ரசிகை – 13

அன்று செவ்வாய்க்கிழமை… அடுத்தநாள் புதன்கிழமை அபியின் பிறந்தநாள். அதற்காகத்தான், பூர்ணிமா அபியை சந்திக்கவும் பரிசு பொருட்கள் வாங்கவும் சம்மதம் சொல்லி இருந்தான் சூர்யா. அவளைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்காகப் பாலாஜி தனது காரை எடுத்துக்கொண்டு வந்திருந்தான்.

“அஞ்சு நிமிஷத்துல கீழ வந்திடுறேன் பாலாஜி! நீ உட்காரு…” என்று மேலிருந்து குரல் கொடுத்தவள், சொன்னதற்கு மாறாகக் கொஞ்சம் பொறுமையாகவே தயாராகினாள். பாலாஜிக்கு அது விசித்திரமாகத் தெரிந்தது.

‘எப்போதும் சொன்ன நேரத்திற்கு முன்பாக வேலையை முடிக்கும் பூர்ணிமா இன்று ஏன் இவ்வளவு தாமதம் செய்கிறாள்?’ என்று அவன் யோசித்துக் கொண்டிருந்தான். 

அதற்கான காரணம் அடுத்த மூன்று நிமிடத்தில் அவனுக்குப் புரிந்தது.

“டடான்… நான் வந்துட்டேன்!” என்று அறிவிப்பு கொடுத்தபடி, துள்ளி குதித்து ஓடி வந்தாள் தனுஜா. பாலாஜிக்குச் சுருக்கென்றிருந்தது.

அவன் உணர்வுகளை பற்றி கவலைப்படாமல், பட்டாம்பூச்சி போலப் பறந்து வந்து பூர்ணிமாவின் கைகளைப் பற்றிக்கொண்டாள்.

‘இவளை ஏன் அழைத்தாய்?’ என்பது போல ஒரு கூர்மையான பார்வையைப் பூர்ணிமாவின் மீது வீசினான் அவன்.

“அது வந்து பாலாஜி… எனக்குப் பெருசா ஷாப்பிங் எக்ஸ்பீரியன்ஸ் இல்ல. கம்மல், செயின், வளையல்ல எது ட்ரெண்டிங்ல இருக்குனு எனக்குத் தெரியாது. தனுஜா கூட இருந்தா உதவி செய்வான்னுதான் அவளைக் கூப்பிட்டேன்…” என்று வார்த்தைகளைத் தேடிச் சிரமப்பட்டுச் சமாளித்தாள்.

அவன் மேற்கொண்டு பேசாத படி தனுஜா அவன் சட்டையை பிடித்துக் கொண்டாள்.

“என்ன அத்தான்? எதுக்கு அண்ணிய மிரட்டுறீங்க? நான் கூட வர்றதுனால உங்களுக்கு என்ன குறைஞ்சிட போகுது?” என்று எகிற,

“தேவையில்லாத டிஸ்டர்பன்ஸ யார் தான் விரும்புவாங்க?” என முகத்தை கடுகடுவென்று வைத்துக் கொண்டு கூறினான். 

அவன் வார்த்தைகளால் பூரணிக்கு தான் சங்கடமாக இருந்தது. தனுஜா அதைப் பற்றி துளியும் வருத்தப்பட்டதாக தெரியவில்லை. 

“ரொம்ப டிஸ்டர்ப் பண்றேனோ?” என்று ஒரு மார்க்கமான குரலில் கேட்டாள்.

அவள் காட்டிய அதீத குழைவில், இவன் இழுத்துப் பிடித்து வைத்திருந்த இறுக்கமெல்லாம் சட்டென சறிவது போல் இருந்தது. ஓரவிழியால் ஒருமுறை அவள் முகம் பார்த்தான். 

சின்னஞ்சிறு பூனை குட்டி போல கண்களை சிமிட்டி செல்லம் கொஞ்சினாள். பாலாஜி தன் உள்ளுக்குள் ஒளித்து வைத்திருந்த காதல் பீரிட்டு வெளியே வர துடித்தது. 

அடுத்த நொடியே சுதாரித்து கொண்டவன், “சீக்கிரம் ரெடியாகி வெளியில வாங்க. நான் கார்ல வெயிட் பண்றேன்” என்று கூறிவிட்டு தப்பித்து ஓடினான். 

“ஹா… ஹா… அத்தான் அவுட்டு!” என்று வாய்விட்டு சிரித்தாள் தனுஜா.

அதுவரை அவர்கள் விளையாட்டை அமைதியாக தூர நின்று பார்த்துக் கொண்டிருந்த பூர்ணி, “ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சிருக்குல? அப்புறம் ஏன் அவன் உன்னை விட்டு விலகி போறான்?” என்று தயக்கத்தோடு தனுஜாவிடம் கேட்டாள். 

“எனக்கும் அதுதான் புரியல அண்ணி. நானும் எப்படி எல்லாமோ சுத்தி வளச்சு கேட்டு பாத்துட்டேன். ம்ஹூம், வாய திறக்க மாட்டேங்கிறான்…” என்று தோள்களைக் குலுக்கினாள். 

பூரணிக்கு பாலாஜியின் செயல் இன்னும் விசித்திரமாக தெரிந்தது. பாலாஜி காரில் ஏறி உட்கார்ந்த பிறகும் அவன் மனது அடங்கவே இல்லை. தனுஜாவின் அந்தப் பார்வை அவனை வண்டாய் குடைந்தது.

“சீக்கிரம் வாங்க… டைம் ஆகுது” என்று ஹார்ன் அடிக்க, பூர்ணியும் தனுஜாவும் ஓடி வந்து காரில் ஏறிக்கொண்டனர். ஷாப்பிங் மால் வந்து சேர்ந்ததும், தனுஜாவுக்கு ஏகப்பட்ட குஷி. 

“அண்ணி, அபிக்கு இந்த கலர் டிரஸ் சூப்பரா இருக்கும் பாருங்க… அத்தான், அந்த பொம்மையை எடுங்க!” என்று அந்த இடத்தையே அதகளம் செய்தாள். அவள் காட்டிய பலவற்றில், சிலவற்றை மட்டும் வாங்கிக்கொண்டாள் பூர்ணி. ஆனாலும் அவள் நினைத்த உடையை தைத்துக் கொடுக்க முடியவில்லை என்ற வருத்தம் மனதில் ஓரம் இருக்கத்தான் செய்தது.

“ஏழாயிரம் தான் செலவு பண்ணி இருக்க. மீதம் தொன்னுத்தி மூணாயிரம் இருக்கு. ஒரு தங்க செயினோ மோதிரமோ வாங்க வேண்டியதுதானே?” என்று பாலாஜி கேட்டதற்கு, 

“அவ மனசுல இன்னும் அஞ்சு வயசு குழந்தை. காஸ்ட்லியான பொருள் எல்லாம் போட்டா, பிள்ளைக்கு பாதுகாப்பா இருக்காது…” என்று கூற, அவன் மனது அதை குறிப்பெடுத்துக் கொண்டது.

பூர்ணியின் ஒரு கண் அபிக்காக பொருட்களைப் பார்த்துக் கொண்டே இருந்தாலும், இன்னொரு கண் அடிக்கடி பாலாஜியைத்தான் கவனித்தது. தனுஜா எப்போதெல்லாம் பாலாஜியைத் தொட்டுப் பேசுறாளோ, அப்போதெல்லாம் அவன் முகம் ஒரு நொடி பரவசமாக மாறுவதை பூர்ணி உணர்ந்து கொண்டாள். தன் காதலை மறைக்க அவன் ஏன் இத்தனை தவிக்கிறான் என அவளுக்குப் புரியவில்லை.

அடி மனதில் ஆசை இருந்தும், எந்நேரமும் தனுஜாவோடு மல்லுக்கட்டிக்கொண்டு இருப்பதை நினைத்து வருந்திய பூர்ணிமா, அவர்களுக்குள் ஒரு சின்ன நெருக்கத்தை உண்டாக்க நினைத்தாள்.

“தனு, ரொம்ப தாகமா இருக்கு. ரெண்டு பேரும் போய் ஜூஸ் ஏதாவது வாங்கிட்டு வாங்களேன். குடிச்சுட்டே ஷாப்பிங் பண்ணுவோம்” என்று கேட்க, தனுஜாவுக்கும் தன் வயிற்றின் ஞாபகம் வந்துவிட்டது! 

“ஆமால்ல, நான் ரெண்டு மணி நேரமா எதுவுமே சாப்பிடல. வாங்க அத்தான், உடனே எதையாவது வாங்குவோம்” என்று அவனை இழுத்துக்கொண்டு ஓடினாள்.

அவர்கள் சென்றதும் தனியாக நடந்தபடி ஒவ்வொரு கடையாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவள், ஒரு பொருளைப் பார்த்ததும் சட்டென நின்றாள். அதைப் பார்த்ததும் அவளுக்குச் சூர்யாவின் ஞாபகம் தான் வந்தது.

காஃபி நிறத்தில், சின்னஞ்சிறு கற்கள் பதிக்கப்பட்ட அழகிய வாட்ச் ஒன்று அவளைப் பார்த்து சிரிக்க, ஆசையோடு அதை தன் கையில் எடுத்தாள். பார்ப்பதற்கே மிகவும் கம்பீரமாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. சூர்யாவின் கைகளில் இது இன்னும் அழகாகப் பொருந்தும் என்று அவளுக்குத் தோன்றியது.

அந்த அப்சராவுடன் நேற்று வெளியே கிளம்பியவன், இந்த நொடி வரை வீடு வந்து சேரவில்லை. எப்போது திரும்புவான் என்றும் தெரியவில்லை! இப்படி எல்லாம் உறவாட வேண்டாம் என்று அறிவு சொன்னாலும், வேண்டும் என்று மனது சொன்னது. 

அவனுக்காக இதை ரகசியமாக வாங்கிச் செல்லலாம் என்று நினைத்து கையில் எடுக்க, ஒரு கை வெடுக்கென அதை அவளிடம் இருந்து பறித்தது. யாரென்று திரும்பி பார்த்தாள். அங்கே காவ்யாவும் திவ்யாவும் நின்று கொண்டிருந்தனர். பூர்ணிமாவின் பெரியப்பா மகள்கள்!

“இந்த வாட்ச் நான் செலக்ட் பண்ணது. நீ எதுக்கு எடுத்த?” என்று வழக்கம் போலத் தன் அதிகாரத்தைத் தொடங்கினாள் காவ்யா. 

பூர்ணிமா எதை எடுத்தாலும் அதைப் பிடுங்கிக்கொள்வது இவளுக்குப் பழக்கம்தான். ஆனால், சூர்யாவுக்காகத் அவள் ஆசையோடு தேர்ந்தெடுத்த முதல் பொருள் இது. இதை விட்டுக் கொடுக்க அவள் மனம் துளியும் ஒப்பவில்லை.

“நான் அரை மணி நேரமா இந்த இடத்துல தான் இருக்கேன் காவ்யா. இந்த வாட்ச் யார் கையும் படாம இங்கதான் இருந்தது. எனக்குப் பிடிச்சிருக்குன்னு தெரிஞ்சதும் உடனே உனக்கு மூக்கு வேர்த்துடுச்சுல?” என்று கொஞ்சம் கோபமாகவே பேசிய பூர்ணி, அவள் கையில் இருந்த கடிகாரத்தைத் திருப்பித் தரும்படி கையை நீட்டினாள்.

காவ்யாவின் முகம் ஆத்திரத்தில் சிவந்தது…

“இந்த அநாதை கழுதைக்கு பேச்சைப் பார்த்தியா திவ்யா? அடுத்தவங்க பொருளுக்கு ஆசைப்படுறதையே வேலையா வச்சிருக்கா…” என்று தன் தங்கையிடம் அவதூறு பேச, திவ்யாவும் ஆமாம் சாமி போட்டாள்.

“தேவையில்லாம பேசாத காவ்யா. மரியாதையா வாட்சை கொடுத்திடு” என்றாள் பூர்ணி எச்சரிக்கையாக.

“நீதான்டி தேவையில்லாம அதிகப்பிரசங்கித்தனம் பண்ற. அதுசரி, பெத்தவங்க சரியா இருந்தா தானே புள்ளைங்க சரியா இருக்கும்? ரெண்டு பிள்ளைகளைப் பெத்துட்டு வெட்கமே இல்லாம இன்னொருத்தன்கூட ஓடிப்போனவதான உங்கம்மா? நீ ஒரு முழு லூசு, உன்கூட பொறந்தவ ஒரு அரை லூசு. உங்களுக்கு எதுக்குடி இவ்வளவு பந்தா?” என்று காவ்யா சொல்லி முடிக்கும் முன்பாக, அவள் கன்னத்தில் பளாரென விழுந்தது ஒரு அறை.

 

அவளை அறைந்த பூர்ணிமாவின் கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன.

“இன்னொரு வார்த்தை என் தங்கச்சியைப் பத்தி பேசின… அவ்வளவுதான், கொன்றுவேன்…” என்று ருத்ர தாண்டவம் ஆடினாள்.

அவள் கண்களில் தெறித்த அந்த ஆவேசத்தைக் கண்டு ஒரு நொடி காவ்யா மிரண்டு போனாள். அக்கா அடி வாங்கியதைப் பார்த்ததும் திவ்யாவின் கோபம் கட்டுக்கடங்காமல் போனது.

“அவ்ளோ திமிராயிடுச்சா உனக்கு?” என்று கத்தியவள், காவ்யாவின் கையில் இருந்த அந்தக் கடிகாரத்தைப் பிடுங்கி ஓங்கித் தரையில் வீசி அடித்தாள். அடுத்த நொடி, பூர்ணிமா ஆசை ஆசையாகப் பார்த்த அந்த அழகான வாட்ச் சல்லி சல்லியாக நொறுங்கிச் சிதறியது.

“இப்ப எல்லாத்தையும் வழிச்சு எடுத்துக்க…” 

அக்கினி கண்களோடு அவளை முறைத்தவள், பளாரென அவள் கன்னத்திலும் ஒன்று வைத்தாள். திவ்யாவும் சாதாரண ஆள் இல்லை. அடி வாங்கிய அடுத்த நொடி, பூர்ணியை பிடித்து இழுத்து அந்த உடைந்து சிதறிக் கிடந்த வாட்ச் மீதே பலமாகத் தள்ளிவிட்டாள்.

பூர்ணிமா நிலைதடுமாறித் தரையில் விழ, உடைந்த அந்தப் பாகங்களும், கூர்மையான கண்ணாடிகளும் அவளது கைகளிலும் கால்களிலும் குத்தி கிழித்தன.

அடுத்த நொடி அந்த கடையில் இருந்த ஊழியர்களும், பொதுமக்களும் பதறியபடி ஓடி வந்தனர். ஆனால் ஆங்காரத்தில் கத்தித் தீர்த்த திவ்யாவை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. 

“சாவுடி, நீயெல்லாம் எதுக்கு உசுரோட இருக்க?” பித்தம் தலைக்கேறி, கண்கள் சிவக்கப் பைத்தியம் பிடித்தவள் போலக் கத்தினாள். 

“என் அக்காவுக்கு பார்த்த மாப்பிள்ளைய முந்தி விரிச்சு உன் பக்கம் இழுத்துட்டு, வெக்கமே இல்லாம இப்ப இன்னொருத்தனோட வீட்ல போய் உட்கார்ந்துகிட்ட‌. உங்கம்மா உனக்கு ஆம்பளைங்கள வசியம் செய்யிற வித்தைய நல்லாத்தான் சொல்லிக் கொடுத்திருக்கிறா.”

சுற்றியிருந்தவர்கள் அவளது வசவுச் சொற்களைக் கேட்டு அப்படியே அதிர்ந்து போய் நின்றார்கள். உண்மை தெரியாத அந்த ஜனங்களுக்குத் திவ்யாவின் பேச்சில் இருந்த நஞ்சு புரியவில்லை.

“உங்கம்மாவாது ரெண்டோட நிறுத்தினா. நீ எத்தனை பேர் வாழ்க்கையை சீரழிக்க போறியோ… த்தூ…”

அவள் பேசியதெல்லாம் கேட்டு மற்றவர்கள், பூர்ணியைத்தான் தவறாக பார்த்தனர். ஒரு சிலர் தங்கள் செல்போன்களை எடுத்து அந்த அவலத்தை வீடியோ எடுக்க ஆரம்பிக்க, பூர்ணிமாவுக்குப் பூமி பிளக்காதா, அதற்குள் புதைந்து போகமாட்டோமா என்று இருந்தது. அந்த இடமே அவளுக்கு நரகமாகத் தோன்றியது; அவமானத்தில் அப்படியே கூனிக் குறுகிப் போனாள்.

திவ்யாவுக்கு ஆட்கள் கூடுவதை கண்டு பதற்றம் அதிகமானது.

“போதும்டி, அவளுக்கு சரிக்கு சமமா நாம நிக்கக் கூடாது. சாக்கடை மேல கல் எறிஞ்சா நமக்குதான் அசிங்கம். வா போகலாம்…” என்று தன் தங்கையை இழுத்துக் கொண்டு சென்றுவிட்டாள். 

உடைந்த கண்ணாடிச் சில்லுகளுக்கு நடுவே, ரத்தம் சொட்டச் சொட்டப் பூர்ணிமா தட்டுத்தடுமாறி எழுந்து நின்ற அந்த நேரம், தனுஜாவும் பாலாஜியும் கையில் ஜூஸோடு அங்கே வந்து சேர்ந்தனர். சிதறிக் கிடக்கும் கண்ணாடிகளையும், சிதைந்து கிடக்கும் பூர்ணிமாவையும் கண்டதும் அவர்களுக்குத் தூக்கி வாரிப் போட்டது.

பதறிப் போன தனுஜா, தன் கையில் இருந்த ஜூஸ் பாட்டிலைக் கீழே போட்டுவிட்டு, ஓடிவந்து ரத்த வெள்ளத்தில் நின்ற பூர்ணிமாவைத் தாங்கிப் பிடித்தாள். 

“அண்ணி… என்னாச்சு அண்ணி? யாரு இப்படிப் பண்ணது?” என்று தனுஜா கத்த, பூர்ணிமாவுக்கு பேசக் கூடத் தெம்பில்லை.

பாலாஜி ஒரு நொடி கூடத் தாமதிக்காமல், இருவரையும் காரில் ஏற்றிக்கொண்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு விரைந்தான். அங்கே அவசர சிகிச்சைப் பிரிவில் பூர்ணிமா அனுமதிக்கப்பட்டாள். உடலில் குத்தியிருந்த கண்ணாடித் துகள்களை ஒவ்வொன்றாக அகற்றி, காயங்களைச் சுத்தம் செய்து, கட்டுப் போடுவதற்குள் ஒரு மணி நேரம் ஆனது.

அந்த நேரத்தில் அவன் ஷாப்பிங் மாலில் பேசி பிரச்சனை சம்பந்தப்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை வாங்கி விட்டான். அதை பார்த்த பிறகு, அவன் மனது உலைக்கலமாக மாறிப்போனது. அறையின் வாசலில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த பாலாஜிக்கு, கோபம் மொத்தமும் தனுஜா மீது திரும்பியது. 

‘இவள் மட்டும் அடம் பிடித்து உடன் வராமல் இருந்திருந்தால், பூர்ணிமாவைத் தனியாக விட்டுவிட்டு ஜூஸ் வாங்கச் சென்றிருக்க மாட்டோமே! இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்காதே!’ என்று அவன் உள்ளம் கொதித்தது.

‘இப்போது சூர்யாவுக்கு என்ன பதில் சொல்வது? அவனுக்கு விஷயம் தெரிந்தால் வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பானே… எப்படி இந்த பிரச்சினையை சமாளிக்க போகிறேன்?’ என்று தெரியாமல் தலையைப் பிய்த்துக் கொண்டான். 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page