ரசிகை – 14

பூர்ணிமாவின் பாதுகாப்புக்குத் தான் பொறுப்பு என்று தெரிந்தும், இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்ததைச் சூர்யா மன்னிக்க மாட்டான் என்பது பாலாஜிக்கு நன்றாகத் தெரியும்.

தனுஜா, பாலாஜியின் முகத்தில் இருந்த அந்த ஆக்ரோஷத்தைப் பார்த்து, அவனுக்கு என்ன சமாதானம் சொல்வது என்று தெரியாமல் கைகளைப் பிசைந்து கொண்டு ஓரமாக நின்றாள். தன் குறும்புத்தனத்தால் விளைந்த வினை இவ்வளவு பெரிதாக இருக்கும் என்று அவளும் எதிர்பார்க்கவில்லை.

“அத்தான்…” என்று மிகவும் மெல்லிய குரலில், தழுதழுத்தபடி அவனை அழைத்தாள். 

அவளது கண்கள் மன்னிப்பு கேட்பது போல சுருங்கி இருந்தன. ஆனால் பாலாஜியோ நிதானம் இழந்திருந்தான். பூர்ணிமாவுக்கு நேர்ந்த காயம் அவனை ஒரு மிருகமாக மாற்றியிருந்தது.

“தயவுசெஞ்சு என்னை இன்னொரு தடவை அப்படி கூப்பிடாத. நான்தான் உன்னை விட்டு விலகி போறேன்னு தெரியுதுல? அப்புறம் எதுக்காக என் பின்னாலேயே வந்து என் உசுரை வாங்குற? அவ்வளவு தூரம் உனக்கு உடம்பு சுகம் கேட்குதா?” என்று தேவையில்லாத வார்த்தையை, தேவையில்லாத நேரத்தில் பேசி விட்டான்.

அதைக் கேட்ட தனுஜாவுக்கு மனம் சுக்கு நூறாக சிதறி விட்டது. தன் காதலன் வாயால், அதுவும் இவ்வளவு தரம் தாழ்ந்த வார்த்தை வரும் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை. அவளுக்கு உடல் எல்லாம் பற்றி எரிவது போல் இருந்தது. தேகம் நடுங்க, கொஞ்சம் கொஞ்சமாக பின்னால் சென்றாள். 

தான் பேசியது தப்பு என்றும், அவளது பிஞ்சு மனதைச் சுக்குநூறாக உடைத்துவிட்டோம் என்றும் பாலாஜிக்கு அடுத்த நொடியே புரிந்தது. இருந்தாலும், தன் அகங்காரத்தால் தன் திருவாய் மலர்ந்து ஒரு ஆறுதல் வார்த்தை கூடச் சொல்லவில்லை அவன். அவனது அந்த மௌனம் அவளை இன்னும் கொன்றது. அவ்வளவுதான்! 

“இனி எக்காரணம் கொண்டும் உங்க பக்கத்துல வரமாட்டேன் பாலாஜி… இது என் அம்மா மேல சத்தியம்!” என்று கூறிவிட்டு, கண்ணீர் மல்க அங்கிருந்து ஓடிவிட்டாள் தனுஜா.

சில வார்த்தைகள் சாகும் வரைக்கும் மனதை விட்டு அழியாது என்பதும், அந்த வார்த்தைகளே ஒரு உறவின் முடிவுரை என்பதும் அப்போது பாலாஜிக்கு புரியவில்லை. 

‘இனி பழையபடி தொல்லை செய்ய மாட்டாள், அதுவரைக்கும் நிம்மதி!’ என்ற எண்ணத்தோடு இருந்தவன், அவளது நினைப்பை அப்படியே மூட்டை கட்டி ஓரமாக வைத்துவிட்டு, பூர்ணிமாவை கவனிக்க ஆரம்பித்தான்.

சிகிச்சை முடிந்து வெளியே வந்த டாக்டர், “ட்ரீட்மென்ட் முடிஞ்சது, காயம் பெருசா இல்லனாலும் கொஞ்சம் ஆழமா இருக்கு. அதனால கவனமா பார்த்துக்கோங்க. பேஷண்ட்டை நீங்க தாராளமா வீட்டுக்குக் கூட்டிட்டு போகலாம்” என்று கூறிவிட்டார். 

பாலாஜி பூர்ணிமாவைத் தாங்கிப் பிடித்து மெல்ல அழைத்துக்கொண்டு வெளியே வந்தான். அப்போது அந்த மருத்துவமனை வரவேற்பறையில் இருந்த தொலைக்காட்சியில் பூர்ணிமாவுக்கு மிகவும் பழக்கமான ஒரு பெயர் அடிபட்டது.

அதைப் பார்த்ததும் பூர்ணிமாவின் கால்கள் அப்படியே வேர் பிடித்து நின்றுவிட்டன. அவளது இதயம் ஏதோ விபரீதமாய் இருக்கிறது என்று உணர, யோசனையோடு அந்தத் திரையை உற்றுப் பார்த்தாள். அங்கே அவள் பெரியப்பா பிரபாவின் முகம் பெரிதாகத் தோன்றிற்று.

பாலாஜிக்கு விஷயம் புரிந்துவிட்டது. அந்த வீடியோவை எடுத்து, அதை வைரலாக்கச் செய்தவனே அவன்தான். 

எனவே பதற்றத்தோடு, “பூர்ணி, டைம் ஆச்சு வா… நாம கிளம்பலாம்” என்று அவள் கையைப் பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்தான்.

“இருங்க பாலாஜி… அது என் பெரியப்பா தானே? சூர்யா பெயரைச் சொல்லி ஏதோ பேசுறாரு. இருங்க என்னன்னு கேட்டுட்டு வந்திடுறேன்” என அவன் பிடியிலிருந்து தன் கையைத் உதறிவிட்டு, அந்தத் தொலைக்காட்சியின் அருகே சென்றாள்.

திரையில் ஓடிக்கொண்டிருந்த அந்தச் செய்தி, அவள் வாழ்க்கையில் மீண்டும் ஒரு புயலைக் கிளப்பப் போகிறது என்பது அப்போது அவளுக்குத் தெரியாது.

திரையில் தோன்றிய பிரபா,

 

“என் தம்பி பொண்ணுதான் சூர்யா சார் வீட்டு வாசல்ல போய் நின்னது. அவளுக்குப் பெருசா படிப்பு அறிவு இல்ல. ஒரு சின்ன டெய்லர் கடை வச்சுக்கிட்டு, ஏதோ அவ வாழ்க்கையை ஓட்டிக்கிட்டு இருந்தா. சூர்யா ஐயா வீட்ல வேலைக்கு ஆள் எடுக்கிறதா தகவல் கிடைச்சது. ஒருவேளை அங்க வேலை கிடைச்சா, தன் தங்கச்சிக்குத் தேவையான ட்ரீட்மென்ட்டைப் பார்க்கலாம்னு ஆசைப்பட்டுதான் இன்டர்வியூ அட்டென்ட் பண்ணா. ஆனா, அவளுக்கு அந்த வேலை கிடைக்கல.

அந்த ஆசையை அவளால அடக்க முடியல. எப்படிடா வேலை கிடைக்காமப் போகும்னு ஒரு பிடிவாதத்துலதான், அவரு வீட்டு வாசல்லயே போய் நின்னுட்டா. அவரு ஒரு நல்ல மனுஷன்… இரக்கப்பட்டு இப்போ அவளை வீட்டு வேலையில சேர்த்துக் கிட்டாரு. மத்தபடி, அவருக்கும் என் அண்ணன் பொண்ணுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தயவுசெஞ்சு யாரும் தப்பாப் பேசாதீங்க…” என்று அவர் கைகளைக் கூப்பிப் பேசி முடித்திருக்க, பூர்ணிமாவின் தலை ஒரு நொடி கிறுகிறுத்தது.

அவள் கேள்வியாகப் பாலாஜியைப் பார்த்தாள். பதில் சொல்லத் தெரியாமல், முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு மௌனமாக நின்று கொண்டிருந்தான். அவனது அந்த மௌனமே அவள் கேள்விகளுக்குப் பதிலாக அமைந்தது.

அங்கிருந்த பொதுஜனங்களின் பார்வை இப்போது பூர்ணிமாவின் மீது திரும்ப, “பார்த்தியா, வேலைக்காக வீட்டு வாசல்ல போய் நின்னவளாம்… ஏதோ பாவம்னு சேர்த்துக்கிட்டாராம்” என்று அவர்கள் பேசிக்கொண்டது, அவளது காயங்களில் ஆசிட் ஊற்றுவது போல இருந்தது.

“பூர்ணி, இங்க நிக்கிறது சரி இல்ல… வா கிளம்பலாம்” என்று மெதுவான, ஆனால் உறுதியான குரலில் கூற, பூர்ணிமா பிணம் போல அவன் பின்னாலேயே நடந்தாள். தன்னைச்சுற்றி ஏதோ மிகப்பெரிய சதிவலை பின்னப்படுவது புரிய, அவளால் மௌனமாக அழ மட்டும்தான் முடிந்தது.

பிரபா செல்போனில் தன் நண்பனிடம், “ஆமா, அந்த வீடியோவில் இருக்கிறது நான் தான். எங்க வீட்டு பொண்ணு கொஞ்சமும் அறிவில்லாம நடந்துக்கிட்டா. நாளபின்ன பெரிய பிரச்சனை எதுவும் வந்துடக்கூடாதுல? அதான் பேசி தீர்த்துடணும்னுதான் அப்படி ஒரு வீடியோ போட்டேன்!” என்று பெருமையாக சொல்லிக்கொண்டே, தன் வீட்டிற்குள் நுழைந்தார்.

ஹாலில் மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிக்கொண்டு, இறுக்கமான முகத்தோடு அமர்ந்திருந்தான் முத்து. அவனது கண்கள் அனலைக் கக்கிக் கொண்டிருந்தன. முத்துவின் அந்த ஆக்ரோஷமான முகத்தைப் பார்த்ததுமே, பிரபாவின் பேச்சு சட்டெனத் திக்கியது; அப்படியே காலை கட் செய்தார்.

“என்ன மாப்ள… சொல்லாம கொள்ளாம திடீர்னு இவ்வளவு தூரம் வந்திருக்கீங்க? வீட்ல எல்லாரும் சௌக்கியமா?” என்று பவ்யமாகக் கேட்டபடி, தன் கையில் இருந்த காவ்யாவின் திருமண அழைப்பிதழ் பண்டலை, ஜாக்கிரதையாகப் பூஜை செல்ஃபில் வைத்தார். கடவுளை கும்பிட்டுவிட்டு அதில் ஒன்றை மட்டும் எடுத்து வந்து அவன் கையில் தந்தார்.

“ரெண்டு நாள் நானே அந்தக் கடைக்காரன் கூட உட்கார்ந்து, பார்த்து பார்த்து டிசைன் பண்ணினது. நல்லா இருக்கான்னு பாருங்க மாப்ள…” 

இதற்கு முன் பூர்ணிக்கும் அவனுக்கும் அச்சிடப்பட்ட அழைப்பிதழை, அவர் ஒப்புக்காக ஒரு முறை கூட பார்க்கவில்லை. பிரிண்ட் முடிந்து வந்த பிறகும், வேண்டா வெறுப்பாக இடது கையில் தூக்கிக்கொண்டு சென்றது, ஏனோ அவனுக்கு இந்த நொடி மனதில் தோன்றி மறைந்தது. 

“என்ன மாப்ள?” என்று இரண்டாவது முறையாக கேட்டார் பிரபா.

இப்போதும் முத்து பதில் ஏதும் பேசாமல் அவரை தன் விழிகளால் துளைத்தான்.

“அக்கா… நாம காலையில ஷாப்பிங் மால்ல செஞ்ச வேலை, முத்து மாமா காதுக்கு போயிடுச்சோ? அதான் மனுஷன் இப்படி முறைச்சுட்டு இருக்காரோ?” என காவ்யாவிடம் கிசுகிசுத்த திவ்யா, படுக்கை அறையிலிருந்து தலையில் மட்டும் நீட்டி அவ்வப்போது எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“என்னப்பா? எதுவுமே பேச மாட்டேங்குற…” என்று கேட்டுக்கொண்டே முத்துவின் அருகில் அமர்ந்தார் பிரபா.

அடுப்படியில் இருந்து வெளியே வந்த மங்கை, “நானும் வந்ததிலிருந்து காப்பி வேணுமா டீ வேணுமானு பல தடவை கேட்டுட்டேன். முத்து தம்பி எதுவுமே சொல்லாம ஊமைச் சாமி மாதிரி உட்கார்ந்துட்டு இருக்குதுங்க” என்று தன் கணவரிடம் புலம்பினார்.

“ஒருவேளை காவ்யாவைப் பார்க்கணும்னு ஆசைப்பட்டு இவ்வளவு தூரம் வந்திருப்பாரு போல. அதான் நம்மகிட்ட அதை எப்படிச் சொல்றதுன்னு தெரியாம தவிக்கிறாரு. நீங்க வேணும்னா பொண்ணைக் கூட்டிட்டுப் பக்கத்துல இருக்குற கோவில் குளம் எங்கேயாவது போயிட்டு, பொறுமையா பேசிட்டு வாங்க மாப்ள… யாரு உங்களைத் தடுத்தா?” என அவர் குழைந்து சொல்லி முடிக்கும் முன்பாக,

“அப்பா, அவரை அஞ்சு நிமிஷம் மட்டும் வெயிட் பண்ண சொல்லுங்க. நான் கடகடன்னு ரெடியாகி வந்துடுவேன்…” என்று தன் அறையில் இருந்து குரல் கொடுத்தாள் காவ்யா.

அடுத்த நொடி திவ்யா முதுகை தேய்த்துக்கொண்டு அங்கிருந்து வெளியே வந்தாள். அவ்வளவு அவசரமாக தன் தங்கையை அடித்து விரட்டி இருக்கிறாள் அவள்.

மங்கையும் நாணியபடியே, “இத முதல்லே சொல்லி இருக்கலாம்ல மாப்ள? சரி சரி, வீட்டுக்கு வந்துட்டு கை நனைக்காம போகக்கூடாது. நான் டக்குனு உங்களுக்கு ரெண்டு பணியாரம் மட்டும் சுட்டு தர்றேன்” என்று கூறியபடி கிச்சனுக்கு விரைந்தார்.‌ 

இரண்டே நிமிடத்தில், ஆவி பறக்கும் சூடான பணியாரம் அவர் முன்‌ கொண்டு வந்து வைக்கப்பட்டது. காவ்யாவும் தழைய தழைய ஒரு பட்டுப் புடவையைக் கட்டிக்கொண்டு, முகத்தில் பவுடரை அப்பிக்கொண்டு ஓடி வந்தாள். நினைத்தபடியே முத்துவைத் திருமணம் செய்யப் போகிறோம் என்ற திமிர் அவள் முகத்தில் தழும்பி வழிந்தது.

“போலாமா மாமா?” என்று அவள் கேட்பதற்குள், பணியாரம் இருந்த தட்டு பறந்து போய் சுவற்றில் முட்டிக்கொண்டது.

மங்கை, “மாப்ள…” என கத்த, 

“ஒரு மாசம் முன்னால காய்ச்சலோட கஷ்டப்பட்டுட்டு இருந்த அபிய ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிட்டு, நானும் பூர்ணிமாவும் ராத்திரி பத்தரைக்கு வீட்டுக்கு வந்தோம். தங்கச்சிக்காக ரெண்டு தோசை சுடப்போன பூர்ணிய நீங்க என்னென்ன பேசினீங்கனு ஞாபகம் இருக்குதா? அவளுக்கு உதவி செஞ்ச ஒரே காரணத்துக்காக, அன்னிக்கு எனக்கு குடிக்க தண்ணி கூட கொடுக்காம அனுப்பினீங்க நீங்க. இப்ப டீ, காஃபி, பணியாரம்னு படையல் போடுறீங்க…”

பிரபா, “மாப்ள, அன்னைக்கு இருந்த சூழ்நிலை வேற…” எனும் முன்,

“கல்யாண பொண்ண தவிர எதுவுமே மாறலை மாமா. பூர்ணிய ஒரே ஒரு நாள் என்கூட அனுப்புங்க. முகூர்த்த புடவை எடுக்கணும்னு உங்ககிட்ட வந்து எத்தனை தடவை கேட்டேன். ஒவ்வொரு தடவையும் அவ ஒழுக்கத்தை இழுத்து வச்சு தப்பு தப்பா பேசினீங்களே… இப்ப உங்க பொண்ண, நிச்சயம் கூட பண்ணாம எனகூட அனுப்பி வைக்கிறேனு சொல்றீங்க. இவளுக்கு ஒழுக்கம், மானம் எதுவும் இல்லையா என்ன?” என்று நறுக்குத் தெறித்தார் போல அடுத்தடுத்து கேள்விகளை கேட்டான் அவன்.

மங்கை சற்றே கோபமாய், “போதும் மாப்ள, அவளும் என் பொண்ணும் ஒண்ணா?” என்றார்.

“ஐயோ, அப்படிச் சொல்வேனா? அவ தேவதை. ஆனா உங்க பொண்ணு…” என்றவன், காவ்யாவை கேவலமாக ஒரு பார்வை பார்த்தான். உடனே அவள் அழுது கொண்டே உள்ளே ஓடிவிட்டாள். 

அதுவரை பொறுமையாக இருந்த திவ்யா, “இப்ப சந்தோஷமா உங்களுக்கு? ஏம்ப்பா இவருக்குத்தான் அக்காவை கொடுக்கணும்னு ஒத்த கால்ல நிக்கிறீங்க. ஊருக்குள்ள வேற மாப்பிள்ளையே இல்லையா என்ன?” என்று கேட்டாள்…

முத்து, “மாப்பிள்ளை எல்லாம் தாராளமா இருக்கு. ஆனா வரதட்சணை கொடுக்க உங்க அம்மாவுக்கு விருப்பமில்லை. கல்யாணத்துக்கு காசு செலவு பண்ண உங்க அப்பாவுக்கு விருப்பமில்லை. இருக்கிறதுலையே ஏமாந்த குடும்பம் என்னோடதுதான். தவிர, இந்த கல்யாணம் நடந்தா எங்க அம்மாவுக்கும் தாத்தா சொத்துல பங்கு தர தேவையில்லை. இதனாலதான் இத்தனைக்கு பிறகும் உன் குடும்பம் என்னை பிடிச்சுக்கிட்டு தொங்குது…” என்றதும் திவ்யாவின் பார்வை, கேள்வியாக தன் தந்தை பக்கம் நகர்ந்தது. 

மனதில் இருக்கும் உண்மை எல்லாம் அவன் புட்டு புட்டு வைத்ததால், பிரபா அதிர்ந்து போயிருந்தார். தன் அறிவுக்கு எட்டாத விஷயங்கள் நிறைய இருக்கிறது என்று அந்த நொடியில் திவ்யாவுக்கு விளங்கியது.

“இது மட்டுமில்ல திவ்யா, உங்க அப்பா அந்த சூர்யா கிட்ட பெரிய அமவுண்ட்ட லஞ்சமா வாங்கிருக்காரு. அந்த பணத்திலிருந்து உனக்கும் உங்க அக்காவுக்கும் ஒரு குண்டுமணி தங்கம் கூட வாங்கி போடல. தன்னுடைய எதிர்காலத்துக்காக பத்திரமா பதுக்கிட்டாரு. எனக்கு என்னமோ உங்க அம்மாவும் இதுக்கெல்லாம் உடந்தைனு தோணுது…”

பிரபா, “முத்து, நீ இன்னைக்கு நிதானமா இல்ல. இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினாலும் நான் என் தங்கச்சிக்கு போன் பண்ண வேண்டியிருக்கும்…” என்று சீறினார்.

“பண்ணிக்கோங்க… அவங்களால என்ன பண்ண முடியும். இல்ல உங்களாலயும் தான் என்ன செய்ய முடியும். எப்படியாவது இந்த கல்யாணத்தை நடத்தி முடிக்கணும்னு அத்தனை பேரும் சேர்ந்து பிளான் பண்ணீங்க. ஆனா பாவம் உங்களுக்கு ஒரு விஷயம் புரியல. இதையெல்லாம் நடத்திட்டு இருக்கிறதே அவன்தான்… கண்டிப்பா பெருசா ஏதோ ஆப்பு வைக்கப் போறான். நான்லாம் கண்டிப்பா யாருக்கும் ஹெல்ப் பண்ண மாட்டேன், அவன் தர்றத நல்லா வாங்கி கட்டிக்கோங்க…” என்று கூறிவிட்டு வெளியேறிச் சென்றுவிட்டான்.

அவனுக்கு யார் முகத்தையும் பார்க்க பிடிக்கவில்லை. வீட்டிற்கும் போகத் தோன்றவில்லை. எங்கெங்கோ வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான். சில நிமிடங்களுக்கு பிறகு தான், தன் வாகனம் நேராக சூர்யாவின் வீட்டை நோக்கி பயணிப்பதை அவனே உணர்ந்தான். 

அவனுள் என்ன தோன்றியதோ! நேராக அங்கு போய்விட்டான். 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page