ரசிகை – 22

மைதானத்தில் பெண்கள் கோகோ விளையாடிக் கொண்டிருக்க, அதன் வேகத்திலும் ஆரவாரத்திலும் தன்னை மறந்திருந்தாள் பூர்ணிமா. எனவே இந்த பக்கம் நடப்பது எதையும் அவள் பார்த்திருக்கவில்லை. 

“பூரி…” என்று கத்திக் கொண்டே ஓடி வந்தான் ஆர்யா.

அப்போதுதான் அவர்கள் இருக்கும் திசை பக்கமே திரும்பிப் பார்த்தாள் அவள். சூர்யாவின் தொங்கிப்போன முகமும், அவன் பின்னால் சிரித்துக் கொண்டிருந்தவர்களின் திமிரும், அங்கு என்ன நடந்திருக்கும் என்று சொல்லாமல் சொன்னது பூர்ணிக்கு.  

“என்னாச்சு சூர்யா? உன்னை அந்த பசங்க விளையாட சேர்த்துக்கலையா?” என்று மெதுவாகக் கேட்டாள்.

சூர்யா வாய் திறக்காமல் இருக்க ஆர்யாதான், “இல்ல பூரி… அந்தப் பெரிய அண்ணன் எங்களை விரட்டிட்டான்” என்றான் கவலையோடு.

“விடு சூர்யா, இவங்க விளையாடி முடிச்சிட்டு கிளம்புற நேரம் ஆயிடுச்சு. அடுத்து உங்க ஸ்கூல் யூனிஃபார்ம் போட்ட பசங்க விளையாட வருவாங்க. அவங்க நல்லா விளையாடுற எல்லாரையும் விளையாட்டுக்கு சேர்த்துகுவாங்க. அவங்க வர்ற வரை இங்க உக்காரு” என்று தனக்கு அருகில் இடம் தந்தாள்.

“பூரி, மாவு கொழக்கட்ட” என்று முந்திக்கொண்டு பாய்ந்தான் ஆர்யா.

“வா விளையாடலாம்” என்று அவனையும் அபியையும் அருகருகே உட்கார வைத்து விளையாடினாள்.

“மாவு கொழுக்கட்ட, மஞ்ச கொழக்கட்ட, பூவு கொழுக்கட்ட…” என்று அபிநயம் காட்டி அழகாய் பாடும் அவளை சூர்யா கூட இமைக்க மறந்து வேடிக்கை பார்த்திருந்தான். 

இரண்டு சிறு வாண்டுகளும் அவள் இசைக்கு ஏற்றபடி தாளம் போடுவது போல, அவளோடு தலையாட்டி விளையாடிக் கொண்டிருந்தனர். சூர்யாவுக்கு அப்போதுதான் தன் தம்பி எதனால் இவளோடு அதிகம் ஒட்டுகிறான் என்ற விஷயம்  விளங்கியது. 

பூர்ணிமா ஜெயிக்க வேண்டும் என்ற ஆசையில் விளையாடவில்லை. அவர்களை ஜெயிக்க வைத்துப் பார்க்கும் ஆசையோடு விளையாடினாள். ஒவ்வொருமுறை வெற்றி பெறும் போதும், இரண்டு வாண்டுகளும் கேக்கே பெக்கே என சிரித்து குதியாட்டம் போட்டனர். 

தோல்வியடைந்தவளோ, “ச்ச, இப்படி தோத்துட்டேனே. இந்த தடவை நான் வின் பண்றேன்” என்று பொய்யாய் புலம்பி, அதன் வழியே அவர்களை அடுத்த விளையாட்டுக்கு அழைத்து விட்டாள். விவரம் தெரியாத வாண்டுகளும் மீண்டும் வெற்றி பெறும் ஆவலோடு உட்கார்ந்து விளையாட துவங்கினர்.

‘இவ்ளோதானா? இதுக்கெல்லாம் என் தம்பி ஏமாந்து போறானா? இது தெரியாமத்தான் இந்த குரங்கு குட்டிட்ட நான் படாத பாடுபட்டேனா?’ என்று சூர்யாவுக்கே ஆச்சரியமாக இருந்தது. இதற்குள் பூர்ணிமா சொன்ன மாணவர்கள் படை அங்கே வந்துவிட்டது.

பூர்ணிமா, “அண்ணா…” என கத்தி அதில் ஒருவனை கூப்பிட்டாள். 

“என்ன பாப்பா?” என்று கேட்டுக்கொண்டே வந்தான் வைரமணி. தங்கைக்காக தன் விளையாட்டையும் புறக்கணித்து விட்டிருக்கும் அந்த சிறு பிள்ளை மீது அவனுக்கு எப்போதும் ஒருவித கரிசனம் உண்டு.

“இது சூர்யா, எங்க வீட்டு பக்கத்துல புதுசா குடி வந்திருக்காங்க. அவனுக்கும் கிரிக்கெட் விளையாடனும்னு ஆசை. உங்க டீம்ல ஒரு தடவை விளையாட வைக்கிறீங்களா?” என்று அவளே பேசி அணியில் சேர்த்து விட்டாள்.

“நீ சொல்லி நான் வேண்டான்னு சொல்லுவேனா பாப்பா? வாடா…” என்று அழைக்க, அணை திறந்த மடை போல பாய்ந்து ஓடினான் அவனும்.

“எந்த ஸ்கூல்டா? என்ன கிளாஸ் படிக்கிற” என வைரமணி யதார்த்தமாக கேட்க, சூர்யாவும் விவரங்களை சொன்னான். 

“என் தம்பி பாலாஜி கூட அதே கிளாஸ் தான். அவன்கிட்ட உன்ன பத்தி சொல்றேன். உங்கூட ப்ரெண்டா இருப்பான், ரெண்டு பேரும் கடைசி வரை பெஸ்ட் பிரண்ட்ஸா இருக்கணும்டா…” என்று சொல்லிக்கொண்டே, ஃபீல்டிங்கில் நிறுத்தினான். 

சூர்யாவுக்கு ஃபீல்டிங் கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது. ஏனோ அவன் உடல் பந்தை தாவி பிடிப்பதற்கு வசதிப்படவே இல்லை. மற்ற எல்லோரும் கொஞ்சம் பெரிய பிள்ளைகள் என்பதால், சுறுசுறுப்பாக விளையாடினார்கள்.‌

“ஏதோ ஆசைக்கு விளையாட வந்திருக்கான் போல. அடுத்த தடவை டீம்ல சேர்க்கக்கூடாது” என்று நினைத்துக் கொண்டான் வைரமணி.

இதற்குள் இவர்கள்‌ டீம் பேட்டிங் செய்ய வேண்டிய நேரம் வந்தது. எதிர்பாராதவிதமாய் ஓப்பனிங் பேட்ஸ்மேன் இருவரும் அடுத்தடுத்து அவுட் ஆகி போனார்கள். அடுத்து இறங்க வேண்டியவனுக்கு, வயிற்றை கலக்க அப்போது தான் வீட்டிற்கு கிளம்பி சென்று இருந்தான்.

“டேய் சூர்யா, அவன் வர்ற வரைக்கும் நீ பேட்டிங் பண்ணு” என்று எதிர்பாராத விதமாக இவன் கையில் பேட்டை கொடுத்து விட்டனர்.

பிறகென்ன? அடுத்த சில நிமிடங்களில் எல்லோருக்கும் கழுத்து வலி வந்திருந்தது. அத்தனை சிக்ஸர்கள் அடித்து தள்ளியிருந்தான் சூர்யா. 

பந்து பொறுக்கிப்போட்டே எதிர் அணியினர் சோர்ந்து விட்டனர்.

வேர்த்து விறுவிறுக்க நின்றிருந்த பவுலர்கள், “இதுக்கு மேல எங்களால இவனுக்கு பந்து போட முடியாது. நீங்களே வின்னுனு வச்சுக்கோங்கடா…” என்று ஒரேயடியாக தரையில் உட்கார்ந்து விட்டனர்.

“ஹே….” என வைரமணியும் அவன் கூட்டத்தினரும் கத்திய சத்தம் எட்டு திசைகளிலும் எதிரொலித்தது.

இந்த விஷயத்தை பூர்ணிமா நந்தாவிடம் சொல்லி, “நீங்களே ஒரு பிடி சார் தானே? சூர்யாவுக்கு கிரிக்கெட் சூப்பரா வருது‌. அவனுக்கு அதுல கோச்சிங் கொடுக்கக் கூடாதா?” என்று விளையாட்டுத்தனமாக கேட்டுவிட்டாள். 

அதுவரை தன் மகனுக்கு வாலிபால் கோச்சிங் கொடுத்துக் கொண்டிருந்த நந்தா, அப்போதுதான் அவனுக்கு கிரிக்கெட் நன்றாக வருகிறது என்பதையே புரிந்து கொண்டார். உடனே  தெரிந்தவர்களிடம் எல்லாம் விசாரித்து முறையாய் ஒரு கிரிக்கெட் கோச்சிடம் சேர்த்து விட்டார். 

அவன் ஆட்ட திறமையை பார்த்த கோச், அடுத்தடுத்து போட்டிகளில் அவனை களம் இறக்கினார். வாலிபாலை பிடித்து பழகி இருந்தவனுக்கு கிரிக்கெட் பாலை கேட்ச் பிடிக்க கொஞ்ச நாட்கள் எடுத்தது. இதற்காகவே ஃபீல்டிங் பயிற்சியை அதிகப்படுத்தினார் கோச். அவரின் உதவியாலும் சூர்யாவின் விடாமுயற்சியாலும் எண்ணி ஆறு மாதத்தில் ‘அன்டர் 12 ஏஜ்’ பிரிவில் ஸ்டேட் லெவல் பிளேயர் ஆனான் அவன். 

பூர்ணிமா போட்ட அந்தச் சின்ன விதை, மூன்றே வருடங்களில் ஒரு ஆலமரமாக விஸ்வரூபம் எடுக்கும் என்று நந்தாவும் கோச்சும் நினைத்துக்கூட பார்க்கவில்லை.

பதிமூன்று வயது என்பது மற்ற பிள்ளைகள் தெருவில் கோலி விளையாடும் பருவம். ஆனால், சூர்யா அந்த வயதிலேயே சூர்யா தமிழ்நாடு சீனியர் ரஞ்சி டீமிற்குள் ஒரு நுழைந்துவிட்டான்.

“டேய், இந்தப் பையனா ரஞ்சி டிராஃபி ஆடப்போறான்? கையில இருக்கிற பேட்டை விட இவன் சின்னதா இருக்கானேடா!” என்று கிண்டல் செய்த சீனியர் பிளேயர்களின் வாயை, அடுத்தப் பத்தே நிமிடங்களில் தன் பேட்டிங்கால் அடக்கினான் சூர்யா.

ஒவ்வொரு பந்தும் மைதானத்தின் எல்லைகளைத் தாண்டிப் பறக்க, சூர்யா எனும் பெயர் கிரிக்கெட் வட்டாரங்களில் ஒரு மந்திரச் சொல்லாக மாறத் தொடங்கியது. 

‘யார் இந்தச் சிறுவன்?’ என்று இந்தியா முழுக்கப் பேச்சு கிளம்பியது. தமிழ்நாட்டுக்கு வெற்றிக் கோப்பையை மிகச் சுலபமாக வாங்கி வந்தான். இல்லை இல்லை, எதிரணியிடமிருந்து பிடுங்கி வந்தான். பிரச்சனை அங்கு தான் ஆரம்பமானது!

எதிர் அணியின் தலைவன் சுஜித்! அந்த சமயம் அவனுக்கு பதினேழு வயது. பதிமூன்று வயதுடைய சூர்யாவிடம் தோற்றுவிட்டு இரவு முழுவதும் உறங்காமல் அழுது புலம்ப, ஆகாஷ் மனம் உடைந்தார். 

அந்தச் சமயம் தான், இந்தியாவே வியந்து பார்க்கும் அந்த ஐபிஎல் ஏலம் (IPL Auction) வந்தது. ஐபிஎல் ஏல மேடையில் பெரிய பெரிய ஜாம்பவான்களின் பெயர்கள் சொல்லப்பட்டு வந்தபோது, திடீரென அந்தப் பெயர் ஒலித்தது.

“சூர்யா! பேஸ் பிரைஸ் முப்பது லட்சம்!”

அரங்கமே ஒரு நிமிடம் நிசப்தமானது. பதிமூன்று வயதுச் சிறுவன் ஏலத்தில் இருப்பதே ஒரு அதிசயம். ஆனால், அந்த அதிசயத்தை நிகழ்த்தியது சூர்யாவின் ஆட்டம். ஒரு டீம் முப்பது லட்சத்திற்கு அவனைக் கேட்க, அடுத்த நொடியே இன்னொரு டீம் ஐம்பது லட்சத்திற்கு ‘பெட்’ (Bid) வைத்தது.

“எண்பது… ஒரு கோடி… ஒன்றரை கோடி!”

வெறும் முப்பது லட்சத்தில் ஆரம்பித்த அவனது மதிப்பு, கோடிகளைத் தொட்டு நின்றது. இறுதியில் ஒரு பெரிய அணி அவனை ஏலத்தில் எடுத்துத் தன் வசமாக்கியது. பதிமூன்று வயதில் ஐபிஎல் ஏலத்தில் கோடிகளில் விலை போன ஒரே தமிழக வீரர் என்ற பெருமையோடு, சூர்யாவின் பெயர் தலைப்புச் செய்திகளில் மின்னியது.

அங்கே சுஜித்தின் அறை சின்னாபின்னமாகி கொண்டிருந்தது. காரணம் அவனை ஏலத்தில் எடுக்க யாருமே முன்வரவில்லை. இந்த வருடம் ஐபிஎல் உள்ளே நுழைய வேண்டும் என்று பேராசையோடு இருந்தவன் அவன். அது நிராசையாகப் போனதும், வெறி தலைக்கேறியது. கண்ணில் படுவது அனைத்தையும் உடைத்தான்… 

மகன் நாளைக்கு நாள் மோசமாவதை உணர்ந்த ஆகாஷ், “அவன் ஐபிஎல் ஆட மாட்டான். நீதான் ஆவன் இடத்துல ஆடப்போற, அதுக்கு வேணுங்கிற எல்லாத்தையும் நான் பண்றேன். நீ கொஞ்சம் நிதானமாகு” என்று அவனை அமைதிப்படுத்தினார். 

இந்திய பணக்காரர்களில் விரல்விட்டு என்னும் இடத்தில் இருக்கும் அவருக்குமே, ஒரு பிடி வாத்தியார் பையனிடம் தோற்றுப் போனதில் கொஞ்சம் அசிங்கமாகத்தான் இருந்தது. அதை துடைக்க அந்த குடும்பத்தையே பலி கொடுக்க முடிவெடுத்தார்.

நந்தாவும் சங்கீதாவும் பூர்ணியையும் அபியையும் தங்கள் வீட்டு பிள்ளைகளாகவே வளர்க்க ஆரம்பித்திருந்தனர். உண்ணுவது உறங்குவது எல்லாமே இங்கு என்று பழகிப்போயினர். தன்னுடைய வீட்டு வேலைகளை செய்ய மட்டுமே அங்கு செல்லும் பூர்ணிமா, அது முடிந்த அடுத்த நொடியே ஓடோடி வந்துவிடுவாள்‌.

அவள் சித்தி வசந்திக்கும் இதுதான் வசதியாக இருந்தது! காரணம் கள்ளக்காதல்…

தங்கதுரைக்கு இரண்டாம் தாரமாக வரும் முன்பிருந்தே சங்கரோடு பழக்கம் உண்டு அவளுக்கு. பகல் முழுக்க வேலை வேலை என்று சுற்றிவிட்டு, இரவில் இறந்து போன மனைவியை நினைத்து மதுவும் கையுமாய் கவிழ்ந்து கிடக்கும் தங்கதுரையை அவளுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. அவனை திருமணம் செய்தால் ஒரு லட்ச ரூபாய் பணம் கிடைக்கும் என்பதாலேயே கழுத்தை நீட்டினாள்.

ஆண் குழந்தையை எதிர்பார்த்து காத்திருந்தவளுக்கு, பெண் குழந்தை பிறந்தது. அதுவுமே மூளை வளர்ச்சி இல்லாத குழந்தை என்பதால் அவளுக்கு அபியை சுத்தமாக பிடிக்கவில்லை. மூத்ததாரத்தின் மகளான பூர்ணி, அழகின் சொரூபமாக இருப்பதும் அவளுக்கு பிடிக்கவில்லை…

எனவேதான் திரும்ப சங்கரோடு ஊர் மேய ஆரம்பித்தாள். குழந்தைகள் வீட்டை அண்டாமல் இருப்பதால், அவளுக்கு சுமை குறைந்தது போலிருந்தது.

கொண்டாடும் இடத்தில் தான் குழந்தையும் தெய்வமும்! சங்கீதா போகும் இடத்திற்கெல்லாம் தூக்கி சென்று வந்தாள். 

யார் கேட்டாலும், “எங்க பாப்பாதான்!” என்று சிரித்த முகமாய் பதில் சொல்வாள்.

அவளை விட இரண்டு படி மேலே சூர்யா! அபியை குளிக்க வைத்து, தலை சீவி, பொட்டு வைத்து, அலங்காரம் செய்து ரசிப்பான். தான் வாங்கி வரும் கோப்பை, மெடல் அனைத்தையும் அவள் கையில் கொடுப்பான். 

“சூர்யா… சூர்யா…” என்று அவன் பெயரை உறக்கத்தில் உளறும் அளவுக்கு, அபியும் அவன் மீது அன்பைப் பொழிந்தாள்.

இப்படி சந்தோஷமாக இருந்த குடும்பத்தின் மேல்தான், அந்த ஆகாஷின் கொள்ளிக் கண் பட்டது! ஒரே ஒரு ஆகிஸிடெண்ட்டில் அத்தனைபேரின் சந்தோஷத்தையும் அழித்துவிட்டான் அந்த அரக்கன்.

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page