என்னிக்கும் இப்படியே ஜோடியா இன்னும் பல வருஷங்கள் வாழனும்”.
” தேங்க்ஸ் தாத்தா”
“அம்மாடி நீ வந்ததும் நல்லதா போச்சு. நான் இப்டியே உட்கார்ந்துக்கரேன். நீ கொஞ்சம் பாட்டியோட இருக்கியா ?”
முரளியின் முகத்தை பார்த்தாள் அக்கா.
“பரவால்லக்கா நா வெயிட் பண்ணறேன். அவங்கள வண்டில ஏத்தி விட்டுட்டே போகலாம்.”
ஒவ்வொரு புடைவையாக பார்த்தார்கள். இறுதியில் அடர் மஞ்சள் நிறத்தில் சிகப்பு பார்டரில் உடல் எங்கும் சிறு சிறு மரக் கிளைகளில் மயில்கள் அமர்ந்தது போல ஒரு புடவையை தேர்ந்தெடுத்தார்கள். இந்த கல்லு வச்ச புடவை இன்னும் க்ராண்டா இருக்கும். ரெஜிதாவுக்கு இந்த புடவை ரொம்ப அழகா இருக்கும் பாட்டி”
புடவையை தடவிப் பார்த்தவளின் முகத்தில் அப்படி ஒரு பூரிப்பு . மற்றவர்களுக்காக இத்தனை ஆத்மார்த்தமாக யோசிக்க முடியுமா ? அது அமிர்தாவின் ஸ்பெஷல்.
அத்தனை சந்தோசத்துடன் பாட்டி வாங்கிய புடவைக்கு பில் போட்டு கொண்டு வந்து கொடுத்தாள் .
“தாத்தா நேரா வீட்டுக்கா ? “
“வாங்களேன் எங்கையாவது சுவீட் சாப்பிட்டு போகலாம். நல்ல விஷயமா வந்துருக்கோம்.”
மீசைக்குள் வாஞ்சையாக குரல் வந்தது.
“நான் வரேன். ஆனா இது என்னோட ட்ரீட் ஓகே வா ராஜகுமாரா ?
“ஓகே இளவரசி! ”
“வாருங்கள் ராஜாகுமாரா! ” தாத்தாவின் கையை அமிர்தா பிடித்துக் கொண்டாள் . முரளி பாட்டியின் கையை பிடித்துக் கொண்டான். இனியாவைத் தவிர வேறு யாரிடமும் இத்தனை உரிமையாக அக்கா பழகி பார்த்திராத தம்பிக்கு அவர்களின் நெருக்கம் புரிந்தது.
“வா! நீயும் நானும் டம்மி பீசுதான்” பாட்டி சொன்னதும் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டான்.
கிளம்பும்போது அமிர்தாவின் பெற்றோருக்கும் ஒரு பெரிய சுவீட் பெட்டியை தாத்தா பாட்டி பரிசாக்கினார்கள்.
“இதெல்லாம் எதுக்கு பாட்டி?”
“போடி! இவ ஒருத்தி. எல்லாத்துக்கும் நொய்நொய்னு” அதட்டுவது போல இருந்தாலும் அவளுக்குத்தான் பாட்டியின் அன்பை பற்றி தெரியுமே ! அதனால் மறுக்காமல் வாங்கிக் கொண்டாள் .
வண்டியில் செல்லும் போது முரளி அக்காவிடம் , “அக்கா அவங்க இந்த வயசுலையும் எவ்ளோ இன்டிமேட்டா இருக்காங்க பாக்கவே ஆச்சர்யமா இருக்கு. நம்ம அம்மா அப்பா ஏன் இப்பிடி இருக்க மாட்டேங்கறாங்க ?”
“எல்லாருமே ஒரே மாதிரி இருப்பாங்கன்னு சொல்ல முடியாதேடா ?” தம்பியிடம் ஏதோ வாய் போக்கில் சொன்னாலும் அந்த விஷயம் அமிர்தாவை சிந்திக்க வைத்தது.
“அது சரிதான். ஆனா நீயும் இவர்களை மாதிரி உன் பொண்டாட்டியோட காதலோட இருடா. எத்தனை வயசானாலும்” மூத்தவளாக இளைத்தவனுக்கு அறிவுரை வழங்கினாள் .
வீட்டு வாயில் வண்டியை நிறுத்தியவன்,
“ஏன்கா நீயும் உன்னோட ஹஸ்பண்ட் கூட இப்படியே இருக்கனுன்னு யோசிக்க மாட்டியா ?” சட்டென மாறிய அவன் தோரணையில்,
“அத பத்தி என்னடா ? அப்புறம் பார்த்துக்கலாம்”. வாயிலில் இருந்த குழாயில் கால்களைக் கழுவினாள் . மனம் எங்கோ பறந்தது. கணவன் என்றாலே இத்தனை நாள் ஏதோ ஒரு முகம் தெரியாத உருவம்தான் வரும். சட்டென இப்போது ஏன் ஆனந்தின் உருவம் கண்ணில் வர வேண்டும்? தலையை உலுக்கிக் கொண்டவள் அன்னையிடம் புது புடவையை காட்டினாள்.
“உங்களுக்கு எதுவும் எடுக்கலையா ?”
“எல்லாம் எங்க கல்யாண நாளுக்கு எடுத்துக்குவோம். இது உங்க ரெண்டு பேருக்குமான பங்க்சன். நீங்கதான் புதுசு கட்டிக்கனும். நீ இந்த புடவைய கட்டிக்கிட்டு அப்பாவும் புது வேட்டி சட்டைல, ராத்திரி சுந்தரி நீயும் சுந்தரன் நானும், என்ன ஆத்தா ஓகேவா?”
லேசாக கண்ணடித்தாள்.
“ஆமாண்டி உனக்கு ஒரு கல்யாணத்த பண்ணி சுந்தரி நீயும் சுந்தரன் நானும்னு நா உன்ன அனுப்பறது போக கிழவன் கிழவிக்கு நீ ஏற்பாடு பண்ணறியா. வர வர வாய் கொழுப்பு ஏறிகிட்டே போகுது”
“அசராமல், பார்றா வாய் என்னை தான் திட்டுது. ஆனா முகம் சிவந்து கிடக்குது “
“எடுடி அந்த விளக்க மாத்த” அன்னை விரட்டுவதும் அக்கா ஓடுவதும் தனது கை பேசியில் படம் பிடித்துக் கொண்டான் முரளி.
திருமண நாள் வந்தது. வீட்டிலேயே கேக் கட் செய்தார்கள். அமிர்தாவின் பெற்றோர் காதல் திருமணம் என்பதால் எந்த உறவுடனும் பேச்சு வார்த்தை இல்லாமலே போனது. இருப்பினும் அருகில் இருப்பவர்கள் சிலர் மற்றும் அமிர்தா முரளி கயல் கணேசனின் ஆபிஸ் நண்பர்கள் என்று கூட்டம் பெரியதாகவே இருந்தது. அன்றைய தினம் மகிழ்ச்சியாகவே இருந்தது.
அத்தனை கூட்டத்திலும் ஒருவர் மிஸ்ஸிங். ஆம் சக்தி அங்கிள். ஏனோ யாருக்குமே அந்த நினைவு வரவில்லை. ஆனால் அன்று அனைத்தும் முடித்து தூங்கப் போகும் முன் கணவரிடம் கேட்டார்.
முள் மலரும் ..
