அதிகாலை ஐந்து மணி…
சென்னையின் ஒரு பாதி இன்னும் முழுதாக விழித்திருக்கவில்லை. ஆனால், மீனம்பாக்கம் விமான நிலையம் எப்போதும் போல அந்நேரமே தன் பரபரப்பைத் தத்தெடுத்திருந்தது. இனம்புரியாத அச்சத்தோடு சூர்யாவிற்குப் பின்னால் நிழலாக நடந்து கொண்டிருந்தாள் பூர்ணிமா.
சூர்யா, ஒரு கறுப்பு நிற ஹூடியும், அதற்கேற்ற கூலிங் கிளாஸும் அணிந்து, அந்த அதிகாலை நேரத்திலும் ஒரு சர்வதேச நட்சத்திரத்திற்கே உரிய மிடுக்கோடு நடந்து கொண்டிருந்தான். முதன்முறை டிஷர்ட்டும் பேண்டும் அணிந்திருந்த பூர்ணிமா, அவனது நீண்ட காலடிகளுக்கு ஈடுகொடுக்க முயன்று ஓடி வந்தாள்.
‘பரவாயில்லையே, சுடிதாரை விட இந்த டிரஸ்ஸும் ஷூவும் ஓட வசதியா இருக்கு!’ என்று அவள் நினைப்பது அப்படியே அவள் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.
விமானம் மேகக் கூட்டங்களைக் கிழித்துக் கொண்டு டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கிய போது மதிய வெயில் தகித்துக் கொண்டிருந்தது. சென்னையின் வெயிலுக்கும் டெல்லியின் அனலுக்கும் ஏகப்பட்ட வித்தியாசம். அந்த வறண்ட காற்று பூர்ணிமாவின் நுரையீரல் வரை சுட்டது.
விமான நிலையத்திற்கு வெளியே சூர்யாவிற்காகக் காத்திருந்த அந்தப் பிரம்மாண்டமான வெள்ளை நிற சொகுசு கார், அவர்களை நோக்கி விரைந்து வந்தது. கார் டெல்லியின் அகலமான சாலைகளில் சீறிப் பாய்ந்து, ‘தி இம்பீரியல்’ என்ற அந்த ஏழு நட்சத்திர ஹோட்டலின் வாசலில் வந்து நின்றது.
பளிங்குத் தரை, கண்ணைப் பறிக்கும் சரவிளக்குகள், எங்கு பார்த்தாலும் அந்நிய மொழியில் பேசும் மனிதர்கள் என அந்தச் சூழலே பூர்ணிமாவை நிலைகுலையச் செய்தது. ஒரு பாதுகாப்பற்ற உணர்வு அவளை மெல்ல ஆட்கொண்டது.
ஹோட்டல் லாபியின் நடுவே நின்றிருந்த பூர்ணிமாவின் பார்வை, வரவேற்பு அறையில் செக்-இன் செய்து கொண்டிருந்த சூர்யாவின் மீது நிலைத்திருந்தது. அப்போதுதான் அவள் காதுகளைத் துளைக்கும் படி அந்த ஹீல்ஸ் சத்தம் கேட்டது. அது யாருடையது என்று திரும்பிப் பார்க்காமலே உணர்ந்த பூர்ணி, அருகில் இருந்த தூண் பின்னால் மறைந்து கொண்டாள்.
அப்சரா ஒரு மின்னலைப் போல ஓடி வந்து சூர்யாவைக் கட்டிக் கொண்டு, “பேபி… ஐ மிஸ்டு யூ லாட்!” என்று தன் வழக்கமான பல்லவியை பாடினாள்.
சுற்றியிருப்பவர்கள் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் சூர்யாவின் கன்னத்தில் முத்தங்களை மழையாகப் பொழிய, பூர்ணிமா தன்னிச்சையாகத் தலைகுனிந்து கொண்டாள். சூர்யா அவளை தடுக்கவில்லை… அவனது கண்கள் மட்டும் தூணுக்கு பின்னால் ஒடுங்கி நின்ற பூர்ணிமாவின் மீது ஓர் நொடி பதிந்து மீண்டது.
அதை கவனித்துவிட்ட அப்சரா மெல்லத் திரும்பி பூர்ணிமாவைப் பார்த்தாள். அவளது அழகான முகத்தில் ஒருவித ஏளனம் குடியேறியது.
“பேபி, இவளை எதுக்கு லாபி வரை கூட்டிட்டு வந்த? ஹோட்டல் பின்னால வேலைக்காரங்களுக்குன்னு தனியா சின்ன ரூம்ஸ் இருக்கும், அங்க போய் தங்கிக்கச் சொல்ல வேண்டியதுதான?” என்று பூர்ணிமாவை விரட்டும் நோக்கில் அதிகாரமாகப் பேசினாள் அப்சரா.
பூர்ணிமாவுக்கு அதற்கு மேல் அங்கு நிற்க உடல் கூசியது. இன்னும் ஒரு நொடி இருந்தால் மற்றவர்கள் முன்னால் அவள் தன்னை இன்னும் சிறுமைப்படுத்துவது போல ஏதாவது அசிங்கமாக சொல்லி விடுவாள் என்று பயந்தாள். எனவே தன் பெட்டியைத் தூக்கிக் கொண்டு நகர முனைய, சூர்யாவின் கணீர் குரல் அந்த இடத்தையே நிசப்தமாக்கியது.
“பூர்ணிமா என் கூட, என் ரூம்லதான் தங்கப் போறா!”
அப்சரா அதிர்ந்து போனாள். ஆனாலும் அடுத்த கனமே தன் முகத்தை மாற்றிக்கொண்டாள்.
“வாட்? பேபி… நாம ரெண்டு பேரும் தனியா டைம் ஸ்பெண்ட் பண்ணலாம்னு நான் எவ்வளோ பிளான் பண்ணி வச்சிருக்கேன். இவ எதுக்கு நம்ம கூட?” என ஆவேசமாகக் கத்தினாள்.
சூர்யா அவளை ஒரு கூர்மையானப் பார்வை பார்த்தபடி, “என் டிரஸ், என் திங்ஸ் எல்லாம் அவதான் மேனேஜ் பண்ணனும். சோ, அவ என் கண்ணு முன்னாடிதான் இருக்கணும். தட்ஸ் இட்!” என்று கறாராகச் சொல்லிவிட்டு, கார்டு கீயை வாங்கிக் கொண்டு லிஃப்ட் நோக்கி நடந்தான்.
அப்சராவின் முகம் ஆத்திரத்தில் கறுத்தது. அப்போது அவளது தோளைத் தொட்டான் சுஜித்…
“விடு அப்சரா… சக்சஸ் மீட் முழுக்க முழுக்க அவனை நம்பித்தான் இருக்கு. இப்போதைக்கு அவன் சொல்றதைக் கேட்டுக்கோ. நாம அப்புறம் பார்த்துக்கலாம். என்கூட வா” என்று அவளைச் சமாதானப்படுத்தித் தன்னோடு அழைத்துச் சென்றான்.
போகும்போது பூர்ணிமாவைப் பார்த்து அவன் உதிர்த்த அந்த வில்லத்தனமானப் புன்னகை, அவளை உறைய வைத்தது.
மாலை நேரம்…
வானம் செந்நிறமாகிக் கொண்டிருந்தது. சூர்யா ஒரு அலுவலக வேலைக்காக புறப்பட்டுச் சென்றான்.
அவன் கிளம்பும் போதே, “நான் வர்ற வரைக்கும் ரூமை விட்டு வெளிய வராத” என்று பூர்ணிமாவிடம் சொல்லிவிட்டுத்தான் சென்றான்.
ஆனால், நேரம் இரவு பத்து மணியை நெருங்கி விட பூர்ணிமாவிற்கு வயிறு பசியால் கிள்ளியது. இதற்கு முன் இது போன்ற ஹோட்டலுக்கு வந்து பழக்கம் இல்லை அவளுக்கு. எனவே அறைக்கு ஆர்டர் செய்து சாப்பிடவும் தெரியவில்லை.
‘சும்மாவே அறைக்குள் உட்கார்ந்து இருப்பதற்கு பதில், கீழே லாபி பக்கம் சென்று பார்க்கலாம். அவன் வருகிறானோ இல்லையோ. குறைந்தபட்சம் அவனும் டீமும் மொத்தமும் எங்கு போயிருக்கிறது? எப்போது திரும்பி வரும் என்ற தகவலாவது தெரிய கிடைக்கும்…’ என்று நினைத்துக் கொண்டு கிளம்பி சென்றாள்.
வந்த பாதையை நினைவுப்படுத்தி நடந்தவள் லிப்டை கண்டுபிடித்து விட்டாள். அங்கிருந்த பொத்தானை அழுத்தி உள்ளே நுழைந்ததும், லிஃப்ட் கதவுகள் மூடத் தொடங்கியது. அந்தத் தருணம், திடீரென ஒரு கை கதவைத் தடுத்தது.
உள்ளே நுழைந்தது சுஜித்! பூர்ணிமாவுக்கு மூச்சே நின்றது போலிருந்தது.
சுஜித் கழுகுக் கண்களோடு அவளைப் பார்த்தான். மெல்ல நெருங்கி, லிஃப்ட் சுவற்றோடு அவளைச் சாய்த்தான். அவனது ஒரு கை அவளது தலைக்கு இடது பக்க சுவற்றில் உறுதியாய் நின்றது.
பூர்ணிமாவின் உடல் பயத்தில் நடுங்கிட, “என்னை விட்ருங்க…” என்று தழுதழுத்த குரலில் கெஞ்சினாள்.
“விடுறதுக்கா இவ்வளவு தூரம் தேடி வந்தேன்?” என்று அவளது முகவாய் கட்டையைத் தூக்கித் தன்பக்கம் திருப்பினான்.
“சூர்யா… சூர்யா…” அனிச்சையாய் அவள் அவன் பெயர் சொல்லி அலறினாள்.
“அவனை ஏன் தேடுற? அவன் இந்நேரம் என் தங்கச்சி மடியில தூங்கிட்டு இருப்பான்…” என்றதும் இவளுக்கு நிதர்சனம் நெற்றிப் பொட்டில் அடித்தது.
இதற்குள் லிஃப்ட் தரைத்தளத்தை அடைந்து ‘டிங்’ என்ற சத்தத்தோடு கதவு திறந்தது.
சுஜித் அவளை ஒரு குரூரமானப் பார்வை பார்த்துவிட்டு, “சக்சஸ் மீட் முடிஞ்சதும் உனக்கு ஒரு பெரிய சர்ப்ரைஸ் காத்துட்டு இருக்கு. வச்சு செய்யிறேனா இல்லையானு பாரு” என்று சொல்லிவிட்டு வெளியேறினான்.
விழுந்தடித்துக் கொண்டு வெளியே வந்தவள், அவன் போன திசைக்கு எதிர் திசையில் கண் மண் தெரியாமல் ஓடி தோட்டப் பகுதியை அடைந்தாள். மங்கலான வெளிச்சத்தோடு ஆள் நடமாட்டம் இல்லாமல் அழகாக இருந்தது அந்த தோட்டம். சுற்றிலும் வேலி போடப்பட்டு இருக்க, ஏனோ இவளுக்கு இந்த இருட்டு தனக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று தோன்றியது.
ஒரு மரத்தின் அடியில், இருட்டான இடம் பார்த்து சுருண்டு அமர்ந்தாள் பூர்ணிமா. சுஜித்தின் சிரிப்பும் மிரட்டலும் அவளது காதுகளுக்குள் ஓயாமல் ரீங்காரமிட்டன. அவன் தொட்ட அந்த முகவாய் பகுதி, இன்னும் தீயால் சுட்டது போல எரிந்தது.
“கடவுளே… ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்குது?” என்று தேம்பித் தேம்பி அழுதாள்.
அரை மணி நேரத்திற்கு பிறகு பெரிய சைஸ் பஸ் இரண்டு ஹோட்டலுக்குள் நுழையும் சத்தம் கேட்டது.
‘சூர்யா வந்துவிட்டானா? இல்லை வேறு யாருமா? அவன் அறைக்குச் சென்று இவள் இல்லையென்று தெரிந்தால் என்ன செய்வான்? ஒருவேளை அவன் அப்சராவின் அறைக்குத்தான் சென்றிருப்பானோ? சுஜித் சொன்னது போல அவளது மடியில் தான் கிடக்கிறானோ?’ எண்ணங்கள் அவளைக் குதறி எடுத்தன.
முழங்காலில் முகத்தை புதைத்து அழுது கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில், கனமான பூட்ஸ் காலணிகளின் சத்தம் தரையை அதிர வைத்தபடி அவளை நோக்கி நெருங்கியது. அந்தச் சத்தம் அவளுக்கு மிக மிக பரிச்சயமானது!
திடுக்கிட்டுத் தலை நிமிர்ந்தாள். அங்கே, நிலவின் வெளிச்சத்தில் ஆஜானுபாகுவாய் நின்று கொண்டிருந்தான் சூர்யா. அவனது கண்கள் இருட்டிலும் கனலாய் மின்னின.
“இங்க என்ன பண்ற?” அவனது குரலில் இருந்த அதிகாரம், காற்றையும் ஒரு நிமிடம் அதிரச் செய்தது.
பூர்ணிமா பதில் சொல்லத் தெரியாமல் திகைத்து நின்றாள். அவளது கலைந்த தலைமுடியும், கண்ணீரால் வீங்கிய கண்களும், பயத்தில் துடிக்கும் அந்த இதழ்களும் அவளுக்கு ஏதோ விபரீதம் நடந்திருப்பதைச் சத்தமில்லாமல் பறைசாற்றின.
விறுவிறுவென அவளை நெருங்கியவன், அவளது கையைப் பற்றித் தூக்கி, “உன்னத்தான் கேக்குறேன்! ரூமை விட்டு வெளியே வரக்கூடாதுன்னு சொன்னேனா இல்லையா? இங்க வந்து எதுக்கு அழுதுட்டு இருக்க?” என்று உறுமினான்.
பூர்ணிமா விக்கி விக்கி அழுதாளே தவிர, வாய் திறக்கவில்லை. அவனது இரும்புப் பிடியில் அவளது மணிக்கட்டு நசுங்கியது.
“யார்? யாரது?” என்று அவன் கர்ஜிக்க, பூர்ணிமா அவசரமாகத் தலையை இடவலமாக ஆட்டினாள்.
‘சொல்லிவிடலாமா? சுஜித் செய்த அசிங்கத்தைச் சூர்யாவிடம் கொட்டிவிடலாமா?’ என்று ஒரு நொடி அவள் மனம் ஏங்கியது. ஆனால் அடுத்த கணமே நிதர்சனம் அவளைத் தடுத்தது.
சுஜித் அவனது உயிர் நண்பன். இந்திய அணியின் கேப்டன். எல்லாவற்றிற்கும் மேலாக, அவன் உயிருக்கு உயிராகக் காதலிக்கும் அப்சராவின் உடன் பிறந்த அண்ணன். கடந்த முறை சென்னையிலேயே சுஜித் இவளிடம் வம்பு செய்தபோது, சூர்யா அவனைத் தட்டிக் கேட்கவில்லையே? ஒரு சின்ன முக மாற்றம் கூட காட்டாமல் மௌனமாகத் தானே இருந்தான்? இப்போது சொன்னால் மட்டும் என்ன மாறிவிடப் போகிறது?
“ஒன்னுமில்லை சூர்யா… பசிச்சது… அதான் கீழ வந்தேன். வழி தெரியாம இங்க வந்துட்டேன். இந்த இடம் புதுசா இருக்கா… அதான் ஒரு பயம்… வேறொன்னும் இல்லை” என்று அப்பட்டமானப் பொய்யைச் சொல்லிவிட்டுத் தலைகுனிந்து கொண்டாள்.
சூர்யா அவளது முகவாய் கட்டையைப் பிடித்துத் தூக்கி, நேருக்கு நேர் அவளது கண்களைப் பார்த்தான். அந்தப் பார்வையில் இருந்து எதையும் மறைக்க முடியாது என்று அவளுக்குத் தெரியும்.
“பொய் சொல்லாத… சுஜித் வந்தானா?”
அவன் சரியாகக் கணித்ததும் பூர்ணிமாவுக்கு உடல் நடுங்கியது. எதுவும் பேசாமல் இதழ்களை இறுக்கமாக மூடிக்கொண்டாள்.
சூர்யா அவளை ஒரு விசித்திரமானப் பார்வை பார்த்தான். அவனது இதழோரம் ஒரு குரூரமானப் புன்னகை வந்து மறைந்தது. அவளுக்குத் தெரியாமல் அவளைக் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறான் என்பது அந்தப் பேதைக்குத் தெரியவில்லை பாவம்…
