ரசிகை – 32

அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு பூர்ணிமா தன்னால் முடிந்த மட்டும் வீடு தேடி பார்த்தாள். ஆனால் அவளுக்குமே, அவ்வளவு பெரிய சென்னையில் ஒரு குடிசை வீடு கூட கிடைக்கவில்லை. சூர்யாவே மனம் இறங்கும் வரை நம்மால் எதுவும் செய்ய முடியாது என்று அவளும் புரிந்து கொண்டாள்.

அன்று திடீரென வானம் இருட்டிக் கொண்டு வந்தது. வழக்கமாக படுக்கும் இடத்தில் இன்று உறங்க முடியாமல், பிரபாவின் குடும்பம் அலைமோதியது. போவதற்கு இடமில்லாமல் சொந்த வீட்டிற்க்கே திரும்பிச் சென்றனர். திருட்டுத்தனமாக பின் வாசல் வழியாக கதவை திறந்து கொல்லைக்குள் நுழைந்த நால்வரும், எப்போதும் அபியும் பூர்ணியும் தூங்கும் திண்ணையில் அமர்ந்தனர். 

பகலெல்லாம் ஓடி ஆடி உழைத்ததால் உடல் எல்லாம் வலி! வீதி வீதியாய் அலைந்து திரிந்ததால் உருவான புழுக்கம், வியர்வை வாடை, கசகசப்பு என சொந்த உடலே அவர்களுக்கு அன்னியமாக தோன்றியது. திடீரென மழை பொழிய, அதில் முகம் கழுவிவிட்டு திண்ணையில் ஒடுங்கிக் கொண்டனர். ஒரு மணி நேரம் விடாது பொழிந்த மழை, அதன் பின் ஒரு முடிவுக்கு வந்தது. இனி நிம்மதியாக உறங்கலாம் என்று நினைத்திருக்க, கொசு கொன்று எடுத்தது! 

பிரபா, “அடியே, ஏதாவது விசிறியோ அட்டையோ இருந்தா எடுத்து விசிறி விடுடி…” என்று மனைவியிடம் கெஞ்சினார்.

அரைத்தூக்கத்தில் இருந்த மங்கை, “இதுக்கு மேல சத்தியமா என்னால விரலை கூட அசைக்க முடியாதுங்க. இந்த நாள் நரகத்தை விட மோசமா இருந்திடுச்சு. தூங்கவே முடியல… அந்த பூர்ணியும் அபியும் எப்படித்தான் இந்த இடத்துல தூங்குனாளுகளோ!” என்று தன்னை மறந்து புலம்பி விட்டார். 

அப்போதுதான் நெற்றிப்பொட்டில் அடித்தார் போல மூவருக்கும் ஒரு விஷயம் புரிந்தது. 

‘வீட்டு வேலை, டெய்லர் கடை, அபியின் ஆரோக்கியம், கொல்லையில் அரைகுறை தூக்கம் என இத்தனை வருடம் அவள் வாழ்ந்த வாழ்வு இதுதான்.‌ இதில் இடையிடையே  நாங்களும் வேறு துன்புறுத்தி ரசித்தோம். எனில் அவள் எவ்வளவு மனம் நொந்திருப்பாள்?! இருந்தும் நம்மை மன்னிக்க எப்படி மனம் வந்தது?’ என நால்வரும் யோசித்தனர்.

காவ்யா, “அடுத்ததடவை பூர்ணிமாவை நேர்ல பார்த்தா நாம யாரும் கால்ல விழ வேண்டாம். ஏன்னா, நம்மை யாருக்கும் அவ காலை தொடக்கூட தகுதியில்ல…” என்றாள் உறுதியான குரலில்.

அதை ஆமோதிப்பது போல அவளின் பெற்றோர் அமைதியாக இருந்தனர். ஜன்னல் வழியாக இதை கேட்டுக் கொண்டிருந்த தங்கதுரையும், இதே நினைப்பில் தான் மகளை விட்டு விலகி நிற்கிறார். அவர்கள் எல்லோரும் உண்மையாய் மனம் வருந்தி கண்ணீர் வடிப்பதை, சிசிடிவி மூலமாக தன் கணினி திரை வழியே பார்த்துக் கொண்டிருந்தான் சூர்யா.‌ 

ஆனால் இத்தனைக்கு பிறகும் அவன் முகத்தில் இருந்த இறுக்கம் கொஞ்சமும் தளரவில்லை. அவளுக்கு கெடுதல் செய்தவர்களையே இந்த பாடு படுத்துபவன், தன் எதிரிகளை என்னென்ன செய்ய காத்திருக்கிறானோ…

அதிகாலை நேரம் ஒன்றில், பாலாஜி ஆங்காரமாய் சூர்யாவின் வீட்டிற்குள் நுழைந்தான். ஹாலில் அமர்ந்து புது டிசைன் ஆடை ஒன்றை வரைந்து கொண்டிருந்த பூர்ணி பாலாஜியின் காலடிச் சத்தம் கேட்டு நிமிர்ந்தாள். 

“எங்கம்மா அவன்? எங்க இருக்கான் உன் புருஷன்?” என்று கோபமாகக் கேட்டான். பூர்ணிமா அவனது ஆவேசத்தைக் கண்டு ஒரு நிமிடம் திகைத்தாலும், அமைதியாகத் தன் ஒற்றை விரலை மட்டும் மாடிப் பகுதியை நோக்கி நீட்டினாள்.

“அவனை இன்னைக்கு ஒரு கை பார்க்காம விடமாட்டேன்…” என்று ஆர்ப்பரித்தபடி படிக்கட்டுகளில் ஏறப் போனான். ஆனால், அவன் முதல் படியில் கால் வைப்பதற்குள், மாடியிலிருந்து சூட்கேஸும் கையுமாகத் தடதடவென இறங்கி வந்துவிட்டான் சூர்யா.

பாலாஜிக்கும் தனுஜாவிற்கும் திருமணம் நடக்க இன்னும் ஐந்து நாட்கள்தான் இருக்கிறது. கல்யாண வேலைகள் தலைக்கு மேல் கிடக்கும் இந்த நேரத்தில், சூர்யா எதைப் பற்றியும் கவலைப்படாமல் சூட்கேஸை எடுத்துக் கொண்டு வெளியூர் கிளம்புவதைப் பார்த்ததும் பாலாஜிக்கு ரத்தம் கொதித்தது.

“டேய், நீ என்ன நினைச்சுகிட்டு இருக்க உன் மனசுல? நான் வேண்டாம்னு சொல்ல சொல்ல கேட்காம பெரிய ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல கல்யாணத்தை நடத்த ஏற்பாடு செஞ்சு கொடுத்த. பத்திரிக்கையை பார்த்தே சொந்தக்காரனுங்க எல்லாரும் மூக்கு மேல விரல் வச்சிட்டாங்க. எங்க கல்யாணத்த சாக்கா வச்சு பைவ் ஸ்டார் ஹோட்டலை சுத்தி பார்க்க வர்றவங்க மட்டுமே ஆயிரம் பேர் இருப்பாங்க. எப்படி எல்லாத்தையும் சமாளிக்க போறேனோனு நான் ஏற்கனவே பயந்துட்டு இருக்கேன். இந்த நேரத்துல பொட்டியை தூக்கிட்டு வந்து நிக்கிற?” 

அவன் தன் முதலாளி என்பதையும் மறந்து கத்திக் கொண்டிருந்தான் பாலாஜி. ‌சூர்யாவோ எதற்கும் அசராமல், கையில் இருந்த சூட்கேஸை ஓரமாக வைத்துவிட்டு, தன் கோட் காலரைச் சரி செய்தபடியே பாலாஜியை பார்த்தான்.

“முறைச்சா பயந்திடுவோமா?”

“எதே? நான் முறைச்சேனா? சும்மா பார்த்தேன்டா…”

“அது எதுவா வேணாலும் இருக்கட்டும். இப்போ நீ எதுக்கு டெல்லி போற?”

“ஏன்டா என்னை தப்பாவே நினைக்கிற? மண்டபம் புக் பண்ணிக் கொடுத்த மனுஷனுக்கு ஒரு நன்றி சொல்லிட்டு வரலாம்னு தான் கிளம்புறேன். என்ன இருந்தாலும் பேசிக் மேனர்ஸ்னு ஒன்னு இருக்குல…” என்று கிண்டலாகக் கூறினான்.

பூர்ணிமாவுக்குத் தூக்கிவாரிப் போட்டது. சூர்யா சொன்ன அந்த ‘நன்றி’ யாருக்கு என்பது அவளுக்கு மட்டுமே தெரியும். அன்று அவளை மடியில் வைத்துக் கொண்டுதானே மண்டபம் புக் செய்ய பட்டிமன்றம் நடத்தினான்…

ஆகாஷ் தன் மகள் அப்சராவைச் சூர்யா திருமணம் செய்து கொள்வதற்காகப் புக் செய்து வைத்திருந்த அதே பிரம்மாண்டமான வெட்டிங் ஹாலைத்தான், இப்போது பாலாஜி – தனுஜா திருமணத்திற்குப் பயன்படுத்தப் போகிறான் சூர்யா.

‘இதோடு நிறுத்தப் போவதில்லை! எதிரியை அவனது சொந்த ஊருக்கே சென்று, நேருக்கு நேர் அடிக்கப் போகிறான்! இங்கிருந்தவர்கள் எல்லோரும் அவனை விட எளியவர்கள். எளிதாக பந்தாடிவிட்டான்.‌‌ ஆகாஷ் அப்படியா? இவனைவிட எமகாதகன். அவனால் தன்னவனுக்கு ஏதேனும் ஆபத்து வந்துவிடுமோ?’ என பேதை நெஞ்சு நடுங்கிற்று. 

“சூர்யா, நானும் உன் கூட டெல்லிக்கு வரட்டுமா?” என பூர்ணி கேட்க, யூ டூ பூர்ணி?! எனும் ரீதியில் அவளை முறைத்தான் பாலாஜி.

“போன ட்ரிப் மாதிரி இந்த ட்ரிப்  சுமூகமா இருக்காது. இந்த நிமிஷத்துக்கு நிமிஷம் பரபரப்பா இருக்கும். எல்லாத்தையும் சமாளிக்கணும். முடியுமா உன்னால?”

‘போன ட்ரிப்பே அப்படி தானடா இருந்தது?!’ என மனதிற்குள் நினைத்துக் கொண்டவள், சரி என தலை ஆட்டினாள்.

“முடியாது, முடியாது… முடியவே முடியாது” என்று மல்லுக்கட்டி பார்த்தான் பாலாஜி.

“நான் கூட போனா, சூர்யாவ எப்படியாவது கன்வீன்ஸ் பண்ணி கல்யாணத்துக்கு கூட்டிட்டு வந்துடுவேன்…” என்று சமாதானம் பேசினாள். 

கோபம் கொஞ்சம் மட்டுப்பட, இருவரும் வேறு ஏதோ பெரிய பிரச்சனையை தலையில் தூக்கி சுமக்கிறார்கள் என்று அவனுக்கும் விளங்கியது.

“என்னவோ பண்ணுங்க… கல்யாணத்தப்போ ரெண்டு பேரும் என் பக்கத்துல இல்லனா, அப்புறம் ஜென்மத்துக்கும் ரெண்டு பேர் கூடவும் பேச மாட்டேன்.

அவன் சொன்ன எல்லாத்துக்கும் தலை ஆட்டிடும் பூர்ணியை, சூர்யா அடக்கப்பட்ட சிரிப்போடு பார்த்துக் கொண்டிருந்தான். அடுத்த ஒரு மணி நேரத்தில் இருவரும் டெல்லி செல்லும் விமானத்தில் அமர்ந்திருந்தனர்.

அவன் விரலோடு தன் விரல்களை பிணைத்துக் கொண்டு, “என்ன ப்ளான் வச்சிருக்கீங்க?” என்று சூசகமாக கேட்டுப் பார்த்தாள்.

“சொல்லுவேன், ஆனா நீ திட்டக்கூடாது…”

“மாட்டேனே, அம்மா சத்தியமா மாட்டேனே…” என்று தலையில் அடித்துக் கொண்டு ஆர்வமாக அவன் பக்கம் திரும்பி உட்கார்ந்தாள்.

“போறோம், இவதான் என் பொண்டாட்டினு‌ அந்த ஏர்லைன்ஸ் ஓனர் கிட்ட சொல்றோம். மண்டபம் புக் பண்ணி கொடுத்ததுக்கு ஒரு ஃப்ளையிங் கிஸ்ஸ தட்டுறோம். அடுத்த பிளைட்ல திரும்பி வர்றோம்” என்று சொல்லி முடித்தவனை நம்பாத  பார்வை பார்த்தாள் அவள்.

“என்னடி?” என்று அவள் விழிகளை நெருங்கியபடி கேட்டான் சூர்யா.

“சும்மா வாய்க்கு வந்த பொய்ய சொல்லிட்டு இருக்க நீ…” என்று முகம் சுருங்க,

“இதுதான் முதல்லயே திட்டக் கூடாதுன்னு சொன்னேன்…” என்று முகத்தை திருப்பிக் கொண்டான் அவனும்.

கோபத்தில், இவனோடு பேசக்கூடாது என்று முகத்தை திருப்பிக் கொண்டு உட்கார்ந்தாள். விமானத்தின் மெல்லிய இரைச்சலும், ஏசியின் குளிரும் அவன் மனதை தன்வசப்படுத்த, எப்போது உறங்கினாளோ அவளுக்கே தெரியவில்லை!

அவளது தலை தற்செயலாகச் சரிந்து சூர்யாவின் தோளில் தஞ்சம் புகுந்தது. ஆழ்ந்த சுவாசத்தின் வெப்பம் தன் தோளில் பட்டதும், சூர்யா தன் கவனத்தை ஜன்னல் திரையிலிருந்து அவளிடம் திருப்பினான். அதுவரை இறுக்கமாக இருந்த அவன் முகத்தில், ஒரு மென்மையான புன்னகை அரும்பியது.

உலகத்தையே வம்புக்கு இழுப்பவனின் வலிய கரங்கள், இப்போது அத்தனை ஜாக்கிரதையாக அவளது தலையைத் தாங்கி, தன் தோளோடு இன்னும் நெருக்கமாக அணைத்துக் கொண்டது. அவள் உறக்கம் கலைந்துவிடக் கூடாதே என்கிற தவிப்பில் மூச்சைக் கூடச் சீராக விடத் தயங்கியவன், தன் விரல்களால் அவளது நெற்றி முடியை வருடினான்.

‘உன்னை தலைகீழாக திருப்பும் வல்லமை இவள் ஒருத்தியிடம் மட்டுமே இருக்கிறது. இல்லையென்றால் இத்தனை ரணகளத்திலும் பொறுமையாய் அவளை கூட்டிக் கொண்டு போவாயா!’ என்று மனசாட்சியே ஜாடை பேசியது.

ஆம்! அவன் திட்டங்கள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு விட்டன. சூர்யா டெல்லியில் கால் பதிக்கும் முன்பே, அந்த மாநகரம் ஒரு பூகம்பத்திற்கு தயாராகி இருந்தது. ஏர்போர்ட்டை விட்டு வெளியே வந்த சூர்யாவின் ஒரு கையில் அவனது லக்கேஜ் இருக்க, மறு கை பூர்ணிமாவின் கையை இறுகப் பற்றிக் கொண்டிருந்தது.

காரில் ஏறிய அடுத்த நொடி ஃபோனை எடுத்து பார்த்தான். சோசியல் மீடியா முழுக்க ஒரே ஒரு செய்திதான் காட்டுத்தீயாய் பரவிக் கொண்டிருந்தது.

“இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சுஜித் மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டாரா? ஆதாரங்கள் சிக்கியது!” என சுஜித்தின் கிரிக்கெட் வாழ்க்கை ஒரே நொடியில் சரிந்து விழுந்ததை அந்தச் செய்திகள் ஊர்ஜிதம் செய்தன. 

தன் மொபைலில் வந்த அந்தச் செய்தியை ஒருமுறை பார்த்த சூர்யாவின் இதழ்களில் ஒரு குரூரமான புன்னகை வந்து மறைந்தது. பக்கத்தில் அமர்ந்திருந்த பூர்ணிமா அந்தச் செய்தியைப் பார்த்துவிட்டுப் பதறிப்போனாள்.

“இது என்ன இப்படிப் போட்டுருக்காங்க? சுஜித் நிஜமாவே அப்படிப் பண்ணினானா? இல்ல உங்க திருவிளையாடலா?” என்று அவள் அதிர்ச்சியில் கேட்க, 

சூர்யா அவளது கையை லேசாக அழுத்தி, “எங்க எது நடந்தாலும் என்னை ஏன்டி சந்தேகப்படுற. முற்பகல் வினைக்கு பிற்பகல் அனுபவிக்கிறாங்க. என் தப்பு இதுல என்ன இருக்கு? நாம முதல்ல அப்சராவைப் பார்த்துட்டு வந்துடலாம், அவ என்னை ரொம்ப மிஸ் பண்றாளாம்” என்றான் எகத்தாளமாய்.

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page