அத்தியாயம் – 2

அத்தியாயம்- 2

ஒரு அரைமணி நேரம் அறையிலே இருந்து இருப்பாள். அதற்கு மேல் அவளால் அறையில் அடைந்துக் கிடக்க முடியாமல் மெல்ல கதவை திறந்து தலையை மட்டும் நீட்டி வலது இடது என்று இருப்பக்கமும் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தாள் காவேரி.

அங்கே யாரும் இருப்பது போல் தெரியவில்லை. ‘இங்க யாருமே காணோம் காவேரி. அப்படியே கேஷுவலா சமையல் கட்டுக்கு போயிடுடி’ என்று தனக்கு தானே பேசிக் கொண்டே அறையிலிருந்து ஒரு அடி தான் காலை வெளியே எடுத்து வைத்து இருப்பாள், “குளிச்சிட்டு வர இவ்வளவு நேரமா?” என்று ஒரு அதட்டலான குரல் அவள் செவிகளில் அடைய, வெளியே எடுத்து வைத்த காலை மீண்டும் உள்ளே இழுக்கச் சென்றவளின் காதில்,

“அந்த கால் திரும்ப உள்ள போச்சு ஒரு சீவு தான் வெட்டி போட்டு போயிட்டே இருப்பேன்” என்று மீண்டும் அதே அதட்டலான குரல்.

குரலை வைத்தே அது விஜய் தான் என்று கண்டுப்பிடித்தவளுக்கு கடுப்பாக இருந்தது.

வெளியே வந்தவள் அவன் எங்கே இருக்கிறான் என்று தேட, அவனோ ஆயாசமாக சோபாவில் அமர்ந்து கைப்பேசியில் மூழ்கி இருக்க, அவன் நேரே வந்து நின்றவள் அவன் முன்பு வேண்டுமென்றே தன் காலை நீட்டி,

“எங்கே தைரியம் இருந்தா என் காலை சீவுங்க பார்க்கலாம். நீங்க என் காலையை வெட்டுற வரைக்கும் என் கை என்ன சாக்லேட் கேக்கை தின்னுட்டு இருக்குமா என்ன? கேக் வெட்டின கத்தியாலே உங்க தலையை ஒரு வெட்டு தான்” என்று வெட்டுவது போல் கரத்தை காட்ட,

அவனோ நிதானமாக அவளின் காலை பார்த்து விட்டு காவேரியை நிமிர்ந்து பார்த்தவன் “ஓ, கேக் வெட்ற கத்தியால என் தலையை வெட்டுவியா? எங்க வெட்டி காட்டு பார்ப்போம்” என்றவன் வேலை மெனக்கெட்டு அவள் கரத்தை பிடித்துக் கொண்டு சமையலறைக்கு அழைத்துச் சென்று அங்கே இருக்கும் கேக் வெட்டும் மரக்கத்தி ச்சி ச்சி கத்தினு கூட சொல்ல முடியாது. மரக்குச்சியை எடுத்து அவள் கரத்தில் திணித்தவன் தன் சட்டையின் இரு பட்டனை கழட்டி காலரை பின்னால் சரிய விட்டு கேசத்தை ஒற்றை கரத்தால் பின்னுக்கு தள்ளியவன் தன் கழுத்தை அவள் முன் காட்டி,

“எங்கே வெட்டு பார்ப்போம். வெட்டி அப்படியே எனக்கும் ஒரு துண்டு கொடுடி” என்றான்.

காவேரியோ கரத்திலிருந்த மரக்குச்சியை பார்த்தவள் விழி அங்கே காய்கறிகள் வெட்டுவதற்காக இருந்த நிஜ கத்தியின் மீது அவள் பார்வை நிலைக்க,

அதை பார்த்த விஜயின் மனமோ ‘ஆத்தி இவளோட பார்வை ஒரிஜினல் கத்தி மேல போகுதே. இருக்கிற கோபத்துல வேணும்னே கத்தியை எடுத்து சீவிட்டானா என்னடா பண்ணுவ விஜய்’ என்று எச்சிலை கூட்டி முழுங்கியவன் தன் கெத்தை விட்டு விட கூடாது என்பதற்காக,

வேண்டுமென்றே அந்த நிஜ கத்தியை எடுத்து அவள் கரத்தில் வைத்து “சரிடி அந்த குச்சியால என் தலையை சீவ முடியாது. ஆனால் இதால முடியும். சோ தைரியம் இருந்தா வெட்டு பார்க்கலாம்” என்றவனை முறைத்து பார்த்த காவேரியின் மனமோ,

‘இது தான்டி சான்ஸ் வெட்டிட்டு தப்பிச்சி ஓடிடு’ என்று எடுத்துரைக்க. மூளையோ ‘இவனை வெட்டிட்டு யாரு ஜெயிலுக்கு போறது. அப்புறம் இந்துவோட நிலைமை’ என்று யோசித்தபடி நின்றவளுக்கு இப்பொழுது இவனை வெட்டுவதா வேண்டாமா என்று முடிவு செய்ய முடியாமல் தடுமாறி போனாள்.

அவள் சிந்தையில் இருப்பதை பார்த்த விஜயோ ‘வெட்டலாமா வேணாமானு யோசிக்கிறாளோ’ என்று சரியாக அவள் மனநிலையை கணித்தவன் ‘விட்டா போதும்னு கழுத்தை அறுத்து போட்டு போயிட்டே இருப்பா. அவளை யோசிக்க விடாதடா விஜய்…’ என்று உள்ளுக்குள் புலம்பியவன் மனைவியை சீண்டி விடும் நோக்கத்தோடு “நானே என் கழுத்தை வெட்ட சொல்லி காட்றேன். நீ என்னடானா அமைதியா நிக்குற? புருஷன் மேல அம்புட்டு உசுரா என்ன?” என்று கேட்டவனை தீயாய் முறைத்தவள்,

“ஒரு ஆணியும் இல்லை. உங்கள வெட்டிட்டு எப்படி போலீஸ் கிட்ட இருந்து தப்பிக்கிறதுனு யோசிக்கிறேன்” என்று சொன்னவளை பார்த்தவனுக்கு புரையேறியது.

தலையை தட்டிக் கொண்டே “அடிப்பாவி விட்டா எனக்கு முப்பதாவது நாள் கொண்டாடுவ போல” என்றவன் அவள் கையையும் தன் கையையும் கீறி விடாதபடி அவள் கரத்திலிருந்த கத்தியை வாங்கி டேபிள் மீது வைத்த விஜய்,

“சரி சரி தொண தொணனு பேசிட்டு நிக்காம புருஷனுக்கு வாய்க்கு ருசியா சீக்கிரம் சமைச்சி போடு” என்றான்.

அவளோ “யாரு புருஷன்?” என்றவளை இம்முறை இவன் முறைத்து பார்க்க,

குரலை செறுமிக் கொண்ட காவேரி “நான் எதுக்குய்யா உங்களுக்காக சமைக்கணும்?” என்று கேட்டாள்.

“நீ எனக்காக சமைக்காம வேற யாருடி சமைப்பா. இப்போ நீ தானே என் பொண்டாட்டி” என்று சொன்னதை கேட்டவளுக்கு கோபம் துளிர்க்க,

“இந்த பொண்டாட்டி போண்டாட்டி சொல்ற வேலை எல்லாம் வச்சிக்கிட்டீங்க, இப்போ யோசிச்சிட்டு நின்ன மாதிரி நிக்காம ஒரே போடு தான் கழுத்தை அறுத்து போட்டு போயிட்டே இருப்பேன்” என்று நேற்று விஜய் பேசிய அதே வசனத்தை அதே கோபத்துடன் அதே வேகத்துடனும் அவன் மனைவி இன்று பேச, அதை உள்ளுக்குள் ரசித்தவன்,

“அப்போ வப்…” என்று வாயை திறந்தவனை மேலும் முறைத்து பார்த்தாள்.

விஜய்யோ குரலை செறுமி விட்டு பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு,

“ரொம்ப பசிக்குதுடி காவேரி” என்று வயிற்றை தடவிக் காட்டினான்.

அவனின் பசி என்ற சொல் அவளின் கோபத்தை மட்டுபட வைக்க, “ஏன் இவ்வளவு பெரிய வீட்ல சமைக்கிறதுக்கு ஒரு ஆளு கூடவா இல்ல?” என்று கேட்டவள் அப்பொழுது தான் அந்த வீட்டை சுற்றி முற்றி பார்த்தாள்.

அந்த வீடு சற்று விசாலமாக இருந்தது. ஒரு முன்னறை அதை அடுத்து, ஒரு பூஜையறை மற்றும் சமையலறை அதனை அடுத்து ஒரு தங்கும் அறை என்று கச்சிதமாக இருந்தது.

இவர்கள் இருவரை தவிர அவ்வீட்டில் வேறு மனிதர்கள் நடமாட்டமே இல்லாமல் இருப்பது அப்பொழுது தான் அவளுக்கு விளங்க,

“ஆமா இங்க வேற யாரும் இல்லையா?” என்று கேட்டாள்.

அவனோ இல்லை என்பது போல் தலையை ஆட்டியவன் “இது நம்ம கெஸ்ட் ஹவுஸ். கொஞ்ச நாளைக்கு நம்ம இங்க தான் தங்க போறோம். இரண்டு பேருக்கு எதுக்கு சர்வன்ட்ஸ் அதான் யாரையும் வேலைக்கு எடுக்கல. சோ இனி எல்லா வேலையும் நீ தான் பார்த்தாகணும் புரியுதா?” என்று கட்டளையாக சொன்னவனை புரியாமல் பார்த்த காவேரி,

“எல்லா வேலையும்ன்னா புரியலையே?” என்றாள் காவேரி இழுவையாக.

விஜயோ அங்கே இருந்த உணவு மேசை மீது ஒற்றை காலை ஆட்டியபடி அமர்ந்தவன் “வீட்ல என்ன என்ன வேலை இருக்கும்னு தெரியாதா என்ன? சமையலிலிருந்து தோட்டம் வரைக்கும் எல்லா வேலையும் நீ தான் காவேரி செய்யணும்” என்றவன் ஒரு கணம் நிறுத்தி, “உன் புருஷன் என்னையும் சேர்த்து நீ தான் கவனிச்சிக்கணும்” என்று தன் நெஞ்சில் கையை வைத்து கூறியவனை அனலாக பார்த்தாள் காவேரி.

“நான் எதுக்காக இதெல்லாம் செய்யணும்? என்னை பார்த்தா என்ன வேலைக்காரி மாதிரி இருக்கா?”

“நோ டி… என் வீட்டுக்காரி மாதிரி இருக்க” என்றவனின் தொடையில் நறுக்கென்று கிள்ளி வைத்தாள் காவேரி.

அவனோ “ஸ்…” என்று தொடையை தேய்த்து விட்டவன் “ஏய் பைத்தியக்காரி” என்று பேசிக் கொண்டே அவளை திட்ட போக,

அவளோ அங்கே இருந்த கத்தியை சட்டென்று எடுத்து அவனை முறைத்து பார்க்க, அதில் பின் வாங்கியவன்,

“ஒரே நாள்ல இவ்வளவு தைரியம் வந்துடுச்சி உனக்கு. அதுவும் என்னை தொட்டு கிள்ளி பேசுற அளவுக்கு துணிச்சல் வந்துடுச்சி” என்று சொன்னதை கேட்தும் தான், சட்டென்று அவனிடம் தான் எடுத்துக் கொண்ட உரிமை புரிய, அதில் ஒரு கணம் தடுமாறியவளின் விழிகள் படபடக்க, அதையும் உள்ளுக்குள் ரசித்துக் கொண்டவன்,

பேச்சை மாற்ற “அது வந்தும்மா காவேரி, எல்லா வேலையும்னா எல்லா வேலையும் சொல்லல. நம்ம இரண்டு பேரும் சேர்ந்து வீட்டோட எல்லா வேலையும் பார்த்துக்கலாம்னு சொல்ல வந்தேன். அதுக்குள்ள என்ன சொல்ல வந்தேனே மறந்துட்டேன்னா பார்த்துக்கோயேன்” என்றவன் அவளின் மனநிலையை மாற்றும் பொருட்டு,

“ப்ளீஸ் டி, நிஜமா ரொம்ப பசிக்குதுடி. உனக்கு தெரியாதா என்னால பசியை தாங்க முடியாதுனு” என்றவளின் கவனத்தை சற்று மாற்ற முயன்றான்.

அவனை கடுப்பாக பார்த்தவள் “வீட்ல என்ன இருக்கு?” என்று கேட்டாள்.

“அதான் நான் இருக்கேனே” என்று பல்லை காட்டிக் கொண்டு அவள் முன்னே வர,

அவளோ கத்தியை இருவருக்குள்ளும் நடுவில் நீட்டி,

“சமையல் செய்ய என்ன இருக்குனு கேட்டேன்” என்றாள் அவனை முறைத்தபடி.

“எல்லாமே இருக்கும்டி. முந்தா நேத்தே எல்லா பொருளும் வாங்கி வச்சிட்டேன்” என்றவனை மேலும் முறைத்து பார்த்து,

“அப்போ எல்லாமே ப்ளான் தான்ல” என்று கேட்டாள்.

அவனும் ஆம் என்பது போல் தலையை ஆட்டியவன் நேரத்தை பார்த்தான்.

இன்னும் அரைமணி நேரத்தில் காலேஜ்க்கு கிளம்ப வேண்டும் என்று நினைத்தவன்,

“மணி எட்டாக இன்னும் ஹாஃப்னவர் தான்டி இருக்கு” என்றவன் ஒரு கணம் நிறுத்தி,

“இப்போ நீ பார்க்கிற விஜய், வேலை செய்யுற இடத்திலும் இருப்பான்னு கனவுல கூட நினைச்சி பார்க்காத சரியா? அங்க நீ எனக்கு கீழ வேலை செய்றவ தான். சரியான நேரத்துக்கு காலேஜ்க்கு வரலனா அப்புறம் என்னோட ட்ரிட்மெண்ட் எப்படி இருக்கும்னு நான் சொல்லி தான் உனக்கு தெரியணும்னு இல்ல” என்றவன் “ம் சீக்கிரம் ஏதாவது சமைச்சிட்டு தயாராகு” என்று கூறிவிட்டு அங்கே இருந்து அகன்றவன் நேராக அவர்கள் அறைக்குள் நுழைந்தான் விஜய்.

அவன் போவதை பெருமூச்சு ஒன்றை விட்டபடி பார்த்த காவேரியோ,

“இப்போ என் வாழ்க்கையில என்ன நடக்குதுனு ஒன்னும் புரியாம குழம்பி போய் இருக்கேன். இதுல இவனுக்கு குழம்பு வைச்சிட்டு வேலைக்கு வேற கிளம்பணுமா?” என்று குறைப்பட்டுக் கொண்டவள் ஒரு கணம் அவன் கொடுக்கும் தண்டனை நினைவில் வந்து போக, அதே நேரம் அவனின் பசித்த முகமும் சேர்ந்து வர, தன்னை தானே கண்டப்படி திட்டிக் கொண்டு அவனுக்காக சமைக்க ஆரம்பித்தாள் பெண்ணவள்.

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page