ரசிகை – 12

ஆர்யா அந்த நேரம் தன் புது கேர்ள் ஃப்ரெண்ட்டோடு, ஒரு சினிமா தியேட்டரில் உல்லாசமாய் கொஞ்சி குலாவிக் கொண்டிருந்தான். காதலியின் பேச்சில் லயித்திருந்தவனுக்கு, தனுஜாவிடம் இருந்து போன் வந்ததும் எரிச்சலாக இருந்தது; துளியும் யோசிக்காமல் அழைப்பை நிராகரித்து விட்டு மீண்டும் கடலையைத் தொடர்ந்தான்.

ஆனால், அடுத்த நொடியே அவனது போன் அதிர்ந்தது. திரையில் ‘எமர்ஜென்சி’ என்ற ஒற்றை வார்த்தையாக தனுஜாவிடமிருந்து ஒரு மெசேஜ் வந்து விழுந்தது. இது தனுஜா அவனுக்கு அவ்வப்போது கொடுக்கும் அபாய எச்சரிக்கை! பிரச்சனை ஏதாவது வருகிறது என்றால், அவனுக்கு இப்படித்தான் அவனை அலெர்ட் செய்வாள். 

மெசேஜைப் பார்த்ததும் ஆர்யாவின் அடிவயிறு கலங்கியது. பதற்றத்துடன் உடனே அவள் நம்பருக்கு அழைப்பு விடுத்தான்.

“என்னாச்சு?” என்று மூச்சை அடக்கிக் கொண்டு கேட்டான்.

“உன் அண்ணன் இன்னும் ஒரு மணி நேரத்தில இங்க வர்றதா சொல்லி இருக்காரு.‌ நீ உடனே கிளம்பி வந்தா உன் உசுருக்கு சேதாரம் இல்லை. மரியாதையா பத்து நிமிஷத்துல வந்து சேரு…” என்று பயமுறுத்தினாள்.

“ஐயயோ!” என அடித்துப் பிடித்துக் கொண்டு எழுந்தான். அதில் அவன் கையில் வைத்திருந்த பெரிய பாப்கான் டப்பா உயரே பறந்து, அருகில் அமர்ந்திருந்த எல்லோர் தலையிலும் மழையாகக் கொட்டியது.

“டேய், அறிவு கெட்டவனே… கண்ணு தெரியலையா? எதுக்கு இப்படித் துள்ளிக்குதிக்கிற?” எனச் சுற்றியிருந்தவர்கள் ஆளாளுக்குத் திட்டிக் கொண்டிருக்க, அதையெல்லாம் காது கொடுத்துக் கேட்கும் நிலையில் ஆர்யா இல்லை. நான்கு கால் பாய்ச்சலில் தியேட்டரை விட்டு வெளியே ஓடினான்.

தனுஜா விடாமல் போனில், “நீ சீக்கிரம் வா ஆர்யா. அதுவரைக்கும் நான் உனக்காக நீ ரெடி பண்ண பழைய மாடல்ல இருந்து, ஃபேப்ரிக் எடுத்து கட் பண்ணி வைக்கிறேன். நீ வந்து தச்சிட்டு இங்கேயே இருந்த மாதிரி மேனேஜ் பண்ணிடு…” என்றாள்.

“தனு நீ சாதாரண பிறவி இல்லை. தெய்வப்பிறவி. எண்ணி பத்து நிமிஷத்துல நான் அங்க இருப்பேன். துணிய மட்டும் ஒன்னுக்கு ரெண்டு தடவை அளவு பார்த்துட்டு வெட்டு தாயே. என் உசுரு உன் கையில தான் இருக்கு!…” என்று கூறியபடி தன் பைக்கை உயிர்ப்பித்தான்.

அவன் சாலை விதிமுறைகளை எல்லாம் மீறி, தம் கட்டி அலுவலகம் வந்து சேர, அதே நேரம் சூர்யாவும் முன்னறிவிப்பு ஏதுமின்றி அங்கு வந்துவிட்டான். 

தன் தம்பியின் கலைந்த தலையையும், பதற்றமான முகத்தையும் பார்த்த மாத்திரத்திலேயே சூர்யாவுக்குப் பாதி விஷயம் விளங்கிவிட்டது. அவனோடு பேசினாலே நேரம் வீண்! என்று அவனுடைய அண்ணனுக்கு தெரியாதா? அறிவுரை சொல்லித் தன் நேரத்தை வீணடிக்க விரும்பாமல், அவனை ஒரு அலட்சியமான பார்வை பார்த்துவிட்டு விறுவிறுவெனத் தனுஜாவின் கேபின் நோக்கி நடந்தான் சூர்யா.

உள்ளே பூர்ணிமா அபிக்காகத் துணிகளை வெட்டி வைத்திருக்க, சூர்யா திடீரென உள்ளே நுழைந்தான். அவன் வருகையைச் சற்றும் எதிர்பார்க்காத தனுஜாவுக்கு உடல் முழுக்க மின்சாரம் பாய்ந்தது போலானது; கையும் களவுமாக மாட்டிக் கொண்ட பயத்தில் அப்படியே சிலையாக இறுகிப் போய் நின்றாள்.

பூர்ணிமாவோ பதற்றத்தில் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், மேஜை மேல் இருந்த துணிகளைத் தன் உடலால் மறைத்துக் கொண்டு திருதிருவென விழித்தாள். ஆனால் சூர்யாவின் கழுகுப் பார்வையில் இருந்து எதையும் மறைக்க முடியாது. சிதறிக் கிடந்த அந்தச் சின்னஞ்சிறு துணித் துண்டுகளைப் பார்த்ததுமே அவனுக்கு எல்லாம் புரிந்து விட்டது; அது அபியின் அளவுக்கான உடை என்பதும், கம்பெனி துணியில் அது தயாராகிறது என்பதும் அவனுக்குத் தெளிவாக தெரிந்தது.

இருந்தும் அவன் ஆவேசப்படவில்லை. எதுவும் பேசாமல் தனக்கு ஒரு நாற்காலியைச் சாவகாசமாக இழுத்துப் போட்டுக் கொண்டு, அவர்களின் எதிரிலேயே அமர்ந்தான். அவனது அந்த அமைதிதான் அங்கே நிலவிய பதற்றத்தை விடக் கொடூரமானதாக இருந்தது.

“என்னென்ன வேலைகள் இப்போ முடிஞ்சிருக்கு?” என்று தனுஜாவிடம் அவன் அதிகாரமாகக் கேட்க, அவளுக்கோ பயத்தில் உதடுகள் தந்தி அடித்தன. வார்த்தைகள் வராமல் அவள் திணறுவதைப் பார்த்த சூர்யாவுக்கு, இவள் இன்றைக்குள் பதில் சொல்ல மாட்டாள் என்பது புரிந்து போனது.

அவனது பார்வை மெல்லப் பூர்ணிமா பக்கம் திரும்பியது. அவள் சுதாரித்துக் கொண்டு, இதுவரை முடித்த வேலைகளைப் பற்றிப் பட்டியலிட்டாள். எவ்விதக் குறுக்கீடும் இன்றி, ஒரு சிறு தலையசைப்போடு அவள் சொன்ன அத்தனையையும் கேட்டுக் கொண்டிருந்தான் சூர்யா. அவன் வழக்கத்திற்கு மாறாகக் கொஞ்சம் சகஜமாக இருந்ததைப் பார்த்ததும், தனுஜாவுக்குப் போன உயிர் திரும்ப வந்தது போல ஒரு நிம்மதி ஏற்பட்டது.

“சரி, நான் போய் மத்த வேலைகளைக் கவனிக்கிறேன்…” என்று சூர்யா இருக்கையை விட்டு எழ முயல,

தனுஜா, “சார், புது மாடல் டிரஸ்க்கு என்ன பெயர் வைக்கிறதுன்னு நீங்க சொல்லவே இல்லையே?” என்று கேட்டாள். 

பூர்ணிமாவின் முகத்தை ஊடுருவிப் பார்ப்பது போல அழுத்தமாகப் பார்த்துக் கொண்டே, “அப்சரா!” என்றான் ஒற்றை வார்த்தையில்.

அதுவரை அவளுள் இருந்த தன்னம்பிக்கை தைரியம் அத்தனையும், அந்த நொடி வடிந்து போனது. மனதில் அன்றைய நினைவுகள் அனைத்தும் புயலாய் கிளம்பி, அவள் மனதினை பூகம்பமாய் உலுக்கி தள்ளியது. 

கத்தியின்றி, ரத்தமின்றி, ஏன் ஒரு கடும் சொல் கூட இன்றி, அந்தப் பெயரின் மூலம் அவளை மொத்தமாக நிலைகுலையச் செய்துவிட்டான் சூர்யா. அவளது ரத்தமெல்லாம் ஒரு நிமிடம் வற்றிப் போனது போலத் தோன்றியது. அதற்கு மேல் அவளால் ஒரு நூலைக் கூடக் கோர்க்க முடியவில்லை; துணியைத் தைக்க முடியும் என்ற நம்பிக்கையே அவளுக்கு அற்றுப் போனது.

மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்த பூர்ணிமா, தையல் வேலையை அப்படியே நிறுத்திவிட்டுத் துணிகளை எடுத்து ஒரு ஓரமாக வைத்துவிட்டாள்.

 

“என்னாச்சு அண்ணி?” என்று தனுஜா கேட்க, 

“ஒண்ணுமில்ல. லேசா தலை வலிக்குது. நான் போய் ஒரு காஃபி குடிச்சுட்டு வர்றேன்” என்று நகரந்தவள், “சாரி தனு. என்னாலதான் உனக்கும் சேர்த்து கெட்ட பேரு…” என்று மன்னிப்பு கேட்டாள்.

“அதெல்லாம் எதுக்கு? அவருட்ட ஆர்யாவால மாசத்து ஒரு தடவை ஏதாவது ஒரு பிரச்சனையில மாட்டுவேன். அதோட கம்பேர் பண்ணும் போது இன்னிக்கி நடந்ததெல்லாம் ஒண்ணுமே இல்ல. அவரு என்னை ஒரு வார்த்தை கூட சொல்லலியே. விடுங்க… நீங்க மனச போட்டு உளப்பிக்காம காஃபி குடிச்சிட்டு வந்து வேலையை பாருங்க…” என்று சமாதானப்படுத்த முயன்றாள்.

“இல்ல, நான் என்னோட நிலமைய‌ புரிஞ்சு நடந்திருக்கணும். என்னோட அதிக பிரசங்கித்தனம் தான் எல்லாத்துக்கும் காரணம். இனியாச்சும் கொஞ்சம் பொறுப்பா இருக்க பாக்குறேன்” என்று கூறிவிட்டு காஃபி மெஷின் இருக்கும் இடம் நோக்கி நடந்தாள்.

மனபாரத்தைத் தாங்க முடியாமல், இயந்திரத்தனமாகக் காபி மெஷினில் காபியை எடுத்துக்கொண்டு ஒரு ஜன்னல் ஓரமாகச் சென்று நின்றாள் பூர்ணி. ஜன்னலுக்கு வெளியே தெரியும் வெறிச்சோடிய சாலையைப் பார்த்தபடி நின்றிருந்தவளின் கண்களில் கண்ணீர் முட்டியது. 

அப்போது, அதிகப்படியான நறுமணமும், ஹீல்ஸ் செருப்பின் டொக் டொக் சத்தமும் அவளை நெருங்கி வந்து கொண்டிருந்தது. யோசனையோடு திரும்பி பார்க்க, மாடன் உடையில், திமிரோடு அவளை நெருங்கி நின்று வந்திருந்தாள் அப்சரா.

அவள் முகம் பார்த்ததும் பூர்ணிமாவுக்கு அதுவரை மனதில் இருந்த கொஞ்ச நஞ்சத் தேறுதலும் அப்படியே தொலைந்து போனது. நிஜமாகவே அவள் தன் முன்னால் வந்து நிற்பதை அவளால் நம்ப முடியவில்லை.

“எம்டி ரூம் எங்க இருக்கு?” என்று பூர்ணிமாவிடம் கேட்க வந்தவள், அவளது முகம் பார்த்ததும் சட்டென அடையாளம் கண்டு அப்படியே நின்றாள்.

“ஏய், நீதான அன்னைக்கு அவன் கூட ஹோட்டலுக்கு வந்தது? இங்கதான் வேலை பார்க்கிறயா நீ?” என்று ஒருவித ஏளனத்துடன் சீண்டினாள் அப்சரா.

பூர்ணிமா பதில் ஏதும் சொல்லாமல், அவளது கண்களை எதிர்கொள்ளும் தைரியமின்றித் தலை குனிந்து கொண்டாள். அவளது மௌனம் அப்சராவிற்கு இன்னும் உற்சாகத்தைக் கொடுத்தது.

“அன்னைக்கு என் அண்ணன்கிட்ட ஏதோ சொன்னியாமே?” என்று அப்சரா கேட்டவுடன், பூர்ணிமாவின் மனமெங்கும் ஒரு கிலி கவ்வியது.

“அவன் உன் மேல கொலவெறியில் இருக்கான். ஒரு வாய்ப்பு மட்டும் கிடைக்கட்டும். உன்னை ஒரு வழி பண்ணிடுவான்… பார்த்து இருந்துக்கோ!” என்று அவளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பொழுதே, தூரத்தில் சூர்யா வருவது அப்சராவின் கண்ணில் பட்டது.

அடுத்த கணம், “பேபி…” என்று சத்தமாக அழைத்துக் கொண்டே சூர்யாவை நோக்கித் துள்ளி ஓடினாள்.

சுற்றியும் அலுவலகப் பணியாளர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள் என்பதைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல், குரங்கு போல அவன் தோளில் தொத்திக் கொண்டாள் அப்சரா. சூர்யாவின் முகத்தில் அவள் செயலுக்கு எந்த எதிர்ப்பும் இருப்பது போல தெரியவில்லை.

“ஒரு வாரமா என்னை பார்க்க வராம போக்கு காட்டிட்டு இருக்க நீ? ஏன் பேபி… இப்படி பண்ற?” என்று செல்லமாக அவனோடு சண்டை போட்டாள்.

“ரீசன் இல்லாம நான் அப்படி பண்ணுவேனா? உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு…” என்றவன், அவளைத் தன்னுடைய அறைக்குள் கூட்டிச் சென்றான்.

அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு அவர்கள் இருவரும் அறையை விட்டு வெளியே வரவே இல்லை. உள்ளே என்ன நடக்கும் என்று பிறர் சொல்லி தெரிய வேண்டுமா? பூர்ணிமா மொத்தமாக சோர்ந்து விட்டாள். 

இறுதியில் கதவு திறக்கப்பட்டு வெளியே வந்த அப்சரா, உள்ளே சென்றபோது அணிந்திருந்த உடையை விடுத்து, முற்றிலும் வேறொரு உடையில் இருந்தாள்.

“வாவ், எனக்கு கரெக்ட்டா ஃபிட் ஆகுது இந்த டிரஸ்! நிஜமாவே இது எனக்காகவே டிசைன் பண்ணது போல இருக்கு” என்று பகட்டு காட்டினாள்.

அது சூர்யாவின் ஏழுசெட் உடைகளுக்கும், பூர்ணா உருவாக்கிய பேர் (pair) டிரஸில் ஒன்று. இன்னமும் மார்க்கெட்டுக்கு வராத அந்தப் புது டிசைனிலான ஆடையை அணிந்திருந்தபடி ஒய்யாரமாக நடந்தாள் அவள். 

தன்னை அவனுக்கு துணையாகக் கருதி உடைகளை உருவாக்கியிருந்த பூர்ணாவுக்கு, அதை அப்சரா அணிந்திருப்பது கண்டதும் மனதில் சுருக்கென தைத்தது. கூடவே தன் நிலை தரைக்கு கீழே பள்ளமாய் இறங்கிவிட்டது போலவும் மனது வலித்தது. 

இனியும் அவர்களை பார்க்க பிடிக்காமல் அங்கிருந்து நகர முயல, அவனது அதட்டலான குரல் அவளைத் தடுத்தது.

“ஏய்…” என்று சத்தம் கொடுத்து அழைத்தான் சூர்யா. 

தப்பி ஓடச்சொல்லும் கால்களை சிரமப்பட்டு இழுத்துக் கொண்டு அவன் முன்னால் போய் நின்றாள்.

“நான் வெளில போறேன். வர்றதுக்குள்ள…” எனும் முன்,

“உங்களோட ரூமை சுத்தம் பண்ணி வைக்கணும். அதான சார்?” என்றாள் விழிகளில் வழியத் துடித்த கண்ணீரை அடக்கிக் கொண்டு.

“பரவால்ல… உனக்கு கற்பூர புத்தி தான்! சொல்ல முன்னையே கப்புனு பிடிச்சுக்குற…” என்று நக்கலாகச் சிரித்து விட்டு சென்றான். 

‘எனில், நம்பிக்கை தருவது போல அன்று அவன் பேசியது, செய்தது எல்லாமே நடிப்பா? என் உணர்வுகளோடு விளையாட அவனுக்கேன் அத்தனை ஆசை? நானே விட்டுட்டு விலகித்தானே இருந்தேன். எதற்காக என்னைத்தேடிப் பிடித்து கூட்டி வந்து புதுப்புதுப் பிரச்சனைகளை தருகிறான்?’ என்று மனதுக்குள் புலம்பத்தான் முடிந்தது பூர்ணிமாவால்.

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page