மலர் -25

மலர் -25

அவன் வார்த்தைகளின் அர்த்தத்தை உணரும் முன் அவன் அவளை பெல்டால் விளாசி இருந்தான். அவளின் கெஞ்சல்கள், அலறல் எதுவுமே அவன் காதில் விழவில்லை. பேரன் படுத்து விட்டனா  என்று பார்க்க வந்த பெரியவருக்குத் தான் அதிர்ச்சி. 

வெறியுடன் அவளை அவன் அடித்துக் கொண்டிருந்தான்.

“நிறுத்துடா நிறுத்து! என்ன பண்ணற நீ ?”

“விடுங்க தாத்தா இன்னிக்கி இவளை நான் கொல்லணும்”

“என்னடா என்னடா ஆச்சு ?”

“இவ இவ அந்த பொம்பளைய வீட்டுக்குள்ள வச்சுக்க சொல்லறா தாத்தா”

“நீ வா முதல்ல” அவனை வெளியில் அழைத்து வருவதற்குள் அவருக்கு போதும் போதும் என்றாகி விட்டது.

அவனைத் தன் அறையில் வைத்து பூட்டி விட்டு அமிர்தாவின் போனில் இருந்து முரளிக்கு அழைத்து ஒரு ஆட்டோவில் அழைத்து செல்ல சொன்னார். 

தன்  தமக்கையின் நிலையை கண்டவனுக்கு மாமனை கொல்லும்  வெறி வந்தது. 

“உங்கள நம்பி  தானே எங்க அக்காவை கல்யாணம் பண்ணி கொடுத்தோம். கத்தினான். பெரியவரால் பதில் பேச முடியவில்லை. 

“இனிமே எந்த காரணத்துக்காகவும் எங்கக்கா உங்க வீட்டுக்கு வர மாட்டா” கண்களை துடைத்துக் கொண்டு அவளின் புடவையை சரிப்  படுத்தினான்.  உடன் பிறந்தவளை  தொடக் கூடாத இடத்தில கூட தொட்டு சரி படுத்தினான். சக ஆண் மகனாக வெட்கப்பட்டான் . 

மெதுவாக கைத் தாங்கலாக  அவளை ஆட்டோவில் ஏற்றியபோது, 

அமிர்தா, “டேய் அவங்களையும் கூட்டிகிட்டு போகணும்”

உதடு கிழிந்து, அரை மயக்க நிலையில் இருக்கும் அக்கா ஏன் அப்படி சொல்ல வேண்டும்? பதில் பேசாது அந்த  பெண்மணியையும் அவன் உடன் அழைத்துச் சென்றான்.

வீட்டுக்கு வந்தவன் காட்டு கத்தலாக கத்தினான்.

“அன்னிக்கே சொன்னேனே  கேட்டியா  பெரியவங்க இருக்காங்க பார்த்துப்பாங்கன்னு சொன்ன? இன்னும் கொஞ்ச நேரம் இருந்திருந்தா அக்காவை நாம் உசுரோடையே பார்த்திருக்க முடியாது”

முரளியின் அன்னை விசாலம் தலையில் அடித்துக் கொண்டார். 

“எதையோ பார்த்து என் பொண்ண நானே இப்படி  பண்ணிட்டனே ?”

“இப்போ ஒப்பாரி வை. என்ன பிரயோஜனம் ? அக்கா வாழக்கை போச்சே ?”

குழந்தையாக இருக்கும் போதும் மகளுக்கு இதை எல்லாம் செய்தாள் தான் . அதில் ஒரு சாந்தோஷம் பூரிப்பு இருந்தது. இப்போது கட்டுக்கடங்காமல் கண்களில் நீர் கொட்டியது.

 கண்ணீருடனேயே மகளுக்கு உடலில் மருந்திட்டு உடை மாற்றினாள் . அது எதையுமே உணரும் நிலையில் கூட அவள் இல்லை .

அக்காவின் நிலையை பார்த்த கயலுக்கும் அழுகை அழுகையாக வந்தது. அந்த பிஞ்சு மனதில் திருமணத்தின் மீது வெறுப்பு வந்தது என்பதை அப்போது யாருக்கும் புரியவில்லை.  ஒரு வேளை எதிர்காலத்தில் அமிர்தாவும் ஆனந்தும் சமாதானமாகலாம். ஆனால் கயலின் மனது அப்போது மாறுமா ? 

 

மறு நாள் காலை பெரியவர்கள் வந்து பார்த்து விட்டுச் சென்றனர். 

“உங்கள நம்பித்தானே என் குழந்தையை அனுப்பினேன்.  எப்படி அழகா அனுப்பினேன். இப்டி கிழிஞ்ச நாரா பாக்கிறதுக்காகவா ? எல்லாம் என் தப்பு. வேண்டா வேண்டான்னு அவ கெஞ்சினா. நான் கேட்டேனா? விசாலம் தலையில் அடித்துக் கொண்டார். 

 “இதுவே உங்க வீட்டுப்  பொண்ணா இருந்தா நீங்க என்ன பண்ணி இருப்பீங்க? ஏழை வீடு, கேட்க அப்பன் இல்லங்கறதுனாலதானே உங்க இஷ்டத்துக்கு என்ன வேண்ணா பண்ணீங்க? உங்களோட பண வசதிக்கு உங்களால எத்தனை போலீசை வேண்ணாலும் வாங்க முடியும். ஆனா கடவுள் ஏழைங்களுக்குத்தான் கூட இருப்பாரு. கடவுள்னு ஒருத்தர் இருந்தா..”

 “அம்மா நீங்க  உங்க வாயால  எதையும் சொல்லிடாதீங்க. நல்லவங்க சொன்னா உடனே பலிச்சுடும்” பாட்டி  கையெடுத்துக் கும்பிட்டார். 

“நாங்க ஒரே ஒரு தடவ அவளை பாக்கலாமா ?”

“முடியாது” தாத்தாவிடம் தீர்மானமாக முரளி மறுத்து விட்டான். இம்முறை விசாலமும் எதையும் மறுத்து கூறவில்லை. 

மதியத்திற்கு மேல் மெதுவாக கண் விழித்தாள்  அமிர்தா .பதறி அடித்து கொண்டு வந்தார்கள் விசாலமும் முரளியும். 

“எப்படி இருக்க அம்மு. அம்மாவை மன்னிச்சுடு டி ?

“அக்கா! எப்டிக்கா இருக்கு? டாக்டர்கிட்ட போலாமா ?”

“இந்த இடம் வேண்டாம் வேண்டாம் உன்னோட உசுருக்கு உத்தரவாதம் இல்லன்னு கெஞ்சினேனே  என்னத்தையோ சொல்லி சொல்லி என் வாய் அடைச்சுட்டியே. போனது போகட்டும் வா நாம் போலீஸ்ல ஒரு கம்ப்ளயின்ட் குடுக்கலாம்.”

“என்ன அடிச்சதுக்கு காரணம் இவங்க  மேல இருக்கற கோபம்தான். முதல்ல அவரு அடிச்சது அமிர்தாவையே இல்ல. அவங்க அம்மாவைதான்.”

“ஏண்டி! என்ன பேசற நீ? நாங்க உன்ன பத்திதான்  யோசிக்கணும். மத்தவங்கள பத்தி  யோசிக்க வேண்டிய அவசியம் இல்ல.”

“என்ன இனியா நீ கூடவா இப்படி பேசற. அப்புறம் நாம செய்யற வேலைக்கு என்ன அர்த்தம் இருக்கு. இல்ல மனுஷியா இருக்கறதுக்குத் தான் என்ன அர்த்தம் இருக்கு?”

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது முரளிக்கு தாத்தாவிடம் இருந்து அழைப்பு வந்தது. 

அவர் சொன்ன செய்தியில் அதிர்ச்சி அடைந்தான்.

“என்னடா என்ன ஆச்சு ? “

“மாமாக்கு ஆக்சிடன்ட் ஆகிடுச்சாம்.சி என் ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்காங்கலாம்.

அமிர்தா அவசரமாக கிளம்பினாள்.

“இனியா நீ வீட்டுக்கு போ. நாம் அப்புறம் பேசலாம்.”

“சரிடி. ஆனா உனக்கே உடம்பு முடியலையே  நீ எப்டிடி  போவ ? நானும் முரளியும் போகிறோமே ?”

“தாங்ஸ் இனியா . நான் போனாதான்  சரியா இருக்கும். பயப்படாத.” அவள் கன்னத்தில் கை  வைத்து சொன்னாள் .

 கோதையோ மகனின் உருவத்தை தடவிக் கொண்டிருந்தாள். “அசோ ! பாப்பாக்கு ஊ !” மகனின் ஓவியத்தில் முகம் கை கால்களைத் தடவி அழ ஆரம்பித்தாள்.

 சில நொடிகள் நின்று மாமியாரை பார்த்தவளுக்கு பாவமாக இருந்தது. அந்த நிலையிலும் அவர் கண்களில் வழிந்த நீரைத் துடைத்துவிட்டு சென்றாள். பைக்கில் ஏற வந்த அக்காவின் கண்ணீரைத் துடைத்து தம்பி அழைத்துச் சென்றான்.

 அவர்கள் மருத்துவமனைக்கு வந்த போது  அவனுக்கு ரத்தத்தை துடைத்துக் கொண்டிருந்தனர். இவள் தந்து அடையாள அட்டையை காண்பித்து அவன் அருகில் சென்று நின்றுக் கொண்டாள் . அவன் மயக்கத்தில் இருந்தான்.

அன்று மனசு சரியில்லை என்று இரு சக்கர வண்டியில் நெடு தூர பயணம் சென்று திரும்பியபோது எதிரில் ஒரு நாய் வந்ததால் சட்டென பிரேக் போட்டதில்  நிறுத்த முடியாமல் சறுக்கி விழுந்ததுதான் காரணம்.

அவர்களுடன் சேர்ந்து அமிர்தாவும் உதவிக்கு கொண்டிருந்தாள். அவன்  புருவத்தில் இருந்து கன்னம் வரை தேய்த்திருந்தது . வலித்து விடுமோ என்று மெதுவாக துடைத்தாள். அவளையும் அறியாமல் அவனின் கம்பீரமானத் தோற்றம் மனதில் வந்தது. கண்களில் இருந்து நீர் கொட்டியது. அவன் மயக்க நிலையில் இருந்தாலும் இவளின் கண்ணீர் அவனை சுட்டது. அவனுக்கு தெளிவில்லாமல் உணர முடிந்தது.  மருத்துவர்கள்  பரிசோதித்தனர். பெரிய அடி  இல்லை என்றாலும் வலது  கை  முட்டி உடைந்திருந்தது. அருண் வந்து பேசி தனது  மருத்துவமனைக்கு மாற்றிக் கொண்டான். பாட்டி  அழுது கொண்டிருந்தார்.

கண்ணீர் தெரியாத வண்ணம் அழுந்த முகத்தை துடைத்துக் கொண்டு பாட்டியிடம் வந்தாள் .

“அம்மு!” அவளை காட்டிக் கொண்டு அழுதார்.

பாட்டியை நெஞ்சில் சாய்த்துக் கொண்டவள் “இருங்க பாட்டி  ஒன்னும் இல்ல. அவரு நல்லா தான் இருக்கறாரு. கவலை படாதீங்க.” மருத்துவர் சொன்ன விவரத்தை சொன்னாள் . 

“முரளி நீ இவங்கள வீட்டுல விட்டுட்டு வீட்டுக்கு போ. நான் அம்புலன்சுல எங்க ஆஸ்பிடலுக்கு போடறேன். “

“இல்லக்கா! நான் உன் கூடவே இருக்கேன். ஒன்னும் பிரச்சனை இல்ல. அருண் சார் இருக்கறாரு. ஏதாவது வேணுன்னா  நான் போன் பண்ணறேன்.”

“வீட்டுல அம்மா தங்கச்சி தனியா இருப்பாங்க. தாத்தா நீங்க வீட்டுக்கு போங்க. நான் பார்த்துக்கறேன்.”

“இல்லம்மா!. நான் அவங்ககூடவே இருக்கறேன். இவ வேணுன்னா போகட்டும்.”

“தாத்தா! நான்தான் பார்த்துக்கறேன்னு சொல்லறேனில்ல. போங்க நீங்க போங்க.”

அனைவரையும் திட்டி  அனுப்பி வைத்தாள் . அவர்கள் மருத்துவமனைக்கே வந்து விட்டனர். இரவு முழுவதும் அவனுக்காக அட்டண்டராக இருப்பாள். பகலில் அவனுடனேயே இருக்கும்படி ட்யூட்டி மாற்றிக் கொடுத்தான் அருண். 

மறு நாள் காலையில் முரளி இவளுக்கு தேவையானதை கொண்டு கொடுத்துவிட்டு போனான். 

ஊசியின் வீரியத்தில் நன்றாக உறங்கி இருந்தவன் காலையிலும் தாமதமாகவே விழித்தான். மருத்துவர்கள் வந்து பார்த்து விட்டுச் சென்றனர். 

கண் விழித்ததும் மனம் அமிர்தாவையே தேடியது. தினமுமே அப்படித்தான்.  காலையில் எழுந்து அவன் வரும்போது  குளித்து விட்டு புதிய மலர் போல அவள் காட்சி கொடுப்பாள். அதை அவனுக்குத் தெரியாமலே ரசிக்க தொடங்கி இருந்தான்.

இன்றும் அப்படிதான். ஆனால்  இப்போதுதான் நேற்று நடந்தது அவனுக்கு நினைவுக்கு வந்தது. கூடவே அவனை  யாரோ ஆம்புலன்சில் ஏற்றியது, பலவிதமான பேச்சுக் குரல், அமிர்தா வந்தது  எல்லாமே நினைவுக்கு வந்தது. 

மருத்துவரிடமிருந்து அவன் ரிப்போர்ட்டை வாங்கி கொண்டு வந்தாள் .

 அருகில் வந்து அவனை பார்த்தாள் . கண் மூடி இருந்தவன் அவள் அருகில் வந்ததும் கண் திறந்தான்.

வெகு அருகில் அவள் முகம். அடிபட்ட காயங்களுடன். எல்லாம் அவனின் கை வண்ணம்தான். அதைப் பார்த்தவனுக்கு யாரோ சாட்டையால் அடிப்பது போல இருந்தது. 

“ஓ! முழிச்சுடீங்களா ?”

“இப்ப எப்படி இருக்கீங்க சார்?”

“இட்ஸ் பெட்டர். “

“ரெஸ்ட் ரூம் போகணுமா?”

“ம்” 

“இருங்க வார்டு பாய் யாராவது வந்து ஹெல்ப் பண்ணுவாங்க.”

பல் தேய்க்க முடியவில்லை. கன்னம் வலித்தது. மெதுவாக வந்து அமர்ந்தான்.

“என்ன காப்பியா இல்ல ஹார்லிக்ஸ் அந்த மாதிரி ஏதாவது?”

ஹார்லிக்ஸ் வந்தது.

“எனக்கு என்ன ஆச்சு ?

ஒன்னும் இல்ல. சும்மா கன்னத்துல கால்ல தேச்சுருக்கு. பட் வண்டியோட வெயிட் விழுந்ததில்  கால்ல கொஞ்சம் டீப்பா அடி . அதே மாதிரி வெயிட்டோட சேர்ந்து விழுந்ததுல கை  ப்ராக்ச்சர் ஆகி இருக்கு.”

ஹார்லிக்ஸை அவனுக்கு ஏற்ற வகையில் ஆத்திக் கொடுத்தாள் . 

“தாத்தா பாட்டி ?”

“அவங்க வீட்டுல இருக்காங்க. இதோ கொஞ்ச நேரம் கழிச்சு பாக்க வருவாங்க. “

“ஓ ! என்னோட போன், வாலட் ?”

“நல்ல வேளை ரெண்டும் மிஸ்  ஆகல.  சரியா இருக்கான்னு  பார்த்துக்கோங்க”

“ஒரே ஒரு கார்டு மிஸ்ஸிங்.” வங்கிக்கு அழைத்து கார்டை பிளாக் செய்ய சொன்னான். போன் மேல் பகுதி உடைந்திருந்தது. காரியதரிசிக்கு அழைத்து மருத்துவமனைக்கு வரச் சொன்னான். 

“உடம்பு வலிக்குதா? படுக்கறீங்களா?”

“இல்ல கொஞ்சம் சாஞ்சு  உட்கார்ந்தா  போதும்.”

“இருங்க வார்டு பாய கூப்பிடறேன்.”

“வரு! நீயே ஹெல்ப் பண்ணு”

வரு என்ற அவன் அழைப்பு அவளின் உயிர் தொட்டது.

மெதுவாக அவன் கட்டிலை அட்ஜஸ்ட்  செய்து அவனுக்கு ஏற்ற வகையில் அவனை அமரச் செய்தாள் .

தலையணை அவனுக்கு ஏற்ற மாதிரி வைத்துக் கொண்டிருந்தவளிடம்,

என்ன சொல்லியிருப்பான்..

முள் மலரும் …

❤️ Loading reactions...
0 Comments

You cannot copy content of this page

error: Content copy warning!!