சூர்யாவும் பூர்ணிமாவும் திங்கள் கிழமை தான் சென்னை வந்து சேர்ந்தனர். வந்து சேர்ந்த பிறகு தான் முத்து, காவ்யா திருமணம் நின்று போன விஷயம் இவளுக்கு தெரிய வந்தது.
“ஏன் இப்படி செஞ்சீங்க? ரெண்டு நாள் நான் உழைச்ச உழைப்பெல்லாம் வீணாப் போச்சு…” என்று கன்னத்தில் கை வைத்துக் கொண்டு புலம்ப,
“ரெண்டு இல்லடி, ரெண்டரை நாள்” என்று கூறி கண்ணடித்து சிரித்தான் கள்வன்.
வெட்கம் பிடுங்கித் தின்ன, அருகில் இருந்த தலையணையை அவன் மீது தூக்கி எறிந்தாள். அழகாய் கேட்ச் பிடித்தவனோ, அதை கைக்கு அடக்கமாய் வைத்துக் கொண்டான்.
“நான் எதுக்கும் ஒரு எட்டு அவங்கள போய் பார்த்துட்டு வரட்டுமா?”
“எதுக்கு? நான்தான் இதெல்லாம் பண்ணேன்னு போட்டுக் கொடுக்குறதுக்கா?”
“இல்ல இல்ல, அப்படியெல்லாம் சொல்ல மாட்டேன். ஆனாலும்…” எனும் முன்,
“நீ செய்யிறதுக்கு வேற ஒரு வேலை வச்சிருக்கேன். அதை முதல்ல முடிக்கிறியா?”
“என்ன? மறுபடியும் டிரஸ் ஏதாவது டிசைன் பண்ணனுமா?”
“அதெல்லாம் இல்ல, நீ ஆபீஸ்க்கு கிளம்பி போ. போனதும் என்ன வேலைன்னு உனக்கே தெரியும்…” என்று அவளை கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்தான்.
அலுவலகத்தில் நுழைந்த ஐந்து நிமிடத்தில் பாலாஜிக்கும் தனுஜாவுக்கும் நடுவில் நிலவும் பனிப்போரை இவள் கவனித்துவிட்டாள். பாலாஜியின் வாடிய முகமும், தனுஜாவின் அந்த இறுக்கமான மௌனமும் அவளுக்கு உண்மையில் வருத்தத்தை தந்தது.
முதலில் பாலாஜியிடம் சென்றவள், “உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல ப்ராப்ளம் இன்னும் சரி ஆகலையா?” என்றாள் வருத்தமாய்.
“ரெண்டு வீட்லயும் கல்யாண தேதி பிக்ஸ் பண்ணி, பத்திரிக்கை அடிக்கிற ஐடியாக்கு வந்துட்டாங்க. அவ பேரண்ட்ஸை நான்தான் ஒவ்வொன்னுக்கும் புஷ் பண்ணி கொண்டு போறேன். அதான் மேடம், உச்சகட்ட கடுப்புல இருக்காங்க. கல்யாண தேதி நெருங்கும்போது என்ன பண்ண காத்திருக்காளோ தெரியல…”
“நீங்க அவளோட பேசி சமாதானம் ஆக வேண்டியது தானே?”
“நான் பேசாமலா இருக்கேன்? அவ என்னை எப்படி எல்லாம் வச்சு செய்யுறானு தெரியுமா?…” என்று சிறுபிள்ளை போல புலம்பினான்.
‘இந்த பக்கம் இனி நாம் செய்ய எதுவும் இல்லை, வண்டி ஏற்கனவே குடை சாய்ந்து கிடக்கிறது!’ என்று நினைத்து அந்த பக்கம் சென்றாள் பூர்ணிமா.
“தனு…”
“சொல்லு பூர்ணி…”
எப்போதும் அண்ணி என்று அன்போடு அழைப்பவள், இப்போது பேசும் விதத்தைக் கொண்டே பிரச்சனையின் வீரியம் புரிந்து போனது. தனுஜாவே மனம் மாறினால் மட்டும்தான் இந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும் என்று நினைத்த பூர்ணி, உடனே சூர்யாவுக்கு அழைத்து பேசினாள்.
“அப்போ நீ பிரச்சனைய சால்வ் பண்ணல? உனக்கு வேலை தந்த என்கிட்டயே நீ வேலைய திருப்பித் தர்ற?”
“எங்கூட பட்டிமன்றம் நடத்தாம, அவங்க பிரச்சனைக்கு என்ன சொல்யூஷன்னு சொல்லு சூர்யா…”
“பத்து நிமிஷம் கழிச்சு திருப்பி கூப்பிடுறேன்” என்றவன், அவள் பதில் சொல்லும் முன்பு காலை கட் செய்து விட்டான்.
பத்து நிமிடத்தில் கால் வரும் என்று பூர்ணி காத்துக் கொண்டிருக்க, மிடுக்கான உடையோடு ஸ்டைலாக உள் நுழைந்தான் சூர்யா…
நேராக தன் கேபினுக்குச் சென்றவன், அடுத்த கணமே பாலாஜியையும் தனுஜாவையும் வரவழைத்தான். அழையா விருந்தாளியாக பூர்ணிமாவும் உள்ளே வந்து நின்று கொண்டாள்.
“பாலாஜி… தனுஜா… நம்ம ஆட் ஷூட்க்கு ஒரு நல்ல லொகேஷன் தேவைப்படுது. ஏற்காடு பக்கத்துல ஒரு ஹில் டாப் வியூ இருக்கு. அங்கே போய் நேர்ல பார்த்து செக் பண்ணிட்டு வரணும். சோ, நீங்க ரெண்டு பேரும் இன்னைக்கு நைட்டே கிளம்புங்க!” என்றான் அதிகாரமான குரலில்.
தனுஜா தயங்கியபடி, “சார்… நான் மட்டும் போயிட்டு வரட்டுமா? பாலாஜி சாருக்கு இங்க நிறைய வேலை இருக்குமே…” எனும் முன்,
“நோ நோ, இது ஒரு டீம் வொர்க். பாலாஜிதான் அந்த ப்ராஜெக்ட்டோட ஹெட். அவர் கூடத்தான் நீங்க போகணும்.”
“அப்போ ஆர்யாவையும் சேர்த்து கூட்டிட்டு போறேன்.”
“ஓகே, கால் ஹிம்…” என்றான். உடனே பாலாஜிக்கு முகம் தொங்கியது.
உடனே முகம் மலர்ந்த தனுஜா, ஆர்யாவுக்கு அழைப்பு விடுத்தாள். முழு ரிங் போய் கட் ஆனது. அடுத்து இரண்டு முறை முயற்சித்தாள், இதே நிலைதான்.
“தனுஜா, அவன பத்தி நமக்கு நல்லா தெரியும். டோன்ட் வேஸ்ட் மை டைம்” என்று காரமாக பேச,
“சாரி சார்” என்று மட்டையாய் மடங்கிவிட்டாள் பேதை.
பதற்றத்தில் தனுஜாவுக்கு வேலையில் மனம் ஒன்றவே இல்லை. ஒரு மணி நேரத்திற்கு இரண்டு முறை தன் முட்டாள் நண்பனுக்கு கால் செய்து பார்த்துக் கொண்டிருந்தாள். மாலை வரை முயற்சித்தும் ஆர்யா அவள் காலை எடுக்கவே இல்லை.
எப்படி எடுப்பான்? சூர்யாதான் டெல்லியில் இருந்து வந்த உடனே, ஒரு பெரிய தொகையை கையில் கொடுத்து கோவாவுக்கு ஒரு வாரம் டூர் அனுப்பி விட்டானே. வெறும் காலில் ஆடும் ஆர்யாவுக்கு, சலங்கை கட்டி விட்டால் சும்மாவா இருப்பான்?
‘ஹாப்பி! இன்று முதல் ஹாப்பி!’ எனும் ரீதியில் இளமையை என்ஜாய் செய்து கொண்டிருக்கிறார் தலைவர்.
கிளம்பும் நேரம் வந்ததும் சூர்யா பாலாஜியிடம், “லொகேஷன் மாத்துனா பொண்ணுங்க மைண்ட் செட் மாறுது. அதை நானே இப்பதான் கண்டுபிடிச்சேன். எனக்கு லவ்வு ஓகே ஆகிடுச்சு, நீ ஓட்டையாக்காம வந்திடுவல்ல?” என்று கேட்க, அப்படியே சாஷ்டாங்கமாக அவன் காலில் விழுந்துவிட்டான் இவன்.
“தெய்வமே, திரும்பி வரும்போது அவளை என் பொண்டாட்டியாக்கி கூட்டிட்டு வர்றேன் பாரு” என்று சபதம் எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
தனு, இதற்கு மேல் அவனை நம்பி பிரயோஜனம் இல்லை என்னும் எண்ணம் தோன்ற பாலாஜியோடு காரில் கிளம்பி விட்டாள். அந்தப் பயணம் முழுக்கப் பாலாஜி எவ்வளவோ பேச முயன்றும் தனுஜா ஜன்னல் பக்கமே முகம் திருப்பி அமர்ந்திருந்தாள்.
இரவு உணவிற்கென ஒரு ஹோட்டலில் நிறுத்தினான். சாப்பிடும் போது அவளுக்கு இருமல் வர, ஓடிப்போய் தண்ணீர் பாட்டில் எடுத்துக் கொண்டு வந்தான் பாலாஜி.
“தனு… இந்தா தண்ணி” என்று அவன் பாட்டிலை நீட்ட, அவனை ஏற இறங்க பார்த்தவள் தன் பேக்கில் இருந்து இன்னொன்றை எடுத்து குடித்தாள். இப்படித்தான், அவன் எவ்வளவு இறங்கி முயற்சித்தாலும், தன் சிறு செய்கையால் அதை ஒன்றும் இல்லாமல் ஆக்கிக் கொண்டிருந்தாள்.
திரும்பத் திரும்ப தன்னை புறக்கணிக்கும் அவளை, எப்படி வழிக்கு கொண்டு வருவது என்று பாலாஜிக்கு சுத்தமாக தெரியவில்லை.
மறுநாள் காலை, ஏற்காடு மலைப்பாதையின் ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் இருவரும் நின்று கொண்டிருந்தனர். மேகங்கள் தரை இறங்கி தவழும் அந்தப் பனி மூட்டத்தில், ஒரு பாறையின் விளிம்பில் நின்று தனுஜா வியூவைப் பார்த்து வரைந்து கொண்டிருந்தாள். பாலாஜி சற்றுத் தள்ளி நின்றபடி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
திடீரென அந்த விபரீதம் நிகழ்ந்தது…
தனுஜா நின்றிருந்த இடத்தின் மண், மழையினால் தளர்ந்திருந்தது. அவள் கவனிக்காமல் ஒரு அடி சரிவில் வைக்க, சொடக் என்ற சத்தத்துடன் மண் சரிந்தது.
“அம்மா…!” என்று அலறியபடி தனுஜா நிலைதடுமாறிப் பள்ளத்தில் சரியத் தொடங்கினாள்.
“தனு…!” என்று கத்தியபடி பாலாஜி பாய்ந்தான். தன் உயிரைப் பற்றிய கவலை துளியும் இல்லாமல், விளிம்பு வரை சென்று அவளது கையைப் பற்றினான்.
பாறையின் கூர்மையான விளிம்பு பாலாஜியின் முழங்கையை அறுத்தது. ரத்தம் பீறிட்ட போதும் அவன் பிடியை விடவில்லை. ஒரு கையில் பாறையைப் பிடித்துக் கொண்டு, மறு கையால் தனுஜாவை மேலே தூக்கினான். இருவரும் தரைக்கு வந்து விழுந்த போது, பாலாஜியின் கை ரத்த வெள்ளத்தில் நனைந்திருந்தது. தனுஜா பயத்தில் விக்கி விக்கி அழுது கொண்டிருந்தாள்.
பாலாஜி தன் காயத்தைப் பொருட்படுத்தாமல், “தனு… தனு… உனக்கு ஒண்ணுமில்லையே? எங்கயாவது அடிபட்டுருக்கா? பாரு… கண்ணைத் திறந்து பாரு…” என்று பதற்றத்தில் அவளது முகத்தை வருடினான்.
அவன் கையில் இருந்து வழியும் ரத்தத்தை அப்போதுதான் பார்த்தாள் தனுஜா. கை முழுக்க நிறம் மாறிப் போயிருக்க, பெண்ணவள் துடித்துவிட்டாள்.
“ஐயோ அத்தான், உங்களுக்கு… உங்களுக்கு ரத்தம் வருது…” என்று அவனது கையைப் பிடித்து கார் இருக்கும் பக்கம் நடந்தாள்.
பல யுகங்களுக்குப் பிறகு அவள் இதழ் சொல்லும் அத்தான் எனும் வார்த்தையை கேட்கிறான் பாலாஜி. உடல் முழுதும் மின்சாரம் பாய்ந்தது போல் இருக்க, இந்த உணர்வுக்கு ஈடாக உயிரையும் கொடுத்து விட தோன்றிற்று.
இருந்த இடத்தை விட்டு நகராமல் நின்றவன், “மறுபடி சொல்லு…” என்று தழுதழுத்த குரலில் கேட்க, அவள் உதட்டை கடித்தபடி தலை குனிந்தாள்.
“தனு… சாரிடி, என்னை மன்னிச்சிடு தங்கம். ப்ளீஸ்… கை ரொம்ப வலிக்குதுடி, ஒருதடவை சொல்லு தனு…” என்று காதலால் கசிந்துருக, அவள் மனதும் உடைந்தது.
“எனக்கு எவ்வளோ வலிச்சது தெரியுமா? எப்படி பேசிட்ட நீ? படுத்தா ராத்திரியெல்லாம் தூக்கமே வரல. நீ சொன்னதுதான் காதுக்குள்ள திரும்பத் திரும்ப கேட்டுகிட்டே இருந்தது. செத்துடலாம் போல இருந்துச்சு… எனக்கு நீ வேணவே வேணாம் போடா…” வார்த்தைகள் வழி வெறுத்தாலும், அவள் கரம் இன்னமும் உரிமையாய் அவனை கையை பற்றியபடியே இருந்தது.
“சாரிடி, தப்புதான். இப்ப நான் என்ன பண்ணனும் சொல்லு? வேணும்னா இந்த மலையில இருந்து குதிக்கவா? அப்போ நீ என்னை மன்னிப்பியா?” என்று திரும்ப, அதற்கு மேல் தாங்க மாட்டாதவளாய் அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.
பாலாஜியும் காதலோடு அவளை திருப்பி அணைத்துக் கொண்டான்.
“இந்த மெத்தட்ல நீ சமாதானம் ஆவனு தெரிஞ்சிருந்தா, முதல் நாளே உன் வீட்டு வாசல்ல நின்னு கைய கத்தியால கீரி விட்ருப்பேன். இல்லனா, அட்லீஸ்ட் ரத்தத்துல ஒரு லெட்டர் எழுதிக் கொண்டு வந்திருப்பேன்…”
“அப்படி ஏதாவது செஞ்சிருந்தா கத்தி எடுத்து நானே ரெண்டு சொருகு சொருகி உன் ரத்தத்தை பார்த்திருப்பேன்.”
இங்கு நடப்பதை எல்லாம் சற்று தள்ளி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஆட்டோக்காரர், “ஏப்பா ஏய், ரெண்டு பேரும் லவ் பண்ணி முடிச்சிட்டீங்கன்னா சீக்கிரம் வாங்க, ஹாஸ்பிடல் போவோம். எனக்கு ஒரு சவாரி கிடைக்கும்னு நான் எவ்வளவு நேரம் தான் இங்க நிற்கிறது?” என்று கேட்ட பிறகு தான் இருவருக்கும் சுற்றம் உரைத்தது.
நாக்கை கடித்துக் கொண்ட தனுஜா, “இதோ வரோம்ண்ணா, அது ஒண்ணுமில்ல பையன் கொஞ்சம் ஒரு மாதிரி” என்று அவனுக்கு பைத்தியக்கார பட்டம் கட்டி விட்டாள்.
ஆனால் பாலாஜிக்கு கோபமே வரவில்லை. அவள் துடுக்குத்தனம் மீண்டும் துளிர்ப்பது பார்த்து உளமாற சந்தோஷித்தான்.
“இப்ப என்ன அவசரம்? ரத்தம் வந்தா வரட்டும். நாம பேசி முடிக்க வேண்டியது எல்லாத்தையும், ஃபர்ஸ்ட் பேசிக்கலாம் தனு…” என்று ஒரு குழந்தை போல அழுகையோடு அவன் கெஞ்சினான்.
“சரி சரி… ஹாஸ்பிடல் போயிட்டு பேசிக்கலாம் அத்தான். ரத்தம் வேற நிக்கல, வாங்க…” என்று தன் துப்பட்டாவை எடுத்து அவனது காயத்தை சுற்றி கட்டி, ஆட்டோவில் ஏறினாள்.
ஏதோ உயிருக்கு போராடும் பேஷண்ட் போல, அவள் தோள் மேல் சரிந்து படுத்துக் கொண்டான் பாலாஜி. தள்ளிவிடும் அளவு தனு ஒன்றும் கல்நெஞ்சக்காரி இல்லையே. காயம் கண்டு விழியோரம் கசியும் நீரை அவ்வப்போது துடைத்துக் கொண்டே வந்தாள். அடுத்த பத்து நிமிடத்தில் மருத்துவமனை வந்துவிட்டது.
“சின்ன காயம்தான், ஆனா ஹெவியா ரத்தம் போயிடுச்சு. ரெண்டு மணி நேரம் மட்டும் எங்க அப்சர்வேஷன்ல இருக்கட்டும். அதுக்கப்புறம் நீங்க கூட்டிட்டு போகலாம். இந்த நிலைமையில லாங் ட்ராவல் பண்ணாதீங்க. ரெண்டுநாள் ரூம் எடுத்து தங்கிட்டு அப்புறமா கிளம்புங்க” என டாக்டர் கூட பாலாஜிக்கு சாதகமாக சிகிச்சையை தந்திருந்தார்.
விஷயம் உடனே சூர்யாவின் காதுக்குச் சென்றது. உடனே பாலாஜியின் எண்ணுக்கு அழைப்புவிடுத்தான். சரியாக அந்த நேரம் தனுஜா மருந்து வாங்க போயிருந்தாள்.
“என்னடா ஆச்சு? என்ன செஞ்சு தொலைச்ச?”
“பேசி டீல் பண்ண முடியல, எது சொன்னாலும் பஞ்ச் கொடுத்துட்டே இருந்தா. கடைசில கடவுளே மனசு வந்து ஹெல்ப் பண்ணிட்டாரு, நானும் லைட்டா ஹீரோயிசம் பண்ணினேன். ஒருவழியா நம்ம ப்ளான் சக்சஸ் ஆயிடுச்சு பாஸ்.”
“நீ கூட தேறிட்ட டா. காயம் பலமா இருந்தா சொல்லு, உடனே நான் அங்க வரேன்.”
“ஐயோ அதெல்லாம் வேண்டாம். டாக்டர் ரெண்டு நாள் என்னை இங்கேயே ரூம் எடுத்து தங்க சொல்லிருக்காரு. ரெஸ்ட் ரொம்ப முக்கியமாம்…”
“புரியுது, கல்யாணத்துக்கு முன்னாலேயே ஹனிமூன் கொண்டாட பார்க்கிற. அரேஞ்ச் பண்ணி தொலைக்கிறேன்…” என்று சின்ன சிரிப்போடு காலை கட் செய்தான் சூர்யா.
அவன் இயல்பாய் புன்னகைப்பதை அருகில் இருந்த பேதையோ இமைக்க மறந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
“என்னடி முழுங்கற மாதிரி பாக்குற?”
“நானாது பார்க்க மட்டும்தான் செய்வேன். ஆனா நீ…” எனும் முன், அவள் இதழை இழுத்து கவ்வியிருந்தான். நேரம் காலம் இல்லாமல் இங்கே மன்மத கீதம் இசைத்துக் கொண்டிருந்தது.
