சூர்யா, மேனேஜர் லட்சுமணனையும் அந்தப் பெண்ணையும் ஓர் நொடி உன்னிப்பாக கவனித்தான். அவள் பக்கம் கண்டிப்பாக ஏதோ நியாயம் இருக்கிறது என்று அவன் மனது சொன்னது. ஆகவேதான் அவளை விடச் சொல்லி இருந்தான்…
ஒற்றை விரலால் தன் எதிரில் இருந்த நாற்காலியில் அவளை உட்காரும்படி கூற, அவளும் முந்தானையால் முகத்தை துடைத்துக்கொண்டே வந்து அமர்ந்தாள்.
“சொல்லுங்க…”
“சார் என்னோட பேரு துளசி. என்னோட புருஷன் போன வருஷம் வரை இந்த ஃபேக்டரில தான் வேலை பார்த்துட்டு இருந்தாரு. எதிர்பாராத விதமா கரண்ட் ஷாக் அடிச்சு இறந்துட்டாரு. அவருக்கு பதிலா வீட்ல யாராவது வேலைக்கு வந்துக்கலாம்னு சொன்னாங்க. அப்பா அம்மா, மாமியார் மாமனார் நாலு பேரும் வயசானவங்க. குழந்தைக்கு இப்பதான் மூணு வயசு ஆகுது. என் குடும்பத்தை காப்பாத்த என்னை விட்டா யாரும் கிடையாது. அதனாலதான் நான் வேலைக்கு வந்தேன். ஆனா…” என்றவள் மேற்கொண்டு சொல்ல முடியாமல் விம்மினாள்.
துளசி பேசப் பேச, ஓரமாக நின்று கொண்டிருந்த மேனேஜரின் முகம் வெளிறியது. சூர்யா அவளைத் தொடர்ந்து பேசச் சொல்லி சைகை காட்டினான்.
“நம்ம கம்பெனியில சத்தியராஜ்னு ஒருத்தன் வேலை பார்க்கிறான்… அவன் கொடுக்கிற இம்சைய என்னால தாங்க முடியல சார். ஆரம்பத்துல சும்மா பேச்சுல வம்பு பண்ணிட்டு இருந்தான். நான் எதையும் கண்டுக்காம என் வேலையில மட்டும் கவனமா இருந்தேன். இப்போ அவன் வரம்பு மீறிட்டான் சார்…” என்று சொல்லி முடிக்கும் முன்பாகவே அவள் குரல் தழுதழுத்தது.
மேனேஜர் லட்சுமணன், “ஏன்மா, இதுக்கெல்லாம் ஆதாரம் இருக்குதா? நீ சொல்ற பொய்ய எப்படி மத்தவங்க நம்புவாங்கனு என்று எதிர்பார்க்கிற?” என்றவன்,
சூர்யா பக்கம் திரும்பி, “இந்த பொண்ணு பேசுறது எல்லாமே பொய் சார். அவ பேருல நம்ம கம்பெனில நிறைய கடன் இருக்கு. அப்பப்போ பணத்தை, அந்தந்த தேதிக்குள்ள கட்டாம விட்டுடுவா. ஏன் கட்டலனு கூப்பிட்டு கேட்டா, இப்படித்தான் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி நாளைக் கடத்துவா. இந்த பொண்ணுக்கு இதே வேலை தான் சார்…” என்று கூறினான்.
துளசி, “நான் பொய் சொல்லல சார். போன வாரம் வெள்ளிக்கிழமை நான் மெஷின் கிட்ட வேலை பார்த்துட்டு இருந்தப்போ, யாரும் இல்லாத நேரமா பார்த்து என்னை அசிங்கமா… அந்த நாய்… கட்டிப் பிடிச்சுட்டான் சார். எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல. பயத்துல கத்திட்டு அங்கிருந்து ஓடி போயிட்டேன். அந்த அதிர்ச்சியில அடுத்த நாள் நான் வேலைக்கே வரல. இப்போ ஃபேக்டரிக்குள்ள நுழையவே எனக்குப் பயமா இருக்கு சார்…”
மீண்டும் லட்சுமணன் ஏதோ சொல்வதற்காக வாய் திறக்க, அவரை நிறுத்து என்பது போல கை தூக்கி காட்டியிருந்தான் சூர்யா.
“எனக்கு இப்பவே வெள்ளிக்கிழமை சிசிடிவி ஃபுட்டேஜ் வேணும்…”
“சார்?!…”
“என்ன?” என்று அவன் முறைத்த முறைப்பில், மேனேஜருக்கு மனமெங்கும் கிலி கவ்வியது.
அடுத்த ஐந்து நிமிடத்தில் அவன் முன்னால் வீடியோ ஒளிபரப்பானது. சரியாக அந்த பெண் சொல்லும் நேரம் மட்டும் வீடியோவில் வரவில்லை! துளசி விம்மி விம்மி அழ, சூர்யாவின் பார்வை மெல்லத் திரும்பி லட்சுமணன் பக்கம் நிலைத்தது.
மேனேஜர், “ஏதோ டெக்னிக்கல் எரர்னு நினைக்கிறேன் சார்…” என்று பல்லை காட்டினான்.
அடுத்த நொடி அவன் கன்னத்தில் பளார் என அறைந்திருந்தான் சூர்யா. இரண்டு முறை சுழன்று தரையில் விழுந்தான் அவன். துளசியின் அழுகை ஓர் நொடி நின்று போக, சூர்யாவின் கோப முகம் பார்த்து பயத்தில் எச்சில் விழுங்கினாள்.
“இவனுக்கும் அந்த சத்யராஜுக்கும் என்ன சம்பந்தம்?” என்று துளசியிடம் கேட்டான் அவன்.
அவள் நடுங்கிக் கொண்டே, “தூரத்து உறவுன்னு மத்தவங்க சொல்லி கேள்விப்பட்டு இருக்கேன். அதைத் தவிர எனக்கு எதுவும் தெரியாது. தெரிய முன்னால வரைக்கும் அவனைப் பத்தி மேனேஜர் கிட்ட எவ்வளோ தடவை புகார் பண்ணியிருக்கேன் சார். அவர் ஆக்சன் எடுக்கவே இல்ல… அதுக்கப்புறம் தான் சந்தேகப்பட்டு மத்த பொண்ணுங்க கிட்ட விசாரிச்சேன்.
அந்த சத்தியராஜ் நிறைய பொண்ணுங்க கிட்ட இப்படி சில்மிஷ சேட்டை பண்ணிருக்கான். அதனாலயே பல பேர் நம்ம ஃபேக்டரியிலிருந்து வேலையை விட்டு போயிட்டாங்க. எனக்கு வீடு குடும்பம் எல்லாமே ஃபேக்டரிக்கு பக்கத்துல இருக்கு. நல்ல சம்பளமும் தர்றீங்க. அதனால நான் வேலையை விடல.
என்னை போலத்தான் நிறைய பொண்ணுங்க, வேற வழி இல்லாம வேலைக்கு வராங்க! எல்லாருமே மேனேஜர்ட்ட கம்ப்ளைன்ட் பண்ணி இருக்காங்க. ஆனா இவரு, அவனை ஒரு தடவை கூட கூப்பிட்டு என்னன்னு கேட்கவே இல்லை. அந்த தைரியத்துல தான் அந்த பாவி, இந்த அளவுக்கு துணிஞ்சிட்டான். இனி நான் வேலைய பத்தி நினைக்க முடியுமா சார்?”
சூர்யா தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தான். காரில் காத்துக்கொண்டிருக்கும் பூர்ணிமாவின் ஞாபகம் ஒரு நொடி வந்து போனது.
தரையில் விழுந்து கிடந்த லட்சுமணனின் சட்டையைப் பிடித்து அப்படியே ஒற்றைக் கையால் தூக்கினான் சூர்யா. அவ்வளவு நேரம் மண்ணோடு மண்ணாகக் கிடந்தவன் இப்பொழுது அந்தரத்தில் ஆடினான். கால்கள் தரையில் படாமல் காற்றில் தத்தளித்தபோது, லட்சுமணனுக்குத் தன் ஆயுள் இன்றோடு முடிந்து விடுமோ என்ற அச்சம் உச்சி முதல் பாதம் வரை பரவியது.
“ஐயோ, என்னை கொன்னுடாதீங்க. விட்ருங்க சார்” என்று உயிர் பயத்தோடு கத்தி கதறினான். அவனது அலறல் அந்த அறையின் நான்கு சுவர்களுக்குள்ளும் எதிரொலித்தது.
“அந்த சத்தியராஜை இப்போவே இங்க கூப்பிடு…” என்று அடிக்குரலில் கட்டளையிட்ட சூர்யா, லட்சுமணனின் போனை எடுத்து அவன் கையில் திணித்தான்.
சூர்யா கொடுத்த அந்த ஒற்றை அறையிலேயே லட்சுமணனுக்குப் பொறி கலங்கிப் போயிருந்தது. ஒரு பக்கம் கன்னம் வீங்கித் துடிக்க, கசங்கிய கண்களோடு நடுங்கும் விரல்களால் சத்தியராஜின் எண்ணைத் தேடி டயல் செய்தான். அழைப்பு ஏற்கப்பட்ட அடுத்த நொடி, சத்தமாக ஒலித்த அந்த போனின் ஸ்பீக்கர் வழியாக சத்தியராஜின் குரல் சூர்யாவின் செவியிலும் சேர்ந்து விழுந்தது.
“சொல்லுங்க மாமா… என்ன இந்த நேரத்துல போன்?” எனச் சாதாரணமானக் குரலில் கேட்டான் சத்தியராஜ்.
“உடனே என்னோட ரூமுக்கு வா…” என்று லட்சுமணன் தன் பயத்தை மறைத்துக் கொண்டு பேசினான்.
“எதுக்கு மாமா? ஏதாவது புது பீஸ் என் மேல கம்ப்ளைன்ட் பண்ணி இருக்கா?” என்று அவன் கேட்கும் திணுசிலையே, வேறொரு பெண்ணிடமும் வம்பு செய்திருப்பது அப்பட்டமாக தெரிந்தது. பெண்களுக்குத் தொல்லை கொடுப்பதை அவன் தினசரி வேலையாக செய்து கொண்டு இருக்கிறான் என்று இனி பிறர் சொல்லி தெரிய வேண்டுமா?
‘இவன் இன்னைக்கு என்னை குழிக்குள்ள இறக்காம, ஓய மாட்டான் போல இருக்கே…’ என்று மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டான் மேனேஜர்.
“அதெல்லாம் ஒன்னும் இல்லடா, ஒரு முக்கியமான வேலை இருக்கு. நீ முதல்ல வா சொல்றேன்.”
“ஓகே மாமா… இதோ அஞ்சு நிமிஷத்துல வந்துடுறேன்” என்று உற்சாகமாகச் சொல்லிவிட்டு போனை வைத்தான் சத்யராஜ்.
சரியாக ஐந்தாவது நிமிடம், தன் பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டுக்கொண்டு, விசில் அடித்துக் கொண்டே, தெனாவெட்டாக லட்சுமணனின் அறைக்குள் நுழைந்தான் சத்தியராஜ். உள்ளே சூர்யா இருப்பான் என்று அவன் துளியும் எதிர்பார்க்கவில்லை. சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் ராஜாவைப் போலச் சூர்யா அமர்ந்திருப்பதைப் பார்த்ததும் அவனது நடை சட்டெனச் சுருங்கியது.
“வாங்க மிஸ்டர் சத்யராஜ்…” என்று சூர்யா சிரித்த முகத்தோடு கூப்பிட்டான். அந்தக் சிரிப்பு, ஒரு புயலுக்கான அறிகுறி என்று அந்த மூடனுக்குத் தெரியவில்லை.
“வணக்கம் சார்… நீங்க இங்க இருப்பீங்கனு தெரியாது. நீங்கதான் என்னை வர சொன்னீங்களா? என்ன விஷயம் சார்?” என்று அவன் அசடு வழிந்து கொண்டே நெருங்கி வர, அடுத்த நொடி மின்னல் போலச் சூர்யா தன் இருக்கையை விட்டு எழும்பினான்.
எதிரில் நின்றவன் வயிற்றில் ஓங்கி ஒரு மிதி வைக்க, சத்தியராஜ் பறந்து போய் அறையின் மூலையில் இருந்த இரும்பு பீரோவின் மீது மோதித் தரையில் விழுந்தான். என்ன நடக்கிறது என்று அவன் சுதாரிப்பதற்குள், அவனது சட்டையைப் பற்றித் தூக்கி இருந்தான் சூர்யா. தன் இரும்புக் கையால், அவனது முகத்தில் சரமாரியாகக் குத்துக்களை இறக்கினான். விளைவு, பற்கள் உடைந்து, ரத்தம் பீறிட்டுத் தெறித்தது.
“எந்தக் கையாலடா அந்த பொண்ண தொட்ட?” என்று கர்ஜித்தபடி, சத்தியராஜின் வலது கையை அப்படியே பிடித்துத் திருகினான்.
‘மடார்’ என்ற சத்தத்தோடு அவனது எலும்பு முறிந்தது.
“அம்மா…” என அடிவயிற்றிலிருந்து அலறினான் அவன். அவனது கை உயிரற்ற துணி போல தொங்கியது.
கதவோரம் நின்றிருந்த துளசி, இதைப் பார்த்து மிரண்டு போனாலும், இத்தனை நாள் தான் அனுபவித்த அவமானத்திற்குச் சூர்யா கொடுத்தத் தீர்ப்பைக் கண்டு அவளுள் ஒரு நிம்மதிப் பெருமூச்சு எழுந்தது.
சூர்யா அங்கிருந்த லட்சுமணனைப் பார்த்து, “இவன் இனிமே இந்த ஃபேட்டரிக்குள்ள நுழையக்கூடாது. போலீஸைக் கூப்பிடு…” என்றான் கோபமாய்.
மேனேஜர், “சார்… தயவுசெஞ்சு போலீஸ் எல்லாம் வேண்டாம் சார். எங்க குடும்ப கௌரவம் போயிடும்… இந்த ஒரு தடவை மன்னிச்சிடுங்க சார்” என்று கெஞ்சுதலாகச் சூர்யாவின் காலைப் பிடிக்க முயன்றான்.
“போலீச நீ கூப்பிட்டா அவன் மட்டும் உள்ள போவான். நான் கூப்பிட்டா நீயும் சேர்ந்து உள்ள போகணும். எப்படி வசதி?”
லட்சுமணனுக்கு வேறு வழியே இல்லை என்று புரிந்துவிட்டது. தன் பிழைப்பைத் தக்கவைக்கத் தன் மனைவியின் தம்பியை காட்டிக்கொடுக்கத் துணிந்தவன், அழுகையோடு நடுங்கும் விரல்களால் போலீசுக்கு போன் போட்டான்.
சிறிது நேரத்தில் சைரன் சத்தத்துடன் வந்த போலீஸ், கை உடைந்த நிலையில் முனகிக் கொண்டிருந்த சத்தியராஜை நாய் போல இழுத்துக்கொண்டு சென்றது. பாலாஜியும் அதே நேரம் அங்கு வந்து சேர்ந்தான். சூர்யா அங்கிருந்த பொறுப்புகளை எல்லாம் உடனடியாகப் பாலாஜியின் கையில் ஒப்படைத்தான்.
“உனக்கு ஒன் வீக் தான் டைம், எல்லா கணக்கையும் ஒப்படைச்சிட்டு வெளிய போகணும். வேற ஏதாவது எக்குத்தப்பா பண்றனு தெரிஞ்சது, உனக்கு நான் தரப்போற தண்டனை மரணத்தை விட ரொம்ப கொடூரமா இருக்கும்” என்று கறாராக அறிவுறுத்தி விட்டு, அங்கிருந்து கிளம்பினான்.
அறை வாசலில் நின்று கொண்டிருந்த துளசிக்குத் தான் காண்பது கனவா நனவா என்றே புரியவில்லை. தான் வணங்கும் சுடலை மாடசாமி, ஆட்டத்தை முடித்து ஆக்ரோஷம் தணிந்து மலை ஏறும் போது என்ன மனநிலையில் இருப்பாளோ, அதே மனநிலையில் சூர்யாவைப் பார்த்துக் கைகூப்பி நின்றாள்.
“இனி இப்படி எதுவும் நடக்காம இருக்க கம்ப்ளையிண்ட் பாக்ஸ் வைக்க சொல்றேன். அதை பாலாஜியே நேரடியா கவனிச்சு பாரு. நீங்க போய் வேலைய பாருங்க, அண்ட் உங்க நேர்மைக்கான பரிசா ஃபேக்டரில் இருக்கிற எல்லா பெண்களோட கடனையும் தள்ளுபடி பண்றேன்…” என்று கூற, அவள் ஆனந்த மிகுதியில் அழுதே விட்டாள்.
அவன் உள்ளே சென்று அரை மணி நேரம் கடந்துவிட, பூர்ணிமாவுக்கு ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு யுகங்களாகத் தோன்றிற்று. எழுந்து உள்ளே சென்று போய் பார்க்கவும் பயமாக இருக்க, தன் மனதின் உணர்ச்சிப் போராட்டங்களைச் சமாளிக்க முடியாமல், தன் விரல்களைப் பிசைந்துகொண்டே இருந்தாள்.
அந்த நேரம் சூர்யா விறுவிறுவென நடந்து தன் காரை நோக்கி வந்தான். அவனது வெள்ளைச் சட்டையில் அங்காங்கே சிதறியிருந்த அந்த ரத்தக்கறையையும், சிவந்து போயிருந்த அவனது வலது கையையும் பார்த்து, காரினுள் அமர்ந்திருந்த பூர்ணிமாவுக்குத் தூக்கி வாரிப் போட்டது.
காரின் கதவைத் வேகமாய் திறந்து உள்ளே நுழைந்தவன், டமால் என சாத்தினான். அவனிடமிருந்து வீசிய அந்த ஆக்ரோஷமான மூச்சுக் காற்று, காரின் ஏசி குளிரில் தனியாக தெரிந்தது.
“சூர்யா… என்ன ஆச்சு? ஏன் கையெல்லாம் ரத்தம்? உனக்கு ஏதும் அடிபட்டுடுச்சா?” என்று பதற்றத்தோடு கேட்டாள்.
அவள் கேள்விக்கு சூர்யா பதிலேதும் சொல்லவில்லை. ஸ்டியரிங்கைப் பிடித்திருந்த அவனது விரல்கள் இன்னும் கோபத்தில் துடித்துக்கொண்டிருந்தன. அவள் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்காமல், காரை புயல் வேகத்தில் கிளப்பினான். அந்த வேகமும், அவனது மௌனமும் பூர்ணிமாவுக்குள் ஆயிரம் கேள்விகளை எழுப்பினாலும், மேலே எதையும் கேட்கும் துணிவின்றி அமைதியாக அமர்ந்திருந்தாள்.
சில நிமிடங்களுக்கு முன் இருவரது உறவையும் பல அடிகள் உயர எடுத்துப் போயிருந்தாள். இப்போது அவன் பாராமுகத்தால் திடீரென்று தலைகுப்புற தரையில் விழுந்தது போல் ஆனது அவள் நிலை!
