வெளியூரில் வேலையை முடித்துவிட்டு ஒரு மணி நேரம் முன்புதான் வீட்டிற்குத் திரும்பி இருந்தான் சூர்யா. ஏற்கனவே களைப்பில் இருந்தவன், கை கால்களில் கட்டுக்களோடு ஒரு மூலையில் ஒடுங்கி அமர்ந்திருந்த பூர்ணிமாவைப் பார்த்ததும் நிலைகுலைந்து போனான். அவனது முக பாவனைகள் கணநேரத்தில் கடும் கோபத்திற்கு மாறியது.
“என்ன? புதுசா ஏதோ வேஷம் கட்டியிருக்க?” என்று அவளை முறைத்துக் கொண்டே கேட்டான்.
அவன் முகத்தில் இருந்த ஆவேசத்தைக் கண்டு அஞ்சியவள், “அது… ஷாப்பிங் போன இடத்தில தெரியாம…” என்று இழுக்க, அதற்கு மேல் அவனும் அவளைப் பேச விடவில்லை.
‘பேசாதே, நிறுத்து!’ என்பது போல கையை தூக்கி காட்டி இருந்தான்.
அவனது கூர்மையான பார்வை ஓரமாகத் தலைகுனிந்து நின்ற பாலாஜியை நோக்கி நகர்ந்தது. சூர்யாவின் ஒற்றைப் பார்வையின் அர்த்தம் புரிந்த பாலாஜி, அடுத்த நொடியே தன் செல்போனை எடுத்து, ஷாப்பிங் மாலில் நடந்த சிசிடிவி வீடியோ ஆதாரத்தைச் சூர்யாவின் வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பி வைத்தான். சூர்யா தன் போனை எடுத்து அந்த வீடியோவைப் பார்க்கக்கூட இல்லை. ஆனால், அந்த வேலையை யார் செய்திருப்பார்கள் என்பதை அவனது கற்பூர புத்தி எளிதாகக் கணித்துவிட்டது.
பூர்ணிமா, “இங்க பாருங்க… அவங்களுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லைன்னு ஆயிடுச்சு. இதுக்கு அப்புறம் எதுக்காக அவங்க பேச்சை எடுக்கணும். விட்ரலாம் சூர்யா… ப்ளீஸ்…” என்று உறுதியாக கூறினாள்.
சூர்யா பதில் ஏதும் பேசாமல், அவளது முகத்தை ஊடுருவிப் பார்த்துக் கொண்டே இருந்தான். முத்து – காவ்யா திருமணத்தில் எந்தப் பிரச்சனையும் வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் அவள் இத்தனை தூரம் இறங்கிப் போகிறாள்; தன்மானத்தை இழந்தும் மௌனம் காக்கிறாள் என்று தெரியாத அளவிற்கு அவன் ஒன்றும் சிறு பிள்ளை இல்லை. அவள் மனவோட்டத்தைப் புரிந்துகொண்டவன், இதழ் சுளித்து சிரித்தான்!
இவளுக்கோ அந்த நொடியே இருதயத்தின் வேகம் பத்து மடங்கு அதிகமானது.
‘கண்டிப்பா ஏதோ பெருசா நடக்க போகுது!’ என்று அவள் மனசாட்சியே அவளை அச்சுறுத்த ஆரம்பித்துவிட்டது.
சரியாக அதே நேரம் உள்ளே நுழைந்த வேலைக்காரன், “ஐயா, முத்துனு ஒருத்தர் உங்கள பாக்குறதுக்கு வந்துருக்காரு. உள்ள வர சொல்லட்டுங்களா?” என்று கேட்டுக் கொண்டே வந்து நின்றான்.
பூர்ணிமாவுக்கு இருதயம் வெளியே குதித்து வராதது ஒன்றுதான் குறை. ஏதாவது சொல்லி சூர்யாவை தடுத்து நிறுத்தலாம் என்று நினைத்து வாயெடுத்தாள்.
அதற்குள் அவன், “நீ என் ரூமுக்கு போ… என் பர்மிஷன் இல்லாம ஒரு அடி வெளிய வந்த…” என்றவன், மிச்ச வார்த்தைகளைச் சொல்லவே இல்லை. ஆனால் அவன் கண்களில் தெரிந்த அந்தத் தீவிரம், ‘மீறினால் விளைவு மோசமாக இருக்கும்’ என்பதை அவளுக்குத் தெளிவுபடுத்தியது.
எச்சில் விழுங்கியபடி, படிக்கட்டு நோக்கி நடந்தாள் பூர்ணி. அவன் பார்வை பாலாஜியை நோக்கி திரும்ப, அவனும் பூர்ணியை பின்தொடர்ந்தான்.
வாட்ச்மேன் கதவை திறந்து விட உள்ளே சென்ற முத்து, நடு ஹாலில் ராஜதோரணையில் அமர்ந்திருந்த சூர்யாவை நேருக்கு நேர் நின்று பார்த்தான்.
“பார்த்து ரொம்ப நாள் ஆச்சு, எப்படி இருக்க சூர்யா?”
“பாக்கும்போதே தெரியுமே. நான் எப்படி இருக்கேன்னு. எதுக்காக வந்த?…” என நேரடியாக பாயிண்டுக்கு வந்தான்.
விரத்தியோடு ஒரு மெல்லிய சிரிப்பை உதிர்த்த முத்து, “நான் எதுக்காக வந்திருப்பேன்னு உனக்குத் தெரியாதா? என்னோட கல்யாணத்துக்கு இன்விடேஷன் கொடுக்கத்தான் வந்தேன்” எனக் கூறித் தன் கையில் இருந்த அந்தப் பத்திரிகையை அவனிடம் நீட்டினான்.
தாம்பாளம் இல்லை, முறைப்படி வைக்க வேண்டிய வெற்றிலை, பாக்கு, பழம், சாக்லேட் என எதுவுமே அங்கே இல்லை. ஒரு வெற்றுப் பத்திரிகையை ஏதோ நோட்டீஸ் போல நீட்டிக்கொண்டு நின்றான் முத்து. அவனது அந்தச் செய்கையே இந்தத் திருமணத்தில் அவனுக்குச் சம்மதம் இல்லை, சம்பந்தமும் இல்லை என்பதைச் சொல்லாமல் சொன்னது.
சூர்யா அவன் விழிகளை ஊடுருவி பார்த்தான். அதில் கோபமோ, வெறுப்போ துளியும் இல்லை. அளவுக்கு அதிகமான நிதானம் தெரிந்தது.
“சரி கொடு…” என்று உட்கார்ந்த இடத்திலிருந்தே கேட்டான்.
ஆனால் முத்துவோ கையை பின்னுக்கு இழுத்துக்கொண்டு, “முதல் பத்திரிக்கை இது. நியாயப்படி குல தெய்வத்துக்கு வைக்கணும். நான் உனக்காக கொண்டு வந்து இருக்கேன். நீ மட்டும் வாங்கினா எப்படி? உன்னோட பொண்டாட்டியும் சேர்ந்துதானே வாங்கணும்? அதுதானே முறை!” என்று ஒரு கிடுக்குப்பிடி போட்டான்.
சூர்யாவின் முகம் சட்டென இறுகிட, “அவளை எல்லாம் இங்க கூப்பிட முடியாது” என்றான் கறாராக.
“நீ கூப்பிடலைனா விடு, நான் கூப்பிடுறேன். மிஸஸ் சூர்யானு ஒரு சத்தம் கொடுத்தா போதும்… அவ எப்படித் துள்ளி குதிச்சு ஓடி வருவான்னு தெரியுமா?” என்று முத்து கேட்டபோது, அவன் விழிகளில் எதிரியிடம் பேசும் தோரணை துளி கூட இல்லை. ஏதோ ஒரு பழைய நண்பனோடு அளவளாவும் பாவனையில்தான் பேசிக் கொண்டிருந்தான்.
‘இவன் இன்னைக்கு எதையோ மனசுல வச்சுட்டு தான் வந்திருக்கான். எல்லாத்துக்கும் சேர்த்து மொத்தமா உன் கல்யாணத்தன்னைக்கு மொய் எழுதுறேன்டா…’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்ட சூர்யா, தன் செல்போனை எடுத்து பாலாஜிக்கு அழைப்பு விடுத்தான்.
அடுத்த இரண்டு நிமிடத்தில் பூர்ணிமா கீழே இறங்கி வந்தாள். முத்துவை பார்த்ததும் அவள் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவம் ஆடியது.
“எப்படி இருக்கீங்க மாமா? உங்களுக்கும் காவ்யாக்கும் கல்யாண ஏற்பாடு நடக்குதுன்னு கேள்விப்பட்டேன். ரொம்ப சந்தோஷம் மாமா… வாழ்த்துக்கள்!” என்று உற்சாகத்தோடு கை நீட்டினாள்.
ஆனால் முத்துவோ அவள் நீட்டிய கையைப் பார்க்கவில்லை. அவள் உடலில் இருந்த காயங்களையும், கை கால்களில் போடப்பட்டிருந்த கட்டுகளையும் கண்டு அப்படியே ஸ்தம்பித்து நின்றான். அவனது நெஞ்சம் ஒரு நிமிடம் துடிப்பதை நிறுத்தியது.
“என்ன ஆச்சு உனக்கு? யார் இப்படிச் செஞ்சா?” என்று சூர்யா அங்கே இருப்பதையே மறந்து பதறினான் முத்து.
அவனது குரலில் இருந்த அந்த அக்கறை, பூர்ணிமாவின் மன காயங்களுக்கு மருந்தானது. ஆனாலும் மனதின் ஓரம் பதற்றம் ஒட்டிக் கொண்டிருந்தது. ஒரு வார்த்தை தவறாக போனாலும், அருகில் இருக்கும் அரக்கன் முழுதாய் முழுங்கி விடுவானே!
“அது… அது வந்து… ஒன்னுமில்லை மாமா… ஷாப்பிங் போன இடத்துல தெரியாம…” என்று சொல்ல முடியாமல் வார்த்தைகளை விழுங்கினாள்.
“உண்மைய சொல்ல வேண்டியதுதான உன் மாமா கிட்ட?” என்று சூர்யா வேண்டுமென்றே வம்புக்கு இழுத்தான் அவளை.
“ஷாப்பி மால்ல கீழ விழுந்துட்டேன். அவ்ளோதான்… அதை விடுங்க. நீங்க எதுக்காக இவ்வளவு தூரம் வந்தீங்க? அங்க எதுவும் பிரச்சனை இல்லையே…”
“அவங்கவங்க பிரச்சனையை அவங்கவங்க பாத்துக்குவாங்க. நீ முதல்ல உன்னை கவனிச்சுக்கோ. உனக்கு வேற ஏதாவது தேவைனா உடனே எனக்கு கூப்பிடு. என் நம்பர் உனக்கு ஞாபகம் இருக்குல?”
“இருக்கு மாமா… ஆனா இங்க எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. எங்கிட்ட எல்லாரும் நல்லபடியா தான் நடந்துக்கிறாங்க. நீங்க எதை பத்தியும் யோசிக்காம சந்தோஷமா கல்யாணம் பண்ணிக்கோங்க. நீங்களும் காவ்யாவும் நிறைய குழந்தைகள் பெத்துக்கிட்டு நல்லா வாழணும்…” என்று உள் மனதில் இருந்து அவனை வாழ்த்தினாள்.
உடனே அவன் பார்வை சூர்யா பக்கம் திரும்பியது. சூர்யாவும் அதை எதிர்பார்த்துக் காத்திருந்தான் போல. உடனே தன்னுடைய டிரேட் மார்க் வஞ்சகப் புன்னகையை உதிர்த்தான்.
“சரி, நான் கிளம்புறேன். பத்திரிக்கையை ரெண்டு பேரும் சேர்ந்து வாங்கிக்கோங்க. சூர்யா, தேதி மண்டபம் நேரம் எல்லாத்தையும் சரியா பாத்துக்கோ. அப்புறம் இடம் தெரியாம வேற கல்யாணத்துக்கு போயிடாத…” என குறுநகையோடு கூறிவிட்டு சென்றான்.
‘ஆடு தானா தலைய கொடுக்குதே!’ என்று சூர்யா யோசித்து கொண்டிருக்க,
அவன் அருகில் இருந்த அப்பாவி ஜீவனோ, “பெரிய மண்டபமா தான் புக் பண்ணி இருக்காங்க. நிறைய பேரை இன்வைட் பண்ணுவாங்கன்னு நினைக்கிறேன்” என்று அந்த அழைப்பிதழைத் தன் காயப்பட்ட விரல்களால் மெல்லப் புரட்டிக் கொண்டிருந்தது.
வெடுக்கென அவள் கையில் இருந்து அதை பிடுங்கிய சூர்யா, “உன்னோட போன் எங்க இருக்கு? முதல்ல அதை எங்கிட்ட கொண்டு வந்து கொடு” என்றான் சற்றே கோபமாக.
“அதை சாமி ரூம்ல வச்சிருக்கேன். வந்த நாளிலிருந்து அங்க தான் இருக்கு. சார்ஜ் இல்லாமல் சுவிட்ச் ஆஃப் ஆயிடுச்சு. அது இப்போ வேணுமா?” என்று தயக்கத்தோடு கேட்டாள்.
“எதுக்காக சுவிட்ச் ஆன் பண்ணாம வச்சிருக்க?”
“எனக்கு கால் பண்ண யார் இருக்கா? அதனால தான் ஆஃப் பண்ணி வச்சுட்டேன்” என்று வார்த்தையாக சொன்னாலும், அதன் வழியே அவள் மனதின் வலியும், அனாதையாக விடப்பட்ட உணர்வும் அப்பட்டமாக வெளிப்பட்டது.
“உன் மாமன் தான் ஏதாவது தேவைனா போன் பண்ணச் சொல்லி இருக்கானே? வேணும்னா சார்ஜ் போட்டு எடுத்து வை. பாலாஜி கிட்ட சொல்லி ரீசார்ஜ் கூடப் பண்ணிக்க…” என்று பேசிக்கொண்டே போக, அவனது அந்தத் திடீர் அக்கறை அவளுக்கு பயம் அதிகமானது.
“அதெல்லாம் தேவையில்லை. நான் ரூமுக்கு போறேன்…” என்று கூறிவிட்டு மெது மெதுவாக நடந்தாள்.
ஏனோ அவள் வார்த்தைகள் சூர்யாவின் மனதிற்கு இதமாய் இருந்தது
“ஒன் செகண்ட் பூர்ணி… நாளைக்கு ஈவினிங் அபியோட பர்த்டே பார்ட்டி இருக்கு. அதுக்கு உன்னை நானே கூட்டிட்டுப் போறேன், ரெடியா இரு!” என்று அதிகாரக் குரலில் கூறினான் சூர்யா.
அபியின் பெயரைச் சொன்னதும், அதுவரை வாடிப் போயிருந்த பூர்ணிமாவின் முகம் சட்டென மலர்ந்தது.
பூர்ணி, “நெஜமாவா?” என்று கேட்டுக் கொண்டே, தன்னை அறியாமல் ஓடி வந்து அவனை கட்டிக் கொண்டாள்.
ஆனந்தத்தின் உச்சாணிக் கொம்பில் இருந்தவளுக்கு, ஒரு நொடி தாமதமாகத்தான் தான் செய்திருக்கும் செயலின் வீரியம் விளங்கியது. தீயைத் தொட்டது போலச் சட்டெனத் திடுக்கிட்டு அவனை விட்டு விலகிக் கொண்டாள். நித்தம் ஒரு வண்ணம் காட்டும் வானம் போல, நொடிக்கு நொடி அவள் முகமும் வெவ்வேறு உணர்ச்சிகளை பிரதிபலித்துக் கொண்டிருந்தது. அதை குதூகலமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சூர்யாவுக்கு அவளை இன்னும் கொஞ்சம் சீண்டி பார்க்க தோன்றியது.
சூர்யா மெல்ல அவளை நெருங்கி, “ஏன் பூரி விலகிட்ட?…” என்று அவளது காதோரம் குனிந்து கிசுகிசுப்பாகக் கேட்டான்.
அவளது இதயம் இப்போது நூறு கிலோமீட்டர் வேகத்தில் துடித்தது. அவனது மூச்சுக்காற்று அவள் கழுத்தில் பட்டதும், அவளது தேகம் ஒரு நிமிடம் சிலிர்த்துப் போனது. பதில் சொல்லத் தெரியாமல் தலையைத் தொங்கப்போட்டபடி நின்ற பூர்ணிமாவின் கன்னங்கள் தக்காளிப் பழம் போலச் சிவந்து போயிருந்தன.
“சாரி…” என்று சொல்லி பின்னால் நகர்ந்தவளின், கைப்பிடித்து இழுத்தான். பிடிமானம் ஏதுமில்லாமல் காற்றோடு போகும் பட்டம் போல, அவனது அந்த வலிமையான மார்பின் மீது வந்து மோதி விழுந்தாள் பூர்ணிமா.
“நான் போனு சொல்ல முன்னால ஏன் ஓடுன? தப்புதான?” என்று ஒற்றைப் புருவம் தூக்கி மிரட்டிக்கொண்டே கேட்க, இவளோ பயத்திலும் திகைப்பிலும் பதில் சொல்ல முடியாமல் எல்லா பக்கமும் வேகவேகமாகத் தலையை ஆட்டினாள். அவனது அண்மையும், அவனிடமிருந்து வீசிய அந்த ஆண்மையின் வாசனையும் அவளை அப்படியே உறைய வைத்தது.
“அப்போ, செஞ்ச தப்புக்குத் தகுந்த தண்டனை தரணும்ல?” என்றான் அவன் ரகசியக் குரலில். அவனது தீட்சண்யமானப் பார்வை, இப்போது அவளது துடிக்கும் இதழ்களில் மெல்ல ஊர்ந்தது.
வெட்கத்தில் கன்னங்கள் ஆப்பிள் பழமாய் சிவக்க, அவன் பார்வைக்கு அஞ்சித் தலைகுனிய முயன்றவளை, நிமிரத்தி பிடித்து இதழ் பொருத்தி தன் வசமாக்கினான் அவன்.
‘இது வேண்டாம், ஆபத்து. அவனிடம் மயங்காதே, நாளையே மாற்றி பேசுவான்…’ என்று அவளது புத்தி ஆயிரம் முறை எச்சரித்தாலும், அதையெல்லாம் துளியும் பொருட்படுத்தாமல், விரும்பி அவனது கட்டுப்பாட்டிற்குள் போகும் உடலையும் மனதையும் வைத்துக்கொண்டு, அவளும்தான் என்ன செய்வாள். தத்தி தடுமாறினாள் தத்தை!
சூர்யாவுக்கு அவள் தவிப்புகள் போதை தர, மொத்தமாய் விழுந்தான் இதழுக்குள். ஈரமான இதழ்கள் அவனை மேலும் உள்ளிழுக்க, ஆழ்ந்ததொரு ஆசைக் கடலில் மூழ்கினான். வெதுவெதுப்பான அவனின் முரட்டு முத்தத்தால், சுதாரிக்கும் முன்பே தொலைந்து போயிருந்தாள் அவளும். அவர்கள் இருவரின் காலமும் அந்த இடத்தில் அப்படியே உறைந்து நின்றிருந்தது.
மற்றவர்களுக்கும் காலம் உறையுமா என்ன?
வெகுநேரம் பூர்ணிமா திரும்பி வராததால் அறையில் இருந்து வெளியே வந்து பார்த்தான் பாலாஜி. நட்ட நடு ஹாலில் நின்று அவள் இதழை கொய்து கொண்டிருப்பதைக் கண்டதும் அவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. சட்டெனத் தன் கண்களை மூடிக்கொண்டு அறைக்குள்ளே ஓடினான்.
“போச்சுடா, இங்கிதம் இல்லாம இந்த ரெண்டும் என்ன வேலை பார்த்துட்டு இருக்கு பாரு?! இப்ப நான் கீழ போனாலும் திட்டுவான், போகலனாலும் திட்டுவான். இது என்னடா ஈசா உன் புள்ளைக்கு வந்த சோதனை!” என்று தனக்குள்ளேயே புலம்பிக் கொண்டு, அங்கேயே நின்றிருந்தான்.
