ரசிகை – 33

மருத்துவமனை அறைக்குள் நுழையும்போது பூர்ணிமாவுக்கு ஏனோ ஒரு தயக்கம் இருந்தது. ஆனால் சூர்யா அவளை விடவில்லை. அவளது கையைப் பிடித்துக்கொண்டே உள்ளே நுழைந்தான். படுக்கையில் அப்சரா ஒரு புழுவைப் போலச் சுருண்டு கிடந்தாள். ஒரு காலத்தில் பேரழகியாக வலம் வந்தவள், இன்று தன் முகத்தைக் கண்ணாடியில் கூடப் பார்க்க முடியாமல் போர்வையால் போர்த்திக் கொண்டு கிடந்தாள்.

“அப்சரா… இப்போ எப்படி இருக்க?” எனும் சூர்யாவின் குரல் கேட்டு மெல்லத் தலையைத் தூக்கினாள். அவளது வீங்கிய கண்களைப் பார்த்த சூர்யா, மெதுவாய் அவளருகில் சென்றான். பூர்ணிமா அடுத்து என்ன நடக்குமோ? எனும் பயத்தோடு ஓரமாய் ஒதுங்கி நின்று கொண்டிருந்தாள்.

“சூர்யா… என்னைக் காப்பாத்து சூர்யா… என்னால இந்த வலியைத் தாங்க முடியல… வீங்கின இடமெல்லாம் எரியுதுடா” என்று அவள் தேம்பித் தேம்பி அழ, சூர்யா அவளது போர்வையை மெல்ல விலக்கினான். பூர்ணிமா அப்சராவின் கோலத்தைப் பார்த்துவிட்டு வாயைப் பொத்திக்கொண்டு ஒரு அடி பின்வாங்கினாள்.

“உன்னைக் காப்பாத்தணுமா? சரி காப்பாத்துறேன். யாரோட ரிலேஷன்ஷிப்ல இருந்ததால இது வந்ததுனு மட்டும் சொல்லிடு…” என்று கேட்ட சூர்யாவின் குரலில் இப்போது கிஞ்சத்துக்கும் காதல் இல்லை. எள்ளல் மட்டுமே இருந்தது.

“அது… அது… அது வந்து…”

“எனக்கு தெரியும். அந்த அரசியல்வாதி பையனோட வந்த பாடிகார்ட் தான?” என்று சரியாக சொல்ல, அவள் தலை ஆம் என அசைந்தது.

“ஏன் அவனோட இருந்த?”

பதில் சொல்ல முடியாமல் உதட்டை கடித்தாள்‌.

“உன்னைத்தான் அப்சரா கேட்குறேன்…”

“அவரு பார்க்க பெரிய பாடி பில்டர் போல இருந்தாரு. அதனால தெரியாம தப்பு பண்ணிட்டேன்.”

“நீ என்ன கூட்டத்துல நடக்கும் போது அவரை இடிச்சுட்டா இதை வாங்கிட்டு வந்திருக்க? தெரியாம பண்ணிட்டேன்னு சொல்ல… அழகா, ரூம் புக் பண்ணி, ஒரு நைட்டு ஃபுல்லா ஸ்பெண்ட் பண்ணி இருக்க. இதுல மிட் நைட்டுல ஸ்விம்மிங் ஃபூல்ல வேற விளையாடினீங்களாம்‌. இதெல்லாம் தெரியாம பண்றதா அப்சரா?”

பூர்ணிமா அதிர்ச்சியில், “சூர்யா… என்ன பேசுற நீ? அவளே பாவம் முடியாம இருக்கா…” என்று அவனைத் தடுக்க முயல, சூர்யா அவளை ஒரு கையால் தடுத்துவிட்டு அப்சராவை உற்றுப் பார்த்தான்.

“இதோ பார் உன்னைக் காதலிச்சு, கல்யாணம் பண்றது போல நடிச்சு, கடைசியில கழட்டி விடுறது மட்டும்தான் என் பிளானே! நீயும் அந்த ப்ளான்லதான இருந்த. இப்போ உனக்கு வந்த வியாதி, இந்த கஷ்டம், இது எல்லாமே நீயே உனக்குச் சொந்தமா வச்சுக்கிட்ட சூனியம். எனக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. நாம பிரேக்கப் பண்ணிக்கலாம்” என்றான் அழுத்தமான குரலில்.

“என்ன சொல்ற சூர்யா? இன்னும் நாலு நாள்ல நமக்கு கல்யாணம்…”

“நீ இதே கோலத்துல மண்டபத்துக்கு வருவியா? முதல்ல இந்த ரூம் விட்டு வெளியே வருவியா?” என்று கேட்டதும் பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்தாள்.

“நானே நினைச்சாலும் உன்னை கல்யாணம் பண்ண முடியாது. ஏன்னா ஏற்கனவே எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு. இவ தான் என் முன்னாள் காதலி, தற்போதைய ஆசைப் பொண்டாட்டி…” என்று பூர்ணிக்கு அருகே சென்று நின்றான்.

அப்சரா விம்மி வெடித்து அழுதாள்.

“சூர்யா… நிறுத்து சூர்யா… பாவம் அவ…” என்று பூர்ணிமா கெஞ்சினாள். 

அவனா அடங்குவான்? அவளைத் தன் பக்கம் இழுத்து அணைத்து முத்தமிட்டான். பூர்ணியின் துள்ளலும் துடிப்பும் அவன் பிடிக்குள் எடுபடவே இல்லை. 

‘அன்றைக்கு இருவரும் ஒரே அறையில் கூடி சல்லாபிக்கையில் அவளுக்கும் இப்படித்தானே இருந்திருக்கும்?!’ என்று நினைக்கையிலேயே அப்சராவின் முகம் கறுத்தது…

“நான்… நான் சீக்கிரம் சரியாகிடுவேன் சூர்யா. என்னை கைவிட்டுறாத, ப்ளீஸ்…”

“இனி நீ எப்படி இருந்தா என்ன அப்சரா? உன் அழகு போச்சு, உங்க குடும்ப கௌரவம் போச்சு, உன் அண்ணனோட கிரிக்கெட் வாழ்க்கை முடிஞ்சே போச்சு… இனி இந்த உலகத்துல நீங்கள்லாம் எதுக்காக வாழப்போறீங்க?” என்று அவள் காதோரம் நஞ்சைக் கக்கிவிட்டு, விக்கித்து நின்ற பூர்ணிமாவின் கையைப் பிடித்துக்கொண்டு வெளியே நடந்தான்.

அப்சரா அந்த நிமிடத்திலேயே வாழ்வை வெறுத்துவிட்டு ஒரு ஜடமாகப் படுக்கையில் சரிந்தாள். அவளது அழுகைச் சத்தம் சூர்யாவின் காதுகளுக்கு ஒரு சங்கீதம் போல ஒலித்தது. அங்கே அவளை அந்த நரகத்தில் தவிக்க விட்டுவிட்டு, அடுத்த இலக்கான சுஜித்தை பார்க்கச் சென்றான். அவனது நிழல் போல, பயமும் வியப்புமாய் பின்னாடியே நடந்து வந்தாள் பூர்ணிமா.

அடுத்த அறையில் சுஜித்… ஒரு காலத்தில் மைதானத்தில் மார்தட்டி நின்றவன், இன்று முகமெல்லாம் கட்டுகளுடன் படுக்கையில் முடங்கிக் கிடந்தான். சூர்யா உள்ளே நுழையும் போது, சுஜித் டிவியில் ஓடிக் கொண்டிருந்த அந்த பிரேக்கிங் நியூஸைத்தான் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

டிவியில் ரிப்போர்ட்டர், “இந்திய கிரிக்கெட் வாரியம் (BCCI) இப்போது சூர்யாவைத் தான் அடுத்த கேப்டனா கொண்டு வர்றது பத்தி அவரோட தீவிரமாப் பேச்சு வார்த்தை நடத்திட்டு இருக்காங்க. சுஜித் மேல வந்திருக்கிற இந்த ஃபிக்ஸிங் புகாரால, இந்திய அணியை வழிநடத்த சூர்யாவைத் தவிர வேற யாரும் தகுதியான ஆள் இல்லைன்னு பிசிசிஐ நம்புறாங்க!” என ஆக்ரோஷமாகப் பேசிக்கொண்டிருந்தார்.

அதைப் பார்த்துக் கொண்டிருந்த சுஜித்தின் கண்கள் சிவந்தன. 

“சூர்யா… இதெல்லாம்… இதெல்லாம் யார் செஞ்சது?” என்று தழுதழுத்த குரலில் கேட்டான். பாவம் அந்த அப்பாவி ஜீவன் இன்னமும் இவனை நம்பிக் கொண்டிருக்கிறது போல!

ஒரு சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்த சூர்யா, பூர்ணிமாவின் கையை பிடித்து இழுத்து தன் அருகே அமர்த்திக் கொண்டு, சுஜித்தை ஏளனமாகப் பார்த்தான்.

“என்னடா சுஜித்… இன்னும் என் மேல உனக்கு நம்பிக்கை இருக்கா? எல்லாத்தையும் செஞ்ச எங்கிட்டயே எவன் செஞ்சதுனு கேக்குற?” என்று சொல்லவும், படுக்கையில் இருந்து விருட்டென அழுந்தான்.

“அப்போ… அப்போ… உனக்கு எல்லா உண்மையும் தெரிஞ்சிடுச்சா?”

“பல வருஷத்துக்கு முன்னாலேயே தெரியும்…” என்று பதில் சொல்ல, சுஜித்திற்கு புத்தி பேதலித்தது.

“சுஜித், நீ இவ்வளவு கெட்டவனா இருப்பேன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல‌. மேட்ச் ஃபிக்ஸிங் பண்ணுனவனை இந்த நாடும் உன் வீடும் இனி ஏத்துக்குமா? உன் கேப்டன் பதவியும் போச்சு, உன் கௌரவமும் போச்சு. இப்போ நீ வெறும் ஒரு குப்பை தான்! சின்ன பசங்களுக்கு கோச்சிங் சொல்லித்தர கூட உன்னை யாரும் கூப்பிட மாட்டாங்க” என்றான் நக்கலாய்.

இதுதான் என்‌ எதிர்காலமா? என எண்ணச் சுழலில் அவன் சிக்கியிருந்த நேரம், சூர்யாவின் மொபைல் அதிர்ந்தது. எடுத்துப் பார்த்தவன் இதழ்களில் ஒரு மர்மமான புன்னகை விரிந்தது. வேண்டுமென்றே லவுட் ஸ்பீக்கரை ஆன் செய்து, போனை சுஜித்தின் அருகில் கொண்டு போனான்.

மறுமுனையில் பிசிசிஐ-யின் உயர்மட்ட அதிகாரி, “ஹலோ சூர்யா… நீங்க இப்போ டெல்லியில தான் இருக்கீங்கன்னு தெரியும். சுஜித்தோட நிலைமை இப்போ ரொம்ப மோசமா இருக்கு. இந்த இக்கட்டான நேரத்துல நீங்கதான் இந்திய அணியோட கேப்டன் பொறுப்பை ஏத்துக்கணும். இது எங்க வேண்டுகோள்!” என்றார். 

ஏற்கனவே இதற்கு முன் பலமுறை அவனிடம் கேட்டிருக்கிறார். ஆனால் அப்போதெல்லாம் நிராகரித்துவிட்டான். எனவேதான் இம்முறை வேண்டுகோளாக வந்தது அவர் வார்த்தைகள்.

சூர்யா ஒரு கணம் பூர்ணிமாவைத் திரும்பிப் பார்த்தான். கிரிக்கெட் சாம்ராஜ்யத்தின் பெரும் தலை ஒன்று தன் கணவனிடம் வேண்டுகோள் விடுப்பதை கேட்டு, அவள் விழிகளில் ஓர் நொடி சந்தோஷம் வந்து போகத்தான் செய்தது… 

பின் சுஜித்தின் கண்களை உற்றுப் பார்த்தபடியே, “நிச்சயமா சார்… நாட்டுக்காக நான் எதையும் செய்யத் தயார். சுஜித் பண்ணுன அந்த அசிங்கத்தைத் துடைச்சு, இந்திய அணியை மறுபடியும் தலைநிமிர வைக்கிறது என் கடமை. நான் பொறுப்பை ஏத்துக்குறேன்!” என்று பெருந்தன்மையோடு சொன்னான்.

“தேங்க்ஸ் சூர்யா, நான் உடனே அதுக்கான அரேஞ்ச்மெண்ட்ஸ் எல்லாம் பாக்குறேன்” என்று சந்தோசமாக காலை கட் செய்தார்.

சுஜித்தின் முகத்திற்கு மிக அருகில் குனிந்தவன், “கேப்டன் பதவிய பிடுங்கிட்டேன்? ஏற்கனவே உன் ஷேர்ஸ் எல்லாம் என் கைக்கு வந்துடுச்சு. நீ போதையில இருக்கும் போதெல்லாம் உன் ஃபோன் லேப்டாப்ல இருக்கு டேட்டாவை திருடி அதை வச்சே உங்கப்பனுக்கு ஒரு ஆப்பு ரெடி பண்ணிட்டேன். இன்னியோட உங்க எல்லாரோட ஆட்டமும் க்ளோஸ் ஆகப் போகுது‌… லாஸ்ட் பட் நாட் லீஸ்ட், ஒரு ஸ்பெஷல் சர்ப்ரைஸ் தந்துடவா?” என்று கரகரப்பான குரலில் கேட்டான்.

‘இன்னும் என்ன?’ எனும் முக பாவனையோடு அவனைப் பார்த்தான் சுஜித்.

“அன்னைக்கு ராத்திரி உன்னை யாரு அடிச்சு, முகத்தை உடைச்சு, இப்படிச் சவம் போல ஹாஸ்பிடல்ல படுக்க வச்சதுன்னு இப்ப வரைக்கும் நீயும் உங்க அப்பாவும் தேடிக்கிட்டு இருக்கீங்கள்ல? அது நான்தான்…” என்று கூறவும், சுஜித் மிரட்சியுடன் அவனை பார்த்தான்.

“அதனாலதான் போலீசால அந்த ரூம்ல வேற எந்த நபரோட கை ரேகையையும், தடயத்தையும் கண்டுபிடிக்க முடியல” என்று அடக்கப்பட்ட சிரிப்போடு கூறினான்.

சுஜித் அதிர்ச்சியில் வாயடைத்துப் போய் கிடக்க, சூர்யா பூர்ணிமாவின் கையைப் பிடித்துக்கொண்டு கிளம்பத் தயாரானான்.

“வா பூரி… இங்க கருகுன வாடை வீச ஆரம்பிச்சுடுச்சு. நாம போய் இவங்க அப்பனை பார்த்துட்டு வரலாம்” என்று சொல்லிவிட்டு, அந்த இடத்தை விட்டு வெளியேறினான்.

 

சூர்யா டெல்லிக்கு வந்த நோக்கமே, அந்த ஆலமரத்தை வேரோடு சாய்க்கத்தான். ஏர்லைன்ஸ் பிசினஸை அவரிடமிருந்து பறிப்பது என்பது சூர்யாவிற்கு ஒரு சாதாரணமான விஷயம். ஆனால், ஆகாஷ் இத்தனை காலம் கௌரவமாகச் சேர்த்து வைத்திருந்த அந்த முகமூடியை கிழிப்பதுதான் அவனது உண்மையான குறி.

சூர்யா தன் மொபைலில் ஒரு ரகசிய எண்ணிற்குத் தகவல் அனுப்பிய சில நிமிடங்களிலேயே, ஆகாஷின் பிரம்மாண்டமான பங்களா வாசலில் அதிகாரிகளின் கார்கள் வந்து அணிவகுத்தன.

வாசலில் வருமான வரித்துறை (IT) அதிகாரிகள் வந்து இறங்கியபோது, ஆகாஷ் தன் அறைக்குள் எதையோ மறைக்கத் தவித்துக் கொண்டிருந்தார். ஆனால், அதற்குள் அதிகாரிகள் வீட்டைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

சூர்யா, ஐடி அதிகாரிகளோடு ஒரு ‘அதிகாரப்பூர்வ புகார்தாரராக’ உள்ளே நுழைந்தான். அவனது கையில் ஒரு லேப்டாப் மற்றும் சில முக்கியமான கோப்புகள் இருந்தன. அதிகாரிகள் ஒவ்வொரு அறையாகச் சோதனையிட, சூர்யா மட்டும் வரவேற்பறையில் அந்தப் பெரிய சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தான். அவனது கையில் ஒரு சூடான காபி கோப்பை… அவனது அருகில் மிரட்சியோடு அமர்ந்திருந்தாள் பூர்ணிமா.

“இது என் வீடு… நீ வெளியே போ!” என்று ஆங்காரமாய்க் கத்தினார் ஆகாஷ். சூர்யா பதில் ஏதும் சொல்லாமல் திமிராய் ஒரு பார்வை பார்த்தான்.

ஒரு ஜூனியர் அதிகாரியும், “ஆமா சார், நீங்க ஒரு வெளிநபர். இங்கே இருக்கக் கூடாது” என்று சொல்ல முனைய, உடன் வந்த சீனியர் அதிகாரி தடுத்தார். 

“அவர் இருக்கட்டும். டாகுமெண்ட் எல்லாம் எங்க இருக்குன்னு அவர்தான் நமக்கு வழி காட்டப் போறார். அவரோட ஒத்துழைப்பு நமக்குத் தேவை…” என்று கூறியபடி அடுத்த கட்ட வேலைகளை பார்க்க நகர்ந்து சென்றார்.

சூர்யா காபியை ஒரு மிடறு பருகிவிட்டு, மிக நிதானமாகத் நிமிர்ந்து பார்த்தான். ஆகாஷ் இன்னும் அங்கேயேதான் நின்று கொண்டிருந்தார்.

“இன்னும் ஒரு மணி நேரத்துக்குதான் இது உங்க வீடு. இந்த வீட்டை வாங்க நீங்க பயன்படுத்தின பணம், சுஜித் மேட்ச் ஃபிக்ஸிங் பண்ணி சம்பாதிச்சதுன்னு இப்போ இவங்க கன்பார்ம் பண்ணிடுவாங்க. அதுக்கு அப்புறம் இது உங்க வீடா இருக்காது… அரசாங்கத்தோட சொத்தா மாறிடும். கண்குளிர அதைப் பார்க்கத்தான் நான் வந்திருக்கேன்” என்றான் கேலிப் புன்னகையோடு.

அவன் சொல்லச் சொல்ல ஆகாஷின் நெற்றி வியர்த்தது. உண்மையில் சுஜித் மேட்ச் பிக்சிங் எதுவும் செய்யவில்லை. ஆனால் ஆகாஷ், தொழில் ரீதியாக நிறைய கருப்பு பணத்தை சம்பாதித்து வைத்திருந்தார். பெற்றோர் செய்யும் பாவங்கள் பிள்ளைகள் தலையில் விழுவது இதுதானோ?!

அதிகாரிகள் அங்கிருந்த ரகசிய அறைகளைக் கண்டுபிடித்து, கோடிக்கணக்கானக் கருப்புப் பணம் மற்றும் பினாமி சொத்துக்களின் பத்திரங்களை வெளியில் கொண்டு வர ஆரம்பித்தனர். சூர்யா ஒரு வழிகாட்டி போல, எந்த எந்தப் பெட்டியில் என்னென்ன இருக்கிறது என்பதைத் தன் கைவசம் இருந்த டிஜிட்டல் ஆதாரங்கள் மூலம் அதிகாரிகளுக்குச் சுட்டிக்காட்டிக் கொண்டிருந்தான்.

“தீவு பங்களா, கார், பணம், நகைனு கணக்குல வராத கோடிக்கணக்கான சொத்த நீங்க பதுக்கி வச்சிருக்கீங்க. இதையெல்லாம் எப்படி சம்பாதிச்சீங்க?” என்று அதிகாரி கேட்க, ஆகாஷ் பதில் ஏதும் சொல்லாமல் பல்லைக் கடித்துக் கொண்டிருந்தார்.

மற்ற தொழிலதிபர்களின் பெயரை இழுத்துவிட்டால், உயிரோடு விட மாட்டார்கள்! துரத்தி துரத்தி கொன்றுவிடுவார்கள்…

எனவே, “இது எல்லாமே சுஜித் மேட்ச் பிக்சிங்ல சம்பாதித்தது” என்று கூறிவிட்டார்.

அவர் வாக்குமூலம் கொடுத்த அந்த நிமிடம், ஒரு தந்தையாக அவர் தோற்றுப் போனார். சூர்யா அங்கிருந்து ஒரு வெற்றிப் புன்னகையோடு எழுந்து பூர்ணிமாவின் கையைப் பற்றிக்கொண்டு வெளியேறினான். அவனது அடுத்த இலக்கு – ஆகாஷின் ஏர்லைன்ஸ் நிறுவனம்!

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page