ரசிகை – 21

இழந்த இரு பிள்ளைகளின் கௌரவத்தையும் இவன் ஒருவனை வைத்து மீட்டு விட வேண்டும் என்று திட்டமிட்டார் ஆகாஷ். 

“சூர்யா, மீடியாக்காரங்க ஹாஸ்பிடல் சுத்தி வளச்சுட்டாங்க. இவங்க ரெண்டு பேரும் வேற படுத்த படுக்கையா கிடக்கிறாங்க. ஏதாவது ஒன்னு செஞ்சு மீடியா கவனத்தை திசை திருப்பணும். உனக்கும் அப்சராவுக்கும் அடுத்த மாசமே  கல்யாணம் அனவுன்ஸ்மென்ட் பண்ணிடுவோமா? எல்லாரும் அப்ப பிரச்சனை எதுவும் நடக்கலையோனு கன்பியூஸ் ஆயிடுவாங்க…”

இதழ் சுழித்து சிரித்த சூர்யா, “அது எப்படி அங்கிள்? இதனால என்னோட பேர் கெட்டு போயிடுமே?” என்று இழுக்க, 

“ஏன்? உன் பெயர் கெட்டுப் போக என்ன காரணம் இருக்கு?” என்றார் அவர்.

“நாம இருக்கிறது ஹாஸ்பிடல். இந்த நேரத்துல அடுத்த மாசமே கல்யாணம் அனௌன்ஸ்மென்ட் வந்தா, அப்சரா ப்ரெக்னன்ட்னு தான் எல்லாரும் நினைப்பாங்க. அப்போ என்னோட ஒழுக்கம் கேள்விக்குறியா ஆகுது இல்ல? அது மட்டும் இல்லாம நானும் சில விளம்பர கம்பெனிஸ்ல இப்போதைக்கு கல்யாணம் பண்ணிக்க போறது இல்லன்னு சொல்லி அக்ரீமெண்ட் போட்டு இருக்கேன். திடீர்னு எனக்கு கல்யாணம்னு சொன்னா, அவங்க பணத்தை திருப்பி தர சொல்லி கேட்பாங்களே…” 

கோபத்தில் கொஞ்சமாக மூக்கு சிவந்த ஆகாஷ், “இதெல்லாம் ஒரு காரணமா சூர்யா? உன் பேர் இதுக்கு முன்னால எந்த பிரச்சனைலயும் மாட்டாத மாதிரி பேசாத‌. சுஜித் கேரியர், என் பொண்ணோட மானம், என் பிஸினஸ் எல்லாத்தையும் இந்த ஒரு அறிக்கையால மட்டும்தான் காப்பாத்த முடியும்னு தெரிஞ்சும் தேவை இல்லாம பேசுற?” என்று சீற,

“அப்போ தெரிஞ்சே என்னை சும்மா வேலை பார்க்க சொல்றீங்க. காசுக்கு ஏத்த தோசை அங்கிள். நான் என்ன கேட்பேன்னு உங்களுக்கு தெரியாதா?” ‌என்று சொன்ன பிறகுதான், சூர்யா கம்பெனி ஷேரில் பங்கு கேட்ட விஷயம் அவர் மனதில் சுருக்கென உரைத்தது. 

புஸ்… புஸ்… என மூச்சு விட்டவர், “சரி, நாளைக்கு காலைல பத்து மணிக்கு நீ கேட்டபடி 10% ஷேரை…” என்று சொல்லி முடிக்கும் முன், 

“25% ஷேர் வேணும் எனக்கு. அதுவும் இப்பவே… ஷேர் என் கைக்கு வந்த அடுத்த நிமிஷம் நான் மேரேஜ் அனௌன்ஸ்மென்ட் பண்ணிடுவேன்” என்றான் திமிராக.

ஆகாஷுக்கு அவன் நடவடிக்கை கடுப்பை வரவழைத்தது. வேண்டாம் என்று மறுத்து விடச் சொல்லி அவர் உயிர் அணுக்கள் ஒவ்வொன்றும் துடிக்க, அதை அடக்கிக் கொண்டு சரி! என்றார்.

திமிர் புன்னகையோடு, “முடிச்சதும் சொல்லுங்க அங்கிள். நான் அதுவரைக்கும் அப்சரா கூட இருக்கேன்” என்று கூறிவிட்டு நகர்ந்தான். 

சுஜித் அவனைவிட திறமை குறைந்தவன் தான். எனினும் கேப்டன் பதவி கிடைக்க காரணம், சூர்யா அதை விட்டுக் கொடுத்ததால்! எனவே சூர்யாவை சுஜித்தும் அவன் தந்தையும் போட்டியாக கருதவில்லை. மற்ற விளையாட்டு வீரர்களை எல்லாம், தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி உண்டு இல்லை என்று செய்வார்கள்! அடங்கிப் போனவர்கள் மட்டுமே இன்று வரை டீமில் இருக்கிறார்கள்.

அதே போலத்தான், அப்சரா விஷயத்திலும் எப்போதும் அவள் மனம் கோணாமல், நல்ல மாதிரியாக நடந்து கொண்டான் சூர்யா. பிசினஸ் கிரிக்கெட் என்று இரண்டிலும் முன்னணியில் இருப்பதால், ஆகாஷுக்குமே அவனை தன் மருமகன் ஆக்கிக் கொள்ள விருப்பம் தான். அந்த அளவு அவர் மனதில் இடம் பிடித்தவன், இன்று திடீரென முற்றிலும் வேறானவன் போல தெரிகிறான்.‌ 

அவன் நடை, உடை, பாவனை அனைத்திலும் ஒரு மாறுதல் தெரிந்தது. 

ஆகாஷ் ஷேர்ஸை கை மாற்றி கொடுத்த அடுத்த கணமே, சொன்னதைப் போல மீடியாவுக்கு தன் திருமணத்தைப் பற்றி அறிவிப்பு தந்து விட்டான். 

மதிய நேரம் அறைக்கு திரும்பி வந்தான். அவன் முகத்தை நிமிர்ந்து கூட பார்க்காமல் அமர்ந்திருந்தாள் பூர்ணிமா… 

“ஏன்டி ஒரு மாதிரி இருக்க? நீ ஓகே தான? உடம்புக்கு ஏதாவது செய்தால்” என்று கேட்டதற்கு, தலையை மட்டும் லேசாக ஆட்டினாள்.

“நான் வந்த வேலை முடிஞ்சது. உடனே சென்னை கிளம்பணும். அங்கதான் நமக்கு நிறைய வேலை இருக்கு. நான் குளிச்சிட்டு வர்றதுக்குள்ள சூட்கேஸ் பேக் பண்ணுடி பூரி. அடுத்த பிளைட்ல சென்னைக்கு கிளம்பிடுவோம்” என்றான் சூர்யா. 

பூர்ணிமாவோ இருந்த இடத்தை விட்டு அசையாமல் சிலை போல நின்று கொண்டிருந்தாள். 

“உன்னைத்தான்டி ரெடி பண்ணுனு சொன்னேன்…” என்று அழுத்தமாய் சொன்ன பிறகும் அவள் அசையவே இல்லை.

“என்னாச்சு?” என்று நெருங்க, அவள் சட்டென அவன் கையை பற்றிக் கொண்டாள். ‌

“உனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் சூர்யா. அந்த பொண்ணோட அப்பா அவ்வளவு நல்லவர் இல்லை.”

உதட்டை சுளித்து சிரித்தவன், “நானே நல்லவன் இல்லடி. உனக்கு தெரியாதா?” என்று கேட்டு ஒற்றைப்புருவத்தை உயர்த்தினான்.

“அவரோட பழகாத. அவர் சம்பந்தப்பட்ட எதுவுமே உனக்கு வேண்டாம் சூர்யா, ப்ளீஸ்…” என்று கரம் குவித்துக் கும்பிட்டாள். 

“எதுக்கு? ஒரு ரீசன் சொல்லு பார்ப்போம்…” என்று மார்புக்கு குறுக்காக கையை கட்டிக்கொண்டு அவளை முறைத்தான். அவளோ பதில் பேசாமல் தலை குனிந்து கொண்டாள். 

“சோ, எந்த காரணமும் இல்லை. அந்த ஆளு ஏர்லைன்ஸ் பிசினஸ் பண்றான். பொண்ணு பேர்ல பல கோடி சொத்து வச்சிருக்கான். உன்ன கல்யாணம் பண்ணிக்கலன்ற பொறாமையில, எனக்கு அமைய போற நல்ல வாழ்க்கையை கெடுக்குறியா நீ?…” என்று கேட்க விலுக்கென நிமிர்ந்தாள் அவள்.

“சூர்யா நான்…” என்பதற்கு மேல் ஒரு வார்த்தை பேசவில்லை.

“நீ இப்படியே ஊமைச்சாமியார் மாதிரி நின்னுட்டு இரு. நான் லக்கேஜ் பேக் பண்ணிட்டு கிளம்ப போறேன்” என்று பாத்ரூம் நோக்கி நடக்க, குடுகுடுவென ஓடி வந்து அவனுக்கு முன்னால் நின்றாள்.

“என்னனு சொல்லு, இல்ல எனக்கு வழிய விடு” இம்முறை அவன் குரல் கரகரப்பாக ஒலிக்க, அவளுக்கும் உண்மையைச் சொல்ல வேண்டிய கட்டாயம்.

“அவருதான்…” என்று இழுத்தாள்.

“அவருதான், நீ ரொம்ப நாளா என்கிட்ட கேட்டுட்டு இருந்த அந்த ஆள்!” என்று கூறிவிட்டு முகத்தை மூடி விம்மி அழுதாள்.

“புரியும்படி சொல்லு…” என்று அப்போதும் சூர்யா அவளை வார்த்தையால் வதைத்தான். 

ஒரு கணம் அவன் முகம் பார்த்தாள். பாறை போல இறுகி கிடந்தது. தெரிந்தே பேசச் சொல்கிறான் என்று அவளுக்கும் புரிந்தது. புறங்கையால் தன் கண்ணீரை துடைத்துக்கொண்டு பழைய நினைவடுக்கினை கிளறினாள்.

காலச் சக்கரம் பின்னோக்கிச் சுழல, அந்தச் சிறிய வீதியும், அருகிலேயே அமையப்பெற்ற புழுதி பறந்த விளையாட்டு மைதானமும் அவள் கண்முன்னே விரிந்தன.

அப்போது பூர்ணிமாவிற்கு வயது ஏழு. அன்னை மறைந்துவிட்ட துயரம் ஒருபுறம் இருக்க, அதை விடப் பெரிய சுமையாக ‘சித்தி’ எனும் உருவத்தில் ஒரு கொடுமை அவள் வீட்டில் குடியேறியிருந்தது. அந்தச் சித்திக்கு பூர்ணிமாவின் மீது மட்டுமல்ல, தான் பெற்றெடுத்தச் சொந்தப் பிள்ளையான அபியின் மீது கூடப் பாசமில்லை. காரணம், அபி ஒரு மனவளர்ச்சி குன்றிய குழந்தையாகப் பிறந்துவிட்டதுதான்.

“அடியே பூர்ணி! இந்த அரை லூச ஒரு மூலையில உட்கார வச்சித் தொலையேன். எப்பப் பாரு இதை இடுப்புல தூக்கிட்டு அலைஞ்சா, வீட்டு வேலையை எப்போ பார்ப்ப?” என்று வசந்தி கத்தும்போது, ஏழு வயதுப் பூர்ணிமா அபியைத் தன் மார்போடு இறுக அணைத்துக் கொள்வாள்.

“பாப்பாவ எங்கூடயே வச்சுக்கிறேன் சித்தி. நீங்க சொன்னா எல்லா வேலையும் நான் முடிச்சிருவேன். பாப்பாவ இருட்டுல உட்கார வைக்க வேணாம்.‌ பயந்து அழுதுடுவா” என்று கெஞ்சி அழுது அனுமதி பெறுவாள்.

‘எப்படியோ, இந்த ரெண்டு சனியனும் என்னை விட்டு தள்ளி இருந்தா போதும்!’ என்று நினைத்துக் கொள்வாள் வசந்தி‌.

பள்ளிக்கூடம் போனால் ஒரு கையில் புத்தகம், மறு கையில் தங்கை என தூக்கி செல்வாள். வீட்டு அருகில் இருக்கும் மைதானத்திற்கு விளையாடப் போனாலும் இடுப்பிலேயே அபியை வைத்துக் கொள்வாள். இதனாலேயே மற்ற சிறுமிகள் யாரும் பூர்ணிமாவைத் தோழியாகச் சேர்த்துக் கொள்ளவில்லை.

“ஏய் பூர்ணி! அந்த எச்சில் வடியுறப் பிள்ளையைத் தூக்கிட்டு எங்க பக்கத்துல வராத. வந்தா நாங்க உன்னோட விளையாட மாட்டோம். எட்டிப் போடி!” என்று அவர்கள் திட்டிவிட்டு ஓடும்போது, பூர்ணிமாவுக்கு எதிர்த்து பேசக்கூட தெரியாது. ‌  

ஒரு மரத்தடியில் அபியை மடியில் கிடத்திவிட்டு மற்றவர்கள் விளையாடுவதை வேடிக்கை பார்ப்பாள். இதுவே அவள் வழமையானது! அப்படி ஒரு மாலை நேரத்தில்தான், அந்த வீதியில் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. ஒரு லாரியில் பொருட்களோடு சூர்யாவின் குடும்பம் அவள் பக்கத்து வீட்டிற்குக் குடிவந்தது. 

“பரவாயில்லையே, நிறைய வீடு, கிரவுண்ட்னு இந்த இடம் ரொம்ப அருமையா இருக்குதுலங்க?” என்று சுற்றும் முற்றும் பார்த்தபடி கூறினாள் சங்கீகா. 

உடலை முறுக்கி நெளிப்பெடுத்த நந்தா, “அடுத்த தெருவுல பஜார், கோவில், துணிக்கடைனு உனக்கு எல்லாமே பக்கத்துல அமைஞ்சிருக்கு. நம்ம பசங்க படிக்கிற ஸ்கூல் பிராஞ்ச்க்கு இந்த பக்கம் கன்ஸ்ட்ரக்ஷன் முடியப்போகுது. அதுவும் வந்துட்டா, ஏரியா விட்டு வெளிய போகவே தேவை இருக்காது நமக்கு…” என்றார் சந்தோஷமாய்.

நந்தா ஒரு உடற்பயிற்சி ஆசிரியர். அவர் மனைவி சங்கீதா சாதாரண குடும்பத் தலைவி. அப்பாவைப் போலவே உயரமும் உடல்வாகும் பெற்றிருந்த பத்து வயது சூர்யா, தன் தம்பி ஆர்யாவைத் தூக்கி கொண்டு அவர்கள் அருகே வந்து நின்றான்.

“நீ வேணும்னா மொத்த பசங்களோட போய் விளையாடு சூர்யா. நாங்க பொருளெல்லாம் இறக்கி வைக்கிறோம்” என்றார் நந்தா.

“இல்லப்பா, நானும் உங்களுக்கு உதவி பண்றேன்…”

“அப்புறம் தம்பிய யார் பார்த்துக்குவா?” என்று கேட்ட சங்கீதாவின் முதுகுப்பக்கம், “நான் பார்த்துக்கவா?” எனும் குரல் ஒலித்தது.

மூவரும் ஒருசேர திரும்ப, அங்கே மழலை மாறாமல் நின்றிருந்தாள் பூர்ணி. லாரியையும் அதில் வந்திருக்கும் பொருட்களையும் வேடிக்கை பார்க்க தான் இங்கே வந்தாள். இவர்கள் குடும்பத்தை பார்த்ததும் ஏதோ ஒரு ஒட்டுதல் அவளுக்கு…

“என் பேரு பூர்ணி, பக்கத்து வீடுதான். என் தங்கச்சிய நான்தான் பார்த்துக்குறேன். உங்க தம்பியையும் நான் பார்த்துக்குவேன்‌. நீங்க வேலைய பாருங்க” என்றவள், ஆர்யாவின் கைபிடித்து கூட்டிச் சென்று ஒரு ஓரமாய் உட்கார வைத்தாள்.

“நாம இப்ப ஜனவரி, பிப்ரவரி விளையாடுவோமா?” என்று கேட்க, 

“ஓகே பூரி” என சந்தோஷமாய் தலையாட்டினான் ஆர்யா. அவனுக்கு அவள் பெயர் பூரி என்று பதிவாகிவிட்டது போல.

“ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல்…” என்று இருவரும் விளையாடினர். தினம் இதை விளையாடி பழகி இருந்த அபியும், வெறுமனே கையை அடித்து தன் ஆட்டத்தை ஆடினாள். 

அதைப்பார்த்து சந்தோஷித்த சங்கீதா, “அவனுக்கு ஆள் கிடைச்சிடுச்சு. நாம சீக்கிரம் வேலைய முடிக்கலாம்” என்று பரபரக்க, அரை மணி நேரத்தில் பொருட்களை எல்லாம் இறக்கிவிட்டனர்.

எப்போதும் நான்கு கால் பாய்ச்சலில் ஓடும் தன் தம்பி, இப்போது ஒரே இடத்தில் ஆணி அடித்தது போல உட்கார்ந்திருப்பதை பார்த்து சூர்யா ஆச்சரியப்பட்டான். அவன் ஓடி ஓடி வேலை செய்த வேகத்தையும் உடல் பலத்தையும் பார்த்து பூர்ணி வியந்தாள்‌.

பத்து வயதிலேயே அவன் நல்ல உயரம்! அவனது தோள்களின் பலம் அவள் பார்த்திராத ஒன்று. பத்து வயது பாலகன், ஒற்றைக் கையால் ஐந்து கிலோ அரிசி மூட்டையைத் தூக்கிக்கொண்டு, இன்னொரு கையில் சூட்கேஸை இழுத்துக் கொண்டு நடந்தால் யார்தான் ஆச்சரியப்படமாட்டார்கள்?

நந்தாவும் சங்கீதாவும் எந்த உறுத்தலும் இன்றி, உளமாற அவளையும் அபியையும் ஏற்றுக்கொண்டனர். முகம் சுழிக்காமல் தங்யை தூக்கி கொஞ்சி உணவூட்டும் அவர்களை பூர்ணி உறவாகவே பார்க்க ஆரம்பித்தாள்.

ஒரு வாரத்திற்கு பிறகு ஒரு நாள், தன் தம்பி ஆர்யாவின் கையைப் பிடித்துக்கொண்டு மைதானத்திற்கு வந்தான் சூர்யா. மற்ற சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

சூர்யா அவர்களை நெருங்கி, “டேய்! என்னையும் சேர்த்துக்கோங்கடா. நான் நல்லா பேட்டிங் பண்ணுவேன்” என்றான்.

“புதுசா வந்தவன்லாம் எங்கூட விளையாட முடியாது. அதுவும் இப்படி தம்பி தங்கச்சிய கூட்டிட்டு வர்ற பயலையெல்லாம் சேர்த்தா சீக்கிரம் அவுட் ஆகிடுவானுங்க. கிளம்புடா இங்கிருந்து!” என்று விரட்டினான்.

ஆர்யாவின் முகம் வாடிப்போனது. 

“அண்ணா… இது வேணாம்ணா, நாம பூரிட்ட போயிடலாம்” என்று அண்ணனின் சட்டையைப் பிடித்து இழுத்தான். அங்குதான் தன் ஆஸ்த்தான மரத்தடியில் தங்கையோடு அமர்ந்திருந்தாள் பூர்ணிமா. சூர்யாவும் ஆர்யாவும் அவளை நோக்கி நடந்தார்கள்.

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page