மனிஷா விதுரனின் தட்டில் இருந்து எடுத்து சாப்பிட்டதை பார்த்த பிரதிக்ஷா கோபமாக விதுரனை முறைத்தாள்.
மனிஷா தன்னுடைய தட்டில் எடுத்து சாப்பிடுவாள் என்பதை எதிர்பாராத விதுரனும் அதிர்ச்சியாக மனிஷாவை பார்க்க, கண்ணடித்தாள் மனிஷா. விதுரன் அதிர்ச்சியாகி அடுத்த நொடியிலேயே பிரதிக்ஷாவை பார்க்க விதுரனை முறைத்துக் கொண்டிருந்தாள் பெண்ணவள்.
‘நான் என்ன பண்ணினேன்’ என்பதைப் போல் விதுரன் பிரதிக்ஷாவை பாவமாக பார்க்க, மனிஷா விதுரனை பார்த்து,
“விதுரா எனக்கு ஊட்டி விடு ரொம்ப பசிக்குது!” என்று கூறினாள் மனிஷா.
பிரதிக்ஷா மனிஷாவை பார்த்து, “இந்தாங்க இதை சாப்பிடுங்க!” என்று தோசையை கொடுக்க “எனக்கு தோசை பிடிக்காது! சப்பாத்தி தான் புடிக்கும்!
டார்லிங் உனக்கு தெரியும்ல, உனக்கு எனக்கும் சப்பாத்தி தான புடிக்கும்! நீ இவகிட்ட சொல்லலையா? சரி அத விடு எனக்கு பசிக்குது நீ ஊட்டி விடு!” என்று சொல்லிவிட்டு, விதுரன் அமைதியாக இருப்பதை பார்த்துவிட்டு வேண்டுமென்றே விதுரனின் கைகளைப் பிடித்து அவன் கையில் இருந்த உணவை மனிஷா தன் வாயில் வாங்கிக் கொண்டாள்.
“சூப்பரா இருக்கு டார்லிங்! அதுவும் நீ ஊட்டி விட்ட இந்த சப்பாத்தி ரொம்ப ஸ்பெஷல் தான்!” என்று மனிஷா சிலாகித்து சொல்ல பிரதிக்ஷாவிற்கு கோபம் வந்தது.
‘இங்கே இருந்தால் கோபத்தில் ஏதாவது சொல்லி விடுவோம்’ என்று பயந்து கொண்டு பிரதிக்ஷா எதுவும் சொல்லாமல் அப்படியே மாடியேறி அவளின் அறைக்கு சென்று விட்டாள்.
விதுரனும் எழுந்து போக முயற்சி செய்ய, மனிஷா விதுரனை எழுந்து போக விடாமல் “உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி பேசணும்!” என்று கூறினாள்.
“என்ன முக்கியமான விஷயம் சொல்லு?” என்று விதுரன் சொல்ல “முதல்ல எனக்கு பசிக்குது!நீ சப்பாத்திய ஊட்டி விடு அதுக்கு அப்புறம் சொல்றேன்” என்று மனிஷா சொல்ல, விதுரனை அறியாமலே அவனுக்கு கோபம் வந்தது.
இருந்தாலும் தன்னுடைய கோபத்தை அடக்கிக் கொண்டு, ” நான் ஊட்டி விட மாட்டேன், நீயே எடுத்து சாப்பிடு!” என்று சொல்லிவிட்டு தட்டை மனிஷாவின் கைகளில் கொடுத்தான்!
“ப்ளீஸ் விதுரா, நீ ஊட்டி விட்டாள் தான் சாப்பிடுவேன் இல்லைன்னால் பட்டினியாவே கிடப்பேன்!” என்று மனிஷா சொல்ல, “மனிஷா விளையாடாத!”என்று கூறினான் விதுரன்.
“இப்ப எனக்கு ஊட்டி விட முடியுமா? முடியாதா?” என்று மனிஷா கோவமாக கேட்க வேறு வழியில்லாமல் விதுரன் கொஞ்சம் சப்பாத்தியை எடுத்து மனிஷாவிற்கு ஊட்ட, மறந்து வைத்து விட்டுப் போன தன்னுடைய அலைபேசியை எடுப்பதற்காக வந்த பிரதிக்ஷாவின் கண்ணில் இக்காட்சிகள் தெளிவாக விழுந்தது.
முதல் முறை வலுக்கட்டாயமாக மனிஷா விதுரனின் கையைப் பிடித்து உணவை வாங்கிக் கொள்வதையே சகிக்க முடியாமல் பிரதிக்ஷாவின் கண்கள் கலங்கி இருக்க, இந்த முறை எந்த வலுக்கட்டாயமும் இல்லாமல் விதுரனே தட்டில் இருந்து எடுத்து மனிஷாவின் வாயில் ஊட்டுவதை பார்த்து பிரதிக்ஷாவின் கண்களில் கண்ணீர் வடிந்தது.
கலங்கிய கண்களை துடைத்தாலும் கலங்கிய கண்களில் இருந்து கண்ணீர் குளம் கட்டியிருக்க எதுவும் சொல்லாமல் தன்னுடைய மொபைலை எடுத்து விட்டு மீண்டும் தன் அறைக்கு சென்று விட்டாள்.
பிரதிக்ஷா கண்கலங்கி நின்றதை பார்க்க விதுரனின் மனமும் கனத்து விட்டது.
“மனிஷா நீயே சாப்பிடு, எனக்கு தலை வலிக்குது!” என்று மனிஷாவின் பதிலை கூட எதிர்பார்க்காமல் விதுரன் அங்கிருந்த வாஷ்பேஷனில் கையை கழுவி விட்டு மாடியேறி தன் அறைக்கு சென்றான்.
அங்கு பிரதிக்ஷா கண்கள் கலங்கி கட்டிலில் ஒருபுறமாக படுத்துக் கொண்டிருந்தான்.
அவள் கண்களில் இருந்து கண்ணீர் கசிந்து கொண்டிருந்தது. விதுரன் உள்ளே வந்த காலடி ஓசை கேட்டும் கூட பிரதிக்ஷா திரும்பாமல் படுத்திருக்க “இப்ப எதுக்கு சாப்பிடாம இங்க வந்து படுத்து கிடக்க?” என்று கேட்டான் விதுரன்.
“அதான் சொன்னேனே எனக்கு பசிக்கலைன்னு!” என்று திரும்பாமலே கூறினாள் பிரதிக்ஷா.
“பொய் சொல்லாத! நீ பசி தாங்க மாட்டேன்னு எனக்கு தெரியும், தோசை தான் உனக்கு ரொம்ப பிடிக்கும்னு எனக்கு தெரியும் , அதனாலதான் உனக்காகத்தான் தோசைய சுட சொன்னேன், அத கூட சாப்பிடாம நீ இங்க வந்துட்ட!” என்று விதுரன் சொல்ல அதிர்ந்து போனாள் பிரதிக்ஷா.
“அதெல்லாம் எனக்கு ஒன்னும் வேண்டாம்! பசிக்கிறவர்களுக்கு போயி ஊட்டி விட்டு அவங்க பசியை ஆத்துங்க!” என்ற நக்கலாக கூறினாள் பிரதிக்ஷா.
அவளின் கோபம் எதுக்கென்று உணர்ந்து கொண்டவனோ “வந்து சாப்பிட்டுட்டு படு, இல்லையென்றால் நடு ராத்திரில பசிக்கும்!”என்று விதுரன் கூற” நான் சாப்பிட்டால் என்ன சாப்பிடலைன்னால் என்ன?அதான் உங்களுக்கு வேண்டியவங்க பசிக்குதுன்னு சொன்னாங்களே அவங்க சாப்பிட்டாங்கல்ல, அதனால நீங்க நிம்மதியா போய் தூங்குங்க! என்னைய பத்தி எல்லாம் யாரும் கவலைப்பட வேண்டாம்!”என்று விதுரனிடம் சண்டையிட்டாள் பிரதிக்ஷா.
“மனிஷா திடீர்னு அப்படி நடந்துக்கிருவானு நான் நினைச்சு கூட பாக்கல, திடீர்னு அவ அப்படி பண்ணினது உனக்கு எப்படி அதிர்ச்சியோ அதே மாதிரி தான் நானும் அதிர்ச்சியானேன்!” என்று விதுரன் கூறவும் கோபம் வந்தது பிரதிக்ஷாவிற்கு!
படுத்தவள் எழுந்து அமர்ந்து விதுரனை பார்த்து, ” மொத தடவ அவ வலுக்கட்டாயமா உங்க கைய புடிச்சு ஊட்டி விட வச்சா, ரெண்டாவது தடவை நீங்களா தான் அவளுக்கு ஊட்டி விட்டீங்க அதையும் நான் பார்த்துட்டு தான் வந்தேன்!” என்று கோபமாய் கூறினாள் பிரதிக்ஷா.
” நீ ஊட்டி விட்டால் தான் சாப்பிடுவேன், இல்லைனால் பட்டினியா கிடப்பன்னு சொன்னா, அதனாலதான் வேற வழி இல்லாம ஊட்டி விட்டேன்! நீ நினைக்கிற மாதிரி எந்த தப்பான எண்ணமும் இல்லை!” என்று விதுரன் பிரதிக்ஷாவிற்கு புரிய வைத்துக் கொண்டிருந்தான்.
ஏன் இப்படி புரிய வைக்கிறான் என்பதை அவனும் யோசிக்கவில்லை! தனக்கு இப்படி விளக்கம் எதற்கு விதுரன் கொடுக்கிறான் என்பதை பெண் அவளும் புரிந்து கொள்ளவில்லை!
“அதான் நீங்க ஊட்டி விட்டு அவங்க சாப்பிட்டாங்கல்ல, இப்ப நீங்க நிம்மதியா போய் தூங்குங்க!” என்று பிரதிக்ஷா கோபமாக சொல்ல, ” நடந்தது நடந்துட்டு அதை பத்தி பேசாத! நீ வந்து சாப்பிடு!” என்று விதுரன் கூறினான்.
“எனக்கெல்லாம் ஒன்னும் வேண்டாம், ஆறிப்போன தோசை எனக்கு பிடிக்காது!” என்று பிரதிக்ஷா கூறிவிட்டு மீண்டும் திரும்பி படுத்தாள்.
“சரி அப்போ ஒன்னு பண்ணுவோம், நீ கிளம்பு உன்னைய ஹோட்டல் கூட்டிட்டு போயி சுடச்சுட தோசை வாங்கி தாரேன்!” என்று விதுரன் சொல்ல அதிர்ச்சியாக பிரதிக்ஷா விதுரனை திரும்பி பார்த்தாள்.
விதுரன் சாதாரணமாக நின்று கொண்டிருந்தான். ” உண்மையாவா சொல்றீங்க? என்று பிரதிக்ஷா கேட்க, “இதுல என்ன இருக்கு பொய் சொல்ல? உன்னைய ஹோட்டலுக்கு கூட்டிட்டு போயி தோசை வாங்கி தாரேன் வா?”என்று கூறினான் விதுரன்.
“தோசை வேண்டாம் நான் கேக்குறது எல்லாத்தையும் வாங்கி தரணும்!” என்று பிரதிக்ஷா சொல்ல, சரி என்று விதுரனும் தலையசைக்க அவசர அவசரமாக கட்டிலில் இருந்து குதித்து சிறுபிள்ளை போல உடைமாற்றும் அறைக்கு சென்றாள் பிரதிக்ஷா.
காலையிலிருந்து கவலையோடு இருந்த பிரதிக்ஷாவின் முகம் இப்போது சந்தோஷத்தில் துள்ளி குதிக்க விதுரனின் மனமும் சந்தோஷம் அடைந்தது.
சிறிது நேரத்திற்குள் உள்ளே சென்றவள் அவளுக்கு பிடித்த வெள்ளை நிற சல்வார் ஒன்றை அணிந்து கொண்டு, தலையில் ஒரு சிறிய கிளிப் ஒன்றை அணிந்து முடியை விரித்து விட்டு அந்த உடையின் இருந்த சிவப்பு நிறத்திலே ஜிமிக்கி அணிந்து, மெல்லிய செயின் அணிந்து அழகு தேவதையாக அறையில் இருந்து பிரதிக்ஷா வெளியே வர ஸ்தம்பித்து போனாள் விதுரன்.
அவள் அணிந்திருந்த ஆடையையும் ஆபரணங்களையும் விட அவள் முகத்தில் தெரிந்த அந்த புன்னகை இன்னும் அழகாக தெரிந்தது விதுரனின் கண்களுக்கு!!
“போகலாமா?” என்று பிரதிக்ஷா கேட்க எதுவும் சொல்லாமல் தன்னவளை ரசித்துக் கொண்டிருந்தான் விதுரன்.
“விது போகலாமா?” என்று அடுத்த வார்த்தை பிரதிக்ஷா சொல்ல விதுரனுக்கு ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு வந்தது.
“இப்ப நீ என்ன சொன்ன?” என்று விதுரன் கேட்க, “விது போகலாமானு கேட்டேன்!” என்று சாதாரணமாக கூறினாள் பிரதிக்ஷா.
“என்ன திடீர்னு விதுன்னு சொல்ற?” என தன் சந்தேகத்தை விதுரன் கேட்க, “எனக்கு புடிச்சிருக்கு நான் விதுனும் கூப்பிடுறேன்!” என்று சொல்லிவிட்டு முன்னால் சென்றாள். முன்னாள் சென்றவள் ஏதோ யோசனை வர பின்னால் திரும்பி நின்று அப்புறம் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்ல மறந்துட்டேன். நான் உங்க கூட வரணும்னால் ஒரு கண்டிஷன்!” என்று அவளின் எண்ணத்தைக் கூற அதிர்ந்தான் விதுரன்.
