ரசிகை – 19

என் பொய்யை நம்பிவிடு… என்று கெஞ்சுவது போல சூர்யாவை பார்த்துக் கொண்டே இருந்தால் பூர்ணி.

“சரி, நம்பிட்டேன் வா…” என்றவன், அவளை அப்படியே கொத்தாகத் தூக்கினான்.

“சூர்யா… விடு… நானே நடந்து வர்றேன்” என்று அவள் துடித்தும் பலனில்லை. அவளைத் தன் தோளில் போட்டுக்கொண்டு கம்பீரமாக ஹோட்டல் காரிடாரில் நடந்தான்.

எதிர்படும் எல்லோரும் ஒரு நொடி அவனையும் அவளையும் திரும்பி பார்த்துவிட்டு செல்ல, இவளுக்குத்தான் ஒரு மாதிரி இருந்தது.

லிஃப்டில் ஏறியபோதும் அவள் அவனது பிடியில் தான் இருந்தாள். அறைக்கதவைத் திறந்து உள்ளே நுழைந்தபோது, அங்கே சோபாவில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு அப்சரா அமர்ந்திருந்தாள். சூர்யாவின் தோளில் பூர்ணிமாவைப் பார்த்ததும் அவளது முகம் அஷ்டகோணலாக மாறியது.

“பேபி! என்ன இது?” என்று சீறினாள். சூர்யா அவளைக் கண்டுகொள்ளவே இல்லை. 

பூர்ணிமாவை மெத்தையில் அமர வைத்தவன், இண்டர்காமில் அழைத்து, “ரூம் சர்வீஸ்… ஒரு செட் சப்பாத்தி, ரெண்டு கிளாஸ் ஜூஸ்… இப்போவே வேணும்!” என்று ஆர்டர் செய்தான்.

“சூர்யா! நான் உன்கிட்ட பேசிட்டு இருக்கேன்” என்று அப்சரா சத்தமிட, சிறு அவசரமும் இன்றி அலட்சியமாய் அவளைத் திரும்பிப் பார்த்தான் சூர்யா. 

“அப்சரா, இப்போ எனக்குத் தூக்கம் வருது. நீ உன் ரூமுக்கு கிளம்பு. நாளைக்கு வந்து உன்னை மீட் பண்றேன்” என்று முகத்தில் அடித்தாற்போலப் பேசினான்.

சூர்யாவின் அந்தப் பேச்சில் இருந்த அழுத்தம் அப்சராவை மௌனமாக்கியது. பூர்ணிமாவை ஒரு கொலவெறிப் பார்வை பார்த்துவிட்டு, கதவை ஓங்கி சாத்திவிட்டு வெளியேறினாள் அவள்.

உணவு வந்தது… சூர்யா அவளே எதிர்பார்க்காத வகையில், தட்டில் இருந்த உணவை எடுத்து அவளுக்கு ஊட்டத் தொடங்கினான். பூர்ணிமா திகைத்துப் போய் அவனைப் பார்த்தாள்.

“சாப்பிடுடி…”

அவன் மிரட்டியபடி ஊட்டினாலும், அவனது விரல்கள் பட்ட அந்த உணவில் அவளுக்குப் பசி தீர்ந்ததோ இல்லையோ, மனதின் பாரம் சற்று குறைந்தது போலிருந்தது. ஆனால், சுஜித் என்ன பிளான் செய்து கொண்டிருக்கிறானோ என்ற அச்சம் மட்டும் அவளது அடிவயிற்றில் ஒரு நெருப்பாய் எரிந்து கொண்டே இருந்தது.

எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சக்ஸஸ் மீட்டிற்கான நாள் வந்தது!

அந்த டிவி சேனல் நிறுவனமே இந்திர லோகமே தரை இறங்கி வந்தது போல மின்னொளியில் ஜொலித்துக் கொண்டிருந்தது. ‘சக்சஸ் மீட்’ விழாவுக்காக மொத்த சேனலையும் புது பெண் போல அலங்கரித்து வைத்திருந்தனர். 

கிரிக்கெட் வீரர்கள் ஒவ்வொருவராக காரில் வந்து இறங்கினர். ஒட்டுமொத்த இந்தியாவின் பார்வையும் சூர்யாவின் மீதுதான் நிலைத்திருந்தது. சூர்யாவும் அவன் கைப்பிடித்து வந்த அப்சராவும்தான் அந்த விழாவின் மையப்புள்ளிகள்.

பூர்ணிமா வடிவமைத்த டிசைனர் சூட்டில், சூர்யா கிரேக்கச் சிலையென மிளிர, அவனுக்கு தோதாய் தேவதை போல அப்சராவும் அவனோடு ஒட்டி நடந்து வந்தாள். புகைப்படக் கலைஞர்களின் கேமரா கண்கள் ஓயாமல் மின்னின. பத்திரிகையாளர்களிடம் பேசும்போது கூட அப்சராவின் இடையைச் சுற்றி வளைத்திருந்தது சூர்யாவின் கரம்.

இரண்டு மணி நேர லைவ் டெலிகாஸ்ட் ஒருவழியாக முடிவடைய, அங்கிருந்து கிளம்பி ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தனர். ஹோட்டலின் மேல் தளத்தில் அமைக்கப்பட்டிருந்த ரூஃப் ஃபுட் கோர்ட்டில் பார்ட்டிக்கு ஏற்பாடாகியிருந்தது‌. விலையுயர்ந்த மது வகைகளும், மேற்கத்திய இசையும் அந்த இடத்தைச் சொர்க்கமாக காட்டிற்று.

அந்தக் கூட்டத்தில் ஒரு ஓரமாக, வீட்டிற்கு செல்லும் பாதை மறந்த சிறுமி போல நடுங்கி ஒடுங்கி நின்றிருந்தாள் பூர்ணிமா. அறையை விட்டு வெளியே வரக்கூடாது என்று சொன்னவன், இன்று மட்டும் எதற்காக தன்னை இங்கே கூட்டி வந்த நிறுத்தி இருக்கிறான் என்று அவளுக்கு புரியவில்லை. அதைப் பற்றி யோசிக்கும் மனநிலையிலும் அவள் இப்போது இல்லை!

அவன் அப்சராவிடம் காட்டிடும் அதீத நெருக்கம், பூர்ணிமாவின் இதயத்தில் ஊசியால் குத்துவது போன்ற வலியைத் தந்து கொண்டிருந்தது.

‘இது வேடிக்கை பார்க்க தான் என்னை கூட்டி வந்து வைத்தாயா? இதற்கு நான் சிவனே என அறைக்குள்ளயே இருந்திருப்பேனே…’ என்று முகம் வாட நின்றிருந்தாள்.

அப்போது அப்சராவின் தந்தை ஆகாஷ், கையில் மதுக் கோப்பையோடு சூர்யாவை நெருங்கினார். அவர் முகத்தை பார்த்த நொடி, பூர்ணியின் இதயம் ஐநூறு கிலோமீட்டர் வேகத்தில் துடிக்க ஆரம்பித்தது.

‘தள்ளிப் போயிடு சூர்யா…’ என்று சொல்லத் துடித்தது அவள் இதழ்கள் இரண்டும். ஆனால் அதற்கு முன், அவன் அவரைக் கட்டி அணைத்திருந்தான். ஒரு நொடி அங்கு நடப்பது எதுவுமே பூர்ணிமாவுக்கு விளங்கவில்லை. திக்பிரமை பிடித்தவள் போல நின்றிருந்தாள் பேதை.

“சூர்யா, உங்கிட்ட கொஞ்சம் பேசணுமே?” எனச் சன்னமானக் குரலில் கேட்டார்.

“என்ன விஷயம் சார்? ரொம்ப சீரியஸா இருக்கீங்க? ஏதும் பிரச்சனையா?”

ஆகாஷ், “அப்சராவுக்கு உனக்கும் நடுவுல என்ன பிரச்சனை சூர்யா? நான் அவளை உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிற மைண்ட் செட்ல இருந்தேன். ஆனா, நீ அந்த ஐடியால இல்ல போல இருக்கே…”

“ஏன் அங்கிள் இப்படி கேக்குறீங்க?”

“வேற ஒரு பொண்ணைக் கூடவே கூட்டிட்டு சுத்துறியாம்? அதுவும் உன் ரூம்லயே தங்க வச்சிருக்கியாம்?” 

சூர்யா அலட்சியமாகச் சிரித்தான். தன் கையில் இருந்த மதுவை ஒரு மிடறு பருகிவிட்டு, “சார், நீங்க ஒரு பிசினஸ் மேக்னெட்… ஆனா பொண்ணு விஷயத்துல நார்மல் அப்பாவா இருக்கீங்க” என்றான் நக்கலாக.

“என்ன சொல்ற?”

“என் கம்பெனிக்கு வேலைக்கு வர்ற பொண்ணுங்கள்ல மாசத்துக்கு ஒருத்தியை இப்படி இழுத்துட்டு சுத்துவேன். இது அப்சராவுக்கும் தெரியும். இந்தத் தடவை சிக்கின பொண்ணு செம அழகு, சும்மா நச்சுனு இருக்கா! சுஜித்கூட அவளை கேட்ருக்கான். நான் ஒரு ரெண்டு மாசம் கூட வச்சிருந்துட்டு, அவனுக்கு கை மாத்தி விடுற ஐடியால இருக்குறேன். 

இந்த மாதிரி பொண்ணுங்க எல்லாம் நமக்கு போட்டுக்குற துணி மாதிரி. கொஞ்சம் பழசாயிட்டா குப்பைத் தொட்டியில தூக்கி எறிஞ்சிடுவேன். அப்சரா என்னோட கிரீடம், அவளை விட்டுட்டு என்னால இருக்க முடியுமா? அவளுக்குத்தான் புரியலனா, நீச்களும் எதுக்கு சார் இவ்வளவு சீரியஸா எடுத்துக்குறீங்க?”

அவன் பேசிய வார்த்தைகள் அனலாகக் கிளம்பி, சற்றுத் தள்ளி மறைந்து நின்று இதைக் கேட்டுக் கொண்டிருந்த பூர்ணிமாவின் காதுகளில் விழுந்தது. அவளது இதயம் ஒரு நொடி துடிப்பதை நிறுத்தியது. அவளது கண்கள் இருண்டன. 

‘நேற்று இரவு அதே இதழ்களால் முத்தமிட்டு, உன் கூடவே இருப்பேன்! என்று சொன்ன அதே சூர்யா தானா இது? இன்று என்னை பழைய துணி என்கிறான்?! இரண்டில் எது அவனது உண்மையான முகம்?’ என்று தன்னைத்தானே இன்னும் குழப்பி கொண்டாள்.

ஆகாஷ் வெடித்துச் சிரித்தபடி, “அவ்வளவுதானா? இதுக்கு போயா நீ இவ்வளவு டென்ஷன் ஆன? சூர்யா தெளிவாத்தான் இருக்கான் பாரு” என்று மகளிடம் கேட்டார்.

“நீதான் அங்கிளையும் சேர்த்து கன்ப்யூஸ் பண்ணி விட்டதா?” என்று கேட்டதற்கு உதட்டை சுழித்துக் கொண்டு முகத்தை திருப்பினாள். 

“பார்ரா, அங்கிள் நியாயப்படி நான்தான் உங்க ரெண்டு பேர் மேலயும் கோபப்படணும். அப்சராவ நான் போற இடத்துக்கெல்லாம் கூட்டிட்டுப் போறேன்… கப்புள் டிரஸ் டிசைன் பண்ணிப் போட்டு, பப்ளிக்கா அவ என் கேர்ள் பிரண்டுன்னு சொல்லாம சொல்லிட்டேன். கல்யாண  தேதி அன்வுன்ஸ் பண்ணாதது ஒன்னு தான் மிச்சம். 

இத்தனைக்குப் பிறகும் நீங்க உங்க ஏர்லைன்ஸ் கம்பெனில எனக்கு ஷேர் தர மாட்டேங்கிறீங்க. அவ அவளோட லைஃப்ல ஷேர் தர மாட்டேங்குறா. என் மேல இன்னும் உங்களுக்கு முழு நம்பிக்கை வரலை இல்ல. பேசாம சுஜித் மாதிரி நானும் சிங்கிளாகவே இருந்திருக்கலாம்!” என்று கொஞ்சல் மொழியில் கோபித்துக் கொண்டான்.

ஆகாஷின் முகம் நிறம் மாறிட, “அதுக்கு என்னப்பா அவசரம்? கல்யாணம் முடியட்டும், என் கம்பெனி ஷேர்ஸ்ல டுவென்ட்டி பர்சென்ட் உனக்குத் தர்றேன். இந்த வருஷம் முடியிறதுக்குள்ள கல்யாண தேதி அனவுன்ஸ் பண்ணுறேன். ஓகேவா?” என்று கேட்க, சூர்யா சம்மதமெனத் தலையாட்டினான்.

பக்கா பிஸினஸ் மேனாக, தன் சொத்தை இழக்காமலேயே டீலை முடித்து விட்டதாக நினைத்து கர்வம் கொண்டார் ஆகாஷ்! ஆனால் தன் எதிரில் இருப்பவன், சாணக்கிய தந்திரங்களை கரைத்துக் குடித்தவன் என்று அந்த அந்த நொடி அவர் அறிந்திருக்கவில்லை…

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த, அப்பாவி பிள்ளையான பூர்ணிமாவுக்குத் தலை சுற்றியது. அவமானமும், ஏமாற்றமும் அவளைக் கொலையாய் கொன்றது. அந்த இடத்தை விட்டு ஓடிவிடத் துடித்தாள். 

தள்ளாடியபடி நடந்தவளிடம், “மேடம்  கூல் ட்ரிங்க்ஸ்” என்று ஒரு கண்ணாடி கிளாசை கொடுத்தான் பணியாளர். 

இதயம் தனலாய் கொதிக்க, அந்த குளிர்பானத்தை எடுத்து ஒரே மூச்சில் குடித்துவிட்டாள். அவளுக்குத் தெரியாது… அந்தக் கோப்பையில் ஏற்கனவே சுஜித்தின் ஆட்கள் போதை மருந்தைக் கலந்திருந்தார்கள் என்று!

சில நிமிடங்களிலேயே உலகம் அவளைச் சுற்றிச் சுழல ஆரம்பித்தது. கால்கள் தரை தட்டாமல் மிதப்பது போன்ற உணர்வு. பார்ட்டி ஹாலின் இசையும், கூச்சலும் அவளுக்குத் தூரத்தில் கேட்பது போலிருந்தது. நிலைகுலையத் தொடங்கியவள், எப்படியாவது தன் அறைக்குச் சென்றுவிட வேண்டும் என்ற வெறியில் ஹாலில் இருந்து வெளியேறினாள்.

இருண்ட காரிடாரில் அவள் தள்ளாடி நடந்தபோது, சுவற்றில் சாய்ந்து கொண்டு அவளுக்காகவே காத்திருந்தான் சுஜித்.

“என்னடி… ரூமுக்கு போக வழி தெரியலையா? வா… நான் கூட்டிட்டுப் போறேன்” என்று வக்கிரமாகச் சிரித்தபடி அவளது இடுப்பை வளைத்துப் பிடித்தான்.

பூர்ணிமாவுக்குப் பேசக் கூடத் தெம்பில்லை. 

“விடுங்க… சூர்யா…” என்று முணுமுணுத்தாள்.

“சூர்யா பிஸியா இருக்கான்டி! வா… இன்னைக்கு நைட் உன்னை வச்சு செய்யுறேன்” என்று அவளை ஒரு ஆளரவமற்ற அறை நோக்கி இழுத்துச் சென்றான். அத்தனை மயக்கத்திற்கு நடுவிலும் பூர்ணிமாவுக்குச் சூர்யா நேற்று இரவு சொன்னது ஞாபகம் வந்தது.

‘எப்பவும் உன் ஹேண்ட் பேக்ல இதை வச்சுக்கோ…’

அவள் கைகள் நடுங்கிக் கொண்டே தன் ஹேண்ட் பேக்கைத் துழாவியது. அதற்குள் சுஜித் அவளை அந்த இருட்டு அறைக்குள் தள்ளி, கதவைத் தாளிட்டான்.

“இன்னைக்கு உன்னை கடவுளாலகூட எங்கிட்ட இருந்து காப்பாத்த முடியாது!” என்று கூறி அவளது உடையைப் பற்றி இழுக்க முயன்றான்.

பூர்ணிமாவுக்கு ஆத்திரம் பொங்கியது. அந்த மயக்கத்திலும் தன் கைக்கு அகப்பட்ட பெப்பர் ஸ்ப்ரேவை எடுத்து, அவன் முகத்தை நோக்கி ஆவேசமாக அழுத்தினாள்.

“ஆ….!” என அலறியபடி அவன் கண்களைப் பொத்திக் கொண்டு பின்வாங்கினான்.

விடவில்லை பூர்ணிமா. சூர்யா அவளுக்குக் கொடுத்திருந்த அந்தச் சிறிய மடிப்புக்கத்தியை எடுத்து, கண் மண் தெரியாமல் ஒரு குத்து வைத்தாள்.

“அம்மா!” என அலறி துடித்த சுஜித் ரத்தம் சொட்டச் சொட்டத் தரையில் விழுந்தான்.

அவன் சுதாரிப்பதற்குள் தப்பிக்க வேண்டும் என்ற வெறி அவளை உந்தியது. தள்ளாடியபடி வெளியே ஓடி வந்தாள். ஆனால் அந்தப் பிரம்மாண்ட ஹோட்டலின் காரிடார்கள், அவளுக்கு வெறும் இருட்டு பாதையாக மட்டுமே தெரிந்தன.

‘சூர்யா… நீ வருவ… என்னைத் தேடி வருவ!…’

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page