பாலாஜியின் வீட்டில் இருந்து புயல் வேகத்தில் கிளம்பியது கார். நொடிக்கு நொடி வேகத்தை இன்னும் அதிகப்படுத்தினான் சூர்யா. போதாக்குறைக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், ஸ்டீயர்ங்கில் குத்தினான். ஏதோ ஒரு விஷயத்தால், அளவு கடந்த டென்ஷனில் இருக்கிறான் என புரிந்து கொண்டாள் பூர்ணி.
“என்ன ஆச்சு? பாலாஜி தனுஜா கல்யாணம் பேசினதுல ஏதாவது பிரச்சனையா?”
மறுப்பாக தலையசைத்தவன், “அபிக்கு யாரு சூடு வச்சது?” என்றான்.
தூக்கி வாரி போட்டது இவளுக்கு! அந்த சம்பவம் நடந்து, கிட்டத்தட்ட ஏழெட்டு வருடங்கள் தாண்டி விட்ட காரணத்தால், அவள் சுத்தமாக அந்த தழும்பு பற்றி இன்று யோசிக்கவே இல்லை.
“உன்னத்தான்டி கேட்கிறேன்…” என்று பற்களை நரநரவென அரைத்தான்.
“என்னோட பெரியம்மா…”
“எதுக்காக?”
“அபிக்கு தூக்கத்திலேயே யூரின் போற பழக்கம் இருக்கு. அதனால அவளும் நானும் வீட்டு பின்னால திண்ணையில தான் படுப்போம். காலைல அவ குளிச்சதுக்கு அப்புறம்தான், கொல்லைய விட்டு வரணும்னு சொல்லியிருந்தாங்க. ஒரு நாள், தூங்கி எழுந்த முகத்தோட வீட்டுக்குள்ள வந்துட்டா. அவ டிரஸ் ஈரமா இருந்ததால, வீட்டை அசிங்கப்படுத்திட்டானு சொல்லி…” அதற்கு மேல் பேச முடியாமல் விம்மி அழுதாள்.
“ம்….” என்று அதிகாரமாய் பேசத் தூண்டினான்.
“அவ தொடையில சூடு வச்சுட்டாங்க… மூணு நாள் காய்ச்சல்ல கிடந்தா. சாப்பிடல தூங்கல. அழுதுட்டே இருந்தா. நரகத்துல இருந்த மாதிரி இருந்துச்சு எனக்கு” என்று சொல்லும் போதே அவள் அழுகை எல்லையைக் கடந்துவிட்டது.
“அந்த டைம்ல அங்கே யாரெல்லாம் இருந்தா?”
‘எதுக்கு சூர்யா இதெல்லாம் கேட்குறான்?’ என்று காலதாமதமாக யோசித்தவள், பதில் பேசாது உதட்டைக் கடித்தாள்.
“கேட்டதுக்கு பதில் சொல்லுடி…” என அவள் காது ஜவ்வு கிழியுமாறு கத்தினான்.
“பாட்டி, பெரியப்பா, பெரியம்மா, அவங்க பொண்ணுங்கனு அஞ்சு பேரும் இருந்தாங்க.”
“ஓ…” என்று ஒரு மார்க்கமாக இழுத்தவன், “சரி, உனக்கு ஏன் சூடு வச்சாங்க?” என்றான் கோபம் குறையாமல்.
சட்டென கண்களை மூடி உடலை குறுக்கி கொண்டாள். அபிக்காவது தொடையின் வெளிப்புறமாக சூடு வைத்திருந்தனர். பூர்ணிக்கு உள் பக்கம்… அதை சூர்யா முதல்நாளே பார்த்துவிட்டான் போல! ஏனோ அவளுக்கு இந்ந நொடி அதை நினைத்து உடல் கூசியது.
உடல் இறுக, “ப்ளீஸ், வேணாம்…” என்றாள்.
“ஏன்னு கேட்டேன்?” திரும்பவும் அழுத்தம் திருத்தமாக வந்தது அவன் வார்த்தைகள்.
எச்சில் விழுங்கியவள், “அன்னிக்குதான் நான் வயசுக்கு வந்தேன். வயிறு ரொம்ப வலிச்சது. தலைக்கு குளிச்சிட்டு வீட்டு வேலைய பார்க்க சொல்லிட்டாங்க. வயிறு ஏன் வலிச்சதுன்னு தெரியல. அந்த வயசுல என்ன பண்றதுன்னு தெரியாமத்தான் வலியை குறைக்க வீட்டில் இருந்த பழைய சோற சாப்பிட்டேன்.
இத்தனைக்கும் வீட்டு வேலை எல்லாம் முடிச்சிட்டு தான் சாப்பிட்டேன். அவங்ககிட்ட சொல்லாம சாப்பிட்டேன்ற ஒரே காரணத்துக்காக சூடு வச்சுட்டாங்க. அடுத்த ஒரு வாரமும் வார்த்தையால சொல்ல முடியாத அளவுக்கு கஷ்டப்பட்டேன். அதுல இருந்தே பீரியட் வந்தா, அந்த பயமும் சேர்ந்து வந்துடும்” என்று சொல்லி முடிக்க, அவன் காரை சாலை ஓரமாக கொண்டு போய் நிறுத்தினான்.
சுற்றிலும் ஆள் நடமாட்டம் இல்லாத அந்த நிசப்தமான சூழலில், காரின் இன்ஜின் நின்ற சத்தம் பூர்ணிமாவின் இதயத் துடிப்பை எகிற வைத்தது. பூர்ணிமா என்ன நடக்கிறது என்று யோசிக்கும் முன், மின்னல் வேகத்தில் அவள் அமர்ந்திருந்த இருக்கையின் நெம்புகோலை இயக்கி, அந்த ‘சீட்டை’ பின்னோக்கிச் சாய்த்துவிட்டான்.
அவனது இந்தத் திடீர் அதிரடியை அவள் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. அந்த இருக்கை சட்டெனச் சரிந்த வேகத்தில், பூர்ணிமா தற்காப்பு ஏதுமின்றி நிலைகுலைந்து கீழே படுத்த நிலைக்கு வந்தாள். அவள் கண்கள் அச்சத்தில் விரிந்தன. அதை இன்னும் பெரிதாக விரிவடைய செய்தது, அடுத்து அவன் செய்த செயல்!
பூர்ணி அணிந்திருந்த லெஹெங்காவை மேலே உயர்த்தியவன் அவள் காயத்தில் அழுத்தி முத்தமிட்டான். உடலின் மொத்த ரத்தமும் உச்சந்தலைக்கு ஏறியது போல, துள்ளி துடித்துவிட்டாள் பேதை. அவள் அசைய முடியாதபடி அழுத்திப் பிடித்தவன் அடுத்தடுத்து முத்தமிட்டு அந்த தழும்பு முழுவதும் தன் எச்சிலால் ஈரப்படுத்தினான்.
“சூர்யா, முடியலடா…”
இந்த உணர்வுக்கு பெயர் தாபமென்றே தெரியாமல், தன்னை அதனுள் தள்ளியவனிடம் காப்பாற்றச் சொல்லி கெஞ்சினாள் அவள். இருந்தும் இரக்கமில்லாமல் தன் மனம் ஆறும் வரையில் அவள் காயத்திலேயே அவன் இதழ்கள் முட்டி மோதியது.
ஐந்து நிமிடங்களுக்கு பிறகு நிதானமடைந்தவன், மெல்ல தலை நிமிர்ந்தான். அவனது முரட்டுத்தனத்தால் மிரண்டு போய், மார்பு படபடவெனத் துடிக்க, கெஞ்சும் கண்களோடு ஏறிட்டுப் பார்த்தாள்.
“இனிமே பீரியட் வந்தா என் முத்தம்தான் உனக்கு ஞாபகம் வரணும். புரியுதா?” என்றவனது விழிகளில் தெரிந்த அந்தத் தீவிரம் அவளை உறைய வைத்தது. பதில் சொல்லவும் தோன்றாது விதிர்த்துப் போயிருந்தாள்.
“புரியலைனா சொல்லு, இன்னும் தெளிவா புரிய வைக்கிறேன்” என்றவன், தன் சட்டை பொத்தான்களை கழற்ற, அவளது தேகம் பயத்தில் ஒருமுறை சிலிர்த்து அடங்கிற்று.
“புரியுது… புரியுது… நல்லா புரியுது” என்றாள் வேகமாய்.
“குட்…” என்றவன், அவள் இருக்கையை திரும்ப சரி செய்து வண்டியை கிளப்பினான்.
அதுவரை புயல் வேகத்தில் சீறிக் கொண்டிருந்த கார், இப்போது நிதானமாக ஊர்ந்தது. அரை மயக்கத்தில் கிடந்த பூர்ணாவுக்கு, எப்போது வீடு வந்து சேர்ந்தோம் என்று கூட தெரியவில்லை. அவன் இறங்கி அவள் பக்க கதவை திறந்த பிறகு தான் தன் சுற்றம் உணர்ந்தாள். இருந்தும் கால்கள் தள்ளாட, சூர்யா அவள் தோளை பற்றி பிடித்து அறைக்கு கூட்டிச் சென்றான்.
“சீக்கிரம் தூங்கு, நாளைக்கு காலையில ஆறு மணி ஃப்ளைட்ல டெல்லி போகணும். அடுத்த நாலஞ்சு நாள் அங்க தான் வேலை” என்றான்.
“ஓ, வேணுமா இப்பவே உனக்கு டிரஸ் எல்லாம் பேக் பண்ணி கொடுக்கவா?” எனக் கேட்டவளின் முகத்திற்கு அருகே குனிந்து வந்தவன்,
“ம், பேக் பண்ணிடு. பட் பெட்டில நீயும் இருக்கணும்” என்றான் உறுமலாய்.
ஏற்கனவே சோர்ந்து போய் இருந்தவளுக்கு அவன் சொல்வதன் அர்த்தம் புரியவேயில்லை. புருவங்களை நெளித்தாள்…
தலையில் செல்லமாக கொட்டியவனோ, “முட்டாளு, உன்னையும் கூட்டிட்டு போறேன்” என்றான் தெளிவான குரலில்.
“அப்போ முத்து மாமா கல்யாணம்?”
“ஏன்? நீ தாலி எடுத்து கொடுக்கலனா அவன் கல்யாணம் பண்ணிக்க மாட்டானா?”
“இருந்தாலும் எனக்கு அங்க என்ன வேலை?” என்று கேட்டுவிட்டு அவன் முகம் பார்த்தாள். விளக்கம் சொல்ல அவனுக்கு என்றைக்கு விருப்பம் இருந்திருக்கிறது? அமைதியாக அவளைக் கட்டிக் கொண்டு படுத்துவிட்டான்.
மறுநாள் அவள் மறுத்தாலும் கேட்காமல் இழுத்துச் சென்றுவிட்டான் அரக்கன்…
இங்கே அலுவலகத்தில் தனுஜா தன் கேபினுக்குள் அமைதியாக அமர்ந்த வேலை செய்து கொண்டிருந்தாள். வழக்கமாக சிரிப்புச் சத்தமும், வால்தனமான வேலைகளும் இல்லாமல், ஏனோ இன்று அந்த இடமே மயான அமைதியில் உறைந்திருந்தது.
பாலாஜி தன் கேபினுக்குள் அமர்ந்து லேப்டாப்பில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாலும், அவனது பார்வை அவ்வப்போது அவள் மீது படிந்து மீண்டது. அன்று மருத்துவமனையில் அவன் உதிர்த்த அந்த ஒற்றை வார்த்தை, அவளின் மலர் போன்ற மனதை இவ்வளவு தூரம் வாடச் செய்யும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.
“என்ன பிரச்சனைன்னு தெரியல. எங்க பொண்ணு இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கவே மாட்டேங்குறா…” என்று அவளுடைய பெற்றோர் இன்று காலையில் போன் செய்து கூறியிருந்தனர்.
இவனுமே, “எனக்கு புரியுது, நான் பேசிப் பார்க்கிறேன். நீங்க ஆக வேண்டிய வேலைகளை பாருங்க” என்று அப்போதைக்கு கூறிவிட்டான். ஆனால் அவளை எப்படி சமாதானம் செய்வது என்று சத்தியமாக பாலாஜிக்கு தெரியவில்லை!
அதற்காக அப்படியே இருக்கவும் முடியாதே. ஏதாவது செய்தாக வேண்டுமே! தயங்கி தயங்கி அவளது கேபினுக்கு சென்றான்.
“தனு…” என்று அவன் குரல் கொடுக்க,
“சொல்லுங்க அத்தான்!” என்று துள்ளிக் குதித்து எழும் அந்தப் பெண், இன்று நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை.
“தனுஜா…” என்றான் இரண்டாம் முறையாக.
“எஸ் சார்… என் டிசைன்ல ஏதாவது கரெக்ஷன் இருக்கா?” என்று மிகத் தெளிவான, ஆனால் உணர்ச்சியற்ற குரலில் கேட்டாள்.
‘சார்’ என்ற அந்த வார்த்தை பாலாஜியின் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல இருந்தது. அவளது பாராமுகமும் அதில் இருந்த அழுத்தமும் அவனுக்கு அந்நியமாகத் தெரிந்தது.
“தனு… எதுக்கு இப்படி சார், கீர்னுட்டு? நான்… நான் அன்னைக்கு ஏதோ டென்ஷன்ல…” என்று அவன் தடுமாற,
“சார்! இது ஆபீஸ். இங்க பர்சனல் கதையெல்லாம் பேச வேண்டாம். உங்களுக்கு ஏதாவது வேலை இருந்தா மட்டும் சொல்லுங்க, மத்த விஷயங்களை பேசி என் நேரத்தை வேஸ்ட் பண்ணாதீங்க!” என முகத்தில் அடித்தாற்போலப் பேசிவிட்டு, கணினியில் தன் பார்வையை அழுத்தமாகப் பதித்துக் கொண்டாள்.
பாலாஜிக்குத் தன் தவறு இப்போதுதான் சுளீரென உறைத்தது. இதைப்போல தினம் நூறு முறை அவளிடம் கூறியிருக்கிறான். அவளுக்கும் அந்த நொடி இப்படித்தானே இருந்திருக்கும்?! என்று காலம் கடந்த ஞானம் கொண்டான்.
மதிய உணவு இடைவேளை…
தனுஜா சாப்பிடாமல் தனியே அமர்ந்து ஏதோ யோசனையில் இருக்க, பாலாஜி மெல்ல அவளை நெருங்கினான். அவளுக்குப் பிடித்தமான, பக்கத்துக் கடை சிக்கன் பிரியாணியை ஒரு தட்டில் போட்டு, மெல்ல அவளது மேஜையின் ஓரத்தில் வைத்தான்.
அதன் அடியில் ஒரு சின்ன வெள்ளை காகிதத்தில், ‘சாரி தனு… தெரியாம பேசிட்டேன். இனி இப்படி நடக்காது – உன் பாலாஜி’ என்று கிறுக்கி இருந்தான்.
தனுஜா அந்தக் காகிதத்தைப் பார்த்தாள். பாலாஜி கண்கள் மின்ன அவள் பதில் பார்வைக்காக காத்திருந்தான். ஆனால் தனு, அருகில் ஃபைல் அடுக்கிக் கொண்டிருந்த பியூனைச் சத்தமாகக் கூப்பிட்டாள்.
“அண்ணா… இங்க வாங்க!”
அவன் அருகில் வந்ததும், அந்த பிரியாணியை அப்படியே அவனிடம் நீட்டினாள்.
“இந்தாங்கண்ணா… இதை நீங்களே சாப்பிடுங்க. இனிமே தேவையில்லாத பொருட்கள என் டேபிள்ல வந்து வைக்க கூடாதுன்னு உங்க மேனேஜர் கிட்ட கண்டிப்பா சொல்லுங்க!”
பாலாஜியின் முகம் பாறை மேல் விழுந்த மண் பானையைப் போலச் சிதறிப் போனது. பியூன் வேறு ஒரு மாதிரி அவனைப் பார்க்க, அவமானம் அவனைக் கொன்றது.
“தனு… இது ரொம்ப ஓவர்… நான் எத்தனை தடவைதான் சாரி கேட்கிறது?” என்று அவன் பற்களைக் கடிக்க,
“உங்களை நான் சாரி கேட்க சொல்லலையே சார். அதுவும் போக, இப்ப இதை நான் வாங்கி சாப்பிட்டா, பணம் காச பார்த்து பல்ல காட்டிட்டு வந்தவதானடி நீனு நாளைக்கே ஈஸியா ஏதாவது சொல்லுவீங்க. எனக்கு எதுக்கு இந்த வேண்டாத பேச்சு எல்லாம்? நீங்க உங்க வேலையைப் பாருங்க, நான் என் வேலையை பார்க்கிறேன்!” என்று எழுந்து விறுவிறுவென நடந்தாள்.
பாலாஜி அந்த இடத்திலேயே சிலையாக நின்றான். வார்த்தைகள் உயிர் வரை வலிக்கும் என்று முதன்முறை உணர்கிறான்…
‘வெறும் இரண்டு சாரியும், ஒரு பரிசும் போதும் அவள் மனதை தேற்ற!’ என்று நினைத்திருந்தவனுக்கு, தான் செய்திருப்பது சரி செய்ய முடியாத பிழை என்று இப்போதுதான் விளங்கியது.
