சூர்யா முதல் பக்கத்தைத் திறந்தான். அங்கே அவன் கண்டது வெறும் டிராயிங் இல்லை; அது பூர்ணிமா அவன் மீது வைத்திருந்த பத்தாண்டுக் காலக் காதலின் வெளிப்பாடு.
ஒரு கிரிக்கெட் வீரனுக்குத் தன் பெருமையை பறைசாற்ற தேவையான கம்பீரமும், ஒரு ராஜாவின் அழகை வெளிப்படுத்தும்படியான வேலைப்பாடுகளும் கொண்ட ஷர்வானி மாடல் அது. அவனது தோள்களின் அகலத்தையும், அவன் நடக்கும் வேகத்தையும் கருத்தில் கொண்டு, அவளது கைவண்ணத்தில் உருவான டிராகன் டிசையிலான உடையை விட்டு கண்களை அகற்றவே முடியவில்லை அவனால்.
பாலாஜியுமே வாயை பிளந்தபடி பார்த்துக் கொண்டிருந்தான். காரணம், அதில் நாகரீக வடிவமைப்பும், பாரம்பரிய வேலைப்பாடுகளும் மிக அற்புதமாக சொருகப்பட்டிருந்தது.
“எப்படிம்மா இது? எங்க பார்த்த?” என்று தனை மறந்து கேட்டான் பாலாஜி.
“அது வந்து, டைம் கிடைக்கும் போதெல்லாம் ஃபோன்ல பெரிய டிசைனர்ஸ் எப்படி பண்ணி இருக்காங்கன்னு பார்ப்பேன். அதுபோல நோட்ல, நானும் எனக்கு தோணுறதை வரைஞ்சு வச்சுக்குவேன். காலேஜ் பிள்ளைகளுக்கு, கல்யாண ஜோடிக்கு கம்மியான செலவுல இப்படி புதுசா தச்சுக் கொடுப்பேன். அதுக்காகவே நிறைய ஆர்டர் வரும்…”
“அப்போ இது உன்னோட சொந்த டிசைனா?” என்று கேட்க, சொல்ல முடியாத வேதனையான முகபாவனையோடு ஆம் என்று தலையாட்டினாள்.
பாலாஜிக்குமே அந்த நொடி, தன் கேள்வி கொஞ்சம் அதிக பிரசங்கித்தனம் என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது.
ஆர்யாவிடம் திரும்பியவன், “கேட்டியாடா, ஸ்கூல் படிக்கக்கூட வாய்ப்பு கிடைக்காத பொண்ணு, தொழில்ல எவ்வளவு அக்கறையா வேலை பார்த்து இருக்கானு. உனக்கெல்லாம் காலேஜ் பீஸ் கட்டினதே வேஸ்ட், இல்ல பாஸ்…” என்று கேட்டுக்கொண்டே சூர்யா பக்கம் திரும்பினான்.
அங்கே அவன் இன்னும் அவள் டிசைனில் இருந்து விழிகளை விலக்கி இருக்க வில்லை.
‘உன் ஒவ்வொரு அசைவையும் கவனித்து, நீ எப்போது எதை விரும்புவாய் என்பதையும் அறிந்த ஒருவரால்தான் இவ்வளவு நேர்த்தியாக வரைய முடியும்! அவள் அவ்வளவு காதலித்திருக்கிறாள் உன்னை…’ என்று அவன் மனமே அவளுக்கு பாராட்டு பத்திரம் வாசித்தது.
தனுஜாவும் எட்டிப்பார்த்து, “வாவ்! அண்ணி… நீங்க எங்க கம்பெனி டிசைனர்ஸ விட சூப்பரா பண்ணிருக்கீங்க! இது நிஜமாவே வேற லெவல்!” என்று வியந்தாள்.
சூர்யா புத்தகத்தை மூடி வைத்தான். பூர்ணிமாவின் முகத்தைப் பார்த்தான். அந்தப் பார்வையில் வன்மம் இல்லை, ஏளனம் இல்லை… ஒருவிதமான மலைப்பு மட்டுமே இருந்தது.
“பாலாஜி… செலக்டட்!” என்றான் ஒற்றை வார்த்தையில்.
ஆர்யா அதிர்ச்சியாகி, “எதுடா அண்ணா செலக்டட்? அந்த பொண்ணு வரைஞ்சதுல எது பிடிச்சிருக்கு உனக்கு?”
“ஏழும் பிடிச்சிருக்கு!” என்று சொல்லிவிட்டுப் பூர்ணிமாவிடம் அந்தப் புத்தகத்தைக் கொடுத்தான்.
“நீ வரைஞ்சதுல மூணாவதா ஒரு டிசைன் இருக்குல்ல… அதைத்தான் நான் அந்த ஃபங்ஷனுக்குப் போடப் போறேன். ஆனா இது வெறும் பேப்பர்ல அழகா இருந்தா போதாது. அதே பெர்ஃபெக்ஷனோட துணியில வரணும். அந்த வேலை உன்னோட பொறுப்பு. உன்னால முடியுமா?” என்று அவளது கண்களைப் பார்த்துக் கேட்டான்.
பூர்ணிமாவுக்குத் தன் காதுகளையே நம்ப முடியவில்லை. உலகமே உற்றுப் பார்க்கப் போகின்ற அந்தப் பெரிய மேடையில் சூர்யா இவள் தைத்த ஆடையை அணியப் போகிறான்!
“கண்டிப்பா முடியும் சூர்யா!” என்று அவள் சொன்னபோது, அவள் குரலில் முதன்முறையாக ஒரு தன்னம்பிக்கை ஒளிர்ந்தது.
“பாலாஜி, நீ மத்த விஷயத்தை எல்லாம் பார்த்துக்கோ. தனு நீ நாளைக்கு காலைல முதல் வேலையா பூர்ணிக்கு மெட்டீரியல் செலக்ட் பண்ணி கொடுத்துடு. அப்படியே இதுக்கு பேர்(pair) டிரஸ் ரெடி பண்ணிடு. நான் ஃபேக்டரி விஸிட்க்கு கிளம்புறேன்…” என்று கூறிக் கொண்டே எழுந்தான்.
பூர்ணி, “அந்த கிஃப்ட் பத்தி எதுவுமே சொல்லாம போறியே…” என்று ஓடிப்போய் அவன் வழியை மறித்து கொண்டு நின்றாள். அவள் இதைத்தான் செய்வாள் என்று தெரிந்தது போல இதழ் சுழித்து சிரித்தான் சூர்யா.
‘ஐயோ! இப்ப எதுக்கு சிரிக்கிறான்?’ என்று அவள் உள்ளத்தில் சூறாவளி அடிக்க ஆரம்பித்தது.
“கம் வித் மீ…” என்றவன் நடையின் வேகத்தை அதிகப்படுத்தினான்.
ஏற்கனவே ஆறடிக்கும் அதிகமான ஆஜானுபாகு தோற்றம் அவனுக்கு. அவன் சாதாரணமாக நடந்தாலே அவனது ஒரு எட்டிற்கு, அவள் இரண்டு மூன்று எட்டுகள் வைக்க வேண்டியிருக்கும். இப்போது வேண்டுமென்றே வேகமாக நடந்து போக, அவனது வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் பூர்ணிமா கிட்டத்தட்ட ஓடவே வேண்டியிருந்தது.
பின்னால் வரும் அந்தப் பேதையைப் பற்றித் துளியும் கவலை இல்லாமல் அவன் தன் காரில் ஏறி அமர்ந்துகொள்ள, இவளும் வேறு வழியின்றி மூச்சு வாங்க ஓடி வந்து காரில் ஏறினாள். வேகமாக ஓடி வந்ததில் ஏறி ஏறி இறங்கிய அவளது நெஞ்சுக்கூட்டின் மீது, ஒரு கணம் சூர்யாவின் தீர்க்கமான பார்வை பதிந்தது.
அந்த ஒரு நொடிப் பார்வையில் பூர்ணிமாவுக்கு உடல் முழுக்க மின்சாரம் பாய்ந்தது போலிருந்தது; உடலெல்லாம் ஒருவித சிலிர்ப்பில் முறுக்கிக் கொள்வது போன்ற உணர்வு அவளை ஆட்கொண்டது. அவனது பார்வையின் வெப்பத்தைத் தாளாமல் அவள் ஜன்னல் பக்கம் முகம் திருப்பிக்கொண்டாள்.
ஃபேக்டரி நோக்கிச் செல்லும் அந்த நெடுஞ்சாலையில், காரைப் புயல் வேகத்தில் கிளப்பினான் சூர்யா. காருக்குள் நிலவிய அந்த நிசப்தம் அவளுக்குள் அச்சத்தை அதிகப்படுத்தியது. தன் தங்கை அபிராமியைப் பார்க்க விரும்புவது பற்றிப் பேச அவள் தவியாய் தவித்தாள். அடிமனதில் வார்த்தைகள் முட்டி மோதினாலும், அவனிடம் அதைக் கேட்கத் துணிவு வரவில்லை. சற்று முன்பு அலுவலகத்தில் இருந்த சகஜமான சூழ்நிலை மறைந்து, அவள் மனதில் பயம் பேயாட்டம் போட்டது.
பாதி வழி கடந்திருக்கும்… அந்தச் சாலையே போக்குவரத்து ஏதுமின்றி, அமைதியாய் இருந்தது. திடீரெனச் சூர்யா காரின் வேகத்தைக் குறைத்து, சாலையோரமாக ஒரு மரத்தடியில் நிறுத்தினான். இன்ஜின் நின்றதும் அந்த இடமே நிசப்தத்தில் ஆழ்ந்தது போல் இருந்தது. பூர்ணிமா பயந்த விழிகளால் அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.
“சூர்யா… வண்டி ஏன்…”
“எப்படி என் அளவெல்லாம் நான் சொல்லாமலே உனக்கு தெரிஞ்சது?” என்று ஒற்றைப் புருவம் தூக்கி கேட்டான்.
காருக்குள் இருந்த ஏசியின் குளிரையும் மீறி, அவள் தேகம் முழுக்க வெப்பம் பாய்ந்தது. பூர்ணிமா பின்னால் நகர முயன்றாள், ஆனால் இருக்கை அவளைத் தடுத்தது.
“உன்னத்தான்டி, எப்படி ஏழும் சரியா என் ஹைட் வெயிட்டுக்கு ஏத்தபடி டிசைன் பண்ணின? செஸ்ட், ஹிப்னு எல்லா அளவும் தெரிஞ்சிருக்கு. எப்படி?” என்று கேட்டுக் கொண்டே அவளுக்கு மிக அருகில் வந்தான். அவனது சீரான மூச்சுக்காற்று அவள் முகத்தில் பட, அவளுக்குள் இருந்த எதிர்ப்புத் திறன் மெல்லச் சிதைந்தது.
“வந்து நான்…” என்றவளின் கண் இமைகள் ரெண்டும் பட்டாம்பூச்சி போல படபடத்தது.
“மனசுக்குள்ள எத்தனை தடவை எனக்கு அளவெடுத்த?” என்றவனது விரல்கள், அவளின் நெற்றியோர முடிகளை ஓரமாய் ஒதுக்கிவிட்டன. பூர்ணிமா அதற்கே கண்களை இறுக மூடிக்கொண்டாள்.
“அப்போ எல்லாத்தையும் கற்பனைல பார்த்துட்ட, அப்படித்தான?” என்று கேட்டுக் கொண்டே நெருங்கி அமர்ந்தான்.
“இல்ல, எனக்கு எதும் தெரியாது…” என்று முகத்தை மூடிக்கொண்டாள்.
“இதை நான் நம்பனும். ம்ஹூம்?”
“நான்… நான்…”
“நீ? நீ?”
“தெரியாம வரைஞ்சுட்டேன். விட்ரு சூர்யா.”
“எதுவரை பார்த்தனு மட்டும் சொல்லிடு, நாம காம்ப்ரமைசா போயிடலாம்.”
“ய்யய…” முகத்தை மூடி இருந்த அவள் கரங்கள் நகர்ந்து காதுகளை மூடிக்கொண்டன.
“நான் தப்பா எதுவுமே கேட்கலையேடி, நீ தப்பு தப்பா நினைக்கிறியா?” என்று அவன் கேலியாகக் கேட்டபடி, தன் வலுவான கரத்தை அவள் கழுத்தைச் சுற்றிப் போட்டு, அவளை அப்படியே தன் பக்கம் இழுத்துப் பிடித்தான்.
அந்த இரும்புப் பிடியில் பூர்ணிமா அவனது மார்போடு வந்து மோதினாள். அவன் வாசம் இவள் நாசியில் ஏற, உடல் உதறத் துவங்கியது. அவனது இதயத் துடிப்பு அவள் காதுகளுக்கு மிக அருகில் கேட்டது. மனதும் உடலும் தன் கட்டுப்பாட்டை மீறி எங்கோ ஒரு அதலபாதாளத்தில் விழுவதைப் போல உணர்ந்தாள்.
“எனக்கு… எனக்கு வீட்டுக்கு போகணும். ப்ளீஸ்…” என்றாள் கெஞ்சுதலாய்.
ஆனால் சூர்யா அவளை விடுவதாய் இல்லை. அவளது அச்சம் அவனுக்குள் ஒரு வினோதமான கிளர்ச்சியைத் தந்திருந்தது. மிக நெருக்கத்தில் இருந்த அவளது செந்நிற இதழ்கள், நடுக்கத்தில் மெல்லத் துடிப்பதைக் கண்டு, அவனது ஆண்மைக்குள் தீ பரவத் தொடங்கியது.
தன் பிடியை இன்னும் இறுக்கியவன், எதைப் பற்றியும் யோசிக்காமல் அவளது இதழ்களை நோக்கித் தன் முகத்தைத் தாழ்த்தினான். அவள் என்ன நடக்கிறது என்று யோசிக்கும் முன், சூர்யாவின் இதழ்கள் அவளது இதழ்களோடு ஆவேசமாகப் பிணைந்து கொண்டன. அவன் கைகளுக்குள் தன்னை மொத்தமாக ஒப்படைத்துவிட்ட பேதை, எதிர்ப்புக் காட்டக் கூட மறந்து வெண்ணையாய் குழைந்தாள்.
அவள் உடல் தளர்ந்து போக, அவனது ஒரு கை அவளது கூந்தலை இறுகப் பற்றிக் கொண்டது. மற்றொரு கை அவளது இடையைச் சுற்றி வளைத்து சிறைப்பிடித்தது. ஒரு கட்டத்தில் தன் சுயத்தை இழந்து அவன் கழுத்தைச் சுற்றித் தன் கரங்களை மெல்லக் கோர்த்துக் கொண்டாள். அவனது ஆவேசத்திற்குத் தானும் பலியாகிக் கொண்டிருப்பதை அறிவு உணர்ந்தும், அவளால் அந்த வசீகரத்திலிருந்து விடுபட முடியவில்லை.
மூச்சிரைக்க அவளை விடுவித்தவன், “என்னை என்னடி பண்ண?” என்றான் கோபக்குரலில்.
பூர்ணிமா பதில் பேசாமல் அப்படியே அவன் தோளில் சாய்ந்தாள். இருவரது இதயத் துடிப்புகளும் ஒன்றாக இணைந்து தாளம் போட்டன. தன் நெற்றியில் வழிந்த வியர்வைத் துளிகளைத் துடைத்துவிட்டு, மீண்டும் ஸ்டியரிங்கைப் பற்றினான். அவனது முகத்தில் இப்போது ஒரு திருப்தியான புன்னகை குடியேறியிருந்தது.
“வர்ற புதன்கிழமை அபிய பார்க்க உன்னை கூட்டிட்டு போறேன். செவ்வாய் கிழமை பாலாஜிகூட போய் நீ வாங்கணும்னு நினைக்கிறத எல்லாம் வாங்கிக்க…” என்று சொல்லவும், அவள் உடலில் புது ரத்தம் பாய்ந்தது போல் இருந்தது.
வேகவேகமாய் சம்மதம் என தலையாட்டினாள். நேராக ஃபேக்டரிக்கு வண்டியை விட்டான். ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தாலும், அவளது இதழ்கள் இன்னும் அவனது முத்தத்தின் வெப்பத்தைச் சுமந்து கொண்டிருந்தன.
சூர்யா காரை ஃபேக்டரியின் பிரம்மாண்டமான இரும்பு வாசலுக்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்தினான். வாட்ச்மேன் ஓடி வந்து கேட்டை திறந்து விட்டார். வழக்கமாக தன் வாகனத்தை நிறுத்தும் இடத்தில் காரை பார்க் செய்துவிட்டு அவளை ஆழமாகப் பார்த்தான். பூர்ணிமா எதுவும் பேசவில்லை. அவளது இதழ்கள் இன்னும் துடித்துக்கொண்டிருக்க, கண்கள் தரைப்பார்த்து நிலைகுத்தி நின்றன.
“நீ வெளிய வர வேண்டாம். காரிலேயே இரு… இதோ வந்துடுறேன்” என்று கறாராகச் சொன்னவன், அவளது பதிலுக்காகக் கூடக் காத்திராமல் கதவைத் திறந்து கொண்டு கீழே இறங்கினான்.
பூர்ணிமாவுக்கும் அப்போதைக்கு அந்த தனிமை தேவைப்பட்டது. வெட்கத்தில் சிவந்திருந்த முகத்தையும், ஈரம் படர்ந்த இதழையும் அழுத்தி துடைத்துக் கொண்டாள். இருந்தும் இதழோரம் அவன் எச்சில் ஒட்டிக்கொண்டே இருப்பது போன்ற உணர்வு உண்டாகி, அவள் தேகத்தை சிலிர்க்கச் செய்தது!
கண்ணாடியின் ஊடாக, முதுகை காட்டியபடி சென்று கொண்டிருந்த அவனைப் பார்த்தாள். அவன் நடந்து செல்லும் வேகத்திலும், ஒரு கம்பீரம் தெரிந்தது. அங்கிருந்த ஊழியர்கள் அவனைக் கண்டதும், ஓடோடி வந்து குனிந்து வணக்கம் வைத்தனர். அவன் யாரிடமும் புன்னகைக்கவில்லை என்றாலும், அவர்களின் குறைகளை விசாரித்தபடி வேகமாகத் தன் அலுவலக அறை நோக்கி நடந்தான்.
“பொறுக்கி, தன் தகுதிக்க ஏத்தபடி ஒரு நாளும் நடந்துக்க மாட்டேங்குறான்…” என்று உதட்டைச் சுழித்து புன்னகைத்தாள்.
சூர்யா விறுவிறுவென நடந்து தன் அறைக்குள் நுழைய, அவன் கையெழுத்து போட வேண்டிய முக்கியமான கோப்புகள் சில மேஜையில் தயாராக இருந்தன. மேனேஜர் லட்சுமணன் ஒவ்வொன்றாக எடுத்து நீட்ட, சூர்யா அவற்றை தீவிரமாக படித்துவிட்டு மின்னல் வேகத்தில் கையெழுத்துகளை இட்டு முடித்தான்.
அவன் கிளம்ப எத்தனித்த அந்த நேரம், அறையின் கதவு தடாலடியாகத் திறக்கப்பட்டது. அங்கிருந்த பாதுகாப்பையும் மீறி, முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண் உள்ளே நுழைந்தாள். பியூன் அவளை பிடித்து வெளியே இழுத்துச் செல்ல முயன்று கொண்டிருந்தான்.
மேனேஜர் லட்சுமணன், “ஏம்மா, பர்மிஷன் இல்லாம இப்படி உள்ள வர்றியே அறிவில்ல? வெளிய போம்மா, இல்லனா வேலையை விட்டு தூக்கிடுவோம்” என்று கோபமாக கத்தினான்.
“வேலையே போனாலும் பரவாயில்லனுதான் வந்திருக்கேன்…” என்றவள், அழுத விழிகளோடு சூர்யாவைப் பார்த்தாள்.
உடனே சூர்யா ஒரு சொடுக்கு போட்டான். அடுத்தநொடி பியூன் அவளை விட்டுவிட்டு வெளியே ஓடினான். அடி மேல் அடி வைத்து அந்த பெண் சூர்யாவை நெருங்க, மேனேஜருக்கு வியர்க்க ஆரம்பித்தது…
