டெல்லியின் மையப்பகுதியில் அமைந்திருந்த அந்த பிரம்மாண்டமான ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றடைந்தான் சூர்யா. செய்தித் தாள்களிலும் தொலைக்காட்சிகளிலும் ஆகாஷ் மற்றும் சுஜித் பற்றிய செய்திகள் வெளியானதில் இருந்து, நிறுவனத்தின் பங்குகள் அதலபாதாளத்திற்குச் சரிந்து கொண்டிருந்தன.
உள்ளே நுழைந்தவனை இரண்டு பேரும் மரியாதையாக வரவேற்று மீட்டிங் அறைக்கு கூட்டி சென்றனர். அங்கிருந்த போர்டு மெம்பர்கள் அனைவரும் மரியாதையோடு எழுந்து நின்றனர். அவர்களின் முகங்களில் ஆகாஷ் மீதான கடும் கோபமும், நிறுவனத்தின் எதிர்காலத்தைப் பற்றிய கவலையும் அப்பட்டமாகத் தெரிந்தது.
“வெல்கம் மிஸ்டர் சூர்யா… நாங்க எல்லாரும் உங்களுக்காகத்தான் காத்துட்டு இருக்கோம்” என்றார் ஒரு மூத்த உறுப்பினர்.
சூர்யா கம்பீரமாகத் தலைமை இருக்கையில் அமர்ந்தான். பூர்ணிமா ஒரு ஓரமாய் ஒதுங்கி அமர்ந்திருந்தாள். சூர்யா தன் எதிரில் இருந்த மடிக்கணினியைத் திறந்து சில ஆவணங்களைக் காண்பித்தான்.
“மிஸ்டர் ஆகாஷ் & அவரோட குடும்பம் செஞ்ச அசிங்கமான வேலைகளால இந்த ஏர்லைன்ஸ் நிறுவனம் 30% வீழ்ச்சி அடைஞ்சிருக்கு. இந்த நிலைமை தொடர்ந்தா நிறுவனம் திவாலாகிடும். ஆனா, என்கிட்ட அதுக்கான தீர்வு இருக்கு…” என்றதும் எல்லோரும் ஆர்வமாக அவன் முகத்தை பார்த்தனர்.
“ஆகாஷ் குடும்பத்துக்கிட்ட இருந்த 45% ஷேர்ஸ் இப்போ என்கிட்ட இருக்கு. அதுமட்டும் இல்ல, என்னோட நம்பிக்கைக்குரிய பிஏ பாலாஜி பேர்ல போன வருஷமே 10% ஷேர்ஸ் வாங்கி வச்சிருக்கேன். ஆக மொத்தம் 55% பங்குகள் இப்போ என் கட்டுப்பாட்டுல இருக்கு. சட்டப்படி நான்தான் இப்போ இந்த நிறுவனத்தின் மெஜாரிட்டி ஓனர்!
நீங்க எல்லாரும் என்னை ஏத்துக்கிட்டா, என்னோட ப்ரைட் கம்பெனிய எப்படி இன்டர்நேஷனல் லெவலுக்கு கொண்டு வந்தேனோ, அதேபோல இந்த கம்பெனியையும் மேல கொண்டு வருவேன். இல்லனா இன்னிக்கு என் பேர்ல இருக்குற எல்லா ஷேரையும் வித்துட்டு வந்தவரை லாபம்னு கிளம்பிடுவேன். அது உங்க கம்பெனியவே திவால் ஆக்கிடும். யோசிச்சு முடிவெடுங்க!”
அவன் சொன்னதைக் கேட்டதும் போர்டு மெம்பர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஆகாஷின் கறையான பெயரால் நிறுவனத்திற்கு வரப்போகும் அழிவைத் தடுக்க, சூர்யா போன்ற ஒரு திறமையான தொழிலதிபர் தலைமை ஏற்பதே சிறந்தது என்று அவர்கள் ஏகமனதாக முடிவெடுத்தனர்.
“நாங்க எல்லாரும் இதை ஒருமனதா ஏத்துக்குறோம். இனி நீங்கதான் இந்த ஏர்லைன்ஸோட ஓனர். ஆகாஷை நிரந்தரமாக நிறுவனத்திலிருந்து வெளியேற்றுவதற்கான தீர்மானத்தில் நாங்க இப்போவே கையெழுத்துப் போடுறோம்,” என்று அவர்கள் அறிவிக்க, ஆகாஷின் சகாப்தம் அங்கே முறைப்படி முடிவுக்கு வந்தது.
விஷயத்தை தன் விசுவாசிகள் மூலம் கேள்விப்பட்ட ஆகாஷ், வியர்க்க விறுவிறுக்க நிறுவனத்திற்கு ஓடி வந்தார். வாசல் வரை வந்தவரை, அங்கே நின்றிருந்த செக்யூரிட்டிகள் தடுத்து நிறுத்தினர்.
“சார், நீங்க உள்ளே போக கூடாதுனு மேலிடத்து உத்தரவு” என்றார் ஒரு செக்யூரிட்டி கறாராக.
“என்னடா சொல்ற? இது நான் உருவாக்கின நிறுவனம். என்னை எப்படித் தடுப்பீங்க? தள்ளிப் போங்கடா!” என்று ஆகாஷ் ஆவேசமாகக் கத்திக் கொண்டிருந்தார். ஒரு காலத்தில் அவர் பெயர் சொன்னால் நடுங்கிய அதே ஊழியர்கள், இன்று அவரை ஒரு அற்ப புழுவைப் போல போலப் பார்த்தனர்.
அவர் செக்யூரிட்டிகளிடம் மல்லுக்கட்டி மல்லுக்கட்டித் தளர்ந்து கொண்டிருந்த அந்த வேளையில், நிறுவனத்தின் விஐபி நுழைவாயிலில் கருப்பு நிற கார்களின் அணிவகுப்பு வந்து நின்றது. ஆகாஷின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன. துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புப் படை வீரர்கள் சூழ, அந்தப் பிரம்மாண்டமான வாசலின் வழியே சூர்யா நிறுவனத்தில் இருந்து வெளியேறினான். அவனது ஒரு கை பூர்ணிமாவின் கையைத் தாங்கியிருக்க, இன்னொரு கை கோட் பாக்கெட்டுக்குள் ஸ்டைலாகப் புதைந்திருந்தது.
தன் கர்வத்தினால் ஒரு காலத்தில் சூர்யாவை நடுத்தெருவில் நிற்க வைத்து ரசித்த அதே ஆகாஷ், இன்று அதே சூர்யா தன் சாம்ராஜ்யத்திற்குள் ராஜ மரியாதையோடு வலம் வருவதைப் பார்த்துத் தன் வயிற்றெரிச்சலைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்தார்.
அந்த நொடியில், அவரது கைபேசி அலறியது. மருத்துவமனையிலிருந்து அழைப்பு வந்திருந்தது.
“ஹலோ…” என்று அவர் திக்கித் திணறிப் கூற, மறுமுனையில் வந்த தகவல் அவரது தலையில் இடியாய் இறங்கியது.
“சார்… ஐம் சாரி… உங்க பொண்ணு அப்சரா தற்கொலை பண்ணிக்கிட்டாங்க. நாங்க எவ்வளவோ முயற்சி செஞ்சும் அவங்களைக் காப்பாத்த முடியல…”
ஆகாஷின் கால்கள் தள்ளாடின. கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் தரையில் விழுந்த போனின் திரையை நனைத்தது. உலகமே தன் காலடியில் என்று ஆடிய மனிதனுக்கு, இன்று அதே உலகம் தலைகீழாக மாறிவிட்டது. சுயநினைவு இல்லாமலேயே காரில் ஏறி மருத்துவமனைக்கு விரைந்தார்.
அப்சரா வைக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்தபோது, அங்கே நிலவிய நிசப்தம் அவர் உயிர் வரை ஊடுருவியது. தூக்க மாத்திரை சாப்பிட்டு, மரணத்தின் பிடியில் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்த தன் மகளைப் பார்த்தார். வீங்கிய முகம், பொலிவிழந்த தேகம் என உருக்குலைந்திருந்தாள்… அது தன் மகள்தானா? இல்லை வேறு யாரோவா? என்று சந்தேகம் வரும் அளவிற்கு அவள் உருவம் சிதைந்து போயிருந்தது.
“அப்சரா… செல்லமே… இப்படி என்னைத் தவிக்க விட்டுட்டுப் போயிட்டியேடி!” என்று கதறியவர், அப்படியே சரிந்து அவளது கால்களைக் கட்டிப் பிடித்தார்.
பலம் இருந்த போது, ஒரு கோபத்தில் அவர் சூர்யா வீசிய அந்த அம்புகள், இன்று திரும்பி வந்து இவ்வளவு பெரிய இழப்பைத் தரும் என்று அவர் கனவிலும் நினைக்கவில்லை.
அழுது கொண்டே, பக்கத்து அறையில் இருந்த சுஜித்தை பார்க்க ஓடினார். அங்கே கட்டிலில் அமர்ந்திருந்த சுஜித், தன் தங்கை இறந்துவிட்ட செய்தியைக் கேட்ட பின்பும் ஒரு சொட்டு கண்ணீர் கூட விடாமல், எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“சுஜித்… அப்சரா நம்மளை விட்டுப் போயிட்டாடா… அந்தப் பாவி சூர்யா நம்ம குடும்பத்தையே நடுத்தெருவுல நிப்பாட்டிட்டான். நாம அவனை சும்மா விடக்கூடாதுடா…” என்று ஆகாஷ் அவன் கையைப் பிடித்து உலுக்கினார்.
ஆனால் சுஜித் பதில் ஏதும் சொல்லவில்லை. அவனது கண்கள் அசைவற்றுக் கிடந்தன. சில நிமிடங்கள் ஆகியும் அவன் அப்படியே சிலையாக அமர்ந்திருப்பதைப் பார்த்தபோதுதான், ஆகாஷுக்கு உள்ளுக்குள் ஏதோ திக் என்றது.
“சுஜித்… ஏன்டா இப்படி இருக்க? என்னைப் பாருடா கண்ணா… அப்பாவோட பேசுடா…” என்று அவர் மிரட்சியோடு கேட்க, சுஜித்தோ தன் முகத்தில் இருந்த கட்டுகளைப் பிய்த்து எறிந்துவிட்டு, விசித்திரமான ஒலியை எழுப்பிச் சிரிக்க ஆரம்பித்தான்.
பதறிப்போன ஆகாஷ், “டாக்டர்! டாக்டர்! சீக்கிரம் வாங்க!” என்று கத்தினார்.
உடனே ஓடி வந்த டாக்டர், சுஜித்தின் கண்களைப் பரிசோதித்துவிட்டு ஒரு பெருமூச்சோடு ஆகாஷைத் திரும்பிப் பார்த்தார்.
“சார்… ரொம்ப சாரி. ஏற்கனவே அடிபட்டு முகம் சிதைஞ்ச அதிர்ச்சியில இருந்தவருக்கு, தங்கச்சியோட மரணமும், அவரோட கிரிக்கெட் கரியர் முடிஞ்சு போன செய்தியும் பெரிய லெவல்ல மென்டல் ஷாக்கைக் கொடுத்திருக்கு. சுஜித்தோட மனநலம் இப்போ ரொம்பப் பாதிக்கப்பட்டு இருக்கு. அவர் இப்போ எந்த உலகத்துல இருக்கார்னு சொல்ல முடியாது. இனி அவர் பழைய நிலைமைக்கு வர்றது ரொம்பக் கஷ்டம்!” என்றார் டாக்டர்.
ஆகாஷிற்குத் தலை சுற்றியது. சொத்து போச்சு, நிறுவனம் கைவிட்டுப் போச்சு, வளர்த்துவிட்ட கௌரவம் மண்ணாகிப் போச்சு… இப்போது ஒரு பிள்ளை பிணமாகக் கிடக்க, இன்னொரு பிள்ளை பித்து பிடித்த நிலையில்!
மருத்துவமனை வராண்டாவில் ஆகாஷ் தனியாக நின்றார். சுற்றி இருந்தவர்கள் அவரை ஒரு விசித்திரப் பிறவியைப் போலப் பார்த்தனர். அவருக்குத் தற்கொலை செய்து கொண்டு இந்த நரகத்தில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றுதான் இருந்தது. ஆனால், தன்னுணர்வு இல்லாத நிலையில் கையில் இருந்த கட்டுகளைப் பிய்த்துவிட்டுச் சிரித்துக் கொண்டிருக்கும் தன் மகனை இந்த நிலையில் விட்டுவிட்டு, அவரால் சாகக் கூட முடியவில்லை.
முப்பதாண்டு கால ஆணவம், பழிவாங்கல், அதிகாரம் அனைத்தும் இன்று அவரை நடுத்தெருவில் பிச்சைக்காரனை விடக் கேவலமாக நிற்க வைத்துவிட்டது. சூர்யா, தன்னை சாக முடியாமலும் வாழ முடியாமலும் ஒரு நடைபிணமாக மாற்றி விட்டதை நினைத்து, அந்த மருத்துவமனை படிக்கட்டுகளில் அமர்ந்து அழுதார் ஆகாஷ்.
டெல்லியின் புகழ்பெற்ற அந்த நட்சத்திர ஹோட்டலின் பால்கனியில், இரவின் குளிர்காற்று மென்மையாக வீசிக்கொண்டிருந்தது. தூரத்தில் டெல்லி மாநகரத்தின் விளக்குகள் நட்சத்திரங்களைப் போல மின்னிக் கொண்டிருக்க, சூர்யா மட்டும் கையில் ஒரு கிளாஸ் ஒயின் ஏந்தி, அந்த அமைதியை ரசித்துக் கொண்டிருந்தான்.
அவன் முகத்தில் இத்தனை நாட்களாக இருந்த அந்த இறுக்கம் மறைந்து, ஒருவிதமான நிம்மதி தெரிந்திருந்தது. கதவு மெல்லத் திறக்கப்படும் சத்தம் கேட்டுத் திரும்பினான். பூர்ணிமா அங்கே நின்றிருந்தாள்.
குளித்துவிட்டு ஈரக்கூந்தலைத் துடைத்தபடி, ஒரு எளிய காட்டன் புடவையில் தேவதை போலத் தெரிந்தாள் அவள். அவளது வருகை அந்த அறையின் வெப்பத்தையே மாற்றியது போலிருந்தது. சூர்யா அவளையே இமைக்காமல் பார்த்தான். அந்தப் பார்வை தாங்காமல் பூர்ணிமா தலைகுனிந்து கொண்டாள்.
“மணி பதினொன்னாச்சு, நீ ஏன் இன்னும் தூங்கல பூரி?” என்று அவன் குரல் மிகத் தணிந்து ஒலிக்க,
“நீ ஏன் தூங்கல?” என கேட்டபடி, அவள் மெல்ல அவன் அருகில் வந்தாள்.
“சந்தோஷம் அதிகமா இருந்தா தூக்கம் வராது. இத்தனை வருஷமா இந்த நாளுக்காக தான் காத்திருந்தேன். நெனச்சதை நினைச்சபடி முடிச்ச சந்தோஷத்தை நொடி நொடியா நான் அனுபவிக்க போறேன். எனக்கு தூக்கம் வராதுடி… நீ தூங்கு…”
“ம்ஹூம், பயம் அதிகமா இருந்தா கூட தூக்கம் வராதுல சூர்யா?…” என்று கேட்டுவிட்டு அவன் முகம் பார்த்தாள்.
சின்ன சிரிப்போடு அவள் தோளை இழுத்து அணைத்துக் கொண்டவன், “என்னடி? என்ன பயம் உனக்கு?” என்றான் கிறக்கமாய்.
“இன்னைக்கு நடந்ததெல்லாம் நினைச்சுப் பார்த்தா எனக்கு பயமா இருக்காதா. நீ இவ்வளவு தூரம் போவேன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. ஏன் அந்த அப்சராவ தற்கொலைக்கு தூண்டுன” என்றாள் தாழ்ந்த குரலில்.
அதுவரை இலகுவாக இருந்த சூர்யாவின் முக பாவனைகள் இறுக்கமாக மாறியது. அவளது கையில் இருந்த துண்டைப் பிடுங்கி ஓரமாகப் போட்டான். அவளது ஈரக்கூந்தலைத் தன் விரல்களால் கோதிவிட்டு, அவளது முகத்தை தன்னுடைய விழிகளுக்கு நேராக நிமிர்த்தினான். பூர்ணியின் பட்டாம்பூச்சி இமைகள் படபடவென அடித்துக் கொண்டது.
“பயப்படாத பூரி… உனக்கு ஏதாவது ஒன்னுனா எனக்குத்தான் வலிக்கும். உன்னை எதுவும் பண்ண மாட்டேன்டி” என்று செல்லமாக அவளின் கன்னத்தை கிள்ளினான்.
“நான் கேட்டதுக்கு இன்னும் பதில் சொல்லலையே” என்று உடும்பாக நின்றாள்.
“ஆக்சுவலி இதையெல்லாம் நான் பாலாஜி கல்யாணத்துக்கு அப்புறம் தான் பிளான் பண்ணி இருந்தேன். இப்போ செய்ய காரணம், அப்சராவுக்கு நம்ம கல்யாண விஷயம் தெரிஞ்சிருச்சு. நான் எப்படி உனக்கு ஒரு ஸ்பை வச்சு உன்னை கண்காணிக்கிறேனோ, அதேபோல அவ எனக்கு ஒரு ஸ்பை வச்சிருக்கா. அவன் உண்மையை அவகிட்ட ஒப்பிச்சிட்டான். இனி கண்டிப்பா எனக்கும் அவளுக்கும் கல்யாணம் நடக்காதுன்னு முடிவு பண்ணி, உன்னை கொல்றதுக்கு ஏற்பாடு பண்ணிட்டா.
அந்த கோபத்துலதான் நேரடியா நானே களத்துல இறங்கி இதெல்லாம் பண்ணிட்டேன். நோட் த பாயிண்ட், நான் அவளை கொல்லல. அவளேதான் இனி நம்மால எதுவும் பண்ண முடியாதுன்னு வாழ்க்கையை முடிச்சுக்கிட்டா. நமக்கு இல்லாத கஷ்டமா அவளுக்கு? நினைச்சா வாழ்ந்து இருக்கலாம்தான? அவ செத்ததுக்கு நான் என்னடி பண்ணுவேன்?…”
அவன் சொல்வதெல்லாம் சரியோ என்று யோசிக்கும் அளவிற்கு, பூர்ணியால் பதில் பேச முடியாதபடி அவள் வாயை அடைத்திருந்தான்.
“லிஸன், மத்தவங்களுக்கு உதவி செய்ற அளவுக்கு நாம நல்லவங்களா இருக்கலாம். நமக்கு ஒருத்தங்க கெடுதல் செய்ற அளவுக்கு நாம நல்லவங்களா இருக்க கூடாது. மூளை இருந்தும் முட்டாளா இருக்க எனக்கு விருப்பமில்லை… இதயம் இருந்தும் எனக்கொரு ஐ லவ்யூ சொல்ல உனக்கு விருப்பமில்லை. இரண்டு பேரும் ஜாடிக்கேத்த மூடிதான்” என்று பேச்சை முடித்துவிட, பூர்ணிமாவின் புத்தியும் சேர்ந்து அவனுக்கு ஆமாம் சாமி போட்டது.
அதற்கு மேல் வாதாட முடியாமல் சோர்ந்து போன பூர்ணிமா சூர்யாவின் சட்டையைப் பற்றிக் கொண்டு அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள். அவளது இடையில் கையைப் போட்டு இன்னும் நெருக்கமாக இழுத்துக்கொண்டான் தலைவன்.
“இப்படி எப்பவும் ஒட்டிக்கிட்டு இருந்தா நான் எதுக்காக மத்தவங்களை பத்தி யோசிக்க போறேன்? இன்னும் கூட நீ என்னை ஏமாத்த நிறைய வழி இருக்கு. சொல்லித்தரவா?” என்றவனை கண்களைச் சுருக்கி முறைத்தாள் அவள். மோகம் கூடிவிட, அவள் மூக்கு நுனியைச் செல்லமாகக் கடித்தான்.
“ஸ்.. ஆ… வலிக்குது” என்றவள் அவன் மார்பில் செல்லமாக அடித்தாள்.
“ட்ரீட்மென்ட் பார்க்கவா?” என்றபடி, அவளது இரு கைகளையும் பிடித்துத் தன் கழுத்தைச் சுற்றிப் போட்டான். நிலவொளியில் பூர்ணிமாவின் முகம் இன்னும் அழகாகத் தெரிந்தது. அவன் மெல்லக் குனிந்து அவளது நெற்றியில் ஒரு நீண்ட முத்தத்தைப் பதித்தான்.
பூர்ணிமா அவனது கண்களில் தெரிந்த காதலில் கரைந்து போனாள். சூர்யா அவளை அப்படியே அள்ளித் தன் கைகளில் ஏந்திக்கொண்டான். அவள் அவனது தோளில் முகம் புதைத்து நாணத்தில் சிவந்து போனாள். இருவரின் இதயத்துடிப்பும் ஒரே தாளத்தில் ஒலிக்க, அறைக்குள் அனல் காற்று வீசத்துவங்கியது…
