ரசிகை – 29

பாலாஜிக்கு மருத்துவமனை அருகில் இருந்த பெரிய ஹோட்டலில் ரூம் புக் செய்து தந்தான் சூர்யா. அவனுக்கு ஓய்வைத் தவிர வேறெதுவும் தேவையில்லை என்ற காரணத்தால், சூர்யா கொடுத்த வேலைகளை செய்ய ஆரம்பித்தாள் தனுஜா. பாவம், அவளுக்குத்தான் இவ்விரு கூட்டு களவாணிகளின் திட்டம் பற்றி தெரியாதே!

“நீங்க ரூம்லயே இருந்து ரெஸ்ட் எடுங்க அத்தான். ஹோட்டல்ல நான் ஆக்டிங் டிரைவர் கேட்டு வாங்கிட்டேன். பாஸ் கொடுத்த வேலையை நான் பார்த்துக்குறேன்…” என்றாள். காதல் பித்து தலைக்கு ஏறி கிடப்பவன், சொல்பேச்சு கேட்பானா?

மூன்று வயது குழந்தை அம்மாவின் புடவையை பிடித்துக் கொண்டு, அது போகும் இடத்திற்கெல்லாம் பின் தொடர்வது போலத்தான் அவன் செய்கையும் இருந்தது. கை காயம் ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை! இரவில் குளிர் கூடுகையில் காயம் லேசாக வலித்தது.

“பெயின் அதிகமானா இந்த பெயின் கில்லர் டேப்லட்டை போடுங்க” என்று‌ டாக்டர் ஏற்கனவே மாத்திரைகளை கொடுத்து அனுப்பியிருந்தார். அவன் அதை கையில் எடுத்ததும் தனுஜாவுக்கு புரிந்து விட்டது.

“வலிக்குதா அத்தான்? மணி எட்டு தான் ஆகுது. ஹாஸ்பிடல் இன்னும் திறந்து இருக்கும். வேணும்னா போயிட்டு வருவோமா?” என்றாள் விழிகளின் ஓரம் நீர் திரள…

 

“இல்லடி, லைட்டாத்தான் குறுகுறுனு இருக்கு. டேப்லெட் போட்டா நைட் முழுக்க பெயின் இல்லாம தூங்குவேன்ல. அதுக்குத்தான் போட்டேன்” என்று தத்ரூபமாக பொய் சொன்னாலும், அதை தனுவின் கண்கள் கண்டுபிடித்துவிட்டது.

அவனை தன் தோளில் சாய்த்த தனு, பெட் ஷீட்டால் இருவரது உடலையும் சேர்த்து மூடினாள். அந்த கதகதப்பில் ஆடவனின் உடல் இதமாய் ஒன்றிக் கொள்ள, காயத்தின் வீரியம் கொஞ்சம் கொஞ்சமாய் குறைய துவங்கியது.

“எங்கூடவே இரு தனு…” என்றான் உளறலாய்‌.

“ஹலோ சார், நான் ஒரு நாளும் உங்களை விட்டு விலகி போனது கிடையாது. நீங்கதான் என்னை பக்கத்துல வந்தாலே அடிச்சு விரட்டுனீங்க.”

“ம்… ஏன்னா எனக்கு அவ்வளவு பயம்.”

“சும்மா உருட்டாதீங்க அத்தான்.”

“அம்மா சத்தியமாடி. நீ பக்கத்துல இருந்தாலே என் மனசு என் கண்ட்ரோல்ல இருக்காது. என்னையும் மீறி எனக்கு உன் மேல காதல் இருக்கிறத, ஏதாவது ஒரு சந்தர்ப்பத்துல சொல்லிடுவேன்னு பயம். அதான் புடிக்காத மாதிரியே நடந்துக்கிட்டேன்…” ‌ 

“ஆனா, ஏன்?”

அவள் சுலபமாக கேட்டுவிட்டாள். ஆனால் இவனால்தான் பதில் சொல்ல முடியவில்லை!

“என்ன அத்தான்?”

“எங்க பரம்பரைல நிறைய பேர் ஸ்பெஷல் கிட்‌ஸ். தாத்தாவோட தம்பி, அப்பாவோட அக்கா, அண்ணனோட பொண்ணுனு எல்லாருமே அப்படித்தான். இதனாலயே எங்க சொந்த பந்தம் எல்லாம் எங்களை விட்டு தள்ளி இருக்க ஆரம்பிச்சாங்க. நல்ல நாள் விசேஷத்துக்கு கூப்பிடுறது கூட குறைஞ்சு போச்சு. பக்கத்து வீட்டு ஆட்கள் கூட, எங்க குடும்பத்தை ஒரு இடைஞ்சலா மட்டும் தான் பார்த்தாங்க.

பிரச்சனை‌ வெளியில மட்டும் இல்ல வீட்டுக்குள்ளேயும் இருந்தது. எங்க வீட்டுல பொறந்த ஸ்பெஷல் கிட்ஸ் யாருமே பத்து பனிரெண்டு வயசுக்கு மேல வாழ்ந்தது இல்ல. நாங்க அண்ணனோட குழந்தைக்கு நிறைய டிரீட்மென்ட் பார்த்தோம். ஆனாலும் எங்க பாப்பா…” என்று சொல்லாமல் இழுத்தான்.

தனு ஆறுதலாய் அவன் விரல்களை பற்றினாள். 

“மலர் அண்ணி ரொம்ப தைரியமானவங்க. அவங்களால குழந்தையை இழந்த வலிய தாங்கவே முடியல. இப்போ அபியை தத்து எடுத்த அப்புறம்தான் அவங்க முகத்துல பழையபடி சிரிப்பு வருது. நீ என் அண்ணிக்கு அப்படியே ஆப்போசிட். சின்ன வலிய கூட தாங்கமாட்ட. மாசு மறு இல்லாத பிள்ளை மனசு உனக்கு. 

உன்னால பெத்த பிள்ளை கண் முன்னால இறக்குற வலிய தாங்க முடியாது தனு. தெரிஞ்சே எப்படி நான் உனக்கு அந்த சாபத்தை தருவேன்? அதான் உன் நினைப்பிலேயே கடைசி வரை வாழ்ந்துடலாம்னு ஒதுங்கி இருக்க முயற்சி பண்ணேன்…” என்றவனை நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்.

‘அவன் எண்ணத்தில் பிழை இல்லையே… இப்போதுகூட, அவன் வாய் தவறி சொன்ன ஒரு வார்த்தையால் என் மனது எவ்வளவு தூரம் உடைந்து போனது? இதையெல்லாம் யோசித்து தான் அவன் அவ்வாறு விலகி இருக்கிறான்…’ என்று அவள் மனசாட்சியே அவன் பக்கம் நின்று  வாதிட்டது.

“நீங்க கவலைப்படாதீங்க அத்தான். மத்தவங்களுக்கு கிடைக்காத ஒரு வரம் உங்களுக்கு கிடைச்சிருக்கு. அதை வச்சு நம்ம குழந்தையை நாம காப்பாத்திக்கலாம்…”

பாலாஜி புரியாமல் அவள் விழிகளை பார்த்தான்.

“எனக்கு உங்க மூலமா ஒரு அண்ணனும் அண்ணியும் கிடைச்சிருக்காங்க. அவங்க என் குழந்தையை அவ்வளவு சுலபத்துல கை விட்டுற மாட்டாங்க…” என்று சொல்ல, அனிச்சையாய் பாலாஜியின் இதழ்கள் விரிந்தது.

‘ஆம்! சூர்யா நிச்சயம் எங்கள் குழந்தைக்காக சஞ்சீவி மலையை கூட பெயர்த்து எடுத்துக் கொண்டு வருவான்…’ என்று அவன்‌ மனதும் கூற, விழியோரம் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. 

ஒரு வாரம் ஓடியிருந்தது…

அந்த ஒரு வாரத்தில் ஆகாஷின் சாம்ராஜ்யத்தின் அஸ்திவாரம் ஆட்டம் காணத் தொடங்கியிருந்தது. இதுவரை தன் கையில் இருப்பதாக நினைத்திருந்த அதிகாரமும் சொத்தும், மெல்ல நழுவி சூர்யாவின் பக்கம் சாய்வதை இப்போதுதான் அவர் கண்டுபிடித்தார்.

சுஜித்திடம் பத்து சதவீதம், அப்சராவிடம் பத்து சதவீதம்… சூர்யாவிடம் ஏற்கனவே இருந்த இருபத்தைந்து சதவீதத்தையும் கூட்டினால், இப்போது நாற்பத்தைந்து சதவீத பங்குகள் அவன் கைவசம் இருந்தன. கிட்டத்தட்ட நிறுவனத்தின் முக்கால்வாசி அதிகாரம் சூர்யாவிடம் தஞ்சம் புகுந்துவிட்டது!

“எப்படிடா… எப்போ அவனுக்கு இதைக் கொடுத்தீங்க?” என்று அந்த மருத்துவமனை அறையே அதிரும் வண்ணம் இருவரையும் பிடித்துக் கத்தினார் ஆகாஷ். அவரது கண்களில் தெரிந்த ஆக்ரோஷம் இருவரையும் நடுங்க வைத்தது.

அப்சரா தலை குனிந்தபடி, “நான் ஒரு நாளும் என்னோட ஷேரை அவனுக்கு கொடுக்கலப்பா… ஆனா புதுசா டிரஸ் டிசைன் லான்ச் பண்ணும் போது, என்னோட பேர்ல பண்ணினா என்கிட்ட கையெழுத்து வாங்குவான். ஆரம்பத்துல படிச்சு பார்த்துதான் போட்டேன். அப்புறம் போகப்போக  அவன் மேல இருந்த நம்பிக்கையில சில தடவை படிக்காமலேயே கையெழுத்து போட்டுட்டேன்…” என்று மழுப்பினாள்.

“கொஞ்சமாவது அறிவு இருக்கா அப்சரா உனக்கு? ஒருத்தன் பேப்பர் கொடுத்தா அதுல என்ன இருக்குன்னு கூடப் பார்க்காம கையெழுத்து போடுற அளவுக்கு முட்டாளா நீ?” என்று ஆகாஷ் கத்த, அப்சராவால் அதற்கு பதில் சொல்ல முடியவில்லை.

‘அவன் என் முதுகு முழுவதும் முத்தங்களால் கோலம் வரைந்து கொண்டே கையெழுத்து வாங்கினான். அந்த போதையில் நானும் படிக்காமல் போட்டுவிட்டேன்’ என்று எப்படித் தன் தந்தையிடம் சொல்ல முடியும்? ஊமையாய் கண்ணீர் உதிர்ப்பதைத் தவிர அவளுக்கு வேறெதுவும் தெரியவில்லை.

சுஜித், “நான் அவனுக்கு எந்த பேப்பர்லயும் கையெழுத்து போட்டு கொடுக்கவே இல்லப்பா…” என்று கடைசி வரை சாதித்தான்.

“சும்மா சொல்லாத சுஜித்! லீகலா எல்லாமே பக்காவா நடந்திருக்கு. நீ கையெழுத்து போடாம இதெல்லாம் எப்படி நடக்கும்?”

“ஒருவேளை… நியூ இயர் பார்ட்டில போதையில இருந்தப்ப ஏதாவது போட்டிருப்பேனோ என்னவோ! அன்னைக்கு புதுசா மஷ்ரூம்ல ஏதோ போதை வஸ்து இருக்குன்னு தந்தான். அதை சாப்பிட்டேன் அடுத்த ரெண்டு நாள் நான் போதையிலயே இருந்தேன்” என்று அவன் உளற, ஆகாஷிற்கு இருவரையும் கன்னம் கன்னமாக அறைய வேண்டும் போல் இருந்தது. மருத்துவமனை என்றும் பாராமல் வாய்க்கு வந்தபடி அவர்களைத் திட்டித் தீர்த்தார்.

பொறுமை இழந்த சுஜித், “சும்மா திட்டிட்டே இருக்காதீங்கப்பா… நாங்களாவது பரவாயில்லை, போதையில கையெழுத்து போட்டு இருக்கோம். அப்பகூட, தலைக்கு பத்து பத்துன்னு இருபது சதவீதம் தான் கொடுத்தோம். ஆனா நீங்க? இருபத்தைந்து சதவீத ஷேரை அவனுக்குத் தாரை வார்த்துக் கொடுத்திருக்கீங்க! நியாயப்படி நீங்கதான் எங்களை விட அதிகமா இழந்துருக்கீங்க. உங்கள மாதிரியே நாங்களும் கோபப்பட்டு கத்துனா, போனது என்ன திரும்பியா வந்துடப் போகுது?” என்று நக்கலாகக் கேட்க, அந்த நொடியில்தான் ஆகாஷிற்குத் தான் செய்த மடத்தனத்தின் வீரியம் உறைத்தது.

அப்சரா, “சரி விடுங்க, ரெண்டு பேரும் எதுக்காக இப்படி சண்டை போட்டுட்டு இருக்கீங்க? எப்படி இருந்தாலும் அவனை நான் தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்? ஓப்பனா மீடியாலயே சொல்லிட்டான். மாத்தி பேசினா இமேஜ் டேமேஜ் ஆகிடும். அதனால கண்டிப்பா ஒத்துக்குவான். பார்த்துக்கலாம்…” என்று கூறினாள்.

வெறும் பத்து ரூபாய் பணத்தையே அத்தனை சுலபத்தில் திருப்பி கொடுக்காது இந்த உலகம். அந்த அரக்கனோ, பாதி ஏர்லைன்ஸ் கம்பெனியையே அவன் பெயருக்கு மாற்றி வைத்திருக்கிறான். கொடு! என்று கேட்டதும் உடனே திருப்பி தந்து விடுவானா? எனவே ஆகாஷிற்கும் இழந்த சொத்தை, அப்சரா கல்யாணத்தின் மூலம் மீட்பதைத் தவிர வேறு வழியில்லை என விளங்கியது. 

“இப்பவே அவன்கிட்ட பேசுறேன்!” என்று புலம்பியபடி சூர்யாவுக்கு அழைப்பு விடுத்தார்.

மறுமுனையில், பூர்ணிமாவைத் தன் மடியில் அமர்த்திக் கொண்டு அவளுக்குக் காதல் கலைகளைப் பயிற்றுவித்துக் கொண்டிருந்தான் சூர்யா. ஃபோனில் ஆகாஷின் பெயரைப் பார்த்ததும் முகம் மாறியவன், வில்லங்கமாய் இதழ் சுழித்து சிரித்தான்.

“சூர்யா… கல்யாண விஷயமா பேசத்தான் கால் பண்ணேன்…” என்றார், குரலில் கொஞ்சம் தயக்கத்தைக் குழைத்து.

“நானே அது சம்பந்தமா பேசணும்னு நினைச்சுட்டு இருந்தேன். சென்னையோட டாப் ஃபர்ஸ்ட் 5 ஸ்டார் ஹோட்டல்ல வெட்டிங் ஹால் சூப்பரா இருக்கு. அதை ஏற்பாடு பண்ணலாம்னு பார்த்தா என்னால முடியல. நீங்க உங்க இன்ஃபுளுயன்ஸ் வச்சு ட்ரை பண்ணி பாக்குறீங்களா?” 

பழம் நழுவி பாலில் விழுந்தது போல் இருந்தது ஆகாஷிற்கு.

“உடனே பண்றேன்…” 

“அப்சராவுக்கு இப்ப ஹெல்த் எப்படி இருக்கு? தடிப்பு குறையுதா? உடம்பை வேணும்னா டிரஸ்ஸால கவர் பண்ணிடலாம், ஆனா முகத்துக்கு மட்டும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா கேர் கொடுங்க. மீடியா முன்னால அவ வரணும்ல…”

 ‌ 

“டீரீட்மெண்ட் பார்த்துட்டே இருக்கோம், சரி பண்ணிடலாம் சூர்யா…” 

“ரெண்டு வாரத்துக்கு அப்புறம் வர்ற வெள்ளிக் கிழமையில கல்யாணம் ஃபிக்ஸ் பண்ணிருக்கேன். காலையில ஒன்பதரை மணிக்கு முகூர்த்தம். நடுவுல பதினஞ்சு நாள் இருக்கு, அஞ்சு மணி நேரம் முன்னால பிரைவேட் ஜெட்ல அவ இங்க வந்தா போதும். அதுவரைக்கும் ட்ரீட்மெண்ட்லயே இருக்கட்டும்…”

“குட் ஐடியா சூர்யா…”

“வேற எதுனா கால் பண்றேன், இப்போ ஒரு முக்கியமான மீட்டிங்ல இருக்கேன். நான் கால் பண்ற வரைக்கும் என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க” என்று கூறி தொடர்பை துண்டித்தான்.

கால் கட்டான பிறகு தான் ஆகாஷிற்கு ஒரு விஷயம் புத்தியில் உரைத்தது. முழுக்க முழுக்க அவன்தான் கட்டளைகளை பிறப்பித்துக் கொண்டே இருந்தான். இவர் வெறுமனே தலையாட்டிக் கொண்டிருந்தார்!‌ 

‘எனக்கே தெரியாமல் என்னை அதிகாரம் செய்ய ஆரம்பித்து விட்டானே? திருமணத்திற்கு பிறகு  என் கதி என்னவாகும்?’ என்று நினைக்கும் போதே நெற்றி வியர்த்தது.

பேசி முடித்துவிட்டு போனை தூரமாய் தூக்கி போட்டவன், தன்னவள் கழுத்துச் சரிவில் முகம் புதைத்தான். கால் பேசுவதற்கு முன்பு இருந்த கெஞ்சலும் கொஞ்சலும் இப்போது குறைவது போல் இருந்தது.

“என்ன பூரி? என்னாச்சு?” 

தலை குனிந்து கொண்டு விரலை பிசைந்தவள், “நான் வேணும்னா என்னோட டிரஸ் எல்லாம் எடுத்துட்டு, வேலைக்கார அக்காவோட போய் இருந்துக்கட்டுமா?” என்றாள் தழுதழுத்த குரலில்‌.

“ஏனாம்?” எதுவுமே தெரியாதது போல கன்னத்தில் கை வைத்து கதை கேட்டான். 

“அப்சராவோட கல்யாணம் நடக்க போகுதுல? நான் உன்கூடவே ஒட்டிட்டு இருந்தா நல்லா இருக்காது.”

“அதனால மேடம் விட்டுக் கொடுக்கிறீர்களாக்கும். சும்மா சொல்லக்கூடாது, பல பேர் இப்படி ஒரு பொண்டாட்டி கிடைக்காதானு தவம் இருக்குறானுங்க. எனக்கு தவம் செய்யாமலே கிடைச்சிருக்குற வரம் நீ…”

அவன் பொண்டாட்டி என்று அழுத்தி சொன்னதை கூட அவள் புத்தி இப்போது உணர்ந்திருக்கவில்லை. 

“உன் நல்லதுக்காகத்தான்  சொல்றேன் சூர்யா…”

“என்னோட நல்லதுக்கு நீ ஏதாவது பண்றதா இருந்தா, பொண்டாட்டிங்கிற உரிமையை எடுத்துக்க ஆரம்பி. இல்லனு வச்சுக்க, போலீஸ் என்ன தூக்கி உள்ள போட்டுருவாங்க.”

அவள் ஆதி அந்தம் எதுவும் புரியாமல் தன் கோலி குண்டு கண்களை உருட்டி விழித்தாள்.

“முட்டாளு… முட்டாளு… நீ இங்க வந்த முதல் நாளே நான் நம்ம ரெண்டு பேருக்கும் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிட்டேன்.‌ அப்சராவ வச்சு நான் பண்றது எல்லாமே ஆக்டிங். அவள நாளைக்கு கல்யாணம் பண்ண வேண்டிய சூழ்நிலை வந்தா, முதல் பொண்டாட்டி உயிரோட இருக்கும்போது இன்னொருத்தியை கல்யாணம் பண்ணிட்டான்னு சொல்லி என்னை உள்ள தூக்கி வச்சுருவாங்கடி…” என்று கூறி முடித்த அடுத்த கணம், அவன் கையிலேயே மயங்கிச் சரிந்தாள் அவள்.

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page