மலர் -20

மலர் -20

பாட்டியே  மீண்டும் “அமிர்தாதான் வேணும்னு ஏன் அடம் பிடிக்கறீங்க? வேற யாராவது ஒரு நல்ல பொண்ண பாக்கலாமே ?”

 “அடி போடி பைத்தியம். அமிர்தவோட அப்பா இறந்துட்டாரு. வீட்டுல கடன் பிரச்சனை. எல்லாத்தையும் அப்டியே விட்டுட்டு நமக்காக ஓடி வந்தாளே? அவளை விட ஒரு நல்ல பொண்ணு இவனுக்கு கிடைப்பாளா ? அவ உறவுகளோடு அருமை தெரிஞ்சவ. இவன் என்ன அட்டகாசம் பண்ணாலும் அவ இவன விட்டுட்டு போக மாட்டாடி. நமக்கு தேவை அதானே ?” 

கிழவனின் பேச்சில் இருந்த கம்பீரம் குறையவும், ஆதரவாக மனைவி அவரின் கைகைளை அழுத்தி பிடித்துக் கொண்டாள் . அதில் தான் எத்தனை அர்த்தம்? 

“என்னோட பேரன் நல்லா  இருக்கனுண்டி .அவனுக்காகத்தானே நாம உசுர கைல வச்சிருக்கறதே. “

“எனக்கு புரியுதுங்க. அவனுக்கு புரியனுமே ?”

“ நீ போய்  பேசி பாரு. அதுக்கு மேல கடவுள் விட்ட வழி.”

“சரிங்க!” 

பாட்டி  பேரனை காணச்  சென்றார். அவனோ ஏக கோபத்தில் இருந்தான். மெதுவாக அந்த தலை கோதிய பாட்டியின் கையை தட்டி விட்டான். முப்பது வயது வாலிபன் அவருக்கு மூன்று வயது குழந்தையாகவேத் தெரிந்தான். 

“நீங்க எப்பவும் அவருக்குத்தானே  சப்போர்ட் பண்ணுவீங்க? இப்போ என்ன ? என்னை  கண்விண்ஸ் பண்ண உங்கள அனுப்பினாரா ? “

“ஏன்டா கண்ணா! தாத்தா உன்னோட நல்லதுக்காகத்தானே சொல்லறாரு”

“ஏன் பாட்டி? கல்யாணம் பண்ணிக்கலனா இந்த உலகத்துல வாழவே முடியாதா ?ஒரு மனுஷன் எத்தனை அடிகளை தாங்குவான் ? அம்மா, காதலி யாருமே சரி இல்லையே!  இந்த உலகத்துல இருக்கற பொண்ணுங்களுக்கு தேவை  ஒன்னு பண சுகம், இல்ல ஆம்பள சுகம்.  ஏன் பாட்டி  எனக்கு ஏன் இவ்ளோ கஷ்டம். என்னோட படிச்சவங்கள்லாம் அவங்க அம்மா, பொண்டாட்டி, குழந்தைங்கன்னு சந்தோசமா இருக்காங்களே? அவ ரெஜிதா ! என்னென்ன  வார்த்தைகள் சொல்லிட்டா தெரியுமா? நினைக்க கூட அருவருப்பா இருக்கு.  உங்களால தாங்கவே முடியாது. 

நேர்மையா பிசினஸ் பண்ணிக்கிட்டு இருக்கேன்.  ஒரு ரூபா கூட யாரையும் கஷ்டப்படுத்தி சம்பாதிக்கல. எந்தக் கெட்ட பழக்கமும் இல்ல. அதனால்தானே நான் இப்டி இருக்கேன். போதும். என்னால இதுக்கு மேல முடியல. இனிமே கல்யாணத்த பத்தி பேசாதீங்க. உங்களுக்காகத்தான் நான் ரெஜிதாவையே செலக்ட் பண்ணேன். அது எவ்ளோ பெரிய முட்டாள்தனம்னு நல்லா புரிஞ்சுக்கிட்டேன். சொந்த வாழ்க்கைல, தொழில்ல எல்லாத்துலயும் அவளால எனக்கு ரொம்ப அவமானம். உங்களைச் சந்தோஷப படுத்தனு ஏதோ ஒரு முடிவெடுத்து. ப்ளீஸ் போதும்.” கோபத்தில் கைகளை ஓங்கி அடித்துக் கூப்பினான்.

“ரெஜிதாவை நாங்க பாக்கலையேப்பா. நீங்க  பார்த்து முடிவு பண்ணீங்க. அப்பவும் தாத்தா இது வேகமா போகுது. ஸ்பீட குறைச்சுக்கோன்னு சொன்னாரேப்பா?”

” ஓ !நீங்க சொன்னதை நான் கேக்கலைன்னு இப்ப அமிர்தாவை கட்டி வச்சு பழி வாங்கப் பாக்கறீங்களா ?”

“என்ன சொன்ன? பழி வாங்கறோமா ? ” பாட்டியால்  அந்த வார்த்தையைத் தாங்க முடியவில்லை. 

மறு வார்த்தை பேசவில்லை. கண்களில் வலியுடன் லேசான கூன் போட்ட வயதான பெண்மணி செல்லும் காட்சியைத்தான்  பார்த்துக்கொண்டிருந்தான். அவர் சென்றதும்தான், தான்  பேசிய வார்த்தையின் அர்த்தம் புரிந்தது.  உடனே ஓங்கி நெற்றியில் அடித்துக் கொண்டு பின்னோடே ஓடினான். இந்த வார்த்தை தாத்தாவுக்குத் தெரிய கூடாது. அவரால் தாங்க முடியாது.

 பின்னோடே ஓடியவன், பாட்டியிடம் கெஞ்சினான். “பாட்டி! பாட்டி! என்ன மன்னிச்சுடுங்க பாட்டி. நான் என்ன பேசறேன்னு தெரியாம ஏதோ உளறிட்டேன். தாத்தா கிட்ட சொல்லிடாதீங்க. அவரால தாங்க முடியாது. ப்ளீஸ் பாட்டி  ப்ளீஸ்….”

பாட்டி  பிடிவாதமாக மறு  வார்த்தை பேசாமல் அமைதியாக இருந்தார். தான்  ஓகே சொல்லும் வரை  பாட்டி தன்னிடம் பேச மாட்டார் என்பது அவனுக்கு புரிந்து விட்டது.  பெரியவர்களுக்காக திருமணத்திற்கு வெறுப்புடன் சம்மதித்தான். 

“என் கூட வாங்க பாட்டி” தாத்தாவின் அறைக்கு சென்றான்.  

“இப்போ உங்க ரெண்டு பேருக்கும் என்ன வேணும் ? நான் அமிர்தாவை கல்யாணம் பண்ணிக்கணும் அதானே ? பண்ணிக்கறேன். ஆனா நான் சந்தோசமா மட்டும் இருக்க மாட்டேன்” அவர்களின்  முகத்தை பார்க்காமலே  சொல்லி விட்டு வேகமாக தன் அறைக்கு விரைந்தான். 

“என்னங்க இது? இவன் பேசறதுல ஏதோ உள்  குத்து இருக்கும் போலருக்கே ? “

“ஒன்னு இல்லடி பல உள்  குத்து இருக்கு. எல்லாத்தையும் சமாளிப்போம்.”

“அது சரி அமிர்தா  கிட்ட யாரு பேசறது? “

“நாமதான் “

“இவ்ளோ கஷ்டப்பட்டு அந்த பொண்ண இங்க கூட்டிட்டு வரணுமா ? வந்தாலும் அது சந்தோசமா இருக்கும்மா ?”

“ஒரு நல்ல காரியம் நடக்கனுன்னா கஷ்டப்பட்டுத்தானே ஆகணும். கண்டிப்பா அவங்க ரெண்டு பேரும்  சந்தோசமா இருப்பாங்க. எதுவா இருந்தாலும் நான் பார்த்துக்கறேன். நீ எந்த கவலையும் இல்லாம இருந்தாலே எனக்கு போதும்.” மெதுவாக வந்து கணவனைக் கட்டி நெஞ்சில் சாய்ந்து கொண்ட மனைவியின் தலையை  கோதி ஆறுதல் படுத்தினார் .

  அமிர்தாவின் தந்தையின் காரியங்கள் முடிந்தன. அந்த வார வெள்ளிக்கு கிழமை மாலை தாத்தாவும்  பாட்டியும் அமிர்தாவின் வீட்டிற்கு பெண் கேட்டு வந்தனர். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. அனைவருக்குமே அதிர்ச்சி. 

“நாங்க சொல்லாம வந்தது தப்புதான். சொன்னா  எங்க வேண்டான்னு சொல்லிடுவீங்களோன்னு பயத்துலதான் நேர்லயே வந்துட்டோம்.”

அமிர்தாவின் அன்னைக்கு என்ன சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை. ஆனால் ‘எப்பேர்ப்பட்ட சம்பந்தம்? எத்தனை பெரிய இடம். அவர்கள் எதற்காக நம்மை போன்று சாதாரண வீட்டில் பெண் எடுக்க வேண்டும் ஒரு வேளை  பேரனுக்கு திருமணம் நின்று விட்டதால் இந்த முடிவா ?’

“நீங்க மனசுல என்ன நினைக்கிறீங்கன்னு புரியுது. நீங்க நினைக்கறது எல்லாமே சரிதான். பேரனுக்கு கல்யாணம் நின்னு போச்சு. எங்களுக்கு அவமானம் தாங்க முடியல. வேற வழி இல்லாமதான் நாங்க இங்க நிக்கறோம். ஏன்னா எங்களுக்கு உங்க வீட்டு பொண்ணுதான் வேணும். ஆனந்த் மனசுல நிறைய காயங்கள் இருக்கு. அது எல்லாத்தையும் இவளாலதான் மா(ஆ)த்த  முடியும். அதுக்கான பொறுமை இவகிட்டதான் இருக்கு.”

பாட்டி சொன்னதைக் கேட்ட அமிர்தா விரக்தியாக சிரித்தாள் 

” உங்களுக்கே நீங்க சொல்லறது காமெடியா இல்ல? அவரு என் மூஞ்சில இன்னும் அசிட் ஊத்தல. அவளோ வெறுப்பு. இதுல எனக்கும் அவருக்கும் கல்யாணம். எப்படி பாட்டி ?”

“ஆனா அவன் சரின்னு சொல்லிட்டானே ?”

பாட்டியின் பதிலில் வியப்படைந்தாலும், “ஆனா நான்? சாரி பாட்டி” 

‘”நீங்க ரெண்டு பேரும்  கல்யாணம் ஆன ஒடனே ஒன்னு சேர்ந்துடுவீங்கன்னு நாங்க சொல்லல . கொஞ்சம் கஷ்டம்தான். எந்த பிரச்சனை வந்தாலும் நாங்க பார்த்துக்கறோம். நாங்க உன்ன விட்டுட மாட்டோம். அவன் சைடுலேர்ந்து எதுவும் பிரச்னை வந்தா அதுக்கு நாங்க பொறுப்பெடுத்துக்கறோம்.”

“எதுக்கு தாத்தா என்ன இவ்ளோ கன்வின்ஸ் பண்ணறீங்க ? அதுக்கு வேற பொண்ணு பாக்கலாமே ? இன்னும் கொஞ்சம் அழகா வசதியா?” அமிர்தாவின் குரல் இறங்கித்தான் போயிற்று 

“ஆயிரம் பேர் வந்தாலும் என்னோட அம்மு வரமாட்டாளே ?” பாட்டி அமிர்தாவின் முகவாயை பிடித்து தூக்கினார் . 

அவனின் அந்த கொடூரமான வார்த்தைகள் காதில் ஒலித்தன. பாட்டியை கட்டிக் கொண்டு அழுதாள். 

தன்னை தேற்றி கொண்டவள், “நான் எப்பவுமே உங்களுக்கு அம்முதான். ஆனா உங்க பேரனோட பொண்டாட்டியா மட்டும் இல்ல.” 

“சரி! எனக்கு  மருமகளா வா. அப்புறம் அவனுக்கு பொண்டாட்டி ஆகிக்கலாம்”

“பாட்டி  நீங்க  சொன்னதையே சொல்லறீங்க. புரிஞ்சுக்கோங்க பாட்டி. ரெஜிதா ஜெயிலேர்ந்து வந்ததுக்கப்புறம் ?”

“எல்லாத்துக்குமே நீதான் அமிர்தா  தீர்வு. நல்லா  யோசிச்சு சொல்லு.” தாத்தாதான் சொன்னார். 

“இல்ல பாட்டி! என்னால  முடியாது” கண்களை துடைத்துக் கொண்டு தீர்க்கமாய் சொன்னாள் . 

“நீ எங்க சொல்பேச்சு கேட்ப. ஏமாத்தமாட்டேன்னு ரொம்ப நம்பிக்கையா வந்தேன் அம்மு. சரி பாக்கலாம். கடவுள் யாருக்கு யாருன்னு விதிச்சுருக்கானோ?” ஏமாற்றத்துடன் வந்தவர்கள் கிளம்பினார்கள்.

 காரில் ஏறப் போனவர்களை , “அம்மா ஒரு நிமிஷம்” என்ற அமிர்தாவின் அன்னையின் குரல் நிறுத்தியது.  

“எங்களுக்கு இந்த கல்யாணத்துல சம்மதம். நீங்க  நாள் பாருங்க” 

பெரியவர்கள் புரியாமல் நின்றனர். அமிர்தாவோ 

“என்னம்ம்மா இது? என்னால முடியாது” என்றாள் .

“என்னடி திருப்பி திருப்பி முடியாது முடியாதுன்னு, அவங்க இவ்ளோ பெரியவங்க எல்லாத்தையும் யோசிக்காமலா வந்து பேசி இருப்பாங்க ? உனக்கும் அந்த தம்பிக்கும் என்ன பிரச்சனை எனக்கு தெரியாது. ஆனா இவர்களுக்கும் தெரியுமில்ல? அப்படியும் நீதான் வேணுன்னு வந்து நிக்கராங்கன்னா அதுக்கு ஏதோ ஒரு காரணம் இருக்கும் அதுதான் உன்ன நல்லா  பார்த்துக்கறேன்னு சொல்லறாங்கல்ல? அந்த தம்பிக்கு உன்ன பிடிக்கல. அவ்வளவுதான். மத்தபடி தம்பி நல்ல தம்பிதானே ? உங்களுக்குள்ள இருக்கற கருத்து  வேறுபாடு எல்லாம் போக போக மாறிடும். இந்த உலகத்துல எல்லாருமே காதல் தம்பதிகளாத்தான் வாழறாங்களா? வாழ்க்கைய அப்டியே அதன் போக்குலையே வாழ கத்துக்கணும். பெரியவங்க இவ்ளோ சொல்லறாங்க . எதிர்த்து எதிர்த்து பேசற? வீட்டுல இருக்கற பெரியவங்க உங்களுக்கு நல்லதுதான் பண்ணுவாங்கன்னு நம்புங்க. 

அம்மா இனிமே அவ ஒன்னும் சொல்ல மாட்டா . நீங்க ஏற்பாடு பண்ணுங்க”

அப்போதும் அமிர்தாவின் முகத்தைத்தான் அவர்கள் பார்த்தனர். சரி என்று அவள் தலையாட்டியதே அவர்களுக்கு போதுமானதாக இருந்தது. அவள் மனதில் வீசும் புயல் முரளிக்கு புரிந்தது. ‘புரிந்து கொள்ளாத அம்மாவுக்காக அக்கா வாழ்க்கையை தொலைக்க வேண்டுமா ? அவர்கள் கிளம்பட்டும் பேசிக் கொள்ளலாம்’ என்று முரளி காத்துக் கொண்டிருந்தான்.  

கிளம்பும்போது ,

முதலில் கயலுக்கு இரண்டு  பக்கமும் பூவை வைத்து விட்ட பாட்டி அமிர்தாவின் நீள கூந்தலுக்கு ஏற்றவாறு பூவை வைத்து விட்டார். இரண்டு பெண்களும் பெரியவர்களின் கால்களில் விழுந்து வணங்கினர். பெரியவர்களும் மனதார வாழ்த்தினார்கள். 

அவர்கள் கிளம்பியதும் முரளி கத்த  ஆரம்பித்துவிட்டான்.

“ஏம்மா உனக்கு என்ன தெரியும்? அவரு ஆனந்தன் சார் நல்லவருதான். ஆனா அக்காவை எப்பப்பாத்தாலும் பணத்துக்காக வந்த பணத்துக்காக வந்தவன்னு வேலைக்கு போன போதே அசிங்கப்படுத்தி  இருக்காரு. இதுல அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டா? அக்கா வாழ்க்கை முழுக்க சமாளிக்க முடியுமா ? இப்டியே வாழ்க்கையை  அதன் போக்குலையே வாழணும்னு  சொல்லிச் சொல்லித்தான் வாழ்க்கைல எந்த சொகத்தையும் அனுபவிக்காமலே  நிறைய பொண்ணுங்க இருக்காங்க. இன்னும் உங்கப்பன் கல்யாணத்துக்கு போட வேண்டிய அஞ்சு சவரன் போடல பத்து சவரன் போடலைன்னு எத்தனை பொண்ணுங்கள சாகர வரைக்கும்  புருஷனுங்க கொடுமைப்படுத்தறாங்க? என்னவோ கொஞ்ச நாள் ஆனா எல்லாம் சரியாகிடும்னு ஈஸியா சொல்லற? அவங்க., 

அவங்க பேரனுக்காக வந்து பேசுறாங்க. நீ அப்டியே சந்தைல மாட்ட விக்கற மாதிரி நீ பெத்த பொண்ண தூக்கி கொடுக்கற ? அக்காவுக்குனு  மனசுல ஆசைகள் இருக்காது? வேண்டா வேண்டான்னு சொல்லியும் நீ உன் இஷ்டத்துக்கு அவங்ககிட்ட ஓகே சொல்லற ?”

“என்னடா விட்டா  பேசிக்கிட்டே போகற? முதல்ல அவ எனக்கு பொண்ணு. அப்புறம்தான் உனக்கு அக்கா. எனக்கு அம்மாங்கற அந்தஸ்த குடுத்தவடா அவ. என்னோட உசுரு. உங்க எல்லாரையும் விட, எனக்குதாண்டா அவ  வெல்லக்கட்டி. ஒரு குழந்தை பொறக்கறதுக்கு முன்னாடிலேர்ந்து அந்த குழந்தைக்காகவே வாழறவடா அம்மா. ஒரு எறும்பு கூட கடிக்காம, பார்த்து பார்த்து அவளை வளர்த்தவடா நான் . என் குழந்தைக்கு எது வேணுன்னு எனக்கு தெரியாது? “ அவனிடம் சொன்னாலும் சமையல் அறையில் சென்று குலுங்கி குலுங்கி அழுதாள்.

முள் மலரும் ..

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!